Advertisement

 

தூரிகை 2:

 

யோசனையுடன்  காரை ஒட்டிக் கொண்டிருந்தான் தேவா.அருவியில் கீர்த்தனாவைப் பார்த்ததிலிருந்து அவன் மனம்  நிலையில்லாமல் தவித்தது.

“எனக்கு என்னாச்சு….? எதற்காக இப்படி என் மனம் குழம்பித் தவிக்கிறது…? எனக்கு கீர்த்தனாவைப் பிடிக்கிறது….? ஆனால் என் ஆழ் மனம் இதை ஏற்க மறுக்கிறது….! ஏதோ ஒன்று என்னைத் தடுக்கிறது.மூளை சரியென்று ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயத்தை மனம் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது…?” என்று குழம்பியவாறு காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.

“கீர்த்தனாவின் மாசு மரு இல்லாத முகம் அவனின் மனக்கண்ணில் வந்து வந்து போனது.அவள் காபியை தன்னிடம் கொடுக்கும் போது பார்த்த பார்வையை அவனால் மறக்க முடியவில்லை.அந்த பார்வை அவனுக்கு ஏதோ ஒன்றை சொல்லத் துடித்தது போல் உணர்ந்தான் தேவா.

“அவளின் நிலை உணர்ந்தும் நான் ஏன் அவளிடம் அப்படி நடந்து கொண்டேன்…?” என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொண்டான் தேவா.

அனைத்தும் தன்னை மீறி நடப்பது போல் அவனுள் ஒரு மாயை உருவாகி மறைந்தது.

அதே நேரத்தில் முன்னால் சென்ற காரில் பத்மா…மாறனிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

“ஏங்க எல்லாம் நல்லபடியா நடக்குமா…? இடையில் குழப்பம் எதுவும் வந்துடாதே…?” என்றார் கவலையாய்.

மாறன்…””ஏன் அப்படி நினைக்கிற பத்மா…? நடக்குறது எல்லாமே நல்லபடியாதான் நடக்கும்….நீ ஒன்னும் கவலைப் படாதே..!” என்றார் ஆறுதலாய்.

“அப்பா…! எனக்குமே பக்கு பக்குன்னு இருந்தது. தேவா எதையாவது உளறி…காரியத்தைக் கெடுத்துடுவானோன்னு….! நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை…!”” என்றாள் கார்த்திகா. 

“அவன் கவலை அவனுக்கு தான் தெரியும்…”” என்று முணுமுணுத்தான் ராஜா.

“என்ன சொன்னிங்க…?” என்று கார்த்திகா முறைக்க…”,ஒண்ணுமில்லை…” என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான் ராஜா.

“கடவுளே…!எப்படியாவது இந்த கல்யாணம் நடந்துட்டா…எனக்கு அதுவே போதும்…!” என்று பத்மா மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தார்.

*********************

அருவியில் இருந்து வெகு நேரமாகியும் கீர்த்தனா வீடு திரும்பாததால் கவலையுடன் இருந்தார் கலையரசி.

“இப்ப எதுக்கு வாசலைப் பார்த்து இப்படி உட்கார்ந்திருக்க கலை…?” என்றார் செழியன்.

கலையரசி..”..”இல்லைங்க…கீர்த்தனாவை இன்னமும் காணோம். அருவிக்கு போயிட்டு வர இவ்வளவு நேரமா…?வர வர இந்த புள்ளைக்கு அசட்டுத்தனம் அதிகமாய்டுச்சுங்க…!” என்றார்.

“அதெல்லாம் சரியா வந்திடுவா….!நீ போய் உனக்கு வேலை இருந்தா பாரு…கல்யாண வேலையெல்லாம் தலைக்கு மேல இருக்கு…இன்னும் அவளுக்கு என்ன ,என்ன வாங்கனும்ன்னு ஒரு லிஸ்ட் போடு…டவுனுக்கு போய் வாங்கிட்டு வந்துடலாம்…” என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தார் செழியன்.   

அமைதியுடன்  வீட்டிற்குள் நுழைந்தாள் கீர்த்தனா.அணிந்திருந்த பாவாடை தாவணி சிறிது நனைந்திருக்க….அந்த ஈரம் அவளுக்கு குளிரை ஏற்படுத்தியது.

