Advertisement

தூரிகை 6 :

 

கீர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் நடப்பது என்னவென்று புரியவில்லை.தேவா மயங்கி விழுந்திருப்பதைக் கண்கள் கண்டாலும், உடனே அவளால் எதுவும் செய்ய இயலவில்லை.ஒரு நிமிடம் மூளை அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரமை பிடித்தது போல் இருந்தது.

அவள் சுயத்திற்கு வர சில மணித்துளிகள் ஆகியது.வேகமாய் தேவாவின் அருகில் குனிந்தவள்…” “ஏங்க…?” என்று அவனை பட்டும் படாமல் தட்ட…,அவனிடம் எந்த அசைவும் இல்லை.

“ஏங்…தேவா….தேவா….” என்று அவனைத் தட்ட….அவன் அசைமால் இருப்பதைப் பார்த்தவளுக்கு பதட்டமாகியது.வேகமாய் திரும்பிப் பார்த்தவள்….அங்கிருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவனின் முகத்தில் தெளித்தாள்.

அவனின் தலையை மடியில் தாங்கியவள்…”தேவா…! இங்க பாருங்க… எழுந்திருங்க…!” என்று அவனின் முகத்தைத் தட்ட….மெல்ல கண் விழித்தான் தேவா.

விழித்தவனின் முகத்திற்கு அருகில் கீர்த்தானாவின் முகம் தெரிய… அந்த முகத்தில் இருந்த தவிப்பும்,ஒரு அப்பாவித்தனமும் தேவாவை ஈர்த்தது.

அலைபாய்ந்த அவளது விழிகள் அவளின் அழகைக் கூட்டிக் காட்ட…அதில் தன்னைத் தொலைத்தவன்..அவளின் முகத்தை தன் இரு கரங்களால் பற்றினான்.

முத்தமிட அவளின் முகத்திற்கு அருகில் செல்ல…” “என்ன பண்றிங்க….? விடுங்க முதல்ல….”“ என்று அவனை வேகமாய் உதறினாள் கீர்த்தனா.

அந்த உதறலில் தன்னிலை அடைந்தான் தேவா.

”ச்ச்ச….கொஞ்ச நேரத்துல எனக்கு என்ன ஆகிவிட்டது…” என்று தலையைக் கோதியவன் திரும்பி தரையில்….தன் கையைத் தானே ஓங்கி அடித்துக் கொண்டான்.

வேகமாய் எழுந்தவன்….கீர்த்தனாவை திரும்பியும் பாராது மொட்டை மாடியை நோக்கி சென்றான்.

“என்ன கீர்த்தனா…? நீயா இப்படி…? எதுக்காக இப்படி முகத்தில் அடித்த மாதிரி நீ பேசணும்….?உன்னைப் பத்தி அவனுக்கு என்ன தெரியும்…? உன்னிடம் அப்படி நடந்து கொள்ள அவனுக்கு முழு உரிமையும் உண்டு.அப்படி இருக்கும் போது நீ அவனை இப்படி பேசுவது சரியில்லை…” என்று அவளின் மனசாட்சி அவளுக்கு அறிவுரை வழங்க….

துவண்டு அமர்ந்தாள் கீர்த்தனா.நிழலாய் நினைவுகள் அவள் மனதை அறுக்க…கொடியாய் துவண்டிருந்தாள்.

மேலே சென்ற தேவா….அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தான்.” எதுக்காக எனக்கு மயக்கம் வரணும்….நான் ஏன் அப்படி கீர்த்தனாவிடம் நடந்து கொள்ளனும்…? அவள் என் அருகில் இருக்கும் போது என்னையே நான் மறந்துடுறேன்….?”என்று ஒவ்வொரு விஷயமாய் யோசிக்க யோசிக்க அவனுக்கு மீண்டும் தலையை வலிப்பது போல் இருந்தது.

யோசனையுடன் அமைதியாய் அங்கிருந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டின் அருகில் நின்றிருந்த ஒருவன்….தங்கள் வீட்டையே நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை…. அப்பொழுது தான் கவனித்தான்.

