Advertisement

பகுதி – 10
பார்த்திபன் அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. அந்த நிமிடத்தில் தனது உடலை சுமப்பது கூட அவனுக்குப் பெரிதாக இருந்தது. சற்றே தடுமாறியவன், சிவந்த விழிகளுடன் தலை கவிழ்ந்து நடக்க,
“நண்பா…நில்லுடா! நானும் வரேன்” எனப் பின்னோடு கூப்பிட்டபடி பூதம் ஓட,
“தப்பு பண்ணிட்ட தாமினி… பெத்த தாய் வாயிலயிருந்து எந்த வார்த்தை வரக்கூடாதோ அந்த வார்த்தையைச் சொல்லிட்ட” எனக் கூறிய பூவம்மாள், அவரும் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட,
விரக்தியுடன் நடந்து செல்லும் பார்த்திபனை பார்த்தபடி நின்றிருந்தாள், பனிமலர்!
அவளுடைய உதடுகளோ, “இன்னுமிருக்கு… இதுக்கே நொந்துட்டால் எப்படி ?” என முணுமுணுத்துக்கொண்டன.
***
“நண்பா…எங்க போற? ஏன் இப்படிப் பித்துப் பிடிச்சமாதிரி இருக்க ? விடு. அம்மா தானே ? அவுங்க ஏதோ கோபத்துல சொல்லிருப்பாங்க” எனப் பூதம் ஆறுதல் சொல்ல,
“உள்ள இருக்கிறது தான் வெளிவரும் பூதம். அவுங்க இத்தனை வருசமா என்கிட்ட காமிச்ச வேறுப்பாட்டை என்னனு தெரியாம நிறைய யோசிச்சிருக்கேன்.
அப்புறம் நானே என்ன சமாதானம் செஞ்சுகிட்டு, இதெல்லாம் என்னுடைய கற்பனைன்னு என்ன நானே ஏமாத்திட்டு இருந்திருக்கேன்” என வெறுமையான குரலில் கூறினான், பார்த்திபன்.
“இவ்ளோ நொந்து பொய் பேசாத நண்பா” எனத் தேற்ற முயல,
“என்ன கொஞ்சம் தனியா விடுறியா? நான் கொஞ்சம் தனியா இருக்கனும். நீயாச்சும் புருஞ்சுக்கோ” எனக் கெஞ்சும் குரலில் கேட்டான் பார்த்திபன்.
இதுபோலப் பார்த்திபன் கெஞ்சும் குரலில் பேசியதே இல்லை. அந்த த்வணியே அவனுடைய நிலையைப் பூதத்திற்கு நன்கு உணர்த்தியது. வேறெதுவும் பேசாமல், “சீக்கிரம் வந்திடு…நான் உனக்காகக் காத்திருப்பேன்” என மனம் கேளாமல் பூதம் கூற,
பார்த்திபன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
பூதத்திற்கு அத்தனை கோபமும் இப்போது பனிமலர் மீது திரும்பியது.
“இந்தப் பொண்ணு வந்து தான் இத்தனை பிரச்னையும். யாரு இந்தப் பனிமலர் ? என்ன வேணும் ? இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என நினைத்தபடி வந்தவழியே மீண்டும் திரும்பி போனவன், நேராகப் பூவம்மாளின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
“பாட்டி…அந்த புள்ள எங்க?” என எடுத்த எடுப்பிலே வினவ,
“எந்தப் புள்ளடா? பார்த்திப் பொண்டாட்டியா ?”
“ஆமாம்! அததான் கேட்குறேன். எங்க அது ?”
“வந்ததுல இருந்து கதைவடைச்சிட்டு உள்ளாரா இருக்கா. தன்னோட புருஷன இப்படிச் சொன்னால் அதுக்கும் வேதனை இருக்கத் தானே செய்யும்” எனப் பரிந்துகொண்டு வர,
“வேதனைக்கே வேதனையைக் கொடுக்கமுடியுமா? எல்லாப் பார்த்திக்கு வந்த சோதனை” எனப் புலம்பியவன்,
“நான் பேசணும்” என வெளியே கூறினான்.
