Advertisement

“நான் ஆத்ரிஷின் அண்ணன். என்னை அதிகம் பார்த்து இருக்க மாட்டீர்கள். ரொம்ப சந்தோஷம் சார் உங்களை சந்தித்ததில்” என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு பேச்சை முடிக்க விரும்பினான் அத்விக்.

அப்போது ஜெகன் அத்விக்கிற்கு போனில் அழைப்பு விடுக்கவும் எந்தவித கூச்சமுமின்றி “கொடு தம்பி… அப்பாகிட்ட நான் பேசுறேன்” என்ற தர்மதுரை சிறிது நேரம் உரையாடி விட்டு கிளம்பினார்.

அரங்கில் ஒரு ஓரமாய் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உட்கார்ந்திருந்த வசந்தியிடம் சென்று போனை நீட்டினான் அத்விக்.

ஏன் எதற்கு என்று புரியாத போதும் அவன் நீட்டிய தோரணை வாங்கி பேசு என்று கட்டளையிட மறுக்காமல் அதை செய்தார் வசந்தி.

போன் ஸ்பீக்கரில் இருக்க ஜெகன் பேசியது அங்கிருந்தோர் அனைவருக்குமே தெளிவாக கேட்டது .

“நான் ஜெகன் பேசுகிறேன் ‘ஹகன் இன்டஸ்ட்ரியலிஸ்ட்’ பார்ட்னர். நீங்கள் கேட்ட கவுரவம் என்னிடம் எந்த அளவிற்கு நிறைந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதே அளவு ராகுலிடத்திலும் அவனது அம்மாவிடத்திலும் இருக்கிறது. ராகுலின் அம்மாவும் எனக்கு ஒரு தங்கை போல்தான். இது இன்று நேற்று தொடங்கிய சொந்தமுமில்லை புதிதாக தோன்றிய பந்தமுமில்லை…. என்று எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் அரவணைப்பை அத்விக்கிற்கு ராகுல் என்னும் நண்பன் ஒருவனால் கொடுக்க முடிந்ததோ அன்றிலிருந்தே அவனை வேற்றாளாய் நான் பார்த்ததில்லை . உங்களுக்கு என் சொல் மீது நம்பிக்கை வரவில்லை என்றால் சட்டப்படி எங்கள் உரிமையில் அவனுக்கு ஒரு பங்கினை பிரித்து கொள்ளலாம்” அவர் பேசப்பேச ஆவென்று வாயைப் பிளந்தது வசந்தி மட்டுமல்ல அரங்கில் இருந்த அனைவரும் தான் .

ராகுலும் இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை அதிலும் சொத்து பற்றி பேசும்போது தன்னை கட்டுப்படுத்த முடியாது “சார் இது போதும் “என்றான் போனை பார்த்து உணர்ச்சி பொங்க.

” மாமானு கூப்பிடு ராகுல் “என்ற ஜெகன் வசந்தியிடம் “சொல்லுங்க உங்க பொண்ணை என் மருமகனிற்கு கொடுக்க உங்களுக்கு இப்போது சம்மதமா” என்றதும் வாயடைத்துப் போய்விட்டார் வசந்தி.

வார்த்தைகளை கோர்க்க முடியாது தடுமாறியவரைக் கண்டு நமட்டு சிரிப்பு ஒன்று உதிர்த்த அத்விக் “அவர்களுக்கு முழு சம்மதம் அப்பா” என்றதும் போனை கைப்பற்றியிருந்தான் அத்ரிஷ்.

” ரொம்ப தேங்க்ஸ் அப்பா”

” நீ எதுக்குடா தேங்க்ஸ் சொல்ற சம்பந்தமே இல்லாம ” என்று ஜெகன் வினவியதற்கு “நீங்க அத்வி ஃப்ரெண்டுக்கு மட்டும் இல்லாம என் பிரண்டுக்கும் சேர்த்து பேசுனீர்களே அதுக்குதான்” என்று கூறிவிட்டு போனை வைத்தான் அத்ரிஷ் மிருதுளாவை பார்த்து புன்னகைத்தபடி.

வசந்தி இதற்கு மேலும் அமைதியாக இருப்பது அரிது அல்ல என்பதை நன்கு உணர்ந்து “வீட்டுக்கு வாங்க மாப்பிள்ளை” என்றார் ராகுலிடம்.

