Advertisement

பகுதி – 15
முழுவதுமாகச் சூழ்ந்துவிட்டிருந்த இருளை உமிழ்ந்துகொண்டிருந்த குழல் விளக்கு விரட்டிக்கொண்டிருக்க, அந்த வெள்ளை விளக்கொளியில் இருள் சூழ்ந்த கண்களுடன் பனிமலர் மட்டும் மாடியில் தனித்திருந்தாள்…
அவளுடைய கண்கள் கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தன…அவளுடைய சிந்தனைகள் யாவும் முதன் முதலில் அவள் பார்த்திபனை காண நேர்ந்த சூழலை சுற்றி வட்டமிட தொடங்கின.
சில மாதங்கள் பின்னோக்கி சென்றன, அவளுடைய நினைவலைகள்!
“மேனேஜர்? அப்பா எப்போ வருவார் ?” என்று கேட்டபடி கண்ணாடி அடைப்புகள் கொண்ட அறையில் அமர்ந்துகொண்டு இரத்தனவேலை குறித்து விசாரித்துக்கொண்டிருந்தாள், மலர்!
அன்று விடுமுறை தினம்…இருந்தும் இரத்தினவேல் மில் வரை செல்வதாகத் தன்னுடைய மனைவி , பனிமலரின் அம்மா பார்வதியிடம் சொல்லி வந்திருக்க, இரத்தினவேலை கையோடு அழைத்துச் செல்ல மில்லுக்கே வந்திருந்தாள் பனிமலர்!
“இதோ ஐயா வாராருமா…” என மானேஜர் சுட்டி காண்பித்த திசையில் வெள்ளைவேட்டி வெள்ளை சட்டையெனக் கம்பீரமாய் வந்துகொண்டிருந்தார் இரத்தனவேல். தன் தந்தை வருவதைக் கண்ணாடி தடுப்பு வழியே பார்த்திருந்தவளின் முகத்தில் புன்னகை அரும்பியது.
அவரைப் பார்த்துக்கொண்டே இருந்த போதே, அவரை நோக்கி ஆவேசமாக ஒருவன் வந்தான். அவன் யாரென்று அன்று பனிமலருக்குத் தெரியாது…
அவன் பார்த்திபன்…
அத்தனை கோபத்துடன் பார்த்திபன் இரத்தினவேலை நெருங்க, கண்ணாடி தடுப்பிற்குள்ளிருந்து பார்த்திருந்தவளுக்கு ஏதோ தவறென்று புரிய, இருந்த இடத்திலிருந்து தன்னைப் போல் எழுந்து நின்றாள்.
“மேடம், நீங்க உக்காருங்க…இதெல்லாம் ஐயா பார்த்திப்பாரு” என மானேஜர் கூற,
“அப்போ நீங்க போங்க…” என அவரை அனுப்பிவைக்க, சரியென்று அவரும் அந்த இடம் நோக்கி ஓடினார்.
பார்த்திபன் எதையோ மிக ஆவேசமாகத் தனது தந்தையிடம் பேசுவதைப் பார்த்தவளுக்கு, பார்த்திபனை பார்த்த முதல் நொடியிலே பிடிக்காமல் போனது. தற்செயலாகத் தனது மகளின் புறமாகத் திரும்பிய இரத்தினவேல் பார்த்திபனிடம் எதையோ கூறிவிட்டுக் கை பேசியில் தனது மகளை அழைத்தார்.
“குட்டிமா, அப்பா வர லேட் ஆகும்டா… நீ புறப்படு. நான் வந்திடுறேன்” எனக் கூற, முறைத்துக்கொண்டு நிற்கும் பார்த்திபனை பார்த்தபடியே, முன்வாசல் வழி வெளியேறினாள், பனிமலர்!
பனிமலரின் சிந்தனை இவ்வாறாக ஓடிக்கொண்டிருந்த அதே வேளையில், பார்த்திபனும் , பூதமும் அக்குடிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்!
அவர்களின் பேச்சுக் குரலில் கலைந்தவள், வாசலில் வந்து நின்ற பார்த்திபனை எரித்துவிடும் கோபத்துடன் பார்த்தாள்.