தேவா தன்னைப் பார்த்ததைக் கண்டு கொண்ட அவன்….வேகமாய் அந்த இடத்தை விட்டு செல்ல எண்ணி…தேவாவை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

அவனின் அந்த ஒரு பார்வை தேவாவின் உயிர் வரை ஊடுருவியது. எங்கோ சில நியாபகங்கள்…நிழலாய் சில உருவங்கள் அவன் மனதில் தோன்ற…அவனுக்கு மேலும் குழப்பமே கூடியது.

மேலே சென்றவன் வெகு நேரம் வராமல் இருக்க….”ஒருவேளை மறுபடியும் மயக்கம் போட்டுட்டானோ….?” என்று எண்ணிய கீர்த்தனா…வேகமாய் செல்ல….அங்கு ஒரே இடத்தை வெறித்த படி அமர்ந்திருந்தான் தேவா.

உணர்ச்சிகளை அவனது முகம் தொலைத்திருந்தது.கண்கள் வெற்றிடத்தை நோக்கி இருக்க…..முகம் பாறையாய் இறுகியிருந்தது.கண்கள் சிவந்து கொவ்வைப் பழமாய் இருக்க…

அந்த நிலையில் அவனைப் பார்த்த கீர்த்தனாவிற்கு மனதிற்குள் குளிர் பிறந்தது.அவன் அருகில் செல்லவே அவளுக்கு பயமாய் இருக்க….அப்படியே நின்றாள்.

“என்னாச்சு இவனுக்கு….? உண்மைக்குமே இவன் பைத்தியம் தான் போல…!அதுக்கான எல்லா அறிகுறியும் தெரியுது…” என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தாள்.

மெதுவாய் திரும்பி கீர்த்தனாவைப் பார்த்தான் தேவா.ஒரு நிமிடம் அவளையே பார்த்தான்…பிறகு மூச்சை இழுத்து விட்டவன்…அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்பதைக் கண்டு கொள்ளாதவனாய் விருட்டென்று சென்றான்.

திக் பிரமை பிடித்தவள் போல் இருந்தாள் கீர்த்தனா.அவனது நடையில் காணப்பட்ட வித்யாசம் அவளை ஆச்சர்யப்பட வைத்தது.துள்ளலாய் நடந்தவனின் கால்கள் கம்பீரமாய் நடந்தது.

“அவன் எப்பவுமே அப்படித்தான் நடக்குறான்.உனக்கு தான் புதுசா தெரியுதா கீர்த்தனா….?” என்று அவளாகவே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

ஹாலில் பத்மாவும்,கார்த்திகாவும் அமர்ந்திருக்க…,வேகமாய் படியிறங்கினான் தேவா.கார் சாவியை கையில் சுழட்டிக் கொண்டே செல்ல…அதைப் பார்த்த இருவரும் அதிர்ந்தனர்.

“என்ன தேவா…? எங்க கிளம்பிட்ட…?” என்றார் பத்மா.

“வெளிய கொஞ்சம் வேலை இருக்கும்மா…” என்றான்.

 “இப்ப எதுக்கு தேவா….!” என்று கார்த்திகா ஆரம்பிக்க,அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தான்.

“அம்மா வேலையிருக்கு…!” என்று மறுபடியும் ஒரு அழுத்து அழுத்தி சொல்ல…பத்மாவின் தலை தானாக ஆடியது.

இதை எல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

“இதென்ன மர்மம் அடங்கிய வீடு மாதிரி இருக்கு…!ஆளாளாக்கு ஒவ்வொரு தினுசா இருக்காங்க…!” என்று நினைத்துக் கொண்டாள்.

அவளின் கையில் இருந்த செல்போன் ஒலி எழுப்ப….திரையில் நம்பரைப் பார்த்தவள்….”சொல்லுங்க மாமா…!” என்றபடி காதில் வைத்தாள்.

“என்னத்தை சொல்ல…? ஒன்னும் சொல்லும் படியா இல்லை…” என்றான் ரவி.