“அம்மாவிற்கு இன்னும் இங்கு நடந்தது எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் அங்கே வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை வருகிறோம் அத்தை” என்றான் ராகுல் தன்மையாகவே.

************

ஒரு மாதமாக அல்லும் பகலும் ஓயாது முழு வேட்கையுடன் தேடிய போதை மருந்து உற்பத்தியாளர் கூட்டத் தலைவனை கொல்கத்தாவில் வைத்து பிடித்தான் அத்விக்.
விசாரணையை மேற்கொள்கையில் பிடிபட்டவனின் அலறல் சத்தத்திற்கு இணையாக அத்விக்கின் போன் சத்தம் கொடுக்கவும் அதை எடுத்துப் பார்த்தவன் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் குற்றவாளியை பார்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தான் அத்விக்.

” சொல்லுடா விக்கி … எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?”

“என் தங்கச்சி நல்லாயிருக்கா மச்சி……. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்பவும் பிஸியாடா?” என்றான் விக்னவ் முப்பது நாட்களுக்கும் மேலாக தொடர்பில் இல்லாத மச்சானிடம்.

“பேசிட்டு தானேடா இருக்க … சொல்லு என்ன விஷயம்?”

“குட் நியூஸ் மச்சி .. அத்து மயக்கம் போட்டுவிட்டாள். இப்போதுதான் ஹாஸ்பிடல் போய் டாக்டரை பார்த்து விட்டு வருகிறோம்”

” ஏன்டா பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லையென்றால் உனக்கு அவ்வளவு சந்தோஷமா?” புரியாமல் கேட்ட அத்விக்கிடம் “அடேய்…! அவள் இப்போதே மாங்காய் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்” என்றான் விக்னவ் அத்விக்கிற்கு புரியவைக்கும் நோக்கத்தில்.

ஆனால் அதில் மேலும் குழம்பிய அத்விக் மௌனமாகிவிட விக்னவே தொடர்ந்தான்.

“குலதெய்வத்திற்கு படையல் விருந்து வைக்க அம்மாச்சி சொன்னது. உன்னால் முடிந்தால் இப்போதே புறப்பட்டு வாடா. நாளையே வேலூருக்கு சென்று விருந்து வேலையை முடித்து விடுவோம்”

“டேய் சென்னையில் கிடைக்காத மாங்காயா கொல்கத்தாவில் கிடைக்கும்” விருந்திற்கு மாங்காய் தேவைப்படுமோ என்று எழுந்த சந்தேகத்தில் வினவி வைத்தான் அத்விக்.

தன் தலையில் அடித்துக்கொண்ட விக்னவ் அத்விக் கூறியதை மீண்டும் நினைவுகூர்ந்து ” நீ கொல்கத்தாவில் இருக்கிறாயாடா… அப்படி என்றால் கோவில் ப்ரோக்ராமை தள்ளி வைத்துக் கொள்வோமா???” என்றான்.

” இங்கு வேலை அல்மோஸ்ட் முடிந்துவிட்டது மச்சி. ஒன்றும் பிரச்சனை இல்லை”

“ஃபைன் மச்சி… சீக்கிரம் கிளம்பி வாடா பை” என்று போனை அணைக்க போன விக்னவிடம் “டேய் மாங்காய் விஷயத்தை சொல்லாமல் கட் பண்ற… கண்டிப்பா வாங்கி வரணுமா?” என்றான் அத்விக் குழப்பத்தில் இருந்து மீளாதவனாக.

” இதற்குமேல் எப்படிடா நான் சொல்லுவேன் முடிந்தால் கண்டுபிடித்து விட்டு வந்து வாழ்த்துக்களை தெரிவி… இல்லாவிட்டால் இன்னும் பத்து மாதத்தில் மக்கு மாமாவை மொத்த ஒரு குட்டி நம் வீட்டில் காத்திருக்கும்”

யாரு அந்த குட்டி என்று யோசிக்கும்போதே ஐ.பி.எஸ் ஆபிஸரின் மூளை அதற்கு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க “மச்சி கங்கிராட்ஸ் டா ” என்று ஆனந்த கூச்சலிட்டான் அத்விக்.

