Advertisement

பிரஷன் சொல்வதை பிரகதி உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னே ஆர்யன் அங்கு அரக்கபரக்க வந்து சேர்ந்தான்.

“நீ ஏன்டா இங்கே? நான் பேசுறேன்னு சொன்னேன்ல…” என்ற ஆர்யனிடம் கூறிய பிரஷன் “சொல்லு பிரகி ஆர்யாகிட்ட ஏன் பொய் சொன்னாய்? அவன் உன்னை எவ்வளவு லவ் பண்ணுகிறான் தெரியுமா? இரண்டு நாட்களாக நீ சொன்ன பொய்யினால் அவனுக்கு எவ்வளவு காய்ச்சல் தெரியுமா???”

அதிர்ந்தபடி நின்று கொண்டிருந்த பிரகதி கண்களின் அணை உடைக்க பெற்று கண்ணீர் பெருக்கெடுக்க அவ்விடத்தை விட்டு ஓடியிருந்தாள் .

“பிரகி நில்லு… நான் பேசணும் ப்ளீஸ்” ஆர்யனின் குரல் எதுவும் அவள் செவிகளில் விழவில்லை.

“நீ ஃபீல் பண்ணாதடா கண்டிப்பாக வருவாள். அவள் அத்தானை கட்டிக் கொள்வேன் என்று சொன்னதெல்லாம் பொய்டா. அவள் உனக்கானவள் மச்சி. இந்த ஒரே ஒரு காரணம்தான் என் லவ்வை மறக்க வைத்தது. நீயும் அவளும் நல்லா இருக்கணும்” என்று கூறி சென்றவனின் நட்பு வியக்க தான் வைத்தது. இப்போது பிரஷனிடம் உண்மையை சொல்லி குழப்பி விட ஆர்யனின் மனம் இடம் கொடுக்கவில்லை. மாறாக பிரகதியிடம் எப்படியாவது தன் தரப்பை புரிய வைத்துவிடலாம் என்று நம்பியவனுக்கு அவள் ஒரு சான்ஸ் கூட கொடுக்கவில்லை.

பிரகதிக்கு பிரஷன் கூறியதுமே பிடிபட்டுவிட்டது ஆர்யா தன்னை காதலிப்பதாக பொய்யுரைத்திருப்பது. அதற்கான காரணமும் அன்று தான் கேட்டுகொண்ட உதவிக்காக பிரஷனின் காதலை தடுக்கும் பொருட்டு கூறியிருப்பான் என்று அடுத்த நொடியே யூகிக்கவும் முடிந்தது.

இப்போது ஆர்யனை அவன் காதலித்த பெண் மறுத்திருக்கிறாள். அவன் சித்தரிக்கப்பட்ட காதலினால் இன்று பிரஷன் தன்னை குற்றவாளி கூண்டில் ஏற்றியிருப்பதும் புரிந்தது.

இவை எல்லாம் தெரிந்தும் பிரகதியின் மனதிற்கு இதை ஏற்று கொள்ள தான் முடியவில்லை. ஆர்யாவால் எப்படி என்னை காதலிப்பதாக பொய் சொல்ல முடிந்தது!!

அப்படி என்றால் நட்புக்காக எப்படி வேண்டுமானாலும் சொல்லலாமா?
நன்மைக்காக என்றாலும் இத்தனை நாட்கள் ஆர்யனின் பொய் காதலி என்ற பெயரை பெற்றிருந்தேனா? என்னை பற்றி சிந்திக்க வேண்டாமா? நான் என்ன நினைப்பேன் என்று யோசித்திருந்தால் ஆர்யனால் இப்படி ஒரு பொய்யை கண்டிப்பாக சொல்லியிருக்க முடியாதே…….மனதிற்குள் மேலும் ஆயிரம் கேள்விகளை கேட்டவள் அன்றிலிருந்து அர்யனை முற்றிலும் தவிர்த்து விட்டாள்.

அப்படி விலகி சென்றவள் பிரஷனிடம் பேசாமல் இருந்ததில்லை.

