Advertisement

பூவம்மாள் பாட்டி மேற்பார்வை பார்க்க, பூதமும் நண்டும் அனைவர்க்கும் பந்தி பரிமாறினார்.
பார்த்திபனும் பரிமாற முயல, புதுமணத் தம்பதிகள் அருகே அமர்ந்து உணவு உண்ணும்படி பூவம்மாள் கண்டிப்புடன் கூறி அதட்டி உக்காரவைத்திருந்தார்.
அந்த உணவு பனிமலருக்கும் பார்த்திபனுக்கும் ஒரு பிடிகூட இறங்கவில்லை. பார்த்திபனுக்கு அவள் யாரென்றும் அவள் வந்ததன் நோக்கமும் தெரியவேண்டும்…மலருக்கு பார்த்திபனின் நிம்மதி வேண்டும்…
இருவரும் அவர்கள் அறியாமலே மற்றவரை பற்றிய சிந்தனைகளைத் தனது மனதில் ஓட்ட தொடங்கியிருந்தனர்.
“என்ன நீங்க இரெண்டு பேரும் இஷ்டப்பட்டுக் கட்டிகிட்ட போல இல்லாம முகத்தை முசுடு போல வச்சிருக்கீங்க” எனப் பூவம்மாள் வினவ,
பார்த்திபன் அதற்குப் பதில் சொல்லாமல் முகத்தை வேறுபுறம் திருப்ப, பனிமலரோ, “இஷ்டப்பட்டே கட்டிக்கிட்டாலும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க முடியாதே பாட்டி” எனப் பதில் கொடுத்தாள்.
“ஆமா! மலர் சொல்றதும் சரி தான்… நானும் அவரும் கூட அப்ப அப்ப முறச்சுக்குவோம்…பார்த்தி அத்தை கூடச் சண்டையை மனசில வச்சிட்டு இந்தப் பிள்ளையைத் தனியா விட்ருச்சுல. அப்போ கோபம் வரத்தானே செய்யும்” எனத் தன் போக்கில் எடுத்து கொடுத்தாள் கலா!
“அப்படியா ஆத்தா?” எனப் பூவம்மாள் வினவ,
“ஆம்!” என்பதாகத் தலை அசைத்து வைத்தாள் மலர்.
இந்தப் பேச்சுக்கள் ஒருபுறமிருக்க, இப்போதோ பூதம் நண்டு பூவம்மாள் பாட்டி சாப்பிட அமர்ந்தனர்.
“ஏண்டா காலைல தான் கடிச்சிட்டு ஓடின. மறுபடியும் என்கிட்டையே வந்துட்டியே டா? எனக்கு விடுதலையே கிடையாதா ?” எனச் சலிப்புடன் பல்லை கடித்துக்கொண்டு வினவ,
“அண்ணே இது இட்லி?” என இட்லியை எடுத்துக் கையில் வைத்தபடி நண்டு ஏதோ கூற முனைய,
“நான் மட்டும் என்ன ஜெட்லீனா சொன்னேன்…?” எனக் கடுப்படிதான் பூதம்.
“சு…குறுக்கப் பேசாதீங்க. இது இட்லி…இது சாம்பார்…இட்லியும் சாம்பாரும் எப்படிப் பிரியாதோ அப்படிதான் அண்ணே நீங்களும் நானும்” எனப் பெரிய விளக்கம் கொடுக்க,
“எப்பா சாமி முடியலைடா…இந்த கடிக்கு, காலைல நீ கடிச்சதே தேவல போலையே” எனக் கதறினான்…
இவர்களின் பேச்சு, அங்கிருக்கும் அனைவரின் மனநிலையும் சற்றே மாற்றியது…
பந்தி ஒருவழியாக நிறைவு பெற, அங்கிருந்த அனைவர்க்கும் பார்த்திபன் பனிமலருக்குள் ஏதோவொன்று சரியாக இல்லையென்று தோன்றியது. அதற்குக் காரணம், கலா கூறிய காரணமாகவே இருக்குமென்று அவர்கள் எண்ணம் கொண்டனர்.
ஆனால் பூவம்மாள் ? அவர் கண்களுக்கு ஏதோவொன்று புரிவது போலவும் புரியாததைப் போலவும் தோன்றியது.
“இந்தா பூதம் நண்டு…என்னோட புறப்படுங்க. ஒரு சோலியிருக்கு” என அவர்களையும் பாட்டி நாசுக்காக அழைத்துச் செல்ல, அந்த நொடி பார்த்திபன் பனிமலர் இருவரும் தனித்து விடப்பட்டனர்.
நேரம் காலை பத்து அளவில் தான் இருந்தது…
பார்த்திபன் ஏதும் கூறவும் முயலவில்லை, கேட்கவும் முயலவில்லை. பனிமலரை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான். ஆனால் அந்தப் பார்வையில் ஆராய்ச்சி மட்டுமே இருந்தது….