அவளின் உடல் நடுக்கத்தைப் பார்த்து பயந்து போன கலையரசி…. வேகமாய் துண்டை எடுத்து ஈரமே இல்லாத அவளின் தலைமுடியைத துவட்டினார்.

“ஐயோ அம்மா…! விடுங்க…தலையில் ஈரமே இல்லை…”” என்று கீர்த்தனா சொன்ன பிறகு தான் அவருக்கு உண்மை உரைத்தது.

கலையின் கண்கள் எதையோ நினைத்துக் கலங்க….,அவரை இறுகக் கட்டிக் கொண்டாள் கீத்தனா.

“அம்மா எனக்கு ஒண்ணுமில்லை…. நீங்க ஏன் என்னை நினைத்து உங்க உடம்பை வருத்திக்கிறிங்க…?” என்று கடிந்து கொண்டாள்.

கலையரசி…””என்னமோடா….உனக்கு ஏதாவதுன்னா எங்களால் தாங்க முடியாது.உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துட்டா….அதைவிட பெரிய சந்தோசம் எங்களுக்கு எதுவுமில்லைமா….”” என்றார்.

தன் தாய் எதை நினைத்து கவலைப்படுகிறார் என்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.அவரின் நெஞ்சில் சாய்ந்தவள்….”அது மட்டும் என்னால் முடியாதும்மா….!” என்றாள் வாய்க்குள்.

“என்னம்மா…? என்ன சொன்ன…?” என்றார் கலை.

“ங்ம்ம் அது வந்து…..உங்க சந்தோசம் தான் என் சந்தோசம்ன்னு சொன்னேன்ம்மா….!” என்றாள் பொய்யாய்.

அவளின் பொய் வார்த்தைகளை அறியாது….தன் மகளின் எதிர்கால வாழ்வை எண்ணி தனது கற்பனைக் கோட்டையைக் கட்டத் துவங்கினார் கலையரசி.

“என்னை மன்னிச்சுடுங்கம்மா….நீங்க சொன்ன மாதிரி என்னோட கல்யாணம் நடக்கும்…ஆனா நான் சந்தோஷமா இருப்பேனான்னு தெரியலை…எனக்கு அவனை சுத்தமா பிடிக்கலை.அவன் குடும்பத்தில் எல்லாரும் ஒரு மாதிரி அமைதியா இருக்காங்க…!ஏதோ தப்பா இருக்குற மாதிரி என் உள்ளுணர்வு சொல்லுது…ஆனா அது என்னன்னு தான் புரியலை….என் தலைவிதிப்படி என்ன நடக்கணும்ன்னு இருக்கோ ….அப்படியே நடக்கட்டும்…”  என்று மனதிற்குள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் கீர்த்தனா.

அவள் அறியவில்லை….அவள் விதி சரியாய் எழுதப்படவில்லை என்று…!

 

“அத்தை அத்தை…..!” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான் ரவி.

“வா ரவி…! எப்ப வந்த ஊர்ல இருந்து…?” என்று நலம் விசாரித்தபடி வந்தார் கலையரசி.

ரவி..”.நான் வருவது இருக்கட்டும்…? என்ன நடக்குது இங்க…?” என்றான் கோபமாய்.

“என்ன ரவி….நீ எதைப் பத்தி கேக்குற….?” என்றார் கலை புரியாமல்.

அதற்குள் ரவியின் சத்தம் கேட்டு…,வேகமாய் அறைக்குள் இருந்து வந்தாள் கீர்த்தனா.அவளைப் பார்த்து முறைத்தவன்…”

இதோ இந்த அம்மணிக்கு  கல்யாணமாமே…!கேள்விப்பட்டேன்…!” என்றான் எகத்தாளமாய்.

கலை..”..”ஆமா ரவி…!நல்ல இடமா வந்தது.ஜாதகமும் பொருந்தி வந்திருக்கு…அதான் முடுச்சுடலாம்ன்னு….பேசி முடிச்சாச்சு…””! என்றார் வெள்ளந்தியாய்.

“பேசி முடிச்சது சரி….அதில் இவளுக்கு இஷ்ட்டமான்னு கேட்டிங்களா….?”” என்றான் கோபம் குறையாத குரலில்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை ரவி…!நம்ம கீர்த்தனாக்கும் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுருக்கு….பையனுக்கும் இவளை ரொம்ப பிடிச்சுப் போய்டுச்சு….இதுக்கு மேல யோசிக்க என்ன இருக்கு….?அதான் பேசி முடிச்சாச்சு….” என்றார் கலையரசி.