“மாமா….” என்றாள் கீர்த்தனா.

“ஆமா கீர்த்தனா…! நானும் நல்லா யோசிச்சுப் பார்த்தேன்.இது நடக்குறதுக்கு இல்லை.நல்லதோ கெட்டதோ இப்ப உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இனி இதைப் பத்தி பேசுறது கூட சரியா இருக்காது. உன்னோட புருஷனுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது.உன்னாலும் முடியாதுன்னு எனக்கு தெரியும்.இனியாவது கிடைத்த வாழ்க்கையோட பொருந்திப் போக பார்….”“ என்றபடி வைத்து விட்டான்.

“நடக்குறதுக்கு இல்லை…” “ என்று ரவி சொன்ன வார்த்தைகள் கீர்த்தனாவின் காதில் ரணமாய் பாய….அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

ரவி மாமா என்னை கை விட்டுட்டாரா….? எப்படி…?எப்படி முடிந்தது அவரால்…!” என்று மனம் கதற…விழிநீர் வழிந்தோடியது அவளின் கன்னத்தில்.

“இந்த வாழ்க்கையில் என்னால் எப்படி பொருந்தி போக முடியும்….? இல்லை முடியாது….முடியவே முடியாது…” என்று கதற….அவளின் கதறல் எட்ட வேண்டிய செவிகளுக்கு எட்டாமல் போனது தான் அதோ பரிதாபம்.

தேவாவின் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.முகம் கல்லாய் இருக்க…மனம் ரணமாய் இருந்தது அவனுக்கு.

எல்லாரும் சேர்ந்து அவனுக்கு பெரிய தீங்கை செய்து விட்டதாய் நினைத்தான்.அவனின் கோபம் கார் செல்லும் வேகத்தில் தெரிந்தது.

நேராய் அலுவலகத்தின் முன்பு சென்று காரை நிறுத்தியவன்….புயலாய் உள்ளே நுழைந்தான்.”வணக்கம் சார்….” என்ற பல குரல்களுக்கு தலையசைத்தபடி விறுவிறுவென்று நடந்து கொண்டிருந்தான்.

அனைவரின் கண்களில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்றாய் தெரிந்தது.அது அவனை கண்டதால் வந்த சந்தோசம் தான் என்று அனைவரின் முகமுமே சொல்லியது.

கேபின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாறன் நிமிர்ந்தார்.” “தேவா…”“ என்று அதிர்ந்தார்.

அந்த நேரத்தில் அவனை அவர் நிச்சயமாய் எதிர் பார்க்கவில்லை.திகைத்து நிற்க….அவரை கோபமாய்ப் பார்த்தான் தேவா.

தேவாவை அனைவரும் ஆவலாய் கண்ணாடி கதவு வழியாக பார்த்துக் கொண்டிருக்க….உள்ளே..தேவாவும்,மாறனும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் கோபமான தேவா….கேபினை விட்டு வெளியேறி…கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றான்.

என்ன செய்வதென்று தெரியாமல் மாறன் சலிப்பாய் அமர்ந்தார்.”கடவுளே…! எதுக்காக  என்னை மட்டும் இப்படி சோதிக்கிறிங்க…?” என்று நொந்து கொண்டார்.

அலுவலகத்தில் இருந்த மற்றவர்கள்…நமக்கென்ன என்ற ரீதியில் தங்கள் வேலையைப் பார்க்க……தேவா அங்கு வந்ததையும்….நடந்த வாக்குவாதத்தையும்…கோபமாய் போனதையும் இரண்டு கண்கள் விடாமல் கண்காணித்தது

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்……

கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.இளம் நீல வண்ணப் புடவையும்….அதற்கேற்ற அணிகலன்களும் அணிந்தவளாய் ….வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

ஒரு வார காலத்தில் பெரிதான மாற்றம் எதுவும் அங்கு நிகழவில்லை.அந்த வீட்டில் தன்னை முடிந்த அளவு பொருத்திக் கொள்ள அவளை  ஆயத்தப்படுத்திக் கொண்டாள் கீர்த்தனா.