பனிமலர் இதை முதலில் கவனிக்காவிடிலும் ஒரு சில நொடிகளுக்குப் பின்னால் கண்டுகொண்டவள், அவனுடைய பார்வைக்கு எதிர்ப்பார்வை பார்த்தாள்.
கண்களும் கண்களும் முட்டிக்கொண்டால் காதல் தான் பிறக்குமா என்ன ?
இங்குப் பிறந்தனவோ கேள்விகள்….
“இவள் யார்? இவளுக்கு என் மேல் கோபமென்ன ? அவளுக்குப் பின்னுள்ள சோகமென்ன ?” என்ற கேள்வி….
அதேவேளையில் பனிமலரோ,
“இவன் கண்களில் இத்தனை தீக்ஷண்யமா? போதைக்கு அடிமையானவனின் கண்களில் இத்தனை கூர்மை இருக்குமா ?”
அங்குச் சில நொடிகள் மௌனம்…சில நொடிகள் ஆராய்ச்சி…சில நொடிகள் தேடல்….
“உன்னைப்பத்தி சொல்ல நீ பிரியப்படல. உன்னோட சோகமென்னனு தெருஞ்சுக்க நான் உனக்கு யாருமில்லை. ஆனால், ஒரே ஒரு கேள்வி ?” எனத் தொடங்க,
முதல்முறையாகப் பனிமலரின் கண்கள் கோபத்தைச் சற்றே தள்ளிவைத்து ஆச்சர்யத்தைக் காண்பித்தது. அவளுடைய ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி, ‘என்ன ?’ என்பதாய் அவளுடைய தோரணை இருந்தது.
“எதுக்காக என்னைத் தேடி வந்த? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நீ பதில் சொல்லு” எனப் பார்த்திபன் வினவ,
“நீ அன்னைக்கு ஒரு நாள், எங்களோட வாழ்க்கைல வராமல் இருந்திருந்தால், நான் இன்னைக்கு உன்னைத் தேடி வந்திருக்க மாட்டேன்.
என்னோட சோகம் உனக்குத் தெரிய வேணாம்னு சொன்னால ? அந்தச் சோகத்துக்குக் காரணமே நீ தாண்டா…நீ தான்… உன்னைத் தேடி எப்படி வராம இருக்க முடியும் ?” சாதாரணமாக ஆரம்பித்து வெறிபிடித்தவளை போல ஆக்ரோஷமாய்க் கத்தினாள்.
அந்தக் கத்தலில் இந்தமுறை கோபத்தைவிட ஓர் இயலாமையை வெளிப்பட்டது. அவளுடைய முகத்தை மறைத்துக்கொண்டு, சுவரின் புறமாகத் திரும்பிக்கொண்டாள்.
அடுத்து ‘அம்மா அம்மா’ என்ற மெல்லிய முணுமுணுப்போடு கூடிய விசும்பல் ஒலி கேட்க, ஓரடி அவளை நோக்கி முன்வைக்கத் தூக்கிய கால்களை அப்படியே அந்தரத்தில் நிறுத்தினான் பார்த்திபன்.
தலையை இடது வலது புறமாக ஒரு முறை அசைத்துக்கொண்டவன், மேற்கொண்டு மலரிடம் பேச்சை வளர்க்காமல் வெளியேறிவிட, மலரின் மனதினில் மீண்டும் பேய்கள் ஆட்சி செய்யத் தொடங்கின.
அவள் கண் முன் இராட்சச கை நீண்டது. அந்தக் கைகள் அவளின் அங்கங்களைத் தொடாமல் தொட்டது போன்ற பாவனைகளைச் செய்தது…மலர் கத்தினாள்….ஓடினாள்….ஓட்டமும் நிற்கவில்லை…அந்த இராட்சசனும் ஓயவில்லை….
அம்மா அப்பா என அரற்றியபடி மீண்டும் கண்களை மூடி அமர்ந்துகொண்டாள்.
***
“பூதம்…நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு” எனப் பூதத்தின் முன் நேராகச் சென்று நின்றான் பார்த்திபன்.
“சொல்லு நண்பா…”
“அன்னைக்குப் பஞ்சாயத்துல அந்தப் பொண்ண உனக்குத் தெரியுமான்னு ஊர் பெரியவங்க கேட்டபோது, நீ எப்படி அந்தப் பொண்ணைத் தெரியும்னு சொன்ன? ” எனச் சரியாகப் பிடித்திருந்தான்.
“அதுவா, நான் தான் அந்தப் பொண்ணைப் பாத்துருக்கேனே? முன்னாடியே தெரியுமான்னு கேட்டானுங்க. ஆமாம், நான் தான் முன்னாடியே பாத்துருக்கேனே, அதைச் சொன்னேன்” எனச் சாதாரணமாகக் கூறினான் பூதம்.
