Advertisement

பகுதி – 16 
பரந்துவிரிந்த பெரிய தோட்டத்தில் மூங்கில் நாற்காலில் அமர்ந்திருந்தான், பிரியன். தோட்டத்தை தொடர்ந்து பிரம்மாண்டமாய் வெள்ளை நிறத்தில் நிமிர்ந்து நின்ற வீட்டின் பால்கனியில் நின்றபடி அமர்ந்திருந்த பிரியனை கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்திருந்தார் சிவகாமி!
“என்ன சிவகாமி இங்கன என்ன பண்ற?” என்ற கேள்வியுடன் சிவகாமியின் பின்னோடு வந்து நின்றார், சத்திய மூர்த்தி.
சிவகாமியின் கணவர் சத்யமூர்த்தி…
“எங்க அண்ணனும் அண்ணியும் தான் ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் கட்டிகூடப் பார்க்காம போய்ட்டாங்க. எங்க அண்ண மகளுக்கு நம்ம பிள்ளையையே கல்யாணம் செய்யலாம்னு முடிவு பண்ணினால், மலரு மாயமா போய்டுச்சு…
நம்மகிட்ட சம்மதம் தானே சொல்லுச்சு…?” எனக் கேள்வியாகச் சிவகாமி வினவ,
சத்யமூர்த்தியும் அன்றைய தினத்திற்குச் சிந்தனையை ஓடவிட்டார்…
“ஆத்தா மலரு? பிரியனை கட்டிக்க உனக்குச் சம்மதமா ? சொந்தம் வேணாம்னு எதுவும் நினைக்கிறியா ? உனக்குப் பிடிக்காட்டி நீ சொல்லு, அசல்ல கூடப் பார்க்கலாம். உன்னோட அபிப்ராயம் என்ன ஆத்தா ?” எனச் சத்திய மூர்த்தி தான் இந்தக் கேள்வியை மலரிடம் முன்வைத்தார்.
“எனக்கு எந்த எண்ணமும் இல்லை…எப்பவும் அப்பா சொல்றதை தான் கேட்டிருக்கேன்” என மலர் நிர்மலமான குரலில் கூற,
“அப்பாக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் ஆத்தா…என்னோட வீட்டுக்கு உன்னை மருமகளா அனுப்ப, அண்ணே கண்டிப்பா சந்தோசப்படும்” எனச் சிவகாமி, மலரிடம் எடுத்துக்கூற,
“சரி…அப்பாக்கு இதுல சந்தோசம் இருக்கும்னா, எனக்கும் இது சம்மதம் தான் அத்தை” எனத் தெளிவான குரலில் மலர் கூறினாள்.
அந்தப் பேச்சு, இன்னமும் சத்தியமூர்த்தியின் நினைவடுக்குகளில் பசுமையாக இருந்தது.
“ஆமா சிவகாமி! கண்டிப்பா மலர் முழு மனசோட தான் சம்மதிச்சுச்சு. ஆனால் மண்டபத்திலிருந்து எப்படிப் போச்சு ? ஏன் போச்சு ? எங்க போயிருக்கும் ?” எனச் சத்தியமூர்த்தி வினவ,
“எனக்கும் விளங்கலங்க. கண்ண கட்டி காட்டுல விட்டது போல இருக்கு…மலரு காணாம போனதிருந்து பிரியன் முகத்துல தெளிச்சியே இல்லை. இருளடிச்சது போல இருக்கான்…
நம்ம குடும்பத்துக்கு மட்டும் ஏன் ஒன்னு மாத்தி ஒன்னு வருது?” என்ற புலம்பலுடன் சிவகாமி தூரத்தே அமர்ந்திருந்த பிரியனை காண, பிரியனோ அதே வேளையில் தன்னுடைய கை பேசியில், மலரின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அண்ணே!” என்ற அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான் பிரியன்.
“பரமா…என்னாச்சு?” என வாயிலை ஆராய்ந்தபடி அவசரமாகக் கேட்க,
“இல்ல அண்ணே! அண்ணி எங்குட்டு போனாங்கனே தெரியல” எனப் பரமன் என அழைக்கப்பட்டவன் தலை குனிந்தபடியே கூறினான்.
