Advertisement

அத்தியாயம் மூன்று :

ஆதவன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை பழகுவதில்லை என்பதை விட மித்ராவிடம் இன்னும் பேசுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தாமரைக்கு.

ஏக்கமாக பார்த்து நின்ற மித்ராவிடம் “நீ வாடா செல்லம்” என்று அவளை தூக்கி உள்ளே போக… அவளை தூக்கி வைத்திருப்பதை பார்த்து அஸ்வதி சிணுங்க ஆரம்பித்தாள்.

மித்ராவை இறக்கிவிடலாம் என்றால் அவளும் கழுத்தைக் கட்டிக்கொண்டு இறங்க மறுக்க.. தாமரை தான் தவித்துப் போனாள், சில சமயம் இப்படித் தான் ஆகிவிடும்.

என்ன செய்ய முடியும்.. பார்த்துக் கொண்டு இருந்த மரகதம், அஸ்வதியை தூக்கினார். பின்னர் அவர் சென்று குழந்தையை அழகரிடம் கொடுத்து வேறு ஏதாவது நறுக்கி கொடுக்க வேண்டுமா என்று தாமரையிடம் கேட்க,

“மதியத்துக்கு தான் வேணும், இப்போ இது போதும்” என்று சொல்லி விட, 

அத்தனை பேருக்கும் ஒற்றை ஆளாய் மித்ராவை இடுப்பில் வைத்த படி சமைத்துக் கொண்டிருந்தாள். சுமதிக்கு இப்போது நிறைமாதம் என்பதால் தாமரையே அவள் வந்தாலும் “நீங்க போங்க” என்று விடுவாள்.

எப்போதும் மரகதம் மேல் வேலைகள் மட்டும் தான் செய்வார், மூட்டு வலி ஆரம்பித்து இருப்பதால் நின்று சமைக்க வெல்லாம் மாட்டார். அதுவுமன்றி தாமரையின் சமையல் நன்றாக இருப்பதால் எல்லோரும் அவளே சமைக்கட்டும் என்று விட்டு விடுவர்.

அவள் சமையல் கட்டில் வேலையில் இருக்கும் போது ஆதவன் வந்து விட, அழகர் அவனிடம் அஸ்வதியை கொடுத்தவர், “ஆதவா” என்று பேச்சை ஆரம்பிக்கும் போதே சேரனும் வந்தமர்ந்தான்.

இருவரும் வரும் போதே விஷயம் பெரிது என்று புரிய, அவர்களே பேசட்டும் என்று பார்த்து இருந்தான்.

சமையல் அறையில் இருந்த தாமரையும் பார்த்து இருந்தாள். அவன் அமர்ந்து இருந்த தோரணை அவனின் பார்வை எல்லாம் ஈர்த்தது அவளை. 

“ஒரு இடத்துல பேமென்ட் இன்னும் வரலைடா.. என்கிட்டே பணமில்லை, இப்போதைக்கு முடியாது, பண்றதை பண்ணுன்னு சொல்றான்” என்றார் அழகர்.

“எவ்வளவு பணம்”

“பண்ணண்டு லட்சம்” என்றான் சேரன்

“என்ன பண்ணண்டு லட்சமா, அவ்வளவு ஏன் பாக்கி விட்டீங்க..”

“எப்பவும் நம்ம கிட்ட வாங்கறவன் தான், சரி குடுத்துடுவான்னு கேட்க கேட்க குடுத்துட்டோம். இப்போ அப்போன்னு சொன்னவன் இப்போ முடியாதுன்னு சொல்றான், என்ன பண்ணணு தெரியலை”

“யாரு அவன்? எனக்கு தெரியுமா?”

“இல்லை! தெரியாது! இந்த மூணு வருஷமா தான் நம்ம கிட்ட தொழில் பண்றான்”

“நான் என்ன பண்ணனும்”

“பணம் வாங்கித் தரணும்” என்றார் அழகர் அவனை பார்த்து செய்வானோ மாட்டானோ என்று யோசித்தபடி தயங்கி தயங்கி சொன்னார்.

ஆனால் ஆதவன் யோசிக்கவெல்லாம் இல்லை “போன் பண்ணுங்க அவனுக்கு…” என்றான் உடனே. 

அப்பா அவனுக்கு போன் செய்வதை பார்த்து இருந்தான். “எடுக்கலை ஆதவா” என்றார்.

