Advertisement

அத்தியாயம் எட்டு :

அன்று இரவு மரகதம் வீட்டிற்கு வரும் போது மணி எட்டு. அவருடன் தான் அழகரும் வந்தார். ஆதவன் எங்கும் வெளியே செல்லவில்லை. பிருந்தா அப்பா “எங்கயும் போகாதீங்க! இங்கயே இருங்க!” என்று சொல்லியிருக்க வீட்டில் தான் இருந்தான்.

மகளுக்கு செஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான். அஸ்வதி தந்தையின் மடியில் அமர்ந்திருக்க.. மித்ரா எப்பொழுதும் போல  தாமரையிருக்கும் இடம் அமர்ந்து..  அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வா! வா!” என்று பிருந்தாவும் , ஆதவனும் கூப்பிட்டும், “போ! போ!” என்று தாமரை சொல்லியும் மித்ரா அருகில் செல்லவில்லை.

அவன் வீட்டில் இருப்பதை மரகதமும் அழகரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். தாமரையைத் திருமணம் செய்த நாளாக அவன் வீட்டில் இருந்ததே இல்லை.

அழகர் “ஏன் ஆதவா வீட்ல இருக்க, குழந்தையைப் பார்க்க வரலை” என்று யதார்த்தமாகக் கேட்க…

“யார்க் கிட்ட சொன்னீங்க” என்றான்.

“என்ன? சேரன் சொல்லலையா!” என்றார்.

“என்கிட்டே சொன்னா மட்டும் போதுமா” என,

சட்டென்று விஷயம் புரிய, “தாமரைக் கிட்ட சொல்லலியா.. தப்பாச்சே!” என்று மனைவியைப் பார்த்தார்.

“மறந்திருப்பாங்க!” என்று அசால்டாக சொல்ல,

“தப்பு மரகதம்! வீட்ல இருக்குறவங்களுக்கு சொல்ல வேண்டாமா!” என்று அழகர் சொல்ல..

“அதான் மறந்திருப்பான்னு சொல்றேன் இல்லை! நான் சொல்ல வேண்டாம்னு எல்லாம் சொல்லலை” என்றார்.

“நீ சொல்ல வேண்டாம்னு சொல்லலை! ஆனா யார் யாருக்கு சொல்லணும்னு நீ தானே லிஸ்ட் போட்டுச் சேரன் கிட்ட கொடுத்த”

“கொடுத்தேன்! ஆனா அதுல நான் ஆதவன் பேர் கூட சொல்லலையே.. அவனுக்கு சொன்னான் தானே, அப்போ தாமரைக்கும் அவன் சொல்லியிருக்கணும்! மறந்திருப்பான்!” என்றார் அப்போதும் மகனை விட்டுக் கொடுக்காமல்.

“எப்படி? தாமரைக் சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்ல மட்டும் மறக்கலையா?” என்றான்.

மரகதம் பதில் பேசாமல் இருக்க…

தாமாரை அங்கிருக்க “நீ உள்ள போ!” என்றான் அவளைப் பார்த்து.

எதற்கு என்று புரியாத போதும் தன் பெற்றோரிடம் ஏதோ தனியாக பேச விருப்பப் படுகிறான் என்று நினைத்தாள். ஆனால் தன்னைப் பற்றி என்று நினைக்கவில்லை. உள்ளே சென்று விட்டாள்.    

“நேத்து எவ்ளோ பா வசூல் பண்ணிக் கொடுத்திருக்கேன்”

“பன்னிரெண்டரை லட்சம்”

“உங்க பொண்டாட்டிக் கிட்ட சொல்லி தாமரைக்கு கொஞ்சம் மிச்சம் மீதி ஆகறதை போடாம, நல்ல சாப்பாடா போட சொல்லுங்க” என்றான். சொல்லும் போதே குரலில் அவ்வளவு அடக்கப்பட்ட ஆத்திரம்.       

