Advertisement

ஏர்போர்ட்டிற்கு தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த விக்னவை கட்டியணைத்து வாழ்த்திய அத்விக் பொதுவான விசாரிப்புகளை மேற்கொண்டான்.
” ரதி தான்டா ஸ்கேன் பார்த்தாள். ‘இதுதான் அத்தான் உன் பேபி… பார்த்துக்கொள்’.. என்று மானிட்டரிரை காமித்தாள் பாரு…. வேற ஃபீல்…. நீங்களும் சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க மச்சி” என்றான் விக்னவ்.
விக்னவ் பேசப்பேச தன்னுள் இனம்புரியாத சுகம் ஒன்று பரவியது. அவனது பாசமலர் தனக்கு வைக்கப்போகும் ஆப்பை நினைத்த வண்ணம் “குட் நியூஸ் தானே! இப்போது வீட்டிற்கு போனதும் சொல்லி விடுகிறோம் மச்சி” என்றான் அத்விக் தன் மனைவியுடன் நடக்கபோகும் யுத்தத்தை நினைத்தபடி.
வீட்டிற்கு சென்றதிலிருந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தவளை சற்று நேரம் பொறுத்து பார்த்தவன் இந்த கொஞ்சல்ஸ் கெஞ்சல்ஸ் எல்லாம் நம்ம அரிசி மூட்டையிடம் வேலைக்கு ஆகாது… ஸ்ட்ரைட்டா கால்ல விழுந்திட வேண்டியதுதான் என்று எண்ணி அடுப்பில் எதையோ கிளறி கொண்டிருந்த மனைவியை அலேக்காக தூக்கினான் அத்விக்.
சற்றும் எதிர்பாராத தாக்குதலில் திமிறிய ஹர்ஷிதா அவனையும் சேர்த்துக்கொண்டு விழ போக அவளை இறுக்கத்துடன் பிடித்து இருந்தமையாலும் அருகில் இருந்த சுவற்றின் உதவியாலும் கீழே விழாமல் சமாளித்துக் கொண்டு நின்றான்.
” என்னடா கிச்சனுக்குள்ளே பாக்ஸிங் பண்ணிட்டு இருக்கீங்க?” என்றபடி அங்கு வந்தான் அத்ரிஷ்.
” உன் டார்லிங்கை ஒழுங்காக ரூமுக்கு வர சொல்லு. இல்லாவிட்டால் உன் வாழ்க்கையில் நீ பார்க்க கூடாத சீனை எல்லாம் இப்போது பார்க்க வேண்டியது வரும். கிச்சன் என்று கூட பார்க்க மாட்டேன்” அவள் காலில் விழுவதை பற்றி அத்விக் குறிப்பிட்டு வைக்க ஐயையோ என்னத்தை செய்ய போறானோ என்று பயந்த ஹர்ஷிதா “கீழே இறக்கிவிடு நானே வருகிறேன்” என்று கணவனை முறைத்தாள்.
அவள் ரூமிற்குள் சென்றதும் கதவை தாளிட்டவன் மனைவியின் கையில் ஒரு காகிதத்தைக் திணித்தான். போன மாதம் அவன் கொடுத்த காகிதம் நினைவிற்கு வர அதைக் கிழிக்கப் போனவளின் கையை பற்றி தடுத்தான் அத்விக்.
” நீ கிழித்து போடு. ஆனால் அதற்கு முன்னாடி படித்துவிட்டு கிழித்து போடு ” என்று சொன்னவனின் கண்களில் இருந்த உண்மை அக்காகிதத்தை எடுத்துக்கொண்டு தங்கள் மெத்தையில் அமர்ந்தவாறு அவளை படிக்க தூண்டியது.
******
அழகிய ராட்சஸியே !!!
அன்பான அரிசி மூட்டையாய்
எனக்காக பிறந்தவளே
கேட்டு கொள்!!!
என்றோ என்னுள்
முளைவிட்ட என் காதலை!!
ஆனால் அதனை நானோ !!
உன் அருகாமையிலும் தேடாது….
உன் நினைவுகளை மட்டும் மூச்சுக்காற்றாய் சுமந்து பல வருடங்களைக் கழித்த போதும் புரியாது….
உன் அக்கறையான அத்தானிலும் கண்டுகொள்ளாது….
உன் கோபமான தடிமாட்டிலும் புரிந்து கொள்ளாது….
