Advertisement

அத்தியாயம் ஒன்பது :

“அத்தை தான் சொன்னாங்க, மித்ராக்கு ஃபீஸ் கட்டுறது உங்களுக்கு தொந்தரவுன்னு அதான்” என்று அவசரமாக ஒரு விளக்கம் கொடுத்தாள்.

அதை ஆதவன் காதில் வாங்கியது மாதிரியே தெரியவில்லை, அவன் பாட்டிற்கு உள்ளே சென்று விட்டான். கோபம் அதிகமாக அவனால் தன்னைக் கட்டுப் படுத்த முடியாது என்று நினைக்கும் போது அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவான். இப்போது அதை தான் செய்தான்.

அப்பாவுடன் அவன் பேசிக் கொண்டிருக்க.. தாமரையால் அவனைப் பார்க்கத் தான் முடிந்தது. அருகில் நெருங்கிப் பேச முடியவில்லை. குழந்தைகள் அவள் செல்லாமல் உறங்க மாட்டார்கள் என்றுணர்ந்து அவர்களை உறங்க வைக்க சென்றாள்.

“அம்மா! நாம இங்கப் படுக்கிறோமா” என்று மித்ரா மெத்தையைக் காட்ட, “ஆம்” என்று தலையசைத்து மூவரையும் வரிசையாகப் படுக்க வைத்து, அஸ்வதியைத் தட்டிக் கொடுக்க.. மூவருமே சிறிது நேரத்தில் உறங்கி விட்டனர்.

பின்பு வெளியே ஹாலிற்கு செல்ல.. மரகதம் உண்டு கொண்டிருந்தார், அழகரும் ஆதவனும் அப்போதும் பேசிக் கொண்டு தான் இருந்தனர்.

சமையலறை சென்று சிங்கிள் கிடந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள். கை கழுவ வந்த மரகதம்.. “ஒரு ரெண்டு தடவை சொன்னா இந்த வெயில் காலத்துலையும் மதியம் செஞ்ச சாப்பாடு சாப்பிடுவியா! வேண்டாம்..!” என்றார்.

எதற்கு இந்தக் கரிசனம் திடீரென்று என்று புரியாமல் பார்த்து நின்றாள்.

“ஆதவனுக்கு என்ன கொடுக்கறியோ அதைச் சாப்பிடு” என்றார்.

“சரிங்கத்தை” என்று சொல்ல.. “அவனோட உட்கார்ந்து சாப்பிடு! அப்போதான் நீ என்ன சாப்பிடறேன்னு அவனுக்குத் தெரியும்” என்று சொல்லி மரகதம் அவரின் ஜோலி முடிந்தது என்று சென்று விட்டார்.

அவரின் பேச்சிலேயே இது ஆதவனின் வேலை என்று புரிந்தது. “சற்று இளகி இப்போது தான் கவனிக்கிறார், இதில் நான் வேறு கோபப்படுத்தி விட்டேனே” என்று தாமரைக்குத் தோன்றியது.

சாப்பிட அமருவானா என்று பார்க்க.. அப்பாவிடம் பேசி முடித்தவன்.. பின்பு யாரிடமோ வெளியில் வாயிலில் நின்று போன் பேச ஆரம்பிக்க… மாற்றி மாற்றிப் ஃபோன்கள் பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் செங்கல் சூளை ஆரம்பிக்க முடிவெடுத்து இருந்தான். அதை தான் அப்பாவிடம் சொல்லி விட்டு வேறு ஏற்பாடுகள் பார்த்துக் கொண்டிருந்தான். 

தாமரையின் அப்பாவை விடச் சென்றவன், திரும்ப வந்து வண்டியை விட.. அவனிடம் ஒரு அரை மணிநேரம் பேசினான். வேலை என்று வந்துவிட்டால் ஆதவனுக்கு வேறு யோசனைகள் வராது.

பார்த்துக் களைத்தவள் ஹாலில் சுவரோரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

அன்றும் பதினோரு மணி ஆகிவிட்டது. ஆதவன் வீட்டின் உள் வந்த போது, சுவரில் சாய்ந்து வாயிலை அவன் எப்போது வருவான் என்பது போல பார்த்து இருந்த தாமரை ஆதவனின் பார்வையில் பட்டாள்.

