Advertisement

பகுதி – 11 
வந்தவள் யார் ? அவளின் நோக்கமென்ன ? நாடகத்தின் ஆதாயமென்ன ? என அனைத்தையும் தெரிந்துகொள்வதும், இன்றோடு அதற்கு ஒரு முடிவுகட்டுவதும் என்ற உறுதியுடன் நுழைந்தவனை, அலட்சியமாக உடைத்தெறிந்தாள், பனிமலர்!
அவனின் உறுதியை மட்டுமல்ல; உள்ளத்தையும்!
“அடடா…என்ன வந்துட்ட? நீ ஸ்லொவ் மோஷன்ல நடந்து போறதை பார்த்து, அண்டார்டிகாவுக்கே போயிருப்பனுல நினச்சேன். 
ஹா…உனக்கு அண்டார்டிக்கானா தெரியுமா ? உனக்கு புரியிறது போல சொல்லுவோமா ? அண்டார்டிகா வேணாம். அரசம்பட்டி. இது ஓகேயா ?” என நக்கலுடன் தான் பேச்சையே ஆரம்பித்தாள், மலர். 
“இதோ பாரு, மொதல்ல மரியாதையா பேச பழகு” என அடிக்குரலில் சீறினான், பார்த்திபன். 
“யோவ்! என்ன பாக்குற ? உனக்கு இந்த மரியாதை போதும். டேய்னு கூப்பிடாம இருக்கேனேனு சந்தோசப்படு. உனக்கு ஒன்னு தெரியுமா ? நான் இதுவரைக்கும் யாரையுமே இப்படி மரியாதை இல்லாம பேசுனதே இல்லை. ஏன்னா என்னோட அம்மாக்கு அது சுத்தமா பிடிக்காது..
ஆனால், உனக்கு மரியாதை கொடுத்து பேசினால், எங்க அம்மா கூட என்னை மன்னிக்கமாட்டாங்க” என விரக்தியுடன் கூறினாள். 
மலரின் முகத்தினில் தோன்றிய இந்த பாவனைகள், அவளுடைய கண்ணில் தெரிந்த வலி, இயற்கையாகவே அடுத்தவர் துன்பத்தை கண்டு வருந்தும் மனம் கொண்ட பார்த்திபனை சற்று அசைத்தது.
இப்போது, அவளிடம் கோபத்தோடு விசாரிக்கவேண்டுமென்று அவன் எண்ணவில்லை. நிதானமாக சூழலை கையாள முன்வந்தான். 
“சரி! நான் பொறுமையாவே கேட்குறேன். நீ யாரு ? எதுக்காக வந்திருக்க ? என்ன பிரச்சனை ? நீ பஞ்சாயத்துல சொன்னது எல்லாமே பொய்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ” என பொறுமையுடன் பார்த்திபன் வினவினான். 
“நான் சொன்னது பொய் அப்படினு சொல்ற நீ, அதை ஏன் அங்கவே சொல்லல? இப்போ இவ்ளோ பேசுறீங்களே சாரு… அங்க கொஞ்சமாச்சும் வாய் பேசிருக்கலாமே ?” என அவனைவிட பொறுமையாக பதிலளித்தாள் மலர். 
“நான் சொல்லிருந்தால், அங்க உனக்கு தான் அசிங்கம். ஊரே உனக்கு எதிரா இருந்திச்சு. அந்த அம்சாவும் வேலுசாமியும் உன்ன அடிச்சி அசிங்கப்படுத்தியிருப்பாங்க” என இழுத்து பிடித்த பொறுமையுடன் விளக்க, 
“அட! அட! அட!
உன்ன அசிங்கப்படுத்தின என்ன நீ காப்பாத்த நினைச்ச ? இதை நான் நம்பனும்.” என ஏளனமாக உதடுகள் வளைத்தாள். 
“இதோ பாரு! நீ நம்புறது எனக்கு அவசியமில்லை. நீ இங்க இருந்து போகணும்…” 
“போகணுமா? யோவ்… நடக்கிறதை பேசு ” 
“எதுக்காக இப்படி பண்ற? பொம்பளை பிள்ளைமேல கைவைக்க கூடாதுனு பாக்குறேன். அந்த இரகமும் நான் இல்லை!” என எரிச்சல் மண்டிய குரலில் கூற, 
“வச்சு தான் பாரேன்…அப்புறம் தெரியும். இங்க என்ன நடக்குதுன்னு ?” என அலட்சியமாக பதில்கொடுத்தாள். 
