Advertisement

” சரி நான் என்ன செய்தால் இதற்கு நீ ஓகே சொல்வாய்” என்று மீண்டும் விட்டுக் கொடுக்கவும் கடுப்பானவன் “அந்த கிணற்றில் போய் குதி உடனே உன் சி . டி கையில் இந்த போனை கொடுக்கிறேன்” என்று சொன்னதும் நொடியும் தாமதிக்காது கிணற்றில் பாய்ந்தாள். அவர்கள் கத்தல் அவள் காதுகளில் விழுமுன்னே கிணற்றிலேயே மயங்கி விழுந்தாள்.

” அறிவிருக்காடா உனக்கு?” என்று அத்ரிஷ் திட்டுவதை கூட அத்விக் கேட்டிருக்காது தாமதிக்காமல் அவனும் குதித்திருந்தான். தண்ணீருக்குள் சென்று மயங்கியவளை தோளில் சுமந்து படிகட்டுகள் வாயிலாக மேலே ஏறி அவளைக் கீழே கிடத்திவிட்டு “நீருக்குள் பஞ்சுபோல் இருந்தவள் வெளியே வந்ததும் பாராங்கல்லாய் கனக்கிறாள்” என்றான் கைகளுக்கு சொடக்கு எடுத்தபடி.

” எழுந்துருடி எனக்கு பயமாயிருக்கு” என்று பதறிய விக்னவிடம் “சும்மா இருடா” என்று அத்விக் அதட்ட “உன்னால் தான்டா எல்லாம்” என்று அவன் சட்டையை பிடித்திருந்தான் அத்ரிஷ்.

“இந்த லூசு இப்படி பண்ணும் என்று எனக்கு என்னடா தெரியும்” என்று அத்விக் மல்லு கட்டவும் “கொஞ்சம் அமைதியா இருங்கடா இன்னும் இவள் கண்ண திறக்கலை” என்றான் விக்னவ் தொண்டை கரகரக்க.

அதற்குள் கிணற்றுக்குள் ஏதோ விழுந்தது போன்று சத்தம் கேட்டது என்று அங்கு வந்த பெரியவர்கள் மயங்கி கிடந்தவளை பார்த்ததும் பதறினர். “என்னடா ஆச்சு? அம்மு இங்க பாரு என் வயிற்றில் புளிய கரைக்காதடி முழிச்சுக்கோ” என்று வாய்க்கு வந்தபடி பிருந்தா கதற “அமைதியா இரு ஒன்றும் இருக்காது. அதிர்ச்சியில் மயங்கி இருப்பாள் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவோம்” என்று ஆறுதல் அளித்ததோடு அத்விக்கிடம் “எப்படி விழுந்தாள்?” என்றார் ரூபா .

“அம்மா அது வந்து..” என்று அத்விக் ஆரம்பிக்கையிலே “கால் தடுக்கி விழுந்தா அத்தை அத்வி உடனே குதித்து தூக்கி வந்து விட்டான்” என்றான் விக்னவ்.

ஹரிஹரனுக்கும் ஜெகனுக்கும் தகவல் கொடுத்துவிட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். சென்னையில் உள்ள ஹாஸ்பிடலுக்கு கூட்டி போகலாமே என்று அத்விக் சொன்னதற்கு “இங்க ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து மயக்கம் தெளிந்த பிறகு சென்னையில் ஸ்கேன் பார்த்துக்கொள்ளலாம் என உங்க அப்பா சொன்னாரு டா” என்றார் ரூபா . அத்ரிஷ் முறைப்பை சட்டை செய்யாது ‘ஏ முண்டகண்ணி மரியாதையா அந்த கண்ணை திற எல்லோரிடமும் பீதியை கிளப்பி விட்டு சொகுசா கனவு காண்பதை பாரு’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே வந்தான் அத்விக்.

வேலூர் மருத்துவமனையில் அனைவரையும் அதிகநேரம் சோதிக்காமல் கண்களை திறந்தவள் “ஆஆ வலிக்குது ரொம்ப வலிக்குது இங்க வலிக்குது….” என்று கத்த ஆரம்பித்தாள். உடனே சென்னையில் உள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட அனைத்துவிதமான ஸ்கேன் பரிசோதனைக்கும் உள்ளானாள். வலது பக்க இடுப்பு எலும்பு லேசாக விலகியிருந்தது. ஆறு வாரங்கள் உரிய ட்ரீட்மென்ட் பிறகு மருத்துவரிடம் “சர்ஜரி எதுவும் அவசியம் இல்லையா டாக்டர்” என்ற ஜெகனின் கேள்விக்கு “அதிகபட்சம் தேவைப்படாது சிறிய பெண் வளரும் வயது ஒன்றரை மாதம் கழித்து மறுபடியும் பரிசோதித்து பார்க்கலாம். முன்னேற்றம் தெரிந்தால் ஆபரேஷன் தேவைப்படாது. சர்ஜரி கொஞ்சம் சிக்கலான ஒன்று இப்போதைக்கு வலது இடுப்பு எலும்பு அதன் இருப்பிடத்திலிருந்து சற்று தள்ளியிருக்கிறது. இந்த ட்ரீட்மென்டிலேயே ஷி வில் பிகம் ஃபைன். டோன்ட் வொரி” என்று மருத்துவரின் பதிலில் திருப்தி அடைந்தனர்.