அவள் அமர்ந்து இருந்த விதமே மனதை என்னவோ செய்தது. கோபம் குறைந்து இருந்தாலும் முற்றிலும் மறையவில்லை.  

இவனைப் பார்த்ததும் எழுந்து சமையலறை நோக்கி போக…

“எனக்கு டிஃபன் வேண்டாம்” என்றான்.

“ஏன்?” என்றாள் திரும்பி.

“வேண்டாம்!” என்று ஆதவன் முறுக்கிக் கொள்ள.. மனது ஏனோ சலிப்பாக வந்தது தாமரைக்கு.  

பதில் பேசாமல் போய் சமையல் கட்டில் இருந்ததை எல்லாம் எடுத்து பிரிட்ஜில் வைத்து… அவளும் உறங்க வர…

“நீ சாப்பிடலை”

“சாப்பிடலை” என்று மித்ராவைக் கூட எதிர்பார்க்காமல் மெத்தையில் படுக்காமல் பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள்.

எல்லாம் ஒரு இரண்டு நிமிடத்தில், மின்னல் வேகத்தில்..

ஏதாவது பேசுவாள் என்று பார்த்தால் பேசவே இல்லை. ஆதவனுக்கு கடுப்பாக வர, அவளருகில் வந்து நின்றான்.. எதற்குப் பார்க்கிறான் என்று தெரியாமல் எழுந்து அமர்ந்து “என்ன” என்று பார்க்க.

“ஒரு மனுஷன் சாப்பிடலைன்னு சொன்னா, சாப்பிடுங்க சொல்லணும், எப்படியோ போகட்டும்னு நீயும் சாப்பிடாம போய் படுத்துக்குவியா” என்று கேட்க,

“நான் என்னப் பண்ணட்டும்” என்றாள் பாவமாக,

“என்ன பண்ணட்டும்னு என்னைக் கேட்டா? உங்க அப்பாக்கிட்ட அவ்வளவு பேசற?”

“அவர் என்கிட்டேப் பேசறார், பேசறேன்! நீங்க எங்கப் பேசறீங்க?” என்றாள் நேரடியாக.  

ஆதவனுக்கு கோபம் போய் புன்னகை வருவேணா என்றது. இருந்தாலும் முகத்தை சீரியசாக வைத்து, “சரி இப்போப் பேசறேன்.. எதுக்கு பாஸ் புக் கேட்ட, என்னால ஃபீஸ் கட்ட முடியாதுன்னா? அப்போ எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும், மித்ராவையும் பார்த்துக்கணும்னு தானே.. இப்போ எங்க அம்மா சொன்னாங்கன்னு பாஸ் புக் கொடுக்கற?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்க…

அவன் என்ன கேட்க வருகிறான் என்றே தாமரைக்குப் புரியவில்லை. 

“நாளைக்கு எங்கம்மா அவ இங்க இருக்கக் கூடாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ?” என்றான்.

தாமரை சற்றும் யோசிக்கவில்லை “நானும் போயிடுவேன்” என்றாள் நொடியும் தாமதியாது.  

“என்ன? என்ன சொல்ற?” என்று அதிர்ந்து நின்று விட்டான்.  

ஆதவன் எதிர்பார்த்த பதில் “அப்படி எல்லாம் மித்ரா போக மாட்டா! அவ இங்க தான் இருப்பா! அவ என் பொண்ணு!” என்ற பதிலைத் தான்.. இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

அப்படியே சுவரில் சாய்ந்து நின்று விட்டான்.   

கேட்டதற்கு பதில் சொன்னேன் என்பது மாதிரி தாமரை அவனை பார்த்து நின்றிருக்க.. “இதுக்கு நீயும் பேசியிருக்க வேண்டாம்! நானும் பேசியிருக்க வேண்டாம்!” என்றவன்,

“பசிக்குது!” என…

வேகமாகச் சென்று தட்டை வைத்தாள்.. அவனின் முகம் முகம் பார்க்க… அது இறுகியிருந்தது.

“நான் உங்களைக் கோபப்படுத்தணும்னு சொல்லலை! நிஜமாத் தான் சொன்னேன்..”    

