Advertisement

ப.. பா.. பூ..
பகுதி – 1
             அழகிய இரவது..ஆங்காகே தறிவிட்டிருந்த போதும், அந்தத் துப்பட்டியிலிருந்த கிழிசல்களைப் பெரிதுபடுத்தாமல் குளிருக்கு இதமாகக் கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுகமாக படுத்திருந்தான், பஞ்ச பூதம்!
விடிந்தும் மழை தூறல் நின்றபாடில்லை. போர்வையை மீறி ஊதக்காற்று பஞ்ச பூதத்தைத் தழுவி செல்ல, துப்பட்டியை விலக்கியபடி வந்து நின்றாள் ஒரு பெண்.
இலேசாகக் குளிர் அதிகரிக்க, அதை உணர்ந்த பூதமோ, “அடியே! காபி இப்போ வேணாம்..கொஞ்ச அசதியா இருக்கு. புறவு வாறன்” எனச் சொல்லியபடி மீண்டும் துப்பட்டியை இழுத்து மூட, வெடுக்கென்று அவன் துப்பட்டி பறிக்கப்பட்டது.
“உன் மூஞ்சிக்கு காப்பி வேணுமா காப்பி? துறைக்குப் படுக்கையில காப்பிக் கேட்குதோ ? கடவா பல்ல உடைச்சா கேப்பியா ?” என முழு ரௌத்திரத்துடன் அப்பெண், பூதம் முன் நிற்க,
“கடவா பல்லு இல்லாட்டி கறி தான கேட்கக்கூடாது..காபி கூடவா ??” என வாய்விட்டு சிந்தித்தபடியே, எழுந்து உட்கார.
“ஓ! துறை நக்கலு பேசுறீங்களோ.. இப்ப பேசு” எனச் சொல்லிக்கொண்டே, அருகேயிருந்த உலக்கையை எடுத்துச் சரமாரியாகப் பூதத்தை அடிக்க,
“அடியே! விற்று..சட்ட கிழியுது..வேணாம் வேட்டியும் கிழியுது..அம்மா வலிக்கிது..” எனப் பஞ்ச பூதம் கதறியபடி எழுந்தமர்ந்தான்.
“விற்று தாயே விற்று தாயே காபி வேணாம் காபி வேணாம்” எனக் கண்களை மூடியபடியே கதற,
பூதத்தை உலுக்கியபடி நின்றிருந்தான் பார்த்திபன்.
பார்த்திபன், உழைத்து உழைத்து நன்கு மெருகியிருந்த உடல் கட்டம்ப்பை கொண்டவன். மாநிறத்திலிருந்தவன் தொடர் வேலையினால் நல்ல கருப்பு நிறத்திற்கு மாறியிருந்தான். உயரம் சராசரி ஆண்களைவிட அதிகம். சற்றே பழுத்த நிறத்திலிருந்து வேஷ்டியை மடித்துத் தூக்கி கட்டியிருந்தவன், கையில்லாத பனியனுடன் கழுத்த சுற்றி ஒரு சாதாரணத் துண்டை சுற்றிவிட்டிருந்தான்.
“அடேய்! பூதம்..காபி வேணுமா வேணாமா ? லோட் ஏத்திட்டு புறப்பட்டவுடனே பசிக்கிதுன்னு வாய்துறைந்த வண்டி ஆயில்-அ வாய்க்குள்ள ஊத்திடுவே ” எனக் கடுப்புடன் கத்த,
கண்களைத் தேய்த்தபடி நன்றாக முழித்து முழித்துப் பார்த்தான் பஞ்ச பூதம்.
“நண்பா?…நீயாடா ?” என நம்பாமல் வினவ,
“நானில்லாமா, நயன்தாராவா? ஏண்டா உசுர எடுக்குற ?” எனச் சலிப்புடன் வினவினான் பார்த்திபன்.
“நயன்தாரா இல்ல நண்பா, நயிட்டி போட்ட ஜாக்கிசான். என்னா அடி என்னா மிதி ?
எங்க ஆத்தா கூட இப்படி அடிச்சது இல்லடா. அப்படி அடிக்கிறா..” எனச் சுற்றி சுற்றி பார்த்தபடியே கூற, பூதத்தின் கண்கள் அங்கும் இங்கும் சுற்றியதிலே, அவனுடைய கனவில் வந்த பெண் அருகில் நிற்கின்றாலோ என அச்சத்தில் தேடுகிறான் எனப் பார்த்திபன் புரிந்துகொண்டான்.
“இன்னைக்கும் அதே கனவா?” எனச் சிரிப்புக்குத் தாவினான் பார்த்திபன். சலிப்புடன் இருந்தவனைப் பஞ்ச பூதத்தின் பாவனை மாற்றியது.
“ஆமா நண்பா! அதே கனவு. ஆனா ஏன் வருதுன்னு தான் புரில நண்பா..” எனப் பூதம் தலையைச் சொரிந்தபடி கூறினான்.
