Advertisement

பிரகதியின் முதல் நாள் கல்லூரி ராகிங் போது பிரஷனும் ஆர்யனும் ஒரு எம்.பி பையனிடம் இருந்து அவளுக்கு உதவி செய்தனர். அன்றிலிருந்தே அவர்கள் மூவருக்கும் பலத்த நட்பு உருவாகி இருந்தது. பிரேக் டைமில் தினமும் தவறாமல் அந்நட்பூக்கள் இணைந்து கொள்வார்கள்.
அப்படி ஒருநாள்…..

” என்னடா இன்னைக்கு கோழி கூவிருச்சா?” என்று பிரஷன் கேட்டதற்கு

” சும்மா இருடா பிரகி இருக்கிறாள்” என்றான் ஆர்யன்.

“ஏன் அவளுக்கு தெரிந்தால் என்ன?”……. பிரஷன்

“எனக்கு என்ன தெரியக்கூடாது??? சேவல் தானே பிரஷன் கூவும்??” என்ற கேள்விகளை முன்வைத்த பிரகதி ஆர்யன் சாப்பிட்டு கொண்டிருந்த டிபன் பாக்ஸை வாங்கிக்கொண்டாள்.

” நம்மை போன்ற நார்மல் பெர்ஸன்ஸ்கு தான் பிரகி சேவல் கூவும்… ஆர்யாவை போன்ற மன்மதனுக்கு மட்டும் கோழி கூவும்” …….. பிரஷன்

“அடேய்ய்ய்” என்று பிரஷனை மொத்திய ஆர்யனை தடுத்த பிரகதி “எந்த கோழி என்ன கூவுது?” என்றாள்.

“எவ்ரி மன்டே ஆர்யாவிற்கு ஒரு லெட்டர் வருது. ஆனால் நியூஸ் டெலிவர் தான் யார் என்று தெரியவில்லை”…….. பிரஷன்

” அதென்ன மண்டே நியூஸ் ?”…… பிரகதி

“நீயே படிச்சு பாரு” என்று ஒரு காகிதத்தை ஆர்யன் பேக்கில் இருந்து அலசி எடுத்த பிரஷன் பிரகதியிடம் நீட்ட அவள் அதை வாசிக்கலானாள்.

********
சில்மிஷகாரா!
என் மனதுள் புகுந்து என்னை
பந்தாடுவது பத்தாது என்று
பாட புத்தகத்திற்குள்
நுழைந்தாயோ!!

ஒன்றை புரிந்து கொள்!
நான் படிக்க முடியாது
திணறுவதால் சேதாரம் என்
பரிட்சைக்கு மட்டும் இல்லை…..
எதிர்காலத்தில்
நம் பிள்ளையின் எல்கேஜி வகுப்பிற்கான
லட்சங்களை ஒத்த ஆளாய்
கட்ட போகும் உனக்கும்
சேர்த்து தான்!!!

இப்படிக்கு
ஆர்யனின் காதலி…..

***********

“வாவ்… நல்லா இருக்கிறதே… யார் அனுப்பியது?”….. பிரகதி

“அதைத்தான் கண்டுபிடிக்க முடியாது போல” ….. பிரஷன்

“ஸ்மார்ட் கேர்ள். டிரிக்கா ப்ளே பண்ணுகிறாள். உங்களால் முடியவில்லை என்றால் நான் இந்த பொண்ணை கண்டு பிடிக்க ஹெல்ப் பண்ணவா”….. பிரகதி

“அதெல்லாம் நினைத்தால் முடியும் . எதற்கு என்றுதான் செய்யவில்லை”…. ஆர்யன்

“எப்படி நினைத்தால் முடியும்?”…. பிரகதி

“நீ ஜாயின் பண்ணுன நாளில் இருந்துதான் இந்த லெட்டர்ஸ் வர ஆரம்பிக்குது . ஐ மீன் உன் செட்டில் யாரோ ஒருவருடைய வேலையாகத்தான் இருக்கும். இன்னும் டீப்பாக விசாரித்தால் தெரிய வாய்ப்பிருக்கிறது”…. ஆர்யன்

” வெரி எக்ஸலண்ட் ஆர்யா …. பட் ஏன் இதை உன் கிளாஸ்மெட்ஸ் அதாவது உன் செட்டில் இருக்கிறவங்க யாருக்காவது இரண்டு வருடம் கழித்து உன் மேல் லவ் வந்திருக்க கூடாது?” …. பிரகதி