 அழகர் விழித்தார் “என்ன இது?” என்பது போல.

“ராத்திரி நான் வீட்டுக்கு தினமும் பதினோரு மணிக்கு மேல வர்றேன். எனக்கு இவ டிஃபன் செஞ்சு போட்டுட்டு மீதியான சாப்பாடை சாப்பிடறா, அது நீர் விட்டுப் போய் வாசனை வருது. அதுல தண்ணி ஊத்தி சாப்பிடறா. என்னப்பா இது? என்ன நடக்குது வீட்ல? நம்ம ஒரு நல்ல சாப்பாடு போடக் கூட வக்கிலாம போயிட்டோமா இல்லை என் பொண்டாட்டிக்கு இது போதும்னு நினைச்சிடாங்களா?”

அழகர் மரகதத்தைப் பார்க்க “சாப்பாடு வேஸ்ட் ஆகும்னு சொன்னேன்” என்றார் தடுமாறியபடி. உண்மையில் அதற்கு தான் சொல்லியுமிருந்தார்.   

“அவளுக்கு அந்த மாதிரி ஒரு சாப்பாடை குடுத்துட்டு நான் நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன்னு நினைக்கும் போது.. நானும் ஆம்பளைன்னு மீசையை முறிக்கிக்கிட்டு  சுத்திட்டு இருக்கேன்”

“இதுல உனக்குச் சம்பாதிக்க வக்கில்லைன்னு உன் பொண்டாட்டி சொல்றான்னு சொல்றாங்க… அப்பா! இது வீடு! அரசியல் பண்ற இடமில்லை.. இப்படி பேச்சு எல்லாம் இங்க இருக்கக் கூடாது அம்மா கிட்ட தெளிவா சொல்லிவைங்க”.

“சுகன்யான்னா வேற.. அவளும் அம்மாவை எதிர்த்து எதிர்த்து பேசுவா. ஆனா தாமரை வாயைத் திறக்கறது இல்லை. என்ன சொன்னாலும் செய்யறா. அவக் கிட்ட இப்படி எல்லாம் நடக்க வேண்டாம்னு சொல்லுங்க, மீறி நடந்தா.. அப்புறம் நம்ம உறவுக்குள்ள பிளவு தான் வரும்” என்றான் தெளிவாக..

இப்போது தான் மகன் வீடு வந்து சேர்ந்திருக்கிறான். மீண்டும் இப்படியா என்று நினைத்த அழகர் மனைவியை முறைக்க, “இல்லையில்லை சாப்பாடு வீண் ஆகுதுன்னு தான் சொன்னேன்” என்றார் மீண்டும்.      

“ஏன் வீண் ஆகுது? அரிசி கம்மியா போடச் சொல்லு. அப்படியும்  ஆனா நீ சாப்பிட வேண்டிது தானே” என்றார் அழகர்..

“இல்லை! எனக்குப் போடு! அதை விட்டு நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணுங்க கிட்ட இப்படி செய்வியா.. நம்மளும் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சி கொடுத்திருக்கோம். அவளுக்கு இப்படிச் சாப்பிட சொன்னா ஒத்துக்குவியா..”

“அவங்கப்பாக்கு தெரிஞ்சது நம்மளை நிக்க வெச்சு கேள்வி கேட்பான்.. மிலிட்டரி காரன்டி அவன்.. எப்படி ரெண்டாம் தாரமா நம்ம பயலுக்குப் பொண்ணைக்  கொடுத்தான்னு இப்பவும் எனக்கு யோசனை தான்”.    

“நான் ஒரு ரெண்டு தடவை சொன்னேன். அதையே அவ செய்வான்னு எனக்கு எப்படித் தெரியும்.. தோ இவன் பொண்டாட்டி கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. இப்போ சுமதி கிட்ட சொல்றேன் யாரும் செஞ்சது இல்லை.. இவ அதையே இத்தனை நாளா செய்வான்னு எனக்கு எப்படி தெரியும்”.   