“வரது ஒரே பொண்ணா இல்லா வேற வேறயா?” எனப் பார்த்திபன் விசாரணையில் தாவ,
“ஒரே பொண்ணு தாண்டா…” என அடித்துக்கூறினான் பூதம்.
“எப்படிடா பூதம் சொல்லுற? எப்படி ஒரே பொண்ணுனு கண்டுபிடிச்ச ?” என வினவ,
“அட அதென்ன கொல்லிமலை இரகசியமா… அவ ஒரே அழுக்கு புடிச்ச நைட்டிய தான போட்டு வந்து அடிக்கிறா…” என ஆதங்கத்துடன் கூற,
பார்த்திபன் வாய் விட்டுச் சிரித்தான்.
“அப்போ அடிச்சதுக்கு நீ நோவலா? ஒரே நைட்டிய போட்டு வரான்னு தான் துறை வருத்தப்படுறாரு ?” எனக் கிண்டலாக வினவ,
“அடேய்…” எனப் பல்லைக்கடிதான் பஞ்ச பூதம்!
“சரி சரி வா… நம்ம லாரிக்கு தான் அடுத்த லோட். அதுக்குள்ள ஒரு காப்பிய குடிப்போம். சரக்க ஏத்திட்டு சட்டுப்புட்டுன்னு புறப்படுவோம். வீட்ட விட்டுப் புறப்பட்டுப் பத்து நாள் ஆகுது..” எனப் பூதத்தை இழுத்தபடி பார்த்திபன் தேநீர் கடை நோக்கி புறப்பட்டான்.
பார்த்திபன் லாரி ஓட்டுநர் பஞ்ச பூதம் லாரி கிளீனர். இருவரும் வண்டியுடன் காத்திருப்பது அடுத்தச் சரக்கிற்காக. ஆம்! இதுதான் அவர்களின் வாடிக்கை. வாழ்க்கை..
சரக்கை ஏற்றிக்கொண்டு வந்து இறங்கிவிட்டால் மட்டும் போதாது. அடுத்தச் சரக்கு கிடைக்கும் வரை அதே இடத்தில காத்திருக்க வேண்டும். சரக்கு இல்லாத லாரி ஓடினால், பெரும் நஷ்டம் உண்டாகும். லாரியின் உரிமையாளர்கள் அதற்கு அனுமதிக்கவும் மாட்டார்கள். பார்த்திபன் ஓட்டுநராகப் பணிபுரிபவன், அவன் தற்சமயம் வைத்திருக்கும் வண்டிகூட அவனுடையது கிடையாது!
சரக்கு ஏற்றி இறக்குவதற்குப் படிக்காசு என நான்காயிரமோ ஐந்தாயிரமோ கிடைக்கும். ஏறக்குறைய பத்து நாட்களுக்குரிய மொத்த ஊதியமே அவ்வளவு தான்.. அதிலும் நெடுசாலையில் கட்டவேண்டிய கப்பம், உணவு செலவு எனக் கழித்துவிட்டால் அந்தத் தொகையிலும் குறைக்கப்படும்.
இதில் பணச் சுமை மட்டுமல்ல; லாரி ஓட்டுனர்களுக்கு மற்றொரு சுமையும் உள்ளது. அது சரக்குக் கொடுக்கப்படும் கால அவகாசம். லோட் ஏற்றுவதற்கு வரிசைகள் உண்டு. முதல் வந்த லாரிக்கே முதலில் சரக்குக் கொடுக்கப்படும். வரிசையாக இருபது முப்பது வண்டிகள் இருக்கும்.. சரக்குகள் கிடைக்க இரண்டிலிருந்து ஒரு வார கால அவகாசம் பிடிக்கும். வண்டிகளை நிறுத்த மரங்கள் இல்லாத ஒரு வெட்டவெளி மட்டுமே இருக்கும்.
வெயில் என்றால் சுட்டெரித்திடும். குளிரென்றால் உடலை துளைத்திடும். மழையென்றால் நடுநடுங்க வைத்திடும்..
உணவுக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று உணவை வாங்கவேண்டும்.. மதியம் வாங்கும் உணவை மீதப்படுத்தி இரவு அதை முடித்துக்கொண்டு ஒருவேளை சோற்றை மிச்சப்படுத்தித் தன் வீட்டிற்குக் காசு கொண்டு செல்லும் ஓட்டுனர்கள் பலர்!
இது தான் பார்த்திபன் மற்றும் பஞ்ச பூதத்தின் வாழ்க்கையும்!
பூதம் எதிரிலுள்ளவனை வார்த்தையால் அடிப்பான், பார்த்திபன் எதிர்பவனைக் கையினால் அடிப்பான். இருவருக்கும் இதுதான் வேற்றுமை. பூதத்திற்கு அன்னை மட்டுமே.
பார்த்திபன் அவன் குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவன். ஓர் அண்ணன் ஓர் அக்கா, அம்மா..
அவன் பிறந்தவுடன் முதல் அவர்களின் சொத்துப் போனது. பிறகு அவனின் தந்தையும் போனார்.. இன்று ஓட்டுனராக இருப்பவன், பண்ணையம் செய்து ஆண்டு அனுபவிக்க வேண்டியவன். ஜமீன் பரம்பரை. அங்காளி பங்காளி சண்டையில் அனைத்தும் ஜப்தி செய்யப்பட்டுப் பூட்டுப்போட பட்டிருந்தது.
