Advertisement

இன்னமும் தெளியாத தூக்கத்துடன், தலையைச் சொரிந்தபடி எழுந்தரமர்ந்தவனை முறைத்த கலா,
“ஏண்டா? காலு காலுன்னு கத்துறேனே ? கொஞ்சமாச்சும் அசருறீங்களா ?”
“காலு காலுன்னா கத்துனீங்க? அண்ணி, அப்போ நீங்க என்ன எந்திரிக்கச் சொல்லலியா ? அப்போ சரி நான் இன்னும் கொஞ்சம் தூங்குறேன்” என மீண்டும் போர்வையை இழுத்து போர்த்த முனைய,
“அடேய்! கிளீனர் பையலே. உன்ன தான் சொல்லுறேன் எந்திரி”
“என்னது கிளீனர் பையலா?” எனச் சற்று ரோஷத்துடன் எழுத்து அமர்ந்தவனை,
“பின்ன நீ என்ன ஹீரோ புயலா? உன்னைத்தான் சொல்லுறேன். அவனை எழுப்பிவிடு” எனப் பதிலடி கொடுக்க,
“எல்லாம் என் நேரம். என்னைக் கீளினர்னு சொல்லுற இவுங்க கிளியோபாட்டுறா ” என மனதினில் நினைத்தபடி, அருகில் போர்வைக்குள் சுருண்டு கிடந்தவனை தட்டி எழுப்பினான் பூதம். போர்வைக்குள்ளிருந்து நண்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்து அமர்ந்தான்.
“என்னடா, இந்த நண்டு பையன் வரான்?”
“பின்ன நான் எழுப்பினா நாகலாத் மினிஸ்டரா வருவாரு. இவன் தான் வருவான்” என வியாக்கியானம் பேச,
“அப்போ, பார்த்திபன் எங்க?” எனக் கேள்வியாகக் கலா புருவம் உயர்த்த, அருகினில் இருந்த காலி விரிப்பே, அவன் இல்லை என்று உணர்த்தியது.
ஆம்! நேற்றைய இரவில் பூதத்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் பார்த்திபன். பூதமும் நண்டும் மாடியில் உறங்க ஆயத்தமாக, அவர்களோடு பார்த்திபனும் இணைந்துகொண்டான்.
பார்த்திபன் பூவம்மாள் வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட நித்ய கலா, பூதத்தின் மொட்டை மாடிக்கு வந்திருந்தாள்.
“தெரியலையே அண்ணி…இங்னதான் படுத்திருந்தான்…” எனப் பூதமும் முழித்துக்கொண்டே கூற,
“ஏண்டா, அவனை நேரத்துக்கு எழுப்பிச் சோலிய பாக்க அனுப்புறதில்லையா? எங்க போனானு கூடத் தெரியாம இருக்க ?” எனப் பூதத்திடம் தனது வாய் ஜம்பத்தைக் காட்ட,
“அண்ணி… நீங்க என்ன தப்பா புருஞ்சுகிட்டிங்க போல, நான் அவனோட பொண்டாட்டி இல்லை. பூதம்!” என மெல்ல நக்கலடிக்க,
“நான் மட்டும் என்ன? உன்னை மனுஷனா சொன்னேன்?” எனப் பதிலுக்கு மடக்கினாள் கலா.
“என்ன அண்ணே? அண்ணி உங்கள இந்தக் கிழி கிழிக்கிது” என நண்டு நக்கலுடன் உச்சுக்கொட்ட,
“சிரிக்கவா செய்ற? இரு டி உன்ன வச்சுகிறேன்” எனப் பூதம் , நண்டை பார்த்து மனதினில் கருவி கொண்டான்.
“ஏண்டா பூதம், கல்யாணம் ஆகிடுச்சு, பொண்டாட்டி கூடப் போய்த் தங்குனு சொல்லாம, உங்க கூட வச்சுக்கிறீங்க. நான் எங்கன்னு வீடு வீடா தேடணுமா?” என ஒரு பிடி பிடிக்க,
“அண்ணி…நான் கிளம்பத் தான் சொன்னேன். பார்த்திக் கூடக் கிளம்பத்தான் போச்சு. ஆனால், பக்கத்துல பாவமா ஒரு ஐந்து உக்காந்திருக்குல, அதுதான் பார்த்திபனை இங்னவே தங்க வச்சுச்சு…” எனப் போட்டுக்கொடுக்க,
“நண்டு? நீ வீட்டுப் பக்கம் வா…கால உடைச்சு சூப் வைக்கிறேன்” எனக் கலா நண்டை மிரட்ட,
“ஆத்தி… சூப்பா? வாய்திறந்து வாங்கிக்கிட்டேனே ஆப்ப. அப்படியே தவந்து தவந்து ஓடிடு” எனத் தனக்குள் நடராஜன் கூறிக்கொண்டான்.