“அடிங்க.. திரும்ப திரும்ப அடிங்க, அவன் எடுக்குற வரை அடிங்க..” என்றான் தீவிரமாக. ஒரு காரியம் என்று வந்து விட்டால் முடித்து விட்டு தான் ஓய்வான்.  

“பிரச்சனை எதுவும் வேண்டாம்டா தம்பி, பிரச்சனை பண்ணாம வாங்க முடியுமான்னு பாரு” என்றார் அழகர் பயத்தோடு.

எந்த வம்பு தும்புக்கும் போகாத மனிதர். ஆனால் ஆதவன் நேர் எதிர்…  நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கும் பழக்கமே கிடையாது. பேச்சு தான் குறைவு செயல் அதிகம்

“அப்போ பணம் வரவே வராது, பரவாயில்லையா” என்றான்.

“அப்பா அண்ணன் ஏதோ பண்றாங்க, நீங்க ஏன் வேண்டாம் சொல்றீங்க, எப்படி நம்மை மிரட்டுறான் விடுங்க..”

“என்ன மிரட்டுரானா, எவனுக்கு அவ்வளவு தைரியம், அதையும் வேற நீ சொல்ற, அவனை ஒரு வழி பண்ணியிருக்க மாட்ட, எதுன்னாலும் நான் இருக்கேன். இனிமே இப்படி கேட்டுட்டு வந்து நிக்காத” என்றான் சேரனை பார்த்து.     

“சரி” என்பது போல தலையை ஆட்டியவன்.. “இது பெரிய அமௌன்ட் அதனால அப்பா சொல்றார், முன்ன மாதிரி யாரும் கரக்டா குடுக்கறது இல்லை இந்த மூணு வருஷமா அங்க அங்க நிறைய பாக்கி நிக்குது” என்றான் சேரன்.

“என்ன? ஏன் என்கிட்டே சொல்லலை?”

“நான் கூப்பிட்டேன் நீ எங்களோட வந்துடுன்னு, நீ தானே வரலை” என்றார் அழகர்.

“ஆமாம் இப்பவும் சொல்றேன் வரமாட்டேன்.. ஆனா பாக்கி நிக்குதுன்னு ஏன் சொல்லலை.. தொழிலுக்கு வரமாட்டேன்னு இப்பவும் சொல்றேன் ஆனா உங்களுக்கு வசூல் பண்ண மாட்டேன்னு எப்போ சொன்னேன்”

“நீ இருந்தாலே எல்லோரும் கரக்டா குடுத்துடுவாங்க” என்றார் அழகர்.

“வேணும்னா சும்மா வந்து அப்பப்போ உட்காருரேன், கூட இருக்கேன்னு காட்டிக்கரேன். ஆனா சேர்ந்து எல்லாம் இனிமே முடியாது” என்றான் கறாராக.

“ஹப்பா! எப்படி இவ்வளவு கடினமாக பெற்றவர்களிடம் பேசுகிறான், இப்படி தானோ இவன். என்னுடைய வாழ்க்கையும் இப்படியே முடிந்து விடுமா?” என்ற கவலை அவளையறியாமல் மனதில் உட்கார்ந்தது. 

கேட்டுக் கொண்டு இருந்த மரகதம்.. “யாருடா இவங்க? உன் அப்பா! உன் தம்பி! இன்னும் சண்டை பிடிப்பியா?”

“சண்டை எல்லாம் ஒன்னும்மில்லை.. எதுன்னாலும் சொல்லு செய்யறேன் ஆனா சேர்ந்து தொழில் முடியாது.. அது பத்தி பேசவே வேண்டாம்.. நீங்க தான் என்னை வேணாம்னு சொன்னீங்க வேணாம்னு சொன்னது வேண்டாம் தான்” என்றான் இன்னும் கடினமாக.

“பெத்தவங்க கிட்ட என்ன உனக்கு அவ்வளவு ரோஷம், அப்போ எங்க பேச்சு எதுவும் நீ கேட்க மாட்ட”

“என்ன கேட்கலை? இப்பக் கூட நீங்க சொன்னீங்கன்னு தானே இந்தப் பொண்ணை கல்யாணமே பண்ணியிருக்கேன். அப்புறம் பேச்சைக் கேட்கலைன்னா” என்று அம்மாவிடம் முறைத்து நின்றான்.  