ரவி..”.”ஓஹோ மேடம்க்கு சம்மதம்ன்னா… அதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு…”?” என்று கடுப்பாய் சொன்னவன்…பொத்தென்று சோபாவில் அமர்ந்தான்.

“மோர் சாப்பிடு ரவி…!எடுத்துட்டு வரேன்…” என்றபடி கலை உள்ளே போக… மீண்டும் கீர்த்தனாவை முறைத்தான்.

“இப்ப உனக்கு சந்தோஷமா….? இது தான் உன் முடிவுன்னா… மடையனாட்டம் என்னைய எதுக்கு சுத்த விட்ட….?”எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா….?இப்ப என்னடான்னா ஜாலியா எனக்கு கல்யாணம்ன்னு சொல்ற….?”” என்று  ரவி எரிந்து விழ….கீர்த்தனாவின் கண்கள் கலங்கியது.

“மாமா….அது வந்து…” என்று அவள் இழுக்க…”போதும் நிறுத்து….இனி நான் உன் விஷயத்தில் தலையிடவே மாட்டேன்.நீ எப்படி போனா எனக்கென்ன….?எது எப்படியோ இப்ப கல்யாணம் பண்றவன் கூடவாவது சந்தோஷமா இரு…! “ என்றபடி சாய்ந்து அமர்ந்து விட்டான்.

அதற்கு மேல் அவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை.”எல்லாம் அவனால் வந்தது….நான் பிடிக்கலைன்னு சொன்ன உடனே பேசாம போயிருந்தான்னா இப்ப இவ்வளவு பிரச்சனை இல்லை…” என்று மனதிற்குள்ளேயே தேவாவிற்கு அர்ச்சனை நடத்தினாள்.

“எத்தனை நாள் விடுமுறை ரவி…?” என்றபடி மோருடன் வந்தார் கலையரசி.

“இரண்டு நாள் தான் அத்தை…நைட் தான் வந்தேன்.காலையில தான் அம்மா விஷயத்தை சொன்னாங்க…அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…”” என்றான் சலிப்பான குரலில்.

“எல்லாம் அவசரகதியில் முடிவாகிப் போய்டுச்சு ரவி…அதான் சொல்ல முடியலை.கண்டிப்பா கல்யானத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே லீவ் எடுத்துட்டு வந்து ரவி…”” என்றார் கலை வாஞ்சனையுடன்.

“லீவ் கிடைக்குமான்னு தெரியலை அத்தை……சீக்கிரமா வரப்பார்க்குறேன்…!” என்றவன்…”அப்ப நான் கிளம்புறேன் அத்தை….”” என்றபடி கிளம்பினான்.

கீர்த்தனாவை திரும்பியும் பார்க்காமல் போக…அவள் கண்கள் குளம் கட்டியது.”இதில் நான் என்ன பண்ண முடியும்….இந்த ரவி என்னை புரிந்து கொண்டது அவ்வளவு தானா….?” என்று வெதும்பினாள்.

இருந்தாலும் அவள் மனம் முயற்சியை கைவிடவில்லை.கடைசி நம்பிக்கையாக மீண்டும் ஒரு முறை தேவாவிற்கு மெசேஜ் செய்தாள்…”எனக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்று….”.

தேவாவிடம் இருந்து பதில் வரும் வரும் என்று அவள் செல்லைப் பார்த்திருக்க….பதில் மட்டும் அவனிடம் இருந்து வரவே இல்லை.

“என்ன மனிதன் இவன்…? விருப்பமில்லை என்று சொல்லும் ஒரு பெண்ணை  எப்படி திருமணம் செய்வான்….?” என்று புலம்ப…

உண்மையை சொல்லு…தப்பு யார் மேல…?உனக்கு சம்மதமான்னு… அவன் நியாமா வந்து உன்கிட்ட கேட்டானா இல்லையா….?” என்று மனசாட்சி இடித்துரைத்தது.

அவனிடம் இருந்து பதில் வராது என்று எண்ணி…செல்லை கீழே வைக்கப் போக….,பீப் என்ற சத்தம் கேட்டது.