உன் சின்ன சின்ன சண்டைகளிலும் செல்லச் செல்ல சேட்டைகளையும் தெரிந்து கொள்ளாது….
உன்னை தொட்டுத் தூக்கிய சமயங்களிலும் உணராது….
உன்னை பார்த்தவனை எல்லாம் வெளுத்த போதிலும் யோசிக்காது….
உணர்ந்துகொண்டேன்…
அடுத்தவனுக்கு உன்னை நிச்சயிக்கப் போகும் சமயத்தில் !
கண்டு கொண்டேன்…
உன்னை விட்டுக் கொடுக்க விரும்பாது உன் கழுத்தில் தாலி கட்டிய நொடியில் !
புரிந்து கொண்டேன்…
என்னுடன் நீ பேச விரும்பாது நிராகரித்த நிமிடங்களில் !
தெரிந்து கொண்டேன்…
உன்னை என் கைவளைவிற்குள் கொண்டுவந்தபோது திரையிட்டிருந்த உன் விழிகளில் !
மயங்கி கொண்டேன்…
உன் கன்னத்தில் என்னை வீற்ற
சட்டையாய் குடிகொண்டிருக்கும் மச்சத்தை
வருடிய கணத்தில் !
அறிந்து கொண்டேன்…
எதிராளியின் கோட்டையில் துணிவுடன் 
நீ சட்டம் பேசி வீற்றிருந்த போது உன்னை பார்த்த நொடிகளில் !
நொந்து கொண்டேன்…
ஒவ்வொருமுறையும் உன்னை இம்ப்ரஸ் செய்ய வழி தெரியாது துவண்ட பொழுதில் !
மறு பிறவி கொண்டேன்…
ஒரு முறை ஒரே ஒரு முறை உன்னில்…. நான் என்னை தொலைத்த இரவில் !
இப்படிக்கு 
உன்னை தூக்கி போக துடிக்கும் காவலன் ! 
உன் மனதை வென்றுவிட நினைக்கும் காதலன் !
எப்பவும் எப்பெப்பவும்…
**********
முழுதும் படித்தவள் எழுந்து அருகில் இருந்த பாத்ரூமிற்குள் ஓடி அதிலிருந்த வாஷ்பேஸினில் குமட்டி கொண்டிருந்தாள்.
அவ்வளவு மோசமாகவா எழுதி இருக்கிறோம் என்று ஒரு கணம் யோசித்தவன் அவள் நிலை கண்டு “ஹர்ஷி ஆர் யூ ஓகே ?” என்று கேட்டுக்கொண்டே “அம்மா அம்மா …”என்று கத்தினான்.
தான் சாப்பிட்ட அனைத்தையும் வெளியே எடுத்து இருந்தவள் கணவன் மீதே மயங்கி சரிந்தாள்.
“அத்வி என்னடா ஆச்சு? கதவை திற” ரூபாவும் அத்ரிஷும் பதற்றத்துடன் கதவை தட்ட மயங்கியவளை தோளில் சுமந்தபடி வெளியே வந்த அத்விக்கை கண்டு மேலும் படபடத்தனர்.
” என்னடா ஆச்சு?”
” தெரியவில்லைமா வாமீட் பண்ணிட்டு திடீர்னு மயங்கிவிட்டாள்” 
உடனே அத்ரிஷ் காரை எடுக்க அடுத்த 15 நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் ஹர்ஷிதா. அவளை மருத்துவர்கள் பரிசோதிக்க வெளியே அமர்ந்திருந்த மரகதம் “வாந்தி எடுத்து மயங்கியிருக்கா… நாளு கணக்கு சரியா வருது… மசக்கையா இருக்கா என் பேத்தி” என்று கூற அங்கிருந்தோர் அனைவருக்கும் அதிர்ச்சி தான் ஆனால் வெவ்வேறுவிதமாய்.
அப்போது அங்கு விரைந்த ஆர்யனிடம் “ஹர்ஷி பிரக்னன்டா இருப்பாளோ என்று பயமாக இருக்கிறது. ஒன்றும் ஆகி விடாது அல்லவா ?” என்று வினவினார் ஜெகன்.
அவர் கேள்வியில் அத்விக்கின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த ஆர்யன் “அத்விக்கிடம் எதுவும் சொல்லவில்லையா அங்கிள்?” என்றுவிட்டு “ஒன்றும் ஆகாது நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்” பரிசோதனை கூடத்திற்கு நுழைந்தான்.