“இந்தப் பொண்ணு என்னாத்துக்குக் கொலைவெறியா பார்க்குது?” என எண்ணிய பூதம், “இந்தம்மா…என்னோட நண்பன் ஒரு முடிவுக்கு வந்திருக்கான். நீ இரத்தினவேல் ஐயா பொண்ணுன்னு தெருஞ்சதுனால, நீ இங்னவே இருக்கலாம். உனக்கு இங்க பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், நீ இங்க ஏன் வந்தனு மட்டும் தான் இன்னும் விளங்கமாட்டிங்கிது” எனக் கூற,
பனிமலரோ, “பூவம்மாள் பாட்டி மூலமா தெரிஞ்சிருக்குமோ ? பண்ணின பாவத்துக்குப் பரிகாரமா ?” என மனதினுள் நினைத்தவள்,
“நீங்க சொல்லனாலும் நான் இங்கதான் இருப்பேன். என்னோட வேலை முடுஞ்ச அடுத்த நிமிஷம் இங்க இருந்து போயிட்டே இருப்பேன்” எனப் பதில்கொடுக்க,
“ஏதாச்சும் வேணும்னா என்கிட்டே சொல்லுமா. எதுனாலும் தரேன்” எனப் பூதம் பேச,
“உயிர் வேணும். குடுகுறியா ?” எனப் பட்டென்று கடுப்புடன் மலர் கூற,
“ஆத்தி… நான் வாழவேண்டிய பையன். நீ பார்த்திபன் கிட்ட கேளு…அவன் தான் கொடை வள்ளல்” என லந்தடிக்க, சரியாகச் சூரியவர்மனும் கலாவும் வந்து சேர்ந்தனர்.
“என்ன பார்த்திபா? இப்பதான் வந்தியா ?” என மெல்ல பேச்சை தொடங்கிய சூரியவர்மன், நேராக விஷயத்திற்கு வந்தான். எப்போதும் சரக்கு இறக்கியவுடன் பணத்தைக் கொடுக்கும் பார்த்திபன், இம்முறை மூன்று நாட்களாகியும் பணம் கைக்கு வந்து சேராததால், அதை வாங்குவதற்கே வந்திருந்தான்.
“நேரத்தோடு சாப்பிடு… இரண்டு பேரும் கீழ வாங்க. அப்புறம் நாளைக்கு வீட்டுக்கு தேவையான ஜாமான் வாங்க போறேன். மலருக்கும் தேவையானதை சொன்னீங்கன்னா, சேர்த்து வாங்கிடுவேன்” எனச் சொல்ல,
“எனக்கு எதுவும் வேண்டாம் அண்ணா. ஹா … நான் இன்னும் வீட்டுக்கு காசு கொடுக்கலியே” எனக் கூறியவன், உள்சட்டை பையிலிருந்து மொத்த பணத்தை அப்படியே எடுத்தவன், சில நூறுகளை அடுத்தச் சரக்கு எடுக்கப் போகும் வழிசெலவுக்கென வைத்து கொண்டவன் அப்படியே சூரியவர்மனிடம் கொடுத்தான்.
மறுக்காமல் பெற்றுக்கொண்ட சூரியவர்மனின் கைகளில் இருந்த பணத்தைப் பார்த்த கலா, “எப்படியும் எட்டு ரூபா தேறும்…இது போதும் இரண்டு வாரத்தை ஓட்டிடலாம்.” என வேகேவேகமாகக் கணக்குகளைப் போட்டுகொண்டாள்.
வந்தவேளை முடிந்ததென்று அவர்கள் செல்ல, பின்னோடு பூதமும் அங்கிருந்து புறப்பட்டான். வந்ததிலிருந்து பார்த்திபன் பனிமலரிடம் ஒருவார்த்தை கூடப் பேசவோ கேட்கவோ முயலவில்லை.
இந்த மூன்று நாட்களாய் தான் யாரென்று அறிய முயன்ற பார்த்திபன் இன்று மெளனமாக இருப்பதைப் பனிமலர் வேறு விதமாகப் புரிந்துகொண்டாள்.
“செஞ்ச தப்பு துரத்துதோ… நான் யாருனு தெருஞ்ச பிறகு என்கிட்ட தைரியமா எப்படி உன்னால பேச முடியும்?” என எண்ணமிட்டாள்.
அதேவேளையில், பார்த்திபனோ, “இன்னமும் உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியல. ஆனால், நீ எதுக்காக வந்திருந்தாலும் இரத்தினவேல் ஐயாக்காக இங்க இருக்கலாம். போறவறவங்களுக்கெல்லாம் உதவி செஞ்சவரோட பொண்ணு போறதுக்கு இடமில்லாம இருக்கக் கூடாது” என எண்ணமிட்டான்.
எதுவும் பேச முயலாமல், ஒரு தலை அணையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன், குடிசைக்கு வெளியே போட்டு மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்துப் படுத்தான் .
“இந்தப் பொண்ணு எதுக்காக இப்படியொரு பொய்யோட வரணும்? எதுக்குன்னு கேட்டாலும் உண்மையை நிச்சயம் சொல்லப்போறதில்லை… நாம புருஞ்சுக்கிட்டது சரினா, இப்ப இந்தப் பொண்ணு போறதுக்கு இடமும் இல்ல…
இதுக்கு முடிவுதான் என்ன?” என்ற சிந்தனையை ஓடவிட்டவன் கண்களுக்கு முன்னால் இலக்கில்லாமல் நீண்டுகொண்டே போன அந்த வானமும் வானத்தில் தனித்திருந்த ஒற்றை நிலவுமே பதிலாய்க் கிட்டியது.