அடுத்தடுத்து கலா என்ன பேசியிருப்பாளோ, அதற்குள்ளாகப் பார்த்திபன் வந்து சேர்ந்தான்…
“என்ன அண்ணி? நீங்க இங்க ?” எனக் கேள்வியுடன் மாடியின் கடைசிப் படியில் நின்றபடி வினவ,
“எங்க போன பார்த்தி? எங்க சம்மதமில்லாம கட்டி கூட்டியாந்த சரி. குடும்பமாச்சும் நடத்தணும்ல. கூட்டிவந்து அடுத்த வீட்டுல விட்டுட்டு, இப்படி நீ இங்க உன்னோட கூட்டாளிங்க கூட இருக்க. என்ன இதெல்லாம் ?” எனக் கேட்க, பார்த்திப் பதில் பேசாமல் மௌனமானான்.
“எதுகேட்டாலும் வாய் திறக்காத” என அதற்கும் கலா பேச, 
“அப்படியே பேச விட்டுட்டாலும்…” என முணுமுணுப்பாக பூதம் கூற, அவனை நெருங்கி வந்த நண்டு, 
“ஏன் அண்ணே? இந்த அண்ணி, அண்ணனையாவது பேசவிடுமா ?”
“அட! கல்யாணமே, பேச்சுரிமைக்கு தடை சட்டம் தான ? பொறவு எங்குட்டு பேசுறது ?” என பூதம் சிரிக்காமல் கூற, 
“அயோ அப்போ எனக்கும் அப்படித்தானா?” என பயம் கொண்டான் நண்டு. 
“ச்ச ச்ச…உனக்கு அப்படி நடக்க சான்ஸ் இல்ல”
“எப்படி அண்ணே சொல்றீங்க?”
“உனக்கு தான் எவனும் பொண்ணு கொடுக்க போறதிலையே..அதெல்லாம் கல்யாணம் ஆகவேண்டியவங்க படற கவலை” 
“நீங்க ரொம்ப அதிகமா பேசிட்டிங்கா. இதுக்கெல்லாம் நீங்க கண்டிப்பா பில் பண்ணுவீங்க ?”
“எது டீசலா? லாரிக்கு டீஸல்லம் பில் பண்ணியாச்சு டா நண்டு” என நக்கலடிக்க, கடுப்பான நண்டு, பூதத்தின் கையை சட்டென்று எடுத்து கடித்து வைக்க, பூதம் ‘ஆ’ என அலறினான். 
மறுநிமிடம் நண்டு, பார்த்தியை தாண்டி ஓட்டம் பிடிக்க, பூதம், “கடிச்சிட்டா ஓடுற ? உன்ன கட்டைல ஏத்துறேன் பாரு” என கத்தினான். 
இவர்களின் கூத்தில், “என்ன பூதம் ஆச்சு ” என பார்த்திபன் கலாவை விட்டு தள்ளி வர, 
“காண்ட மிருகம் கடிச்சிடுச்சு நண்பா” என வலியுடன் முனகினான். 
“காண்ட மிருகமா? என்ன உளறுற?” 
“அட நீ வேற பா. நான் பேசுனதுல காண்டான மிருகம் ஒன்னு கடிச்சிட்டு ஓடிடுச்சுனு சொன்னேன். மொத போய் ஊசி போடணும்…எத்தனை போட போறானுங்களோ…” என புலம்பியபடி, அவன் அம்மாவை அழைத்தான். 
“பார்த்தி… அங்க என்ன வெட்டி பேச்சு. உங்க அண்ணே வந்து தெரு முனைல நிக்கிறாங்க. வேகமா வா… 
இந்தா பூதம், நம்ம செறடபட்டியார் கடையில கொஞ்சூண்டு சுண்ணாம்பு வாங்கி தடவு” என பார்த்தியை அழைக்க, “நீ போ நண்பா… போ” என பூதம் ஜாடை காட்டினான். 
