Advertisement

அத்தியாயம் பதினொன்று :

         கணவனுடன் ஏறியது தான், தாமரை மீண்டும் மதுரை மாநகரை வேடிக்கைப் பார்த்து வர..  மதுரையின் ஒரு புகழ் பெற்ற ஷாப்பிங்க் மாலிற்கு அழைத்து சென்றான்.  

உள்ளே நுழைந்தவுடனே “அப்பா, பாணி பூரி!” என்றாள் பிருந்தா.. முதலில் சுகன்யா இருந்த போது வருவர்… அதன் பிறகு வந்ததே இல்லை.. பிருந்தாவையும் சுகன்யா படுக்கையில் விழுந்த பிறகு இங்கல்ல எங்குமே அழைத்து செல்லவே இல்லை.

வேறு குழந்தைகள் என்றாள் அம்மா படுகையில் விழுந்து, பிறகு இறந்து, அப்பாவும் தனிமைப் படுத்திக் கொள்ள ஏங்கித்தான் போயிருப்பர். பிருந்தா எதையும் காட்டியதில்லை. தாமரை வரும் முன் குழந்தைகள் யாரோடும் ஒட்ட முடியாமல் திணறினர்.

தாமரை வந்த பிறகு எல்லாம் மாறிற்று. அதிக கொஞ்சல்கள் இல்லாவிட்டாலும் தாமரையிடம் எப்போதும் பிருந்தாவிற்கு சலுகைகள் உண்டு. “சித்தி” என்ற வார்த்தையைத் தான் முதலில் தாமரையைப் பார்த்து பிருந்தா சொல்வாள். அப்படி தான் உறவுகள் சொல்லிக் கொடுத்தனர்.

ஒரு முறை இரண்டு முறை அப்படிக் கூப்பிடாதே என்று தாமரை சொல்லிப் பார்க்க.. பிருந்தா கேட்கவில்லை. “இனிமே இப்படிக் கூப்பிட்டா என் கிட்ட பேசாதே. அம்மா கூப்பிட முடியலைன்னா, தாமரை கூப்பிடு!” என்று பிருந்தாவிடம் கடுமையாகச் சொன்னாள்.    

அதுதான் இதுவரை தாமரை பிருந்தாவை அதட்டிய ஒரே விஷயம்.

பிருந்தா அப்பாவிடம் சென்று “திட்டுறாங்க என்னை!” என்று சொல்ல..

என்ன திட்டுறாங்களா என்று கோபம் வரப் பெற்றான். ஆனாலும் தாமரையை தப்பாய் நினைக்கத் தோன்றவில்லை. “என்ன விஷயம்?” என்று கேட்டவன்

“அவங்க சொல்றது சரிதானே பொண்ணும்மா.. அவங்க உனக்கு அம்மாவா தான் வந்திருக்காங்க சித்தியா இல்லை!” என்று ஆதவனும் சொல்ல..     

முதலில் அம்மாவைத் தவிர யாரையும் அம்மா என்று கூப்பிட முடியாத பிடிவாதம் இருந்தாலும், அம்மா இல்லாத பிறகு தாமரையை போல யாரும் கவனித்தது இல்லை. ஆதவன் கவனிப்பான் என்றாலும்  வயிற்றிற்கு நேரத்திற்கு பார்த்து பார்த்து உணவு கொடுக்க முடியவில்லை.

அதை தாமரை செய்ய பிள்ளைகள் தானாக ஒட்டிக் கொண்டனர். தாமரைம்மா என்ற அழைப்பு முதலில் வர, இப்போது சில சமயங்களில் அஸ்வதியையும் மித்ராவையும் பார்த்து “அம்மா” என்று வரத்துவங்கி இருந்தது.   

“கொஞ்ச நேரம் சுத்திட்டு வரலாம்டா” என்று அப்பா சொல்ல..

“அவ கேட்கறதே அதிசயம்! அது என்ன அப்புறம், இப்போவே!” என்று தாமரை பிருந்தாவிற்கும் முன் சொன்னாள்.

“போகலாம் மாமா!” என தங்கையின் மக்களும் சொல்ல..

அங்கிருந்த ஒரு சேட்(chat) ஹவுசிற்கு சென்றனர்.

பிருந்தா பாணி பூரி சொல்ல, அவன்கள் பாவ் பாஜி சொல்ல.. அங்கே ஸெல்ப் சர்வீஸ் என்பதால் இவர்கள் அமர்ந்து தங்கையின் மக்களைப் போய் அதை வாங்கி வருமாறு பணித்தான். 