மறுநாள் காலை பொழுதோ, காதை பிளக்கும் பாட்டோடு தான் பிறந்தது. பக்கத்துக்குத் தெருவினில் எதோ விஷேசம்… அதற்காக ஒலிபெருக்கியின் மூலம் திரைப்படப் பாடல்களை ஓடவிட்டு அந்த இடத்தை அதிரவைத்துக்கொண்டிருந்தனர், விழா குழுவினர்.
ஒலிபெருக்கியில் இசைத்த பாடலோடு இணைந்து பாடியபடி கட்டியிருந்த கைலியை தூக்கி கட்டிய பூதம், “என்னை மட்டும் லவு பண்ணு புஜ்ஜி…” என இராகம் பாடிக்கொண்டு வர, சட்டென்று யார் மீதோ மோதி நின்றான்.
அந்த நேரம் திடிரென்று மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்ட, ஒலிபெருக்கியின் இசையும் நிறுத்தப்பட,
“ஏ…” என அதட்டல் குரலில் பூதத்தின் முன் நின்றிருந்தாள் ஒரு பெண்.
மேலிருந்து கீழாக அந்தப் பெண்ணைப் பார்த்தவன், “எ… இல்லைம்மா…’என்னை…’ சொல்லு ’என்னை’…என்னை மட்டும் லவு பண்ணு புஜ்ஜி” என மீண்டும் அவனின் பாணியில் பாட ஆரம்பிக்க,
“என்னடா சொன்ன?” என அந்தப் பெண் சட்டென்று ஒருமைக்குத் தாவி பூதத்தை முறைக்க,
“சாரி…ராங் நம்பர். இவ யாருடா புஜ்ஜினு சொன்னா, மிளகா பஜ்ஜியாட்டம் சூடா இருக்காள்” என முணுமுணுத்தவன், அந்த இடத்தைவிட்டு நகரப் போக,
“டேய் நில்லுடா..என்ன இடிச்சிட்டு உன்பாட்டுக்கப் போற ?”
“ஐயயோ! பஜ்ஜி பாப்பா…இது என்னோட பாட்டு இல்லை. தலைவ தனுஷ் பாட்டு…”
“எரும எரும” என அவனை நோக்கி அந்தப் பெண் திட்ட,
பால் கறக்க கட்டிப்போட்டிருந்த எருமையைப் பார்த்த பூதம், “ஒய் எரும..கூப்பிட்றாங்களா…பஜ்ஜி பாப்பாகிட்ட என்னனு கேட்டுட்டு போங்க” எனக் கூறிவிட்டு அவன் வழியே நடக்க முயல, பூதத்திற்கு எதிரில் வந்து நின்றான் இராசய்யா, அந்தப் பெண்ணின் தந்தை.
“எப்பா? நீ பஞ்ச பூத்தம்ல ? இங்கனவா இருக்கீங்க ?” என ஆச்சர்யம் காட்டி விசாரிக்க, பூதமும், “அட! இராசு அண்ணே..நீங்களா ?” எனப் பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.
ஆம்! அவ்விருவருக்கும் முன்பே பரிக்ஷயம் உண்டு. இராசய்யாவும் லாரி ஓட்டுநர். ஆனால், இந்த ஊர் இல்லை…இப்போது அவர்களின் சொந்த குடும்ப சூழல் காரணமாக,  முன்னிருந்த ஊரை விடுத்து இங்குக் குடிபெயர வந்துள்ளனர்.
பூதம் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடிவந்துள்ளனர். லாரியிலிருந்து சாமான்களை இறக்கிக்கொண்டிருந்த போது தான் பூதம் அந்தப் பெண்ணின் மீது தற்செயலாக மோதிவிட்டான்.
“எப்பா பார்த்திபன் வீடும் இங்கதானா?” எனக் கேட்க,
“ஆமாம் அண்ணே! பக்கத்துக்குத் தெரு” எனக் கூற, இராசய்யாவோ, “இது நம்ம மூத்த பொண்ணு பா. பேரு குறிஞ்சி” எனக் கூற,
“குறிஞ்சினு வச்சதுக்குப் பதிலா, கிறுக்கச்சினு வச்சிருக்கலாம்” எனப் பூதம் முணுமுணுக்க,
இராசய்யா காதில் விழாத போதும், குறிஞ்சியின் காதினில் பூதத்தின் பேச்சு நன்கு விழவே, நிமிர்ந்து அவனை முறைக்க,
“ஸ்… காரம் காரம்” என இப்போது வெளிப்படையாகவே சொன்னான்.