தாமரைக்கு மனம் வெகுவாக முரண்டிக் கொண்டது. “இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கேன் என்று சொல்கிறான். நான் யார் இவனுக்கு. ஆறுமாதமாக அப்போது நான் இவனின் கவனத்தைச் சிறிது கூட கவரவில்லையா.. அப்போது நான் என்ன இவர்களின் வீட்டு வேலைக்காரியும் குழந்தையை கவனிக்கும் ஆயாவுமா..” கண்களில் நீரே வந்து விட்டது.

இதுவரை அவள் இந்த வீடு வந்த நாளாக எதற்கும் அழுததில்லை.. இது நான் தேர்ந்து எடுத்த வாழ்க்கை என்பதில் தெளிவாக இருந்தாள். ஏனோ இன்று அழுகை வந்தது.

ஒன்று மித்ரா இல்லை அஸ்வதி யாராவது ஒருவரை எப்போதும் தாமரை தூக்கி வைத்திருக்க வேண்டும்.. இருவரும் போட்டி போட்டு அவளிடம் தாவுவர். அவளை மேலும் யோசிக்க விடாமல் இப்போதும் அது நடந்தது.

அப்போதுதான் மித்ராவை இறக்கி விட்டிருக்க அஸ்வதி வந்து “தூக்கு” என்பது போல கையை நீட்ட, கலங்கிய கண்களுடன் அவளை தூக்க, அது அவளின் முகத்தை ஆராய்ந்தது.

சாப்பிட வைக்கும் நேரம் ஆகிவிட்டதால்.. மித்ராவிற்கு ஒரு தட்டத்தில் போட்டு அவளிடம் கொடுத்து, அஸ்வதிக்கு ஒரு தட்டத்தில் போட்டு அவளை தூக்கி கொண்டு வீட்டின் பின்புறம் சென்று படியில் அமர்ந்து கொண்டு… மித்ரா அவளாக சாப்பிட அஸ்வதிக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

அவர்கள் உண்டு முடித்த பிறகும் இடத்தை விட்டு அசையவில்லை. அப்படியே அமர்ந்து இருந்தாள். வீட்டின் பின்புறம் சிறு தோட்டம் இருந்தது, பூச்செடிகள் ஒரு புறம், காய்கறி செடிகள் ஒருபுறம், சுமதி அதை நன்றாக பராமரித்து வந்தாள். அதை தாமரை அந்த வீட்டிற்கு வரும் முன்பிருந்தே சுமதிக்கு திருமணம் ஆன நாள் முதலாக செய்து கொண்டிருந்தாள்.

அது சுமதியின் இடம், அங்கே போய் நின்றால் சுமதிக்கு முகம் சுருங்கி விடும். அதனால் வேடிக்கை பார்பதோடு சரி, அதுவும் மித்ராவை அங்கே விட்டால் அங்கிருக்கும் ரோஜா பூக்களை வேறு பறித்து விடுவாள்.

“இங்கல்லாம் வராத பாப்பா, பூ பறிக்கக் கூடாது” என்று சுமதி ஓரிரண்டு முறை மித்ராவை அதட்டுவதை கவனித்த பிருந்தா இவளிடம், “அங்க இவளை விடாதீங்க, சித்தி திட்டுறாங்க!” என்று பெரிய மனுஷியாக சொல்லியிருக்க அங்கே மித்ராவை விடுவதில்லை.

எல்லாம் யோசித்தபடி பூக்களை வெறித்து நோக்கி அமர்ந்திருக்க.. உண்டு முடித்த அஸ்வதி வீட்டின் உள்ளே நழுவியிருந்தது. மித்ரா இவளுடன் சமத்தாக அமர்ந்திருக்க..

உள்ளே அஸ்வதி மட்டும் தளிர் நடையிட்டு வருவதை பார்த்த ஆதவன் அவளை வந்து தூக்கி, “எங்க கன்னுக்குட்டி உங்க அம்மா” என்று கேட்க, அது பின்புறம் கையை காட்டியது.

அவனுக்கு வெளியே செல்ல வேண்டி இருந்ந்தது, தாமரை வந்து தோசை சுடுவாளா என்று பார்த்திருக்க அவள் வரும் வழியாக காணோம்.

அருகில் சென்று தாமரைக்கு கேட்கும் விதமாக “அப்பாக்கு நேரமாச்சு சொல்லுங்க”, என்று அஸ்வதியை இறக்கிவிட, பேச்சு சத்தம் அருகில் கேட்கவும் சட்டென்று திரும்பினாள் தாமரை.

ஆதவன் திரும்பிய தாமரையின் முகத்தில் பார்த்தது, அவளின் கலங்கிய கண்களை தான்.