“நம்ம ஸ்டாண்ட்ல ஒரு டிரைவர் மட்டும் இல்லனு சொன்னீங்களே? அவன் என்ன ஆனான் ?” எனப் பிரியன் துருவ,
“அவன் சென்னைக்குச் சவாரி போயிருக்கானாம். பெரிய சவாரி, வரதுக்கு ஒரு வாரத்துக்கு மேல ஆகும்னு அவன் வீட்டில சொன்னாங்க” எனக் கூற,
“இன்னும் ஒரு வாரமா? அவனைப் போன்ல பிடிக்கப் பாருங்கடா” என அறிவுறுத்த,
“லைன் போகல அண்ணே. அவுங்க வீட்டுலயும் எந்தத் தாக்கலும் இல்லாம பதறிட்டு தான் இருக்காங்க” எனப் பரமன் கூறினான்.
“அப்போ, அவன் தான் டா…அவனைப் பிடிச்சால் மலர் பத்தின விவரம் தெரியவரும்” என ஆவேசமாகக் கூற, மகனின் பின்னோடு வந்து நின்றார் சிவகாமி.
“எப்பா? நிதானமா இறு இராசா” எனக் கூற,
“எப்படிம்மா என்னை விட்டு அவனால போக முடிஞ்சது. அவ மேல நான் பைத்தியமா இருக்கேனு தெருஞ்சு ஏன் போனாள் ? என்கிட்ட சொல்லிருந்தால் உலகத்தையே அவ காலுக்குக்கீழ வச்சிருப்பேன்” என ஆற்றாமையுடன் கூற,
“வந்திடுவாப்பா… ஏன் போனானு எனக்குத் தெரியலபா. ஆனால், உன்ன பிடிச்சுதான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுச்சு” எனக் கூற, பிரியன் கண்களில் மெலிதான ஆச்சர்யமும் அதைத் தொடர்ந்து ஒரு திருப்தியும் நிலவியது.
“வந்திருவாளா மா?”
“கண்டிப்பா இராசா… நீ சாப்பிடவா” எனக் கூறி கையோடு மகனை அழைத்துச் சென்றார்.
பார்த்திபன் மற்றும் பூதம் இருவரும் தாங்கள் ஓட்டும் லாரியின் உரிமையாளரை பார்க்க முயன்று , முடியாமல் போகவே இருவரும் வீட்டுக்கே திரும்பிக்கொண்டிருந்தனர்.
தன்னுடைய வீட்டிற்கே போகப் பிடித்தமில்லாத காரணத்தினால், பூதத்தின் பின்னோடு வந்த பார்த்திபனை இராசயன் எதிர்கொண்டு நலம் விசாரித்து, தன்னுடைய வீட்டிற்கு இருவரையும் அழைக்க, இராசயனின் வீட்டுத் திண்ணையில் இருவரும் அமர்ந்தனர்.
“அம்மா குறிஞ்சி… நீச்சு தண்ணி கொண்டு வா ஆத்தா” எனக் குரல் குடுக்க, தோள்பட்டையில் ஹாண்ட் பாங்கை மாட்டிக்கொண்டு இரண்டு கைகளிலும் இரண்டு குவளையில் நீச்சுத் தண்ணீர் எடுத்து வந்து நீட்டினாள்.
அதை இருவரிடமும் நீட்டியவள், “அப்பா நான் ஒர்க்-க்கு போறேன்” எனக் கூற,
“இங்கிலிபீஸு” என முணுமுணுத்தபடி உதட்டை பிதுக்கினான், பூதம்!
