Advertisement

அதிகாலையில் மும்பை வர வேண்டிய ரயில் இரு மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்ரிஷ் அவன் பெற்றோரிடம் தம்பதியினர் குறித்த கேள்விக்கு வீட்டில் இருப்பதாக தெரிவித்து விட்டு அங்கு சுற்றி இங்கு சுற்றி மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த பின்னும் அத்விக்கும் ஹர்ஷிதாவும் வீடு திரும்பி இருக்கவில்லை .

“அவர்கள் எங்கே அத்ரிஷ் “என்று ஜெகன் அதட்டவும் “அது அப்பா …அது…ஹான் அவர்கள் ஹனிமூன் சென்றிருக்கிறார்கள்” என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்தான்.

” என்னது ஹனிமூனா?” என்று ரூபா சத்தமாக தன் சந்தேகத்தை கேட்கும் போது அத்விக் தன் மனைவியுடன் வீட்டினுள் நுழைந்தான்.

அவர்களை கண்டதும் “இவ்வளவு நேரம் எங்கடா போனீர்கள். அதுவும் காலையிலேயே..” என்றார் ரூபா .

அவசரமாக அத்ரிஷிடம் எதை சொல்லி சமாளித்தாய் என்று ஹர்ஷிதா சமிக்ஞை காட்ட அவளது காதில் ‘ஹனிமூன்’ என்று அவன் கூறவும் சற்றும் யோசிக்காமல் “அது ஹனிமூனிற்கு அத்தை” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் ஹர்ஷிதா.

பின் அத்ரிஷை நன்றாக அச்சரித்துவிட்டு “அது வந்து அத்தை..” என்று சமாளிக்கும் போது ஜெகனிடம் பேசிவிட்டு அங்குவந்த அத்விக் “நாங்கள் உடனே சென்னை கிளம்புகிறோம்மா. நாளைக்குள் திரும்பி விடுவோம் அப்பாவை பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான்.

” நானும் வரேன் கண்ணா” என்று ஜெகன் கேட்டதற்கு ” உங்கள் உடம்பு அதற்கு ஒத்துழைக்காது அப்பா” என்று மறுப்பு தெரிவித்தான். மேலும் ஒரு போன் மட்டும் செய்து விடுங்கள் என்றதற்கு ‘ இத்தனை காலம் நம் குடும்பத்தினர் அனைவருக்கும் நிகராய் உன்னை பார்த்து கொண்டவனுக்கு இதைக்கூட செய்யாது போவேனா’ என்று எண்ணியபடி “சரி கண்ணா ” என்றார்.

மிருதுளாவை அழைத்துக்கொண்டு நேரே மண்டபத்திற்கு சென்ற ராகுலை பார்த்து அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.

மகளை காணவில்லை என்று நேற்று ஏற்பட்ட தவிப்பு இன்று அவள் சேரவேண்டிய இடத்திற்கு தான் சென்றிருக்கிறாள் என்பதை அறிந்ததும் உவகை மேலோங்க “வாங்க மாப்பிள்ளை” என்றார் ஜெயராமன்.

“யாரு மாப்பிள்ளை?” என்று அகங்காரமாக கேட்ட வசந்தியிடம் ” நான்தான் அத்தை உங்க மாப்பிள்ளை ஏன் அதற்குள் என்னை உங்களுக்கு மறந்து விட்டதா” என்றான் ராகுல் அருகில் நின்ற மிருதுளாவின் தோளில் கையை போட்ட படி.

ராகுலின் வருகையை எதிர்ப்பாத்திராதவர் அவனது பேச்சை கண்டு மேலும் ஆவேசம் பொங்க மகளின் தோள் மேல் படிந்த ராகுலின் கையை தட்டிவிட முயற்சித்தார்.

அவரது தாக்குதலை எளிதாக வென்றவன் “என் மனைவி மீது நான் கை வைப்பதில் என்ன தப்பு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உங்களை விட எனக்கே அவளிடம் எல்லா உரிமையும் இருக்கிறது” என்று அந்த அரங்கத்திற்கே உணர்த்துமாறு கத்தினான்.