“என்னப்பா பூதம்?” என இராசய்யா வினவ,
“ஒரு பஜ்ஜி அண்ணே…சூடான மிளகா பஜ்ஜி பாத்தாலே காரம். பஜ்ஜியை சொன்னேன்” எனக் கூறிவிட்டு ஓடிவிட, செல்கின்றவனை எரித்துவிடுவது போலப் பார்த்து நின்றாள் குறிஞ்சி.
“நண்பா…” என்ற அழைப்புடன் நேராகப் பூதம் சென்று நின்ற இடம் பார்த்திபனின் மொட்டை மாடி.
அப்போது தான் எழுந்தவன், “என்னடா நேரமா வந்திட்ட ?” எனக் கேட்டபடி எழ,
“ஓனர்கிட்ட போய்ச் சரக்கு அடுத்து எப்பன்னு விவரம் கேட்டு வருவோம். இந்தப் பொழப்பும் போச்சு அப்புறம் சிங்கிள் டி க்கு கூடச் சிங்கித்தான்…
தெரியும்ல… விரசா கிளம்பு” எனத் துரிதப்படுத்த, பூதத்தின் வார்த்தைகளை உள்ளிருந்து கேட்டபடி பனிமலர் அமர்ந்திருந்தாள்.
“ஓ… வேலையில்லாட்டி உனக்கு ஒரு வேளைசோறு கூட இல்லையா? அப்போ உனக்கு அந்த வேலை இருக்கக் கூடாதே…” எனத் தனக்குள் ஒரு திட்டத்தைப் போட தொடங்கினாள் பனிமலர்.
அவர்களிருவரும் கீழே சென்றதும், சில நிமிடங்கள் கழித்துப் பின்னோடு அவளும் இறங்க, கொல்லையில் நித்ய கலாவும் சூரியவர்மனும் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் தற்செயலாக விழுந்தன.
எப்போதும் மற்றவரின் பேச்சை கேட்க விருப்பப்படாதவள், இன்றோ மலர் என்ற வார்த்தையில் செவிகளைக் கூர்மையாக்கி கவனிக்கத் தொடங்கினாள்.
“அட! ஆமாங்க…மலர் பொண்ணு பூரா நகையையும் என்கிட்டேதான் கொடுத்து வச்சிருக்கு. அநேகமா, உங்க தம்பியாட்டம் அதுவும் இளிச்சவாய் தான் போல” என நித்யா கூற,
“இளிச்சவாய்ன்னு சொல்லாத டி…” எனச் சூரியவர்மன் கண்டிக்க,
“என்ன? திடுதிப்புனு தம்பி பாசம் பொங்குதோ ?” எனக் கலா விசாரிக்க,
“அடியே! உன்னையெல்லாம் கட்டிக்கிட்டு அக்கா தம்பி மேலெல்லாம் பாசம் வைக்க முடியுமா ? அவன் சம்பாரிக்கிற மொத்தத்தையும் கொடுக்கிறதுனாலதான் வீடு ஓடுது. நம்ம காசும் சேர்க்க முடியுது… அதுனால அவனை அப்படிச் சொல்லாத.” எனக் கூறியவன், மீண்டும் அவனே தொடர்ந்து,
“ஒருநேரம் போல ஒருநேரம் இருக்காது…அவனுக்கு உன் பேச்சு காதில விழுந்து பொசுக்குன்னு வீட்டைவிட்டுத் தனிக்குடுத்தனம் கிளம்பிட்டால், நம்ம திட்டமெல்லாம் புசுவானம் தான்” என எச்சரிக்க, அவளும் தலையைத் தலையை உருட்டி கொண்டாள்.
இவர்களின் உரையாடல்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட மலரோ, “உன்னை நான் எதுவும் செய்யணும்னு அவசியம் இல்லைபோலவே பார்த்திபா… சட்டத்தை நீ ஏமாத்திடலாம். ஏமாத்தி வெளியையும் வந்திருக்கலாம்… ஆனால் விதி உன்ன உன்னோட சொந்தகாரங்க ரூபத்துல ஏமாத்துது…” எனத் திருப்தியாக நினைத்துக்கொண்டாள்.
அவளுடைய வேலைகள் சுலபமென அவளுக்குள் உறுதியான எண்ணம் பிறந்தது….
இரண்டு காய்களை நகர்த்தினால், ஆட்டத்தில் பனிமலருகே வெற்றி…
“இரெண்டு காயின் மூவ் பண்ணனும் பார்த்திபா…
முதல் காய் நான் நகர்த்தினால், உன்னோட வேலை காலியாகணும்.
இரண்டாவது காய் நகர்த்தினால் , உன்னோட அண்ணனோட சொந்தம் உனக்கு இல்லாம போகணும்…
அதோட இந்த ஆட்டத்தை முடிச்சிடுவேன்” எனத் திட்டங்களை, தீவிரமாக வகுத்துக்கொண்டாள்.

Advertisement