Advertisement

பகுதி – 13
“என்னடா தெரியும்?” எனப் பூதம் வினவ,
“நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும்” எனச் சாதாரணமாகக் கூறினான் பார்த்திபன்.
“அதானே பார்த்தேன்…எங்கடா நீ உன்னோட குடும்பத்தைப் புருஞ்சுகிட்டியோன்னு நினச்சுட்டேன்” எனச் சலிப்புடன் கூற,
“நீ என்ன சொல்லவர? என்னோட அண்ணன் என்னைவிடப் பணத்தைத்தான் மதிக்கிறாருனு சொல்லவரியா ? எங்க அக்காக்குக் குடும்பத்தை விட, அவளோட தனிப்பட்ட விருப்பம் தான் முக்கியம்னு சொல்லவரியா ? என்னோட அம்மாக்கு என்னைவிட மத்த இரண்டு பிள்ளைங்களைத் தான் பிடிக்கும்னு சொல்ல போறியா ?” எனப் பார்த்திபன் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க, பூதம் வாயடைத்து நின்றான்.
“இத்தனையும் தெருஞ்சும் நீ எப்படிடா பொறுமையா இருக்க? அவுங்க மேல உனக்குக் கோபமோ வெறுப்போ வருத்தமோ வரலியா ?” எனப் பூதம் புரியாமல் வினவ,
“இதுல பொறுமையா இருக்க என்ன இருக்கு? கோப படவோ வருத்தப்படவோ தான் என்ன இருக்கு ? எனக்குப் புரியலை” என நிதானமாகவே பார்த்திபன் பதில் கொடுத்தான்.
“டேய்! மொத இருந்து ஆரம்பிக்காத….நீ கொடுக்குற காசுல தான் குடும்பமே ஓடுது. உங்க அண்ணா நையா பைசா கூடச் செலவு பண்றது இல்ல. அப்படியே சேர்த்து வச்சிக்கறாரு…தனியா இடம் வாங்க லேண்ட் ப்ரோக்கர கூட அப்ப அப்ப பாக்குறதா அரசபுரசலா பேச்சு வருது….
அப்புறம் உங்க அக்கா, எப்பவும் உன்பக்கம் நிண்டதே இல்லைடா… நீ மாடா உழைச்சாலும் உங்க அம்மாக்கு உங்க அண்ணன் தான் உசத்தி” எனப் பூதம் புட்டு புட்டு வைக்க,
அதற்கும் பார்த்திபன் அசராமல் தான் நின்றான்….
“ஏண்டா? உனக்குன்னு வாழ பாருடா” எனப் பூதம் மீண்டும் அவனே கூற,
“எனக்குன்னு வாழறதுனா என்ன? கொண்டு வர காச, எனக்குன்னு சேர்த்து ஒளிச்சு வச்சுக்கிறதா ? இல்லை பூதம்! அது வாழ்க்கை இல்லை.
எங்க அண்ணே, நான் கெட்டு போகணும்னு நினைக்கல. அதோட வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வரணும்னு நினைக்கிது. எங்க அக்கா என் பக்கம் நிக்கக்கூடாதுனு நினைக்கல. மாமா வெளிநாட்டுல இருக்கதுனால, யாருக்கு பரிஞ்சு பேசிட்டு இன்னொருத்தவங்கள பகைச்சுக்க விரும்பல.
எங்க அம்மாக்கு என்ன பிடிக்காம போகக் காரணம் என்ன ? நான் என்ன அவுங்கள போலப் படிச்சேனா ? பெரிய வேலைல இருக்கேனா ? இல்லைல!
அண்ணனுக்குப் பணம், அக்காக்குப் பாதுகாப்பு, அம்மாக்குக் கெளரவம் அப்படினு எதுவேனாலும் முக்கியமா இருக்கலாம். ஆனால் எனக்கு இந்தக் குடும்பம் தான் முக்கியம்.
எனக்குன்னு வாழுறேன்னு காச ஒதுக்கிவச்சுகிட்டா, கடைசில என்கிட்ட அந்தக் காசு மட்டும் தான் இருக்கும். சொந்தமிருக்காது!