” ஹப்பாடா…. ரொம்ப தேங்க்ஸ் மச்சி ” என்று சிரித்தவாறு கூறிவிட்டு மேலும் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு போனை வைத்தான் விக்னவ் .

அடுத்த நொடி அத்விக்கின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் மொத்தமாய் ஆக்கிரமித்து வைத்திருந்தாள் அவன் அரிசிமூட்டை .
அவன் எண்ண அலைகள் அசுர வேகத்தில் பின்னோக்கி பயணித்து விக்னவ் அதர்வனாவின் திருமண தினத்தில் சென்று நின்றது.

இந்த போதை மருந்து வழக்கு நிமித்தமாக ஒரு மாத காலம் வீட்டினருக்கு தொடர்பு கொள்ளாத போதும் ஒரு வாரத்திற்கு முன் தன்னையுமறியாமல் ஹர்ஷிதாவிற்கு அழைத்திருந்தான் அத்விக்.

அவள் குரலை கேட்டதும் ஹலோ கூட சொல்லாது “என் மேல் கோபம் இல்லையே ஹர்ஷி பேபி……” என்று வருத்தத்துடன் கேட்டவனிடம்

” பிராடு… என்னை ஏமாற்றி விட்டாய் தானே..”
என்று குற்றம் சாட்டியிருந்தாள் அவன் மனைவி.

தன் தரப்பு விளக்கத்தை அத்விக் கொடுப்பதற்கு முன்னே இரு கான்ஸ்டபிள்ஸ் அவனிடம் விரைந்து “சார் நீங்கள் கேட்ட முக்கிய ஹின்ட் இதோ” என்று சில காகிதங்களை வழங்கவும் மீண்டும் பணியில் மூழ்கினான் அத்விக்.

இப்போது அந்த அரை நிமிட போன் பேச்சும் அவளது கோபத்திற்கான காரணமாகிய அன்றைய தன் செய்கையுமே விஸ்வரூபம் எடுத்து அத்விக்கை வாட்டியது.

போன மாதம் மிகச் சிறப்பாக பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது விக்னவ் அதர்வனாவின் திருமணம். அன்று மாலையே அத்விக் ஹர்ஷிதாவிற்கு ரிசப்ஷன் ஒன்றை பெரிய அளவில் ஏற்பாடு செய்து இருந்தனர் வீட்டினர். அதில் மத்திய அமைச்சர் தர்மதுரை முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார்.

காலையில் அடர் நீல பட்டு சேலையில் அதற்கு பொருத்தமான அணிகலன்களுடன் வலம்வந்த மனைவியிடத்தில் தஞ்சமடைந்த தன் இரு விழிகளையும் அகற்ற மறந்திருத்தான் அத்விக்.

மாலையில் பீச் கலர் ஃபுல் கவுன் அணிந்து அந்த மேடையையே மெருகேற்றிய வண்ணம் தன் அருகில் நின்றவளை வாசம் பிடித்து தன் வசத்தை முற்றிலும் தொலைத்து இருந்தான்.

தன் அருகில் ஒருவன் நிற்கிறான் என்பதையே மறந்திருந்தவள் போல் மருந்துக்கும் கணவனின் பக்கம் தன் பார்வையை திருப்பாதவள் விழாவில் ஐக்கியமாகி வந்தோரை இன்முகத்துடன் வரவேற்று உரிய வகையில் சொந்த பந்தம் கேட்கும் கேள்விகளுக்கு ஊமையாகி போன கணவனுக்கும் சேர்த்து பதிலளித்த வண்ணம் மிளிர்ந்தாள் ஹர்ஷிதா.

இடையிடையே அத்ரிஷிடம் தனக்கு வேண்டிய ஸ்வீட்ஸை கேட்டு வாங்கி விழுங்கவும் தவறவில்லை.

“உனக்கு ஏதேனும் கொண்டு வரவாடா?” என்று அத்ரிஷ் கேட்டதற்கு தன் அரிசிமூட்டையை கண்களால் பருகியபடி பசி தாகத்தை தணித்து கொண்ட அத்விக் “எதுவும் வேண்டாம்” என்று மறுத்திருந்தான்.