“என்ன மரகதம் பேசற நீ.. டீ வீ யைப் பார்த்து பார்த்து அதுல வர்ற கொடுமைக்கார மாமியார் ஆகிடியா.. உனக்கு சுகன்யாக்கும் எப்பவும் ஆகாது ஏட்டிக்குப் போட்டியா பேசுவீங்க, செய்வீங்க!”

“ஆனா தாமரை ஒரு வார்த்தை திரும்பக் கூடப் பேசறது இல்லை .. அந்தப் பொண்ணு கிட்டயும் இப்படி நடந்துக்கறயே…”

“ரெண்டு மருமகளும் உனக்கு எப்பயாவது சமையல் வேலையில இருந்து விடுவிச்சு இருக்காங்களா. இந்த பொண்ணு வந்த நாளுல இருந்து நீ சமையல் கட்டுப் போய் இருப்பியா”

“இந்த ஆறு மாசமா தான் வேலை குறைஞ்சு நிம்மதியா இருக்க.  நீ செய்யறது சரியா நீயே முடிவு பண்ணிக்கோ. யாரும் சொல்லி, திட்டி, செய்யற வயசை நீ தாண்டிட்ட” என்றார் கடுமையாக.

மரகதம் அமைதியாக தான் இருந்தார்.

“உனக்கு எப்படித் தெரியும் தாமரை சொல்லிச்சா” என்றார் ஆதவனை பார்த்து.

“ப்ச்! இல்லைப்பா! நானாப் பார்த்தேன். அவ எதுவும் சொல்றது எல்லாம் இல்லை”    

“நீயும் கொஞ்சம் கவனிச்சு பார்த்துக்கோ! ஆறுமாசமா அந்தப் பொண்ணு எங்கயும் போய் நான் பார்க்கலை..” என்றார் மகனுக்கும்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே வீட்டின் பெல் அடிக்கப் பட்டது. கதவு திறந்திருக்க யார் பெல் அடிக்கிறார்கள் என்று எழுந்து போய் ஆதவன் பார்க்க… அங்கே மிலிட்டரி முருகேசன் நின்று கொண்டிருந்தார். தாமரையின் தந்தை.

“வாங்க! வாங்க மாமா!” என்றான் சிறு புன்னகையுடன். முன்பும் புன்னகைப்பான். ஆனால் அதற்கு இதற்கும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.

“பயபுள்ள என்னடா நம்மைப் பார்த்து இந்த சிரிப்பு சிரிப்பு சிரிக்குது!” என்று புன்னைகைக்கே நினைத்தார் முருகேசன். இந்த ஆறு மாதமாக பார்த்துத் தானே இருந்தார். பேச்சு புன்னகை எல்லாம் கடமைக்கே என்பது போல தான் இருக்கும். இன்று ஏதோ வித்தியாசம் தெரிந்தது.  

“தாமரை!” என்று அவளையும் சத்தமிட்டு கூப்பிட்டு, “வாங்க” என்று உள் அழைத்துச் சென்றான். 

“என்ன இந்த நேரத்தில்?” என்று அழகரும் மரகதமும் நினைத்த போதும் “வாங்க சம்மந்தி” என்றனர்.

மரகததிற்கு உள்ளூர ஒரு நடுக்கம் கூட, இந்தப் பெண் தன் தந்தையிடம் சாப்பாடைப் பற்றி சொல்லி விட்டதோ? அதற்கு தான் இவ்வளவு அவசரமாக இந்த நேரத்திற்கு வந்து விட்டாரோ என்று தோன்றியது.

“அப்பா” என்று முக மலர்ச்சியோடுத் தாமரை வர.. மித்ரா அப்போதும் தாமரை பின் தான் நின்றாள். மித்ரா என்று அவர் ஆசையோடு அழைக்க.. போகவில்லை.