“உனக்கு என்ன வேணும் குட்டி” என்று மித்ராவைப் பார்த்துக் கேட்டான்.

அது நான்கு வயது குழந்தை.. இன்னம் இந்த மாதிரி வெளியில் எல்லாம் வந்ததே இல்லை.. இவன் கேட்டதையே கவனிக்கவில்லை… விழி விரித்து எல்லாம் வேடிக்கை பார்த்து இருந்தது… அவளையும் விட தாமரை போவோர் வருவோரை வேடிக்கை பார்த்து இருக்க..

இவன் கேள்வியை அவளும் கவனிக்கவில்லை. “தாமரை” என்று அதட்ட, அதன் பிறகே அவசரமாக இவன் புறம் திரும்பியவள்.. “என்ன?” என,

“கல்யாணம் ஆனதுல இருந்து என்னைக் கூட இப்படிப் பார்த்திருக்க மாட்ட! அப்படி என்ன பார்க்கிற?” என்று கேட்க..

இதற்கு தாமரை பதில் சொல்லும் முன் பிருந்தா கூறினாள், “அப்பா என்னப்பா நீங்க? தாமரை அம்மா நீங்க வீட்ல இருக்கும் போது உங்களை மட்டும் தான் பார்ப்பாங்க. நீங்க தான் அவங்களை பார்க்க மாட்டீங்க. அப்புறம் என்கிட்டே சொல்லி விடுவாங்க” என்று சொல்ல..

“ஹ! ஹ!” என்று வாய் விட்டு சிரித்து விட்டான் ஆதவன். ஆனாலும் இந்தப் பிள்ளைகள் எதை எதை கவனிக்கிறார்கள் என்று தோன்றியது, கூடவே பிள்ளைகள் கவனிக்கும் படி பாராமுகம் காட்டியிருக்கிறோம் என்று தோன்ற தாமரையிடம் மன்னிப்பை வேண்ட அவளைப் பார்த்தான்.  

தாமரையின் முகம் வெட்கத்தை பூசியிருந்தது, கூடவே பிருந்தாவின் பேச்சை அவசரமாக அருகில் யார் எல்லாம் என்று கவனித்தர் என்று பார்த்தால், பரவாயில்லை இவர்கள் நால்வர் மட்டுமே, தங்கையின் மக்கள் ஆர்டர் வாங்க சென்றதை அறிந்து “ஹப்பா” என்று மூச்சு விட்டாள்.

அவளின் பாவனைகளை பார்த்தவன் அமைதியாகி விட்டான்.

பிருந்தா இதுதான் சாக்கென்று “அம்மா இன்னைக்கு அழகா இருக்கீங்க. இனிமே இப்படியே டிரஸ் பண்ணுங்க… அந்த பழைய சாரீ கட்டாதீங்க” என..

“தினமும் எப்படி இப்படிக் கட்ட முடியும். வீட்ல வேலை செய்யும் போது அழுக்காகிடும்”.

“நான் வீட்ல இருக்கும் போது பழைய டிரஸ்ஸா போட்டு விடறீங்க.. மித்ராக்கு போடறதில்லை… அஸ்வதிக்கும் போடறதில்லை! உங்களுக்கு மட்டும் ஏன்..” என்று கேட்க… பிருந்தாவின் புத்திசாலித்தனம், ஆதவனுக்கு சற்று பெருமையாக இருந்தது.    

தாமரை அவள் பேசிய விஷயத்தை யோசித்துக் கொண்டிருக்க, “அப்பா நிறைய எடுத்து குடுப்பாங்க” என்று சொல்லி..

கூடவே “முன்ன அம்மாக்கும் நிறைய எடுத்துக் குடுப்பாங்க! அப்போ உங்களுக்கும் எடுத்துக் கொடுப்பாங்க”, என்று சொல்ல..

ஆதவன் அவசரமாக தாமரையின் முகம் ஆராய்ந்தான் சுகன்யாவின் பேச்சு அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று.

ஆனால் ஒரு வித்தியாசமும் இல்லை… தாமரை பிருந்தாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள். அதுவே சொன்னது பிருந்தா சுகன்யாவைப் பற்றி அடிக்கடி தாமரையிடம் பேசுவாள் என்று.

தாமரை ஏதோ சொல்ல.. “ம்கூம்! நீங்க இப்படித் தான் டிரஸ் பண்ணனும்! இப்படித் தான் என்னை ஸ்டாப்ல இருந்து கூட்டிட்டுப் போக வரணும்!” என்று சொல்லி கொண்டு இருந்தாள்.

