Advertisement

பகுதி – 12
உப்பரிகையில் (மொட்டைமாடி) தென்னெங்கீற்றால் வேயப்பட்ட அழகிய சிறு குடில்… அந்த வீடே சிறிது தான் என்பதால், உப்பரிகையின் அளவுமே சிறிதுதான். அதில் இருவர் தங்குவதற்குப் போதுமானதாய் அந்தக் குடிசை வேய்யப்பட்டிருந்தது…
திட்டமும் பூவம்மாளுடையது, அதற்கான செலவுமே அவருடையது தான். சில ஆயிரங்கள் பிடித்திருந்தது. ஆம்! இது பார்த்திபன் பனிமலருக்காகக் கட்டப்பட்டிருந்த வீடு.
வீட்டின் உரிமையாளர், பூவம்மாளுக்குமே ஒருவகையில் உறவு என்பதால், தற்காலிகமாகக் குடில் அமைப்பதாகத் தகவல் சொல்லிவிட்டிருந்தார். அந்தச் செலவையும் அவரால் தாக்கு பிடிக்க முடியுமென்பதால் மற்றவை எளிதாக முடிந்தது.
சூரியவர்மனை பொறுத்தவரை, அவனுடைய அறைக்கும் பங்கமில்லை, பணத்திற்கும் பாதகமில்லை. ஆதலால், பூவம்மாளின் இந்தத் திட்டத்தில் எந்தக் குறுக்கீடும் செய்யவில்லை. அதே நிலையில் தான் நித்திய கலா மற்றும் பாத்திபனின் அக்கா, தாரா தேவி!
பார்த்திபனின் அம்மா, தாமினி தேவியைப் பொறுத்தவரை, அன்று அவரின் மனதின் அடியாழத்தில் அமிழ்திருந்த பார்த்திபனை குறித்த எண்ணம் வெடித்துச் சிதறிய பின், உடைந்து போனார்.
தாமினியின் மனதினில், அவருடைய மாமியார் விதைத்து சென்ற மூட நம்பிக்கையும், பார்த்திபன் மீது அவருக்கு இருந்த தாய் பாசமும் ஊசலாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அதேவேளையில், பனிமலர் மூலமாகப் பார்த்திபன் தனக்கு முக்கியமானவர்கள் யாருமில்லை என்று கூறியதாக தெரியவந்த செய்தி, அவரை அடியோடு புரட்டியும் போட்டது, பார்த்திபனை வெறுக்கவும் செய்தது.
இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு நிலையின் பிடியில் அவர் சிக்குண்டார். பார்த்திபனை நேருக்கு நேராகப் பார்த்தல் பேசமுடியுமா ? முடியுமென்று தோன்றவில்லை. அவனை மொத்தமாக ஒதுக்கிவிட முடியுமா ? இல்லை அதுவும் அவரால் முடியாது!
அப்போது அவருடைய மனதினில் பார்த்திபனின் நிலை தான் என்ன ? தனது தகுதியை வளர்த்துக்கத் தெரியாத ஒரு மூடன். பெரிதாக எதையும் சாதிக்கும் எண்ணமில்லாதவன். அவனால் , தன்னுடைய குடும்பத்திற்கு இதுவரை நல்ல பெயர் கிடைத்ததில்லை, இருந்ததையும் கெடுத்துவிட்டான், இனிமேலும் அவனிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.
இது தான் தாமினியின் எண்ணம்!
அந்த எண்ணம் நிச்சயமாகப் பார்த்திபனை குறித்த நற்சிந்தனையைக் கொடுக்கவில்லை. பார்த்திபன் என்றால் ‘பெத்தக்கடன்’ என்ற வார்த்தை மட்டுமே தாமினிக்கு தோன்றியது.
“அண்ணா…நான் சொல்லுறதை…” எனத் தொடங்கிய பார்த்திபனை தடுத்தாள், கலா!
“தம்பி! நாங்க சொல்றதை கேட்காமல் நீங்களா ஏதொவொன்னை செஞ்சு அத்தையோட வெறுப்பைச் சம்பாதிச்சுடீங்க. இனியாச்சும் நாங்க சொல்றதை கொஞ்சம் கேளுங்க… உங்க அண்ணனையும் நோகடிக்காதீங்க…
இங்க தங்கமாட்டேனு சொல்லி பொண்டாட்டிய தனிக்குடித்தனம் கூட்டி போகுற ஐடியால இருக்கீங்களா ?” என நித்யா பட்டென்று கேட்டுவிட, பார்த்திபன் மௌனமானான்.
“என்ன அண்ணியும் கொழுந்தனும் வெட்டி பேச்சு பேசிட்டு இருக்கீங்க…போய் ஆராத்தி கரைச்சுக் கொண்டு வா” என அதட்டியபடி பனிமலருடன் மாடிக்கு வந்து சேர்ந்தார் பூவம்மாள். பின்னோடு, தாரா தேவியும்!
“நல்லாத்தான் இருக்கு… குடிசையா இருக்குனு பார்க்காத… இதுல தான் நல்லா காத்து வரும்” எனப் பனிமலரிடம் கூறிக்கொண்டிருந்தாள் தாரா தேவி!