“போ! போ மித்து!” என்று வலுக்கட்டாயமாக மித்ராவை அவரிடம் தாமரை விட.. அவர் தூக்கவும் ஏறியவள்.. சில நொடிகளிலேயே இறங்கி தாமரையிடம் வந்து விட்டாள்.

“உங்க அக்கா எங்க? தங்கை எங்க?” என்று மித்ராவிடம் கேட்க… உள்ளே ஓடிச் சென்று பிருந்தாவையும் அஸ்வதியையும் அழைத்து வந்தாள்.   

“பெரிய பேத்தி எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் தாத்தா!” என்று பிருந்தா சொல்ல…

வாசலில் வைத்திருந்த திண்பண்டங்கள் நிறைந்த பையைத் தூக்கி வந்து கடைக் குட்டியான அஸ்வதியிடம் தான் நீட்டினார். அந்தப் பை அவளின் உயரத்திற்கு இருந்தது.

“பெரிய பேத்தி வாங்க பிடிச்சிக்கோங்க!” என்று சொல்ல.. “மித்ரா வா!” என்று மித்ராவையும் அழைத்து பிருந்தா அதை சமையல் கட்டிற்கு கொண்டு போனாள்.

இதையெல்லாம் பார்த்திருந்த அழகர் மரகதத்தை முறைத்துப் பார்த்தார். “நீ என்ன செய்திருக்கிறாய் பார்” என்று அவரின் கண்கள் குற்றம் சாட்டியது. “அவரின் பேத்திக்குக் கொடுக்காமல்.. உன் பேத்திகளுக்கு கொடுக்கிறார், நீ அவரின் மகளுக்கு என்ன செய்திருக்கிறாய்?” என்று கேள்விக் கேட்டது.

“நின்னு கிட்டே இருக்கீங்க. முதல்ல உட்காருங்க!” என்றான் ஆதவன்.

“தாமரை டிஃபன்க்கு ரெடி பண்ணு” என்று கூடவே சொல்ல..

“இல்லை! இல்லை வேண்டாம்! பார்த்துட்டு கிளம்பலாம்னு தான் வந்தேன்.. காலையில வந்திருந்தா அவங்கம்மாக் கூட வந்திருப்பா.. எனக்கு இன்னைக்குன்னு பார்த்து கிளம்ப முடியாதபடி வேலை.. பெரிய பொண்ணு வீட்டுக்குப் போயிட்டு இப்ப இங்க வந்திருக்கேன்.. ஊர்ல அடுத்த வாரம் திருவிழா! எல்லோரும் குடும்பத்தோட வரணும்.. நேரமாகிடுச்சு.. கடைசி பஸ் போயிடும்” என்று அவர் அவசரப்பட,

“முதல்ல நீங்க உட்காருங்க..  தாமரை டிஃபன் செய்.. பஸ் போனா போகுது. உங்களை ஊருக்கு அனுப்ப வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

எப்போதும் “வாங்க” என்று மரியாதையாக ஒரு வார்த்தைச் சொல்லி வேறு பேச மாட்டான். இன்று இவ்வளவு பேசுகிறான். எந்த போதி மரத்தடியில் இவருக்கு ஞானம் வந்தது என்று விழி விரித்துப் பார்த்த தாமரை.. “அச்சோ! நாம் ஏன் புத்தரைப் பற்றி நினைக்க வேண்டும் … அவர் இக வாழ்வை விட்டு சென்றவர் அல்லவா… நினையாதே மனமே!” என்று அவளுக்கு அவளே நினைத்து தலையில் வேறு குட்டிக் கொள்ள..

ஆதவனும் பார்த்தான், முருகேசனும் பார்த்தார். “என்ன கண்ணு?” என்று அப்பாக் கேட்க… “ஒன்னுமில்லைப்பா! இன்னும் தண்ணிக் கூட கொடுக்கலைன்னு” என்று அசடு வழிந்து சென்றாள்.