“சான்ஸே இல்லை.. ஏதோ ஒரு பட்சி ஸ்ட்ராங்கா சொல்லுது இது ஜூனியருடைய வேலைதான் என்று”…. ஆர்யா

” அப்படியென்றால் அந்த பட்சியிடமே கேளு இந்த லெட்டரின் ஓனர் யார் என்று? எந்த டிபார்ட்மென்ட் என்று? என்ன பெயர் என்று? இன்னும் கருப்பா சிவப்பா….. என்பதை எல்லாம்”….. பிரகதி

“அதுதான் தேவையில்லை என்கிறேன்” என்றான் ஆர்யன். உடனே பிரஷன் “தேவை இல்லாமல் தான் எல்லா லெட்டர்ஸயும் பத்திரப்படுத்துகிறாயா?” என்றான்.

“இந்த லெட்டர்ஸ் எல்லாமே எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதற்காக சொந்தம் கொண்டாட முடியாது”

” உன்னை சொந்தமாக்கிக் கொள்ளத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது” என்றாள் பிரகதி. கூடவே ” எனக்கும் அதே பட்சி சொல்லுது இந்த லெட்டர்ஸயும் சரி இதை அனுப்பியவளையும் சரி எப்பவுமே நீ மிஸ் பண்ண மாட்டாய் என்று”

“ஐ அம் ஆல்ரெடி மிஸ்ட். பட் நான் இன்னும் அதை வெளிப்படுத்தியதில்லை” என்றான் ஆர்யன் .

உடனே “வாவ் கங்கிராட்ஸ் மச்சி … யாருடா அந்த பொண்ணு? ஆனாலும் ரொம்ப உசாருடா நீ இந்த லெட்டர்ஸ் எல்லாத்தையும் உன் ஆளு கிட்ட கொடுக்க போறியா” என்ற பிரஷனை
” டேய் அடி வாங்க போற …. கண்டிப்பா இதை எல்லாம் யாருக்கு சொந்தமோ அவங்களுக்கு திருப்பி கொடுத்திடுவேன்” என்றான் ஆர்யன்.

“என்னென்னமோ பேசுற” என்று கூறி கொண்டிருந்த போது பிரஷனின் போன் ஒலிக்க அதை எடுத்துப் பேசிவிட்டு வந்தவன் “கிளாசுக்கு டைம் ஆச்சு வாடா அங்க போய் இத கண்டின்யூ பண்ணலாம்” என்றதோடு “பை பிரகி” என்ற கிளம்பி இருந்தான்.

சாப்பிடாமல் அப்படியே அமர்ந்து இருந்தவளை “சாப்பிட்டுவிட்டு ஈவினிங் பாக்ஸை கொடு பிரகி….. வர ஹவர் ஸ்டிரிக்ட் மேமுடையது. அதான் பிரஷன் இப்படி ஓடுகிறான். நானும் கிளம்புறேன். இல்லாவிட்டால் அட்டென்டன்ஸ் விழுகாது” என்று ஆர்யனும் எழுந்தான்.

பிரகதியிடம் பதில் வராமல் போகவும் “ஏன் ஒரு மாதிரி இருக்குற?” என்றவனது கேள்விக்கு விடை அளிக்காது “யாரை லவ் பண்ணுகிறாய்?” என்று எதிர் வினா எழுப்பியிருந்தாள் பிரகதி.

“அது…… அது என் தங்கையின் தோழியை…. இன்னும் அவளிடம் சொல்லவில்லை. சொல்லிவிட்டு அவளை பற்றி சொல்கிறேனே…. ப்ளீஸ்”

” ஏன் சொல்லவில்லை?”

” அவள் இப்போ சின்ன பொண்ணு. வெல்த் தான் படிக்கிறாள் . ஸ்கூல் முடிக்கட்டும் உடனே சொல்லி விடுகிறேன்” கண்களில் காதல் சட்ட சொன்னவனை வெறித்துப் பார்த்தாள் பிரகதி .

அவளை உலுக்கியவன் “லேட் ஆச்சு பிரகி” என்று சாப்பிட வைத்து கையோடு கூட்டிக் கொண்டு சென்றான் ஆர்யன்.