“என்ன? இஞ்சி பிஷா? பட்டிக்காடு” எனக் குறிஞ்சி பதிலுக்கு முணுமுணுக்க,
“பட்டிக்காடா? அடிங்க! பின்ன உன்னோட மூஞ்சிக்கு பாடிகார்ட் விஜயா வருவாரு ?” என மனதிற்குள் கவுன்டர் கொண்டவன் ,
பூதம் செவிகளில் அது நன்றாக விழவே, “அண்ணே! உங்க பொண்ணு என்ன படிச்சிருக்கு அண்ணே? இங்கிலிபீஸுல பூந்து விளையாடுது ” என விசாரிக்க,
“பாத்தாவது பூதம்! பாதில நிப்பாட்டியாச்சு. அதுக்குமேல நமக்கு எங்க வசதி ? எல்லாம் அது வேல பாக்குற இடத்துல கத்துக்கிட்டது தான்” எனக் கூற,
“எங்க வேலை?” எனப் பார்த்திபன் விசாரிக்க,
“நம்ம ஊரு கம்ப்யூட்டர் கடைல…” என அந்த ஊரின் ப்ரொவ்சிங் சென்டர் பெயரை குறிப்பிட்டுக் கூறினார். அதில் குறிஞ்சி கம்ப்யூட்டரின் அடிப்படைகளைக் கற்கவருபவர்களுக்கு வழி நடத்துபவள். அவளது நாக்கில் புரளும் ஓரிரெண்டு ஆங்கிலச் சொற்களுக்கு அவளுடைய பணியின் நிமித்தமே காரணம்…
“ஓ… பாத்தாவது பாதில நிப்பாட்டிட்டு, பார்ட்டிக்கு இலந்தை பார்த்தியா?” எனப் பூதம், பார்த்திபன் காதை கடிக்க,
“சும்மா இருடா” எனப் பார்த்திபன் அடக்கினான்.
“என்ன இரண்டு பேரும் குசுகுசுன்னு பேசுறீங்க?” என இராசயன் வினவ,
“சத்தமா பேசுனா உங்களுக்குக் கேட்ரும்ல? அதன் குசுகுசுன்னு பேசுறோம்” எனப் பூதம், குறிஞ்சியை முறைப்பாகப் பார்த்தபடியே கூறினான்.
“என்னப்பா?” எனக் குறிஞ்சியின் தந்தை வினவ, “அட அவன் சும்மா சொல்லுறான். கிளம்பலாம்னு சொன்னான்” எனப் பார்த்திபன் சமாளித்து எழ, பூதம், “பாத்தாவது பாசாகத பஜ்ஜிக்குப் பந்தாவா பார்த்தியா ?” என ஓரக்கண்ணால் பேசியபடி செல்ல, குறிஞ்சி பூதத்தை முறைத்து பார்த்தாள்.
“என்கிட்ட சிக்காமையா போய்டுவ?” என்பது குறிஞ்சியின் பார்வை.
“சிறுத்தை சிக்காதுடி…சீறி பாயும்” என்பது பூதத்தின் பார்வை….
இவர்களின் இந்த உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், மலர் தன்னுடைய அடுத்தத் திட்டத்தைக் கிட்டத்தட்ட அரங்கேற்றிய முடித்திருந்தாள்….
“மலரு? நிசமாதான் சொல்லுறியா ?” என நித்யகலா மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன் கேட்க,
“அட ஆமாம் அக்கா…. கஷ்டத்துக்கு இல்லாத நகை இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? ஆனால், அவருகிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோங்க. அவரு கொடுக்கச் சொன்னால், நீங்க தாராளமா எடுத்துக்கோங்க” என உறுதியாகக் கூறியிருந்தாள், மலர்!
இவர்களின் உரையாடலின் சாராம்சம் இது தான்…
சற்று முன் ஓர் இடத்தின் விலையைக் கைபேசியின் வழியாக நிலத்தை விற்பவர் கூறியிருக்க, கணவன் மனைவி இருவருமே தொகை அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வதென்று முழித்துக்கொண்டிருக்க, அவர்களின் உரையாடலை மறைந்திருந்து கேட்டபடி, ஏதும் தெரியாதவளை போல, அவர்களின் முன் சென்று நின்றாள்…
“என்ன அக்கா? எதுவும் பணக் கஷ்டம் இருக்கா ? நீங்க தப்பா நினைக்கலைனா நான் எதாவது உதவலாமே ?” இப்படியாகத் தான் ஆரம்பித்தாள். 
“ஆ… ஆமா! நம்ம குடும்பத்துக்குனு சொந்தமா லாரி வாங்கலாம்னு. இன்னும் எத்தனை நாளுக்குத் தான் தம்பி, இன்னொருத்தருகிட்ட வேளைக்குப் போவாரு?” என ஏதோ வாயில் வந்ததை உளறிக்கொட்டி சமாளித்தாள், கலா!
இடம் வாங்கும் செய்தி யாருக்கும் சென்றுவிடக் கூடாதே என்பதே அவளுடைய பதற்றம்…
இவ்வாறு தொடங்கிய பேச்சை, மலர் திட்டமிட்டே அவர்களின் பேராசையைக் கிளறி, அவர்களின் வார்தைகளாகவே பேசவும் வைத்தாள். தன்னுடைய நகைகளைக் கொடுக்க அவள் விரும்புவதாகவும், கொடுப்பதாகவும் கூறினாள்.