உடம்புல தெம்பு இருக்குச் சம்பாதிச்சுப்பேன். ஆனால், அவுங்க இல்லாம என்னால வாழ முடியாது.” என நிதானமாகவே கூற,
“ஏண்டா? இப்படியே உழைச்சு உழைச்சு ஓடா போ. உங்க அண்ணா அக்கா எல்லாம் வீடு வாசனு கட்டி போகட்டும். இதெல்லாம் பார்த்தல் உனக்குக் கடுப்பாகாதாடா ?” எனப் பூதம் விடாமல் ஆற்றாமையுடன் வினவ,
“எனக்குப் பிடிச்சவங்க நல்ல இருக்கறதை பார்த்து கடுப்பான என்னோட பாசம் பொய்யாகிடும் டா. அவுங்க அப்படி வீடு வாசகட்டி வாழ்ந்த சந்தோசம் தானேடா படணும்?” என எதிர் கேள்வி கேட்டான்.
மேற்கொண்டு பூதம் ஏதோ கூற வர, கை உயர்த்தித் தடுத்தவன்,
“இதோ பாரு நண்பா… நம்ம முக்கியம்னு நினைக்கிறவங்களுக்காக நம்ம எதை வேணாலும் செய்யலாம். பதிலுக்கு அவுங்க நமக்குச் செய்வாங்களா ? செய்யமாட்டங்களானு கணக்கு பார்த்து பண்ண வியாபாரம் இல்ல.
எங்க அண்ணே நல்லவரு தான்…என்ன அவரு நல்லா இருக்கணும்னு நினைக்கிறாரு” எனக் கூற,
“அதைச் சுயநலம்னு கூடச் சொல்லலாம்” எனப் பூதம் பட்டென்று கூற,
“யாருக்கு தான் சுயநலமில்லை? எல்லாருக்குமிருக்கு! ஆனால், அளவு தான் வேற. ஒண்ணுமட்டும் புரிஞ்சுக்கப் பூதம். நான் காசு கொடுக்கலாம், ஆனால் குடும்பத்தை அண்ணன் தான் கூட இருந்து பாத்துக்கிறார்…
இன்னும் தெளிவா சொல்லுறேன். நான் கெட்டு போகணும் அவுங்க யாரும் நினைக்கல. அவுங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க” எனக் கூற,
“இவ்ளோ நல்லவனா இருக்கக் கூடாது நண்பா…உன்ன இந்த உலகம் இளிச்சவாயனாக்கிடும்! ஏமாந்து போய்டுவ!” எனப் பூதம் கூற,
“ஏண்டா ஊரு உலகத்துல இருக்க எல்லாப் பாடமும் மதமும் சாமியும் நல்லவனா இருக்கத் தானே சொல்லிக்கொடுக்குது? அப்போ எப்படி நல்லவங்க ஏமாந்து போவாங்க…? அப்போ அவுங்க சொல்றதெல்லாம் பொய்யா ? அது பொய்யில்லை அப்படினா நான் ஏமாறமாட்டேன்…” என உறுதியாகக் கூற,
இந்தப் பேச்சில் பூதம் வாயடைத்துப் போனான்…
“இப்பயாச்சும் புறப்படலாம்ல?” எனப் பார்த்திபன் வினவ, அடுத்த அரைமணி நேரத்தில் நெடுசாலையில், இருசக்கர வாகனத்தில் இருவரும் பறந்துகொண்டிருந்தனர்.
“என்ன மலரு? சாப்பிட கூட வராம இங்னவே உக்காந்திருக்க? அதான் நான் கொண்டுவந்தேன். இந்தா சாப்பிடு” எனக் கொண்டு வந்து கொடுத்தது நித்ய கலாவே…
“ஏன் இப்படி உக்காந்திருக்க? என்ன எப்பவும் ஏதாச்சும் யோசிச்சுகிட்டே இருக்க” என மீண்டும் அவளே கேட்க,
“ஒன்னுமில்லிங்க… புது இடம்ல. அதான் ஒருமாதிரி இருக்கு…” என மலர் சற்றே திணறலுடன் கூறினாள்.
“பஞ்சயாத்துல அந்தப் போடுபோட்ட, இப்ப என்ன தந்தி அடிக்கிது…” எனக் கேட்க,
“அப்போ பேசவேண்டிய கட்டாயம். ஒரு வேகத்துல பேசிட்டேன்… ஆனால் இப்போ ?” என எதையோ கூற வந்து அப்படியே வார்த்தையை மலர் விழுங்கினாள்.
“என்ன ஏதோ சொல்ல வந்த?” என நித்ய கலா வினவ,
சரியாகப் பூவம்மாள் பாட்டி வந்து சேர்ந்தார்.