கலா முன்னே செல்ல, பின்னோடு வந்த பார்த்திபனை சூரியவர்மன் ஒட்டவைத்த புன்னகையுடன் வரவேற்தான்.
“அண்ணா?” எனப் பார்த்திபன் அழைக்க,
“நீ செஞ்ச வேளைக்கு உன்னோட நான் செத்தாலும் பேசக்கூடாது. ஆனால், வாழுறவரைக்கும் நீ என்னோட தம்பிதானே ? உன்னோட பேசவும் முடியல, எப்படியோ போ அப்படினும் விடமுடியல” எனப் பேச்சை வளர்க்க,
“நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் அண்ணா” எனப் பார்த்திபன் வாய்த் திறந்தான்.
“பேசலாம்… கொஞ்சமென்ன? இன்னைக்குமுச்சூடும் கூடப் பேசலாம். ஆனால், இங்க நிண்டு இல்ல. உன்னோட பொண்டாட்டி அங்க உனக்காகக் காத்திருக்காள்.
நம்ம வீட்டுக்கு போய் எதுனாலும் பேசலாம். என்னோட கிளம்பு” என அதட்டினான் சூரியவர்மன்.
“அவளைப் பத்திதான் நான் பேசணும்” எனப் பார்த்திபன் தொடங்க,
“அவளைப் பத்தி பேச என்ன இருக்கு பார்த்திபா? நல்லா கண்ணுக்கு இலட்சணமா தங்க விக்ரகமாதிரி இருக்கா… ” என நித்ய கலா இடை புகுந்தாள்.
“ஆமாம்டா! அந்த வேலுசாமி பொண்ணைவிடவும் இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு தான்..” என கூறிவிட்டு சூரியவர்மன் தனது மனைவியை காண, நித்ய கலா, ‘ஹ்ம்ம் பேசுங்க பேசுங்க’ என ஜாடை காட்டினாள்.
கணவனும் மனைவியும் உள்ளர்த்தம் வைத்துக் கண்ஜாடை காட்டிக்கொண்டனர். அவர்கள் இருவரும் வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணம் நலம் தரும் காரணம் தான். ஆனால் அந்த நலம், சுயநலமாகும்!
“ஏங்க, இந்தப் பார்த்திபன் உங்க அம்மா பேசலனு வருத்தத்துல தனியாவே இருந்தால், அந்த மலரும் பூவம்மா பாட்டிவீட்டிலையே தான் இருக்கும். நம்ம வீட்டுக்கு வந்தால் தானே , நாம நினைச்சது நடக்கும்.
உங்களோட சம்பளத்தைச் சேர்த்து வச்சு நம்ம நிலம் புலம் வாங்குறதுக்கு இன்னும் எத்தனை வருஷமாகுமோ ? அதுவே அந்த மலர்கிட்ட இருக்க நகை நம்ம கைக்கு வந்தால், நம்ம சீக்கிரமே முன்னேறிடலாம்” என்ற தூபத்தைத் தூவியிருந்தாள், கலா!
“அந்தப் பொண்ணோட நகை நம்ம வீட்டுக்கு வந்தால், நம்ம கைக்கு வந்ததா எப்படி டி ஆகும்?” எனப் புரியாமல் கேட்ட சூரியவர்மனை சுடும் பார்வை பார்த்தவள்,
“மொதல்ல, உங்க தம்பியையும் அந்தப் பொண்ணையும் வர வைங்க. மெல்ல மெல்ல நகத்துவோம்” எனப் பதிலளித்துக் கையோடு அழைத்தும் வந்திருந்தாள்.
“இன்னும் என்னப்பா? மொதல்ல கிளம்பு…” எனச் சூரியவர்மன், பார்த்திபனை அதட்ட, அந்த அதட்டலை பார்த்திபன், அண்ணன் தனக்காக வந்துள்ளான் என்று எண்ணம் கொண்டு பாசத்தில் தடுமாறினான்.
“ஆனால், அம்மா? எனக்குமே இப்ப அம்மாவை பார்த்தால் ஏதாவது சொல்ல முடியுமா ? இல்லை பேசமுடியுமா தெரியல அண்ணா. நீங்க பாசமா இருக்கீங்க புரியுது.
ஆனால், என்னவோ எனக்கு மனசு இந்த நிமிஷம் ஒட்டல. நான் அங்க வரல” என முடிவாக கூற, கலா ஆடிப்போனாள்.

Advertisement