Advertisement

அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்… காலை டீ யையும் விட்டொழித்தான்…

ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு ஒரு முறை சென்று பார்ப்பான் ஜெயந்தி இல்லாத போது..

அவன் எப்போதும் போல தான் இருந்தான். முன்பும் அவன் அப்படி ஒன்று சிரித்துப் பேசும் கலகலப்பான ஆசாமி கிடையாது, வெகு சிலரிடம் மட்டுமே அப்படி பேசுவான், அதனால் யாருக்கும் வித்தியாசம் தெரியவில்லை..

ஆனால் ஜெயந்தி ஒடுங்கி விட்டாள். இன்னும் கூட அவளுக்கு என்ன தப்பு செய்தோம் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை.

======================================================

ஜெயந்திக்கு என்னவோ போல ஆகிற்று, “அப்படி என்ன நாம் தப்பு செய்தோம், வேண்டுமென்றால் திருமணம் செய்து கொள் என்று தானே சொன்னோம்”

“அவன் தானே சொன்னான், உனக்காக உதவி செய்கிறேன் என்று. அது போல தானே சொன்னேன் உதவிக்காக திருமணம் செய்கிறேன் என்று”

“இவனை பிடித்து இருக்கிறது என்று பொய்யா சொல்ல முடியும். வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்ய சம்மதித்து இருக்கிறேன் இவனானால் பெரிய இவன் போல என்னை பார்க்க கூட மாட்டானா?”

“போகிறான் போடா, இங்கே யாரும் இவனுக்காக காத்திருக்க வில்லை” என்று மனதிற்குள் பொரிந்து கொண்டிருந்தாள்.. ஆனால் ஒருவர் தன்னை பார்க்க கூட வேண்டாம் என்று தவிர்ப்பது ஒருவிதமான எதையோ இழந்த உணர்வை கொடுத்தது.  

தோற்றத்தில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ளாதவன் என்பதால் அவளாக நினைத்துக் கொண்டாள் முப்பது வயதிற்கு மேல் இருக்கும் என்று.

===============================================

தெய்வத்தை பார்ப்பதை போல பார்ப்பர் மருதுவை கலைச்செல்வியும் விமலனும் கமலனும்.

கோபாலனுக்கு இன்னும் கூட எதற்கு இவன் நமக்கு உதவுகிறான் என்ற சந்தேகம் மனதில் இருக்க, விளக்கை தேய்த்து வைத்து என்ன பூதம் வருமோ என்று எதிர்பார்த்து காத்திருப்பவர் போல காத்திருக்க…

எதுவும் வரவில்லை.. ஆம் எதுவுமே வரவில்லை..

ஜெயந்தியின் கண்களில் மருது படவேயில்லை..

அண்ணனும் தம்பியம் அங்கே வேலை பார்த்தாலும் அங்கே சென்று அவர்களை சந்திக்கும் சாக்கில் மருதுவை பார்க்க அவளும் விழையவில்லை. போகிறான் என்ற நினைப்பு தான்.. ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் அவன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.   

போகிறான் என்ற நினைப்பு எப்போதும் இருக்க ஏதோ ஒரு வகையில் அவனை நினைத்துக் கொண்டிருந்தாள்.. அது வேறு அவளுக்கு அப்படி ஒரு எரிச்சலை கொடுத்தது..

========================================================

எப்போதும் அவளின் வீட்டினில் மருதுவின் பேச்சுக்கள் இருக்கும்.. ஜெயந்தி கூட கிண்டல் செய்வது உண்டு “என்ன செய்யறார் உங்க பெல் பாட்டம் முதலாளி?” என,

கமலன் கோபத்தோடு சண்டை பிடிப்பான், விமலன் ஜெயந்தியிடம் அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று பொறுமையாய் சொல்வான்.

இவர்களை விட கலைச்செல்வி கேட்டால் சாமியாடிவிடுவார். “என்ன? என்ன மரியாதையில்லாம பேசற, அந்த தம்பி இல்லைனா நாம இல்லை தெரிஞ்சிக்கோ?”  

“பெரிய தும்பி, தொம்பி… நான் பணம் சம்பாரிச்சு அவரோட பணத்தை எல்லாம் நாம திருப்பிக் கொடுத்துடலாம்” என்று சொல்லிக் கொள்வாள்

ஆம்! மனதில் அந்த எண்ணம் மட்டும் ஆழமாய் பதிந்து இருந்தது. எனக்காக என்று அவன் எந்த உதவியும் செய்யத் தேவையில்லை என்பது போல.

=======================================================

சில சமயம் தோணுவது உண்டு, “அப்படி என்ன உன்னிடம் இருக்கிறது அந்த பெண் உன்னை திருமணம் செய்ய ஆசைப்பட யாருமற்ற அநாதை நீ, படிக்காதவன், இதனை எப்படி மறந்தாய்”

“எதோ ஒன்று, திருமணம் செய்து கொள்ள கேட்டால் என்று சம்மதித்து இருக்காமல், உனக்கெதற்கடா அவ்வளவு ரோஷம்” என்று தோன்றும். இந்நேரம் திருமணமாகி மனைவி குழந்தை என்று குடும்பமே உருவாகியிருக்கக் கூட கூடும்.

இன்னும் யாருமற்ற தனியனாய் சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று மனது சோர்வதும் உண்டு.   

அதற்கு பதிலாய் “நான் என்னை உயர்த்திக் கொண்டதற்கு என்ன பிறகு பிரயோஜனம்?” என்றும் மனது கேட்கும். 

Advertisement