அத்தியாயம் நான்கு:

கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.

மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும்.

ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக் எரித்தது அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படி இப்படி முடியும். அப்படி என்ன ஆவேசம். சொன்னால் சொல்லிவிட்டு போகிறான், அதற்கு அவனை பேசினால், அதையும் மீறி அடித்தால் கூட வேறு, ஒரு பொருளை எப்படி நாசம் செய்ய முடியும்.

மனதில் ஏன் இவ்வளவு ஆத்திரமும் கோபமும், எதிராளியின் புறம் அவனின் கவனம் சிறிதும் இல்லை. அவனுக்கு முக்கியம் நிலா, நிலா மட்டுமே.

அவன் சரியாய் உண்ணவில்லை என்பதனையும் கவனித்தாள், திரும்ப எதிர்வீடு செல்ல வில்லை, வீட்டிலேயே இருக்கிறான் என்பதனையும் கவனித்தாள்.

எப்படி இந்த நேரம் அவனுக்கு வேலை வைத்திருப்பார்களே எப்படி விட்டார்கள் என்ற யோசனை தான்.

அங்கே வீட்டில் கேசவ நாராயணன், ராஜ நாராயணனையும் வாசவியையும் அழைத்து அமரவைத்தார்.

அவருக்கும் அவர்களிடம் பேச வேண்டி இருந்தது. அதனால் தான் தமிழ்செல்வன் இன்று தான் வரவில்லை என்றதற்கு கூட ஒன்றும் சொல்லவில்லை.

இன்னும் நீங்க சின்ன பிள்ளைங்க கிடையாது. பேசற ஒரு ஒரு வார்த்தையும் என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும்னு உங்களுக்கு தெரியணும்.

நாங்க என்ன பண்ணினோம் எதுவும் பண்ணலையே என்றாள் வாசவி. அவள் அப்பாவின் செல்லம்.

அது தான் சொல்றேன் நீ என்ன பண்ரேன்றது உனக்கு தெரியலைன்னு சொல்றேன்.

முதல்ல தமிழ்செல்வனை மரியாதையா நடத்துங்க… அவன் உங்க அம்மாவோட தம்பியா இருக்கலாம், என்கிட்டே பல வருஷமா இருக்கலாம், அதுக்காக அவனை நீங்க அப்படி பேச முடியாது.

நான் பேசுவேன் அது வேற

நீங்க பேசக் கூடாது, ஏன்னா அவன் நிலா வோட புருஷன் அதை ஞாபகம் வெச்சிக்கோங்க

என்ன பெரிய நிலா நிலா ன்னு பூச்சாண்டி அவங்க என்ன பண்ணிடுவாங்க நம்மளை, நான் தாத்தா கிட்ட சொல்லுவேன், அவர் பார்த்துக்குவார் அவங்களை.

இது தான் நீங்க செய்யற தப்பு, தாத்தா என்ன தான் நமக்கு சப்போர்ட் பண்ணினாலும், அவ மேல கோபமா இருந்தாலும், ஓரளவுக்கு மேல அவளை அடக்க மாட்டார். அதுவும் இன்னைக்கு நீங்க சொன்ன வார்த்தையை அவர் விரும்பவே மாட்டார்

உன் தம்பி ஒரு வார்த்தையை விட்டான். இது எங்கப்பா வாங்கி குடுத்த வண்டி, நீங்க இதுல கத்துக் குடுக்காதீங்கன்னு

என்ன ஆச்சு பைக் எரிஞ்சிடுச்சு என்றார் நிதானமாக

என்ன மக்கள் இருவரும் அதிர, செந்தாமரை கவலையானார்.

தமிழ்செல்வன் மாமா வ பேசினா இப்படி பண்ணுவாங்களா என்றாள் அதிர்ச்சியாக வாசவி

ப்ச் அதுக்காக இது கிடையாது, அவளோட பிள்ளைங்களை இந்த வண்டி use பண்ணக் கூடாதுன்னு சொன்னோம், அதுக்கான பிரதிபலிப்பு இது.

என் பசங்களுக்கு இல்லைன்னா அது யாருக்கும் கிடையாதுன்ற பிரதிபலிப்பு இது.

அவங்களை எதுக்கு சும்மா விடறீங்க, அவங்களை கேட்க மாட்டீங்களா என்று ஆவேசமாக பேச

அப்படியெல்லாம் அவளை கேட்க முடியாது, பெரியவர் அனுமதியில்லாம

எங்களுக்கு மட்டுமில்லை, நீங்க தான் அவங்களுக்கு அப்பா, ஏன் கேட்க முடியாது.

ப்ச் அந்த உறவு முறிஞ்சு பலவருஷமாச்சு அதை இப்போ பேசறது முட்டாள்தனம்

அப்போ அப்போ அவங்க என்ன வேணுனாலும் பண்ணுவாங்களா

எஸ் என்ன வேணுனாலும் பண்ணுவா, இதெல்லாம் அவளுக்குரியது. பெரியவர் நம்ம மேல வெச்ச பாசத்தால நாம அனுபவிச்சிட்டு இருக்கோம். வீணா ஏதாவது செஞ்சு உள்ளதை கெடுத்துக்காதீங்க.

சொத்து இங்க விஷயம் கிடையாது. இப்போ நம்ம கிட்ட நிறைய சொத்திருக்கு, இவங்க பரம்பரை சொத்தெல்லாம் ஒன்னுமே இல்லை. ஆனா இங்க இருக்கும் போது கிடைக்கற இந்த மரியாதை வேற… உள்ள இருக்குற உனக்கு இதோட மதிப்பு தெரியாது, வெளில இருந்து பார்க்கறவங்களுக்கு தான் இதோ மதிப்பு புரியும் என்றவர் சொல்லும் போது அவரின் கண்களில் தெரிந்த பளபளப்பு…