இருவரும் பேசிக் கொண்டு இருக்க.. “வா அண்ணனுங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்”, என்று மித்ராவை ஆதவன் கை நீட்டி அழைக்க..

அது தாமரையிடம் ஒட்டிக் கொண்டது. அங்கே டாய் ஷாப்பில் இருந்த பெரிய டெடி பியரைக் காட்டி, “அப்பாக் கிட்ட வந்தா வாங்கித் தருவேன்” என்று ஆசைக் காட்டினான்.

வந்ததில் இருந்து மித்ராவின் பார்வை அங்கே தான் அதிகம் இருந்ததை உணர்ந்து.. மித்ரா அப்போதும் அசையவில்லை.

“போ! போ! அப்பா வாங்கித் தருவாங்க” என்று பிருந்தாவும் ஆசைக் காட்டினாள்.

“நான் இப்போக் குட்டிம்மாவைத் தூக்கறேன்” என்று சொல்லி.. ஆதவன் வலுக்கட்டாயமாக மித்ராவை தாமரையிடமிருந்து தூக்கினான்.

மித்ராவின் முகம் அழுவது போல மாற.. தாமரையும் கூட எழ..

“அச்சோ! அம்மா உட்காருங்க! அப்பா பார்த்துக்குவார்!” என்றாள் பிருந்தா.

“அப்படியே அப்பாவைப் போல அதட்டுறா” என்று நினைத்த போதும்.. ஒரு புன்னகையுடன் தாமரை அமர்ந்து கொண்டாள்.

மித்ராவை தூக்கிக் கொண்டு அந்த டெடி புறம் சென்றான். ஏதோ மித்ராவிடம் கேட்க… அவள் பதில் சொல்லாத போது பேசிக் கொண்டு இருந்தான். முகத்தில் அவ்வளவு மென்மை கனிவு..

தூரத்தில் இருந்து அவர்களையேப் பார்த்து கொண்டிருந்தாள் தாமரை. “நம்மளை மட்டும் தான் மிரட்டுறாங்களோ! நம்மக் கிட்ட இப்படி பேசினதே இல்லையே” என்று மனம் சுணங்கியது.   

  அதற்குள் குழலியின் மகன்கள் எல்லாம் எடுத்து வர..

அப்பா வருவதற்காக பிருந்தா பார்த்திருக்க “நீங்க சாப்பிடுங்க” என்றாள், சாப்பிடவும் வைத்தாள். “அத்தை உங்களுக்கு?” என பிள்ளைகள் கேட்க..

“நீங்க சாப்பிடுங்க! மாமா வரட்டும்!” என்று சொல்லிக் காத்திருக்க, அவர்கள் உண்டு திரும்ப போய் வாங்கி வந்து அமர்ந்து கொண்டனர்.

அப்போதும் வரவில்லை.. இத்தனை நாள் அருகில் கூட செல்லாத மித்ரா.. இன்று பாந்தமாய் ஆதவனின் கைகளுக்குள் அடங்கி இருந்தது.

அங்கிருந்தே ஆதவன் இவர்களைத் திரும்பி பார்க்க.. “வாங்கப்பா!” என்று கையசைத்த பிருந்தா அவன் அருகில் வந்ததும்… “மித்ராக்கு வாங்குங்க!” என்று சொல்ல..

பிள்ளைகளின் கையினில் இருந்ததை காட்டி “இது வாங்கலாமா” என, குழந்தை வேண்டாம் என்று தலையசைக்க.. அவளுக்கு மசாலா பூரி வாங்கி அந்த பட்டாணியை ஸ்பூனில் எடுத்து வைக்க.. “வேண்டாம்!” என்று துப்பினாள்.

“ஷ்! என்ன குட்டி நீ!” என்று தாமரை அதட்ட..

“அவளுக்குப் பிடிக்கலை போல!” என்று குழந்தையின் வாய் துடைக்க டிஸ்யு பேப்பர் எடுத்துக் கொடுத்தவன், “நீ சாப்பிடறியா இல்லை வேற சொல்லட்டுமா?” என்றான்.

“நான் சாப்பிடறேன்!” என்று சொல்லி நான்கைந்து வாய் வைத்தவளைப் பார்த்தாலே தெரிந்தது, கஷ்டப் பட்டு உள்ளே தள்ளுகிறாள் என்று..

“பிடிக்கலையா” என்றான்.

