Advertisement

ராகுலின் பெயரை குறிப்பிடவும் மூன்று பேருக்குமே ஒருவித அதிர்ச்சி.

முதலில் தெளிந்தது மிருதுளா தான். அத்ரிஷின் மூலம் நடந்தவற்றை அறிந்து இருப்பாள் என கணித்ததால் ராகுலை ஹர்ஷிதாவிற்கு தெரிந்திருக்கிறது என்று எண்ணினாள் .

நண்பர்கள் இருவரின் குழப்பத்தை பார்த்ததும் “என்ன அத்விக் சார் ஒரு விருதை வாங்கி விட்டீர்கள் என்றால் உங்கள் பெயரை தான் ஜெபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே” என்ற ஹர்ஷிதா நிறுத்தாமல் “நீங்கள் வேண்டுமென்றால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ராகுல் சார். அத்விக் போல்… அத்விக் என்ன அத்விக்! இந்த உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும் நாள் தூரத்தில் இல்லை. இது சத்தியம். இந்த சத்தியம் சசிகலா சத்தியத்தை விட பவர்புல்லானது ராகுல் சார்” என்று கூறிவிட்டு பொதுப்படையாக நான் கிளம்புகிறேன் என்று விடை பெற்றாள்.

” யாருடா இந்த பொண்ணு என்னையே எனக்கு உணர்த்தி விட்டு செல்கிறாள்” ராகுலின் கேள்விக்கு “உனக்கும் எனக்கும் பத்தவைத்துவிட்டு போகிறாள்” என்றான் அத்விக்  வெளிப்படையாக .

அதே சமயம் “அவள் உங்களை நன்றாக வாரி விட்டு செல்கிறாள்” என்று மனதிற்குள் கூறினாள் மிருதுளா.

வெளியே நின்று கொண்டிருந்தவளிடம் சென்று “எப்படி வீட்டிற்கு செல்வாய்? ஆட்டோ பிடித்து தரவா” என்றபடி எதிரில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டை பார்த்து கைதட்டி “ஆட்டோ” என்று கூப்பிட்டான் அத்விக்.

” நான் எப்படி போனால் உனக்கென்ன” என்று கேட்டு வந்து கொண்டிருந்த டாக்ஸி ஒன்றை நிறுத்தினாள் ஹர்ஷிதா.

” ஏன் இந்த விதண்டாவாதம்? அந்த ஆட்டோவில் ஏறினால் குறைந்துபோய் விடுவாயா” முறைத்தபடி கேட்டான் அத்விக்.

” இல்லை கொழுப்பு கூடிப் போய் விடும். நானே டயட்டில் இருந்து எப்படி இளைத்திருக்கிறேன் பாரு” என்று தன் வயிற்றைத் தொட்டு காமித்துவிட்டு நிறுத்திய டாக்ஸியில் ஏறி சென்றுவிட்டாள்.
ஹர்ஷிதா.

‘உடம்பு பூராவும் கொழுப்பை சுமந்து கொண்டு செல்வதை பார்’ மனதில் திட்டியவாறு அத்விக் தான் கூப்பிட்ட ஆட்டோ டிரைவரிடம் சரியான முகவரியில் இறக்கி விடுகிறானா என்று அந்த டாக்ஸியை பின் தொடருமாறு கூறிவிட்டு பணத்தை நீட்டினான் அத்விக்.

” சார் நீ போலீஸ் தானே உன் வீடியோ டாப்புடக்கரா இருந்துச்சு சார் அப்படியே பூஸ்ட உள்ளான்ட ஏத்துன மாரி … போறது அண்ணியா சார் நான் பாத்துக்கிறேன் துட்ட உள்ள வை சார் நீ” என்று புறப்பட்ட ஆட்டோ டிரைவரின் பாக்கெட்டில் பணத்தை வைத்து “டாங்க்ஸு நண்பா” என்று கூறிவிட்டு காஃபி ஷாப்பிற்குள் மீண்டும் சென்றான் அத்விக்.