“வந்திருப்போரை பார்ப்பதை விட உன்னை கவனிக்கவே சரியாக இருக்கிறது அண்ணி” என்று அத்ரிஷ் குறை பட்டாலும் அவள் சொன்னதை செய்தான்.

அத்விக் ஹர்ஷியின் திருமணத்திற்கு பிறகு கோபம் வரும் சமயங்களில் சி.டியின் டார்லிங் அண்ணி ஆகிவிட்டிருந்தாள். அத்ரிஷ் அப்படி கூப்பிடும் போதெல்லாம் எகிறுகிறவள் இன்று “இன்னும் ஒரே ஒரு கப் குலோப் ஜாமுன் வித் ஐஸ்கிரீம் ப்ளீஸ் சி.டி” கெஞ்சி கொண்டிருந்தாள்.

அப்போது மேடை ஏறிய ஒரு பெண்ணை பார்த்த அத்ரிஷ் “பாருடா வராதவங்க வந்திருக்காங்க” என்று ஓட்ட அவன் முதுகில் இரண்டடி போட்டதுமில்லாமல் “வந்தவுடன் ஏன் அத்ரி என்னிடம் அடி வாங்குற” என்றாள் புதியவள்.

பின் ஹர்ஷிதாவை கட்டி அணைத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அத்விக்கிடம் “ரொம்ப வழியுது அண்ணா தொடைச்சுக்கோ” என்று தன் கை குட்டையை நீட்டினாள்.

” வாட் எ சர்ப்ரைஸ் ரதி….. லண்டனில் உன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்களா என்ன!” பிரகதியை அங்கு எதிர்பார்க்காத அத்விக் கேட்ட கேள்விக்கு

“அப்படியே துரத்திவிட்டுட்டாலும்…. ‘இத்தனை காலம் உங்கள் நாட்டிற்காக நான் பண்ணிய சர்வீஸிற்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடனா இது’ என்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருப்பார் அம்மையார்….. உடனே ஒட்டுமொத்த லண்டனும் இவள் பின்னால் உட்கார்ந்து இருக்கும்” என்று பல வருடங்களுக்கு பிறகு பிரகதியை கண்ட சந்தோஷத்தில் கணவனிடம் தன் திருவாயை தன்னை மறந்து அசைத்திருந்தாள் ஹர்ஷிதா.

“ஹோய்….இன்று நான் தான் உங்களை ஓட்டணும் … பிளேட்டை திருப்ப பார்க்காதே வாயாடி” என்று ஹர்ஷிதாவிடம் கூறிவிட்டு அத்விக்கின் கேள்விக்கான பதிலாக “டாடி கம்பள்ஷன் அண்ணா” என்றாள்
ஐந்து ஆண்டுகளுக்கு பின் தந்தை ரகுநாதனின் வற்புறுத்ததால் தாயகம் திரும்பியிருந்த பிரகதி.

” சித்தப்பா எங்கே?” என்று பிரகதியிடம் கேட்டவனுக்கு கீழே ரகுநாதன் மரகதத்திடம் பேசிக்கொண்டிருப்பது கண்களில் பட்டது.

“உன்னை இத்தனை வருடம் விட்டுவிட்டு சித்தப்பா இருந்ததே பெருசு ரதி ” என்றான் அத்விக் ரகுநாதனிற்கு ஆதரவாக.

“சரி நாம அப்புறம் பேசலாம் ” என்று கீழே இறங்க போனவளை தடுத்து “இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இரு ரதி” என்றான் அத்விக் .

“கெஸ்ட்ஸ் எல்லாம் வருவாங்க அண்ணா”

” அவங்க வந்தா வரட்டும்.. நீயும் கொஞ்சம் நேரம் இரு. விட்டால் லண்டன் பறந்து விடுவாய்”

” ‘நோ லண்டன் டாக்ஸ் ஹியர்ஆஃப்டர்!’ என்று டாடி ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டார் . இனி இங்கேதான். இந்த வாயாடிக்கு நான் தான் பிரசவமே பார்ப்பேன் போதுமா” என்றாள் பிரகதி.

சில நிமிடங்களில் மேடைக்கு வந்த அதர்வனாவிடம் “அத்து…… இதுதான் எங்க வீட்டு டாக்டர்” என்று பிரகதியை பெருமைப்பட அறிமுகப்படுத்தி வைத்தாள் ஹர்ஷிதா.

