Advertisement

பகுதி – 14
சற்றுத் தொலைவில் வந்த காவல் வாகனத்தைக் கண்டதும் பூதம் சந்தோசமாக, “டேய் நண்பா என் நாக்கை பாரு…புள்ளி புள்ளியா இருக்கா ?” எனப் பார்த்திபனிடம் கேட்க,
“அடேய்? என்ன உளறுற ?” எனப் பார்த்திபன் குழப்பத்துடன் எதிர் கேள்விகேட்டான்.
“இல்லை நண்பா, போலீஸ் வண்டி வரும்னு சொன்ன என் வாய் முஹூர்த்தம் பளிச்சிடுச்சு பாத்தியா? அப்போ என் நாக்கு கறுநாக்கு தானே ?” எனப் பார்த்திபன் காதை கடித்தபடி பூதம் உல்லாசமாகக் கூற,
“இப்படிப் பார்த்தா தெரியல. வேணும்னா வெட்டி எடுத்து தா நல்லா பார்த்து சொல்றேன்…” எனப் பார்த்திபன் பதிலுக்குத் தீவிரமாகச் சொல்ல,
“என்னப்பா நீ இப்படிக் கிளம்பிட்ட?” எனப் பூதம் அதிர்ந்த முகத்துடன் வினவினான்.
இவர்கள் வழக்கடித்துக்கொண்டிருந்த பொழுதே, காவல் வண்டியின் ஓட்டுனர் பார்த்திபனிடம் வந்து, “தம்பி, உன்ன ஐயா கூப்பிடறார்” எனக் கூற, ஏன் என்ற சிந்தனையோடு பார்த்திபன் வந்தவரின் பின்னோடு சென்றான்.
அந்தச் சந்தர்ப்பத்தை மிகச் சரியாகத் தனக்குச் சாதகமாகப் பூதம் உபயோகிக்கும் வேலையில் இறங்கினான். கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் காரியத்தில் கண்ணாய் இருந்தவன், தனக்கு முன்னால் நின்றிருந்த அந்தப் பையன் மற்றும் பெண்ணிடம்,
“என்ன பாக்குறீங்க? என் நண்பனுக்குப் போலீஸ்ல ஆளு இருக்கு… நான் சொல்றதை செஞ்சீங்கன்னா, இந்தப் போன்ல இருக்குற போட்டோவை அழிச்சிடறேன்…” என மீண்டும் அவனுடைய காரியத்திற்கே வந்தான்.
மாட்டிக்கொண்ட இருவரும் சற்றும் தாமதிக்கவில்லை. என்ன செய்யவேண்டுமென்ற கேள்வியைத் தூரத்தே நின்ற பார்த்திபனை பார்த்தபடி கேட்டனர்.
ஆம் பார்த்திபனுடன் அந்தக் காவல் அதிகாரி ஏதோ சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் தான் தெரிந்தது.
அவர் வேறு யாருமில்லை. முன்பு ஒருமுறை சரக்கு ஏற்றும் இடத்தினில் தகராறு நிகழ்ந்த போது, பார்த்திபனுக்கு உதவிய அதே காவல் ஆய்வாளர் விநாயகம்.
“என்னய்யா நீங்க இரெண்டு பேரும் மட்டும் நிக்குறீங்க? லாரி எங்க ?” என விசாரித்தார் விநாயகம்.
பூதத்தின் முன் நின்ற அந்தப் பெண் மற்றும் அந்தக் கடை பையனிடம், “என்னப்பா ? உங்கள பார்க்கவே முடில… பிஸி ஆகிட்டிங்களா ?” அப்படினு கேட்குறாரு அந்த இன்ஸ்பெக்டர் என மாற்றிக் கூறிக்கொண்டிருந்தான்.