“அப்படியா சொல்லுறவ? அப்போ சரி, உன்னோட ரூமை இவுங்கட்ட கொடுத்திடு, நீ இங்கன தங்கிக்க” எனப் பூவம்மாள் பாட்டி பட்டென்று கூற, சட்டென்று வாயை மூடிக்கொண்டாள் தாரா!
“இந்தாப்பா பார்த்தி உன்னோட பொண்டாட்டியோட சேர்ந்து நில்லு” எனப் பெரியமனுஷியாய் அதட்டி நிற்கவைத்து ஆலம் சுற்றி அந்தக் குடிலுக்குள் அழைத்துச் செல்ல, ரொம்பவும் அவசியமான பொருட்கள் மட்டும் அறைக்குள் இருந்தன.
ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத அறையாக இருந்தது. உடைகளை வைக்க ஒற்றை மர அலமாரி, சிறு பிளாஸ்டிக் மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு தண்ணீர் குடம், ஒரு பேன், ஒரு லைட், ஒரு பாய், இரண்டு தலையணைகள் அவ்வளவே….
அடுப்பு இல்லை. அடுப்பு இரண்டானால், குடும்பமும் இரண்டாகிவிடும் என நன்றாகத் தெரிந்துவைத்திருந்த பூவம்மாள், பார்த்திபனையும் தாமனியையும் சேர்க்கவே எண்ணம் கொண்டார்.
“எல்லாரும் உக்காருங்க…நான் நம்ம பூதம் கிட்ட எல்லாருக்கும் மணி கடையிலிருந்து காலையில சாப்பாடை கொண்டு வர சொல்லிருக்கேன். இந்தாடி தாரா, உங்க ஆத்தாவுக்கும் தான்…சாப்பிட வச்சிடு. மதியானம்ல இருந்து, இந்தப் பிள்ளைக்கும் பார்த்திக்கும் நீங்களே கொடுத்திடுங்க…” எனக் கலாவை பார்த்து சொல்ல, கலாவும் சரி சரி என்று தலையாட்டினாள்.
கடந்த இரண்டு நாட்களாக இல்லாத கலக்கம் இன்று இலேசாக மலரிடம் ஒட்டிக்கொண்டது. எந்தத் துணிச்சலில் எந்த நம்பிக்கையில் ஒருவனின் மனைவி என்று சொன்னாள் ? அவனை அழிக்கவேண்டும் பழிவாங்க வேண்டுமென்று ஒரே முடிவில் களத்தில் இறங்கிவிட்டாள். ஆனால், இப்போதோ பார்த்திபனுடன் தனிமையில்…? இந்தச் சிந்தனையே அவளை அச்சம் கொள்ள வைத்தது.
கண்களை ஒருமுறை இறுக்கமாக மூடினாள். மூடிய விழிகளுக்குள், முரட்டு கரமொன்று அவளைத் தொடவந்தது… அந்தக் கரமும் கரத்திற்குச் சொந்தக்காரனும் பனிமலருக்கு நவீனகால அரக்கனை நினைவூட்டியது.
பனிமலரை நோக்கி அவள் தேகத்தைப் பிராண்டும் மிருகமாய், நீண்ட கரங்களை ஆவேசமாகத் தள்ளிவிட்டாள் மலர். “வேணாம் வேணாம்” என்ற தன்னையும் மீறிய கதறலுடன், காற்றில் கைகளைத் துலாவிக்கொண்டே கத்த, அவளைச் சுற்றி அமர்ந்திருந்த கலா, தாரா பூவம்மாள் மூவரும் திகைத்தனர்.
“இந்தா மலரு! மலரு! என்னாச்சு ஆத்தா ? ஏன் கத்துற ?” எனப் பூவம்மாள் வினவ, கலாவும், தாராவும் கூட என்னவோ ஏதோவென்று பதறி போனார்கள்.
கலா வேகமாகச் சென்று தண்ணீர் எடுக்கச் சென்றாள். சில நிமிடங்களிலே பதறி வேர்க்க தொடங்கியிருக்க, தாரா வேகமாகப் பேன் ஸ்விட்சை தட்டிவிட்டாள்.
அதற்குள்ளாகப் பதறியடித்துச் சூரியவர்மனும் பார்த்திபனும் கூட வெளியேயிருந்து உள்ளே வந்திருந்தார்கள்.
“இந்தா புள்ள தண்ணி குடி…என்ன ஆச்சு? ஏதாச்சுனா சொல்லு.” எனக் கலா கூற, தாராவும் கலவரமான முகத்துடன், “எதுவும் பிரச்சனையா ? உடம்புக்கு முடியலையா ? டாக்டர்கிட்ட போலாமா ? பார்த்திபா வண்டி சொல்லுப்பா” எனப் பரபராத்தாள்.
பணத்தைக் குறித்த சுயநலம் அவர்களிடமிருந்த போதும், பாத்திபனோ அவனின் மனைவியோ கஷ்டப்படவேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்களின் பதற்றம் மெய்யானதாக இருந்தது…. ஆனால், பணமென்று வந்தால் , தங்களுக்கென்று ஒதுக்கி கொள்ளும் இரகம்.