“ஓ நீங்கள்தான் அந்த ரதியா!!! என்று நீங்கள் மெடிக்கல் காலேஜில் காலை எடுத்து வைத்தீர்களோ அன்றிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள் … ‘எங்கள் வீட்டில் ஒரு டாக்டர் இருக்கு’ என்னும் புராணத்தை” என்று சலித்தபடி சிரித்தாள் அதர்வனா.

பிரகதி “ஏன்டி வாயாடி இப்படி என் மானத்தை வாங்கி வைத்திருக்கிறாய்” என்று ஹர்ஷியிடம் கேட்க “பின்ன என்ன… அத்து அப்பாவும் டாக்டர் அண்ணனும் டாக்டர். சரி நாம டாக்டர் ஆகலாம் என்று பார்த்தால் அதற்கு நம்ம மூளைக்கு கோஆபரேட் பண்ண வில்லை. விக்கியையும் அத்ரிஷையும் கண்டிப்பாக மாமா இண்டஸ்ட்ரீஸ் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார். அப்போது பார்த்து நீ மெடிக்கல் ஃபீல்ட சூஸ் பண்ணினாயா …… கொஞ்சமே கொஞ்சம் குஷியாகி விட்டது” என்று தன் விளக்கவுரையை எடுத்துரைத்தாள் ஹர்ஷிதா .

அதர்வனாவை அவளது கொஞ்சமே கொஞ்சம் குஷி எப்படி படுத்தி வைத்திருக்கும் என்று நன்கு அறிந்திருந்த பிரகதி சிரித்துவிட்டு “உனக்கும் விக்கி அத்தானுக்கும் என் கங்ராட்ஸ். ஃப்ளைட் டிலே ஆகிவிட்டது. அதனால் தான் காலையில் திருமணத்திற்கு வரமுடியவில்லை” என்று சிறு வருத்தத்துடன் மொழிந்தாள் அதர்வனாவிடம்.

“ரொம்ப தேங்க்ஸ் ரதி” என்றதோடு “விக்கி தான் காலையில் நீங்கள் வராததற்கு கோபமாக இருக்கிறார். இப்போது உங்களை கையோடு கூட்டி வர சொன்னார். நாம் போகலாமா” என்று கேட்டு பிரகதியை மேடையிலிருந்து கீழே அழைத்துச் சென்றாள் அதர்வனா.

சற்று தொலைவில் ஆர்யன் ரகுநாதனிடம் பேசிக்கொண்டிருப்பது பிரகதியின் கண்களில் பட்டது. ‘அப்படி என்றால்!!!!’ யோசித்த பிரகதி அதர்வனாவிடம் “உங்க அண்ணன் பெயர் என்ன?” என்று தனக்குள் எழுந்த சந்தேகத்தினால் வினவினாள் .

“அதோ அங்கு நிற்கிறானே… ஆர்யன்… அவன்தான் என் அண்ணன்” என்று அதர்வனா கூறும்போதே பிரகதியை “ரதி இங்குவா” என்று ரகுநாதன் அழைத்திருந்தார் .

அதை கவனித்த விக்னவ் ” மாமா கூப்பிடுறாங்க… போய் பேசிட்டு இங்க வா ரதி” என்றான் பிரகதியிடம்.

ஆர்யனிடம் செல்ல அவள் கால்கள் தயக்கம் காட்டினாலும் தன்னுள் எழுந்த பெருமூச்சை அடக்கிவிட்டு சுற்றம் உணர்ந்து அவர்களிடம் சென்றாள் பிரகதி.

” ஹாய் பிரகி எப்படி இருக்க ?” சகஜமாய் ஆரியன் வினவியதற்கு “ஃபைன் ஆர்யன்” என்று மட்டும் கூறினாள்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் “அங்கிள் இப்போதுதான் சொன்னார்கள் விக்கி அத்விக் ஹர்ஷி எல்லாம் உங்க ரிலேட்டிவ்ஸ்னு” என்றவன் மேலும் “லண்டன் என்றே ஃபிக்ஸ் ஆகி விட்டாயா பிரகி….” என்றான் அவள் பதிலை வேண்டி.