“அப்போ, சொந்த வேலையா வந்திருக்கீங்கனு சொல்லுங்க.” என விநாயகம் கூற,
அதைப் பூதமோ, “சொந்தம்னா அப்ப அப்ப பார்க்கணும். வந்து பாருங்க” என மாற்றி , விநாயகம் இதைத் தான் பார்த்திபனிடம் கூறுவதாகக் கூறினான்.
“மறுபடியும் அந்தச் சுசிதீரன் ஏதுவும் வாலாட்டினானா? நான் இப்போ இந்த ஊருக்கு போஸ்டிங்…சரக்கு எடுக்கப் போறப்ப, சூதானமா நடந்துக்க.” என எச்சரிக்க,
“எவனாச்சும் வாலாட்டுனா என்கிட்ட சொல்லு.நான் இப்ப இந்த ஊருக்கு வண்டே” எனப் பூதம் மாற்றிக் கூறிக்கொண்டிருந்தான்.
“புறப்படு… பார்க்க நல்லமாதிரியா இருக்க. தேவையில்லாத வம்புல மாட்டாம போ” என அனுப்பிவைக்க,
“தேவையில்லாம யாராச்சும் உண்ட வாலாட்டுன மட்டை பண்ணிடு…நான் பாத்துக்கிறே” எனப் பூதம் மொழி பெயர்க்க, பூததிடம் சிக்குண்ட அந்த இருவரும் அச்சம் கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் விநாயகத்திற்குப் பார்த்திபனை பற்றியும் தெரிந்திருந்தது பார்த்திபனோடு வம்பு செய்த சுசீந்திரன் பற்றியும் தெரிந்திருந்தது. இதைப் பார்த்திபனை அழைத்துச் சொல்லவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாவிடுலும் கூட, ஏனோ பார்த்திபனை காணவும் எச்சரிக்கை கொடுக்கும் எண்ணத்துடன் அழைத்து விட்டிருந்தார்….
பூதம் வண்டிக்கு அருகே நின்றிருந்த விநாயகத்த கவனித்துவிட்டவன் விநாயகத்தின் வாய் அசைவுக்கு இங்கிருந்தே ஒலி சேர்க்கை (டப்பிங்) செய்து கொண்டிருந்தான்.
“அண்ணே! மன்னிச்சிடுங்க அண்ணே…முதலாளி காதுக்கு மட்டும் போச்சு எங்களோட வேலையே போய்டும்” எனக் கூற,
“சரி! இந்தம்மா பொண்ணு, உங்க கடைக்கு முன்னாடி ஒரு காமெரா இருக்கே, மூணுநாள் முன்னாடி பதிவான படத்தை எங்களுக்குப் போட்டு காட்டு…அப்படி காட்டினால், இந்தப் போனையே கொடுத்திட்டு போய்டுறேன்…முடியுமா ?” எனத் தங்களுக்கு வேண்டியதை சொல்ல, அப்போது மிகச்சரியாக வந்து சேர்ந்தான் பார்த்திபன்.
சிறிது பயம் கொண்டவர்களை உருட்டி மிரட்டி பூதம் வழிக்கு கொண்டுவர, அந்தப் பெண் குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் உள்ள காட்சிகளை மட்டும் எடுத்து காண்பித்தாள்.
பூதம் இது தான் நடக்குமென்று உறுதியாக எண்ணி இந்தச் செயலில் இறங்கவில்லை. ஏதேனும் நடக்குமா என்ற யூகத்தில் தான் இறங்கினான்…
கடைக்கார பையன் கையோடு உணவு பொட்டலத்தை மறைத்ததிலும், அவனுடைய தலை முடியை ஒழுங்கு படுத்தியதிலும் ஏதோ ஒரு பெண்ணைத் தான் பார்க்க போகிறானென்ற யூகத்திற்கு வந்தவன், பின்தொடர்ந்தால், தன்னுடைய காரியத்தைச் சாதிக்க அந்தப் பையனை உபயோகித்துக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் வந்தான். ஏனென்றால் இருப்பது ஐந்தாறு கடைகள் எனும் போது, அங்கு வேலை செய்பவர்கள் நிச்சயம் பழக்கமுடியவர்களாகவோ அருகிலிருக்கும் ஒரே ஊரை சேர்ந்தவர்களாகவோ தான் இருப்பார்கள்.