“இல்லை” என்று பரிதாபமாகத் தலையாட்ட,

“சரி குடு!” என்று அவனின் பக்கம் நகர்த்த… “அய்யயோ, எச்சில்,  நான் சாப்பிட்டது” என.

குழந்தைகள் யாரும் கவனித்தார்களா என்று அவசரமாகப் பார்த்தான், அவர்கள் பேச்சு மும்முரத்தில் இருந்தனர். யாரும் கவனிக்கவில்லை.

தன் தலையில் தானே தட்டிக் கொண்ட ஆதவன், “நீ வாயே திறக்காத” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அதட்டி.. அதை எடுத்து உண்ண..

தாமரையின் முகம் காட்டிய பாவனையில்.. “எவளோ மிச்சம் வெச்சதை சாப்பிடற மாதிரி ஏன் இந்த எக்ஸ்ப்ரஷன். நீ என் பொண்டாட்டி டீ” என,

தாமரையின் முகத்தில் தானாக சிரிப்பு வந்தது.. பின்பு குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதை எல்லாமே வாங்கிக் கொடுத்தான்.

தாமரைக்கு எதுவும் வாங்கவில்லை. என்ன வேண்டும் என்று அவளிடம் கேட்டால், பிருந்தாக்கு மித்ராக்கு அஸ்வதிக்கு என்று தான் லிஸ்ட் கொடுத்தாள். அவளுக்காக எதையும் அவளும் கேட்கவில்லை வாங்கவும் விடவில்லை.

இவன் வாங்கப் போனாலும் “இது வேண்டாம் அது வேண்டாம்..” என்றாள். சரி புடவையாவது எடுத்துக் கொடுக்கலாம் என்றால்.. எதுவும் பிடிக்கவில்லை என்றாள்.

வேண்டாம் என்பதற்காக சொல்கிறாளோ என்று ஆதவன் பார்க்க அப்படி எதுவும் அவளின் முகத்தில் இல்லை..

“சரி, நீயே ஒன்னு எடு, அப்போதான் கிளம்புவோம்” என்று பொறுமையாக நிற்க.. மிட்டாய் ரோஸ் கலரில் ஒரு புடவை எடுத்தாள்..

கடுப்பானான் ஆதவன்.. பிருந்தாவே “அம்மா! இது நல்லாவே இல்லை! வைங்க!” என்று சொல்ல..

ம்கூம் அவள் வேறு எடுப்பதாகக் காணோம்.. அதையே திரும்பி திரும்பி இதற்கென்ன என்பது போல பார்த்தாள்..  

“நீ கட்டுறது நீ பார்க்கறதுக்கு இல்லை! நான் பார்க்கறதுக்கு!” என்று ஆதவன் சொல்ல…

“நான் கட்டுறது இவர் பார்க்கிறதுக்காமா! அய்யோடா!” என்றபடி தாமரை ஒரு லுக் விட..

“என்ன உன்னோட மனசுல ஓடுது?” என்று ஆதவன் கேட்க..

“ஒன்னுமில்லை!” என்று அவள் தலையசைத்த விதமே ஏதோ இருக்கிறது என்று சொல்ல.. 

நிறைய நேரமும் ஆகிவிட.. “அஸ்வதி தேடுவா!” என்றும் தாமரை ஞாபகப்படுத்தினாள்.

“அப்புறம் எடுக்கலாம் வா..” என்று அவளை அழைத்து வெளியேறினான்.

  வீடு வந்து பின்பு குழலி கிளம்பும் வரை வீட்டில் இருந்தான். குழலி ஏகத்திற்கும் மிரட்டியிருக்க, அதன் பிறகு ஸ்ரீநிவாசன் வாயைத் திறக்கவில்லை.

“மச்சானை, இஷ்டத்துக்கும் மிரட்டி இருக்கப் போல! வாயே திறக்காம அலெர்டா இருக்கார்” என்று குழலியிடம் கிண்டலாக வேறு சொல்ல செய்தான். ஆதவன் இப்படி குழலியிடம் லகுவாக பேசியே வெகு காலம் ஆகியிருந்தது. எப்போதும் இறுக்கமாகவே இருப்பான்.  

அந்த லகுதன்மையை மாற விடாமல் குழலியும் பேச்சை வளர்த்தாள். “என்ன பண்ண? உன் தங்கச்சியாச்சே!” என்று அண்ணனிடம் சிரிப்போடு சொல்ல, அவளுக்கு எடுத்திருந்த புடவையை அவளிடம் கொடுத்தான்.