“ஆத்தா…இந்தா இந்தப் பொட்டிய அங்கனவே வச்சுட்டு வந்துட்ட?” என ஒரு பெட்டியை நீட்டினார் பூவம்மாள்.
அதுவொரு மரப்பெட்டி. அந்தப் பெட்டியை கொடுத்ததே பூவம்மாள் தான். ஆனால் பெட்டிக்குள் இருக்கும் நகைகள் பனிமலருடையது…அதை பூவம்மாளின் வீட்டிலே வைத்துவிட்டு வந்திருந்தாள்.
அந்த நகைகளை அவள் பெரிதாகக் கருத்தில் கொள்ளவில்லை…. காரணம் வாழவேண்டுமென்ற பிடிப்பிருந்தால் தானே இந்த உலகத்திலிருக்கும் பொருட்களின் மீது பிடிப்பு வரும்…ஆகையால், அதை அவள் எடுக்க வேண்டும் என்று கூட எண்ணியிருக்கவில்லை.
“என்ன பாட்டி இது?” என நித்ய கலா, ஆர்வமாகப் பெட்டியை நோட்டமிட,
“பார்த்திப் பொண்டாட்டியோட நகைங்க…” எனப் பூவம்மாள் கூறியதும், கலாவின் கண்கள் பேராசையில் விரிந்தன.
“மலரு…நீ போட்ருந்தப்பவே பார்த்தேன். எல்லாமே நல்ல டிசைன். ஆமா, உனக்குத்தான் அப்பா அம்மா யாருமில்லையே… அப்புறம் எப்படி இம்புட்டு நகை நட்டு வச்சிருக்க ?” எனச் சட்டென்று கேட்டுவிட்டு நாக்கை கடித்திக்கொள்ள, பூவம்மாள் பாட்டி, கலாவை முறைத்தார்.
“அவுங்க இப்ப சமீபத்திலதான் என்ன விட்டு போனாங்க… என்னையும் கூப்பிட்டுப் போயிருந்தால் நான் நிம்மதியா இருந்திருப்பேன்” எனத் தன்னையும் மீறி விரக்தியில் இந்த வார்த்தைகளை விட்டிருந்தாள்.
கலா என்ன நிகழ்ந்ததென்று அறியும் ஆர்வத்துடன் தூண்ட போக, பூவம்மாள் தடுத்தார்.
“கலா, அந்தப் பிள்ளை முகமே சரியில்லை. நீ சும்மா கிட. எதுக்கு வந்த ? சாப்பாடு கொடுக்கவா ? அதைச் சாப்பிட வை” என அதட்ட,
தன்னிடமிருந்த தட்டை மலரை நோக்கி நீட்டினாள். பூவம்மாள் பாட்டி வீட்டில் ஏதோ அவளால் கொரிக்கவாவது முடிந்தது. ஆனால் இன்று பார்த்திபன் வீட்டில் அந்த உணவை உண்ண அவள் பிரியப்படவில்லை.
அவள் நெஞ்சமோ பழி தீரக்கவேண்டிய இடத்தில் பசி தீர்க்கலாமா என்று எண்ண, அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“இல்லை…எனக்குப் பசிக்கல…வேணாம்” எனக் கூறினாலும், எத்தனை நாளுக்கு எத்தனை வேளைக்குப் பட்டினியாக இருக்க முடியும் என அவள் மனசாட்சி ஒருபுறம் நிதர்சனத்தை எடுத்துரைத்தது.
“நீ எதையோ நினைச்சு மருகுற… என்னனு எனக்குத் தெரியல. ஆனால், நீ சாப்பிடாட்டி சொர்க்கத்துல இருக்க உன்னோட அப்பன் ஆத்தா சந்தோசபடுவாங்களா ? அவுங்க சந்தோசமா இருக்கணும்னா எப்பவும் வயித்த மட்டும் காயபோடாத” எனப் பூவம்மாள் கூற,
“அவுங்க ஆத்ம சாந்தியடையத் தானே இந்தக் கொலைகாரனை தேடி வந்திருக்கேன்…” என மனதிற்குள் சொல்லிக்கொள்ள, அதற்குள் பூவம்மாள் சாதத்தை எடுத்து மலரின் வாய் முன்னால் நீட்டினார்.
“இந்தா வாயத் துற…சாப்பாடு” என உரிமையுடன் கண்டிக்க, வெகு நாள் கழித்துக் கிடைத்த பாசத்தில் மலரின் கண்கள் கலங்க, உதடுகள் தன்னால் பிரிந்தன.
