Advertisement

மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப் டேப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள்.

படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை, அவள் அந்த லேப் டேபிள் இருந்து தலை நிமிர்ந்த போது கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ஆகியிருந்தது.

இடத்தை விட்டு எழுந்தவள் தயாராகி பால் வாங்க சென்றாள். கடைக்கு நடந்து போகும் போது ஏனென்று தெரியாமல் ஒரு வெறுமை, ஒரு தவிப்பு, சரிவருமா என்ற பயம்,

பின்னே நான் வரமாட்டேன் என்று சொல்லி ஓரிரண்டு நாட்கள் கூட ஆகவில்லை வீடு சென்றிருக்கிறான். என்ன வென்று சொல்ல தெரியாமல் எதோ குறைந்தது. காலையில் சமைக்கும் போது தான் அர்த்தமில்லாத வாழ்வில் அர்த்தம் வந்தது போல உணர்ந்தது இப்போது அதுவே அர்த்தமில்லாதது போல தோன்றியது.

எல்லாம் தப்பு தப்பாக செய்திருக்க, மனதுக்கு பயமாய் இருந்தது. இப்போது அவன் எங்கு இருக்கிறான், அவனின் வீடு எப்படி இருக்கும், அவனின் பெற்றோரோடு என்னால் இருக்க முடியுமா. நான் என் அப்பா அம்மாவை விட்டு வந்து விட்டால், அவனும் வரவேண்டுமா?

ம்கூம் முடியும் என்று தோன்றவில்லை. இப்படியே தனியே இருந்துவிடலாமா. அவனை மட்டும் வா என்று எப்படி சொல்ல முடியும்? திரும்ப ஒரு வாழ்க்கை ஆரம்பித்து என்னால் இருக்க முடியாது என்று திரும்ப வந்து விடுவேனா… பயமாய் இருந்தது.

இயந்தரகதியில் பால் வாங்கித் திரும்பியவள், மனதளவில் மிகவுமே சோர்ந்து போனாள். வீட்டினுள் நுழைந்தவளுக்கு ஒரு மனஉளைச்சல் வெகுவாகத் தாக்க… ஓவென்று கத்தி அழ தோன்றியது, எல்லாம் எடுத்து உடைக்கத் தோன்றியது.

இவனை மட்டும் பிடிக்கும், இவனின் வேறு எதுவும் பிடிக்காது… இது சரி கிடையாதே.

அவனை சென்று விட சொல்ல வேண்டும் முடியாது என்னால் முடியாது…

நீதானே அவனிடம் சொன்னாய், இத்தனை ஏற்றத் தாழ்வுகளோடு நடந்த திருமணம் தோற்கக் கூடாது என்று, இப்போது அவனை போக சொல்கிறாய்

நோ முடியும் உன்னால் முடியும் சரி செய்து கொள் என்று ஒரு பக்கம் மனம் சொல்ல… இல்லை இல்லை சேர்ந்த பிறகு முடியாது என்று தோன்றினால் மீண்டும் விட்டு செல்ல நினைப்பேனா…..

மீண்டும் ஒரு முறை தோன்றியது… செத்துவிடலாமா என்று.

தலையை பிடித்து அமர்ந்து கொண்டாள்.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை… இருட்டியதும் தெரியவில்லை… கதவை தாளிடவும் இல்லை… அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கிப் போனாள்……

விஜயன் வீடு வரும் போது இரவு பத்து மணி, தேவையான உடைகள் அவனின் லேப் டாப் எல்லாம் தூக்கிக் கொண்டு வந்தான். முதல் முறை வந்தவன், அவனின் பொருட்களை வாசல் படியில் வைத்து மீண்டும் கீழிறங்கி… திரும்ப கொண்டு வந்தான்.

அவன் கதவில் பையை சாத்தி வைத்திருக்க, அவன் மீண்டும் வந்த போது பையின் பாரத்தில் கதவு லேசாய் திறந்து இருந்தது.

என்ன கதவு திறந்திருக்கிறது என்று பதறி அவன் திறக்க, எங்கும் இருட்டு, பயந்து போனவன், சவீ என்று குரல் கொடுத்துக் கொண்டே மின்விளக்கை போட, அந்த குரலுக்கு கூட விழிக்கவில்லை, ஆழ்ந்த உறக்கம்.

வேகமாக அருகில் சென்றான், உறங்குகிறாள் என்று புரிந்தது. சில நொடி தான் ஆனாலும் மனதின் பயம். ஹப்பா கைகால்கள் விழுந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு தளர்வு…

அப்படியே மடங்கி கீழே அமர்ந்தவன் அவளின் கன்னத்தை ஆதூரமாய் தொட, விழுக்கென்று எழுந்தமர்ந்தாள். பின்பு விஜயனைப் பார்த்ததும் தளர்ந்து பின்னால் அப்படியே சாய….

கதவை கூட தாள் போடலை, கதவு தானா தொறக்குது, ஒரே இருட்டு பயந்துட்டேன் என்றான்

சோபையாய் ஒரு புன்னகை…

விஜயன் விடாது அவளின் முகத்தைப் பார்க்க…

இன்னும் உதடுகளை இழுத்துப் பிடித்தாள் சிரிப்பதை போன்று.. ஆனால் முடியவில்லை… கண்களில் வேகமாய் நீர் நிறைந்தது.

வேகமாய் எழுந்து அவளின் அருகில் அமர்ந்தவன், என்னாச்சு என்றான் பதறி.

கண்களில் இருந்து நீர் வேகமாய் இறங்கி அவளின் உதடுகளை தொட.. பேசுவதற்கு வாய் திறந்தால், அந்த உப்பின் சுவை தெரிந்தது.

என்னடா என்றான் மீண்டும் பயந்து

நீ போயிடறையா என்றாள்

ஏன் என்னாச்சு எதுக்கு என

எனக்கு திரும்ப உன்னோட இருக்க பிடிக்காமப் போயிட்டா, இன்னும் ரொம்ப கெட்ட பொண்ணாகிடுவேன். அதுக்கு இப்போவே போயிடு, என்று பலகீனமாய் சொல்ல…

Advertisement