Advertisement

அத்தியாயம் பத்து :
அந்த இடத்தை விட்டு ஆதவன் எழ முற்பட.. ஆதவனின் கோபம் அவனோடே வளர்ந்த குழலி அறியாததா.. அதுவும் சுகன்யாவின் பால் அவனின் காதல் எல்லோரும் அறிந்ததே… 
அவனருகில் வந்த குழலி அவனின் தோள் அழுத்தி “உட்காருங்க அண்ணா..” என்றாள்.
“செத்தவனுக்கு தான் சொர்கமும் நரகமும் தெரியும் அதுமாதிரி.. சுகன்யா இல்லாததால சாவைப் பத்தி உங்களுக்குத் தெரியும்னு சொன்னார் தானே! அவருக்கும் காட்டறேன்!” என்று குழலி கோபமாக சொல்ல…
மொத்த வீடும் பதறியது… “ஐயோ!” என்று பதறி ஸ்ரீநிவாசன் வாயினில் கைவைத்தான். தாமரையின் மாமியார் ஒரு படி மேலே போய் “அவன் சொல்றான்னு நீ வேற ஏன்?” என்று மருமகளைக் கடிந்து மகனின் முகத்தை முறைத்து பார்த்தார்.  
“இவர் சொல்றார்ன்னு நீயும் ஏன் குழலி..” என்று ஆதவன் தான் தங்கையை சமாதானப்படுத்தும் படி ஆகிற்று..
“இந்தப் பேச்சையெல்லாம் சகிச்சு எப்படித் தான் இவரோட குப்பை கொட்டுறியோ! நான் கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வர்றேன்! இல்லை மதுரைக்காரங்க எப்படின்னு எனக்கு தெரியாமையே காட்டிடுவேன்..” என்று சட்டையை மாற்றி வண்டி எடுத்து கிளம்பி விட்டான்.
“ஹப்பா!” என்று மூச்சு விட்டனர். “டேடி, இன்னைக்கு மாமாக் கிட்ட அடி வாங்குவார்ன்னு நினைச்சேன்!” என்று அவளின் சின்ன மகன் குழலியிடம் கிசுகிசுக்க..
“உன் புத்திசாலித்தனம் உங்கப்பாக் கிட்ட கிடையாதுடா” என்று மகனிடம் குழலியும் கிசுகிசுத்தாள்..
பெரியவன் நேரடியாக அப்பாவை முறைத்தான்.
“என்னங்கடா நடக்குது என்னை சுத்தி!” என்று ஸ்ரீனிவாசன் தான் நொந்து கொல்லும் படி ஆகிற்று.
அழகரும் ஏதோ வேலையிருப்பது போல அகல.. அம்மாவை உள்ளே செல்லும்படி அனுப்பிய குழலி..
 “வந்தமா! மாமியார் வீட்ல குடுக்குற மரியாதையை வாங்கினமா! சாப்பிடோமா! கிளம்பினோமான்னு இருக்கணும்! கண்டதையும் பேசி வெச்சீங்க நீங்க மட்டும் தான் வீட்டுக்குத் திரும்பி போகணும்! நாங்க யாரும் வரமாட்டோம்!”
“குழலி, அவன் எங்க திரும்பி போவான் அடி தான் வாங்குவான். எவ்வளவு அசால்டா பேசறதா நீ.. அந்தப் புள்ளை அவன் பொண்டாட்டிய ஒரு வார்த்தை யாரும் சொல்ல விடமாட்டான்றது ஊரறிஞ்ச ரகசியம்! உன் பசங்களுக்கு கூடத் தெரியும், உனக்குத் தெரியாதா. எப்படியோ தப்பிச்சிட்ட நீ! பெரிய பதவில இருந்து எல்லோரையும் அசால்ட்டா பேசி அதை வீட்டுக்குள்ளையும் கொண்டு வர்ற” என்றார் அவனின் அம்மா திட்ட.
“என்ன மிரட்டுறீங்களா? நான் யாரு தெரியுமா!” என்று வசனம் பேச..
“யாரு?” என்றாள் குழலி.