ஆகையால், இவன் மூலம் கேமரா பொருத்தப்பட்டிருந்த கடை ஊழியர்களை யாரையாவது அணுகலாம் என்ற சாதாரண எண்ணத்தோடு தான் பின்தொடர்ந்தான்.
இங்குப் பூதமே எதிர்பார்க்காமல் நிகழ்ந்ததோ, டைல்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண் கடையின் பின் பக்கமாக வந்து அந்தப் பையனிடமிருந்து உணவு பொட்டலத்தை வாங்கிக் கொண்டது…
அதோடு நில்லாமல், அந்தப் பெண், “நீ இப்படித் திருட்டுத்தனமா கொண்டுவராத சொன்னால் கேட்கமாட்டுற. உங்க ஓனருக்கு தெரிஞ்சால் வம்பு. எங்க ஓனருக்கு தெரிஞ்சால், எங்க அப்பன் ஆத்தாட்ட சொல்லிடுவாரு…” எனப் பதட்டத்துடன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“சபாஷ்…” என்ற குரலுடன் கைபேசியை ஆட்டி ஆட்டி காண்பித்தபடி அவர்கள் முன் சென்று நின்றிருந்தான் பூதம்.
இது தான் நிகழ்ந்தவை…
அவர்கள் தேடிய காட்சிகளை எடுப்பதில் சிரமமிருக்கவில்லை. நாளும் சரியான நேரமும் இருந்ததால் எளிதில் அவர்களுக்கு தேவையானதும் கிட்டியது. அதோடு அந்தக் கடையின் உரிமையாளர் மத்திய உணவுக்கு அவருடைய வீடுவரை  சென்றிருப்பதும், அன்று அவர் திரும்புவதற்கு தாமதமானதும் கூட அவர்களுக்கு அனுகூலமாக அமைந்தது. சென்றிருந்தவர் திரும்பி வருவதற்கு முன்னதாகவே பார்த்திபனும் பூதமும் பார்த்துவிட்டு புறப்பட்டும்விட்டிருந்தனர்.
அந்தக் காட்சியில், அவர்களுக்கு வண்டியின் எண் மட்டுமில்லாமல், அந்த வண்டி எந்த ஊரிலிருந்து வந்ததென்ற தகவலும் சேர்த்தே கிடைத்தது. அதற்குக் காரணம், அந்த வண்டியின் பதிவு எண். அதோடு பரோட்டா கடை பையன் கொடுத்த தகவல்.
அந்த வண்டி ஓட்டுனரின் பெயர் மற்றும் ஊர் இரண்டையும் கூறியிருந்தான். வழக்கமாக அவர்களின் கடைக்கே அந்த ஓட்டுனரும் சவாரி இருக்கும் வேளையில் உணவு அருந்தவருவதால் எளிதில் இனம் கண்டு கூறியிருந்தான்.
“பரவாயில்ல பூதம் கலக்கிட்ட. எப்படிடா?” எனப் பூதத்தைப் பார்த்திபன் பாராட்டியபடியே இருசக்கர வாகனத்தை அந்த ஓட்டுனரின் ஊர் நோக்கி அழுத்த,
“பின்ன இதுக்கெல்லாம் ஜேம்ஸ் பாண்டா வருவாங்க. நம்ம தான் அர்ஜென்ட் சிஐடி யா பதவி ஏத்துக்கணும்” எனக் கூறியபடி வண்டியில் அமர்ந்தான்.
“ஆமா, போட்டோ எடுத்து மிரட்டுறது தப்பு இல்லை?” எனப் பார்த்திபன் வினவ,
“எப்பா நவீன தர்மரே! இந்தப் போன்ல பாட்டெறியே இல்ல” எனப் பூதம் சாதாரணமாகக் கூறினான்.