” எதை அப்பா எங்களிடமிருந்து மறைத்தீர்கள்? அவள் சாப்பாட்டு விஷயத்தில் கவனமாக பார்த்துக் கொள்ளும்படி மட்டும்தானே கூறியிருந்தீர்கள். காஃபியை கன்ட்ரோல் பண்ண சொன்னீர்கள்… இப்போதைய உங்கள் கவலைக்கு என்ன அர்த்தம்?? அந்த விபத்தில் அவள் உடம்பிற்கு வேறு ஏதும் பிரச்சனையா?” அத்ரிஷ் தான் தாங்கமாட்டாமல் கத்திக் கொண்டிருந்தான்.
சிலையென உறைந்து போய் நின்ற அத்விக்கை பற்றி “ஹர்ஷிக்கு ஒன்றும் ஆகாது என்று நீ சொல்லு மச்சி” ஆதரவு தேட விழைந்தான் விக்னவ்.
அப்போது ஹர்ஷிதாவை பரிசோதித்து விட்டு வெளியே வந்த பிரகதி “வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றாள் உள்ளம் மலர பூரிப்புடன்.
அங்கிருந்தோர் எதுவும் பேசாது அசையாமல் ‘அடுத்து என்ன சொல்ல போகிறாளோ!’ என்று அதிர்ந்தபடியே நிற்கவும் “தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டீங்களாபா?” என்றாள் பிரகதி.
மேலும் “ஒரு தடவைக்கு இரண்டு தடவை கூறினேனே ஏன் என்று கூட கேட்க தோன்றவில்லையா??” என்றவளிடம்
“டிவின்ஸா?” என்று கேட்ட அத்விக்கின் கண்கள் தெப்பக்குளம் ஆனது .
“சூப்பர் அண்ணா கண்டுபிடித்து விட்டாய். மை ஹார்டி கங்கிராட்ஸ்” என பிரகதி வாழ்த்துக்களை தெரிவிக்க
” வேறு ஒன்றும் பிரச்சினை இல்லையே” என்று கலங்கியபடி வினவினான் அத்விக்.
” நான் சொல்வதை பயப்படாமல் கேளு. அவளுடைய கர்ப்பப்பை கொஞ்சம் வீக்காக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு செய்திருந்த அறுவை சிகிச்சையின் தாக்கம் இன்னும் அவளுள் ஆறி இருக்கவில்லை. 
அப்படியே சில வருடங்களுக்கு பின் குழந்தை உண்டானாலும் அவளுடைய இடுப்பு எலும்புகளுக்கு போதிய வலு இல்லாததால்
இந்த நிலைமையை நாம் ஃபேஸ் பண்ணி தான் ஆக வேண்டும். இரட்டையர்கள் என்பதால் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கணும். தன்னம்பிக்கையோடு இரு பார்த்துக் கொள்ளலாம்” தெம்பு ஊட்டும் விதமாக பிரகதி கூறியது அவன் பயத்தை மேலும் கூட்டியது.
” வேறு எங்காவது அவளை கூட்டி போய் செக்அப் பார்த்து கொள்ளலாமா?? அமெரிக்கா இல்லை… இன்னும் எங்காவது” பதற்றத்துடன் வினவியவனை “ரிலாக்ஸ் அண்ணா அமெரிக்காவில் இருக்கிற ஃபெஸிலிடீஸ் எல்லாமே நம்ம ஹாஸ்பிடலயும் இருக்குது. இங்கும் பெஸ்ட் டாக்டர்ஸ் இருக்கிறார்கள். உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்றால் சொல்லு தமிழ்நாட்டின் பெஸ்ட் குழந்தைப்பேறு மருத்துவரிடம் கூட்டிப் போகலாம் . அவர்கள் சொன்னால் நீ நம்புவாயா” என்றாள் பிரகதி.
” உன் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை ரதி . ஆனாலும்….”
“புரிகிறது அண்ணா. தி பெஸ்ட் கைனி கிட்ட கன்ஸல்ட் பண்ணலாம். இரு குழந்தைகளை அவள் கர்ப்பைபை தாங்குமா என்று கேட்போம் . அவர் சொல்வதை வைத்து டிசைட் பண்ணலாம். ஒருவேளை ஒரு குழந்தைக்கான வலு……”
பிரகதியை பேச விடாது அவள் வாயை தன் கை வைத்து மறைத்த அத்விக் “அப்படி சொல்லாதே ரதி ப்ளீஸ்” என்ற அத்விக்கின் குரலில் அவ்வளவு வலி.
