Advertisement

தூரிகை 4 :

தேவா கண் விழித்த போது….ஒன்றும் புரியவில்லை….சுற்றி இருள் சூழ்ந்திருந்தது.”என்னாச்சு….? ஒரே இருட்டா இருக்கு…!” என்று யோசித்தபடி நேரத்தைப் பார்க்க…அது இரவு 11 மணியைக் காட்டிக் கொண்டிருந்தது.

“அடக்கடவுளே…?” என்று தலையில் கை வைத்தவன்….”எவ்வளவு நேரமா தூங்கியிருக்கேன்…ஐயோ…! இங்க எல்லாரும் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க…?” என்று தனது மடத்தனத்தை எண்ணி தானே நொந்து கொள்ள…

பசி வேறு அவனைப் பாடாய் படுத்தியது.முதல் நாளிலிருந்து சரியாக தூக்கம் இல்லாததால்….அவன் சரியாக சாப்பிடவும் இல்லை.இப்பொழுது தான் பசி அதிகமாய்  தெரிய…. என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.

மெதுவாய் எழுந்து பார்க்க….கட்டிலின் அருகில் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

இரவு விளக்கில்….. கலைந்த தலைமுடி ஒரு புறம் பறக்க….புது மணப்பெண்ணிற்கே உரிய வாசமும்…தலை நிறைய சூடிய மல்லிகையும்…கை நிறைய  வளையல்களும்….மொத்தத்தில் அவளின் வரி வடிவம்…ஒரு தேவதையைப் போல் காட்சியளிக்க….அவளை விட்டு பார்வையை விலக்க முடியாமல் அமர்ந்திருந்தான் தேவா.

இவள் நான் நினைத்த மாதிரி இல்லை….நல்லா அழகா இருக்கா….நல்ல வேலையில் இருக்கா….ம்ம்ம் பரவாயில்லை.என்ன இந்த திமிர் மட்டும் கொஞ்சம் குறைஞ்சா நல்லா இருக்கும்…”” என்று தன்  போக்கில் யோசித்துக் கொண்டிருந்தான்.

இப்ப பசிக்குதே….என்ன பண்றது…? ம்ம்ம் இதுக்கு மேல என்ன பண்றது…?தண்ணிய குடிச்சுட்டு தூங்க வேண்டியது தான்…!”” என்று நினைத்து எழுந்தான் தேவா.

பழக்கமில்லாத இடம் என்பதால்….எப்படி செல்ல வேண்டும் என்று தெரியாமல்….தட்டுத் தடுமாறி நடக்க….அந்த சத்தத்தில் கண் முழித்தாள் கீர்த்தனா.

வேகமாய் எழுந்து அவள் லைட்டைப் போட…அப்படியே நின்றான் தேவா.”என்னாச்சு….? என்ன வேணும்…?” என்றாள் தூக்கக் கலக்கத்தில்.

“அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை…!”” என்றவன் வீராப்பாய் நடக்க….பசி அவனைப் பாடாய் படுத்தியது.அந்த வீட்டில் சமையலறை எங்கிருக்கிறது என்றும் தெரியவில்லை.

“என்னடா தேவா இது….உனக்கு வந்த சத்ய சோதனையா இது…?”” என்று புலம்பியவன் மீண்டும் அறைக்குள் வந்தான்.

இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைத்தாள் கீர்த்தனா.அமைதியாய் சென்றவள் கதவை பட்டென்று அடைத்தாள்.அறைக்குள் அவனுக்காக ஹாட் பாக்ஸில் எடுத்த வைத்திருந்த உணவை எடுத்து வைக்க….அதைக் கண்டவனது முகம் கனிந்தது.

பரவாயில்லையே….! புருஷனுக்கு சாப்பாடு எல்லாம் கரெக்ட்டா எடுத்து வச்சிருக்கியே…!” என்று மெச்சுதலுடன் சொல்ல…

மண்ணாங்கட்டி….! இதெல்லாம் எங்கம்மா கொண்டு வந்து வச்சாங்க….! மத்தபடி நீங்க சாப்பிட்டா  என்ன…? சாப்படலைன்னா எனக்கென்ன…?” என்றாள் எரிச்சலாய்.

ஆனால் அவன் அதை எல்லாம் காதில் வாங்காதவன் போல சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

வேகமாய் சாப்பிட்டு முடித்தவன்…”,ஒரு வழியா வயித்துக்கு வஞ்சனை வைக்காம சாப்பிட்டாச்சு….தேங்க்ஸ் அத்தை…” என்று தனக்குத் தானே சொன்னவன்…திரும்பிப் பார்க்க….கீர்த்தனாவோ மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தாள்.