“என்ன? என்ன ஆச்சு?” என்றான்.

கண்களை அவசரமாக துடைத்தவள் “ஒன்னுமில்லை” என்று எழுந்து உள் சென்று விட.. அவளை நூல் பிடித்து மித்ராவும் அவளின் பின் ஓடியது.

வந்த நாளாக தாமரையின் முகத்தில் ஒரு அமைதி அல்லது ஒரு முறுவல் அல்லது புன்னகை இப்படி தான் இருக்கும். அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் போது சிரித்தபடி தான் இருப்பாள்.

அவள் வந்த புதிதில் பிருந்தா கூட அவளின் அப்பாவிடம் “இவங்க என்ன லூசா? எப்பவும் சிரிச்சிட்டே இருக்காங்க” என்று கேட்டுக் கூட இருக்கிறாள்.

“அப்பாவும் பிருந்தா குட்டியும் சிரிக்க மாட்டோம்! அது நம்மோட இயல்பு! அது மாதிரி அவங்க சிரிச்ச முகத்தோட இருக்காங்க! அவங்க இயல்பு! இப்படி எல்லாம் பேசக் கூடாது. உன் ஸ்கூல உன் ஃபிரண்ட்ஸ் சிரிக்க மாட்டாங்களா? அப்போ இப்படி தான் சொல்வியா” என்று குழந்தைக்கு விளக்கம் சொல்லி யோசிக்க வைத்திருக்கிறான்.

அப்படி இருக்கும் முகத்தில் எதற்கு இந்த கலக்கம் புரியவில்லை. கவலையாகிப் போயிற்று. தன் வார்த்தைகள் தான் தாமரையின் கலக்கத்திற்கு காரணம் என்று புரியவில்லை.

தெரிந்து கொள்ளாமல் வெளியே போகவும் மனதில்லை. மளமளவென்று தோசைகளை தாமரை சுட.. உண்டு முடித்தவன்.. ரூமின் உள் தயாராக சென்றவன்..

அஸ்வதி சிறு குழந்தை என்பதால் … மித்ராவிடம் “அம்மாவை வரச் சொல்லு” என்று சொல்லி சென்றான்.

“அம்மா கூப்பிடறாங்க” என்று மித்ரா வந்து புடவையை இழுக்க.. “யாரு?” என்றாள்.

யார் என்று சொல்லாமல் மீண்டும் மீண்டும் புடவையை இழுக்க.. யார் என்று தெரியாமல் சமையலறையில் இருந்து வர.. அது அவர்களின் ரூமிற்கு இழுத்து சென்றது.

உள்ளே சென்றவள், ஆதவன் அவளை பேச அழைத்து இருப்பான் என்று எண்ணவில்லை, அஸ்வதி ஏதாவது டாய்லெட் போய் விட்டாளோ என்று அவளை அவசரமாக பக்கத்தில் சென்று ஆராய..

“அவ ஒன்னும் பண்ணலை! நான் தான் கூப்பிட்டேன்” என்றான் ஆதவன்.

“என்ன வேணும்?” என்றாள்.

“ஒன்னும் வேணாம்! எதுக்கு அழுத?”

“அழலையே!”

“சரி! அழலை! ஆனா கண்ணு ஏன் கலங்கிச்சு?” என்று பதில் தெரிந்தே ஆக வேண்டி கேட்க,

“ஒன்னுமில்லை” என்றாள் அவளும் அதே தொனியில், பதில் சொல்ல முடியாது என்பது போல பிடிவாதமான குரலில்.

“என்ன தாமரை? சொன்னா தானே தெரியும்!” என்றான்.

“ஹப்பா! இவனுக்கு என் பெயர் கூட தெரியுமா” என்று தோன்றிய போதும் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை. வேறு எங்கோ பார்த்து நின்றாள்.

“யாரவது ஏதாவது சொன்னாங்களா?”

“யார் எது சொன்னாலும் அதை நான் கண்டுக்கறது இல்லை”

“அப்போ நானா! நான் என்ன சொன்னேன்! நான் உன்கிட்ட அதிகம் பேசவேயில்லயே”  

“என்கிட்டே நீங்க எதுவும் சொல்லலை! அப்புறம் நான் உங்களை என்கிட்டே பேச வேணாம்னு சொல்லை!” என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து, கண்கள் அவனை குற்றம் சாட்டுவது போல தோன்ற,

“என்ன சொல்ல வருகிறாள்” என்று புரியாமல் நின்றான்.

 .

 

Advertisement