Advertisement

அத்தியாயம் இரண்டு :

காலையில் கண் விழித்ததில் இருந்து பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருந்த தாமரையைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான் ஆதவன். எப்படி சிறு முக சுளிப்புமின்றி இவளால் வேலை செய்ய முடிகிறது. அவனுக்கு தாமரையை திருமணம் செய்த நாளாக ஆச்சர்யமான விஷயம், அதே சமயம் நிம்மதி கொடுக்கும் விஷயம்.

ஏனென்றால் தாமரையைத் திருமணம் செய்த நாள் முதலாக வீட்டுப் பிரச்சனைகளோ, குழந்தைகளைப் பற்றிய கவலைகளோ இல்லை, எல்லாம் சிறப்பாக பார்த்துக் கொள்கிறாள்.

இந்த வயதிற்கு மேல் இப்படி ஒரு நிம்மதியை கொடுத்த கடவுளுக்கு நன்றி தான், ஆனால் சொல்ல விருப்பமில்லை. சுகன்யாவை இல்லாமல் செய்து விட்டாரே. சுகன்யா அவனின் அத்தை மகள்.. விரும்பித் திருமணம் செய்து கொண்டான்.

ஆனாலும் வாழ்க்கை இனிக்கவில்லை.. எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவுகள் தான். உறவு தான். அம்மாவிற்கும் அவளுக்கு ஆகவே ஆகாது. எப்போதும் ஏறுக்கு மாறாய் செய்வாள்.

அம்மாவிற்கு எல்லாம் கச்சிதமாய் நடக்க வேண்டும்… இவள் எதுவுமே கேட்டுக் கொள்ள மாட்டாள். காலையில் நேரம் கழித்து எழுவாள், வீட்டில் எப்போதும் எழுந்தவுடனே எல்லோரும் குளித்து விட வேண்டும். அது ஆதவன் வீட்டில் எழுதப் படாத விதி. அதன் பிறகு தான் டீ காஃபி பால் கூட அருந்தக் கிடைக்கும்.

எழுந்தவுடனே சுகன்யா குளிக்கவும் மாட்டாள். வேண்டுமென்றே செய்வாள். “நான் எப்போ குளிக்கணும்னுக் கூட அத்தை சொல்வாங்களா? என்னால கேட்க முடியாது” என்று. திருமணமாகி இரண்டு மாதத்திலேயே உண்டாகி விட மசக்கையும் அவளை படுத்தி எடுத்தது தான்.

ஒன்பது மாதம் வரை, ஏன் பிரசவத்திற்கு ஹாஸ்பிடல் போகும் போது கூட வாமிட் செய்து போனாள். “என் வாழ்க்கை என் இஷ்டம்… இருக்கும் நாளில் நான் எனக்காகத் தான் வாழ்வேன் என்ற பிடிவாதம். அதுதான் வாழ்க்கையும் மிக விரைவில் முடிந்து விட்டதோ?”

ஒத்து வரவேயில்லை… மூன்று வருடத்திலேயே தனியாக போனர். மூன்று பிள்ளைகளில் இவன் தான் மூத்தவன். அப்பாவிற்கு அவனை தனியாக அனுப்ப மனதேயில்லை. எப்படியாவது அவனை நிறுத்திக் கொள்ள நினைத்து தனியாக சென்றால் சொத்தில் ஒரு சல்லிக் காசு கிடையாது என்று அப்பா சொல்ல, அவர் சொத்தைப் பற்றி பேசியதும் அந்தக் கோபத்தில் “தேவையே இல்லை” என்று போனான்.

குடும்பத் தொழிலில் இருந்து தனியாக சென்று தொழில் செய்த போது ஏனோ வெற்றிக் கிட்டவே இல்லை…

கடுமையான உழைப்பு தான், ஆனால் எல்லாம் தோல்வி… உப்பு விற்க போனால் மழை, மாவு விற்கப் போனால் காற்று என்பது போல தான் எல்லாம் இருந்தது.