தேவா….!உனக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட்…!”  என்று மனசாட்சி அரைக் கூவல் விடுக்க…”இன்னைக்கு போய் இங்க வந்து இப்படி தூங்கிட்டேனே…! அத்தையும்,மாமாவும் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க….?” என்று நினைத்தவன்…வேகமாய் கீர்த்தனாவை எழுப்பினான்.

“இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்…?”” என்று தூக்கத்தில் எழுந்து கீர்த்தனா கத்த….

“ஹேய் இப்ப எதுக்கு இந்த கத்து கத்துற….? அது வந்து….நான் இப்படி தூங்குனதுக்கு…அத்தை மாமா என்னைப் பத்தி ஏதாவது சொன்னாங்களா….?” என்றான் பாவமாய்.

அவனைப் பார்க்க அவளுக்கு ஒரு புறம் எரிச்சலாக இருந்தாலும்..ஒரு புறம் அவனை சீண்ட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.

“ஆமா…! அம்மா தான் ரொம்ப கவலைப் பட்டாங்க…மாப்பிள்ளை என்ன இன்னைக்கு போய் இப்படி தூங்குறாரு….?” அப்படின்னு அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க….”என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.

தலையில் முடிக்குள் கைவிட்டுக்  கோதியவன்…””ச்ச….போச்சு….என் மானமே போய்டுச்சு….டேய் தேவா…இன்னைக்கு போய் இப்படியா தூங்குவ….?”” என்று நொந்தவன்….

கீரத்த….னா..” என்று பார்க்க….அவள் மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தாள். ”விளங்கிடும்…..” இவ என்ன பொசுக்கு பொசுக்குன்னு தூங்கிடுறா….என்று எண்ணியவன்…மீண்டும் கண்கள் சொருக…படுக்கையில் விழுந்தான்.

தேவா தூங்கிவிட்டான் என்பதை உறுதி செய்த கீர்த்தனா…எழுந்து அமர்ந்தாள். அவளுக்கு அவனைப் பார்க்க ஒரு புறம் பாவமாகவும்….ஒரு புறம் எரிச்சலாகவும் இருந்தது.

“சாரி என்னை மன்னிச்சுடுங்க….நான் செஞ்சது தப்புத்தான்…ஆனா எனக்கு வேற வழி தெரியலை….!” என்று மனதிற்குள் சொன்னவள்…நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

“ஒருமணி நேரத்தில் தூங்கி எழுந்தவனுக்கு….கலையரசி காபி கலந்து கொடுக்க….அதில் ஒரு தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்தாள் கீர்த்தனா”.

இவனை சாமாளிக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான்.விடியற வரைக்கும் எழுந்திரிக்க மாட்டான்னு பார்த்த….இப்பவே எழுந்துட்டான்…நல்லவேளை…” என்று பெருமூச்சு விட்டவள்….”ரவி மாமாகிட்ட எப்படியாவது பேசியே ஆகணும்…” என்று முடிவெடுத்தாள்.

காலைப்  பொழுது எப்பொழுதும் போல் யாருக்கும் காத்திராமல் விடிந்தது…. தேவாவிற்கு நல்ல விதமாகவும்…கீர்த்தனாவிற்கு கொஞ்சம் மாறுதலாகவும் அமைந்தது.

சூரிய வெளிச்சம் அறைகளில் பரவ…அந்த வெளிச்சத்தில் கண் விழித்தாள் கீர்த்தனா.திரும்பிப் பார்க்க…தேவா அப்படியே படுத்திருந்தான்.அவசர அவசரமாக எழுந்து அவள் வெளியே செல்ல முற்பட….அவளின் கையைப் பிடித்து இழுத்தான் தேவா.

அவன் இழுத்த வேகத்தில்….அவன் மேல் விழ….”என்ன பண்றிங்க விடுங்க…!” என்றாள் கீர்த்தனா.

தன்னுடைய முகத்திற்கு நெருக்கமாக அவளது முகத்தைப் பார்த்தவனின் மனம் எகிறிக் குதிக்க….தன்னை அடக்கிக் கொண்டவன்….””நேத்து எனக்கு குடுத்த காபியில் என்னத்தைக் கலந்த….?” என்றான் கூர்மையான பார்வையுடன்.

