Advertisement

பகுதி – 17
“வாங்க…வாங்க…” என்ற ஆர்ப்பாட்டமான வரவேற்போடு, பார்த்திபனை மலர் வரவேற்க, புருவங்கள் முடிச்சிட மலரை ஏறிட்டான் பார்த்திபன்.
“ஒன்னும் விளங்கலியா? ஏதோ பெரிய ஜமீன் குடும்பம்னு சொன்னாங்க. ஆனால் இது ஜெகஜால கில்லாடி குடும்பமாவுல இருக்குது?
படத்துலெல்லாம் ஜமீன் குடும்பம் எல்லாரும் அள்ளி அள்ளி கொடுக்குறது போலக் காட்டுவாங்க. இங்க மத்தவங்களோட பொருளை கொஞ்சம் கூட வெட்கமும் கூச்சமும் இல்லாம ஆட்டைய போட பாக்குறீங்க ?” என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி ஏற்றி இறக்கி பார்த்திபனின் தன்மானத்தைச் சீண்டும் விதமாய் எள்ளி நகையாடினாள்.
“என்ன உளறல் இது? இதோ பாரு…  நீ இங்க இருந்திட்டு போக மட்டும் தான் அமைதியா அனுமதிச்சிருக்கே. நீ என்னோட குடும்பத்தை அவமதிக்க இல்ல! புருஞ்சுதா ?
என்னோட பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. என்மேல உனக்கென்ன கோபம்னு எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோவொரு வகையில் நான் காரணம்னு நீ நினைக்கிற. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் பொறுத்துப்போறேன்.
என்னை ரொம்பவும் சோதிக்கவேண்டாம்” எனப் பார்த்திபன் முதல் முறையாக மலரிடம் சீறினான்.
அவன் மீது பழி சுமற்றியபோது கூட நிதானமாகக் கையாளும் பொறுமை கொண்டவன், அவன் குடும்பத்தை அதன் பாரம்பரியத்தை அவள் இழுத்து பேசியதை தாங்க இயலாது வெடித்திருந்தான்.
“ஸ்ஸ்….அப்பா ரொம்பக் கோபம் வரும் போல. நான் கூட உன்னைத் தண்ணீர்ல போட்ட கல்லுன்னுல நினச்சேன். சரி போகட்டும்…உன்னோட இந்தக் கோபமும் ரோஷமும் என்கிட்ட வேண்டாம்.
உன்னோட குடும்பம் அடுத்த வீட்டு பெண்ணான என்னோட நகைக்கு ஆசைபடுதே ? இதை வேற எப்படிச் சொல்ல சொல்லற ?
தர்ம காரியம்னா ? யோவ்…உனக்கும் உன் குடும்பத்துக்கும் இந்த மரியாதையே ரொம்ப ஓவர். போவியா ?” எனத் திமிராகப் பேசியவள், கீழே இறங்க போக, பார்த்திபன் புரியாமல் விழித்தான்.
மேலிருந்து கீழிறங்கியவள், “மாமா…நீங்க என்னோட நகைங்கள எடுத்துக்கோங்க. முடுஞ்சால் அடகுவைங்க…இல்லனா வித்திடுங்க” எனக் கூறிக்கொண்டிருக்க, சூரியவர்மனும் நித்யகலாவும் பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சபாஷ் போட்டுக்கொள்ள, பார்த்திபனின் தாயான தாமினியோ அங்கு என்ன நிகழ்கிறதென்று அறியாமல் குழம்பிக்கொண்டிருந்தார்.
இங்க என்ன நடக்குது என்ற கேள்வியைக் கேட்க நினைத்த அதே நேரத்தில், முதன் முறையாகப் பார்த்திபனின் குரல் கோபத்துடன் அந்த வீட்டில் ஒலித்தது.
தாமினி கேட்க நினைத்த அதே வார்த்தையை, பார்த்திபன் கேட்டிருந்தான்….
ஆக்ரோஷத்துடன்!