ஸ்ரீனிவாசன் முறைத்துப் பார்க்க்க “இந்த கருமத்துக்குத் தான் உங்களோட எங்கயும் வர்றதில்லை! அடுத்தவங்க மனசு நோகர மாதிரி எப்பவும் பேசிக்கிட்டு.. பேசாம இருக்க முடியாதுன்னா கிளம்புங்க!” என்று குழலி அடிக் குரலில் சீற…
மனைவியின் கோபம் புரிந்தவனாக, ஏதோ போனால் போகிறது என்பது போல அமைதியானான்.
எப்போதும் அவன் அப்படித்தான் வார்த்தைகளால் யாரையாவது காயப்படுத்தினால் தான் அன்றைய அவன் உணவே ஜீரணம் ஆகும்.   அதுவும் எப்போதும் ஆதவனை சீண்டிக் கொண்டே இருப்பான்.
ஏனென்றால் சுகன்யா அவனை மதிக்கவே மாட்டாள்.  வீட்டு மாப்பிள்ளை என்ற மரியாதை சற்றும் கொடுக்க மாட்டாள். அது அவனின் இந்த மாதிரி இடக்கு பேச்சுக்களை முன்னிட்டே. ஆதவனை எப்போதோ இந்த மாதிரி மரியாதையில்லாமல் ஸ்ரீனிவாசன் பேச, அதன் பொருட்டே சுகன்யா அவனிடம் அப்படித்தான் நடந்து கொள்வாள். 
அதுவும் பிருந்தா பிறந்த போது குழலி மருமகள் என்று உறவு முறை வைத்துப் பேச…. “அப்படியெல்லாம் பேசாதீங்க அண்ணி.. உங்க வீட்டுக்கு எல்லாம் நாங்க பொண்ணு குடுக்க மாட்டோம்.. சும்மா பிருந்தான்னு பேர் சொல்லிக் கூப்பிடுங்க” என்றாள்.   
அதனைப் பொருட்டே எப்போதும் ஆதவனை வேண்டுமென்றே வம்பிழுப்பான்.
மகன்களை குழலி பார்க்க.. அப்பாவைப் போல அல்ல அவர்கள்.. தாத்தாவிடம் ஒருவன் தேடித் போய் பேச, ஒருவன் அத்தை என்று தாமரையை தேடிப் போய் பேசினான். மரகத்திடம் குழலியின் மாமியார் பேச…
சூழல் சற்று மீண்டும் இயல்பாக ஆரம்பிக்க.. சேரன் அப்போது தான் குளித்து வந்தான். வந்தவன் “வாங்க மாமா” என்று ஸ்ரீநிவாசன் பக்கம் அமர..
“டேய் மாப்பிள்ளை! என்னை மாதிரி நீயும் பையனைப் பெத்துட்டடா.. உங்கண்ணன் மாதிரி பொம்பளைப் புள்ளைங்களை பெக்காம” என்று மீண்டும் வசனம் பேச..
“அய்யோடா! எங்கே ஆதவன் காதில் விழுந்து விட்டதோ” என்று சேரன் பயந்துப் பார்க்க.. “உங்க நொண்ணன் வீட்ல இல்லை!” என்றான் ஸ்ரீநிவாசன்.
ஆனால் இதைக் குழலி கேட்டு விட்டிருக்க… “எங்கண்ணன் மாதிரி ஆளுங்க பொம்பளைப் புள்ளைங்க பெத்ததுனால தான் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு கல்யாணம் ஆகுது..” என்றவள் கோபம் மிகுதியாக..
“டேய்! நீ போய் சட்டையை மாட்டிட்டு வாடா!” என்று சேரனை அந்த இடத்தை விட்டு அகற்றியவள்….
“இங்க இருந்து போற வரைக்கும் வாயை திறந்தீங்க! என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது!” என்று கையை நீட்டி மிரட்டினாள்.
சமையல் அறையில் இருந்து பார்த்திருந்த தாமரை… “உங்க மாமா மாதிரியே உங்க அம்மாவும் போல, நல்லா மிரட்றாங்க” என்று குழலியின் மகனிடம் சொல்ல..
அஸ்வதியைத் தூக்கி வைத்திருந்த அவனும் சிரித்தான்.