அதில் திருமணத்திற்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும் ராகுல் அங்கு பிரவேசித்திருப்பது தெரிந்துவிட மணமகன் அறையை விட்டு வெளியே வந்தான் ரிஷி .

ராகுலின் பதவியும் அவனது உரிமையும் ரிஷியை கலங்கடிக்க எதிர்க்கத் திராணியற்று கூனிக் குறுகி போய் நின்றான் .

“தெரிந்தோ தெரியாமலோ நீ முன்செய்த தவறாலேயே மித்து எனக்கு கிடைத்திருக்கிறாள் . அந்த ஒரே ஒரு காரணத்தினால் தான் உன்னிடம் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் . இல்லாவிட்டால் இன்றைய உன் செயலுக்கு நான் பேசும் முறையை வேறு” என்று அடிக்குரலில் சீறிய ராகுல் ரிஷியை ஒரு விரல் கொண்டு எச்சரித்து “இன்னும் பத்து நிமிடத்திற்குள் இவ்விடத்தை சுத்தம் பண்ணிவிட்டு போய்விட வேண்டும். அப்புறம் முக்கியமாக ஒரு விஷயம்… மிருதுளாவை பற்றி இனி நீ கனவிலும் எண்ணிப் பார்க்கக் கூடாது” என்று கர்ஜித்தான் .

அப்போது அங்கு வந்த ரிஷி வீட்டு தடியர்கள் சிலர் “என்னடா கல்யாணத்துல கலாட்டா பண்றியா?” என ராகுலின் மேல் கை வைக்க “பேபிமா நீ கொஞ்சம் அங்கு வெயிட் பண்ணு” என்று மிருதுளாவிடம் கூறிவிட்டு எதிரில் நின்றவனின் கையை தன்னிடமிருந்து மென்மையாக விடுவித்து அதனை திருக ஆரம்பித்தான் ராகுல்.

” சார் சார் சார் …” என்று எதிராளி அழ அவன் அழுவதை கூட பொருட்படுத்தாமல் ரிஷி வீட்டு ஆட்கள் ராகுலிடம் முன்னேறினர்.

அவர்களிடம் “ஒவ்வொருவரும் தயாராக இருங்கள்” என்றான் சொன்னதை செய்து விடும் தோரணையில்.

கை முறுக்கு பட்டவனிடம் ” இந்த கையின் எலும்புகள் சில்லுசில்லாக நான்கு இடத்தில் சிதறியிருக்கின்றன… இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் மாவுகட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் கை பிழைப்பது கஷ்டம்” என்றான் ராகுல்.

அதில் அவன் கையை காப்பாற்றி கொள்ள ஓடியிருக்க தடியர்களில் இருவர் பயந்து பின்வாங்கினர்.

அவன் சொற்களை அலட்சியப்படுத்தி அவனை தாக்க முற்பட்டவர்களை தூக்கி பந்தாடினான் ராகுல்.

” இந்த அநியாயத்தைக் கேட்க ஆள் இல்லையா…” என்று கூப்பாடு போட்ட வசந்தியிடம் வந்தவன் “தட்டிக்கேட்க தான் அத்தை வந்து இருக்கேன். நீங்க என்ன சொன்னாலும் உங்க மேல மட்டும் கோவமே வர மாட்டேங்கிறது… ஏன் அத்தை? எனக்கு மித்துவை பெற்று கொடுத்திருப்பதாலோ” என்று கேள்வியோடு பதிலையும் சேர்த்து உரைத்தவன் மிருதுளாவை மேடைக்கு அழைத்துச் சென்றான்.

” உங்கள் கண் முன்னால் நீங்கள் மலர் தூவி ஆசிர்வதித்து தான் இவளை என்னவளாக்கி கொண்டேன். இப்போது இங்கு நடந்திருக்கும் ஏற்பாடு சட்டத்திற்கு புறம்பானது . ஆகவே இன்னும் இச்செயலுக்கு துணை போவோர் யாராவது இருந்தால் வாருங்கள் பேசிக் கொள்ளலாம்” என்றான் கண்கள் சிவக்க.