“நீயெல்லாம் நல்ல பொண்ணா? நல்ல பொம்பள பிள்ளைங்க செய்ற வேலையவா பாக்குற ? “
“நல்லதும் கெட்டதும் அவுங்க அவுங்களுக்கு எது வேணுமோ அதை பொருத்து தீர்மானிக்கிறது. எனக்கு எதுவேணுமோ, அதை நோக்கி நான் என்னோட வேலைய செய்றேன். எனக்கு இது தான் நல்லது!” 
“அப்படி என்ன தான் வேணும்?” 
“உன்னோட நிம்மதி…முழுசா உன்னோட சந்தோசம், தூக்கம், எல்லாம் எனக்கு வேணும்” என கருணையென்ற ஒன்று இல்லவே இல்லாத த்வனியில் கூறினாள், மலர்!
“அதான் போச்சே… நீ வந்து நின்னப்பவே அது எல்லாமே போச்சே” என விரக்தியுடன் கூறினான் பார்த்திபன். 
“பத்தாது! உன்னோட வேதனை எனக்கு இன்னும் பத்தல. இன்னும் நீ அனுபவிக்கனும்” 
“இனி யோசிக்கிறதுக்கு இல்லை. நீ நடத்தின நாடகத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிறவேண்டியது தான். பொண்ணாச்சே, போனால் போகுதுனு, பொதுவுல வச்சு அசிங்கப்படுத்த வேணாம்னு நினச்சேன் பாரு. என்ன சொல்லணும்…
இப்பவே ஊரை கூட்டுறேன்” என பார்த்திபன் தடாலடியாக ஒரு முடிவெடுக்க, பனிமலரோ பதற்றத்துடன் தடுப்பாள் என எண்ணம் கொண்டான் பார்த்திபன்.
ஆனால், அவளோ சற்றும் அசராமல் நிதானமாக அந்த அறையிலிருந்த கட்டிலின் மீது சென்று அமர்ந்துகொண்டு, “ஹ்ம்ம் சீக்கிரம்” என கூற, 
பார்த்திபன் நிதானித்தான். அவனின் புருவங்கள் யோசனையுடன் முடிச்சிட்டன.
“என்ன போகலையா? போகமுடியாது. ஏன்னா, நீ சொல்றத அங்க யாரும் நம்ப போறது இல்லை. எப்படினு கேட்குறீயா ? உன்ன பெத்த அம்மாவே உன்ன நம்பாதப்ப, மூணாவது மனுஷங்க நம்புவாங்களா என்ன ?
அம்மாவே உன்ன நம்பாத அளவுக்கு நீ என்னென்ன வேலை பார்த்தியோ…” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரித்தாள் மலர். 
அவள் வார்த்தைகள், பார்த்திபனுக்கு உச்சக்கட்ட வலியை தருமென்று எதிர்பார்த்து, தரவேண்டுமென்ற ஏதிர்பார்ப்புடனே அதை செய்தாள்.
அவளின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை, அவளுடைய வார்த்தைகள் பார்த்திபனை தாக்கவும் செய்தன; தளரவும் செய்தன!
“என்ன? இன்னும் கிளம்பல ? போ…ஊரை கூட்டு. அதுமட்டுமில்ல மைக் ஸ்பீக்கர் செட்ன்னு எல்லாம் கட்டி கூட கூப்பாடு போடு. 
நான் உன்னோட பொண்டாட்டி இல்லனு… அப்போ நீயும் நானும் யாருனு ஊரே முடிவு செஞ்சுக்கட்டும். 
லாரில ஒரு பொண்ணோட வந்து இறங்கியிருக்கான்..ஆனால் , பொண்டாட்டி இல்லையாம்ன்னு எல்லாரும் பேசட்டும்” என திமிராக பேசினாள். 
பார்த்திபனின் கண்கள் கோபத்தில் சிவந்தன. அவன் எதையும் பேச முற்படவில்லை. 
“அடடா, கோபமா? கொஞ்சம் மிச்சம் வை. முழுசா சொல்லி முடிச்சிடறேன்.
யோவ், நீ என்ன பேசுனாலும், உன்ன மடக்கி பேச எனக்கு தெரியும். இங்க என்னோட பேரை பத்தியோ இமேஜ் பத்தியோ நான் சுத்தமா கவலை படமாட்டேன். 
ஏனா சாகவே துணிஞ்சுட்டேன். அதுக்குமேல வேற என்ன வேணும் ? நான் இந்த நிலைமைக்கு வர காரணமா இருந்த உன்ன, பழிவாங்குனா அதுவே எனக்கு போதும். 