வேகமாய் அவள் மெசேஜைப் பார்க்க….””அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீயே கல்யாணத்தை நிறுத்தி விடு…!”” என்று மட்டும் பதில் அனுப்பியிருந்தான் தேவா.

அதைப் பார்த்த கீர்த்தனாவிற்கு ஆத்திர ஆத்திரமாய் வந்தது.””ச்சை..” இனி இவன் கிட்ட இதைப் பத்தி பேசக் கூடாது…” என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்.

அங்கு எதிர்முனையில் மெசேஜ் செய்தவனது முகம் தீயாய் இருந்தது.”என்ன பிரச்சனை இவளுக்கு…!நான் என்னமோ வலுக்கட்டாயமா இவளைக் கல்யாணம் பண்ண போற மாதிரி பில்டப் குடுக்குறா…! என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது இவளுக்கு…? இந்த தேவாவை எப்படி ஒருத்தி வேண்டாமென்று சொல்லலாம்…?நெவர்…!கண்டிப்பா இந்த கல்யாணம் நடந்தே தீரும்…””என்று தேவாவும் ஒரு முடிவை எடுத்தான்.

கீர்த்தனாவைப் பற்றி எந்த ஒரு தகவலையும் தேவா  அறிந்திருக்கவும் இல்லை.அறிய முற்படவும் இல்லை.தேவாவைப் பற்றி எந்த ஒரு விஷயத்தையும் கீர்த்தனா அறிந்திருக்கவும் இல்லை…அறிந்து கொள்வதற்கான அவசியத்தையும் அவள் உணரவில்லை.

இருவேறு பாதையில் பயணித்தவர்கள்…இப்பொழுது ஒரே பாதையில் பயணிக்க காத்திருக்கிறார்கள்…திருமணம் என்னும் பந்தத்தின் மூலம்.

சூரிய ஒளிக்கீற்றுகள் வெளிச்சத்தை ஏற்படுத்த….புத்தம் புது காலையில்….பனி மங்காத அந்த நேரத்தில்….கோயம்புத்தூரில் உள்ள அந்த மிகப் பெரிய திருமண மஹாலில் மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தது.

வெண் பட்டு வேஷ்ட்டி சட்டையில்….நிதர்சனமான முகத்துடன் மேடையில் அமர்ந்திருந்தான் தேவா.ஐயர் சொல்வதை திருப்பி சொல்லிக் கொண்டிருக்க….திருமணத்திற்கு வருபவர்கள் வந்து கொண்டிருக்க… மாறன்-பத்மா தம்பதியினர் வருபவர்களை வரவேற்க….கார்த்திகா-ராஜா தம்பதியினர் மற்ற  வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

செழியனுடன்….முகத்தில் எரிச்சலை அப்பட்டமாய் காட்டியபடி நின்றிருந்தான் ரவி.செழியன்-கலையரசி மேல் இருக்கும் மனந்தாங்களால் ரவியின் பெற்றோர் திருமணத்திற்கு வராமல் இருந்தனர்.

இளம் சிகப்பு வண்ண பட்டுப் புடவை கீர்த்தனாவின் நிறத்தை தூக்கிக் காட்ட…அழகு நிலையப் பெண்களின் அலங்கரிப்பில்…மேலும் அழகாய் ஜொலித்தாள் கீர்த்தனா.

மேடையில் தேவாவின் அருகில் அமரும் போது….அவளின் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.கால்கள் அமருவேனா…? என்று அடம் பிடித்தது.இருந்தாலும் கட்டாயத்தின் பேரில்… உடல் இருக அமர்ந்தாள் கீர்த்தனா.

அமர்ந்தவளை நிதானமாய் திரும்பிப் பார்த்தான் தேவா.அவளின் முகத்தைப் பார்க்க அவனுக்கே பாவமாய் இருந்தது.இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஈகோ அவனைத் தடுத்தது.

“வேண்டாம் தேவா…இவளுக்கு பாவம் பார்த்தா….உன் பாடு படாத பாடு ஆகிப் போய்டும்…”” என்று சொல்லிக் கொண்டவன்…தலையை உலுக்கிக் கொண்டான்.

“இவன் யாரு….? அப்ப இருந்து என்னை முறைச்சுகிட்டே இருக்கான்…!” என்று யோசித்தபடி ரவியைப் பார்த்தான் தேவா.