ஆனால் பிரஷன் ஆர்யனின் பேச்சை எடுத்தால் பிரகதி உடனே கிளம்பி விடுவாள்.

சில நாட்கள் அவள் போக்கில் விட்டவனுக்கு அவளின் விலகல் ரம்பமாய் அறுக்க ஆரம்பிக்க அவளிடம் சென்று “பிரகி ப்ளீஸ் போகாத … நான் செய்தது பெரிய தப்பாகவே இருக்கட்டும் …. அதற்கு இப்படி தான் பேசாமல் சென்று விடுவாயா? உன் நண்பனை நீ மன்னிக்க மாட்டாயா? இப்படி மூஞ்சி தூக்கிட்டு போகிற அளவுக்கு கொடுமைகாரனா நானு ??” என்றான் ஆர்யன் ஆதங்கத்துடன்.

“நான் தான் கொடுமைகாரி … நான் செய்தது தான் மகா பெரிய தப்பு …. நீ என்னை மன்னிக்கவே வேண்டாம்… தயவுசெய்து இனி என்னிடம் வந்து பேசாதே….. எனக்கு நம்ம இந்த மூணு வருஷம் ப்ரெண்ட்ஷிப் பாண்ட் இன்னும் ஸ்வீட் மெமரீஸா தான் தித்திக்குது. அதை எக்காரணம் கொண்டும் கசப்பாக்கி விடாதே ஆர்யா ” என்று கூறி சென்றவளிடம் அதன் பிறகு ஆர்யன் பேச நினைக்கவில்லை.

கல்லூரியின் கடைசி நாள் “ஏன்டா பிரகி புரிந்து கொள்ள மறுக்கிறாள்…. இனி நீ ஸ்டேட்ஸிற்கு சென்று விட்டால் அவளை பார்ப்பது கூட அரிதாகி விடுமே ” என்று பிரஷன் கவலை கொண்டதற்கு “விடுடா பாத்துக்கலாம்… இரண்டு வருடம் தான் படித்து விட்டு வந்துவிடுவேன்… நம்ம பிரகி எங்கே போய்விடப் போகிறாள்” என்ற ஆர்யன் பிரகதியை ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அத்விக் ஹர்ஷிதாவின் வரவேற்பின் போது தான் சந்தித்திருந்தான்.

பிரகதி லண்டனில் இருந்தது கூட அன்று அவள் அப்பா ரகுநாதன் சொல்லி தான் ஆர்யாவிற்கு தெரிந்திருந்தது.

கதை முழுவதும் சொன்னால் அத்விக்கிற்கும் ஹர்ஷிதாவிற்கும் சங்கடமாக இருக்கும் என்று மேலோட்டமாக தனது கல்லூரி கால கதையை விளக்கியிருந்தான் ஆர்யன்.

“இப்போது சொல்லுங்கள்… அன்று நான் சொன்ன பொய்க்கு இன்றுவரை என்னுடன் பேசாமல் இருக்கிறவள் இப்போது கல்யாணத்திற்கு கேட்டீர்கள் என்று தெரிந்தால் எப்படி குதிப்பாள்…… பெட்டர் இது நமக்குள்ளேயே இருக்கட்டும். பிரகிக்கு தெரிய வேண்டாமே” என்று கூறி விட்டு கிளம்பினான் ஆர்யன்.

” அரிசி மூட்டை உன் கதை ஃபுல்லா ஆர்யன் பயங்கர டிவிஸ்ட்டாக மாற்றிவிட்டான். ரதி ஆர்யாவை லவ் பண்ணி இருப்பாள் என்று சொன்னாய்… ஆனால் அவளோ ஆர்யா லவ் பண்ணுவதாக பொய் சொன்னதற்கே கோபித்துக் கொண்டு சென்றிருக்கிறாள்” என்றான் அத்விக் .