“சார் நம்ம நாடகம் முடிந்தது தானே நானும் புறப்படுகிறேன்” இதிலிருந்து எப்படியாவது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியவளை “நில்லுடா” என்று அத்விக்கை பார்த்து நிறுத்தியது போல கூப்பிட்டான் ராகுல்.

” நான் அல்ரெடி நின்று கொண்டுதான்டா இருக்கிறேன்” …. அத்விக்

“உன்னுடன் முதன் முதலில் வெளியே வந்தால் கபாலீஸ்வரர் கோவிலுக்கு போகணும் என்று அம்மா வேண்டிக் கொண்டார்களாம். போகலாமாடா” என்று மிருதுளாவிற்கான கேள்வியை அத்விக்கை நோக்கி செலுத்தினான் ராகுல்.

” நாம் எத்தனை முறை வெளியே சென்றிருக்கோம் இப்ப என்னடா புதுசா”

” சென்னையில் சொல்கிறேன் மச்சி. அப்படியே அவர்களையும் கூப்பிடு” என்று மிருதுளாவை அத்விக்கிடம் அழைப்பு விடும் படி கூறினான்.

“நம்ம வேண்டுதலுக்கு மிருதுளா எதுக்குடா?”

“ஒரு பெண்ணை கூட்டி கொண்டு கோவிலுக்கு போனால் விரைவில் நல்லது நடக்குமாம்”

” யாருக்குடா நல்லது” என்று அத்விக் கூறி முடிக்கும் முன்னே டேபிளின் மேல் இருந்த கத்தி ஒன்றை எடுத்து “இதற்கு மேல் ஏதாவது க்ராஸ் கொஸ்டீன் கேட்டாயானால் சொருகி விடுவேன்” என்று எரிந்து விழுந்தான் ராகுல்.

இறைவனை தரிசித்து விட்டு ஆலயத்தில் சற்றுநேரம் அமர்ந்தபடி “என்னடா சாமிகிட்ட எதையோ சீரியசாக டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்தாய்” என்று ராகுல் கொடுத்த தேங்காயை வாங்கி கொறித்தபடி கேட்டான் அத்விக்.

அத்விக்கிற்கு சாமி பக்தியில் எல்லாம் நாட்டமில்லை . திருவிழா சமயங்களில் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றது. அதன் பின் இப்போதுதான். மும்பையில் சில சமயம் ராகுல் கூப்பிட்டாலும் மறுத்து விடுவான். இன்று மறுக்க மனம் வரவில்லை. மிருதுளாவிடம் கேட்டபோது ஒரு வார்த்தை மறுப்பின்றி அவள் புறப்பட்ட விதம் அத்விக்கினது எண்ண அலைகளையும் சந்தேகத்தையும் உறுதிசெய்தது.

“உன்னை மொத்துச்சே ஒரு பொண்ணு அது நல்லா இருக்கணும்னு வேண்டினேன்” என்றுவிட்டு “எப்படிடா” என்று கேள்வியோடு நிறுத்தினான் ராகுல்.

” என்ன எப்படிடா”

” திருப்பி அடிக்க கூட வேண்டாம். ஆனாலும் தடுக்க கூட தோன்றாமல் ஏதோ ஒரு மோன நிலையில் முக்தி அடைந்து விட்ட மாதிரி உட்கார்ந்து இருக்கிறாய்”

” ஏதோ அப்படி உட்கார்ந்து இருந்ததால் தான் இந்த நாலு அடியோடு தப்பித்தேன் என்று நானே சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறேன்”

” எப்போதும் இப்படிதானா” ஹர்ஷியைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலை விட அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி அறியும் ஆவலே ராகுலிடம் மேலோங்கி இருந்தது.

தன் பங்கிற்கு மிருதுளாவும் “கண்டிப்பாக இப்படிப்பட்ட ஒருத்தியிடம் நான் நடிக்கணும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை சார்” என்று அதிர்ச்சியடைந்து மொழிந்தாள் அவள் கருத்துக்களை.

