Advertisement

” நிஜமாகவே சொல்கிறீர்களா சார்” என்று தன் ஆச்சரியத்தை வெளியிட்டு உரிய நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அவனிடம் விடை பெற்றாள்.
அவள் செல்வதை பார்த்துவிட்டு எதிரிலிருந்தவனிடம் “ஐயோ மறந்துவிட்டேனே” என்றான் அத்விக்.
 “நீயா டா இது!  இந்த சிக்கன் (காரமாக இருந்ததால்) செய்தவனை மன்னித்தாலும் மன்னிப்பேனே தவிர உன்னை ஒரு நாளும்” ராகுலின் வாக்கியம் முடியும் முன்னே “ஹான் கண்டுபிடித்துவிட்டேன்! மிருதுளா…. மென்மையான பெயர். அவளைப்போலவே! இல்லடா.. “என்றான் அத்விக் மொபைலில் அந்த கட்டுரையில் அவளது பெயரை பார்த்தபடி.
 ராகுலிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவனை நிமிர்ந்து பார்த்த அத்விக் “என்னடா யோசனை” என்றான் .
“இந்த இடம் லாக்அப் ஆகவும் நீ என் அக்யூஸ்ட் ஆகவும் இருந்தால் உன்னை எப்படி டீல் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”
“என்னடா!!”
 “என்ன நொன்னடா யாருடா அவள்? அவள் வருவதற்கு முன் எப்படி உட்கார்ந்து கொண்டிருந்தாய் நினைவிருக்கிறதா?”
“அவளிடம் ஏதோ ஒரு மேஜிக் இருக்கும்போல மச்சி. அது தானாகவே வேலை செய்கிறது என்று நினைக்கிறேன்”
” ஹோ அந்த மேஜிக் தான் அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தூண்டுகிறதா”
“வாட்! நான் என்ன செய்தேன்? அதுவும் அவளுக்காக”
“நடிக்காதடா. எதுக்கு போட்டோ போட ஒத்துகிட்ட?”
” இப்ப இதுதான் பிரச்சனையா? நண்பனின் வளர்ச்சியில் ஏன்டா உனக்கு இந்த பொறாமை”
” சாம் ஆண்டர்சன் பவர்ஸ்டார் எல்லாம் உன்னிடம் தான் பாடம்படித்திருப்பார்கள் போலும். அவர்களை மிஞ்சி விட்டாய்”
” கொல்ல போறேன்”
” அது நீ செத்து ஆவியா வந்தால்தான் முடியும்”
” வை திஸ் கொலவெறிடா?”
“அதைத்தான் நானும் கேட்கிறேன்! எத்தனை முறை போட்டோக்கு போஸ் கொடுப்போம் என்று சொல்லியிருப்பேன் அப்போதெல்லாம் பெரிய மகாத்மாவை போன்று மறுத்துவிட்டு கூடவே நண்பேன்டானு என்னையும் தியாகி ஆக்கி விட்டு இப்போது அவள் மட்டும் என்ன ஸ்பெஷல்?” என்று சிடுசிடுத்தான்.
” அதெல்லாம் ஒன்றும் இல்லைடா அவள் என் போட்டோவை போடாவிட்டாலும் நாளை இந்தியா முழுக்க என் முகம் பரிச்சியமாகப் போகிறது. சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் ரெசிடென்சியல் போலீஸ் அவார்ட்ஸ் லிஸ்ட்டை நாளைக்கு மீடியாவிற்கு கொடுக்க போகிறார்கள். முதன்மை விருது என்பதால் முதல் போட்டோ என்னுடையதாக தான் இருக்கும். இதில் என் போட்டோவை போடாதீர்கள் என்று சொல்வது நியாயமாக இருக்காது. அப்படி என்னை என் குடும்பத்தினர் பார்த்து விட்டால் என்ன நடக்கும் எப்படி அணுகுவது என்ற குழப்பத்தில் தான் முன்பு யோசித்துக்கொண்டிருந்தேன்”
 அப்போதும் விடாமல் “அதற்கான பதிலை தான் அவள் எடுத்து சொன்னாளா” என்று ராகுல் மடக்கவும் “அப்படி சொல்ல முடியாது. ஆனால் நான் புத்துணர்ச்சியாக உணர்வது உண்மை” என்று கண்ணடித்தான்அத்விக்.