ரிஷி வீட்டினருக்கு ராகுல்மீது கட்டுக்கடங்காத கோபம் பெருகிய போதும் அவனை எதிர்க்க முன்வரவில்லை.

வந்த வேலை முடிந்தது என்று மிருதுளாவை கூட்டிக்கொண்டு ராகுல் வெளியேறுகையில் ரிஷி வீட்டினரால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் தர்மதுரை உள்ளே நுழைந்தார்.

பெரும் பலம் கூடியிருப்பது போல் ரிஷியின் தாயார் எம்.பி யிடம் சென்று ராகுல் தான் தன் மகனின் வாழ்வில் கெடுக்க வந்திருப்பதாகவும் முன்பு ஒருமுறை ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திலும் தகராறு செய்தவன் இவன் தான் என்றும் குற்றம்சாட்டினார்.

மந்திரியின் ஆட்கள் ராகுலை பிடிக்க “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியதோடு திருமணத்தை நடத்துமாறும் கூறினார் தர்மதுரை.

” சார் இந்த திருமணம் பெண்ணிற்கு விருப்பமில்லாமலும் சட்டத்திற்குப் புறம்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது” என்று ராகுல் எம்.பி யிடம் பொறுமையாகவே விளக்க நினைத்தான் . ஆனால்…

” அவள் சின்ன பொண்ணு நல்லது கெட்டது தெரியாது. இந்த கல்யாணத்தை நடத்தி வையுங்கள் சார்” என்று வசந்தி முன் வரவும்

“அப்படி நடத்த முயன்றால் அது யாராக இருந்தாலும் தூக்கி உள்ளே வைப்பேன்” என்றான் அடிதடியாக.

ராகுலின் திமிரில் ஆவேசம் கொண்ட தர்மதுரை “உன்னால் முடிந்ததை செய்டா” என முன்வரிசையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டார்.

ரிஷி இந்த சந்தர்ப்பத்தைவிட மனம் இல்லாது மேடையில் சென்று ஐயரிடம் மந்திரங்களை ஓத சொன்னான்.

ராகுல் அடியாட்களின் பிடியில் நிற்க தனித்து நின்ற மிருதுளாவை வசந்தி இழுத்துக்கொண்டு போனார்.

” என்னை விடு. செத்தாலும் இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று திமிறியவளை வசந்தியால் அடக்க முடியாது போக அங்கிருந்த மாப்பிள்ளை வீட்டினர் மிருதுளாவை இழுத்துக்கொண்டு சென்றனர்.

அதை கண்டு ரௌத்திரமான ராகுல் அவனை பிடித்து வைத்திருந்தவர்களை துவம்சம் பண்ணிவிட்டு தன் மனைவியின் அருகில் செல்ல அவளை சுற்றி இருப்போரின் பிடி தானாக நழுவியது.

அவளை இழுத்துக்கொண்டு அமைச்சரிடம் சென்றவன் “அந்த கடவுளே நினைத்தாலும் இவளை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. அப்படியிருக்க நீ…. “என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே அவன் சட்டையை பிடித்திருந்தார் தர்மதுரை.

அங்கு தொடங்கவிருந்த யுத்தத்தை முறியடித்தபடி அத்விக் தன் மனைவி மற்றும் அனுஜனுடன் உள்ளே நுழைந்தான்.

ஹர்ஷிதாவை அங்கு எதிர்பார்க்காத தர்மதுரை “நீ என்ன பாப்பா இங்கே?” என்றார்.

” இந்த திருமணத்தில் ஒரு பிரச்சனை சார்” என்று அவள் தொடங்கும்போதே “பிரச்சனை பண்ணுகிறவனை நான் பார்த்து கொள்கிறேன்” என்றார் தர்மதுரை ராகுலை முறைத்தவாறு .