“ஹேய் அண்ணா! சூப்பரா இருக்கு..” என்று சொல்லி, “தாமரைக்கு எடுக்கலை”

“அவளுக்கா, பஞ்சு மிட்டாய் கலர்ல ஒரு புடவை எடுக்கறா! டென்ஷன் ஆகி கூட்டிட்டு வந்துட்டேன்”

“ஏன் அண்ணா? அது நல்லா தானே இருக்கும்!” என்று நக்கலாக குழலி கூற…

“நிஜமா அது நல்லா தான் இருந்தது! அவளுக்கும் நல்லா தான் இருக்கும்! ஆனா எனக்குப் பிடிக்கலை!” என்று ஆதவன் சொல்ல..

குழலியின் முகத்தில் மென் நகை.. இந்த ஒரு வருடமாகப் பார்த்த ஆதவனுக்கும் இப்போது பார்க்கும் ஆதவனுக்கும் பல வித்தியாசங்கள். ஏன்? எப்போதுமே இவ்வளவு பேசக் கூட மாட்டான்.

மனது மகிழ்ச்சியை உணர.. “அண்ணா நீ சந்தோஷமா இருக்கியா?” என்றாள்.

“சந்தோஷமா இருக்கேனா தெரியாது! ஆனா நிம்மதியா இருக்கேன்!” என்றான் மனதை மறையாமல்.

“நிம்மதி மட்டும் போதாது அண்ணா! நீயும் சந்தோஷமா இரு! அவளையும் சந்தோஷமா வெச்சிக்கோ..” என்றவள், கூடவே,

“அம்மா எப்போ வந்தாலும் மருமகளுங்களை பத்தி ரொம்பக் குறை சொல்வாங்க… அவங்களுக்கு அவ்வளவு வேலை இருக்கும்.. தாமரை வந்த பிறகு எல்லாம் குறைஞ்சு போச்சு.. அதிகமா கால் வலி கூட சொல்லலை.. ஆனா ஓரே ஆளா மூணு குழந்தைங்களையும் பார்த்திக்கிட்டு வீட்டு வேலை செஞ்சிகிட்டு.. கஷ்டம் அண்ணா!”

“இப்போ இன்னொரு குழந்தை வீட்டுக்கு வர போகுது.. சுமதி எப்பவுமே கொஞ்சம் ஸ்லோ தான்! எல்லாம் தாமரை செய்யற மாதிரி தான் இருக்கும். அம்மாக் கிட்ட வீட்டை கூட்டி, பாத்திரம் கழுவ ஒரு ஆள் போட சொல்லியிருக்கேன், போடலன்னா போட வை!” என்றவளின் குரலில் கண்டிப்பாக போட வேண்டும் என்ற கட்டளை இருந்தது.

“ம்! நானே யோசிச்சு இருக்கேன், எப்படி இத்தனை வேலை செய்யறான்னு! அம்மாகிட்ட சொல்றேன்!” என்று அண்ணன் வாக்குறுதி கொடுக்க..

அதன் பிறகே ஊருக்கு கிளம்பினாள். “எவ்வளவு நேரம் தான் பேசுவீங்க, பேசி முடிச்சாச்சா” என்று ஸ்ரீநிவாசன் நக்கலாக கேட்க,

“ஆமாம் குழலி! இன்னும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு.. நீ நாளைக்கு போ! இல்லை ஒரு ரெண்டு நாள் கழிச்சு போ! இல்லை பேசி முடிச்சிடேன்னு நான் எப்போ சொல்றேனோ அப்போ போ! இவங்க மட்டும் இன்னைக்கு போகட்டும்!” என்று சீரியசாக சொல்ல,

“இல்லையில்லை! அவசரமில்லை! நான் இருந்து கூட்டிட்டு போறேன்!” என்று ஸ்ரீநிவாசன் அமர…

“எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத பேச்சு” என்றபடி கணவனைப் பார்த்தவள்.. “என்ன லந்தா? நான் மட்டும் தான் என் புருஷனை மிரட்டணும்! புரிஞ்சதா!” என்று ஆதவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி.. கிளம்பினாள்.

அண்ணன் தங்கை இருவருக்குமே புன்னகை.

“என்னவோ ரெண்டு பெரும் பேசறாங்க? சிரிக்கிறாங்க? இவர் இப்படி சிரிச்சு நான் பார்த்ததே இல்லையே” என்று தாமரை அவர்களை பார்த்தபடியே இருந்தாள்.