முதல் இரு நாட்கள் வலதுபக்கம் தன்னை மறந்து தூக்கத்தில் புரண்டு படுத்தாலும் வலி மிகுதியால் கத்தி மருத்துவமனையையே இரண்டாக்கி கொண்டிருந்தாள். தன்னால்தான் இதெல்லாம் என்ற குற்ற உணர்வில் வாடிய அத்விக் அவள் கத்துவதை பொறுக்கமுடியாமல் “வேற ஏதாச்சு ஹாஸ்பிடல் போகலாமா மாமா இன்னும் பெரிய ஹாஸ்பிடல் எங்காவது… ரொம்ப கஷ்டப்படுகிறாள் இங்கு” என்று ஹரிஹரனிடம் சென்றான்.

அச்சமயம் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்த சீஃப் டாக்டர் கதிரவன் அத்விக்கிடம் திரும்பி “எலும்பு முறிவுகளில் ஆபத்தான ஒன்று இடுப்பு எலும்பினது. அதுவும் பெண் பிள்ளைகளுக்கு. அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிய பின் ஒரு குழந்தையை சுமக்க இந்த இடுப்பெலும்பு இன்றியமையாது பயனளிக்கிறது. ஒரு சர்ஜரியால் அரை மணி நேரத்தில் இந்த எலும்பை அதன் பகுதியில் பொருத்திவிட எங்களால் முடியும் . ஆனால் அதன் பின்விளைவுகள்! இரு கால்களில் உயரம் வித்தியாசப்படும் பார்ப்பதற்கு தெரியாவிட்டாலும் அனுபவிப்பவரின் வலி! பார்வை மங்கலாக வாய்ப்பிருக்கிறது. இதுவே வயதானவர்களுக்கு வந்திருந்தால் ஏர்லி-டெத். அதாவது சர்ஜரி முடிந்து பத்து வருடத்திற்குள் இறந்து விடுவர். கணக்கீடின்படி 80 % வயதானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த கேஸில் சிறிய பெண் என்பதாலும் மயில்ட் பிராக்சர் என்பதாலும் சீக்கிரம் குணமாகிவிடுவாள் . ஆனால் ஒரு மாதகால வலியை அனுபவித்து தான் தீர வேண்டும். வலிமிகு சமயத்தில் பெயின் கில்லர் இன்ஜெக்சன் போடுவார்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் . சரிதானே” என்று பொறுமையாக விளக்கவுரையாற்றினார்.

“தாங்க்ஸ் டாக்டர்” தன் நன்றியை தெரிவித்ததோடு “அத்விக் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்றும் கேட்டுக்கொண்டார் ஹரிஹரன். “இந்த வயதில் எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள். உங்களது வலி எனக்கு நன்றாக புரிகிறது. பையனுக்கு பாசத்தில் எழுந்த கேள்வி. அது எப்படிப்பட்ட விதத்தில் இருந்தாலும் பதில் அளிக்க வேண்டியது நம் கடமை தானே சார்” என்றார் கதிரவன்.

அப்போது அங்கு வந்த ஆர்யன் “நீ எங்கடா இங்கே?” என்றான் அத்விக்கிடம்.

ஆர்யன் அத்விக்கின் சக வகுப்பு மாணவன். “இவர் என் அப்பா டாக்டர் கதிரவன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் ஆர்யன்.

பதிலுக்கு தன் மாமாவையும் மாமா மகளின் எலும்பு முறிவு பற்றியும் கூறினான் அத்விக்.

இரு வாரங்களில் வலி சற்று மட்டுப்பட்டிருந்தாலும் வலி எடுக்கும் போது அருகில் இருப்போரை ஒரு வழி ஆக்கிவிடுவாள்.

இப்போது அவளது பெருங்கவலை பத்திய சாப்பாடு தான். பெரியவர்களுக்கு தெரியாதபடி அத்ரிஷ் மூலம் அவளுக்கு வேண்டிய ஒருசில தின்பண்டங்கள் அவ்வப்போது கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. டைகரும் அவளை காண வரும்போது அவளுக்கு வேண்டியதை பிறர் அறியாமல் எடுத்துக் கொடுத்து உதவினான்.