” ஐயோ சார் இவன் என் அண்ணன். பிரச்சனை பண்ணுகிறவர்கள் மாப்பிள்ளை வீட்டினரும் மிருதுளாவின் அம்மாவும்தான்” என்றாள் ஹர்ஷிதா அவசரமாக.

அவள் அண்ணன் என்றதும் அவன் சட்டையில் வைத்திருந்த எம்.பியின் பிடி தானாக நழுவியது.

மேலும் “என்ன பாப்பா சொல்ற? விக்னவ் தானே உனது அண்ணன்” என்று கேட்டவரிடம் அவரது சந்தேகத்தையும் திருமணம் குறித்த தகவலையும் தொகுக்க தொடங்கினாள் ஹர்ஷிதா.

அண்ணன் என்று குறிப்பிடவும் ராகுல் என்ன மாதிரி உணர்வுக்குள்ளானான் என்பதை அறியான். ஹர்ஷிதா தன்னை ஓட்டும் சமயத்தில் பெரிய கோபம் எதுவும் வராது இருந்தாலும் அவளை தன் நண்பனின் மனைவி என்றே பார்த்திருந்தான். நேற்று இரவு அவள் காணாமல் போன போது கூட அத்விக் என்ன செய்வான் என்ற எண்ணமே எழுந்ததே தவிர ஹர்ஷிதாவின் நிலை குறித்து அவன் வருத்தப்படவும் இல்லை அதற்கான நேரமும் அவனுக்கு கிடைக்கவில்லை. அம்மாவுடன் ஒற்றை மனிதனாய் வாழ்ந்தவனுக்கு அவளது அண்ணன் என்று அழைப்பும் இப்புதிய சொந்தமும் சந்தோஷத்தில் திக்கு முக்காடச் செய்தது .

அவனது பாசமலர் கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவாறு “பாப்பா சொல்லி தான் எனக்கு தெரியும் நீங்கள் இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பது. ரிஷி வீட்டினரின் சொல் கேட்டு நானும் அவசரப்பட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுபா” என்றார் மத்திய அமைச்சர்.

” என்னிடம் போய் நீங்கள் மன்னிப்புலாம்.. விடுங்கள் சார். நான் அதை அப்போதே மறந்து விட்டேன்” புதிய தங்கையின் கண்ணசைவின் உதவியால் அவருக்கு ராகுல் ஐஸ் வைக்க அவரும் குளிர்ந்து போனார் .

“இனியும் யாராவது பிரச்சனை செய்தால் என்னிடம் சொல்லு தம்பி ” என்று ரிஷி வீட்டினரை எச்சரிக்கும்படி ராகுலிடம் கூறியவர் ஹர்ஷிதாவிடம் திரும்பி “உன் கல்யாணத்தில் யாராவது பிரச்சனை செய்தாலும் நான் பார்த்துக் கொள்வேன் பாப்பா ” என்று கூறி சிரித்தார்.

” சார் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றவளது கூற்றில் ஆச்சரியமானவர் “என்ன பாப்பா சொல்கிறாய் ….. என்னை அழைக்க கூட உனக்கு தோன்றவில்லையா…. உன் அப்பாவிற்கும் மாமாவிற்கும் கூட என்னிடம் சொல்ல தோன்றவில்லை பாரு” என்று குறை பட்டார்.

” அப்படியெல்லாம் இல்லை சார் இது அவசரமாக சில பல பிரச்சனைகளுக்கு இடையே நடந்தேறிய திருமணம்” தர்மதுரையிடம் சமாதானம் கூற தான் நினைத்தாள் ஹர்ஷிதா. ஆனால் அவரோ

” பிரச்சனையா யார் எதிர்த்தார்கள்… உன் அப்பாவா இல்லை மாமாவா” என்று குதிக்க

“அவர்களுக்கெல்லாம் சம்மதம்தான். ஆனால் மாப்பிள்ளை தான் கொஞ்சம் பிரச்சினை பண்ணினான். பின் அத்ரிஷின் உதவியால் சமாளித்து கட்டிக்கிட்டேன் சார்” என்று அவள் சீரியஸாக சொன்னது அவருக்கு சிரிப்பு வரவழைக்க “உன்னை திருமணம் செய்வதில் ஒருவனுக்கு என்ன பாப்பா பிரச்சினை” என்றார்.