காடு கழனியிருந்தும் ஒருவேளை சோற்றுக்கு ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்தான்..
வாதியும் பிரதிவாதியும் மடிந்தால் கூட வாதம் தொண்டர்துகொண்டே இருக்கும் என்பதைப் போல ஆண்டுகள் பல கடந்தும் தொடுக்கப்பட்ட வழக்கு ஜவ்வாய் இழுத்துக் கிடந்தது.
பிறந்ததிலிருந்தே வறுமையில் வளர்ந்ததால் ஜமீன் என்ற வார்த்தை மட்டுமே பார்த்திபனுக்குத் தெரியும். அந்த வாழ்க்கை தெரியாது..ஆனால், அவனின் அண்ணனுக்கும் அக்காவிற்கும் ஜமீன் வாழ்க்கையும் தெரியும், அதன் பெருமையும் தெரியும்..
டிப் டாப் டிபன் சென்டர்..
என்ற வாசகத்தைப் படித்தபடியே பஞ்ச பூதம் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டான். பார்த்திபனோ, அந்த டிப்பன் சென்டர் பக்கத்தில் நின்ற வேப்பமரத்தில் குச்சியை உடைத்து பல் தேய்க்க தொடங்க,
“என்னப்பா பார்த்திபா? இன்னைக்கு உன்னோட வண்டிக்கு லோட் ஆமே ? சட்டு புட்டுன்னு சாப்பிட்டு புறப்படு” என அந்த அண்ணாச்சி கூறிக்கொண்டிருக்கும்பொழுதே, இலையை விரித்துத் தண்ணீர் தெளிக்கத் தொடங்கினான் பஞ்ச பூதம்.
“யோவ் பூதம், பல்ல விலக்கலியா?” என அண்ணாச்சி வினவ,
“பல்லு விலக்காட்டி தான் உங்க கடை சாப்பாடு உள்ள இறங்குங்க அண்ணாச்சி” என நக்கல் கலந்து பவ்வியமாக கூற,
“பார்த்திபா…” என அண்ணாச்சி பல்லை கடிக்க, 
“அடேய்!..” என அதட்ட, நண்பனின் கண்டிப்பில் வாயை மூடியவன், “ஆத்தாடி, பொங்கலு சாப்பிடலாம்னு பார்த்தா, நமக்கு பொங்கல் வைக்கப்பாக்குறானுங்க..உஷார் டா பூதம்” என முணுமுணுத்துக்கொண்டவன், 
“மன்னிச்சுக்கோங்க அண்ணாச்சி…” என இராகம் பாடினான், பஞ்ச பூதம்!
இலையைப் போட்டு அமர்ந்தவன், “நண்பா இங்க வா..” எனப் பல்துலக்கிவிட்டு வந்த பார்த்திபனை அழைக்க, “ஏண்டா அங்க உக்காந்தா என்ன ?” என்ற கேள்வியுடன் பூதத்தின் அருகே அமர்ந்தான்.
“அட எதுத்தாப்புல சாப்பிடறவன் மூஞ்சு சரியில்ல நண்பா. அவன்ட ஒரு கூரு இல்லை.” என முகத்தை அஷ்டகோணலாக மாற்ற,
“உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி டா..பேச்ச குறை” என அதட்டிவிட்டு சாப்பிட, இலையில் கடை பையன் கொண்டு வந்து ஹாப் பாயில் வைத்தான்.
“ஹாப் பாயில எப்படிப் பிடிக்கணும் தெரியுமா நண்பா ? ” எனப் பூதம் வினவ,
‘எப்படி?’ என்பதைப் போலப் பார்த்திபன் பிருவம் உயர்த்த,
“கை குழந்தையைத் தூக்குறது போலத் தூக்கும் நண்பா…” என நாக்கை சுழற்றி இரசித்து எடுத்து வாயில் போட்டு அமுக்கினான்…
”ஆ…அட அட அட” எனச் சப்புகொட்டியவனை எதிர் வரிசையில் இருந்தவன்,
“முட்டையைக் குழந்தை போலத் தூக்குனா, குழந்தையை எப்படி அண்ணே தூக்குவீங்க?” என இடைப்புக,
கடுப்பான பூதம் பார்த்திபனை நோக்கி, “நான் சொல்லல , இவன் மூஞ்சி சரியில்லைன்னு. மூஞ்சி ஒரு தினுசா இருந்தா அப்படிதான் கேள்வி கேட்க தோணும்..” எனப் பற்களைக் கடித்தபடி கூற, பார்த்திபன் வாய் விட்டுச் சிரித்தான்.
பற்கள் தெரிய சிரித்தவனை, பற்களை நறநறவெனக் கடிக்கும் அளவிற்குக் கோபப்படுத்தும் சம்பவம் அடுத்து நிகழ காத்திருந்தது..

Advertisement