ரவி தன்னை முறைக்கவில்லை என்பதை அறிந்து அவனை உற்று நோக்க…அவன் கீர்த்தனாவை முறைத்துக் கொண்டிருந்தான்.கீர்த்தனாவும் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன நடக்குது இங்க…? இவ எதுக்கு அவனைப் பார்க்காம தலையைக் கீழ போடுறா…? அவனும் இவளை முறைத்து முறைத்து பார்க்குறான்…!”” என்றவன்.., பல்லைக் கடித்தபடி இருவரையும் தொடர்ந்தான் தன் பார்வையால். ஆனால் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“கெட்டிமேளம்…கெட்டிமேளம்…!”” என்ற ஐயரின் குரலில் கலைந்தவன்…தன் யோசனையை பின் தள்ளி…கீர்த்தனாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான்.

தாலியைக் கட்டி முடித்து விட்டு அவன் கையை எடுக்க…கீர்த்தனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து உருண்டோடி தேவாவின் கைகளில் விழுந்தது.

தன் கையில் கண்ணீர் பட்டவுடன்…என்னமோ ஏதோ என்று அவன் அவசரமாக கீர்த்தனாவைப் பார்க்க….அதற்குள் அவளின் கண்ணீர் கோடுகள் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருந்தது.

வேகமாய் திரும்பி ரவியைப் பார்த்தான் தேவா.அவனும் அந்த இடத்தை விட்டு சென்றிருந்தான்.தேவாவின் உடல் இருக….மனதில் கோபம் தீயாய்  கழன்று கொண்டிருந்தது.   

“பொண்ணும் மாப்பிள்ளையும் பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க….””என்று ஐயர் சொல்ல….எழுந்தனர் இருவரும்.

அடுத்து நடக்க வேண்டிய சடங்குகள் தானே நடக்க….இருவரும் எதிலும் ஒட்டாமல் இருந்தனர்.

“என்னங்க தேவா முகத்தைப் பாருங்க…! என்னமோ மாதிரி இருக்கான்…” என்று மாறனிடம்…பத்மா சொல்ல…,”அந்த புகையில் இருந்ததால அப்படி இருக்கும்…” என்று சொல்லிவிட்டு வந்தவர்களை சாப்பிட அழைத்துச் சென்றார் அவர்.

“இப்ப எதுக்கு அழுது சீன் போட்ட…?”” என்றான் தேவா மொட்டையாய்.

கீர்த்தனாவோ அவனை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.”என் கண்ணு நான் அழுகிறேன்…!” இதில் உங்களுக்கென்ன பிரச்சனை…? என்றாள் எதிர்கேள்வியாய்.

தேவா…“என்ன வாய் நீளுது…?”

கீர்த்தனா….””அது ஏற்கனவே எனக்கு இருக்குறது தான்….இதுல புதுசா என்ன இருக்கு…இனிமேதான் இருக்கு உனக்கு…ஏண்டா இவளைக் கட்டிகிட்டோம்ன்னு…நீயே துண்டைக் காணோம் துணியைக் காணோம்ன்னு ஓடத்தான் போற….அதை நான் பார்க்கத்தான் போறேன்…!” என்றாள் பல்லைக் கடித்தபடி.    

கீர்த்தனாவை ஆச்சர்மாய் பார்த்தான் தேவா.”ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்த பிள்ளைப் பூச்சியா இவள்…? இந்த போடு போடுகிறாள்…!” என்று அவன் மனதில் நினைக்க…

“நான் இவ்வளவு பேசுவேன்னு நீ எதிர்பார்க்கலைல…நீ எதிர்பார்த்திருக்கணும்….”என்றாள் நக்கலாய்.

“ஹாஆ….ஹா….” என்று வாய் விட்டு சிரித்தான் தேவா.கீர்த்தனா அவனை முறைக்க…

“”யாரு..? நீ….என்னை…பாடா படுத்தப் போற….நல்ல காமெடி…” உன்னோட முகத்துக்கு இந்த டெரர் லுக்  எல்லாம் சரியா வரலை… என்று சிரித்துக் கொண்டே சொன்னவன்…

திடீரென்று கோபமாய்… ””ஹேய்..! என்னை என்ன பிள்ளைப் பூச்சின்னு நினைச்சியா…நீ போட்டு நசுக்க….தேவா டி…!அதை நியாபகத்துல வச்சுக்கோ…”” என்றான்.