“அண்ணா சீர் அப். இன்னும் அரைமணி நேரத்தில் ஹர்ஷி கண்விழித்து விடுவாள். அவளிடம் பக்குவமாக பேச வேண்டும். நீயே இப்படி சோர்ந்து போனால் எப்படி”
“அவளுக்கு இது பற்றி எதுவும் தெரிய வேண்டாம் ரதி”
” ஹர்ஷிக்கு கண்டிப்பாக அவள் உடல்நலத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவள் கவனமாக இருப்பாள்”
” எனக்கு அவளை பற்றி தெரிந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா!!!!” அத்விக்கையும் மீறி வெளிவந்தன வார்த்தைகள்.
” அண்ணா வாட்ஸ் திஸ்? இதெல்லாம் நம்மை மீறிய செயல். கடவுளின் அருள். எத்தனை பேர் குழந்தை வரம் வேண்டி தினம் தினம் தவம் புரிகிறார்கள் தெரியுமா? டிவின்ஸ் தான் உனக்கு பிறக்கப் போகிறது என்று தெரியுமா இல்லை நீ தான் டிவின்ஸ் வேண்டும் ஹர்ஷி என்று கேட்டாயா?” என்று பிரகதி பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு நிற்க முடியாது திரும்பி சென்றிருந்தான் அத்விக்.
எல்லோரும் ‘அத்வி அத்வி’ என்று அழைக்க “கொஞ்ச நேரம் அவனை தனியா விடுங்கள்” என்று கூறிய பிரகதி ஹர்ஷியின் பிரசவம் குறித்த குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் கழித்து தூரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ஆர்யனை கண்ட பிரகதி அவனிடம் செல்ல “ஹர்ஷிக்கு ஒன்றும் ஆகாதுல்ல பிரகி” என்றவன் குரலும் கரகரத்தது.
அதர்வனா மூலம் ஹர்ஷிதா மயக்கமடைந்தது தெரியவர உடனே இங்கு மருத்துவமனைக்கு வந்திருந்தான் ஆர்யன். 
ஒரு டாக்டராக இருந்துகொண்டு அவன் வார்த்தைகள் வெளிப்படுத்திய பயம் பிரகதிக்கு ஒரு உண்மையை புரியவைக்க “நீ தானே அவளுக்கு ஆப்பரேட் பண்ணுன உனக்கே தெரியும்ல” என்றாள் வெடுக்கென்று.
“எனக்கு பயமாயிருக்கு… அவள் நல்லபடியாக இருக்கிறாள் என்று நீ சொல்லு” சிறுபிள்ளைத்தனமாக கேட்டவனை ஓர் அறை அறைய வேண்டும் போல் இருந்தது பிரகதிக்கு.
எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தவளை “சொல்லு பிரகி ஹர்ஷிக்கு எதுவும் ஆகாது என்று” ஆர்யன் மீண்டும் கேட்க
கடுப்பின் உச்சிக்கு சென்றவள் “ஹர்ஷியை தான் லவ் பண்ணினாயா?” என்றாள்.
பதில் பேசாது குனிந்தவனிடம் ” உனக்கு அவள் லவ்வர் என்றால் எனக்கு அவள் கஸின். உனக்கு அதர்வனா எப்படியோ அப்படித்தான் எனக்கு ஹர்ஷிதா. அவளையும் அவள் வயிற்றில் வளரும் இரு ஜீவன்களையும் பத்திரமாக காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு. சுலோச்சனா மேடம் உங்க ஹாஸ்பிடல்ல தானே பணிபுரிகிறார்கள். அவர்களை தான் பார்க்க போகிறேன். அவர்களிடம் கன்சல்ட் பண்ணி விட்டு நாளை ஹர்ஷியை அவர்களிடம் கூட்டிப் போக வேண்டும் . உனக்கு என்மீது டவுட்ஸ் இருந்தால் இந்த பிரக்னன்சி டீடெயில்ஸ் ஃபுல்லா உன்னிடம் சப்மிட் செய்கிறேன் போதுமா ” என்று மொழிந்து விட்டு வேகமாய் சென்றாள் பிரகதி.