அன்று மாலை பள்ளி முடிந்து மருத்துவமனைக்கு வந்த அத்விக் அவளிடம் ஒரு பெரிய காட்பரீஸ் பாரை நீட்டினான். “எனக்கா அத்வி?” என்று பெற்றுக் கொண்டவள் ஒரே மூச்சில் அதனை தீர்த்து விடக்கூடாது என்ற அறிவுரைப்படி 2 ஸ்கொயர் மட்டும் சாப்பிட்டுவிட்டு தலையணைக்கு அடியில் அதனை பத்திரப்படுத்தினாள். அவள் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவன் “எந்த தைரியத்தில் நீ குதித்தாய் அதுவும் நீச்சல் கூட தெரியாமல் (அனைத்து நீச்சல் வகுப்புகளையும் வெற்றிகரமாக பங்க் அடித்ததன் பயனாக) என்றான் ஆதங்கமாக.

அதற்குள் இன்னும் ஒரே ஒரு ஸ்கொயர் என்று கேட்டு சாக்லெட்டை சுவைத்துக் கொண்டிருந்தவள் “அதான் நீ இருக்கியே தூக்கிட்டு போக எப்பவும் எப்பெப்பவும்” என்று அழகாய் தலை சரித்து கண்ணடித்து சிரித்தாள். அந்த மாயச் சிரிப்பு செய்தது என்னவென்று அவன் அறியான். ஆனால் அவளை பத்திரமாக எப்பொழுதும் கண்காணித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணம் மட்டும் மேலுங்கியது.

இவர்களின் உரையை கேட்டு கொண்டிருந்த பிருந்தா “அடியே கழுதை நீயேவா கிணற்றுக்குள் குதித்தாய் எங்களை சித்திரவதை செய்யவே பிறந்தாயா இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறாய்? ” டிரிப்ஸ் போட்ட கைகள் என்பதையும் மறந்து பட்டென்று ஒரு அடி வைத்தார்.

” ஆஆ… வலிக்குது” என்று அவள் கத்த “அவளை அடிக்காதீங்க அத்தை” என்று குரலை உயர்த்தி இருந்தான் அத்விக்.

” அவள் செய்த காரியத்திற்கு அவளைக் கொல்லாமல் விட்டேன் என்று சந்தோஷப்படு” என்றும் மேலும் அடிகளை வழங்க போக “சொல்றேன்ல அத்தை அடிக்காதீங்க. இனி அவள் என்ன செய்தாலும் அடிக்க கூடாது அவளை எனக்கு தானே திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள் அந்த உரிமையில் சொல்கிறேன்” என்றான் உறுதியாய்.

அடி வாங்குவதற்கு காரணமாகவும் இருந்துவிட்டு பேச்சை பாரு என்ற கோபத்தில் “உன்னை எல்லாம் நான் கட்டிக்க மாட்டேன் தடிமாடு” என்று மனம் இல்லாவிடினும் கையில் இருந்த சாக்லேட்டை தூக்கி எறிந்தாள்.

” உனக்கு போய் சப்போர்ட் செய்தேன் பாரு” என்று அத்விக்கும் திருப்பி கொண்டு செல்ல பிருந்தா தான் செய்வதறியாது திகைத்து நின்றார்.

” என் பெண்ணை அடிக்கிற உரிமை கூட இல்லையா” என்று தேம்பியவரை “உன் பொண்ணை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்ள அத்விக் இருக்கிறான் என்று சந்தோஷ படாமல் அழுக வேறு செய்கிறாயா?” என்று மரகதம் தான் சமாதானப்படுத்தினார். மேலும் “அழுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை சட்டுனு அடுத்த வேலையைப் பார்க்கப் போகணும்” என்று அப்பத்தா அடிக்கடி கூறும் அறிவுரை நினைவுகூற சென்னைக்கு தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் அத்விக்.

“எங்கடா ஊருக்கா?” ராகுலின் கேள்விக்கு “எமர்ஜென்சினா கால் பண்ணு ஒரு ரெண்டு நாள்ல திரும்பி வந்து விடுவேன்” என்று திரும்பி கூட பார்க்காமல் வேகமாக வெளியேறியவனை அவனது மொபைல் நிறுத்தியது.

“அப்பா காலிங்….” ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு …. தோள்பட்டையில் குடிகொண்டிருந்த டிராவல் பேக் அவனது அனுமதியின்றி நழுவிக் கீழே விழுந்தது . முழுதாக போன் அடித்து ஓயும் வரை திரையை வெறித்துக் கொண்டிருந்தவன் அடுத்த முறை ஒரே ரிங்கில் சுதாரித்து பச்சை கலர் பாலை ஸ்வைப் பண்ணி விட்டு தன் காதுக்கு கொடுத்தான்.