“இங்க என்ன நடக்கிது?” அவனின் இந்தக் குரல் இந்தக் கோபம் அனைத்தும் புதிது. உள்ளிருந்து தாரா கூட வந்து எட்டி பார்த்தாள். பார்த்திபன் அன்றைய நாளுக்குப் பிறகு இன்று தான் வீட்டிற்குள் வருகிறான்…
தாமினிக்குப் பார்த்திபனை காணவும் முடியவில்லை. காணாமல் இருக்கவும் முடியவில்லை…ஆனால் பார்த்திபன் கண்களில் எதுவும் பதியவில்லை. அவனுடைய குடும்பத்தை ஒருவர் கைநீட்டி குற்றம் சொன்னது, இதுவே முதல் முறை!!
அதை இல்லையென்று நிரூபிக்கவே ஆவேசமாகக் கீழிறங்கிவந்திருந்தான். அவனுக்கு இருந்த கோபம் கூட, மலரின் மீதே!
அவளின் வார்த்தைகளைப் பொய்யென்று நிரூபித்து, மலருக்கு பதிலடியும், அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பவுமே, அவன் அந்த நொடியில் முடிவெடுத்திருந்தான்…
யாராக இருந்தாலும், அவனுடைய குடும்பத்திற்கு பிறகே!
“டேய்! என்னாச்சு ? ஏன் இப்படிக் கத்துற ?” எனச் சூரியவர்மன் முன்வர,
“அண்ணா நீங்க சொல்லுங்க… இங்க என்ன நடக்கிதுன்னு நீங்க சொல்லுங்க. இவ என்னனெமோ உளருறா?” எனக் கேட்க,
“என்ன சொல்ல சொல்றீங்க தம்பி? மலரு சொல்லலியா ?” எனக் கலா வாயெல்லாம் பல்லாக முன்வந்தாள்.
“புரியலை அண்ணி…கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என மலரை பார்த்தபடியே, கலாவை விசாரிக்க,
கலாவோ, நடந்ததைச் சுருக்கமாகக் கூறினாள்…
ஆனால், அதை அப்படியே கூறவில்லை. “நம்ம எல்லாருக்கும் சேர்த்து சொந்தமா ஒரு வீடு வாங்கணும்னு உங்க அண்ணனுக்குப் பிரியம். அதான் கொஞ்சம் லோன் போட்டுக் கொஞ்சம் மலரு நகையை வச்சு வாங்கலாம்னு…வீடு எல்லாருக்கும் தானே ?மலரும் சட்டுனு பூரா நகையும் கொடுத்திருச்சு” எனப் புன்னகையுடன் கூற, தாரா கண்கள் முழுக்கப் பேராவலுடன் மிளிர்ந்து, அவள் சூரியவர்மனின் சகோதிரி என நிரூபித்தாள்.
இதில் விதி விலக்கானவர்கள், பார்த்திபன் மற்றும் தாமினி!
“என்ன வீட்டுக்கு வந்த பொண்ணோட நகையா?” என்ற யோசனைக்குத் தாமினி போக,
அதையே வேறு வார்த்தைகளில் பார்த்திபன் கூறியிருந்தான்.
“அண்ணி! அண்ணனும் நீங்களும் எப்பவும் நல்லது தான் நினைப்பீங்க. நம்ம கண்டிப்பா நமக்கே நமக்கான வீடுகட்டுவோம். ஆனால், இந்தப் பொண்ணுகிட்ட இருந்து வாங்க வேண்டாம்” என மலரை சுட்டி காண்பிக்க,
“இன்னுமென்ன தம்பி இந்தப் பொண்ணுன்னு சொல்லுறீங்க. மலருன்னு சொல்லுங்க…” எனக் கலா பேச்சை மாற்ற,
“அண்ணி உங்களுக்கு நான் எப்படிச் சொல்லி புரியவைப்பேன்.? அண்ணா, இந்தப் பொண்ணோட நகை எதுவும் நம்ம உபயோகிக்க வேண்டாம். வீடு வாங்கணும்னு எண்ணம் இருந்தால் எண்ட சொல்லிருக்க வேண்டியதானே ?” எனப் பார்த்திபன் கூற,
“சொல்லிட்டால் மட்டும்? இல்லை சொல்லிட்டால் மட்டும் என்ன செஞ்சிருப்ப ? இலட்சம் இலட்சமா கொட்டி குமிச்சிருப்பியா ?” எனக் கேட்ட சூரியவர்மனின் குரலில் உஷ்ணமேறியிருந்தது.