மிகவும் நொந்து போனர்… “என்னால் தான் உங்களுக்குச் சிரமம்” என்று மனதளவில் சுகன்யாவும் மிகவும் சோர்ந்து போனாள்.

“இல்லை! அதெல்லாம் இல்லை! இதெல்லாம் ஒரு கஷ்டமில்லை!” என்றே சொன்னான், அப்படியே நினைத்தான் கூட… எப்போதும் சுகன்யாவை அவனால் என்றும் விட்டுக் கொடுக்க முடியாது.

இப்படியே ஐந்து வருடங்கள் ஓட… இரண்டாம் குழந்தை உருவாக… சற்று தொழிலில் முன்னேற்றம் கூட… குழந்தை பிறந்து மூன்றாவது மாதம்… காய்ச்சல் வர.. என்ன என்று கண்டுபிடிக்கவே நாளானது, மூளைக் காய்ச்சல் என்றனர்.

அப்படியே கோமாவிற்குப் போய் விட்டாள்… மூன்று மாதங்கள் எத்தனையோ சிகிச்சைகள்… லட்சக் கணக்கில் பணம் செலவு.. எப்படியாவது அவளை காப்பற்றி விட முயன்றான்.  தொழிலையும் பார்க்க முடியவில்லை. தெரிந்தவர் அத்தனை பேரிடமும் கடன். 

அவளின் உலக வாழ்க்கை பயணம் அவ்வளவு தான் எனும் போது என்ன செய்வது… அப்படியே கோமாவில் இருந்தபடியே ஆவி பிரிந்தது.

அதிலிருந்தும் அவனால் மீள முடியவில்லை, பண நஷ்டத்தில் இருந்தும் மீள முடியவில்லை… சுகன்யாவிற்கு உடல் நலம் குன்றிய போதே குழந்தைகளை சுகன்யாவின் அம்மா வீட்டில் தான் விட்டிருந்தான். அவனுடைய அப்பாவின் தங்கை தானே. இரு அண்ணன் மார்கள் சுகன்யாவிற்கு தங்கை உயிரோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டனர். அதன் பிறகும் பார்த்துக் கொண்டிருப்பர்.

ஆனால் குழந்தைகளை விட்டு அவனுக்கு என்ன வாழ்க்கை? 

தனியாக ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை அம்மா அப்பாவிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை. ஐந்து வருட தனி வீடு வாழ்க்கை அவனை வீட்டில் இருந்து தள்ளி நிறுத்தி இருந்தது.

“என்னவோ அப்படிப் போன இப்போ என்ன ஆச்சு… உன் பொண்டாட்டி இங்கயே இருந்தா உருப்பட்டு இருப்பா… உன்னைக் கூட்டிட்டு போய் அவளும் செத்து, உன்னையும் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டா” என்ற பரிகாசம் தான்.

உறவுகள் அப்படி தான்.. நன்றாய் இருந்தால் இவனுக்கு வந்த வாழ்வை பாரேன் என்பர். நன்றாய்  இல்லாவிட்டால் இவனுக்கு இது தேவை தான் என்பர்.     

வீடு மட்டும் தான் வந்தான்… தொழில் எல்லாம் வரவில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம்… அவர்கள் கொடுக்க மாட்டேன் என்ற சொத்தும் அவனுக்கு தேவையில்லை என்ற நினைப்பு தான்.

தங்கை ஒருத்தி.. தம்பி ஒருவன்… தங்கை திருமணமாகி இருக்க… தம்பிக்கு அப்போது தான் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. அந்தப் பெண்ணும் உண்டாகி இருக்க.. என் மனைவியால் எல்லாம் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என்று தம்பி சொல்லி விட.. வயதான அம்மா என்னாலும் முடியாது என்று சொல்ல..