“என்னுடன் கண்டிப்பாய் பெங்களூரு வரவேண்டும்…!” என்று சொன்ன தேவாவும் அதன் பிறகு அந்த பேச்சை எடுத்ததாகத் தெரியவில்லை.

தன்னுடைய அறைக்குள் சென்றவன் அதிகம் வெளியில் வராமல் அறைக்குள் முடங்கியிருந்தான்.

பத்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்க்க்க….தேவா யாரையும் சட்டை செய்யவில்லை. கீர்த்தனாவையும் ஒரு பொருட்டாய் அவன் எண்ணவில்லை.

“இவன் ஏன் இப்படி அறைக்குள்ளேயே இருக்கான்.ஒருவேளை படையப்பா படத்துல, பதினெட்டு வருஷம் நீலாம்பரி அறைக்குள் இருந்த மாதிரி இருக்க போறானோ….?” என்று எண்ணியவள்…

“ச்ச்ச இருக்காது.இருந்தாலும் என்னவோ இருக்கு…”என்று கண்ணாடி முன்பு நின்று பேசிக் கொண்டிருக்க….திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தவள்…” ஐயோ..! லேட் ஆகிட்டது….” என்று புலம்பிக் கொண்டே….பேக்கை  எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அவள் வருவதைப் பார்த்த பத்மா….” “வாமா கீர்த்தனா….இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடா…என் கண்ணே பட்டுடும் போல இருக்கு….” “ என்று கைகளால் திருஷ்டி கழித்தார்..

“அத்தை நான் கிளம்பறேன்…காலேஜ்க்கு டைம் ஆகிட்டது….” “என்று சொல்ல,அங்கு வந்தாள் கார்த்திகா.

“நீ என்னமோ வேலைக்கு போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை கீர்த்தனா..!””“ என்றாள் கார்த்திகா.

“ஏன் அண்ணி…?” என்றாள் கீர்த்தனா.

“ஏன்னா என்ன அர்த்தம்…?கல்யாணத்துக்கு அப்பறம் எங்க பொண்ணு வேலைக்கு போக மாட்டான்னு சொல்லி தான் உங்க அப்பா,அம்மா இந்த கல்யாணத்தை நடத்துனாங்க…!” என்று கடுப்புடன் சொல்ல…

“சும்மா இரு கார்த்திகா…!” என்று அதட்டினார் பத்மா.

“நீங்க சும்மா இருங்கம்மா…! நானும் பார்த்துட்டே இருக்கேன்.இவ இஷ்டத்துக்கு இருக்கனும்ன்னு நினைக்கிறா.நம்மகிட்ட இவ்ளோ சொத்து இருக்கும் போது வெளியில் போய் வேலை பார்த்தா…அது நம்ம குடும்பத்துக்குத் தான அசிங்கம்…” “ என்றாள் கோபமாய்.

கீர்த்தனாவின் கண்கள் கலங்க…தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.”நான் ஒரு லெக்சரர்.இது நானா விரும்பி போன வேலை.இதை யாருக்காகவும் என்னால் விட முடியாது….” என்றவள்,

“நான் வரேன் அத்தை….” என்றபடி விரூட்டென்று சென்று விட்டாள்.

பத்மா…”” “கார்த்திகா எத்தனை முறை சொல்லியிருக்கேன்..இப்படி யாரையும் பட்டு பட்டுன்னு பேசாதன்னு…”அவ நம்ம காலேஜ்ல தான் வேலை பார்க்குறா…அதனால் யாரும் எதுவும் நினைக்க மாட்டங்க..!“ என்றார்.

“அம்மா பிளீஸ்…நான் இப்படித்தான்.யாருக்காகவும் என்னை நான் மாத்திக்க முடியாது…” “ என்றாள்.

“ம்ம்ம்…இது போல தான கீர்த்தனாவும் யோசிப்பா…? மத்தவங்களுக்காக உன்னை நீ மாத்திக்காத போது…கீர்த்தனா மட்டும் மாறணும்ன்னு நீ எப்படி எதிர்பார்க்க முடியும்…?” என்றார் பத்மா.