அவனின் கேள்வியில் தடுமாறியவள்…””காபியில்…நான்…நான் என்ன கலந்தேன்….!”” என்றாள் குழறலாய்.

“சும்மா பொய் சொல்லாத கீர்த்தி….நான் ஒரு முறை தூங்கி எழுந்த பிறகு எனக்கு தூங்குற பழக்கம் கிடையாது.ஆனா நான் எழுந்த உடனே நீ எனக்கு காபி குடுத்த…? மறுபடியும் நான் எழுந்து பார்த்தா…மணி பதினொன்று.நான் சாப்பிட்டு தூங்குற வரைக்கும் நீ  தூங்குற மாதிரி நடிச்ச….பிறகு எதுக்காக எழுந்து என்னையவே பார்த்துட்டு இருந்த….?”” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

“இதெல்லாம் இவன் கவனித்திருக்கிறானா….?” என்று மனதில் எண்ணியவள்…”நான் எங்க கலந்தேன்….? இல்லை நான் ஒன்னும் கலக்கலை…”” என்றாள் தடுமாற்றமாய்.

“பொய் சொல்லாத கீர்த்தனா…! எனக்கு நல்லா தெரியும்…நான் அப்படித் தூங்குறவன்  கிடையாது….அது மட்டுமில்லாம….உன்னோட நடவடிக்கை ஒண்ணுமே சரியில்லை….”” என்று கடுப்புடன் சொல்ல…

“இல்ல…சாரி…வந்து…” என்று அவள் தடுமாற…அவளின் முகத்தைத் திருப்பியவன்….”நீ எதுக்காக இப்படி பண்ற….என்னைப் பார்த்தா உனக்கு அரக்கன் மாதிரி தெரியுதா…? நீ எதுக்காக இப்படிப் பண்ணேன்னு புரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை.கவலைப் படாத…! என்னை மீறி…உனக்கு என்னால் எந்த தொந்தரவும் வராது.இந்த விஷயத்தில் நிச்சயமா என்னை நீ நம்பலாம்…”” என்றான் தேவா.

கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் ததும்ப….””தேங்க்ஸ்….”” என்ற வார்த்தையை உதிர்த்தவள்….வேகமாய்  அந்த அறையை விட்டு சென்று விட்டாள்.

“இவளுக்கு என்ன பிரச்சனை…எதுக்காக இப்படி இருக்கா….? நான் தப்பு செய்துட்டேனா…? இவளுக்கு உண்மையில் இந்த திருமணத்தில் விருப்பமில்லையா…? அந்த ரவிக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்….?” என்று மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருந்தான் தேவா.

அறையை விட்டு வெளியே சென்றவளுக்கு…..ஒரே குழப்பம் .”இவன் பைத்தியம்ன்னு யாரோ போன் பண்றாங்க….! ஆனா இவன்  என்னடான்னா…. சின்ன சின்ன விஷயத்தையும் இவ்வளவு ஆழமா….பார்க்குறான்.ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து செய்றான்…இதில் எது உண்மை…?” என்று அவளும் மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்தாள்.

“அத்தை கீர்த்தி எங்க…?” என்றான் தேவா.

“மாப்பிள்ளை நீங்க தப்பா எடுத்துக்க கூடாது….நான் வேண்டாம்ன்னு தான் சொன்னேன்.ஆனா என் பேச்சைக் கேட்காம அவ அருவிக்கு போய்ட்டா…அவ அங்க குளி…”” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்…

“பரவாயில்லை அத்தை…இதில் என்ன இருக்கு….நானும் அருவிக்கு போயிட்டு அவளை அழைச்சுட்டு வந்துடுறேன்….!” என்றபடி செல்ல…

“உங்களுக்கு அருவி எங்க இருக்குன்னு தெரியுமா தம்பி….!இல்லைன்னா யாரையாவது கூட அனுப்பவா….?” என்றார் கலையரசி.

“இல்ல..வேண்டாம் அத்தை…நான் ஏற்கனவே அந்த அருவிய பார்த்திருக்கேன்….நானே போய்க்கிறேன்…” என்றபடி சென்றான்.

அவனைத் தடுக்க முடியாமல்….மனதிற்குள் சிரித்தவராய் நின்றிருந்தார் கலையரசி.அவரைப் பொறுத்தவரை தன்னுடைய பெண் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்ற எண்ணம் தன் மனதில் இருந்தது.அந்த அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அனைவரிடமும் நடித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

அந்த ஊருக்குள் அனைவரும் அவனை மரியாதையுடன் பார்க்க….தேவாவிற்கு என்னவோ போல் இருந்தது.”என்ன..? எல்லாரும் இப்படி பார்க்குறாங்க….? தேவா உன் மாமனார் பெரிய ஆள் தான் போல….” என்று தனக்குத தானே பேசிக் கொண்டு சென்றான்.