“இன்று நீங்கள் பார்த்தது ஜஸ்ட் எ டீசஸர். அவள் எப்படிப்பட்டவள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்லவா?” என்று அத்விக் கேட்கவும் மற்ற இருவரும் ஆர்வத்துடன் தலையசைத்தனர்.

” நாளைக்கு உன் பாதுகாப்பில் நடக்கவிருக்கும் போராட்டத்தை தலைமை தாங்கும் மத்திய அமைச்சர் தர்மதுரை இவளுக்கு இடுப்பு வரை குனிந்து நமஸ்காரம் செய்வார் என்றால் நீ நம்புவாயா?” என்றான் அத்விக்.

“வாட்” அதிர்ந்த ராகுல் கூடவே “உங்கள் சொந்தக்காரராடா” என்று வினவும் தவறவில்லை.

ஆனால் கதை கேட்க ஆரம்பித்ததிலிருந்தே மிருதுளாவிற்கு எந்த டவுட்ஸும் வரவில்லை போலும். என்னதான் தெரிந்தவனாக இருந்தாலும் பொது இடத்தில் அதுவும் அத்விக் பதவிக்கு சற்றும் பயப்படாமல் ஹர்ஷிதா நடந்து கொண்ட முறை அவளை பற்றி அறியும் சுவாரஸ்யத்தை கூட்டியது.

ராகுலிடம் அனாவசிய கேள்விகளை கேட்காதே என்பது போன்ற பார்வையை வீசியவள் ” சார் யூ கோ அஹெட்” என்றாள் அத்விக்கிடம்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்… “உங்கள் கண்களுக்கு முன் தெரியும் ஸ்பைரல் ஒளி வட்டத்திற்குள் செல்லுங்கள்” என்று ஆரம்பித்தான் அத்விக். ஹர்ஷிதா பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். அவளும் என் தம்பி அத்ரிஷும் ரொம்ப க்ளோஸ்.

(என்னதுதுது! அத்ரிஷ் அத்விக் சாருடைய தம்பியா? தொலைந்த மித்து நீ என்று தன்னுள் கூறிய மிருதுளா கதையை பின் தொடர்ந்தாள்)

ஹர்ஷிதாவிற்கு பாடத்தில் என்ன டவுட் இருந்தாலும் அதிர்ஷிடம் தான் கேட்டு தெரிந்து கொள்வாள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அவள் பள்ளிக்கு செல்வதே வீட்டில் இருந்தால் போரடிக்கும் என்பதற்காக தான் இருக்கும். அவன் தான் அவளுக்கு பாடமே கற்றுத் தருவான். அவன் கொஞ்சம் நன்றாக படிப்பான்.

( கொஞ்சம் நன்றாக படிப்பானா! இது கொஞ்சம் ஓவர் அத்விக் சார் !!! அத்ரிஷ் தான் எங்கள் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் எனும் மிருதுளாவின் மைன்ட் வாய்ஸ் அத்விக்கை பின்தொடர்ந்தது)

“அவளது தேர்வு நாட்களில் எங்கள் வீட்டில் விடிய விடிய விளக்கு எரியும். இதில் எனக்கு எரிவது என்னவென்றால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பூஸ்ட் ஹார்லிக்ஸ் மைலோ என்று எதையாவது சுமந்துகொண்டு கிச்சனிற்கும் ரூமிற்கும் என்னை பெத்த மகராசி நடையோ நடை பயின்று கொண்டு இருப்பதுதான். என் சிவில் சர்வீஸில் ஃபைனல் எக்ஸாம்ஸின் போது ஒரு டீ கூட நீங்கள் போட்டு கொடுக்கவில்லையே மம்மி” வராத கண்ணீரைத் துடைத்தவனை ராகுல் “சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் பையனுக்கு எந்த அம்மாடா சென்னையிலிருந்தபடி டீ போட்டு கொடுப்பாங்க” என்றான்.