“நீ என்னத்த பேச போற? அதெல்லாம் வேணாம்! எதுனாலும் புருஷன் பொண்டாட்டி பார்த்துக்கிடட்டும். அவன் இல்லாதப்ப நீ பேசி மேற்கொண்டு சிக்கலாக்கி வச்சிடாத.” என நிதர்சனத்தைக் கூற,
“பாட்டி புரியாம பேசாதீங்க. இந்தப் பிள்ளை வரலான, இன்னைக்குப் பார்த்திபனுக்கு இந்த உண்மை தெரிஞ்சிருக்குமா? இல்லை அவன் தான் இப்படி உசுரில்லாம எங்கையோ நடந்து போவானா ?”
“அதான் நீயே சொல்லிட்டியே நிஜம்னு. இந்தப் பிள்ளை வந்தனால தான்  நிசமென்னனு அவன் புரிஞ்சிருக்கான். இல்லைனா அவனுக்குக் கடைசிவரைக்கும் தெரியாமலே போயிருக்கும் “
“இல்லை பாட்டி… அவன்கிட்ட பேசிட்டு இருந்தவங்க பேச்சை நிப்பாட்டிட்டாங்களே?”
“பேசதான் இன்னொருத்தி வந்துட்டால. அப்புறமென்ன? சில குடும்ப விவகாரத்துல நம்ம தள்ளித்தான் நிக்கணும். இதுங்க இரெண்டு வாழ வழி பண்ணலாம். ஆனால், இப்படித்தான் வாழணும்னு நாம சொல்லக்கூடாது. போ..போய் உன் கூட்டாளிய கூட்டு வர வழிய பாரு” என பெரிய மனிஷியாய் எடுத்து கூற, வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறினான்.
“இந்த பாட்டி புருஷன் பொண்டாட்டின்னு சொல்லுது. ஆனால், அது தான் நிசமில்லையே ? இதை நான் எப்படி இல்லனு மறுக்க முடியும் ? பாட்டி சொன்னது போல, இது பார்த்திக்கு நல்லதா ? என்ன தான் நடக்குது ? இவன் எங்க போயிருப்பான்?” என்ற கேள்வியோடு வீதியில் நடந்து சென்றவனை, நடராஜன் வந்து அழைத்தான்.
“என்ன அண்ணே? காலாற நடந்து போறீங்களா ?” என நண்டு வினவ,
“இல்லை! தலையால தவந்து போறேன். நானே கடுப்புல இருக்கேன். இப்ப என்ன வேணும்டா உனக்கு ?”
“கருப்பா இருக்கேனு சொல்லுங்க ஒத்துகிறேன். அதைவிட்டு கடுப்பா இருக்கேனு சொல்லாதீங்க. எனக்குச் சிரிப்பு சிரிப்பா வருது…” எனச் சொல்லிவிட்டு வாய் பொத்தி சிரிக்க,
“சார் என்ன கலருங்க?” எனப் பூதம் வாய் பேச்சில் இறங்கினான்.
“அண்ணே நான் பிரவுன். நீங்க கருப்பு”
“ஓ… பிரவுன். உனக்கிதெல்லாம் யாருடா சொல்லிக்கொடுத்தா ?”
“பொண்ணு பாக்குறோம்ல. அப்போ மாப்பிள்ளை கலரு என்னனு கேட்டாங்க. அதுக்காக நானே கண்டுபிடிச்சுகிட்ட கலருதான் இது” என வெள்ளந்தியாக நண்டு கூற
“எது பொவொண்டோவா? டொரினோவா ?” எனப் பூதம் இடக்காகக் கேட்க,
“விளையாடாதீங்க அண்ணே! நான் குடிக்கிற கலர் பத்தி பேசல. நம்ம கலர பத்தி சொல்லுறே. நீங்க தான் பெரிய மனுஷன். நாலு தெருஞ்சுவருனு வந்திருக்கேன்” என மொத்தமாகப் பெரும் ஐஸ் கட்டியை பூதத்தின் தலையில் வைக்க,
“சரி சரி…சொல்லு என்ன வேணும்?” எனப் பூதம், மற்ற அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் பேச்சில் இறங்கினான்.