“நிலா பேபிஸ் மம்மி இப்போது ரொம்ப கான்ஃபிடன்டா சொல்கிறேன் உங்க ரதி அத்தை கல்யாணம் என்று ஒன்று பண்ணினால் அது ஆர்யாவை தான் இருக்கும். பெட்டர் உங்க அப்பாவை அத்தையிடம் போய் பேச சொல்லுங்கள்”

“என்கிட்ட பேச மாட்டியா?” அத்விக்கின் ஏக்கமான கேள்விக்கு “உங்க டாடி யாரோ ரெண்டு பேரை சேர்த்து வைத்துவிட்டு தான் பேசுவேன் என்று நேற்று ப்ராமிஸ் பண்ணினார். சேர்த்து வைக்கட்டும் முதலில். பேசுவதா பேச வேண்டாமா என்பதை பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம் ” என்று குழந்தைகளிடம் கூறிவிட்டு திரும்பி கொண்டாள் ஹர்ஷிதா.

மனைவிக்காக பிரகதியிடம் ஆர்யன் பற்றி பேச “என்கிட்ட வேறு எது வேண்டுமானாலும் கேளு…. சொல்லு…. இதில் மட்டும் கம்பெல் பண்ணாதே அண்ணா.. ப்ளீஸ்..” என்றவளிடம் மேலும் அத்விக்கால் வற்புறுத்த முடியவில்லை.

அன்று இரவு அவர்கள் அறைக்கு வந்தவள் கணவனை கண்டு கொள்ளாது சென்று படுத்ததும் “ஹர்ஷி புரிஞ்சுக்கோ ஒருத்தவங்களை ஃபோர்ஸ் பண்ணியா கல்யாணம் செய்து வைக்க முடியும்” என்றான் அத்விக் ஆதங்கத்துடன்.

” ஏன் நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”

” அதுவும் இதுவும் ஒன்றா?”

” அப்படி என்ன ஆறு வித்தியாசத்தை கண்டுபிடித்தாய்”

“நம்ம கல்யாணம் நடந்த சிச்சுவேஷன் அப்படி தெரியலாம். ஆனால் நம் இருவரின் விருப்பப்படி தானே நடந்தது. இங்கு ரதிக்கு பிடிக்கவே இல்லை. ஆர்யனும் அவளை ஃபிரண்டாக பார்ப்பது போல் தான் தெரிகிறது. பிறகு எப்படி??”

” ஓ!!!!!! அப்போது நான் ஆர்யாவிடமிருந்து டிஸ்ட்ராக்ட் ஆகி விரும்பி தான் உன்னை கட்டி கொண்டேனா?” என்று சந்தேகம் கேட்டவளை

“ஹர்சிசிசி” என்று கத்தினான்.

அவளோ அவனையும் அவன் கத்துவதையும் அலட்சியப்படுத்திவிட்டு இனி உன்னுடன் பேச ஒன்றுமில்லை என்பதுபோல் போய் படுத்துக்கொண்டாள். படுத்ததும் உறங்கியவளை “பாடா படுத்துற அரிசி மூட்டை” என்று திட்டியவன் சிறிது நேரம் நிலா பேபிஸிடம் பேசிவிட்டு போய் படுத்தான்.

இப்படியே 2 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் ஒருநாள் ஹர்ஷிதாவிற்கு இடுப்பு வலியோடு ரத்தப்போக்கும் ஏற்பட அனைவருமே பதறியபடி அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது எட்டாவது மாதம் என்பதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி உடனே சர்விகல் சர்லேஜ் (cervical cerlage ) செய்தனர். அதாவது இரண்டு சென்டிமீட்டர் திறந்திருந்த கர்ப்பப்பை வாயில் தையல் போட்டிருந்தனர். மேலும் ஒரு மாத காலம் கம்ப்ளீட் ரெஸ்டில் இருக்கும்படி கூறிவிட்டு வயிற்றில் போதுமான நீர்ச்சத்து வெளியேறி இருந்ததால் அதற்குண்டான மருந்துகளையும் பரிந்துரை செய்திருந்தனர். அடுத்த வாரம் மறக்காமல் செக்கப்புக்கு அழைத்து வரும்படியும் கூறினார் டாக்டர் சுலோச்சனா .