மலர் இப்போது கண்திறந்திருந்தாலும், அவளின் மனதினுள் இருள் அடர்ந்து சூழ்ந்திருந்தது. அவளுடைய கற்பனையில் தோன்றிய அந்த இராட்சச கரங்கள் மேலும் மேலும் அவளைத் துரத்த தொடங்கியதை போன்றதொரு பிரம்மை.
“எல்லாரும் கேட்குறோம்ல ஆத்தா, என்னாச்சு?” எனப் பூவம்மாள் பரிவுடன் கேட்க,
மலரின் கண்கள் தனையும் அறியாமல் கலங்கின. 
அந்தக் கலங்கிய கண்கள், அங்கிருந்த அனைவரையும் பரிதவிப்பிற்கு உள்ளாகியது. பார்த்திபன் உட்பட!
அவனுடைய இதழ்களோ, “இவள் யாரு என்ன பிரச்சனைன்னு நான் கண்டிப்பா கண்டுபிடிக்கணும்… நான் வருத்தப்படணும் அனுபவிக்கணும்னு ஏன் சம்மதமே இல்லாமல் நினைக்கிறாள் ?” என மெல்ல முணுமுணுத்துக் கொள்ள,
அதேவேளையில் மலரோ, “இல்ல! என்னோட பிரச்சனையை வெளில தெரியாவிடமாட்டேன். நான் யாருனும் என்னோட அடையாளம் என்னனும் வெளிய தெரியவிடமாட்டேன்.
எனக்கு இங்கதான் இனிதான் வேலை இருக்கு…என்னோட எல்லாப் பிரச்னையோடையும் சம்மந்தப்பட்ட இவனுக்கு வலியை கொடுக்கணும்…கொடுப்பேன்!” எனத் தனக்குத் தானே சொல்லி திடம் கொள்ள முயன்றாள்.
“எப்பா எந்திரி பா…ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” எனச் சூரியவர்மன் கூட முன் வந்து சொல்ல,
“இல்ல! இப்ப ஒண்ணுமில்லை. என்னவோ… நான்…நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிடுவேன்” என வார்த்தைகளைக் கோர்த்து மலர், மருத்துவமனை செல்ல மறுத்தாள்!
“சரி செத்த எல்லாரும் ஒதுங்கி நில்லுங்க. என்னமோ மனசு சரியில்லாம பண்ணிடுச்சு… காத்து வரட்டும்” என அனைவரும் அவளுக்கு உதவவே முயன்றனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையிலிருக்க, அனைவரது மனநிலையும் மாற்றும்விதமாய்க் கேரியருடன் வந்து சேர்ந்தான் பூதம். அவன் பின்னே வால் பிடித்துக்கொண்டு இலைகளைக் கைகளில் பற்றியபடி உடன் வந்தான் நண்டு!
“என்னடா காலைல சண்டைபோட்டீங்க? பிரியாம இரெண்டு பேரும் வரீங்க ?” எனக் கலா அவர்களைப் பார்த்து வினவ,
“பிரியாணியும் பிரிஞ்சால் தாலுச்சாவும் எப்படிப் பிரியாம இருக்குமோ அப்படித்தாங்க அண்ணி.” என நண்டு முந்திக்கொண்டு பதில் கொடுத்தான்.
“ஏன் அப்படி?” எனத் தாரா கேள்வி கேட்க,
பூதம் வைத்திருந்த டிப்பன் பாக்ஸ் அருகே மூக்கை கொண்டு சென்று உறுஞ்சி வாசம் பிடித்தபடி, “எல்லாம் பாசம் அக்கா” எனப் பார்க்காமலே நண்டு பதில்கொடுக்க,
“ஏண்டா? பாசம் உனக்குப் பாதுசாவுலையா இருக்கு ? வாசம் பிடிச்சே இனிப்பை குறைச்சிடாதடா” எனப் பூதம் அதட்ட,
“பாதுஷாவா அண்ணா? பம்பாய் ஸ்வீட் கடைதானே ?” என நாக்கை சுழற்றிக் கொண்டு கேட்க,
“டேய்! பாதுஷா என்ன பாட்ஷா -ஆ ? பம்பாய்ல இருந்து வர…ஏன் முக்கு கடைல வாங்குனா சாப்பிடமாடீங்களோ ? உனக்குச் சோறு கிடையாது போடா “
“அண்ணே சொத்து கிடையாதுன்னு சொல்லுங்க நான் விட்டுக்கொடுக்கிறே. ஆனால், சோறு கிடையாதுன்னு மட்டும் சொல்லாதீங்க” என வசனம் பேச,
“ஆமாம், இவரு அம்பானி நான் அதானி கொட்டிக்கிடக்குற சொத்தை விட்டுக்கொடுக்குறாரு…ஓசி சோறுக்கு வந்துட்டு பிசிசி ஒனரூ மாதிரி பேசுது பாரு…போடா…போய் இலையைப் போடு” என அதட்ட, நண்டு வேக வேகமாக ஓடினான்.

Advertisement