“பொண்ணுக்கு சிலபல கண்டிஷனலாம் போட்டுட்டேன். அதுபோல நான் என்ன தொழில் பன்றேன்னு கேட்குறாங்க. என்ன சொல்ல ?”
“இந்தா இப்படித் தெண்டமா சுத்துறேன்னு சொல்லு. அதை விடு, அதென்ன கண்டிஷன் ? மொதல்ல அதைச் சொல்லு”
“மொத கண்டிஷன், பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருக்கணும்” என நண்டு தொடங்க,
“ஏன்? கழுத்துல சுழுக்கிருக்கப் பொண்ணா தேடுறியா ?” என நக்கலடித்தான் பூதம்.
“விளையாடாதீங்க அண்ணே! பொண்ணுக்கு முடி அதாவது கூந்தல் நல்ல நீளமா பந்தலாட்டம் இருக்கணும்”
“எப்படி பந்தல்ல சிக்கு சிக்கா இருக்குமே? அப்படியா ?”
“அவ நடந்து போனா, தரையில கால் படக்கூடாது”
“அப்ப இரண்டு காலையும் வெட்டிடு. மகனே ஜென்மத்துக்கும் கால் தரையில படாது…”
“ச்ச உங்களுக்குக் கொஞ்சமாச்சும் இரசனை இருக்கா?” என நண்டு கோபித்துக் கொள்ள,
“கொஞ்சூன்டு இரசம் வேணுனா இருக்கும். வாங்கிக் குடிச்சிட்டு போடா ” என அதற்கும் கடுப்படிதான் பூதம்.
நண்டு நிற்காமல் விடுவிடுவென்று கோபித்துக் கொண்டு செல்ல, “நண்டு சிண்டுக்கெல்லாம் கல்யாணாம்னு டார்ச்சர் பாண்ணுறாங்க கடவுளே. அவனுக்கு வர பொண்டாட்டிய நான் எப்படி இரசனையா பாக்குறது… இவனுங்களுக்கெல்லாம் அறிவுனு ஒன்னு இருக்கா இல்லையா ?” என வாய்விட்டு புலம்ப,
வழியில் செல்லும் ஒருவர், “ஏப்பா பூதம்… உன்ன உங்க ஆத்தா கையோட கூட்டியார சொல்லுச்சு” எனக் கூற,
“பின்ன கை இல்லாமையா கூட்டியார சொல்லுவாங்க. கை, காலுனு எல்லாத்தோடையும் தான் வருவான் இந்தப் பூதம்” என வியாக்கணம் பேசிக்கொண்டு செல்ல, தகவல் சொல்லவந்தவர் தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார்….
***
நேரம் ஒன்றை கடந்தது, இரண்டை கடந்தது…இப்படியே அன்று இரவு மணி பத்தை தொட்டது. இன்னமும் பார்த்திபன் வீடு வந்து சேர்ந்தபாடில்லை.
பார்த்திபனை அந்த நிமிடம் இருவர் தான் தேடிக்கொண்டிருந்தார். ஒன்று பூதம், மற்றொன்று பூவம்மாள்.
அவர் மாடுகளைப் பார்த்துக்கொள்ளும் ஆளை அனுப்பி, பூதத்தை அழைத்து வர சொன்னார். சிறிது நேரத்தில் வந்தவரிடம் பார்த்திபனை குறித்து விசாரிக்க, பூதமும் தகவலேதும் இல்லாமல் நின்றிருந்தான்.