“டேய்ய்ய்”
” சொல்லு மச்சி. என்னிடம் ஏதாவது சொல்ல ஆசைப்படுகிறாயா?”
 இடதிலிருந்து வலதுபுறமாக தலையாட்டிய ராகுல் அங்கு சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு செல்லும் வரை எதுவும் பேசினான் இல்லை.
அன்றிரவு முழுவதுமே அத்விக்கால் நன்றாக தூங்க முடியவில்லை. உடனே அம்மா அழைத்து விடுவார் என்று தெரியும் ஆனால் அப்பா இதை எப்படி எடுத்துக் கொள்வார்? அவரது ரியாக்சன் என்னவாக இருக்கும்? மாமா, அத்தை என்ன சொல்வார்கள்? நிச்சயம் பெருமையாக உணர்வார்கள். விக்கியின் கண்கள் கலங்கி விடும் என்பதில் எந்த ஐயமுமில்லை……
அப்பத்தா “ஏன்டி என் பேரனையா கட்டிக்க மாட்டேன் என்று சொன்னாய் இன்று பார் அவனை கட்டி கொள்ள அனைத்து நாட்டு இளவரசிகளும் எங்கள் வீட்டு காலிங் பெல்லை அடிக்க போகிறார்கள்” என்று அவளை வம்பிழுக்க அவளும் சலிக்காமல் “அந்த காலிங் பெல் இருந்தால்தானே கிழவி அடிப்பார்கள் முதல் வேலையாக அதை கழற்றி விட்டால்” என்று கூறி முடிப்பதற்குள் ஸ்க்ரூ ட்ரைவருடன் அவள் மனதில் நினைப்பதை செயல்படுத்த பிறந்தவனான அத்ரிஷ் அங்கு வந்து நிற்பது போன்ற அதிகாலைக் கனவில் தன் கண்களை திறந்தான் .
அடுத்த நாள் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் இரவு 11 மணியளவில் நடைபயின்று கொண்டிருந்தவனிடம் சென்று பேசவே தயக்கமாயிருந்தது ராகுலுக்கு. இந்த ஆறு வருட பழக்கத்தில் இதுபோன்று ரெஸ்ட்லெஸாக அத்விக்கை பார்த்ததில்லை. கோபப்பட்டு கத்துவான் அல்லது மனம் சோர்ந்த சமயங்களில் அவனுக்கு பிடித்த மற்றொரு வேலையில்  முழுதாக அவனை தொலைத்து விடுவான். அதுமட்டுமின்றி அவனுக்கே அவனுக்கென்று இருக்கிறது பீச் யோகா. காலையிலிருந்து எத்தனை வாழ்த்துக்கள் வாழ்த்து மடல்கள் தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்கும் இன்று அத்விக் தான்  டிரண்டி டாபிக். அனைத்து டிவி சானல்களுக்கும் அத்விக் தான் இன்றைய தீனி. அதிலும் ஒரு நியூஸ் சேனல் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்றபடி நொடிக்கொருதரம் அவனது புகைப்படத்தை ஒளிபரப்பியது. ராஜராஜ சோழனின் சிற்பக்கலைகள் தாண்டி திருவள்ளுவரை நோக்கி விரிவுபடுத்தி கொண்டிருந்தனர் அவனின் புகழை முதன்மையாக கொண்டு. இவை எல்லாம் இருந்தும் அவன் எதிர்பார்த்த அழைப்பு வராததால் இவ்விரவு வேளையிலும் மனதின் படபடப்பு குறையவில்லை. வீட்டில் இச்செய்தியை தவறவிட வாய்ப்பில்லை. அப்படி இருக்க அங்கே என்ன மாதிரியான சூழ்நிலையாக இருக்கும்? அப்பத்தாவிற்கு ஏதேனுமா? இருக்காது என்று தன்னை சமாதானப்படுத்திய மனம் அவளுக்கோ!! என்று அலைபாய்ந்தது.