என்ன கேட்டு விட்டோம்? எதற்கு இப்படி குதிக்கிறாள்? அத்விக்கிடம் எப்படி எடுத்துக் கூறினாள்! ஆறுதலுக்கு ஒரு வார்த்தை என்னிடம் சொன்னால் குறைந்துபோய் விடுவாளா! என்று எண்ணியவனுக்கு பிரகதியின் மெலிந்த தோற்றம் கண்முன்னே தோன்றியது . 
கல்லூரி நாட்களில் பிரஷன் “அழகான பப்ளிமாஸே” என்று கூப்பிட்டதும் “எஸ் மிஸ்டர் நெட்ட கொக்கு” என்று பதிலுக்கு பிரகதி கேலி செய்ததும் ஆர்யனின் நினைவில் ஆடியது. 
‘டயட்ல இருப்பாளோ!!’ என்று யோசித்த ஆர்யன் பிரகதி வெஸ்பாவை ஸ்டார்ட் செய்யவும் வேகமாக ஓடி பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான் .
கேள்வியை புருவத்தில் சுமந்து ரிவ்யூ மிரரில் நோக்கியவளிடம் “நீ ஹர்ஷி ரிப்போர்ட் ப்ரொடியூஸ் பண்ணனும் தானே” என்றான் ஆர்யன்.
“அங்க தானே இருக்கு உன் சிவிக் போய் அதை எடுத்து வா”….. பிரகதி
“உனக்கு தான் புளூ சிவிக் பிடிக்காது… ஆனால் நான் எப்போதும் ஆரஞ்சு வெஸ்பா வசம் தான்பா” 
கல்லூரி சமயத்தில் பிரகதியின் வண்டியில் எத்தனை முறை ஆர்யன் பயணித்திருப்பான் என்பதை கணக்கேட்டில் அளந்துவிட முடியாது.
அப்படிபட்டவனை “என்னமோ பண்ணு” என்று தோளை குலுக்கிய பிரகதி அவனையும் அழைத்துக்கொண்டு ‘ஆர்யன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்’ ற்குள் நுழைந்தாள் .
“உன்னிடம் ஹர்ஷி மாடியிலிருந்து விழுந்தது பற்றியும் அவள் உடல்நிலையை பற்றியும் சொல்ல தான் அத்வி நினைத்தேன் . இப்போது என்னால்தான் இப்படி ஆகிவிட்டது” புலம்பிய ரூபாவை “விடுங்க அம்மா பார்த்துக்கொள்ளலாம். ஹர்ஷி நல்லபடியாக என் பிள்ளைகளை பெற்றுத் தருவாள்” அவனுக்குமே ஆறுதலாய் கூறிக் கொண்டான் அத்விக்.
பின் கலங்கிப் போய் அமர்ந்து இருந்த பிருந்தாவிடம் “அத்தை எழுந்திரிங்க சும்மாவே உங்களை அவள் டிரில் வாங்குவாள். இதில் அவளை உசுப்பேத்தி விடுற மாதிரி இரண்டு பாடிகார்ட்ஸை அவ பாடிகுள்ள வச்சிருக்கா.. சமாளிக்க தெம்பு வேண்டாமா” என்று அவரை சமன் படுத்த நினைத்தான். அச்சமயம் ஹர்ஷிதா கண் விழித்து விட்டாள் என்று ஒரு நர்ஸ் வந்து சொல்லி விட்டு சென்றார்.
பிருந்தா முதலாளாக ஓடிச்சென்று ஹர்ஷியின் நெற்றியில் முத்தமிட்டு “இப்ப எப்படி இருக்கு அம்மு?” என்றார் அவள் தலையை கோதியபடி.
மசக்கை காரணமாக அதர்வனா மட்டும் வீட்டில் இருக்க அடுத்தடுத்து நுழைந்தவர்கள் ஹர்ஷிதாவின் நலத்தை விசாரித்து விட்டு அவள் அருகில் நின்றனர்.
சந்தோஷமான செய்தி என்றாலும் அவளுக்கு இதனால் ஏற்பட்ட சிக்கலே அவர்கள் முன் பெரிதாக தெரிய யாரும் அவளிடம் குழந்தைகள் பற்றி பேச முன்வரவில்லை. 
அத்ரிஷ் தான் முதலில் சுதாரித்து “வாழ்த்துக்கள் டார்லிங். என்னை சி.டி என்று அழைக்க இன்னும் இரு நபர்களை கூட்டிவர போவதற்கு.. உனக்கு எப்படி நான் சின்ன டார்லிங்கோ அவர்களுக்கு அப்படி நான் சித்தப்பா டார்லிங்… சரியா ” என்றான் தன் சந்தோஷத்தை முழுதாக வெளிக்கொணர முடிந்தவனாய்.