“அப்புறம் எப்படிடா? அவுங்கள வழிக்கு கொண்டுவந்த ?”
“போன் ஆன் ஆகாதுன்னு போனுக்கும் எனக்கும் தானே தெரியும். அந்தக் காதல் சில்வண்டுகளுக்குத் தெரியாதே..அதான் சிக்கிடுச்சுங்க” எனக் கிண்டலாகக் கூற,
“பெரிய ஆளு தான் போ… சரி போறோம் அந்த ட்ரைவரை தட்டுறோம்” என முடிவோடு புறப்பட்டான் பார்த்திபன்…
ஒரு மணி நேர பயணத் தூரத்தில், அவர்கள் தேடிவந்த ஊரை அடைந்தனர். வாடகை கார்கள் நிற்கும் இடத்திற்குச் சென்றவர்கள் அந்த ஓட்டுனரை தேடவேண்டிய அவசியமே இல்லாமல், பூரண அலங்காரத்துடனும் இறுகிய முகத்துடனும் பனிமலரின் புகைப்படம் பெரிய சுவரொட்டியில் இருக்க, அவளுடன் மணக்கோலத்தில் வாட்ட சாட்டமாய் ஒரு வாலிபன் இருந்தான்.
நல்ல நிறம் நல்ல கலை நல்ல உயரமெனப் பனிமலரின் அருகே மணமகனாக நின்றிருந்தவன் வசீகரமாய் வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான்.
பார்த்திபனின் கண்கள் பார்த்தது பார்த்தபடி அந்தச் சுவரொட்டியிலே ஸ்தம்பித்துவிட்டிருந்தது…
“இவன் என்னத்தை இப்படிப் பாக்குறான்?” என்ற கேள்வியுடன் பூதமும் அத்திசையில் காண,
அதுவொரு திருமண வரவேற்பு அழைப்பிதழ் சுவரொட்டி. மணமகன் பிரியன் மணமகள் பனிமலர் எனத் தொடங்கி நாள் கிழமை நேரம் இடமென அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தது…
வேகமாகத் தேதியை காண, ஆம்! அன்று தான் பார்த்திபனுக்கும் அம்சவேணிக்கும் கூடத் திருமணம் என நிச்சயக்கப்பட்டிருந்த தினம்.
“அப்படினா? கல்யாணத்தனைக்கு ஓடி வந்திருக்குடா நண்பா ?” என மெல்ல பூதம் , பார்த்திபனின் காதில் முணுமுணுத்தான்.
“இதைப் பத்தி நாம தெருஞ்சுக்கணும் பூதம்… நீ கவனிச்சியா? இது ரொம்பப் பெரிய இடம்” எனப் பார்த்திபன் ஆழ்ந்த குரலில் கூற,
அவர்களைக் கடந்து சென்ற ஒரு முதியவரை வழி மறித்த பார்த்திபன், “ஐயா..இந்த போஸ்டர் ?” எனக் கேள்வியாக இழுக்க,
“அதை ஏன்பா கேட்குற? இந்தப் பொண்ணு கண்ணாலத்தைவிட்டு ஓடிடுச்சு. அந்தப் பையன் நாலாபுறமும் ஆளவிட்டுத் தேடுறான்.
என்ன சமாச்சாரம் தெரியல. எல்லாம் அவசர அவசரமா நடந்துச்சு. இந்தப் பையன் பார்க்க நல்லா இருக்கிறான். குணம் நல்ல குணம்னு தான் சொல்லுறாங்க, வேற என்னமோ நடந்திருக்கு. இல்லைனா வீட்டுல இருந்த பிள்ளை ஏன் போகணும்? என்ன நடந்ததுனே தெரியல..