“நேத்து தானே சொன்னேன்! நிஜம்னாலும் சில சமயம் பேசக் கூடாது. பொய் சில நேரங்கள்ல இல்லை பல நேரங்கள்ல அழகானது. அந்த ஒரு மாயத் தோற்றம் தான் பல உறவுகளை பந்தத்தை பிடிச்சு வைக்குது” என்றான் உணர்ந்து.

“ஆனா, இங்க, இப்ப, நீ சொன்னது உண்மை கிடையாது…. உண்மை என்னென்னா, நீ என் மனைவி! அதனால் மித்ரா என் பொண்ணு! அவ்வளவு தான்.. இந்த உலகத்துல நான் உயிரோட இருக்குற வரை நீங்க என்னை விட்டுப் போக முடியாது! புரிஞ்சதா?” என்றான் சற்று கடுமையாக

“இந்த மாதிரி பேச்சுக்கு கூடப் போயிடுவேன் சொல்லக் கூடாது.. உன்னோட இந்தக் கல்யாணம் மித்ராக்காக என்னோட நடந்து இருக்கலாம்! ஆனா இனிமே மித்ராக்காகக் கூட என்னை விட்டு நீ போக முடியாது” என்றான் கடுமையாகவே.

தாமரை அவன் பேசுவதை புரியாத பாவனையில் பார்த்து இருந்தாள். கூடவே “அந்தப் பணம் வசூல் பண்ண ஆளுங்களை மிரட்டுன மாதிரியே என்கிட்டே மிரட்டுறாரே! பெரிய சண்டியர் தான்!” என்று மீண்டும் மனதில் ஓடியது.  

“என்ன புரிஞ்சதா?” என்றான்.

“இந்த ஒரு தடவை உண்மை பேசட்டா” என்றாள்.

“என்ன உண்மை?”

“அது புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு!”

“என்ன புரிஞ்சது? என்ன புரியலை?”

“நமக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகிடுச்சு! அது புரிஞ்சது! ஒரு ரெண்டு மூணு நாளா தான் என்கிட்டே சகஜமா பேசவே ஆரம்பிச்சு இருக்கீங்க! அதுக்குள்ள இப்படிப் பேசினா? அதுதான் புரியலை!”

“இவள் என்னைக் கிண்டல் செய்கிறாளோ?” என்று ஆதவன் பார்க்க… தாமரையின் பேச்சில் கிண்டல் எல்லாம் இல்லை, அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

“நிஜமாக் கேட்கறியா?”

“ஆமாம்!” என்பதுப் போல தலையாட்ட,

“அதுவா நான் ரொம்ப கொடுமைக்காரன்! அதுதான் இப்படிப் பேசறேன்!” என்றான் நக்கலாக.

“நிஜமாகவே இவன் கொடுமைக்காரனா” என்பது போலப் பார்த்தாள். பேச்சின் ஜாலங்கள் புரியாத அவளின் எளிமைக் கவர…. “இவ்வளவு நல்லவளாடீ நீ” என்ற நினைப்புத் தோன்ற அவனுக்கு சிரிப்பு வந்தது.

சிரித்தவனைப் பார்த்து “நீங்க என்னைக் கிண்டல் பண்ணறீங்களா?” என்றாள்.

“ரொம்பச் சீக்கிரம் கண்டு பிடிச்சிட்ட” என்றவன்.. “என் மேல ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கவும் தான கல்யாணம் பண்ணிக்கிட்ட… இனிமே இப்படிப் போயிடுவேன் எல்லாம் சொல்லக் கூடாது” என்றான் நல்ல விதமாக அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில்.

“ஆனா மித்ராவை விளையாட்டுக்குக் கூட நீங்க அப்படி சொல்லக் கூடாது”

“சொல்ல மாட்டேன்.. பிருந்தா மாதிரி அஸ்வதி மாதிரி தான் எனக்கு அவ.. நீ சீக்கிரம் அவளை என் கூட ஃபிரண்ட் ஆக்கு.  மத்தது நான் பார்த்துக்கறேன்” என்றவன் “சாப்பிடலாமா” என்றான்.

“ம்” என்றவள் அவனுக்குப் பரிமாற.. சாப்பிட ஆரம்பித்தான். அவளைப் பரிமாற சொன்னதையே அவன் உணரவில்லை, இயல்பாக நடந்தது, உண்டு கொண்டிருக்க…

“நானும் சாப்பிடட்டுமா?” என்றாள்.