“தம்பி…நீங்க பெரிய வீட்டு மாப்பிளைங்களா….?” என்று ஒரு வயசான பாட்டி கேட்க…

“ஆமாம் பாட்டி….!” என்றான்.

“எங்க கீர்த்தனா புள்ள….பாசக்கார புள்ள தம்பி.எங்க வீட்டு புள்ள மாதிரி…தங்கமான குணம்….பத்தரமா பாத்துக்கங்க தம்பி….”! என்று பாட்டி சொல்ல…

“சரிங்க பாட்டி…நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா…? உங்க பேத்திய நான் நல்லபடியா பார்த்துக்கறேன் சரியா….?” என்று சொல்லி சிரிக்க…

“எப்பவும் இப்படி சிரிச்சுட்டே இருய்யா….ராசா மாதிரி இருக்கீக….” என்று சொல்ல….”தேங்க்ஸ்…”பாட்டி” என்றவன் அருவியை நோக்கி சென்றான்.

சிட்டியில் பிறந்து….அங்கேயே வளர்ந்தவனுக்கு…. அந்த கிராமத்து சூழல் புதியதாகவும்…அதே சமயம் இனிமையாகவும் இருந்தது.சுற்றி காணப்படும் பசுமையை அவன் ரசித்தான்.அதிலும் தலையூத்து அருவியை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அன்று தூரத்தில் இருந்து பார்த்த அருவியை….இன்று மிக அருகில் காணப் போகிறான்.மெயின் ரோட் தாண்டி பாதை கொஞ்சம் கல்லாக இருக்க….அதை சமாளித்து ஏறினான்.

பேரிரைச்சலுடன் அருவி விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.அதனைப் பார்த்து வியந்தவன்….”இந்த கிராமத்தில் இப்படி ஒரு அருவியா….?” என்று ஆச்சர்யம் கொண்டான்.

எங்க இந்த கீர்த்திய காணோம்….?” என்றபடி அவளைத் தேட…அங்கு காணப்பட்ட பாறைகளில் எங்கும் அவளைக் காணவில்லை.

சுற்றும் தேடியவனின் கண்கள் ஒரு இடத்தில் நிலைத்தது.அங்கே அருவி விழும் இடத்தில் குளித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்தவனது இதயம் எகிறிக் குதிக்க…..ஓடிய மனக் குதிரையை அடக்க அவன் பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

“இதென்ன இவ இங்க குளிக்கிறா….? இவங்க ஊர்ல எல்லாம் வீட்ல குளிக்க மாட்டாங்களா….?” என்று தனக்குத் தானே எண்ணியவன்…அவள் அருகில் செல்ல எண்ணி….நீரில் காலை வைத்தான்.

அந்த நீரின் குளுமை அவனை எங்கும் செல்ல விடாமல் தடுத்தது.”ஒரு வேளை நான் அவளுக்கு அருகில் போனா….அப்படியே எழுந்து போனாலும் போய்டுவா…!” என்று எண்ணியவனாய் அவளை ரசித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான்.

“இவ இப்படி பப்ளிக்கா குளிக்கிறாளே….?யாரும் இந்த பக்கம் யாரும் வரமாட்டாங்களா….?” என்று யோசனையுடன் கண்களை அலைபாய விட….கொஞ்சம் தூரம் தாண்டி….சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

“ஓஹோ…இது பப்ளிக் பாத்ரூம் மாதிரியா….? எல்லாரும் குளிக்கிறாங்க…! ஒருவேளை பாத்ரூம் கட்ட காசில்லையோ…? இல்லையே இவ வீட்ல அதெல்லாம் இருக்கே…!” என்று தனக்குத் தானே கேள்வி கேட்டு, தனக்குத் தானே பதிலும் சொல்லிக் கொண்டிருந்தான்.

அருவிக்கு மேல் இருந்த மாமரங்களில் மாங்காய்கள் கொத்துக் கொத்தாய் காய்த்திருந்தன.”இவ்வளவு மாங்காயா….?” என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.

“ஏய் கீர்த்தனா…! கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் தான் ஆகியிருக்கு….! அதுக்குள்ளே அருவிக்கு குளிக்க வந்துட்ட….”! என்று அவள் சக வயதினர் கேலி பேச….