“அப்பா எப்பவும் இப்படித் தான் அத்தை.. நாங்க அவரை விட்டு தான் கிளம்பினோம். ஆனா எங்களுக்கு முன்ன கார்ல ஏறி உட்கார்ந்துட்டார்.. நானும் வருவேன்னு அடம் பண்ணினார்” என்று சொல்ல..
தாமரைக்கு சிரிப்பு வந்து விட.. சிரித்து விட்டாள். 
அரை மணிநேரத்திற்குள் எல்லாம் தயாராகி விட.. “சாப்பிட வாங்க!” என்று ஸ்ரீனிவாசனை அழைத்தார் மரகதம்.
“பெரிய மச்சான் வந்துடட்டும்” என..
வெளியில் யாரும் சிரிக்கவில்லை, ஆனால் உள்ளுக்குள் எல்லோருக்கும் சிரிப்பு..
“வாங்கன்னு நீ கூப்பிடு!” என்று சேரனிடம் மரகதம் சொல்ல,
“நீங்க வாங்க மாமா, அண்ணா வந்துடுவாங்க!” என்று அழைத்தான்.
அபோதும் ஆதவனுக்காக அமர்ந்திருக்க.. குழலி அழைத்து “அண்ணா வந்துடுங்க, சாப்பிடாமா உட்கார்ந்து இருக்கார்!” என்று சொல்ல..
வேறு வழியில்லாமல் ஆதவன் வந்தான். அதுவரையிலும் பிருந்தா எழவில்லை. ஆதவன் போய் எழுப்ப… எழுந்து வந்தவள், குழலியைப் பார்த்தும் “அத்தை” என்று அருகில் வர… அஸ்வதியை தூக்கி வைத்திருந்த குழலி “செல்லம்” என்று பிருந்தாவை அணைத்தாள்.
தூரத்தில் இருந்து எல்லாம் பார்த்திருந்த மித்ரா, தாமரையின் அருகில் சென்று அவளின் புடவையைப் பிடித்து நின்று கொண்டாள்.
குழலியும் அவளை வந்ததில் இருந்து எப்படியோ எப்படியோ அழைத்துப் பார்த்திருக்க மித்ரா அருகில் செல்லவே இல்லை.
பிருந்தா வந்ததும், தான் வாங்கி வந்திருந்தை எல்லாம் ஆளுக்கு ஒன்றாக குழலி கொடுக்க.. அப்போதும் மித்ரா தனியாக வரவில்லை தாமரையின் பின் ஒளிந்து வந்து தான் வாங்கினாள்.
பெரியவர்களிடம் தான் வரவில்லை. சிறியவர்களிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.
காலை உணவு முடிந்து குழந்தையை பார்க்க மூவரும் கிளம்பினர்… பிள்ளைகள் வீட்டில் தான் இருந்தனர். அதனால் மரகதம் இருந்து கொண்டார்.
“நீ வரலையா ஆதவா?” என்று சேரன் கேட்க,
“யார் கிட்ட சொன்ன நீ?” என்றான்.
“நான் சொல்லிட்டேனே உன்கிட்ட நேத்து..”
“என் கிட்டே சொன்னாப் போதுமா!” என்று கேட்க…  
அப்போதும் புரியவில்லை “யார்க் கிட்ட சொல்லணும்” என
ஸ்ரீநிவாசன் நடுவில் புகுந்து “அதொண்ணும் இல்லை மாப்பிள்ளை! நீ பையனைப் பெத்துட்ட இல்லையா? அதான் உங்கண்ணன் சும்மா சாக்கு சொல்றார்” என,
ஆதவன் பேசும் முன் “நீங்க வாங்க!” என்று ஸ்ரீனிவாசனின் கையை பிடித்து வெளியே சென்றாள்.
அந்தக் கடுப்பை எல்லாம் சேரனிடம் காட்டினான் ஆதவன்…  “உங்க அண்ணிக் கிட்ட சொல்லணும்னு தோணலையா..?” என்று கத்தினான்.
“என்ன சொல்லையா? அம்மா சொல்லியிருப்பாங்க நினைச்சேன்” என்றான் தவிப்பாக.  