பிரகதியோ அவன் நின்ற திசைக்கே கண்களை திருப்பாமல் “முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னீங்களே டாடி.. போகலாமா” என்றாள் ரகுநாதனிடம்.

“ரதி !!!!” என்றபடி ரகுநாதன் இழுக்க “டாடி” என்று கண்டன குரலில் மொழிந்தவள் “ஓகே ஆர்யன் பை” என்று அவனை பார்க்க கூட விரும்பாது தன் தந்தையை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

இவளுக்கு என் மீது இருக்கும் கோபம் இன்னும் போகவில்லையா… அப்படி என்ன சொல்லிவிட்டேன்!!!!! அவள் கேட்டுக் கொண்டதற்காக உதவி செய்ய எண்ணி கூறிய ஒரு சாதாரண பொய்… மூன்று வருடகால நட்பிற்கு அந்த பொய்யை புரிந்துகொள்ள தெரியாதா.. ஆதங்கமாய் உணர்ந்த ஆர்யனிற்கு பாராமுகம் காட்டி சென்ற தோழியின் மேல் முதன்முறையாக சிறு கோபம் துளிர்விட்டது.

அன்று இரவு வரவேற்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஹர்ஷிதாவிற்கு அண்மையில் நிகழ்ந்த விபத்து பற்றியும் அதிலுள்ள சிக்கலை பற்றியும் ரூபா அத்விக்கிடம் தனியே அழைத்து பேச முற்பட்டார்.

ஆனால் அச்சமயத்தில் மரகதத்திற்கு உடம்பு முடியாமல் போனதால் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

லோ பிரஷரினால் ஏற்பட்ட மயக்கம் என்றதால் சிகிச்சைக்கு பின் ஒரு மணி நேரத்தில் கண் விழித்திருந்தார் மரகதம்.

அவரை இன்று இரவு இங்கே ஓய்வெடுக்கட்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்ததால் ரூபாவும் பிருந்தாவும் மருத்துவமனையிலே தங்கிவிட தம்பதியர்கள் நால்வரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

காலையிலிருந்து அத்விக்குள் தான் ஏற்படுத்தி வைத்திருந்த ஹார்மோன் குளறுபிடியை அறியாதவள் “ஓ மை காட்… இவ்வளவு பிளவர்ஸா?? படத்துல கூட இந்தளவிற்கு டெக்கரேட் பண்ணியிருக்க மாட்டாங்க!!!!” என்றாள் ஹர்ஷிதா முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த அத்விக்கின் அறையைப் பார்த்து.

” இவ்வளவு பிளவர்ஸ் எதற்கு என்று தெரியாதா ஹர்ஷி பேபி” சரசமாய் உரையாடியவனிடம் பேச்சு ஒரு மார்க்கமாக இருக்கிறதே என்று யோசித்தபடி “அது என்ன புதுசா பேபி ” என்றாள் அத்விக் அழைத்த விதத்தை கருத்தில்கொண்டு.

“புதுசா பேபிஸ்க்கு ட்ரை பண்ணப் போகிறோம்ல அதற்குத்தான் இந்த பிளவர்ஸ்” என்றான் மனைவியின் இரு கேள்விகளுக்கும் பொதுவான பதிலாய்.

“ஆஹா அப்படி ஒரு நினைப்பு வேறு இருக்கா கமிஷனர் சார்!! அப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதி!! அதற்கான நம் டிமாண்ட் எல்லாம் மறந்துவிட்டதா??”

“ஃபரஸ்ட் நம்ம டிமாண்ட் டாஸ்க்கை ஃபுல்ஃபில் பண்றோம்… நெக்ஸ்ட் பேபிஸ் டாஸ்க்கிற்கு ஜம்ப் பண்றோம்” என்றான் அத்விக் உறுதி தொனிக்க.

கண்களில் சவாலுடன் “ஏதாவது மேஜிக் பண்ண போகிறாயா அத்வி?” என்ற ஹர்ஷியிடம் இடதிலிருந்து வலது புறமாக தலையசைத்து இதழ்பிரியா சிரிப்பொன்றை வழங்கினான்.

மன்னவனின் மாயச் சிரிப்பு மங்கையவளை அசைத்து தான் பார்த்ததோ!!!!!

Advertisement