“சாப்பிடு!” என்றவன், அதிசயமாக என்ன கேள்வி இது என்பது போல பார்த்தான்.

“அது, அத்தை உங்களுக்கு என்ன டிஃபன் செய்யறனோ அதை தான் நானும் சாப்பிடணும்! உங்களோட உட்கார்ந்து சாப்பிடணும்னு சொன்னாங்க” என்றாள்.

“எங்கம்மா என்னோட அம்மான்னு காட்டுறாங்க போல!” என்று நினைத்தவனாக இப்போது மீண்டும் ஆதவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

சிரித்தவுடன் ஏதோ கிண்டல் செய்கிறான் என்று புரிந்தவள்.. “நான் வேணும்னா திரும்பி உட்கார்ந்து சாப்பிடறேன்” என்று சொல்ல,

இப்போது இன்னும் ஆதவனுக்கு சிரிப்பு பீறிட.. புரையேறிக் கொண்டது அவனுக்கு.

அவசரமாக தண்ணீர் எடுத்துக் கொடுத்து.. அவன் தலையில் வேறு தட்டி விட்டாள்.

சற்று ஆசுவாசப் பட்டதும்…. “இதுதான் சாக்குன்னு என்னை அடிச்சிட்ட” என்று சொல்ல,

“அச்சோ! இல்லையில்லை!” என்று பதறினாள்.

“அச்சோ! பதட்டப் படாத!” என்று அவள் மாதிரியே சொல்லவும்..

“என்னடா ஆச்சு இவருக்கு? ஏதாவது காத்து கருப்பு அண்டிடுச்சா!” என்பது போல அவனைப் பார்த்திருந்தாள்..

அவளின் இந்த பாவனை மீண்டும் புன்னகைக்க வைக்க, “இந்த மாதிரி நான் எப்போ சிரிச்சேன்னு கூடத் தெரியலை! தேங்க்ஸ்!” என்றான்.

“சரி, சாப்பிடு!” என்று சொல்ல… அவளும் உண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஆதவன் எப்பொழுதும் போல விரைவாக உண்டு முடித்து விட்டான்.

இன்னம் தாமரையின் தட்டில் உணவு அப்படியே இருக்க.. தான் இருப்பதால் விரைவாக உண்ண வரவில்லை போல என நினைத்து, “நான் எழுந்துக்கறேன்” என்று சொல்லி எழுந்துப் போக…. அவன் சென்று விட்டதை உறுதி செய்து, 

“ஹப்பா” என்று பெருமூச்சு விட்ட தாமரை… “நான் என்ன காமெடியா பண்ணினேன்! சிரிச்சாராம்..! இவரை யாரு எப்போ சிரிக்க வேணாம்னு சொன்னதாம்! யாருக்குத் தான் கஷ்டமில்லை.. எல்லோரும் சிரிக்காமையா இருக்காங்க! இவர் கூட தான் ஆறு மாசமா என்கூட சரியா பேசலை, இவங்கம்மா ரூல்ஸ் ஸா போட்டாங்க! நான் சிரிக்காமையா இருந்தேன்?” என்று தனக்குத் தானே பேச.. 

உண்ணும் இடத்தில் செல் ஃபோன் மறந்து வைத்து சென்றிருந்த ஆதவன் அதை எடுக்க வேண்டி மீண்டும் வர, அவளின் வார்த்தைகள்  அவனின் காதில் தெளிவாக விழுந்தது.

அவளின் பேச்சில் புன்னகை அரும்ப, மீண்டும் அவளின் எளிமை கவர, வந்த சுவடு தெரியாமல் மீண்டும் திரும்பினான்.  தாமரை எளிமையானவள் மட்டுமல்ல மிகவும் நேர்மையானவள், அவளின் அப்பா பிறந்தில் இருந்தே அவளுள் விதைத்து வளர்த்த ஒன்று. 

மீண்டும் ஆதவன் தரையில் படுக்க.. தாமரை வேறு வழியின்றி மெத்தையில் படுத்தாள். “உன் கால் புண் எப்படி இருக்கு?” என்றான் திடீரென்று.