அழகரும் மரகதமும் கூட வியந்து தான் பார்த்தனர்.. இத்தனை நாட்களாக தெளிவற்று சுற்றிக் கொண்டு இருந்தவன், இரண்டு நாட்களாக சற்று தெளிவாக இருக்கிறான் என்று. சுகன்யா இறந்த போது மிகவும் மோசம் எதிலும் பற்றற்று இருந்தான்.

குழந்தைகள் தான் அவனை சற்று நடப்பிற்கு கொண்டு வந்தனர். குழந்தைகளைக் காட்டி மிரட்டி தான் இந்த திருமணமும். ஆனாலும் இத்தனை நாட்களாக ஒரு ஒட்டியும் ஒட்டாத தன்மை, இரண்டு நாட்களாக சற்று மறைந்து இருந்தது.

பெற்றவர்கள் இருவருமே அவசரமாக கடவுளிடம் மனு செய்தனர். இனி எப்போதும் அவன் இப்பொழுது மாதிரி நன்றாக இருக்க வேண்டும் என்று.

அழகர் முருகேசனிடம்.. “நானே உங்களைக் போன்ல கூப்பிடணும்னு இருந்தேன். நம்ம சின்ன பயலுக்கு பையன் பொறந்திருக்கான் காலையில” என்றார்.

“ரொம்ப சந்தோசம்.. காலையில கூடத் தாமரை போன்ல பேசிச்சே, சொல்லலை! சொல்லியிருந்தா அவங்கம்மாளையும் கூட்டிகிட்டு வந்திருப்பேன்” என்றார்.

“அது மறந்துட்டேன்பா!” என்றாள் தாமரை.. “இவங்க என்கிட்டயே சொல்லலை” என்றா சொல்ல முடியும்…

பின்பு அப்பாவிற்கு சமைக்கச் சென்று விட..

மித்ராவை “வாடா கண்ணு” என்று முருகேசன் வித விதமாக அழைக்க, சமையல் அறை வாயிலில் நின்று பார்த்து தான் இருந்தாள்.. வரவேயில்லை.

“அங்க ஊர்ல கூட உங்கக்கிட்ட வரமாட்டாளா?” என்று ஆதவன் கேட்க..

“ம்கூம்! தாமரை விட்டு யார்க்கிட்டயும் வர மாட்டா.. அவ இல்லாத போது தாமரை அம்மாக் கிட்ட போவா அவ்வளவு தான், ரெண்டு வயசு இருக்கும் போது.. ஒரு ரெண்டு நாள் தாமரைக்குக் காய்ச்சல். குழந்தைக்கும் காய்ச்சல் வந்திடும்ன்னு நாங்க பக்கத்துல விடலை! அவ்வளவு தான் மித்ராவை ஒரு வாரம் பெட்ல சேர்க்கற மாதிரி வந்துடுச்சு! ஆச்சு போச்சுன்னு ஆகிடுச்சு!” என்று அவர் சொல்ல…

சின்ன வயது ஏன் இப்படி இரண்டாம்தாரம் என்று சில முறை யோசித்த ஆதவனுக்கு மித்ராவிற்காகத் தான் எல்லாம் என்று புரிந்தது. கவனித்து பார்த்த போது மித்ரா தாமரையின் பின் சுற்றுவதும் அவளை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தூக்கு என்று சொல்வதும் தெரிந்தது.

அவளை தூக்கி விட்டால் அஸ்வதி உடனே நானும் என்பது போல போவது தெரிந்தது. 

பிருந்தாவை அழைத்து “போடா, ரெண்டு பேரையும் இங்க கூட்டிட்டு வா” என்று அனுப்பினான்.

அதன் பிறகு அழகர் முருகேசனுடன் பேசிக் கொண்டிருக்க.. சம்மந்திகள் அமர்ந்து இருவரும் உணவு அருந்த.. உண்டு முடித்ததும் அவர்களின் செங்கல் சூளைக்கு எப்போதும் வரும் வேன் டிரைவரை அழைத்து… “அய்யாவை கொண்டு விட்டுட்டு வா” என்று சொல்லி அவனின் புல்லட்டைக் கொடுத்தான்.