“எப்படித் தெரியும்? எங்க பார்த்த ?”
“அன்னைக்குக் கடைசி லோட் எடுத்திட்டு வரும்போது, ஹீரோயின் அப்படினு ஒரு பொண்ண சொன்னேனே…நியாபகம் இருக்கா?”
“ஆமாம், சொன்ன. தனியா சிரிச்சுகிட்டே இறங்குதுனு…”
“கரெக்ட், அந்த ஹீரோயின் தான் இப்போ உனக்கு வில்லியா வந்திருக்கு…” எனப் பூதம் கூற, பார்த்திபன் நிதானித்தான்.
ஒருசிலநொடிகள் சிந்தித்தான்.
“சரிடா புறப்படு” எனப் பார்த்திபன் அவசரப்படுத்த,
“எங்க நண்பா?” எனப் பூதம் கேள்வியாக வினவினான்.
“அந்தப் பொண்ணு அங்க தான் நம்ம லாரியில் ஏறியிருக்கணும். அந்தப் பொண்ணு அங்க இருந்ததுனா, அதே இடத்துக்குப் போனால், நம்மளோட கேள்விக்குப் பதில்கிடைக்கும்…” எனப் பார்த்திபன் தீவிர குரலில் கூற,
“அதுக்கு எதுக்குடா அங்க போகணும்? அந்தப் பிள்ளைக்கிடையே கேட்டுட வேண்டிதானே?” எனப் பூதம் அறிவாளியாக அறிவுரை சொல்ல,
“பதில் கிடைச்சிருந்தால் நான் ஏண்டா அங்க போகணும்னு சொல்லப்போறேன். எனக்கு என்னவோ, அந்தப் பொண்ணு பின்னாடி என்னவோ இருக்கு…. என்னவோ…ரொம்பப் பெரிய விஷயம்…. அதைத் தெருஞ்சுக்கணும். அப்ப தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவுன்னு ஒன்னு வரும்” எனத் தீர்க்கமாகக் கூறினான் பார்த்திபன்.
“போகலாம் டா…அடுத்த லோடுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கு. எப்படியும் அதே ரோட்ல தான் போகணும். அப்போ கண்டிப்பா விசாரிக்கலாம்” எனப் பூதம் கூற,
“இல்லைடா….இது சீக்கிரம் முடிக்கவேண்டிய விஷயம். இப்பவே புறப்படலாம்…பஸ்ல போகலாம்” எனத் துரிதப்படுத்தினான் பார்த்திபன்.
“அது எப்படியும் இருநூறு கிலோமீட்டர் இருக்கும். அது ஹைவே வேற நண்பா…அங்க பஸ் நிப்பாட்ட மாட்டாங்க. சரி இரு, நான் பசங்க யார்டையாச்சும் பைக் வாங்கிட்டு வரேன்” எனக் கூற,
“அடேய்! கடன் வாங்கிப் போகணுமா டா ?” எனப் பார்த்திபன் தடுக்க,
“ஐயோ என்னால முடிலடா சாமி…. இவ்ளோ நல்லவனா இருக்காதடா..போறபோக்குல உன்ன ஏச்சிடுவாங்க. வெளில விடு, மொதல்ல உன்னோட வீட்டில இருக்கவங்களப்பத்தியாச்சும் புரிஞ்சுக்க. 
வந்த பொண்ணைப் பத்தி அப்புறம் தெருஞ்சுக்க. இப்போ உன்ன பத்தி தெருஞ்சுக்கோ…. நான் சொல்றேன். இந்த ஒருமுறையாவது என்ன தடுக்கமா முழுசா கேளு நண்பா…எனக்காகடா” எனத் தன்னுடைய நக்கல் கிண்டல் என எல்லாத்தையும் ஓரம்கட்டிவைத்துவிட்டு, பேச,
இந்தமுறை பார்த்திபன் , பூதத்தின் இந்தப் பேச்சை அமைதியாகக் கேட்பதென்று முடிவு செய்தான்.
“அடுத்த பொண்ண தேடி இவ்ளோ தூரம் போகணும்னு நினைக்கிறியே? பஞ்சாயத்துல நான் சொன்ன ஒருவார்த்தையை நியாபகம் வச்சு இவ்ளோ யோசிக்கிறியே…இதே போல, உனக்காகவும் கொஞ்சம் யோசிடா…
நீ நினைக்கிறது போல உன்னோட குடும்பம் இல்ல. எப்பவும் என்னை பேசவிடமாட்ட, இப்பயாச்சும் கேளு…உன்ன சுத்தி என்ன நடக்குது தெரியுமா ?” என ஆதங்கத்துடன் கேட்க, 
“தெரியும்!” என ஒற்றை சொல்லில் பதிலளித்தான் பார்த்திபன்.

Advertisement