“நல்லாயிருக்கு!” என்றவளைப் பார்த்து “எங்க காட்டு” என்று எழுந்து அமர..  அவன் ஒரு பக்கம், இவள் ஒரு பக்கம், நடுவில் குழந்தைகள்,

“எனக்குத் தூக்கம் வருது, நாளைக்குக் காட்டட்டுமா?” என்றாள்.

“சரி” என்று ஒரு தலையசைப்பைக் கொடுத்தான்.

தாமரையின் பாவனைகளில் பேச்சுக்களில் மனது மிகவும் லேசாகியிருக்க.. கூடவே பிடித்த தொழிலுக்கு மீண்டும் போகப் போகிறோம் என்ற உற்சாகம் எல்லாம் சேர்த்து நன்கு ஆழ்ந்த உறக்கம் அவனிற்கு அன்று.

அடுத்த நாள் விடுமுறை தினம் என்பதால்… ஆதவனின் உறக்கமும் கலைக்கப் படவில்லை… பிருந்தாவையும் தாமரை எழுப்ப வில்லை. அப்பாவும் மகளும் எட்டு மணிக்கு மேலும் உறங்கிக் கொண்டு தான் இருந்தனர்.

ரூமை வெளியில் இருந்து சாத்தியிருந்தாள்.  இல்லையென்றால் அஸ்வதியோ மித்ராவோ அவர்களை எழுப்பி விடுவர் என்று.

தம்பிக்கு மகன் பிறந்திருப்பதால் அதைப் பார்பதற்காக அன்று ஆதவனின் தங்கை குழலி வருவதாக இருந்ததால், மரகதம் எழுந்ததில் இருந்து பரபரப்பாக இருந்தார்..

அதை செய்! இதை செய்! என்று காலையிலிருந்தே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. மேல் வேலைக்கு ஒரு பெண்ணைக் கூட  வர சொல்லியிருந்தார்.

அதனால் அதிக வேலைகள் என்றாலும் உதவிக்கு ஆள் இருக்க தாமரை செய்து கொண்டிருந்தாள்.

ஒரு பக்கம் மெதுவடைக்கு கிரைண்டரில் ஓடிக் கொண்டிருக்க… ஒரு பக்கம் சாம்பார் குக்கரில் இருக்க… இன்னொரு பக்கம் இட்லி வேக.. இன்னொரு பக்கம் சட்னிக்கு மிக்ஸ்யில் அரைத்துக் கொண்டிருந்தாள் தாமரை. அதற்கு சற்று முன் தான் கேசரியை கிளறி முடித்திருந்தாள்.

அஸ்வதியும் மித்ராவும் அந்த இடத்தை விட்டு அசைவேணா என்று அங்கே அமர்ந்தபடி தான் விளையாடிக் கொண்டு இருந்தனர். இன்னும் குழந்தைகள் இருவரையும் குளிக்க வைக்கவில்லை.

அவர்களின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டு, சமைத்துக் கொண்டு என்று பரபரப்பாக தாமரையும் இருந்தாள்.

சட்னி அரைத்து, வடைக்கு கிரைண்டரில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தாள். குளித்த உடனே வேலைகள் ஆரம்பமாகிவிட்டன, ஒரு நூல் புடவையில், ஒப்பனைகள் எதுவுமின்றி ஒரு பொட்டை மட்டும் வைத்து.. நேற்று வாரிய தலையை ஒதுக்கி மட்டும் விட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.    

அதற்குள் அவர்கள் வந்துவிட…  மரகதம் வந்து “வா!வா! அவங்களை வரவேற்றுட்டு தண்ணி கொண்டு வா!” என்று சொல்லிப் போக..

அவசரமாக கைகளைக் கழுவி… “வாங்கம்மா! வாங்கண்ணா! வாங்கண்ணி! என்று சொல்ல.. குழலியின் மாமியார், அவளை மரியாதையாகப் பார்த்து புன்னகைக்க, குழலி முக மலர்ச்சியோடு அவளைப் பார்த்து சிரிக்க… அவளின் கணவன் ஸ்ரீனிவாசன் ஒப்புக்கு தாமரையைப் பார்த்து தலையசைத்தான்.