“அதானே! ஏன் தம்பி நூறுக்கு இருநூறுக்கு வண்டிக்கு போற நீங்க எப்படி வீடு கட்ட பணம் கொடுப்பீங்க ? ஒருவேளை உங்க பொண்டாட்டி நகையை நாங்க வாங்குறது பிடிக்கலியோ? நல்லா பாருங்க, உங்க தம்பியோட தாராள குணத்தை” எனக் குத்தலாகக் கலா பேச,
“அண்ணி! அண்ணா…நீங்க தப்பா புருஞ்சுகிட்டிங்க. என்னோட உசுர கேட்டாலும் நான் இந்தக் குடும்பத்துக்காகக் குடுப்பேன். ஆனால், அடுத்தவங்க தயவுல வர எதுவும் நமக்கு வேண்டாம்.
நாம கொடுத்து வாழ்ந்த பரம்பரை! நாம யார்கிட்டையும் வாங்குற நிலையில இருக்கக் கூடாது. அதோட இந்த மலரு கொடுக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை… இவள் நம்ம குடும்பமும் இல்லை” எனப் பொறுமையுடன் விளக்க முயன்றவனை, சூரியவர்மன் வெட்டி பேசினான்.
“எப்படிப்பா? கட்டிக்கிட்டு வருவ…குடும்பத்துக்குனு பணம் தரணும்னு வந்துட்டால், நம்ம குடும்பமே இல்லனு சொல்லிடுவியா ? இன்னும் விட்டால் பணத்துக்காக கல்யாணமே பண்ணலன்னு கூட நீ சொல்லுவ. பஞ்சாயத்துல அனாதையா விட்டிருந்தால் தெரிஞ்சிருக்கும்.
உன்னோட பொண்டாட்டி நகை மட்டும் அப்படியே இருக்கணும். என்னோட பொண்டாட்டி மட்டும் இந்தக் குடும்பத்துக்கு உழைச்சு ஓடா தேயணுமா? அவள் நகை நட்டுன்னு பெருசா ஒன்னும் போட்டு வரலதான்.
ஆனால், அவள் அனுசரிச்சுப் போறதுனாலதான் இன்னும் உங்க எல்லாரையும் வச்சு பார்த்துகிறாள். இல்லனா ரோட்ல நின்னுருப்பீங்க” என வாய் விட,
தாமினி இடிந்து போனார்…. “சூர்யா ?” என அதிர்ந்த குரலில் மகனை அழைக்க, சூரியவர்மனோ தாயை கண்டுக்கும் நிலையிலையே இல்லை.
சூரியவர்மன் சாட்டையாக நாக்கை சுழற்றினான். அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுடைய சுயநலத்தையும் பிறரின் மீதிருந்த துவேசத்தையும் காண்பித்துக்கொடுத்தது. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவனுடைய வார்த்தைகளின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தது.
அதை அவன் உணரவுமில்லை; உணர முயலவுமில்லை!
அவன் கண் முன் அவன் வாங்க நினைத்த இடமும், கைக்கு எட்டும் தூரத்தில் மலரின் நகைகளும் மட்டும் விரிந்தது. ஏதாவது எப்படியாவது செய்து, பார்த்திபனை அந்த நகைகளைக் கொடுக்க வைக்கவேண்டும். அதற்குப் பார்த்திபனை அந்த முடிவெடுக்க நிர்பந்திக்க வேண்டும். அதுவே, தற்சமயம் சூரியவர்மனின் எண்ணமாக இருந்தது….
“அண்ணா…கோவத்துல புரியாமல் பேசுறீங்க. உங்களைவிட எனக்கு வேற எதுவும் வேற யாரும் முக்கியமில்லை. நம்மகிட்ட பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தன்மானம் நிறைய இருக்கு….