நல்லா வாழ்ந்த குடும்பம். கொஞ்ச நாள் முன்னாடி அப்பன் ஆத்தாவை பறிகொடுத்துச்சு…திடிர்னு கல்யாணம் சொன்னாங்க. பிள்ளை கலை இல்லாம இருந்திச்சு…பொறவு பொண்ணைக் காணோம்னு சொல்றாங்க..ஒன்னும் புரியல” எனக் கூறியவர் சட்டென்று நிறுத்திவிட்டு,
“ஆமா, இந்தப் பொண்ணைப் பத்தி நீங்க ஏன் விசாரிக்கிறீங்க?” என எதிர்கேள்வி கேட்க,
“நாங்க எப்போ கேட்டோம். நீங்க தானே சொன்னீங்க…” எனப் பூதம் உள்ளே புகுந்தான்.
“இல்லையே இந்தத் தம்பி?” எனப் பார்த்திபனை சுட்டி காண்பிக்க, அப்போது சரியாகப் பெரியவீட்டு ஆட்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
“இவனுங்க வம்பு பண்றவங்களாச்சே” என அந்த முதியவர் முணுமுணுக்க, பார்த்திபன் அதைக் கவனிக்கத் தவறவில்லை.
வந்தவர்களைப் பார்த்தால் பார்த்திபன் மனதிற்குச் சரியாகவும் தோன்றவில்லை.
“என்ன பெருசு…எங்க அண்ணே கண்ணாலம் நின்னுபோச்சுனு ஊர் உலகமெல்லாம் தண்டோரா போடுறியா? டேய் இந்தப் போஸ்டர் மட்டும் ஏண்டா இன்னும் கிழிக்காம இருக்கு…” என வந்தவனின் ஒருவன் மற்றொருவரிடம் கத்த,
“நான் சொல்லல தம்பி, இந்தப் பசங்கதான்…” எனக் கூறி பார்த்திபன் மற்றும் பூதத்தை சுட்டி காண்பிக்க
“யாரு நீங்க இரண்டுபேரும்? எதுக்கு போஸ்டரை காமிச்சு விசாரிக்கிறீங்க ?” என வண்டியை நிறுத்திவிட்டு விசாரணையாகப் பார்த்திபனை நோக்கி முன்னறினர்.
“இந்தப் போஸ்ட்டர்ல இருக்கத் தகவலை தெருஞ்சுக்கப் போஸ்டரை காட்டாம மாஸ்டர் படத்தையா காட்ட முடியும்?” எனப் பூதம் துடுக்காக வாய் பேச,
“என்ன வாய் நீளுது?” என அவர்கள் எகிற, பார்த்திபன் இடை புகுந்து நிலைமையைக் கையில் எடுத்தான்.
“இதோ பாருங்க…எங்களுக்கு ஒரு தகவல் தேவைப்பட்டது. அதுக்காகத்தான் இந்தப் போஸ்டர் பார்த்தோம்” என விளக்கினான்.
“என்ன தகவல்?” என அவர்கள் கேட்க,
“இரத்தினவேல் ஐயா? ஐயா தவறிட்டாரா ?” எனப் பார்த்திபன் வினவ,
“ஆமா! உனக்கு எப்படி ஐயாவை தெரியும் ?” எனக் குறுக்கு விசாரணை செய்தார்கள்.
ஆம்! அதில் கம்பீர தோற்றத்துடன் இருந்த ஒருவரின் புகைப்படமும் சிறிய அளவில் இருந்தது. லேட் என்ற குறிப்புடன் இரத்தினவேலின் நல்லாசியுடன் என்ற வாசகத்தைக் கொண்டே பார்த்திபன் இக்கேள்வியைக் கேட்டிருந்தான்.
“அவருக்குச் சொந்தமான மண்டி மில்லு இரண்டுக்கும் நான் சரக்கு இறக்கிருக்கேன்…இப்ப கொடுக்கல் வாங்கல் இல்லை. இந்தப் போஸ்டர்ல ‘லேட்’-னு எழுதியிருக்கவும் எனக்கு யோசனையா போச்சு.