வேறு வழியில்லாமல் திருமணம் செய்து ஆக வேண்டிய கட்டாயம். சரி ஏதாவது கணவனை இழந்த பெண், இல்லை விவாகரத்தான பெண் என்று பாருங்கள் என்று சொல்ல.. வீட்டில் ஒத்துக்கொள்ள வில்லை..

“எங்க பேச்சை இப்பவாவது கேளு” என்று அதட்டி திட்டி ஒரு வழியாக பெண் தேட.. அமைந்தவள் தான் தாமரை… என் அண்ணன் மகள் என்பது பிறப்பில், ஆனால் என் மகள் என்பது தான் இனி… அவளோடு என்னை பார்த்துக்கொள்வர் தான் வேண்டும் என்று சொல்ல..

அந்த விஷயம் அவனுக்குத் தெரியாது.. குழந்தையோடு பெண் என்று சொல்ல “சரி” என்று விட்டான்.. ஆனாலும் வயது குறைவாக இருக்க… அதைக் கொண்டு அவளைப் பார்த்தான்.. பார்ப்பதற்கு இன்னம் சிறிய பெண்ணாக இருந்தாள்.. ஆதவன் உயரம்.. தாமரை சராசரி உயரம்.. அவனின் தோளுக்கு தான் வந்தாள். மாநிறம் களையான முகம். ஒல்லியான உடல் வாகு. பார்ப்பதற்கும் நன்றாக இருந்தாள். 

இவ்வளவு வயது வித்தியாசத்தில் திருமணம் ஏன் வேண்டாம் என்று சொல்ல, பேசும் போது தான் அவளின் குழந்தை அல்ல என்றே தெரியும். அச்சோ என்ன இது என்று பதறி விட்டான்.

“இவளுக்கு என்ன மாப்பிள்ளையாக் கிடைக்காது. என்னை ஏன் திருமணம் செய்ய வேண்டும்” என்று தான் உடனே தோன்றியது. மிகவும் ஏழ்மை என்றெல்லாம் சொல்ல முடியாது. சொந்த வீடு இருந்தது. இரண்டு பெண்கள் இவள் தான் இளையவள், மூத்தவளுக்கு நல்ல செல்வாக்கான இடத்திலேயே திருமணம் நடந்து இருந்தது.

பிரசவத்தில் அண்ணி இறந்துப் போக எதிர்பாராத விதமாக, அண்ணன் ராணுவத்தில் இருந்தவன் அவனும் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுப்பட்டு இருந்த போது தீவிரவாத தாக்குதலில் மூன்றே மாதத்தில் இறந்து விட, அன்றிலிருந்து மித்ரா இவளின் பொறுப்பாகி போனால் என்று தெரிய வந்தது.    

சிறிய வயதில் தாமரையின் இந்த முடிவு அவளின் வாழ்க்கையைப் பற்றிய பொறுப்புணர்வைக் காட்டியது. அவளை ஏன் தன்னுடைய வாழ்க்கை சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்று தான் தோன்றியது.     

வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும், வேண்டும் என்று திருமணம் செய்து கொண்டாள்.

மனதில் மிகவும் குற்ற உணர்ச்சியாகப் போயிற்று. அதைக் கொண்டே அவளைப் பார்க்கக்கூடத் தயங்கினான். தம்பியின் மனைவி நிறைமாதமாக இருக்க, நிறைய வேலைகள் அவளுக்கு என்று புரிந்து தான் இருந்தது. அதுவும் மூன்று பிள்ளைகளை பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். ஆனாலும் அவனால் என்ன செய்ய முடியும். அதிலும் தாமரை சிறு குறை கூட சொன்னது கிடையாது.

ஏற்கனவே ஒரு மனைவிக்காக சண்டையிட்டு சென்றாகி விட்டது. இப்போது  இன்னொருத்திக்காக சண்டை போட முடியாது. போட்டால் இன்னம் பிரச்சனைகள் அதிகமாகும். அதனாலேயே அவளைப் பார்ப்பது கூட இல்லை.