சற்று தயங்கியபடி “அது சார்… அவன் இன்னொரு பெண்ணை காதலித்ததால்….” என்றதும் மத்திய அமைச்சர் உட்பட அங்கிருந்த அனைவருமே திருதிருவென விழித்தனர்.

“ஐயோ !!! இவ இதை விடவே மாட்டாளா??” என்று அத்விக் எண்ணும் முன்பே அவ்வெண்ணத்தை சொந்தம் பாராட்டியிருந்தான் ராகுல்.

ஹர்ஷிதாவை தங்கை என்று கொண்டாடி முழுதாக ஒரு நிமிடம் கூட ஆகவில்லை அதற்குள் தன் வாழ்விற்கே ஆப்பு வைக்கிறாளே என்று ராகுலின் முகம் கோபத்தை தத்தெடுத்த போதும் உள்ளம் அவளது உரையாடலை எண்ணி ரசிக்க தவறவில்லை.

இன்னொருத்தியை விரும்பியவனை கட்டாயப்படுத்தி மணந்திருக்கிறாள் கில்லாடி…. அந்த பெண்ணின் நிலை என்ன ஆனதோ என்ற சந்தேகம் எழ “அந்த பொண்ணு யாரு பாப்பா” என்று வினவினார் தர்மதுரை.

“அந்த பொண்ணா சார் இப்போ முக்கியம். உங்க பாப்பாவிடம் அந்த மாப்பிள்ளை யார் என்று கேளுங்கள்” என்றான் ராகுல் அத்விக்கை முறைத்தவாறு .

“அதுவும் சரிதான்… அந்த பையன் யாரு பாப்பா?” என்று மத்திய அமைச்சர் கேட்கவும் அத்விக்கை அறிமுகப்படுத்தி வைத்தாள் ஹர்ஷிதா.

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே” என்று தர்மதுரை யோசிக்கவும் அவருடைய ஆட்களில் ஒருவன் “போலீஸ் தம்பி ஐயா… தமிழ்நாட்டு போலீஸ் ஜனாதிபதி விருது வாங்கியதற்கு நம்மூரில் ஒரு விழா கூட ஏற்பாடு பண்ண சொல்லி இருந்தீர்களே” என்று அவர் காதில் கிசுகிசுத்தான்.

” அட ஆமா.. ரொம்ப சந்தோசம் தம்பி உங்களைப் பார்த்ததில். நம்ம நாட்டுக்கு உங்கள மாதிரி இளைஞர்கள் இன்னும் நிறைய பேர் வரணும் . நம்மூர் விழாவை ஜமாய்த்து விடலாம்” என்றவர் ” முறையாக நானே வந்து அழைக்கணும் நம்ம வீட்டு பிள்ளையை கட்டியிருக்கீங்க … வீடு எங்க தம்பி” என்றார் அத்விக்கிடம்.

” சார் அத்விக்கை தெரியவில்லையா… ஜெகன் மாமாவின் பையன்” என்று ஹர்ஷிதா கூறக்கேட்டு “ஜெகனிற்கு அத்ரிஷ் ஒரு மகன் தானே???” என்று அருகில் நின்ற அத்ரிஷை பார்த்த வாறு தன் சந்தேகத்தை வினவினார் எம்.பி .

“நான் ஆத்ரிஷின் அண்ணன். என்னை அதிகம் பார்த்து இருக்க மாட்டீர்கள். ரொம்ப சந்தோஷம் சார் உங்களை சந்தித்ததில்” என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு பேச்சை முடிக்க விரும்பினான் அத்விக்.

Advertisement