அவர்கள் கிளம்பியதும்.. திரும்பவும் பிருந்தா, மித்ரா, அஸ்வதி என்று மூவரையும் தாமரையுடன்அழைத்துக் கொண்டு போய் சேரனின் குழந்தையைப் பார்த்து வந்தான்.

குழந்தைகளுக்கு ஊட்டி.. கணவனுக்குப் பரிமாறி, அவளும் உண்டு, வேலைகளை முடித்து குழந்தைகளைப் படுக்க வைக்கும் போதே அவளும் உறங்கிவிட..

அவர்களைப் பார்த்தவாரே வெறும் தரையிலேயே படுத்துக் கொண்டான் ஆதவன்.  

நாட்கள் வேகமாக ஓடின…. தாமரையின் அப்பாவும் அம்மாவும் குழந்தையைப் பார்க்க வந்தவர்கள் தாமரையிடம் பாஸ் புக் கொடுக்க.. வாங்கி வைத்துக் கொண்டாள். ஆனால் ஆதவனிடம் திரும்ப பணம் பற்றியெல்லாம் பேசவில்லை.

மித்ராவிற்கு ஃபீஸ் கட்டிவிட்டு வந்து “கட்டிவிட்டேன்” என்று மட்டும் சொன்னான்.

புது செங்கல் சூலைக்கான வேலைகள் வேகமாக நடந்தன.

ஏற்கனவே அப்பா இருந்த இடத்தில் இல்லாமல்.. வேறொரு இடத்தில் இருந்த அவர்களின் பூர்வீக இடத்திலேயே வேலைகள் நடந்தன. “பணமும் யாரிடமும் கேட்காதே! நான் கடனாக கொடுக்கிறேன்! திருப்பி கொடுத்து விடு!” என்று அப்பா சொல்லியிருக்க.. “சரி” என்று வாங்கியிருந்தான்.

அது அப்பாவிற்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும். அழகர் மனைவியிடம் சின்ன மகனிடம் என்று யாரிடமும் சொல்லவில்லை.  யாரிடமும் எப்போதும் சொல்ல மாட்டேன் வாங்கிக் கொள் என்று அவர் வருந்தி வருந்தி சொல்லியிருக்க, அதன் பொருட்டே வாங்கியிருந்தான்.   

தாமரையின் முகம் பார்த்து பேச பழகியிருந்தான். இதுதானே தாமரை வேண்டியது..   வாழ்க்கையே அவளுக்கு வண்ண மயமாகி விட்டது போன்ற உணர்வு.

எப்போதும் கடமையாக செய்யும் வேலைகளை இன்னும் ஈடுபாட்டுடன் செய்தாள்.

அவளுக்கு அது போதும்.. ஆனால் ஆதவனுக்கு தெரியும் அது மட்டும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் போதாது என்று.

முன்பிருந்ததற்கு அவன் தாமரையிடம் நெருங்கி இருந்தான் தான்.. சகஜமாக பேச பழக என்று. ஆனால் மனது நெருங்கியதா என்று எப்போதும் ஒரு யோசனை அவனுள், அதனால் உடல் நெருங்க முயலவேயில்லை.

தாமரைக்கு அந்த எண்ணம் எல்லாம் இருந்த மாதிரியே தெரியவில்லை. அவளுடைய எளிமையான சிந்தனைகளால், வாழ்க்கை முறைகளால், பாராமுகமாக இருந்த கணவன் பார்ப்பது, பேசுவது அதுவே அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

ஆதவனின் சிந்தனைகள் எல்லாம் எப்போதும் பெண்களை ஒரு வட்டத்திற்குள் வைக்காது. இதில் மூன்று பெண் குழைந்தைகள் இப்போது இருக்க.. தான் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை தானே தன் மக்களுக்கு கிடைக்கும் என்ற சிந்தனை தான்.

“இது என்ன இவள், எனக்குப் பணி செய்யவே பிறந்தவள் போல, என்னையே எப்பொழுதும் கவனித்து, எனக்கு வேண்டியதை இப்படி பார்த்து பார்த்து செய்கிறாள்!” என்று தான் தோன்றியது.  பிடித்திருந்த போதும், இது மட்டுமேயா தாமரையின் வாழக்கை என்று தான் தோன்றியது.

ஆனால் வேறு சிந்தனைகள் எதுவுமின்றி கணவன் குழந்தைகள் என்று தான் அவளின் சிந்தனைகள் இருந்தன.

 

Advertisement