“அம்மா…!” “ என்று கார்த்திகா அதிர..

“உனக்கே தெரியும்…தேவா எப்படி நடந்துக்கிறான்னு.ஆனா கீர்த்தனா அதையெல்லாம் பெரிசுபடுத்தாம இருக்கா.உன்னால முடிஞ்சா அவளை கஷ்ட்டப்படுத்தாம இரு..“ என்றபடி சென்று விட்டார் பத்மா.       

லேட் ஆகிவிட்டதால் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாள் கீர்த்தனா.அவள் மனம் முழுதும் வீட்டில் நடந்ததையே அசை போட்டுக் கொண்டிருந்தது.

என்னை எதுக்காக வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லணும்.நமக்கு இருக்குற சொத்துக்குன்னா…என்ன அர்த்தம்.இவன் என்ன அவ்வளவு பணக்காரனா…?” என்று என்ன…

“விளங்கிடும்..! ஒண்ணுமே தெரியாமத்தான் அவனைக் கல்யாணம் பண்ணுனியா….?” என்று மனசாட்சி விசில் அடித்தது.

“அம்மாவும்,அப்பாவும் இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே…?” என்று குறைபட்டுக் கொண்டாள் கீர்த்தனா.

காலேஜ் நெருங்க நெருங்க….மற்ற கவலைகள் எல்லாம் மறந்து…அன்று எடுக்க போகும் பாடங்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.

சிட்டியின் நடுவில் இருந்த அந்த புகழ் பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் இறங்கினாள் கீர்த்தனா.

அடர்ந்த மரங்கள் அவளை வரவேற்க….அவளைப் பார்த்த சில மாணவிகள்..” “ஹேய் கீர்த்தி மேம் வந்துட்டாங்கடி….”! என்றபடி அவள் அருகில் வந்தனர் அனைவரும்.

“என்ன மேம் இப்படி பண்ணிட்டிங்க…? உங்களுக்கு கல்யாணம்ன்னு எங்ககிட்ட சொல்லவே இல்லை…” என்று அனைவரும் குறைபட…

“சாரி கேர்ள்ஸ்,…!கொஞ்சம் சீக்கிரம் முடிவு பண்ணி உடனே நடத்திட்டாங்க.செமஸ்ட்டர் ஹாலிடேஸ் வேற…அதான் உங்க யாருக்கும் சொல்ல முடியாம போயிட்டது…” என்று வருந்தினாள் கீர்த்தனா.

“பரவாயில்லை மேம்….ஆனா நாங்க எல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு பார்ட்டி அரேஞ் பண்ணியிருக்கோம்…எப்பன்னு சொல்லும் போது….உங்க ஹபியோட வரணும்…” என்று எல்லாரும் கோரசாய் சொல்ல…அதை மறுக்க முடியாமல் சரி என்று தலையாட்டினாள் கீர்த்தனா.

அனைவரும் கலைந்து செல்ல….” “பார்ட்டி…ஹபி…ம்ம்ம் இதெல்லாம் நடக்கற காரியமா….? அவனை நான் பார்த்தே ஒரு வாரம் ஆகிவிட்டது.இதுல பார்ட்டிக்கு எங்க இருந்து கூட்டிட்டு வரது…கீர்த்தனா உன் பாடு திண்டாட்டம் தான்…” என்று தனக்குத் தானே புலம்பியவள் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.

உள்ளே நுழைந்தவுடன் அவளை அனைவரும் வரவேற்க…அடுத்த தாக்குதலுக்கு தயாரானாள்.

“என்ன கீர்த்தனா மேம்…சொல்லவேயில்லை,…”

“கீர்த்தனா மேம்…உங்க மேரேஜ்க்கு சொன்னா…செலவு நிறைய ஆகிடும்ன்னு தான எங்களுக்கு சொல்லலை…”

“இருந்தாலும் உங்கமேல கோபம் மேம்…ஒரு வார்த்தை சொல்லலை…”

“பையன் யாரு..,?என்ன பண்றார்…?எங்க இருக்கார்…?”