ஒரு வருடம் எந்த பிரச்சனையின்றி சுகமாய் சென்றது. திடீரென ஒருநாள் பிரஷன் பிரகதியை லவ் பண்ணுவதாகவும் அவள் அதை ஏற்க மறுப்பதாகவும் ஆர்யனிடம் தெரிவித்தான்.

பிரகதியோ “பிரஷன் எனக்கு ஒரு நல்ல நண்பன். எனக்கு அவன் மீது காதல் வரவில்லை . இனியும் வராது…. நீயாவது என்னை புரிந்து கொள். அவனுக்கு எப்படியாவது எடுத்து சொல்லி புரிய வை ஆர்யா. ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் ஹிஸ் ஃப்ரெண்ட்ஷிப்” ஆர்யனிடம் கேட்டுக்கொண்டாள்.

பிரஷனிற்கு எப்படியாவது பிரகதி கூறியதை அவன் மனம் நோகாமல் தெரிவித்து விட நினைத்தான் ஆர்யன்.

” திடீர்னு லவ் வந்து விட்டது என்ன பண்ண சொல்கிறாய்!”…… பிரஷன்

” அவளுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்கிற போது ஒதுங்கி விடுவது தான் மச்சி நல்லது”

“இப்போது பிடிக்கவில்லை சரி இனி பிடித்தால்”

“எப்போதும் பிடிக்காமல் போனால் நீ தான்டா கஷ்டப்படுவாய்”

“எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய்? நீயும் தான் ஒரு பொண்ணை லவ் பண்ணுகிறாய். அவள்….. அவளை பற்றி என்றுமே நீ சொன்னதில்லை .. அப்படியென்றால் நீ பிரகியை தான் லவ் பண்ணுகிறாயா? அவளுக்காக தான் என்னிடம் என் காதலை விட சொல்கிறாயா?”

“ஏன்டா உளறுகிறாய்??”

“நானா உளறுகிறேன்.. நீ தான்டா மறைத்து விட்டாய் …… எத்தனை முறை யாரை காதலிக்கிறாய் என்று கேட்டிருப்பேன்… அன்றே பிரகியை தான் காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் என் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருக்காது தானே… சொல்லுடா”

“நீயாக கற்பனை பண்ணிக்காதேடா…. நான் லவ் பண்ணுகிறேன் தான்… ஆனால் அதை அந்தப் பெண்ணிடம் சொல்லாமல் அவளைப்பற்றி வெளியே சொல்வது சரியாக படாததால் தான் அவளைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை”

“ஓ பிரகியோட சேஃப்டிக்குத்தான் அவளைப்பற்றி மறைத்தாயா” உறுதியாய் கேட்டவனை “டேய் நான் சொல்றதை கேளு!” என்று புரிய வைக்க முயன்றான் ஆர்யன்.

“நீ சொல்லு மச்சி நான் கேட்டுக்கொள்கிறேன் உன் பேச்சை கேட்காமல் வேறு யார் பேச்சைக் கேட்கப் போகிறேன். பிரகியை தான் லவ் பண்ணுகிறேன் அவளை பற்றி நினைக்காதே என்று நீ சொல்லு அப்படியே கேட்டுக்கொள்கிறேன் ” எங்கோ பார்த்து பேசிய நண்பனை கட்டிக்கொண்டான் ஆர்யன்.

பிரஷனின் கூற்றை மறுப்பு தெரிவிக்காது விட்டால் இந்த பிரச்சனை எளிதாக முடிந்து விடும். இந்த பொய் பிரகதிக்கும் நல்லதாக தான் படும் அவளுக்கு தெரியாத பட்சத்தில் என்று எண்ணிய ஆர்யன் தன் உண்மையான காதலை மறைத்து பிரஷனின் வார்த்தைகளை ஆமோதித்து “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? இதை கண்டிப்பாக எனக்காக செய் பிரஷன்” என்ற கோரிக்கையை முன் வைத்தான்.

“என்னடா சொல்லு… இனி நான் பிரகியிடம் பேச கூடாதா?”

“அடேய் அவள் உன் ஃப்ரெண்டுடா. அவளே கூட அப்படி சொல்ல முடியாது.. என் லவ்வ நான் இன்னும் பிரகியிடம் சொல்லவில்லை. ஐ ஹேவ் சம் பர்சனல் ரீஸன்ஸ். நான் சொல்லும் வரையில் அவளிடம் எதையும் நீ வெளிக்காட்டிக் கொள்ளாது ” என்று கேட்டுக் கொண்டான் ஆர்யன்.