கோழையாகிப் போனேனோ வாழ்க்கையில் என்ற கழிவிரக்கம் கூட… ஆதவனா அவன் கோபக்காரன், தைரியமானவன், அவனோடு எந்த வம்பும் வேண்டாம் என்று பார்ப்பவர்கள் ஒதுங்கிப் போகும் நிலை எல்லாம் மாறிப் போயிற்றோ? 

ஆனால் யார் வாயிலும் அரைபடும் தைரியமில்லை. ஏற்கனவே உயிருக்கு உயிரானவளை இழந்தாகி விட்டு… இனி யாரையும் இழக்கும் தைரியமில்லை. அவனுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.

குடும்பத்தில் தாமரையும் மித்ராவும் சேர்த்தி தான். அதைச் சொல்ல அவனுக்கு வராது.. சுகன்யா என்றால் இவனுக்குப் பேசும் அவசியமேயில்லை… அவளே பொரிந்து தள்ளி விடுவாள். தாமரையிடம் என்ன பேசுவது என்று கூட இன்னம் தெரியவில்லை.     

அதனாலும் அமைதி காத்தான்.        

கண்டிப்பாக அவனுக்கு நிறைய நிம்மதி கொடுத்தால் தாமரை ஆனாலும் அவன் சந்தோஷம் சுகன்யா தானே!!!

அவளின் இறப்பு.. கூட அவளின் கடைசி நாட்களில் ஹாஸ்பிடலுக்கு ஆன செலவுகள்… அதனால் ஏற்பட்ட கடன்.. அதற்கு காட்டும் வட்டி என ஒரு பெரும் சுழலில் சிக்கி இருந்தான்.  அதிலிருந்து வேறு பார்க்க முடியவில்லை.  

ஒரு பெண்ணிடம் சரியாக பேசாது இருப்பது தவறு என்று தெரியும். ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை… கேள் என் கஷ்டத்தை என்றா பேச முடியும். இவ்வளவு வயது வித்தியாசத்தில் பெண்ணை திருமணம் செய்து அவளுடைய வாழ்க்கையையும் கெடுத்து விட்டேனோ என்ற குற்ற உணர்ச்சி.

எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல ஓடிக் கொண்டு இருந்தான்.

அவன் பேச வேண்டாம் பார்த்தால் கூட போதும் என்று இன்னும் அவனுக்குத் தெரியவும் இல்லை புரியவும் இல்லை.

சரி அந்த குழந்தை மித்ராவிடம் பழகலாம் என்றால் அது இவனைப் பார்த்தாலே தாமரையின் பின் மறைந்து விடும் என்ன சொல்ல?

அன்று காலை எழுந்து வெளியே வந்த போது அம்மா கீரையை ஆய்ந்து கொண்டிருந்தார். அவருக்கும் வயதாகி விட்டது. அறுபதை தாண்டி இருந்தார். தாமரை சமையல் கட்டில் இருந்தாள். அங்கேயே அஸ்வதி உட்கார்ந்திருக்க, மித்ரா அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருந்தாள். 

பிருந்தா பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்கூல் பேகில் நோட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள்.. “அப்பா இந்த நோட்க்கு கவர் போடணும், கவர் இல்லை வாங்கணும்” என்று வர….

“இப்போவாடா குட்டி… சாயந்தரம் வாங்கிப் போடலாம்” என்றான்.

“நான் இப்போ தான் உங்களைப் பார்ப்பேன், சாயந்தரம் எப்போ பார்ப்பேன்” என்று முகத்தை சுருக்க…

“சரி. இரு! அப்பா டீ குடிச்சிட்டுப் போய் வாங்கிட்டு வந்து போட்டு தர்றேன்” என்று குளிக்கப் போக..

“அப்பா! ஸ்கூல் பஸ் வந்துடும்” என்று மீண்டும் முகத்தை சுருக்க..

“இல்லை! அதுக்குள்ள அப்பா வந்துடுவேன்” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்க…

மகள் மறுக்க….