மதுரைக்கு பக்கத்தில் இருந்த ஒரு கிராமம் தான் தாமரையினையுடையது. ஆனால் பஸ் குறிப்பிட்ட சமயம் மட்டும் தான் வரும். அதுவும் கடைசி பஸ் எட்டு மணிக்கு பிறகு இல்லை. மெயின் ரோடில் இறங்கி கிட்ட தட்ட மூன்று கிலோமீட்டர் உள் செல்ல வேண்டும்.

“பரவாயில்லைங்க, நான் ரோட்ல இருந்து நடந்து போய்க்குவேன்!” என்று அவர் மறுக்க மறுக்க..

“சொன்னா! கேளுங்கப்பா! தனியா எல்லாம் நடந்து போகாதீங்க!” என்று சற்று அதட்டலாகப் பேசினாள் தாமரை… இவள் இப்படிக் கூடப் பேசுவாளா என்று ஆதவன் பார்த்திருக்க..  

“மிலிட்டரி காரன்மா! எனக்கு என்ன பயம்..!”

“அதுதான் பா என் பயம். அதுக்கு தான்பா சொல்றேன். உங்களுக்கு பயமில்லை.. நீங்க நடந்து போகும் போது ரோட்ல ஆயிரம் நடக்கும். தட்டிக் கேட்கறேன் பேர்வழின்னு நீங்க கிளம்பி வேண்டாதா பிரச்சனையெல்லாம் இழுத்து விட்டுக்குவீங்க..  என் நாடு, என் தேசம்ன்னு கிளம்புவீங்க! போங்க! சொல்றதை செய்ங்க!” என்றாள்.

இப்போது மரகதமும் பார்த்தார்.. “நான் பேசுவதற்கு ஒரு வார்த்தை மறுத்துப் பேசமாட்டாள்.. நான் சுபாவம் அப்படி என்று நினைத்திருக்க என்னிடம் தான் பேசுவதில்லையா” என்று பார்த்திருந்தார்.  

இத்தனை நாட்களில் இன்று தான் சற்று மன நிறைவோடு அவர் தன் பெண் வீட்டில் இருந்து கிளம்பினார் “நாளைக்கு அம்மாவைக் கூட்டிட்டு வரேன், பொறந்த குழந்தையைப் பார்க்க” என்று சொல்லியபடி.

“இன்னைக்கு தானேப்பா வந்தீங்க. நாளைக்கே அலைச்சல் படாதீங்க.. ஒரு ரெண்டு நாள் போகட்டும்” என்றாள் அவரிடம் சென்று மெதுவாக.

“ஐயோ கண்ணு! சம்மந்தக்காரங்க வீட்ல எல்லாம் இப்படித் தள்ளி போடக் கூடாது” என்று சொல்லியபடி அவரும் கிளம்பினார்.

“அப்பா நாளைக்கு வரும் போது மித்ரா வோட பாஸ் புக் எடுத்துட்டு வாங்க…, அந்த அக்கௌன்ட் டோட ஏ டீ எம் கார்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க” என்றாள்.

எதற்கு என்றெல்லாம் அவர் கேட்கவில்லை.. “சரி” என்று சொல்லியபடி அவர் போய் விட..

அதைக் கேட்டிருந்த ஆதவன் தான் “எதுக்கு பாஸ் புக்” என,

 “மித்ராக்கு ஃபீஸ் கட்ட”  என்றாள் தயங்கி தயங்கி.

“என்ன?” என்று ஒரு நிமிடம் நின்று விட்டான்..  அவன் முகம் கோபத்தில் சிவந்தே விட்டது. மாநிறம் கருமை நிறமாக மாறிவிட்டது அவ்வளவு கோபம்.       

அவனின் முகம் காட்டிய கோபத்தில் தாமரை பயந்து நின்று விட்டாள்.

 

Advertisement