இரண்டு வாய் , பூவம்மாள் கைகளால் வாங்கிகொண்டவள், பிறகு “போதும் பாட்டி, நானே சாப்பிடுறேன்” எனக் கூறி வாங்கிக் கொண்டாள். இதையெல்லாம் கலா கவனிக்கும் நிலையில் இல்லை. அவளுடைய கண்கள் அந்த நகை பெட்டியின் மீதே இருந்தது…
“என்னத்த நீ இப்படி உத்து உத்து பாக்குறவ?” என்ற பூவம்மாளின் குரலில் தான் சற்றே நடப்பிற்கு வந்த கலா, சட்டென்று சுதாரித்துக்கொண்டு, “பாட்டி, நூறு சவரன் இருக்கும் போல. இந்த ஓலை தட்டிக்குள்ள எப்படி வைக்கிறது…ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடுச்சுனா? காசு பணத்துக்குத் தானே எல்லாக் குத்தமும் இந்தக் காலத்துல நடக்கிது. இங்க பாதுகாப்பா இருக்குமா ? கீழ அத்தை பீரோவுல வச்சா பாதுகாப்ப இருக்கும்ல?” எனக் கேட்க, பூவம்மாளோ, இதுக்கு என்ன சொல்வதென்றே சிந்தனையோடு இருக்க, மலரோ, “அதுக்கென்ன ? நீங்களே வச்சிருங்க…” எனப் பட்டென்று கூறினாள்.
“ஆத்தா?..” எனப் பாட்டி எதோ கூற முனைய, “அவுங்ககிட்டையே இருக்கட்டும் பாட்டி…இதை வச்சு நான் என்ன செய்யப் போறேன்” எனக் கூற, பூவம்மாள், மலரின் முகத்தை ஆராய, கலாவோ, “இன்னுமென ‘ங்க’ போட்டு பேசுறவ? உரிமையா அக்கானு சொல்லு…உனக்கு என்னவேணுமோ என்கிட்டே கேளு..சரியா ?” எனச் சொல்லியபடி, நகை பெட்டியை கைகளில் எடுத்துக்கொண்டாள்.
“நான் போய் வச்சிட்டு வந்திடுறேன்…” எனச் செல்ல முயல, “இரு டி…நாங்களும் வரோம். உன்னோட மாமியார்கிட்ட சொல்லி வைக்கச் சொல்றேன். ஆத்தாவுக்கும் மகனுக்கும் தான் சண்டை…இந்த பிள்ளை இங்கன தனியா கிடக்க வேண்டாம். உங்க அத்தைக்காரியையும் கொஞ்சம் பேசி சரிகட்டவேண்டியிருக்கு. பார்த்திபன் வரவரைக்கும் உங்க கூடவோ என்கூடவோ இருக்கட்டும்…எழுந்திரு ஆத்தா…” எனக் கூறி அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல, கலாவின் முகம் பூரிப்பில் இருந்தது.
“நல்லா பார்த்து சொல்லு நண்பா? இந்த இடம்தானே?” எனக் கேட்டுக்கொண்டிருந்தான் பார்த்திபன் தன் நண்பன் பூதத்திடம்.
“ஆமாம்! இங்கதான் அந்தப் பொண்ணு கார்ல இருந்து இறங்குச்சு” என அடித்துக் கூறினான்.
பார்த்திபனின் விழிகள் அங்கு இருக்கும் கடைகள் மற்றும் அருகிலிருக்கும் ஊர்களின் பலகைகள் என அனைத்தையும் நோட்டம் விட்டன.
ஒரு நெடுவழி சாலை உணவகம், டைல்ஸ் கடை, மூங்கில் நாற்காலி ஊஞ்சல் கடை, இரண்டு பெட்டி கடைகள், ஒரு பரோட்டா கடை என அங்கும் மொத்தமே ஐந்தாறு கடைகள் மட்டுமே இருந்தன.
பெயர் பலகையைக் கவனித்ததில் கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டிற்குப் பெரிய ஊர் என்று எதுவுமில்லை. சின்னச் சிறு ஊர்கள் இடையில் ஒன்றோ இரண்டோ இருந்தன.