“அப்படியே அவங்கம்மா மாதிரியேப் பிடிவாதம், ஒரு பேச்சுக் கேட்குதா?” என்று அம்மா மரகதம் சொல்ல…

இப்போது ஆதவனுடைய முகமும் சேர்ந்து சுருங்கியது.

காலையிலிருந்து சுகன்யாவைப் பற்றிய நினைவில் இருந்ததாலோ என்னவோ, அவனுக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. எப்போதும் பேசாமல் போய் விடுபவன்..

“செத்துக் கூட அவ உங்ககிட்ட திட்டு வாங்கணுமாம்மா” என்று கோப மிகுதியில் சத்தமாக சொல்லி விட.. அவன் சத்தம் மிகவும் அதிகம் எப்போதுமே!!!

மொத்த வீடும் வெளியே வந்தது. அவனின் அப்பா அழகர், தம்பி சேரன், அவனின் மனைவி நிறை மாத கர்ப்பிணி சுமதி, தாமரை என்று எல்லோரும்.   

“என்ன சொல்லிட்டேன் உன் பொண்டாட்டியைன்னு இப்படிக் கோபப் படற” என்று அம்மாவும் விடுவேனா என்று சண்டையை இழுக்க..

பேசாது விடு விடு வென குளிக்கப் போனான். கோபம் கண் மண் தெரியாத கோபம்…

இருந்தால் இன்னும் பேச்சுக்கள் வளர்ந்து விடும் என்று அந்த இடத்தை விட்டுப் போய் விட்டான்.

பிருந்தா அப்படியே நின்றவள் அழத் துவங்க..

என்ன ஏதென்று தெரியாத போதும்.. தாமரை அருகில் வந்து “என்ன பிருந்தா?” என..

“ஒன்னுமில்லை போ!” என்று தாமரையிடம் முகத்தைக் காட்டி பையைத் தூக்கி எரிந்துப் போக…

“பாருங்க, என்ன திமிர் இவளுக்கு?” என்று மரகதம் தன் கணவரிடம் குற்றப் பத்திரிக்கை வாசித்தார் பிருந்தாவைப் பற்றி.

“சின்ன குழந்தை அவள்? என்னப் பேச்சு இது?” என்பது போல தாமரை பார்த்து நிற்க..

அழகர், “மரகதம், வீணா சத்தம் போடாத, அவ உன் பேத்தி ஞாபகம் வெச்சிக்கோ” என்றார்.

“ஆமா! எல்லோரும் என்னைச் சொல்லுங்க! அவனுக்குப் பொண்டாட்டி, உங்களுக்குத் தங்கச்சி மக.. எல்லோரும் பரிஞ்சு வாங்க!” என்று மீண்டும் சண்டையைக் கிளப்ப..

அவரிடம் வாய் கொடுக்க முடியாதவராக அழகரும் சென்று விட.. சேரனும் சுமதியும் பார்த்து இருந்தவர்கள், அவர்களும் எதுவும் பேசாமல் சென்று விட்டனர்.

“நல்லதுக்கு எங்க காலமிருக்கு, எப்படியோ போங்க! எனக்கு என்ன வந்துச்சு.. என்னை நல்லபடியா கொண்டு போய் சேர்த்துடுங்க, யாரு எப்படி போனா எனக்கு என்ன?” என்று நொடித்துக் கொண்டே மீண்டும் கீரையை ஆய..

தாமரை தான் செய்வது அறியாது… அடுப்பை அனைத்து பிருந்தாவிடம் சென்றாள். “குட்டி ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.. வா சாப்பிடு…” என்றாள்.

“ஒன்னும் வேணாம் போ!” என்று மீண்டும் எடுத்து எரிந்து பேசினாள்.