 அவளது நினைவலைகள் என்றுமில்லாமல் இன்று சுனாமியாய் பெருக்கெடுத்து வாட்டியது. வீட்டைவிட்டு வந்ததிலிருந்து அனைவரை விடவும் அவளை தான் அதிகம் மிஸ் பண்ணியதை இன்றுவரையிலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். ஆயினும் விசித்திரமான முறையில் அவளது உடல் நலனின் மேல் ஏற்பட்ட கவலையினால் அம்மாவிற்கு அழைத்தான். அவர் அழைப்பினை ஏற்காததால் மேலும் குழப்பமுற்றவன் வீட்டின் நிலையை தெரிந்து கொள்ள சென்னைக்கு புறப்பட ஆயத்தமானான்.  சென்னையில் அவனுக்கு தெரிந்த நண்பர்கள் பலர் இருக்கின்றனர். பயிற்சியின்போது பழகிய காவல் அதிகாரிகளே அத்விக்கிற்கு என்றால் உடனே அதை செய்து முடித்து தரக் கூடியவர்கள். அவர்களிடம் ஒரு சொல் போதும் வீடியோ சாட்டில் வீட்டையும் அங்கு உள்ளவர்களையும் கண்முன்னே கொண்டு வந்து விடுவார்கள். அதுவும் வீட்டினருக்கு தெரியாதபடி. ஆனால் அதை மனம் ஏற்கவில்லை. அவளுக்கு ஒன்று என்று உள்மனம் உணர்த்திய பிறகு அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதுமே அவள் உடல் நலனில் தனி அக்கறை தான். அதிலும் அந்த சம்பவத்திற்கு பிறகு கூடுதல் கவனம் தான்.
வேலூரில் தான் அவர்கள் பூர்வீக வீடு இருந்தது. தங்கள் தொழிலிற்காக தொழிற்சாலை அமைத்து வந்து குடியேறியது சென்னையில். ஹரிஹரனும் ஜெகனும் ஆரம்ப காலத்தில் ஒரு சிறு தொழில் தொடங்கி இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக வளர்ந்தமைக்கு அவர்களது நட்பும் விடா முயற்சியும் உழைப்பும் ஆதாரமாக வித்திட்டது. ஜெகனின் தங்கையான பிருந்தாவை விரும்பி அவள் குடும்ப சம்மதத்தோடு ஹரிஹரன் திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடத்திலேயே மரகதம் தன் மகன் ஜெகனிற்கு தங்கள் சொந்தத்தில் வரன் பார்த்து ரூபாவை மணமுடித்து வைத்தார். இப்போதுதான் தொழிலில் வளர்ந்துவரும் சமயம் என்பதால் ஹரிஹரன் பிருந்தா தம்பதியினர் குழந்தை வரவை சிறு காலம் தள்ளிப்போட்டு இருக்க ஜெகன் தன் குழந்தையை உடனே எதிர்பார்த்தார். ஐந்து வருடங்கள் ஆகியும் அந்த எதிர்ப்பார்ப்பு பூர்த்தியடையாதால்  குலம்விருட்சம் அடைய மரகதம் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுதலை பூர்த்தி செய்ய அடுத்த ஒரு மாதத்தில் பிருந்தா  கர்ப்பமானார். அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க ஜெகன் மற்றும் மனதிலிருந்த ஏக்கத்தை மறைக்க முடியாமல் பிரதிபலித்தார். ” அண்ணா நீ வேண்டுமானால் பாரு இந்த குட்டி சீக்கிரம் அடுத்த குட்டியை கூட்டி வருவான்” என்று தன் வயிற்றை தொட்டு பிருந்தா சமாதானத்திற்கு கூறியது உண்மையாகி போனது.  விக்னவ் தான் அத்விக்கை கூட்டி வந்தான் என்பதால் அவனிடத்தில் ஜெகனுக்கு தனி பாசம் உண்டு. அத்விக் பிறந்த 3 ஆண்டிற்கு பிறகு அத்ரிஷ் பிறந்தான். அடுத்த இரு வருடத்தில் பிருந்தாவிற்கு  நாட்கள் தள்ளிப் போக குடும்பமே ஒரு பெண் குழந்தைக்கு வேண்ட வந்து ஜனித்தாள் அவர்கள் வீட்டு இளவரசி .