“மரியாதை எல்லாம் தானாக் குடுக்கணும், கேட்டு கேட்டு வாங்கறதா? அம்மாக் கிட்ட கேட்டா நீ மறந்திருப்பன்னு சொல்றாங்க.. மாடு மாதிரி உங்களுக்கு எல்லாம் வேலை செய்யறா… ஆனா கொஞ்சம் கூட மரியாதையே இல்லை” என்று கடுகடுத்தான்.
சேரன் அவனிடம் பதிலே பேசவில்லை.. நேராக தாமரையிடம் சென்று “அம்மா சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன்! சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை அண்ணி” என்று மன்னிப்பை வேண்ட,
“அச்சோ! எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்கறீங்க! நான் ஒண்ணுமே சொல்லலை .. இவங்க தான் என்னைக் கூட்டிட்டு வரலை!” என்று ஆதவனைக் காட்டினாள்.
வெளியே இருந்து இதைப் பார்த்த ஸ்ரீநிவாசன் “எத்தனைப் பொண்டாட்டி கட்டினாலும் உங்க அண்ணன் மெயின்டெயின் பண்ராண்டி” என்றான் நக்கலாக.  
“சுகன்யா உங்களை மதிக்கவே மாட்டா. என்னாலையும் ஒன்னும் பண்ண முடியலை. என் அத்தை பொண்ணு.. சின்ன வயசுல இருந்து சிநேகிதம்..   தாமரையையும் உங்க பேச்சால பகைச்சிக்காதீங்க அவ்வளவு தான் சொல்வேன்…”
“எங்கண்ணன் உங்க வீட்டுல பொண்ணு குடுக்கறாங்களோ இல்லையோ எங்கண்ணனைக் கேட்காம நம்ம ஆளுங்க வேற யாரும் கூடப் பொண்ணு குடுக்க மாட்டாங்க!”
“பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்.. நம்ம சம்பளக் காரங்க அவன் தொழில்ல காசை அள்ளிடுவான். அப்புறம் நாம தான் கீழ போயிடுவோம்… ஒழுங்கா இருங்க” என்று மிரட்டினாள்.
ஆம்! எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறான். அடுத்தவர் நோகும் படி பேச யோசிக்க மாட்டான். இப்படி ஒரு குறை இருந்தாலும், லஞ்சம் கொட்டும் அவனின் பணியில் ஒரு பைசாக் கூட  லஞ்சம் என்ற ஒன்றை வாங்காதவன் ஸ்ரீநிவாசன். அதனைக் கொண்டே ஆதவன் அவன் என்ன பேசினாலும் “போடா” என்று துடைத்து விட்டுப் போய்விடுவான்.
 அவர்கள் சென்று குழந்தையைப் பார்த்து விட்டு வந்தனர். குழலியின் மாமியார் வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு சென்று விட இவர்கள் மட்டும் தான். மதிய உணவும் தடபுடலாக இருக்க.. உண்டு முடித்த ஸ்ரீநிவாசனுக்கு தூக்கம் சொக்க..
அவனை உறங்க அனுப்பிய பிறகு தான் “ஷப்பா” என்று குழலி மூச்சு விட்டு நிமிர்ந்தாள். “எப்படித் தான் உன் வீட்டுக்காரரை சமாளிக்கறியோ” என்று ஆதவன் குறை பட.
“அண்ணா ப்ளீஸ்! எனக்காக அவர் என்ன பேசினாலும் கண்டுக்காத!” என்று குழலி வேண்டிக் கேட்டுக் கொள்ள..
“உன் முகத்துக்காக, உன் பசங்க முகத்துக்காகத் தான் விடறேன்” என்றான்.
பின்பு அவளின் மக்கள் இருவரையும் வெளியேக் கிளப்பினான்.. இவன் அவர்களின் வீட்டிற்கு செல்ல மாட்டான். அதனால் அவர்கள் வரும் போது உடைகள், திண்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் என்று குவித்து விடுவான். பிருந்தா “நானும் வருவேன்” என்று அடம் பிடிக்க.. மூவரையும் கிளப்பினாள் குழலி. மித்ரா எட்டி எட்டி பார்த்தபடி நின்றாள்..