பார்த்திபனின் கை பேசிக்கு மீண்டும் மீண்டும் அழைக்க, அது சுவிட்ச் ஆப் என்றே காட்டியது.
“ஏண்டா அவனைத் தனியா விட்ட? இப்ப எங்கன்னு போய்த் தேடுறது ?” எனப் பூதத்தை மிரட்டிக்கொண்டிருக்க,
பூவம்மாளின் எதிர்வீட்டிலிருந்த அந்தத் துணி கடைக்காரர், கடையை அடைத்துவிட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைய போனார்.
சட்டென்று நின்றவர், பூதம் பூவம்மாளின் வீட்டின் முன் நிற்பதை பார்த்துவிட்டு, “என்னய்யா ? நீ இங்கன நிக்கிற ? உன்ன தேடி பார்த்தி உன் வீட்டுக்கு போனானே ?” எனக் கூற,
“அப்படியா ? சரி அண்ணே! அவனைத் தேடி நான் இங்குட்டு வந்தேன். அவன் அங்குட்டு போய்ட்டான் போல” எனக் கூறி சமாளிக்க, அவரும் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றார்.
“பாட்டி , நான் போய்க் கூட்டியாரே” எனப் புறப்பட முயன்ற பூதத்தைத் தடுத்த பூவம்மாள், “இரு நான் அளவிட்டு கூட்டியாரே. உன்ன அனுப்பினா, நேத்து போல அங்கனவே அவன் தங்கிடுவான்.
புதுசா காட்டிக்கிட்டவங்க என்ன ஆளுக்கொரு திசையிலே இருக்குறது ? நீ இங்னவே நில்லு” எனக் கண்டிப்புடன் கூறிய பூவம்மாள், சொன்னதைப் போலவே செய்தார்.
பூதம் அழைத்ததாகக் கூறி பாரதியை அங்கு வரவைத்தவர், பார்த்திபனின் மீது கண்டிப்புடன் ஒரு பார்வையைப் பார்த்தார்.
“வா ராசா! எதுனாலும் நின்னு பேசு. ஓடி ஒளியாத” எனக் கணீர் குரலில் கூற
“ஒளியிறவன் எதுக்குத் திரும்ப வர போறான்? நான் யாருக்காக ஒளியனும்?” என அவருக்கு எதிர்கேள்வி கேட்டான்.
“வாடா பேராண்டி! அப்படி வா வழிக்கு” என மனதிற்குள் நினைத்துக்கொண்டவர்,
“அப்படியா? நீ ஒளியலையா ? அப்போ இனிமேல் உன் பொண்டாட்டிவிட்டு ஓடுற வேலைய விடு. அவ எங்க இருக்காளோ அங்கன இருந்து பழகு. அப்ப ஒத்துகிறேன்” எனப் பார்த்திபனை நோக்கி கூற, பார்த்திபன் முகத்தில் அப்பட்டமாய் எரிச்சல் மண்டியது.
“இன்னும் ஏண்டா நீ நிக்கிற ? வீட்டு பக்கம் கிளம்பு” என பூதத்தை துரத்த, 
“பள்ளு இல்லாட்டியும் வம்பிழுக்குறது குறையல. எல்லா நேரம்” என வாய் விட்டு புலம்ப, 
“நல்ல நேரம்தான் இப்ப…நீ வெளில போ! இந்தா பார்த்தி நீ உள்ள போ” என பூவம்மாள் காரியத்தில் கண்ணாய் இருந்தார். 
அருகில் வந்த பூதம், “நண்பா, இன்னைக்காச்சும் விசாரிப்பா… நிலைமை கை மீறி போய்ட போகுது” என எச்சரித்துவிட்டு செல்ல, 
ஒரு முடிவோடு பனிமலரின் அறைக்குள் நுழைய, அவனின் முடிவை தவிடுபொடியாக்கினாள் பனிமலர்.

Advertisement