 மாதம் ஒருமுறை வேலூருக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். மரகதம் மிகுந்த ஆர்வத்துடன்  கணவருடன் தான் பயிரிட்ட கதைகளை கூறி களிப்பார். ஸ்மார்ட்ஃபோன் உபயமாகியிருந்த  சமயம். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததால் அடுத்த வருடம் வாங்கி தருவதாக ஜெகன் கூறவும் ஹரிஹரனிடம் சென்று அத்விக் அதை வாங்கி கொண்டான். ஆனால் தன் மாமாவின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து வாங்க மறுத்து விட்டான் விக்னவ்.
 தமையனிடம் அந்த புதிய போனில் சற்றுநேரம் விளையாடிவிட்டு தருவதாக அத்ரிஷ் கேட்டுக்கொண்டிருந்தான். வேறு ஒரு நாளாக இருந்திருந்தால் அதை அத்விக் கொடுத்திருப்பான்தான். ஆனால் முன்தினம் அவள் மீது ஏற்பட்ட அளவுகடந்த சீற்றத்தால் தரமுடியாது என்று வாதாடினான். அவர்களின் பேச்சைக் கேட்டு அங்கு வந்தவள் அத்விக்கிடம் “எங்க அப்பா வாங்கிக் கொடுத்தது தானே நீயா சம்பாதிச்சு வாங்கின மாதிரி பிகு பண்ணுகிறாய் சற்றுநேரம் கொடுத்தால் என்ன குறைந்து விடுவாயா?” என்று சண்டைக்கு பாய்ந்தாள்.
” உன்னால்தான் அவனுக்கு நான் கொடுக்காததே. பேசாமல் போய்விடு”
 “நான் என்ன செய்தேன்? உனக்கு மொபைல் தர முடியாததற்கு நான் காரணமா ? ” விடாமல் நின்றாள் அவனது சண்டைக்கோழி 
“நீதான் காரணம் நீ மட்டும் தான் காரணம். அத்ரிஷிற்கு எத்தனை படங்கள் வரைந்து கொடுத்தாய் ரெக்கார்ட் நோட்டில் எவ்வளவு முக்கியமான படத்தை வரைந்து கொடுக்க கேட்டேன். எப்படி திருப்பினாய். எல்லாம் நன்றாகப் படம் வரையும் திமிர்”
” விக்கிக்கும் தான் நான் வரைந்து கொடுத்தேன் அவனிடம் திருப்பாமல் அத்ரிஷிடம் மட்டும் ஏன் கோபத்தை காட்டுகிறாய்? மேக்ஸ் மேம் திட்டியதை இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மாவிடம் போட்டுக் கொடுத்ததால் உனக்கு வரைந்து தரவில்லை” என்று விளக்கமும் கொடுத்தாள்.
” இல்லாவிட்டால் மட்டும் வரைந்து கொடுத்து  விட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாய்”
 இவர்கள் பேச்சு போகும்  ரூட்டை பார்த்த அத்ரிஷ் “டார்லிங் விடு. எனக்கு போனே வேண்டாம் வா போகலாம்” என்றான்.
 தன்னால்தான் அத்ரிஷிற்கு போன் கிடைக்கவில்லை என்ற குற்ற உணர்வு “உன் ரெக்கார்டு நோட் ஃபுல்லா நானே வரைந்து தருகிறேன்… சி . டி யிடம் போனை கொடு” என்று தணிந்தாள்.
 அந்த பணிவு அத்விக்கு மகிழ்ச்சியை தரவில்லை மாறாக எரிச்சலை தான் ஏற்படுத்தியது. இப்போதுகூட அத்ரிஷிற்காக தான் படம் வரைய சம்மதித்திருக்கிறாள் என்ற வெறுப்பு மேலோங்க “நோ” என்றான்.
” சரி நான் என்ன செய்தால் இதற்கு நீ ஓகே சொல்வாய்” என்று மீண்டும் அவள் விட்டுக் கொடுக்கவும் கடுப்பானவன் “அந்த கிணற்றில் போய் குதி உடனே உன் சி . டி கையில் இந்த போனை கொடுக்கிறேன்” என்று சொன்னதும் நொடியும் தாமதிக்காது கிணற்றில் பாய்ந்தாள். 

Advertisement