இறுதி ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு திங்கட்கிழமை ஆர்யனிற்கு வழக்கம் போல அக்காதல் கோழி கூவ “ஏன்டா இன்னும் அந்த லெட்டர்ஸை பாதுகாக்கிறாய். அதைக் கிழித்துப் போட மாட்டாயா… இது பிரகிக்கு பண்ணும் துரோகம்டா” என்று பிரஷன் கூறும் போது அங்கு வந்த பிரகதி “என்ன எனக்கு துரோகம் பண்றீங்க ?” சிரித்தபடி வினவினாள்.

“அது … அது….” பிரஷன் திணற “இந்தா இதை சாப்பிடு முதலில்” என்று அவனது லஞ்ச் பாக்ஸை நீட்டி தோழியை திசை திருப்ப முயன்றான் ஆர்யன்.

“இது ரொம்ப பெரிய துரோகம் ஆர்யா…. நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று அவன் கொடுத்த உணவை சாப்பிடாமல் பிரகதி கூறவும் நண்பர்கள் இருவரும் விழித்தனர் .

அவர்கள் பேசாது இருக்கவும் பிரகதியே
“என் அப்பளத்தை சுட்டு விட்டாயா…? இது எவ்வளவு பெரிய துரோகம் …. இதை என்னவென்று நீ கூட கேட்க மாட்டாயா பிரஷன்” என்று கேட்க “கடவுளே தயிர் சாதத்திற்கு அன்று அப்பளம் கேட்டாய் பரவாயில்லை….. சப்பாத்திக்கு போய் கேட்கிறாய்!!” என்று நொந்து கொண்டான் ஆர்யன்.

“உனக்கு பிரகி என்ற பெயருக்கு பதில் அப்பளி என்று வைத்திருக்கலாம் பப்ளி மாஸே. அடுத்த முறை அங்கிள் வரும்போது இதை கண்டிப்பாக சொல்ல வேண்டும்” என்று பிரகதியின் தந்தையை குறிப்பிட்டான் பிரஷன்.

“எனக்கு நீ என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள் ஒட்டடக்குச்சி . யாரிடம் வேண்டுமானாலும் சொல்லி கொள்” என்று பிரஷனிடம் கூறிவிட்டு ” நாளை மறக்காமல் எனக்கு அப்பளத்தை எடுத்து வந்து விடு ஆர்யா … சரியா” என்றாள் ஆர்யனிடம்.

“சரி” என்று சொல்லி சென்றவனை இரண்டு நாட்களாகியும் காணவில்லை.

“போனை வேறு சுவிட்ச் ஆப் பண்ணி வைத்திருக்கிறான்… அப்படி என்ன தான் ஆகியிருக்கும் ஆர்யாவிற்கு” என்று குறைபட்ட பிரகதியிடம் “நான் இன்று மதியம் அவன் வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு சொல்கிறேன் பிரகி” என்றான் பிரஷன்.

நண்பனின் வீட்டை அடைந்தவனிடம் ஆர்யனின் அம்மா “இரண்டு நாளா காய்ச்சல்பா ரூம்லதான் இருக்கிறான். போய் பாரு” என்று சொல்லவும் ஆர்யனிடம் விரைந்தான் பிரஷன்.

“என்னடா ஆச்சு?”

“ஒன்றுமில்லை விடுடா” என்று திருப்பிக்கொண்ட ஆர்யனை வலுக்கட்டாயமாய் தன் புறம் திருப்பிய பிரஷன் “ஏன்டா அழுகிறாய்?” என்று பதறினான்.

“விடுனு சொல்றேன்ல…..”

“அப்படியெல்லாம் விட முடியாது… என்னன்னு சொல்றியா அம்மாகிட்ட கேட்கவா?”