“குடும்பம் எப்படி….?”

“கூடப்பிறந்தவங்க எத்தனை பேர்…?”

“ஹனிமூன் போய்ட்டு வந்துட்டிங்களா….?இல்ல இனிதானா….?”

“ஹனிமூனுக்கு எந்த ஊருக்கு போனிங்க….?”

“மாமியார் எப்படி….நல்லபடியா நடந்துக்கறாங்களா…?”

இப்படி அனைத்து விதமான….,அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்து அமரும் முன் கீர்த்தனாவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது

“இப்பவே கண்ணைக் கட்டுதே….!ஒரு வழியா பாதிக் கிணறு தாண்டியாச்சு…!” என்று பெரு மூச்சு விட்டாள்.

அதற்கு மேல் அன்றைக்கு நேரம் சென்றதே தெரியவில்லை அவளுக்கு. கிடப்பில் இருந்த வேலைகள் நெட்டி முறிக்க….பாடம் எடுக்க,குறிப்பெடுக்க என்று நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது.

“கீர்த்தனா மேம்…நாளைக்கு காலையில் எல்லாருக்கும் மீட்டிங் இருக்கு.மறந்துடாதிங்க…!” என்று சக ஆசிரியர் நியாபகப் படுத்த…உதட்டில் பூத்த புன்முறுவலுடன் கிளம்பினாள்.

பஸ்ஸில் கூட்டம் அதிகமாய் இருக்க….ஒரு வழியாக ஏறியவள்…வீடு வந்து சேரும் முன் மிகவும் களைத்திருந்தாள்.

பஸ் ஸ்டாப்பில் இறங்கியவளுக்கு வீட்டிற்கு எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.

“ஐயோ கீர்த்தனா….!பெரிய இவளாட்டம் கிளம்பி வந்த….!இப்ப எந்த பக்கம் போகணும்…? காலையில் வீட்டுப் பக்கத்துலையே ஆட்டோ பிடித்தால் பிரச்சனை இல்லை….இப்போ…?” என்று யோசித்தவள்…

“சரி அத்தைகிட்ட கால் பண்ணிக் கேட்கலாம்…” “ என்று எண்ணி செல்லை எடுக்க….அவளருகில் வந்து நின்றது அந்த கார்.

ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினாள் கீர்த்தனா.

திரும்பியவளுக்கு அதிர்ச்சி.அவளால் நம்ப முடியவில்லை.கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு பார்க்க….காரில் அமர்ந்திருந்தான் தேவா.

கீர்த்தனாவை ஒரு பார்வை பார்த்தவன்….முன் பக்க கதவை திறந்து விட்டான்.”வந்து ஏறு….” என்ற ரீதியில் அவனின் பார்வை இருந்தது.

அந்த நொடியில் அவனின் பிம்பம் கீர்த்தனாவின் மனதில் அவள் அனுமதியின்றி பதிந்தது.

“இவன் எப்ப ரூமை விட்டு வந்தான்….” என்று யோசித்த படியே ஏறி அமர்ந்தவள்….டோரை சாத்த…..அதுவோ…சாத்துவேனா என்று அடம் பிடித்தது.

ஒரு நிமிடம் பொறுத்துப் பார்த்தவன்….கையை நீட்டி தானே டோரை சாத்தினான்.

அவனின் கை லேசாக கீர்த்தனாவின் மீது பட…அந்த ஸ்பரிசத்தில் அவளுக்கு கோபம் வரவில்லை.இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு மனதில் தோன்ற…..தன் பார்வையை தளர்த்திக் கொண்டாள்.

தேவாவோ அதையெல்லாம் கண்டு கொண்டவனாகத் தெரியவில்லை.கார் வீட்டை நோக்கி செல்ல….தேவாவின் நினைவுகள்…எங்கோ சென்று கொண்டிருந்தது.   

Advertisement