வீட்டிற்குள் நுழைந்ததும் மும்பையில் இருந்து அத்விக்கிற்கு ஃபோன் வந்தது. தனபால் சிறையிலிருந்து தப்பி விட்டதாகவும் இது அத்விக் கேஸ் என்பதால் உடனே அவனை மும்பைக்கு புறப்பட்டு வரும்படியும் தலைமை அலுவலகத்தில் இருந்து கேட்டு கொண்டனர். ஆனால் அத்விக்கு ஹர்ஷிதாவை இந்த நிலையில் விட்டு விட்டு செல்வது அவ்வளவு சரியாக படவில்லை.

” வேறு யாரையாவது இந்தக் கேஸை ப்ரொஸீட் பண்ண சொல்லுங்கள் சார்” என்று அத்விக் தன் மேல் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவன் எதிரில் வந்த ஹர்ஷிதா “நீ போயிட்டு வா அத்வி. என்னை பார்த்து கொள்ள தான் நம்ம நிலா பேபிஸ் இருக்கிறார்களே” என்றாள் .

இரு மாதங்களுக்கு பின் அவளாக வந்து பேசிய பேச்சு. இருந்தாலும் “இப்போது உங்களை விட்டு என்னால் போக முடியாது ஹர்ஷி. ப்ளீஸ்….” என்றான் அத்விக்.

“இது தனபால் விஷயமாக இருப்பதால் தான் சொல்கிறேன். ரொம்ப டைம் எடுத்துக்காதே உனக்கு ஒன் வீக் தான் அலோட்டெட் . அதன் பிறகு இங்கு வந்து எங்களை செக்அப்பிற்கு கூட்டிப் போகணும் சரியா?” என்றவளை மறுக்க முடியவில்லை.

ஆயிரம் பத்திரங்களை ஹர்ஷிதாவிடம் சேர்த்தவன் குறைந்தது பத்தாயிரம் பத்திரங்களையாவது நிலா பேபிஸிடம் கூறி கொண்டிருந்தான் அத்விக்.

இரு காதுகளையும் இறுக்க மூடிக் கொண்ட அத்ரிஷ் “அண்ணா போதும்… நிலா பேபிஸே இந்நேரம் என்னை போல் தான் உட்கார்ந்து இருப்பார்கள்” என்று கூறவும் தான் விட்டான்.

அத்விக் மும்பைக்கு புறப்பட்டதும்
பிருந்தா பிறந்த வீட்டிற்கு வருமாறு ஹர்ஷிதாவை அழைத்ததற்கு அவள் செல்ல மறுத்துவிட்டாள்.

கம்ப்ளீட் ரெஸ்ட் என்பதால் ரூமிற்குள் அடைந்து கிடப்பதும் எதோ போல் இருக்கே முதல் இரண்டு நாட்களை சிரமப்பட்டு தள்ளியவள் மூன்றாம் நாள் பெயிண்டிங் செய்யலாம் என்று தீர்மானித்தாள். அதன் பொருட்டு அதிர்ஷ்டம் தனக்குத் தேவையான பெயின்டிங் சாதனங்களை அம்மா வீட்டிலிருந்து எடுத்து வர சொல்லலாம் என்று எண்ணியபடி தங்கள் அறையை விட்டு வெளியே வந்தாள் .

அப்போது கீழே ஹால் டிவியில் “மும்பை போலீஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் காவலர்களுக்கும் குண்டடடி ஏற்பட்டது. இதை தலைமை தாங்கிய காவல்துறை அதிகாரி தற்சமயம் சர்வோட்டம் விருது வாங்கிய இளம் கமிஷனர் அத்விக் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது” என பிளாஷ் நியூஸில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

அத்விக் பெயரைக் கேட்டவுடன் அவனுக்கு ஏதேனுமா என பயந்து முதல் மாடியின் மேல் படியில் நின்ற ஹர்ஷிதாவின் ரத்த ஓட்டம் அதிகமாகி கட்டுப்படுத்த முடியாத வண்ணம் அவளது கை பிடி நழுவியது.

“அத்விவிவிவிவிவி” பெருங்குரல் எழுப்பியபடி படிக்கட்டுகளில் புரண்டவள் இரத்த வெள்ளத்தில் சுய நினைவை இழந்து மயங்கி சரிந்தாள் .

