Advertisement

சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.

 

“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.

 

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ நினைக்க வேண்டாம்… நிச்சயமா நான் அதைப்பத்தி பேசவே வரலை… நோ மோர் பார்மாலிட்டி டாக்…”

 

சுகுணா அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே இமைக்காது பார்த்தாள். இது வழக்கமான பெண் பார்க்கும் நிகழ்வல்ல என்று தோன்றியது அவளுக்கு.

 

“எனக்கு உன்கிட்ட ரெண்டே விஷயம் சொல்லணும்… உனக்கு வதனா, இசை பத்தி தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இசை என்னோட பொண்ணு, இனிமே நம்மோட பொண்ணா இருப்பா…”

 

“ரெண்டாவது நீ சீக்கிரம் தமிழ் பேச கத்துக்கணும்…” என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் பதிலொன்றும் சொல்லவில்லை.

 

“எனக்கு உன்னை பிடிச்சதுனால இதையெல்லாம் நான் உன்கிட்ட சொல்லலை. உனக்கு என்னை பிடிச்சதுனாலயும் என் மேல நீ வைச்ச நம்பிக்கையும் தான் உன்கிட்ட சொல்ல வைச்சுது”

 

“நீங்க உங்க விருப்பத்தையும் சொல்லலை என் விருப்பத்தையும் கேட்கலை… அப்புறம் எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க… எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு…” என்று கேட்டாள் அவள்.

 

“உங்கப்பாவை பத்தி தான் எனக்கு தெரியுமே… என்னைப்பத்தி அக்கு வேறு ஆணி வேறாய் விசாரிச்சு சொல்லியிருப்பாரே… வதனா, இசை இவங்களுக்கும் அதில அடக்கம்”

 

“நான் அவங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறேன். நான் உனக்கு சரியானவனா இல்லையான்னு ஒரு அலசு அலசி முடிச்சு இறுதியா நான் வேணாம்ன்னு சொல்லியிருப்பார்”

 

“நீமட்டும் தான் நான் வேணும்ன்னு சொல்லி இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருக்கணும். அது ஏன்னு இப்போ நான் விளக்கி சொல்லணுமா…” என்றதும் அவன் உண்மையை பிட்டு பிட்டு வைத்ததில் அவள் வாயடைத்து நின்றிருந்தாள்.

 

அவளையே ஆழப் பார்த்தவன் அவள் கண்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து “எனக்கு உன்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு உனக்கு தெரிஞ்சுக்கணும் அதானே…” என்றான்.

“இந்த நம்பிக்கை ஏன் வதனாக்கு இல்லை??” என்று அவள் மனதில் தோன்றியதை ராமிடம் கேட்டே விட்டாள்…

 

“நீயும் நானும் பிரச்சனைக்கு வெளிய இருக்கோம். நமக்கு அவளோட கவலை, வருத்தம், ஆற்றாமை எதுவும் தெரியாது…”

 

“அவ பிரச்சனைக்குள்ள இருக்கா, அவளால வேற எதுவுமே சிந்திக்க முடியாது. கொஞ்சம் யோசிச்சு பாரு அவளுக்குன்னு உறவு யாருமேயில்லை…”

 

“சின்ன வயசுல அம்மா இறந்திட்டாங்க, அவளோட பெர்த் சர்டிபிகேட்ல மட்டும் இருக்கற அப்பாப்பற்றி சுத்தமா தெரியாது… வளர்ந்தது ஒரு இல்லத்துல”

 

“அப்படி இருந்தவளுக்கு வல்லவனோட அன்பு எவ்வளவு அற்புதமான விஷயம்ன்னு யோசிச்சு பாரு. திடிர்னு ஒரு நாள் ஏதோவொரு கோபம் அவன் இவளைவிட்டு போய்ட்டான்…”

 

“அந்த நிலையில இருக்கவளுக்கு என்ன தோணும்… பசிச்சவனை பாதி சாப்பிட்டுல எழுப்பிவிட்டவன் நிலை தான் அது… அவளோட முதல் உறவு அவன் மட்டும் தான்… அவளோட மொத்த காதலும் அவன் மேல தான்…”

 

“அப்பட்டப்பட்டவன் அவளோட இல்லை… அவளோட எதிர்பார்ப்பு எல்லாமே அவன் தான்… நீ நினைக்கறியா அவ அவனை தேடலைன்னு, கோபமா பேசறான்னு…”

 

“ஒவ்வொரு நாளும் அவனை தேடுறா… அவன்வரலைங்கற ஏமாற்றம், எதிர்பார்ப்பு இதெல்லாம் தான் அவளை கோபமா காட்டுது… இந்த உணர்வை கூட வெளிப்படுத்தலைன்னா எப்படி சுகும்மா…” என்றான் நீண்ட விளக்கமாய்.

 

வாசல் கதவை யாரோ தட்டும் ஒலி கேட்க எழுந்து சென்றான். கதவை ஒரு பக்கமாய் திறக்கவீட்டு ஓனர் தான் நின்றிருந்தார் “வாங்க சார்…” என்றான்.

 

“நானில்லைப்பா இவங்க தான் உன்னை பார்க்கணும்ன்னு வந்திருக்காங்க…” என்றவர் வழிவிட பின்னால் நின்றிருந்தவர்களை பார்த்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

 

“உள்ள வரலாமாப்பா…” என்று உடைந்த குரலில் கேட்டவரை நோக்கியவன் கண்கள் “இதென்ன கேள்வி யார் வீட்டுக்கு வர்றதுக்கு நீங்க பர்மிஷன் கேட்கறீங்க, உள்ள வாங்க” என்றான் அவர்களை பார்த்து.

 

ஹவுஸ் ஓனர் அங்கேயே நின்றிருந்தார். “உனக்கு தெரிஞ்சவங்களாப்பா…”

 

“ஹ்ம்ம் ஆமாம் அங்கிள்… எனக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்றதை விட என்னை இந்த உலகத்துக்கு தெரிய வைச்சவங்க…” என்று சொல்லி நிறுத்தினான்.

 

“என்னோட அம்மாவும் அப்பாவும்…” என்று முடிக்கவும் அங்கு கனத்த அமைதி.

Advertisement