“அந்தப் பொண்ணு எதுல வந்து இறங்குனானு சொன்ன?” எனப் பார்த்திபன் வினவ,
“வாடகை கார் டா… அதான் எங்கப்பார்த்தாலும் ஓடுமே…போன்-ல கூடச் சொன்னா வண்டி அனுப்புவாங்களே? அந்தக் கார் தான்” எனப் பூதம் சிறிதும் யோசிக்காமல் கூற,
“வாடகை கார்னா, வேற எதாவது அடையாளம் ஞாபகம் இருக்கா?” என பார்த்திபன் வினவினான்.
“ஆ… கார்ல முருகன் வேல் ஓட்டிருந்துச்சுப் பா…அப்புறம் அதை ஓட்டிட்டுவந்தவன் தலை முடி நல்லா கார குழம்பக் கரைச்சு ஊத்துனாப்புல செவப்பா இருந்துச்சு… ” எனப் பூதம் கூற,
“இது மட்டும் வச்சு எப்படிடா கண்டுபிடிக்க முடியும்? கார் நம்பர் பார்த்தியா ?”
“நண்பா…என்ன விளையாடறியா? நான் என்ன போலீசா நம்பர்லாம் பாத்துவைக்க?” என விரைப்புடன் கூற,
“சரி சரி… அப்போ நம்ம அதைத் தெருஞ்சுக்க என்ன செய்யலாம்?” என ஒவ்வொரு கடையாக ஆராய்ந்தான், பார்த்திபன்.
“என்ன நண்பா இப்படி உத்து உத்து பாக்குற? நீ பாக்குறதை பார்த்தால் ஆட்டைய போட வந்திருக்கோம்னு டின்னு கட்டிட போறானுங்க…”
“டேய், வாய் பேசமா அங்க கவனி…”
“எங்க?”
“அந்தக் கமெரா…இந்த ஹோட்டல் டைல்ஸ் கடை இரெண்டுளையும் பாரு கமெரா இருக்கு. இதுலா பார்த்தால் வண்டி நம்பர் கிடைக்கும்ல. அதுல அந்த வண்டி வரும்ல ?”
“வரும்…வண்டி கண்டிப்பா வரும். ஆனால் அந்தப் பிள்ளை வந்த வண்டி இல்ல. போலீஸ் வண்டி..நம்மல அள்ளி போட்டுப் போய்ச் சல்லி சல்லியா சலிச்சிடுவானுங்க.”
“அப்போ என்ன பண்றது? எப்படித் தெருஞ்சுகிறது ?”
“சிந்திப்போம்! சிந்திச்சா சிக்ஸர்னு ஒரு பெரிய மஹான் சொல்லிருக்காரு…”
“யாரு?” எனப் பார்த்திபன் கேட்க,
“ரொம்ப முக்கியம்… பாய்ண்ட சொன்ன பாய்ண்ட மட்டும் பிடிங்கப்பா…சொன்னவனை ஏன் தேடுற? எனக்கு யோசிச்சால் பசிச்சிரும். வா நம்ம ரேஞ்சுக்கு பரோட்டோ கடைக்குப் போவோம். அங்க போய்ச் சாப்பிட்டுக்கிட்டே சிந்திப்பேனாக்கும்” எனக் கூற,
பார்த்திபனும் சுற்றும் முற்றும் பார்த்தபடி அந்தக் கடைக்குள் சென்றான்.
“அண்ணே! இரெண்டு கொத்து பரோட்டா… வெங்காயமும் முட்டையும் கொஞ்சம் நல்லா போடுங்க” என உணவை கூறிக்கொண்டே அமர, கடை காரரோ,
“டேய் தம்பி, முட்டையைத் துக்குலா போடு” எனச் சத்தம் கொடுக்க,
“ஏன் அண்ணே? முட்டையைத் தூக்குல போட்டால் முட்டை செத்து போய்டாது ?” என முகத்தைப் பாவம் போல வைத்துக்கொண்டு பூதம் கேட்க, கடை காரர் முகம் கடுப்பானது…
“டேய் வாய வச்சிட்டு இருடா” எனப் பார்த்திபன் அதட்ட,
“இப்ப மட்டும் என்ன வாடகைக்கா விட்டுருக்கேன்? நானே தாண்டா வச்சிருக்கேன்” எனப் பூதம் கடுப்படிக்க,
கடைக்காரரோ, “எப்பா தோசை கரண்டியை கங்குல போட்டு வை, தேவைப்படும் போல” எனப் பொதுவாகச் சத்தம் கொடுக்க,
“அட எதுக்கு அண்ணே கங்குல போட்டுக்கிட்டு. கங்கனா பாட்டு இருந்தால் போடுங்க…பார்த்துட்டே பரோட்டா சாப்பிடுவோம்” எனப் பூதம் வழிக்கு வந்தான்.