ஹர்ஷிதாவிற்கு அத்ரிஷின் கூற்று உள்ளே செல்ல முழுதாக ஒரு நிமிடம் தேவைப்பட்டது. 
பின் விளங்கியதும் அவள் கைகள் தானாக வயிற்றை தடவ கண்கள் இச்செய்திக்கு பங்குதாரரான கணவனை தேடியது. அப்போது உள்ளே நுழைந்த அத்விக்கிடம் “டிவின்ஸா” என்று நம்பமுடியாத அதிர்ச்சியுடன் கேட்டவளை பார்த்து “ஆம்” என்று தலையசைத்தவனின் கண்ணீர் அவன் அனுமதியின்றி தரையை தொட்டது.
பின் அனைவரையும் ஆராய்ந்ததில் அவர்கள் மகிழ்ச்சிக்கு பின் ஒளிந்திருந்த சோகம் அப்பட்டையாக வெளிப்பட “உனக்கு எப்பவுமே உன் பையன் விக்கியை தான் முதலில் பிடிக்குமா?” என்று தன் அன்னையிடம் சண்டைக்கு பாய்ந்தாள் ஹர்ஷிதா.
ஒன்றும் புரியாமல் பார்த்த பிருந்தாவிடம் “சொல்லு விக்கியை பிடிக்குமா இல்லை என்னை பிடிக்குமா” என்றாள் மகள் மீண்டும்.
இந்தக் கேள்வி இப்போது தேவையா என்று “ஏன்டா ஹர்ஷிமா?” ஹரிஹரன் வினவ “நீங்க பேசாதீங்க அப்பா… எனக்கு அம்மா இப்போது பதில் சொல்லியே ஆகணும்” அடம்பிடித்தாள்.
“உங்க ரெண்டு பேரையும் தான் பிடிக்கும்” என்றவரிடம் “பார்த்தால் அப்படி தெரியவில்லையே!! அவன் பொண்டாட்டி வாமிட் பண்ணவுடன் போய் ஜிலேபி செய்தாய். என்னை உனக்கு பிடிக்கும் என்றால் இந்நேரம் நம்ம கிச்சன்ல நின்றுகொண்டு அல்வாவிற்கு தேவையான சுகரை அளந்து கொண்டிருக்க வேண்டாமா? ஒன்றிற்கு இரண்டு நியூஸ் என பாயசத்தையும் சேர்த்து கிளற வேண்டாமா? போம்மா உனக்கு அவனை தான் பிடிக்கும்” கோபித்துக்கொண்டவளிடத்தில் “வீட்டிற்கு போனவுடன் செய்து தருகிறேன்டி போக்கிரி” என்று கொஞ்சினார் பிருந்தா.
“உனக்கு அல்வா வேண்டும் என்றால் நேரிடையாக கேட்க வேண்டியதுதானே !! ஏன்டி என்னை இழுக்கிறாய்?” சண்டையை ஆரம்பித்த விக்னவிடம் “நேற்று அத்துவிற்கு டாக்டர் செக் பண்ணி கன்ஃபார்ம் பண்ணவுடன் ஒருவன் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தானே அவனை நீ பார்த்தாயா விக்கி” என்று சாடினாள்.
அதுமட்டுமின்றி அவளது பிக்பிரின்சஸை கிழவியாக்கி பி.டி யிடம் டூ விட்டு அங்கிருந்த ஒருவரையும் விட்டு வைக்காமல் குதித்தவளை உரிய விதத்தில் கொஞ்சி கெஞ்சி அத்விக்கை மட்டும் அவளிடம் விட்டு வெளியே சென்றனர்.
மனைவியின் அருகில் வந்தவன் அவள் நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்கி விட்டு குனிந்து அவள் உச்சந்தலையில் லேசாக முட்டி “தேங்க்ஸ் ஹர்ஷி பேபி” என்றான் மெதுவான குரலில் விழிகளை திரையிட்டு.
அந்த ஸ்பரிஸத்தில் சற்று நேரம் அமைதியாக இருந்தவள் பின் அவனை விலக்கி “எனக்கு என்ன பிராப்ளம் அத்வி?” என்றாள் யோசனையுடன் .

Advertisement