“மிஸ் திட்டுவாங்கடா குட்டி, அப்புறம் உன்னை குட் கேர்ள் சொல்ல மாட்டாங்க! லேட் ஆகாது.. நேத்தே அம்மா கிட்ட சொல்லியிருக்கலாம்! பரவாயில்லை, இனிமே சொல்லிடு! நான் போய் வாங்கிட்டு வர்றேன்… நீ தோசை சாப்பிடு வா.. பஸ் வர்றதுக்குள்ள போட்டுடலாம்… அப்பா ரொம்ப நேரம் கழிச்சு தானே வந்தாங்க! அதுதான் களைப்பா இருக்கும்!” என்று ஆதவனுக்கு பரிந்து பேசினாள்.  

“நீங்க கூடத் தான் அப்பா வந்ததுக்கு அப்புறம் தூங்கறீங்க! உங்களுக்கு இல்லையா..?” இதற்குத் தான் பிருந்தாவைத் தாமரை புத்திசாலி என்பது.

“எனக்கு இல்லை! வா! வா! சாப்பிடு..” என்று தட்டில் தோசையை வைத்துக் கொடுத்து..

“மித்து அக்கா கூட சமத்தா இருக்கணும்.. நான் கடைக்குப் போய்ட்டு வர்றேன்” என்று சொல்லி… சிணுங்கிய அஸ்வதியை தூக்கிக் கொண்டு, பர்சை எடுத்துக் கொண்டு செருப்பை போடும் போது குளித்து வந்த ஆதவன்..

“எங்க போற?” என்றான் தாமரையைப் பார்த்து.

“கடைக்கு, அட்டை வாங்க!”

“நான் போறேன்! உள்ள போ!” என்றவனிடம் சரி என்பது போலத் தலையசைத்தாள்.

சட்டையை மாட்டிக் கொண்டு விரைந்தவன் ஐந்தே நிமிடத்தில் வந்து விட…

அதையும் விட வேகமாக தாமரை அட்டையைப் போட்டு முடிக்க.. பிருந்தா இன்னம் தோசையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள் சாப்பிடாமல்.

மகளின் முகம் பார்த்தவன்.. அருகில் சென்று அமர.. “சாரி பா!” என்றது குழந்தை..

“அப்பா தான் சாரி கேட்கணும்.. இனிமே பாட்டி பேசாம நான் பார்த்துக்கறேன், நீயும் பிடிவாதம் பிடிக்க கூடாது!” என்ற போதும் தோசையை வைத்துக் கொண்டே இருக்க..

“சாப்பிட முடியலையா? நான் ஊட்டட்டுமா!” என்று மித்ரா வந்து சொல்ல..

“நீ எனக்கு ஊட்டுவியா”, என்று பிருந்தாவிற்கு சிரிப்பு வர..

“அப்போ சாப்பிடு!” என்றாள்.. இதை தூரத்தில் நின்று தாமாரை பார்த்துக் கொண்டிருக்க.. இது அவளின் வேலை என்று ஆதவனுக்கு புரிந்தது.

மனம் சற்று லேசானது..

பிருந்தா உண்ண ஆரம்பித்ததும் இவனுக்கு டீ வர.. “அட! என் பொண்ணு சாப்பிடலைன்னா எனக்கு டீ இல்லை போலவே” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

பிறகு பிருந்தாவை ஸ்கூல் பஸ் ஏற்றி விட பைக்கை எடுக்க.. மித்ரா பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். மித்ராவிற்கு பைக்கில் போவது என்றால் இஷ்டம். தாமரையும் மித்ராவையும் அழைப்பானா என்று பார்க்க.. ஆதவன் அவளை பார்த்தாலும் அழைக்க வில்லை.

ஆனாலும் அவளை பார்த்து தான் சென்றான். ஆதவனுக்கு இவளுக்கு என்ன வயது ஏன் இன்னும் நாம் பள்ளியில் சேர்க்கவில்லை என்று பார்த்து செல்ல…. அவளை அழைக்க வில்லை என்று, மித்ராவின் முகம் சுருங்கியதோ இல்லையோ தாமரையின் முகம் சுருங்கிற்று.   

 

Advertisement