” வீட்டிற்கு வா” என்றது மறுமுனை. குண்டூசி கொண்டு தன் இதய பலூனை டப்பென்று உடைத்தது போல வலித்தது . ஒரு சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பு நல்லா இருக்கியா கண்ணா… கண்ணா கூட அதிகப்படி நல்லா இருக்கியா என்று கேட்டிருக்கலாம் தானே. மனதை மறைத்து “அது அப்பா…” என்று அவனின் வாக்கியத்தை முடிக்கும் முன்னே “வா என்று சொன்னேன்” அழுத்தமாக எதிரொலித்தது. “பத்து நாட்களில் அவார்ட் பங்க்ஷன் இருக்கிறது. அது முடிந்தவுடன் அங்கு வருகி….” பதில் பேசிக்கொண்டிருக்கும்போதே போன் அணைக்கப்பட்டிருந்தது .

ஊருக்கு தயாரான அவனது பேக் அவனை பார்த்து சிரித்தது போன்ற ஒரு பிரமை தோன்ற கையில் இருந்த போனை என்றுமில்லாத அளவிற்கு தூரமாக வீசி எறிந்தான். கேட்ச் என்று பறந்து அப்போனை கைப்பற்றியதோடு நண்பனை “உடைத்து விடாதே என்று படித்துப் படித்து உன் மண்டைக்கு ஏத்தி தானே கொடுத்தேன்” என்றான் ராகுல் கோபத்துடன்.

” எனக்கிருக்கும் வெறியில் உன்னை போட்டு உடைக்கவில்லை என்று சந்தோஷப்பட்டு கொள்” என்று அவனை விட கோபமாக கத்திவிட்டு அருகில் இருந்த பேக்கை ஒரு உதை உதைத்து விட்டு சென்றான் அத்விக்.

” மச்சி நீ ஊருக்கு கிளம்பவில்லையா” என்று கேட்க கொள்ளை ஆசை தான் அப்படி கேட்டால் அந்தப் பேக் நிலைமை தான் தனக்கும் என்று சுதாரித்து நித்திரா தேவியை அரவணைத்துக் கொண்டான் ராகுல் .

புது தில்லி… சுதந்திர தின விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் கோலாகலமாகவும் பாதுகாப்பான முறையிலும் கண்காணிக்கப்பட்டு கொண்டிருந்தன. காலையில் கொடியேற்றமும் கலை நிகழ்ச்சிகள் பிரதமர் உரை ஜனாதிபதி உரை அமோகமாக அரங்கேற்றபட மாலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டிற்கான ஜனாதிபதி விருதுகள் சிறப்பு பிரிவின்படி 177 நபர்களுக்கும், பதக்கங்கள் 88 காவல் அதிகாரிகளுக்கும் வழங்கப்பெற்றது.

இறுதியாக முதன்மை விருதான சர்வோட்டம் யுத் சேவா விருத்திக்கான அத்விக் பெயர் அழைக்கப்பட்டது . ஜனாதிபதியின் இவ்வளவு இளம் வயதில் இச்சாதனையா என்று ஆச்சரியம் கலந்த சந்தோஷப் பார்வையோடு கொடுத்த விருதினை பெருமை கலந்த கம்பீரத்துடன் பெற்றுக்கொண்டான். அவனை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக பதவி உயர்வும் கிடைக்கப்பெற்றது. கௌரவப்படுத்தும் வகையில் அவனை உரையாற்றும்படி கேட்டனர் . மேடைப்பேச்சு என்றாலே அலர்ஜியாகி ஓடியவனின் கைகள் இன்று இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்களை கொண்டுள்ள மேடையில் மைக்கை பிடித்தபடி. தான் நினைத்ததை கூறிய தன் பேச்சினை ஆரம்பித்தான் அத்விக். “பள்ளி கல்லூரி நாட்களில் யாராவது தன் சொற்பொழிவை ஆற்ற தொடங்கினாலே ஓட்டம் பிடிப்பவர்களில் எப்பொழுதுமே முதலிடம் எனக்கு தான். இந்த போட்டி உங்களுக்கிடையில் நடத்தி வைக்க நான் தயாராக இல்லை” உதடு பிரியா சின்ன சிரிப்புடன் கூறி முடிக்கவும் “ஹே!!” என்றபடி ஒலித்த கரகோஷம் அவர்கள் அரங்கினை அதிரச் செய்தது.

ஜனாதிபதியே நன்றாக சிரித்து விட்டு “கமான் யங் மேன் இன்றைய இளைஞர்களின் எடுத்துக்காட்டாக திகழும் உங்களின் இந்த உரை எத்தனையோ பெயருக்கு ஊக்கமளித்து அவர்கள் பாதையில் முன்னேற வித்திடலாம். ஸோ டாக் ஸ்போர்டிவ் . டாக் யுவர் எக்ஸ்பீரியன்ஸ்” என்று உற்சாகப்படுத்தினார்.

 

Advertisement