வேற எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை. மொதல்ல இங்க இருந்து போ” என அத்தனை வஞ்சத்துடனும் கோபத்துடனும் கூறினாள். 
பார்த்திபனுக்கு மலரை எப்படி கையாள்வதென்றும், எப்படி உண்மையை அறிவதென்றும் ஏதும் புரியாத நிலை. அடுத்த பெண்ணை அடிக்க அவன் கொள்ளும் தர்மம் உடன்படவில்லை. அதேவேளையில் அவள் சொல்லும் பொய்களை உடைத்து, அவள் வேஷத்தை களைக்கவும் தற்சமயம் வழியில்லை. 
இது போதாதென்று, அவள் கூறிய வார்த்தைகள், “பெத்த அம்மாவே உன்ன நம்பள” மீண்டும் மீண்டும் அவன் காதில் ரீங்காரமிட்டது. 
மற்றவை அனைத்தையும் கூட அவனால் இன்று இல்லாவிடிலும் என்றாவது ஒருநாள், சரி செய்திட முடியும். ஆனால், தன் தாய் தன் மீது சொல்லும் குற்றசாட்டு ? அதை எப்படி சரி செய்வான் ? 
தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவும் நம்பிக்கையும் நிரூபித்து வருவதில்லையே… இந்த நிலை இனி மாறும் என்ற நம்பிக்கை கூட அந்த நொடி பார்த்திபனிடமில்லை. வெகுவாக தொய்ந்து போனான்….
பெரும் சிந்தனைகள் அவனை ஆட்கொண்டுவிட, வெறுமையான இதயத்துடன் வெளியேற முயன்றவனை, “யோவ்….ஒருநிமிசம் நில்லு… உனக்கு ஒன்னு தெரியுமா ?” என கேள்வியாக பார்த்திபனை பார்த்தாள். 
என்ன என்பதாய் பார்த்திபனின் பார்வை இருக்க, “இதே போல ஒரு சூழ்நிலைல நான் நின்னுருதேன் வச்சுக்கோ, என்னோட அம்மா, உன்னோட அம்மாவை போல சந்தேக படமாட்டாங்க. 
ஏன்னா அவுங்களுக்கு என் மேல அவ்ளோ நம்பிக்கை. இப்போ அவுங்க கூட நான் இல்லாட்டியும், யாருமில்லாதவளா நின்னாலும், நீ என்னை விட ரொம்ப பாவம்னு கொஞ்சம் எனக்கு தோணதான் செய்யுது.
எங்க அப்பா ஒன்னு சொல்லுவாரு…வினை விதைத்தவன் வினை அறுப்பானாம்…. இப்ப உனக்கு அறுவடை ஆரம்பம் ஆகிடுச்சு. ” என கூற, பார்த்திபன் மொத்தமாக நொறுங்கி போனான். 
பார்த்திபனின் பலமும் பலவீனமும் அவனின் குடும்பம் மட்டுமே. அவர்களுக்கு எப்படியோ, ஆனால், பார்த்திபனுக்கு அவனின் குடும்பம் தான் பிராணமும் பிரதானமும்….
அதை வந்த இரண்டு நாட்களில் மிக சரியாக கணித்து காய் நகர்த்த தொடங்கியிருந்தாள் பனிமலர். 
அவளுடைய பேச்சிலிருந்து பார்த்திபன் ஒன்றை மட்டும் நன்கு உணர்ந்துகொண்டான். அவளாக பிரியப்படாமல், இங்கிருந்து அவளை செல்லவைப்பதென்பது அசாத்தியம் என்று…
மறுநாள் காலை வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்கு, வாழும் ஒவ்வொரு உயிரினத்தையும் அழைத்துச் செல்லும் நோக்குடன் பொழுது விடிந்தது.
அன்றைய காலை, பார்த்திபனுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்க விடிந்திருந்தது. அவனுடைய வாழ்க்கை கிட்டத்தட்ட காட்டாற்றில் இழுத்துச் செல்லப்படும் ஓடமாய் ஓட்டம் காண தொடங்கியது.
“ஏ… எந்திரிடா பூதம்” என ஒரு பெண் குரல் பஞ்ச பூதத்தின் செவிகளில் விழ,
“மறுபடியும் கனவா?” என உளறலுடன் கண்களைக் கசக்கினான் பூதம். அங்கு நின்று அவனை எழுப்பிக்கொண்டிருந்ததோ, பார்த்திபனின் அண்ணி, சூரியவர்மனின் மனைவி நித்ய கலா.

Advertisement