பணத்தின் மீது அதிக பற்றுள்ளவன், அந்தப் பசை உள்ளவர்களிடம் மட்டும் எப்போதும் பேசி சிரிப்பவன், ஆட்களும் பளபளவென்று இருக்க வேண்டும்.. உழைப்பின் களைப்போ, இயற்கை அழகோ தெரியாதவன். தாமரை வேலைகளில் வியர்த்து விறுவிறுத்து அலுங்கி இருக்க, ஏதோ வேலையாளின் மரியாதையை ஏற்பது போல ஏற்றான்.  

அதிகம் அவர்கள் வருவதில்லை, தாமரைக்குத் திருமணம் ஆனதில் இருந்து ஒரு இரண்டு முறை வந்திருப்பார்.

ஸ்ரீனிவாசன் அரசாங்க ஊழியன்.. R T O அதானது … ஆய்வாளர், வட்டாரப் போக்குவரத்துக் கழகம் அவனின் பணி. எப்போதும் தங்கள் தொழிலில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்திப்பதால் அழகர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவனாகப் பார்த்து தேடி, சீர்வரிசைகளைக் கொட்டி உடல் முழுவதும் நகைகளை பூட்டி பெண் கொடுத்தார்.

குழலி ஆதவனுக்கு இளையவள், சேரனுக்கு மூத்தவள்.. இரண்டு ஆண் மக்கள் அவளுக்கு, ஒருவனுக்கு பன்னிரெண்டு, இன்னொருவனுக்கு பத்து வயது.

மக்கள் சகிதம் தான் வந்திருந்தனர். கூட ஸ்ரீனிவாசனின் அம்மாவும் வந்திருந்தார்.

அவர்கள் வந்த சமயம் தான் சேரன் வீட்டிற்கு குளிக்க வந்திருந்தான்.

தாமரை இவர்கள் வந்து விட்டதால் கதவை திறந்து ஆதவனை எழுப்பினாள்.

எழுந்து வந்தவன் தனித்தனியாக எல்லோரையும் வரவேற்க… ஆதவனின் சமீபத்திய தொழில் இறக்கங்கள் ஸ்ரீநிவாசன் அறிந்ததே.. அதனைக் கொண்டு சற்று இளக்காரம்.

“என்ன மச்சான் இன்னுமா தூக்கம்? நாங்க திருச்சில இருந்து காலையில கிளம்பி வந்துட்டோம். நீங்க உங்க ரூம் கதவை திறந்து வர இவ்வளவு நேரம்.. வாழ்க்கையில வேகம் ரொம்ப முக்கியம் மாப்பிள்ளை”.

குழலி பதறி அண்ணனுக்கு கோபம் வந்து விட்டதோ என்றுப் பார்க்க..

ஸ்ரீநிவாசனைப் பற்றி தெரிந்தவனாக, ஆதவன், கோபப்படாதே மனமே என்று அவனுக்கு அவனே சொல்லி, சற்றும் அலட்டிக் கொள்ளாமல்… “R T O ன்னு காட்டுறீங்க மச்சான் வேகத்தைப் பத்தி பேசி.. ஆனா நீங்க தானே சொல்றீங்க மித வேகம் மிக நன்றுன்னு.. யாரையும் இடிச்சி தள்ளி ஆக்சிடன்ட் பண்ணக் கூடாது.. அதுதான் லேட்” என்று இயல்பாக பேச.

எதையும் குதர்க்கமாக எடுத்துக் கொள்ளும் இயல்பினன் என்பதால், 

“அதென்னவோ மச்சான், சாவைப் பத்தி உங்களுக்குத் தான் தெரியும்.. இப்போதானே பொண்டாட்டியை சாகக் குடுத்து இருக்கீங்க!” என்று ஸ்ரீநிவாசன் சொன்னவுடன் வீட்டில் அப்படியே பேச்சுக்கள் நின்று ஒரு அமைதி.

ஆதவன் கண்களை மூடி அந்தப் பேச்சினை, அதன் சாரம்சத்தை சகிக்க முற்பட்டான். இயல்பிற்கு வந்து கொண்டிருந்த அவனின் நிலை மீண்டும் மாற முற்பட்டது.  முகம் சட்டென்று இறுகி விட… 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த தாமரைக்கு மனது பதறியது.

 

Advertisement