பின்னால் இருந்து அவளை அணைத்தவன் “என்ன டார்லிங் வீட்டில யாருமில்லையா… பசங்க, வதனாலாம் எங்கே??” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அவளிடம் எந்த சலனமும் இல்லை.

 

“பார்க் போயிருக்காங்க…” என்றாள்.

 

“என்னாச்சு சுகு டல்லாயிருக்கே??” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடி மீது அமர்த்திக்கொண்டான்.

 

“ஒண்ணுமில்லை…”

 

“வதனா என்ன சொன்னா??” என்று அவள் முகம் வாட்டம் கண்டு சரியாய் கண்டுப்பிடித்து கேட்டான்.

 

“என்ன சொல்லணும்??”

 

“உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னாளே?? பேசினாளா??”

 

“ஹ்ம்ம் பேசினாங்க… பாவம் அவங்க…” என்றாள் குரலில் ஒருவித பாவத்துடன்.

 

“என்ன சொன்னா சுகு??”

 

“ஏங்க நீங்க ஆம்பிளைங்க எல்லாம் இப்படி இருக்கீங்க??” என்று பொத்தாம்பொதுவாய் ஆரம்பித்த மனைவியை புதிதாய் பார்த்தான் ராம்.

 

“அதெப்படி ஒரு பொண்ணோட உணர்வோட விளையாடுறாங்க இந்த ஆம்பிளைங்க… பெண்களோட உணர்வுகளை தூண்டிவிட்டா உடனே காலடியில விழுந்திடுவாங்களா” என்றவளின் கண்கள் குனிந்து பார்த்தது.

 

அவள் இடையை சுற்றியிருந்த அவன் கரம் இப்போது தானாய் விலகியது. மடியில் இருந்தவளை மெல்ல இறக்கி அருகில் உட்கார வைத்தான்.

 

“இன்னும் என்னாச்சுன்னு நீ சொல்லவேயில்லை…” என்றிருந்தான் இப்போது.

 

 

 

“அப்போ என் மேல உன் அக்கறை அவ்வளவு தானா…” என்றாள் உடைந்து அழும் குரலில்.

 

“இந்த கேள்வியே அர்த்தமில்லாததுன்னு உனக்கு புரியலையா… உன் மேல இருக்க அக்கறையை நான் எப்படி காட்டணும்ன்னு நினைக்கிறே??”

 

“என்னை கேள்வி கேட்கணும்??”

 

“கேட்குற கேள்விக்கு எல்லாம் நீ பதில் சொல்லிடுவியா??” என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.

 

“உன்கிட்ட நான் எதை மறைச்சிருக்கேன்??” என்றாள் பதிலுக்கு.

 

“அதை நான் கேள்வி கேட்ட பிறகு சொல்லு…”

 

“நீ கேளு…”

 

“உன் மனசுல என்ன இருக்கு??”

 

“புரியலை…”

 

“உன் மனசுல வல்லவன் பத்தி என்ன எண்ணம் இருக்கு…”

 

“முடிஞ்சு போனதை பத்தி எதுக்கு இப்போ நீ பேசறே??”

 

“முடிஞ்சு போனதா உன் வாய் மட்டும் தான் சொல்லுது… உன் மனசை கேளு அது வேற சொல்லும்… உனக்கும்அவனுக்குமான உறவுக்கு இசை தான் சாட்சி…”

 

“இன்னமும் அவனைப்பற்றி எந்தவிதமான சலனமும் உனக்கில்லைன்னு என்கிட்ட எப்பவும் சொல்ற மாதிரி சொல்லப் போறியா… உன் மனசை மறைச்சு என்ன சாதிக்கப் போறே நீ…”

 

“சாரி…”

 

‘சாரி சொல்லிட்டா எல்லாமே சரியா போய்டுமா… ரெண்டு நாளா என் மனசுப்பட்ட பாடு எனக்கு தானே தெரியும்…’ என்ற எண்ணம் ஓடியது அவளுக்கு.

 

அவள் முகத்தை படித்தவன் போல் அவள் கரம் பற்றி தன்னுள் வைத்துக்கொண்டவன் மெதுவாய் தன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் காதில் “சாரி சுகும்மா… இனிமே இப்படி நடக்காது…” என்று சொல்லி இறுக்கமான ஓர் அணைப்பை கொடுத்தான்.

 

“ச்சே!! நீங்க எதுக்கு என்கிட்டே சாரி கேட்கறீங்க… அதெல்லாம் வேணாம்…” என்றவளின்கரமும் அவனை இறுக்கியது.

மெதுவாய் அவளிடமிருந்து விலகியவன் “ஏன் சுகு, நான் முதல்ல சாதாரணமா ஒரு சாரி சொன்னேன்ல… அப்போ நீ என்ன நினைச்சே…”

 

“செய்யறதும் செஞ்சுட்டு ஒண்ணுமேயில்லைன்னு சொல்ற மாதிரி சாரி சொல்றாரேன்னு தானே நினைச்ச!!” என்றுவிட்டு அவள் முகத்தை பார்க்கவும் அதில் ஓடிய எண்ணத்தை படித்தவனுக்கு அவன் எண்ணம் சரியே என்று தோன்றியது.

 

“உண்மையை சொல்லு, நான் உன்னை கட்டிப்பிடிச்சே அதே சாரி சொன்னப்போ உன் மனசு என்ன நினைச்சது… ஒரு நிம்மதியை உணர்ந்துச்சா இல்லையா…” என்றான்.

 

ஆம் அவன் சொன்னது உண்மை தான் அவள் மனம் அப்படி தான் உணர்ந்தது அக்கணம். ஒன்றும் சொல்லாமல் அவர் பார்த்ததிலேயே அவனுக்கு புரிந்தது.

 

“அன்னைக்கு சொன்னியே உணர்வுகளை தூண்டுறோம்ன்னு… கொஞ்சம் யோசி, என்ன தான் காலம் மாறியிருந்தாலும் இன்னமும் ஒரு ஆணை ஓடி வந்து கட்டிக்கற அளவுக்கு பெண்கள் மாறியிருக்காங்களா”

 

“இருக்காங்க… இல்லைன்னு சொல்லலை… ஆனா எண்ணிக்கை குறைவு தான்… நீயோ இல்லை வதனாவோ பார்க்க மாடர்னா இருந்தாலும் உங்களுக்குள்ள அந்த பழமை இன்னும் இருக்கு”

 

“உணர்ச்சிகளை மறைக்கற வழக்கம் உங்களுக்கு உண்டு… ஆனா இப்படி எந்த கட்டுப்பாடுகளும் எங்களுக்கில்லை…”

 

“அதை நீங்களும் வெளிப்படுத்த மாட்டீங்க… நாங்களும் அதை வெளிப்படுத்த கூடாதுன்னா கணவன் மனைவி அன்னியோன்யம் எப்படி வளரும்…”

 

ராம் சொல்ல சொல்ல சுகுணாவிற்கு ஏதோ புரிவதாய்… “சில விஷயங்களை வாய் வார்த்தைகளால புரிய வைக்க முடியாது… ஒரு சின்ன அணைப்பு புரிய வைக்கும் மனநிலையை. அதில என்ன தப்பிற்கு சுகும்மா…”