சத்தம் கேட்டு திரும்பிய குடும்பத்தினர் ஹர்ஷிதாவின் நிலையை கண்டு அச்சத்தின் உச்சத்தில் உறைந்தனர் . பனிக்குடம் உடைந்து குருதி பெருக்கெடுத்து சுயநினைவின்றி கிடந்தவளை  தூக்க முயன்றான் அத்ரிஷ் . தகவல் அறிந்து பதறியபடி ஓடிவந்த விக்னவும் உதவி செய்ய உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்தனர் .

கொஞ்சம் கிரிடிக்கல் தான்…….. இப்போதைய மயக்கம் தெளிந்து சுயநினைவிற்கு வந்த பிறகு மயக்க அனஸ்திஷியா கொடுத்து ஆபரேஷன் செய்வது தான் நல்லது என்றார் டாக்டர் சுலோச்சனா .

பிரகதி தனக்கும் சேர்த்து தெம்பூட்டும் விதமாக ” ஹர்ஷி இப்போது நினைவிற்கு திரும்புவது தான் முக்கியம் . அவள் கண் முழித்தவுடன் நிலா பேபீஸ் வெளியே வந்துவிடுவார்கள் , தைரியமாக பயப்படாது கடவுளை வேண்டுவோம் ” என்றாள் குடும்பத்தினரிடம் .

பிரகதியின் பேச்சை கேட்டவர்கள் நம்பிக்கையுடன் இறைவனை பிரார்த்தனை செய்ய அவர்களின் வேண்டுதலின் பயனாய் இரு மணி நேரத்தில் கண்களை திறந்தாள் ஹர்ஷிதா.

அவ்வாறு இமைகளை திறந்தவளின் விழிநீர் மட்டும் நிற்காமல் வழிந்தோடியது .

ஹர்ஷிக்கு நினைவு திரும்பியதை ஒருவித திருப்தியுடன் கண்ட பிரகதி ” என்ன இது??  இப்போது உன் நிலா பேபீஸ் வர போகிறார்கள். உன்னை பார்த்தால் அழுமூஞ்சி மம்மி என்று கிண்டல் தான் செய்வார்கள் . சீர் அப் ஹர்ஷி . நான் உன்கூடவே தான் இருப்பேன் . ஓ.டி ரெடி பண்ண சொல்லிவிட்டு வருகிறேன் ” என்று நகர ” அத்விக்கு என்னாச்சு ? ” என்று படபடத்தாள் ஹர்ஷிதா .

” அத்விக் இஸ் ஸேஃப் . வந்திட்ருக்கான் .. தனபாலையும் படித்தாயிற்று . ஒரு அரை மணி நேரம் கழித்து விவரமாக சொல்கிறேன் . இப்போது கட்டாயம் அறுவை சிகிச்சை செய்தாகணும் . புரிந்து கொள் ‘ “

“எனக்கு அத்விகிட்ட பேசணும் ரதி ப்ளீஸ் . அதுவும் இப்பவே ” என்று ஹர்ஷிதா அடம்பிடிக்க அவளை கண்டு கொள்ளாமல் சுலோச்சனா டாக்டரிடம் கூறிவிட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்ய சொல்ல ஓடியிருந்தாள் பிரகதி .

  ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்து செல்லும் முன் ஹர்ஷிதாவை காண வந்த ஆரியனிடம் ” எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா ஆர்யா ?? நான் அத்வியிடம் பேசணும் .. அதுவும் ஆபரேஷனுக்கு முன்னாடி .. எப்படியாவது ரதிகிட்ட கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்றியா ” என்று பேச்சை தொடர முடியாமல் திணறியவளைக் கண்டு கலங்கினான் ஆர்யன் .

” பேசலாம் ஹர்ஷி … அத்விக் இப்போது வந்துவிடுவான் ” என்ற வாக்கியத்தை ஆர்யன் முடிக்கும் முன்னே பதைபதைக்கும் இதயத்தோடும் கலங்கிய விழிகளுடன் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து சேர்ந்தான் அத்விக் .