“நீயும் வா மித்ரா” என்று ஆதவன் அழைக்க.. தாமரையின் பின் ஓடி மறைந்தாள்.
தாமரை வராமல் வரமாட்டாள் என்று புரிந்தவன்… “நீயும் வா தாமரை” என்றான்..
“அஸ்வதி தூங்கறா!” என்றாள்.
“குழலி பார்த்துக்குவா நீ வா!” என்றான் அதட்டலாக.. அவனுடைய அதட்டலில் தாமரை அரண்டு அப்படியேக் கிளம்ப..
“அச்சோ தாமரை!” என்று குழலி தலையில் அடித்துக் கொண்டாள். “என்ன புடவை இது? என்ன புடவை கட்டு இது..? இப்படி அண்ணாவோட வெளிய போவியா! போ! போ! மாத்திட்டு வா!” என்றாள்.
தாமரை உள் செல்ல…
“நீ அவளை மாத்திட்டு வான்னு சொன்னா, இன்னும் நல்லா இல்லாம ஏதாவது கட்டுவா.. அவளுக்கு தெரியலை! நீ போய் எடுத்து கொடு, அப்படியே புடவை கட்ட சொல்லிக் குடு!” என்றான் தங்கைக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில்..
“இப்போ தான் என் வீட்டுக்காரர் எத்தனை பொண்டாட்டி கட்டினாலும் மெயிண்டயின் பண்றான் உங்க அண்ணன் சொன்னார்! நீ என்னைப் போய் புடவை கட்ட சொல்லிக் குடுக்க சொல்றியே” என்றாள் சன்ன நக்கல் சிரிப்புடன்.
மெலிதாக அவளின் தலையில் தட்டி “போ” என்றான்..
“ஹீரோயினே இல்லாம நடிச்சாலும் கமலஹாசன் காதல் மன்னன் தான் அண்ணா” என்று குழலி மீண்டும் சொல்ல..
“போடி நீ முதல்ல!” என்று சிரிக்க…    
குழலிக்கும் சிரிப்பு… அதனோடே அவள் உள்ளே செல்ல…  
“சரியான கிறுக்குப் பய!” என்று அவளின் கணவனையும் மனதிற்குள் திட்டினான்.
ஆனாலும் முகத்தில் புன்னகை.. “இன்னும் அந்தப் புள்ள முகத்தை கூட நான் சரியா பார்க்கலை.. இதுல இவனுங்க வேற… ஊருக்குள்ள என்னமா உன்னை நம்புறாங்க ஆதவா!” என்று நினைத்த போது புன்னகை விரிந்தது.
கூடவே சுகன்யாவின் நினைவுகள் சுனாமியாய் மனதில் மேலெலும்பியது… ஏன் இப்படி ஆனது என்று கசந்த முறுவல் மனதில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
தாமரை வேறு உடை மாற்றி வர.. மித்ரா அவளின் மேல் ஏறி இருந்தாள். படியிறங்கி அவள் வர.. அதனைப் பார்த்தவாரே சுகன்யாவின் நினைவுகளைப் பெரு முயற்சி செய்து பின் தள்ளினான்.
அவனே உணர்ந்தான், மனம் சற்று மாறி வருகிறது.. ஒரு உத்வேகம் தன்னுள் வருகிற இந்த வேளையில் மீண்டும் இழப்பின் பின் மனதை செல்ல விடவேண்டாம் என்று.
திரும்பித் தாமரையை பார்த்தான்..   
குழந்தைகள் அனைவரும் பின் ஏறியிருக்க.. தாமரை “நீங்க முன்ன போங்க” என்று பிள்ளைகளிடம் சொல்லி நின்றிருந்தாள்..
“இவளை என்ன செய்ய?” என்று நினைத்தவன்..
“மித்ராவைப் பின்னாடி விட்டு நீ முன்னாடி ஏறு” என்று ஒரு அதட்டல் போட.. அதன் பின்னே தான் முன் ஏறினாள் தாமரை. அம்பாசிடர் மெதுவாக நகர…. தாமரையின் மனம் கணவனோடான பயணத்தில் வேகமாக நகர்ந்தது.       

Advertisement