ஏங்க எப்போ எப்படி இறந்தாரு ?” எனப் பார்த்திபன் அதிர்ச்சியுடன் வினவ,
“ஆஸிடெண்ட் பா…ஐயாக்கு வியாபார தொடர்பா? அப்போ நம்ம ஆளு… “
“எப்போ?”
“மூணுமாசம் இருக்கு பா… உனக்குத் தாக்கல் கிடைக்கலையா?” என வந்தவர்களில் ஒருவன் வினவ,
“இல்லை கடைசியா நான் அவரைப் பார்த்து அஞ்சு மாசமிருக்கும்… இது இரத்தனவேல் ஐயாவோட மகளும் மருமகனுமா? ஐயா சம்சாரம் எப்படி இருக்காங்க ? பார்க்க முடியுமா ?” என அடுக்கடுக்காகக் கேட்க,
“ஐயா அம்மா இரெண்டு பெரும் போய்ச் சேர்ந்துட்டாங்க… ஆமாம்! மகளும் மருமகனா ஆகவேண்டியவரும்… ” என ஒருவன் கூற, மற்றொருவன் அடுத்தவனைப் பார்வையால் தடுத்தான்.
அவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்திபன் கவனிக்கத் தவறவில்லை.
“துக்கம் விசாரிக்கணும். யாரையாவது அந்த வீட்ல பார்க்க முடியுமா ?” என பார்த்திபன் கேட்க, 
“ஊருக்கு புதுசா இருக்கீங்க…இப்ப நிலைமை தோதுப்படாது. நீங்க பெரிய வீட்டுக்கு போறது நல்லதில்லை. ஐயாவோட ஆளுங்கிறதுனால சொல்றேன்… வேற விஷயத்துல எல்லாரும் பரபரப்பா இருக்காங்க… நீங்க வந்த சோலிய மட்டும் பார்த்திட்டு, கிளம்புற வழிய பாருங்க” என எச்சரிக்க,
“புறப்படுடா…” எனப் பார்த்திபன் பூதத்திடம் கூற,
“நண்பா…” என எதையோ சொல்லமுடியாமல் மென்று விழுங்கியபடி பூதம் நின்றான்.
“கிளம்பு…” என்ற ஒற்றைச் சொல்லில் அதட்டி அங்கிருந்து பூதத்தைக் கிளப்ப, சிறிது தூரம் சென்றதும்,
“ஏன் நண்பா ஏதும் சொல்லல? அந்தப் பிள்ளை நம்மவீட்ல இருக்குதுனு சொல்லிருக்கலாம்ல ? ஆமாம், நீ எப்படி இரத்தினவேல் ஐயா போட்டோ பார்த்த ? குட்டியா இருந்ததால நான் கவனிக்கல” எனப் பூதம் பேசிக்கொண்டே வர,
“இந்தப் பொண்ணு பெரிய பணக்காரவீட்டு பொண்ணு. நல்ல வசதி…அதுமட்டுமில்ல, அந்த வீடு அந்தப் பொண்ணோடாது. கல்யாணம் வேண்டாம் மாப்பிளை பிடிக்கலைன்னா கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் நிறுத்தல…
ஓடிவந்திருக்கு… அப்போ இங்க ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. அந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்கத் தான் இங்க வந்திருக்கு…
அவுங்ககிட்டையே போய் நாம் அந்தப் பொண்ணு இருக்குற விஷயத்தைச் சொல்ல கூடாது .” எனப் பார்த்திபன் தெளிவான சிந்தனையுடன் கூற,
“ஆமா, அதுக்கு இங்க பிரச்சனைன்னு பஸ் பிடிச்சு கிளம்பி வந்து நமக்கு அங்க பிரச்சனை கொடுக்குது” எனப் பூதம் கூற,
பார்த்திபன் முறைத்தான்.