ஆவிபறக்க சுட சுட நாசியை வருடியபடி கொத்தி வாழையிலையில் பரிமாறப்பட்ட கொத்து பொராட்டாவை “ஹ்ம்ம்…..என்னா வாசனை” எனக் கூறி மூச்சை உள்ளிழுத்து இரசித்து உண்ண தொடங்கினான் பூதம்.
“டேய் சப்புகொட்டாம சாப்பிடு” எனப் பார்த்திபன் அதட்ட,
“ஏன் இப்படிச் சாப்பிடக்கூடாதுனு யாரும் சட்டம் போட்டுட்டானுங்களா? நண்பா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ…
புதுசா கல்யாணம் பண்ணவன் முத்தமும்,
புரோட்டாவ ரசிச்சு சாப்பிடறவன் சத்தமும் குடுக்காம இருக்க முடியாது…இது உலக நியதி. பல ஆய்வு அறிக்கைகள் அப்படிதான் சொல்லுது.
நீ சாப்பிடு, அப்படியே என்னையும் சாப்பிடவிடு” எனக் கூறி உணவில் ஆழ்ந்தான்.
உணவு ஒருபுறம் இறங்கிக்கொண்டிருக்க, சால்னா கேட்பதற்காகப் பூதம் கடை பையனை பார்த்தான். அவனோ, சில ரொட்டிகளை இலையில் கட்டிக்கொண்டு கை மறைவில் வைத்து பதுங்கி பதுங்கி வெளியே செல்ல, பூதம் சாப்பிடுவதைப் பாதியில் நிறுத்திவிட்டு சட்டென்று எழ,
“டேய்? புரோட்டாக்கு ஆய்வு அறிக்கை வரை பேசுன. இப்போ சாப்பிடாம எங்க போற ?”
“பரோட்டா அப்புறம். இப்ப இந்தப் பரட்டைய பார்த்துட்டு வரேன் இரு…” எனக் கடை பையனை சுட்டி காண்பிக்க, பார்த்திபனும் அந்தப் பையனை பார்த்தான்.
அடங்காத தன்னுடைய சுருட்டை முடியை வேகவேகமாக ஒருகையால் படியவைத்தபடி, மறுகையால் உணவு பொட்டலத்தைச் சற்றே மறைத்துக்கொண்டு வெளியேற,
பூதமோ, “இது ஏதோ லவ்ஸ் மேட்டர். இப்ப பாரு வேடிக்கைய” எனச் சொல்லிக்கொண்டு கையைக் கூடக் கழுவாமல் பின்னோடு செல்ல, பார்த்திபனோ என்ன சொல்றான் இவன் என்ற சிந்தனையோடு கை கழுவும் இடம் நோக்கி சென்றான்.
“பார்த்திபன் அங்குச் சென்றபோது, பூதம் சற்றே மிடுக்குடன் நிற்க அந்தக் கடையில் வேலை பார்த்த பையனும், மற்றொமொரு பொண்ணும் கலவரமான முகத்துடன் நின்றிருந்தனர்.
“என்னடா? என்னாச்சு ?” எனப் பார்த்திபன் கேட்க,
ஒரு கைபேசியைத் தூக்கி காண்பித்த பூதம், “இந்தப் போனுக்குல இந்த இரெண்டு பேரோட வாழ்க்கையே இருக்கு…” எனக் கூற,
பார்த்திபன் குழம்பிப்போனான்.
“டேய் அது?” என ஏதோ கூற வர,
“நீ என்ன சொல்லப்போற அப்படினு எனக்குத் தெரியும் நண்பா. இவுங்களை விட்டுடலாம்… ஆனால் அதுக்கு இவுங்க நமக்குக் கைமாறா என்ன செய்வாங்க ?” எனப் பார்த்திபனிடம் கேட்க,
அதற்கு மற்ற இருவரும் முந்திக்கொண்டு, “சொல்லுங்க அண்ணே செய்யுறோம்” என வாக்குறுதி கொடுக்க,
பார்த்திபன் என்னதான் நடக்கிறதென்ற பாவனையில் நின்றிருந்தான்.
அப்போது முற்றிலும் எதிர்பாராதவிதமாகச் சற்று தள்ளி அங்கு ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.

Advertisement