“கல்யாணம் ஆகிட்டா…..குளிக்கக் கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா….?எனக்கு இங்க குளிக்கத்தான் பிடிச்சிருக்கு….அதான் வந்தேன்…!” என்றாள் கீர்த்தனா.

“அது சரி….இன்னைக்கு குளிப்ப….! மாமியார் வீட்டுக்கு போய்ட்டா…அங்க எந்த அருவியில் குளிப்ப….?”” என்று எல்லோரும் கிண்டல் பேச….கீர்த்தனாவின் முகம் ஒரு நொடியில் விழுந்துவிட்டது.

அதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவன்….கீர்த்தனாவின் முகம் வாடுவதைக் கண்டதும் என்னவோ போல் இருந்தது.

வேகமாய் அவள் அருகில் செல்வதற்காக நகர்ந்தவன்….கீர்த்தனா கிளம்பவும் அப்படியே நின்று விட்டான்.”நாமளும் இங்கயே குளித்தால் என்ன…?” என்று எண்ணியவன்…அருவி விழும் இடத்திற்கு சென்றான்.

அங்கு ஆண்கள் குளிக்கும் பகுதி தனியாக இருந்தது.மேலிருந்த விழுந்த அருவி நீர்….உடலில் சட்..சட்டென்று விழ….அந்த சுகத்தில் அப்படியே நின்றிருந்தான் தேவா.

அருவி நீர் தலையில் விழ..விழ…அவனுக்கு தலையை மிகவும் வலிப்பது போல் இருக்க….வேகமாய் வெளியே வந்தான்.நேரம் ஆக ஆக அவனின் தலைவலி கூடிக் கொண்டே போனது.

“பெங்களூர் போன உடனே பர்ஸ்ட் டாக்டரை போய் பார்க்கணும்…!” என்று நினைத்தவன்….வலியுடன் நடக்க…”உங்களுக்கு என்னாச்சு….நீங்க எப்படி இங்க…?”” என்றபடி வந்தாள் கீர்த்தனா.

“அது வந்து கீர்த்தி….எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு…”” என்று தேவா சொல்ல…

“இதென்ன மறுபடியும் தலைவலின்னு சொல்றான்….உண்மைக்குமே இவன் பைத்தியமா இருப்பானோ…!”” என்று கீர்த்தி யோசித்துக் கொண்டிருந்தாள்.

நீயென்ன….? பேசிட்டு இருக்கும் போதே அடிக்கடி யோசனைக்கு போய்டற…?” என்றான் தேவா.

கீர்த்தனா…””” “அதெல்லாம் ஒன்னும் இல்லையே….! சீக்கிரம் வாங்க வீட்டுக்கு போகலாம்…அம்மா என்னைக் கொன்னே போட்ருவாங்க….!””””“ என்று சொல்லி நடந்தாள்.

“ஆமா….நீ இவ்வளவு தூரம்…. இங்க வந்து தான் தினமும் குளிப்பயா…?””“ என்றான்.

“காலேஜ் போய்ட்டா….நான் எப்படி இங்க தினமும் குளிக்க முடியும்…? இங்க அடிக்கடி வர முடியாது.அதனால் இங்க இருக்க வரை இங்க தான் குளிப்பேன்.சின்னப் பிள்ளையில் இருந்து எனக்கு இந்த அருவின்னா அவ்வளவு இஷ்ட்டம்…ஆனா இனி நான் நினைக்கிறப்ப எல்லாம் இங்க வரமுடியாது…..””“ என்றாள் விரக்தியாய்.

அவளின் விரக்தி மனதிற்கு என்னவோ போல் இருக்க….” “ஏன் வரமுடியாது….உனக்கு எப்ப எல்லாம் இங்க வரணும்ன்னு தோணுதோ….உடனே நீ இங்க வந்துடலாம்…””“ என்றான் தேவா.

“நீங்க என்ன சொல்றிங்க….?”“” என்றாள்.

“நாம பெங்களூர்ல இருந்து அடிக்கடி இங்க வந்து போகலாம்ன்னு சொன்னேன்..!””“ என்றான்.

“பெங்களூரா…? நான் எதுக்கு அங்க வரணும்….நான் வொர்க் பண்ற காலேஜ் கோயம்பத்தூர்ல தான இருக்கு…!” என்றாள்.

“கல்யாணம் ஆனா…கணவன் கூட வரதுதான முறை…!”  என்றான் கிண்டலாய்.