இதுவரை எதுவும் ராகுலிடம் பேசிரா மிருதுளா “யார் ராகுல் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிறார்கள்” என்று கேட்டுவிட்டு “ஜென்மத்திற்கும் உங்களுடன் நான் பேசப்போவதில்லை” என்ற தன் சபதத்தை தானே முறியடித்ததை எண்ணி  தன் நாக்கினை கடித்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

” நடுவே ஏற்பட்ட இடையூறு காரணத்தினால் கதை ஒத்திவைக்கப்படுகிறது” என்ற அத்விக்கின் கழுத்தில் கை வைத்து “இந்த இடையூறை ஸ்டார்ட் பண்ணி வைத்தது நீதாண்டா. ஒழுங்கா சொல்லு” என்றான் ராகுல்.

“நோ மோர் இன்டரப்ஷன்ஸ்” என்று மீண்டும் கதைக்குள் பயணித்தான் அத்விக்.
ஹர்ஷிதாவிற்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அத்ரிஷ் ரூமில் ஏசி வேலை செய்யவில்லை என்று ” ஒரு பத்து நிமிடம் இங்கு படிக்கிறேன் அத்வி” என்று கேட்டு கொண்டு அத்ரிஷுடன் என் அறைக்குள் நுழைந்தவள் 10 மணி நேரமாகியும் வெளியே செல்லவில்லை. சற்று நேரம் அவளைப் போகச் சொல்லி மல்லு கட்டி விட்டு சரி படிப்புதான் முக்கியம் என்று நள்ளிரவுக்கு மேல் அத்ரிஷ் ரூமிற்கு சென்று தூங்கி விட்டேன்.

அடுத்த நாள் “நல்லா எழுதிட்டு வா டார்லிங் ஆல் தி பெஸ்ட்” என்ற அத்ரிஷிடம் “சென்டம் ரிசல்ட்ஸ் உடன் மாலை உன்னை சந்திக்கிறேன் சி . டி” என்று சத்தியம் செய்தவள் மதியம் சத்யம் தியேட்டரில் வாசலில் தன் தோழியுடன் நின்றாள்.

சுர்ரென்று ஏறியதை தன்னுள்ளே அடக்கிய அத்விக் “எக்ஸாம் ஹாலில் இருக்க வேண்டியவளுக்கு இங்கென்ன வேலை” கோபமாக தெறித்தது அவன் வார்த்தைகள்.

” அத்வி ப்ளீஸ் புரிந்து கொள்… அதர்வனாவிற்கு நேற்று உடம்பு சரியில்லை. ஒன்றுமே படிக்கவில்லையாம். கதிரவன் அங்கிள் ‘இன்று உடம்பிற்கு பரவாயில்லை தானே.. பரீட்சையை அட்டெண்ட் செய்து பார் அப்போதுதான் போர்ட் எக்ஸாம் எளிதாக இருக்கும்’ என்று கூறி பள்ளிக்கு அனுப்பிவிட்டாராம். பாவம் இந்த தேர்வை எழுதினால் கண்டிப்பாக ஃபெயில் ஆகிவிடுவேன் என்று அழுகிறாள். என்ன செய்யட்டும் நீயே சொல்லு”

பொது இடம் என்பதால் ஹர்ஷிதாவை ஓங்கி உயர்ந்த கையை கட்டுப்படுத்திக்கொண்டு “சரி பரீட்சை எழுதாமல் போவதால் உங்களை பாஸ் பண்ணி விடப் போகிறார்களா” என்றான் அத்விக்.

“எழுதி ஃபெயில் ஆவதும் எழுதாமல் ஃபெயில் ஆவதும் ஒன்றா” என்று வழக்கடித்தவளிடம் “சரி அதற்கு நீ ஏன் எக்ஸாம் கட் அடித்தாய் ” அமைதியாய் தான் அந்தக் கேள்வி வெளிவந்தது.

ஆயினும் அதில் பொதிந்திருந்த அழுத்தத்தை உணர்ந்து கொண்டவள் “பி. டி யிடம் மட்டும் இதை சொல்லிவிடாதே அத்வி. ப்ளீஸ் நீ சொல்றது எல்லாம் கேட்கிறேன்” என்றாள் அவசரமாக.