“மாப்பிள்ளை….காலம் பூரா இனி பேசிகிட்டே தான் இருக்க போறீங்க….அதனால கொஞ்சம் மிச்சம் வைங்க…”” என்று ராஜா கிண்டல் அடிக்க..”

“மாமா…”! என்று அழகாய் வெட்கப்பட்டான் தேவா.

“இவனுக்கு வெட்கம் எல்லாம் கூட வருது….”” என்று கீர்த்தனா அவனையே பார்க்க…”

என்ன…?” என்று அவன் புருவத்தை உயர்த்த…உதட்டை சுளித்தபடி பார்வையை அகற்றிக் கொண்டாள்.

“எப்படியோ கல்யாணம் நல்லபடியா முடிந்தது…!”” என்று பெருமூச்சு விட்டார் பத்மா.

“இவன் என்ன வேலை பார்க்குறான்….பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் மேரேஜ்க்கு வந்திருக்காங்க….”” என்று முதன் முறையாக அவனைப் பற்றிய அலசலில் இறங்கினாள் கீர்த்தனா.

வந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் செல்ல….இருவரையும் அழைத்துக் கொண்டு தேவாவின் வீட்டிற்கு சென்றனர்.

தேவாவின் வீட்டின் முன் இறங்கியவள்…அங்கிருந்த அழகிய வீட்டைப் பார்த்து அதிசயித்தாள்.அப்படி ஒரு வீட்டை அவள் எதிர்பார்க்கவில்லை. நினைவுகள் பின்னோக்கி செல்ல….அதை கடிவாளமிட்டு அடக்கி வைத்தாள்.

கார்த்திகா இருவருக்கும் ஆரத்தி எடுக்க….”வலது காலை எடுத்து வச்சு வாம்மா…!” என்றார் பத்மா.

அவள் உள்ளே செல்ல எத்தனிக்க….அவளது கையைப் பிடித்தான் தேவா.திரும்பி அவனைப் பார்த்தவள்…எதுவும் சொல்லாமல் அவனுடன் இணைந்து வீட்டினுள் நுழைந்தாள்”.

இருவரும் நேராக பூஜையறைக்கு செல்ல….””விளக்கேத்துமா….!”” என்றார் பத்மா.

கைகள் சிறிது நடுங்க….நிதானமாய் விளக்கேற்றினாள் கீர்த்தனா.விளக்கில் உள்ள திரி சுடர் விட்டு எறிய….அந்த வெளிச்சத்தில் பிரகாசமாய் ஜொலித்தாள்  கீர்த்தனா.”

அப்பொழுது தெரிந்த அவளது முகம் தேவாவிற்கு புதிதாய் தெரிந்தது.அந்த ஜொலிப்பு அவனுக்குள் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தியது.”இவள் என்னவள்..”! என்ற எண்ணம் அவன் மூளையில் அப்படியே நிலைக்க…. மனம் மட்டும் வெற்றிடமாய் இருந்தது.

விளக்கை ஏற்றியவள்….கைகூப்பி கடவுளை வேண்டினாள்..கடவுளே…!! இந்த வாழ்க்கை எனது பெற்றோர் அமைத்துக் கொடுத்தது.நான் நினைத்த வாழ்க்கை எனக்கு கிடைக்கவில்லை….கிடைத்த இந்த வாழ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எனக்கு நீங்க தான் தர வேண்டும்…”! என்று மனதார வேண்டினாள் கீர்த்தனா.

“கடவுளே..! எனக்கு இவளை பிடித்திருக்கிறது….ஆனால் என் மனதில் பதிய மறுக்கிறாள்….கடைசி வரையில் என்னால் இவளுக்கு சிறு துன்பமும் ஏற்படக் கூடாது….”” என்று தேவாவும் வேண்டினான்.

இருவரும் ஜோடியாய் நின்ற அந்த காட்சியைப் பார்த்த கீர்த்தனாவின் பெற்றோர் மனம் நிறைய…,மாறன்-பத்மா தம்பதி முகத்தில் நிம்மதி வந்திருந்தது.

விதி இவர்களுக்கு வைத்திருப்பது என்ன…?

 

Advertisement