இப்படி ஒன்றை அவள் தெரிந்திருந்தாலும்…அவள் மனம் அதை ஏற்றுக்கொள்வதற்கு தயாராய் இல்லை என்பதை அவளின் முகம் அப்பட்டமாய் காட்டியது.

“என்னால் பெங்களூரு எல்லாம் வர முடியாது….!” என்றாள் பட்டென்று.

“அதற்காக என்னாலையும் கோயம்பத்தூர் வரமுடியாது….” என்றான் அவனும் பட்டென்று.

“வரவேண்டாம்…..!உங்களை யாரும் வர சொல்லலை.நானும் அங்க வரமாட்டேன்…என்னையும் நீங்க கட்டாயப் படுத்தக் கூடாது…”“என்றாள்.

“ஓகே…எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை…உன் அப்பா,அம்மாகிட்ட நீயே சொல்லிடு..””“ என்று அவன் கூலாய் சொல்ல…

அவனை நெருப்பாய் பார்த்தாள் கீர்த்தனா.

எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாய் நடக்க…அந்த அமைதியை விரும்பாது….பேச ஆரம்பித்தான் தேவா.

கீர்த்தி…இந்த சின்ன ஊர்ல இப்படி ஒரு அருவியா….?சூப்பர்  சீனரி….!இந்த கிராமத்துல இப்படி ஒரு அருவி இருக்குன்னா யாரும் நம்ப மாட்டாங்க…!” என்றான்.

“ஏன் சின்ன கிராமம்ன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா…?” என்றாள் குத்தலாய்.

“ஹேய்,….நீ என்ன சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுற…? நான் இப்படி பார்த்ததில்லை…ஜஸ்ட் தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டேன்…இது தப்பா..?” என்றான் தோள்களைக் குலுக்கியவாறு.

அவனின் பதிலில் கொஞ்சம் சமாதானம் அடைந்தவள்….”இங்க விருப்பாச்சி தலையூத்து அருவின்னா…அவ்வளவு பிரபலம் எல்லாம் கிடையாது.ஆனா ஒரு சுற்றுலா  தளத்துக்கு தேவையான அத்தனை அம்சமும் இங்க இருக்கு.பரப்பலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் தான் விருப்பாச்சி மலைக்குன்றுல இருந்து அருவியா கீழே விழுது.இந்த மலைப் பகுதியில   300 க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் இருக்கு. அதனால் இந்த அருவியில் குளித்தால் பல்வேறு நோய்களும் குணமாகும் என்பது வழக்கம்.

இந்த அருவி நீரை காசி தீர்த்தத்துக்கு இணையா நினைப்பாங்க…!அதனால் இதற்கு “நல்காசி…” என்ற பெயரும் இருக்கு.

இது மலையடிவாரத்துல இருக்குற சின்ன தலையூத்து அருவி தான்.எங்க ஊர் விருப்பாச்சியில் இருந்து மூணு கிலோமீட்டர் தூரத்தில் நீல வரதராஜர் பெருமாள் கோவில் இருக்கு.கோவிலுக்கு பின்னால் இருக்குற ஒத்தையடி பாதை வழியா போனா…பெரிய தலையூத்து அருவிக்கு போகலாம்…” என்றாள் கீர்த்தனா.

“வாவ்….இந்த அருவிக்கு இப்படி ஒரு வரலாறா….? இப்ப தான் தெரியுது….நீ எதுக்காக இவ்வளவு தூரம் குளிக்க வரன்னு…””“ என்றான் தேவா.

“எதுக்காக…?””“ என்றாள் கீர்த்தனா.

“உடல்ல இருக்குற நோயெல்லாம் சரி ஆகணும்ன்னு தான்…!””“ என்றான்.

“கருமம்…கருமம்…” என்று தலையில் அடித்தவள் வேகமாய் முன்னே செல்ல….திடீரென்று அவளைப் பிடித்து இழுத்தான் தேவா.

“என்ன..?” என்றாள்.

“பாம்பு…..” என்றான்.

“பாம்பா…!” என்றவள்…வேகமாய் அவன் பின்னே சென்று அவனைக் கட்டிக் கொள்ள….” தேவா வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

உன்னை நான் அறிகிறேன்…

ஆனால்

உன் எண்ணங்களை நான் அறிய முடியவில்லை….

என் எண்ணங்களை நீ அறிகிறாய்….

என்னை  எப்போது அறிவாய் பெண்ணே…!

Advertisement