“இவன் ஏன் முறைக்கிறான்? ஓ பஸ் னு தப்பா சொல்லிட்டேனா ? லாரி…” எனப் பூதம் திருத்தம் செய்யப் பார்த்திபன் இன்னும் முறைத்தான்.
“என்னை ஏண்டா முறைக்கிற?” எனப் பூதம் அப்பாவியாக முகத்தை வைத்து கேட்க,
“நல்லா யோசி…இவ்ளோ பணம் சொத்து பத்து வச்சிருக்கப் பொண்ணு தனக்காக யாருமே இல்லனு ஏன் சொல்லணும்? என் கூடத்தான் இருக்கணும்னு ஏன் சொல்லணும் ? கல்யாணத்தைவிட்டு ஏன் ஓடிவரனும் ?
நான் வருத்தப்படணும்னு ஏன் நினைக்கணும் ? இதை எல்லாம் கண்டுபிடிக்கணும். எதையும் முழுசா தெருஞ்சுக்காமல், அந்தப் பொண்ணு நம்ம வீட்ல இருக்கறதை வெளில சொல்றது நல்லது இல்லனு தோணுது” என நீளமாகத் தன்னுடைய கருத்தை எடுத்து சொல்ல,
“அப்போ இதெல்லாம் கண்டுபிடிக்கிறதுக்காக மலர் அங்கவே இருக்கட்டும் சொல்றியா ?” எனப் பூதம் வினவ,
“இல்லை! மலர், இரத்தினவேல் ஐயாவோட பொண்ணு. அதுனால அங்க இருக்கட்டும்…” என உறுதியான குரலில் கூறினான் பார்த்திபன்.
அதேவேளையில்,
பூவம்மாளின் பாட்டி வீட்டில்,
“ஏன் ஆத்தா? உங்க அப்பா அம்மா எப்படித் தவறினாங்க ?” எனக் கேட்க,
“ஆக்சிடென்ட்…என் கண்ணு முன்னாடியே தூக்கி அடிச்சு துடி துடிச்சு….” எனக் கூறிய பனிமலரின் கண்கள் தன்னைப் போலக் கலங்கின.
“வேணாம் ஆத்தா வேணாம்…நீ ஒன்னும் சொல்லவேணாம். யாருமில்லைனு நினைக்காத. நானும் உன்னோட புருஷனும் இருக்கோம். .
பார்த்திபனுக்கு அப்படியே அவங்க அப்பா குணம். ஜமீன் குடும்பமுனு சொல்றதுக்கு ஏத்தாப்புல அந்தக் குடும்பத்துலையே அவன் மட்டும் தான் இருக்கான்.
வந்தவங்கள கைவிடவே மாட்டான். எல்லாரோட நிலமைல இருந்தும் யோசிக்கிற மனுஷன் அவன். இனி உனக்கும் எல்லாமாவும் இருப்பான்…” என ஆறுதலாகக் கூற,
பனிமலரோ மனதினுள், “எல்லாமும் இருந்த என்னை எதுவுமே இல்லாமற் நிற்கதியா நிப்பாட்டுன்னவனே அவன் தான்… அவன் எனக்கு எல்லாமுமா இருக்கப் போறானா ?” என இகழ்ச்சியாக உதடுகள் வளைத்து விரக்தியாகச் சிரித்தாள்.
“அப்பா பேரு என்ன தாய்?” எனப் பூவம்மாள் வினவ,
“இரத்னவேல்…” என அழுகையை விழுங்கியபடி உயிரை குரலில் தேக்கி உச்சரித்தாள், மலர்!
அதேவேளையில்,
பூதம், “நிஜமாதானா ? மலர நீ அனுப்ப போறதில்லையா ?”
“இரத்னவேல்…அப்படிங்கிற ஒரு பெரிய மனுஷருக்காக…. அவள் அங்கையே இருக்கட்டும்…” என்ற முடிவை மீண்டும் ஒருமுறை திட்டமாகக் கூறினான், பார்த்திபன்!

Advertisement