கணவனை பார்த்ததும் நின்றிருந்த கண்ணீர் அணை திறந்த வெள்ளமாய் மீண்டும் ஹர்ஷிதாவின் கண்களில் பெருக்கெடுத்தது . ” ஒரு 2 மினிட்ஸ் பேசிக்கிறேன் ” ஆர்யனிடம் அனுமதி வாங்க பெற்றவள் தனித்து விடப்பட்டதும் உனக்கு என்ன ஆச்சு அத்வி ? ” என்றாள்.

அவள் நிலை கண்டு வார்த்தைகள் அவன் தொண்டை குழியில் சிக்கி கொள்ள  “எனக்கு ஒன்றுமில்லை” என்பது போல் தலையை மட்டும் ஆட்டியவன் ” நீங்க மூணு பேரும் பத்திரமா என்கிட்ட வந்து சேருங்கள் ” என்றான் .

” எனக்கு ரொம்ப பயமா இருக்கு அத்வி “

குறி பார்த்த நாளிலிருந்து ‘ ஏன் பயப்படுகிறீர்கள்??? என்னையும் என் குழந்தைகளையும்  நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா ‘ என்று வீட்டில் அனைவரிடத்திலும் கலக்கத்தை போக்கியவளின் பயம் இன்று அத்விக்கின் நம்பிக்கையை வேரோட அசைத்தது .

” ஹே அரிசி மூட்டை உனக்கு ஒன்றும் ஆகாது … ஒழுங்காக நம்ம நிலா பேபிஸுடன் வருகிறாய் … அப்படி இல்லை என்றால் நானும் உங்களுடன் வந்து விடுவேன் ” தைரியமாய் ஆரம்பித்தவன் முகத்தை மூடிகொண்டு விசும்பலோடு முடித்தான் .

“எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணு அத்வி . எனக்கு ஏதாச்சும் ஆனாலும் பரவாயில்லை….. நமக்கு குழந்தைகளுக்கு எதுவும் ஆகக்கூடாது . அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் சரியா ….. இல்லாவிட்டால் மேல போய் உன் மேல கேஸ் போடுவேன் “

” உளறாதே …. உனக்கு அவ்வளவு சீக்கிரம் என்னிடமிருந்து ஜாமீன் கிடைக்காது . நீ பிறந்ததே எனக்காக தான் என்பது உனக்கு புரியவில்லை . ஆனால் கண்டிப்பாக அதை உனக்கு நான் புரிய வைப்பேன் . இப்போது வா .. ” என்ற ஸ்ட்ரக்சரை ஆப்பரேஷன் தியேட்டருக்கு வேகமாக தள்ள ஆரம்பித்தான் அத்விக் .

” நீ புரிய வைப்பதற்கு எல்லாம் அவசியமே இல்லை . உன்மேல் எவ்வளவு காதல் இருந்தால் உன் பெயரை டிவியில் கேட்கும்போதெல்லாம் என் நிதானத்தை முற்றிலும் இழந்ததோடின்றி கீழே விழுந்து தொலைக்கிறேன் ” என்று ஹர்ஷிதா சொன்னவுடன் அத்விக்கின் கைகள் தானாக ஸ்ட்ரக்சரிலிருந்து தளர்ந்தது . கால்களும் அசைவை நிறுத்த ” என்ன சொன்ன ? ” என்பதுபோல் பார்வையில் மனைவியிடம் வினவினான் .

“இப்போது சொல்லா விட்டால் இனி எப்போதும் சொல்லாமல் போய் விடுவோமோ என்று ரொம்ப பயமாக இருக்கிறது ” என்றவள் அவன் கை பிடித்து கீழே குனிய செய்து அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றி எடுத்து ” ஐ லவ் யூ அத்தான் ” என்றாள் அவள் வழங்கிய முத்தத்தை காட்டிலும் மிருதுவாக .

மேலும் ” எப்போதிருந்து தெரியுமா??” என்றவள் கணவனின் மேல் தான் உணர்ந்த காதல் வேளையை அவனுக்கு உணர்த்திவிட விழைந்தாள்.

Advertisement