“லாரி வாங்க மட்டுமில்லை அக்கா…இந்த குடும்பத்துக்காக நீங்க என்ன செலவு செஞ்சாலும் சம்மதம் தான்” என மெல்ல தூண்டில் போட, சூரியவர்மன் நிதானித்தான்.
“சரி மா… எனக்கு வேற ஒன்னு தோணுது. இது ரொம்ப நாளாவே என்னோட மனசுல இருக்கிற விஷயம் தான்…நம்ம குடும்பத்துக்குனு ஒரு சொந்த வீடு. லாரிகூட அப்புறம் வாங்கிக்கலாம்.” எனக் கூற,
“ஆமாம், ஆமாம் நமக்குன்னு வீடு வாங்கினால், நாலு ரூம் போட்டு வாங்கிட்டால், தம்பியும் மலரும் ஏன் இப்படிக் குடுசைல இருக்கணும்?” எனக் கலா ஒத்து ஊதினாள்.
“அப்புறம் என்ன வாங்கிட வேண்டியது தானே?” என மலர் ஒரு நமட்டு சிரிப்புடன் கூற,
“அதுலவொரு சிக்கலிருக்கு.நீ உன்னோட நகையைத் தரேன்னு சொல்லுற. ஆனால், முழுப்பணமும் அதுல வராது…கொஞ்சம் லோன் போடணும். லோன் போடணும்னா, வாங்குற சொத்து லோன் போட்றவங்க பெயர்ல தான் இருக்கணும்.
இந்த வீட்லையே நான் மட்டும் தான் வேலைனு போய்ப் பாக்குறேன் . எனக்கு மட்டும் தான் லோன் கொடுப்பாங்க…வாங்குற சொத்தும் என் பேர்ல மட்டும் தான் இருக்கும்” என மலரை ஆழம் பார்த்தபடி நிதானமாகக் கூற,
கலாவோ, “ஆனால், இது வெறும் லோன்காக மட்டும் தான். நிஜத்துல அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் சமமான பங்கு. அதுலயும் நீ நகை கொடுக்குறல? பத்திரத்துல மட்டும் தான் இவுங்க பேரு மட்டும் இருக்கும். ஆனால், சத்தியத்துக்குத் தம்பிக்கும் உரிமையிருக்கு….” என நயந்த குரலில் அடித்துக் கூறினாள்.
“அப்படியா கா?” எனக் கண்களை அப்பாவியாக மலர் விரித்துக் கேட்பதை போன்று பாவனைச் செய்ய,
“அப்படிதான் மலரு” என நித்யகலா உத்திரவாதம் கூறினாள்.
“சரிங்க மாமா, அக்கா… நான் அவருகிட்ட சொல்லிட்டு சொல்லுறேன். எனக்குச் சந்தோசம் தான்…” எனக் கூறி, படிகளில் ஏற போக, கலாவோ, “ஏ சாப்பிடாம எங்க போற ? தட்டுல வச்சுத்தறேன். கொண்டு போ” என அவசரமாகச் சாப்பாடை எடுக்க ஓடினாள்.
மலரின் மனதிலோ, “பணம் எல்லாரையும் மாத்துற பெரிய ஆயுதம் தான்… ” என இகழ்ச்சியாக உதடு வளைத்தவள், உணவை வாங்கிக்கொண்டு படிகளில் ஏறினாள்.
அவள் அவர்களின் குடிலில் சென்று அமர்வதற்கும், பார்த்திபன் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
இவன், மலரை காயப்படுத்தாமல் இருக்க நினைக்க, மலரோ இவனைக் குத்தி கிழிக்கும் ஆவேசத்தோடு காத்திருந்தாள்! வார்த்தைகள் என்னும் பேராயுதத்துடன்!
அவள் சொல்லவிருக்கும் வார்த்தைகள், பார்த்திபன் மற்றும் சூரியவர்மனின் அண்ணன் தம்பி உறவை வெட்டியெறியப்போகும் வாளாக உருவெடுத்து ஆக்ரோஷமாகக் காத்திருந்தது…

Advertisement