“அம்மாவிடம் கேட்டு விடாதே…. வீட்டில் யாருக்கும் எதுவும் தெரியாது”

“அப்போது ஒழுங்கா சொல்லு”

“அமெரிக்காவில் எம்எஸ் படிப்பதற்கான அப்ரூவல் கிடைத்துவிட்டது”

“டேய் கங்கிராட்ஸ் மச்சி … இதுக்காகவாடா அழுத … ஓ உன் ஆள விட்டுட்டு இருக்க முடியாது என்று ஃபீல் பண்ணுகிறாயா?” கிண்டல் செய்து நண்பனை சிரிக்க வைக்க முயன்றான் பிரஷன் .

“அவளை இனி அப்படி சொல்லாதேடா…. எவ்வளவு ஆசையாக அவளிடம் சென்று என் காதலை தெரிவித்தேன் தெரியுமா …..ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவளை பிடித்திருக்கிறது என்று என்னை நான் உணர்ந்த நொடியில் ஒரு லெட்டர் எழுதினேன். அதை எடுத்துக்கொண்டு போய் அவளிடம் கொடுத்தால் குடும்பத்தின் விருப்பப்படி அவள் அத்தானை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டாள்டா” அழுத நண்பனை காண சகிக்காது “கேட்க ஆளில்லை என்று பேசினாளா…. நான் இருக்கிறேன் .. அவளை!!!” என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறினான் பிரஷன் .

பிரஷன் சற்று யோசித்திருந்தான் என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்று ஆர்யன் குறிப்பிட்ட லெட்டர் அவனுக்கு சந்தேகத்தை விதைத்திருக்கும். ஆனால் அவனுக்கோ பிரகதியின்மேல் அவ்வளவு கோபம்.

ஹர்ஷிதாவை பற்றி பிரஷனுக்கு எப்படி தெரியும் அவளிடம் என்ன கேட்க போகிறான் என்று எண்ணும்போதே பிரகதி நினைவிற்கு வர “டேய் நில்லு பிரஷன் !!!” என்று கத்தினான் ஆர்யன். ஆனால் அதற்குள் பிரஷன் வீட்டை விட்டு வெகு தூரம் சென்றிருந்தான்.

ஆர்யனை நிராகரிக்க பிரகதியால் எப்படி முடிந்தது! அன்றொருநாள் சிக்னலில் விக்னவை பார்த்துவிட்டு “அது என் விக்கி அத்தான். அவன் பின்னால் உட்கார்ந்திருப்பது அத்விஅண்ணா ” என்றவள் “அடடா பேசுவதற்குள் கிரீன் லைட் போட்டுவிட்டார்களே…. எப்படியும் வார இறுதியில் அவர்கள் வீட்டிற்கு தான் போவேன் . பேசிக் கொள்கிறேன்” என்று பிரகதி கூறியது சட்டென நினைவிற்கு வந்தது பிரஷனுக்கு . மேலும் யார் அவர்கள் என்ற தன் கேள்விக்கு அவர்களை பற்றியும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் அந்நாள் பூராவும் வாயோயாமல் பேசி முடித்தாள் பிரகதி.

கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தவளிடம் “விக்கியை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா?” என்றான் பிரஷன் மூச்சிரைக்க ஓடி வந்தபடி.

திடீரென தன்னை நோக்கி பாய்ந்த கேள்வியில் குழப்பமுற்ற பிரகதி “என்னாச்சு பிரஷன்? என்ன கேட்கிறாய்?” என்றாள்.

“நான் கேட்பதற்கு பதில் மட்டும் சொல்லு……. அன்று சொன்னாயல்லவா உன் கஸின்ஸ் பற்றி…. அதில் உன் அத்தான் விக்னவிற்கும் உனக்கும் உங்கள் குடும்பத்தில் கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்காங்களா?”

“லூசு மாதிரி கேட்காதே…. எனக்கு அத்வி அண்ணா போல தான் விக்கி அத்தானும்…. ஆல்சோ எங்கள் வீட்டில் அப்படி ஒன்றும் பேசவுமில்லை”

” அப்புறம் ஏன் ஆர்யனிடம் பொய் சொன்னாய்? உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு ஏதாவது காரணத்தை கூறி நிராகரித்து இருக்கலாமே…. முதலில் அவனை உனக்கு பிடிக்காமல் போவதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லு”

பிரஷனின் கூற்றிலும் குற்றச்சாட்டிலும் மலைத்து போய் பேச்சிழந்து நின்றாள் பிரகதி அர்க்கபரக்க அவளருகில் ஆர்யன் ஓடி வருவதை பார்த்தபடி….

Advertisement