இதேது அண்ணிகிட்ட வாங்கி நமக்குப் பண்ணலாம்னு நீங்க சொல்லிருந்தால் கூட, நான் நிச்சயம் வேண்டாம்னு தான் சொல்லிருப்பேன். ஏன்னா, நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுகிட்ட நாம அன்பை தான் எதிர்பார்க்கணும். காசு பணத்தை இல்லை! அவுங்க வீட்ல இருந்ததைவிட ஒருபடி மேல நாம சந்தோசமா வச்சுக்கணும்.” எனக் கூற
அதே நேரத்தில், தாமினிக்கு காலம்சென்ற அவருடைய கணவரின் வார்த்தைகள் ஒலித்தன….
“வாழவந்த பொண்ணுங்ககிட்ட புகுந்தவீட்டுகாரவங்க அன்பையும் அரவணைப்பையும் தான் எதிர்பார்க்கணும்… ஆஸ்தியை இல்ல. நீ சீதனமா எதுவும் கொண்டுவர வேண்டாம்” எனத் தன்னுடைய கணவன் தன்னிடம் கூறியச்சொற்களை அதிர்வுடன் நினைத்து பார்த்தார்…
அதுவும் அந்த வார்த்தைகள் அந்தச் சிந்தனை பார்த்திபனிடமிருந்து வெளிப்பட்டதில், தாமினி ஸ்தம்பித்தார்!!!
அதேவேளையில், யார் இந்த ஜமீனின் குடும்ப மானத்தைக் காக்க பிறந்தவன் என்று எண்ணினாரோ, அவனின் வாயால், ‘ரோட்ல நின்றுபீங்கனு’ என்ற வார்த்தைகளை கேட்டாரோ அதே நொடியில் தாமினி பெரிதாக எங்கையோ அடிவாங்கிய உணர்வுக்குள் சிக்குண்டார்.
ஆனாலும், இந்த வாதங்களும் சச்சரவுகளும் பார்த்திபனை உயர்த்தியோ சூரியவர்மனை ஒட்டுமொத்தமாகத் தாழ்த்தியே காண்பிக்கவில்லை. இருவரை பற்றிய பிம்பமும் தாமினியின் மனதினில் பல வருடங்களாக உருவம் பெற்று எழுந்து நின்றன. அது ஒரே ஒரு சம்பவத்தில் அடியோடு மாற்றம் பெறாது…
தற்சமயம், தாமினி தேவிக்குத் தனது இரண்டு மகன்களின் மீதும் உள்ள நம்பிக்கை அற்றுப் போகத் தொடங்கியது…
தாமினியின் மனநிலை இவ்வாறாக ஓட்டம் கொள்ள, இதை அறியாத சூரியவர்மனோ,
“உன்னோட பொண்டாட்டி உன்னோட குடும்பம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்ட? அப்போ இத்தனை நாள் ஒத்துமையா உங்கள பார்த்துக்கிட்ட என்னைப் பார்த்தால் கேனையன போலத் தெரியுதா ?” என ஆங்காரமாகக் கத்த,
“அண்ணே! மொதெல்லா அவளை என்னோட பொண்டாட்டின்னு சொல்றதை நிறுத்துங்க” எனப் பார்த்திபன் கத்த,
கலா உட்புகுந்தாள், “நாலுநாளா ஒரே வீட்ல தங்கும் போது, ஊருக்கு மத்தில தாலிய எடுத்து நீட்டின போது, இவன் தான் என் புருஷன்னு ஓடியாந்து நின்னபோது சொல்லவேண்டியது தானே ?
அவள் தான் உன்னோட பொண்டாட்டின்னு சொல்லுறா, ஊரே சொல்லுது. உங்க அண்ணன் சொல்ல கூடாதா ?”
“அட நீ வேற! எல்லாம் பணம் கலா… தன்னோட பொண்டாட்டி நகையை நாம எடுத்து வீடு வாச கட்டிற போறோம்னு மனசு முழுக்கக் கெட்டெண்ணம். அதான், பொண்டாட்டின்னு சொல்லாதீங்க… நம்ம குடும்பம், இது அடுத்த வீட்ல இருந்து வாழ வந்த பொண்ணு…அது இதுனு கண்டதை பேசுறான். கொடுக்க இஷ்டமில்லன்னா நேரடியா சொல்லிட்டு போடா…அதுக்கு எதுக்கு உனக்கு இந்த நல்லவன் வேஷம் ?” எனச் சூரியவர்மன் பேச பேச,

Advertisement