ஜெகன் மற்ற எல்லா விதத்திலும் ஹர்ஷிதாவிற்கு அதிக செல்லம் கொடுத்தாலும் படிப்பு விஷயத்தில் பசங்களிடம் காட்டும் அதே கண்டிப்புதான் அவளிடமும் காண்பிப்பார்.

அப்படி ஏதாவது அவளை ஜெகன் சொல்லிவிட்டால் அழுகை குடம் குடமாக அம்மணிக்கு  நிரம்பும். அவராக வந்து சமாதானம் ஆகும் வரை சாப்பிட கூட மாட்டாள்.

ஜெகனின் கோபத்தை உணர்ந்திருந்ததால் தான் தற்போது ஹர்ஷிதா அத்வியிடம் இறங்கி வந்தது. ஆனால் அவனின் சீற்றம் இறங்க வில்லை போலும்.

பதிலேதும் சொல்லாமல் சென்றவன் மீது அவளுக்கு அளவுகடந்த ஆத்திரம் பெருக்கெடுத்தது. அத்விக்கை மாமாவிடம் சொல்ல விடக்கூடாது என்பதற்காக வீட்டிற்குள் வேகமாக விரைந்தாள் ஹர்ஷிதா.

மதிய உணவு நேரம் என்பதால் மாமா வீட்டில்தான் இருப்பார் என்பதை கணித்து வீட்டிற்கு வந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரூபா அத்தையிடம் ‘மாமா இன்னும் ஃபேக்ட்ரியிலிருந்து கிளம்பவில்லை’ என்பதை தெரிந்து கொண்டவளுக்கு அத்விக்கும் ஃபேக்டரியில் தான் இருக்கிறான் என்ற செய்தியையும் போனஸாக கிடைக்க கண்களை கரித்தது.

கால் மணி நேரத்திற்குப் பின் அத்விக்கின் டுகாட்டி சத்தம் எழுப்பிக்கொண்டு உள்ளே வரவும் அவசரமாக எழுந்து அடுப்படிக்குள் ஓடினாள் ஹர்ஷிதா. எதையோ தேடி பின் மேடையில் வைத்திருந்த ஒரு பானையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள். “பாப்பா கழனி தண்ணீரை எங்கு எடுத்து போகிறாய்” சமையல்காரி ரத்னா அக்காவின் பேச்சை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அதை காதில் வாங்கிய ரூபா “நில்லு ஹர்ஷி” அவள் பின்னோடு கத்திக் கொண்டு சென்றார்.

கதவு திறக்கப்பட்டதும் நொடியும் தாமதிக்காமல் கையில் வைத்திருந்த ஒரு பானை கழனி நீரை உள்ளே நுழைந்தவர் மீது கொட்டி இருந்தாள் ஹர்ஷிதா.

மொத்த குடும்பமும் ஹர்ஷி அவசரத்தில் செய்து வைத்த காரியத்தைக் கண்டு ஸ்தம்பித்து நின்றது.

“ஹப்பா ஜஸ்ட் மிஸ்” பின்னால் வந்த அத்விக் கூறிக்கொண்டதோடு தன் வீட்டில் நடக்கப்போகும் போரினை கவனிக்க ஆயத்தமானான்.

ஏய்” என்று இரு அடியாட்கள் தாக்க வர தன்னையுமறியாமல் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் ஹர்ஷிதா. டைகர் வேகமாக ஓடிவந்து அவளுக்கு அரணாக நின்று குரைக்கும் போது தான் புரிந்தது தான் எம். எல். ஏ தர்மதுரைக்கு கழனி அபிஷேகம் நிகழ்த்தியிருப்பது. அதிர்ச்சியில் திறந்த வாயை பொத்தியபடி ரூபா நிற்க ஜெகனும் ஹரிஹரனும் அவரை எவ்வாறு சமாளிப்பது என்ற இக்கட்டில் நின்றனர்.

Advertisement