Advertisement

அவள் எதற்காக குதிக்கிறாள் என்றெல்லாம் யோசிக்க நேரம் இன்றி ஆள் கிடைத்தால் போதும் என்று தனபாலின் ஆட்கள் ஹர்ஷிதாவை ஒரு ஆம்னி வேனில் உள்ளே தள்ளி விட்டு கிளம்பிச் சென்றனர்.

கயிற்றைக் கொண்டு அவளது கை கால்களை கட்டி விட்டு ஒரு துணி கொண்டு ஹர்ஷிதாவின் வாயையும் அடைத்தனர்.

‘ டேய் நானே தான்டா வரேன்… எதுக்கு இந்த பில்டப்பு’ நொந்து கொண்டவள் தன் அருகில் அமர்ந்திருந்தவர்கள் அறியாமல் கை கட்டினை அவிழ்க்க முயற்சித்தாள். அப்போது ஒருவன் தனபாலுக்கு தொடர்புகொண்டு அத்விக் பொண்டாட்டியை கடத்தி விட்டதாகவும் எங்கு கொண்டு வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருந்தான்.

கெஸ்ட் ஹவுஸிற்கு முதலில் வரச்சொல்ல அங்கு அவர்கள் சென்று கொண்டிருக்
கும்போதே வேறோரு இடத்திற்கு வருமாறு தனபால் அழைப்பு விடுத்தான்.

பின் அவன் குறிப்பிட்ட இடத்தை ஆம்னி வேன் நெருங்கும் சமயத்திலும் இந்த இடம் வேண்டாம் வேறு இடம் என்று இடத்தை மாற்றிக் கொண்டிருந்தான் தனபால்.

இப்படி ஒரு இரண்டு மணி நேரத்தில் ஆறு இடங்களை மாற்றி அவர்களை சுத்தலில் விடவும் கடுப்பான அடியாட்கள் டீ குடித்துவிட்டு போகலாம் என்று பேசி ஒரு டீ கடையில் வண்டியை ஓரம் கட்டினர்.

ஆம்னி வேனை டீ கடையில் நிறுத்தியவர்கள்
ஹர்ஷிதாவை கவனிக்க ஒருவனை மட்டும் வண்டியில் இருக்கும் படி கூறிவிட்டு மற்ற மூவர் கீழே இறங்கினர்.

இதுதான் தக்க சமயம் என்று எண்ணி முக்கால்வாசி விடுவித்துக்கொண்ட தன் கையின் உதவியால் அருகில் இருந்தவன் பேன்ட் பாக்கெட்டில் வெளிப்பட்ட மொபைலை எளிதாக கைப்பற்றினாள் ஹர்ஷிதா.

அத்விக்கு தான் கொடுக்க நினைத்த தகவலை அவசரமாக அனுப்பி வைத்தாள் .

“அத்வி செக் வித் திஸ் டிராக்கிங் நம்பர் ***** ஹர்ஷி”

அவளது வாட்ச்சில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருந்ததால் அதன் ட்ராக் எண்ணை அனுப்பி கொண்டிருந்தவளை டீ கடையில் நின்ற ஒருவன் கண்டுவிட வேகமாக ஓடிவந்து ஹர்ஷிதாவின் கையில் இருந்த போனை ஆவேசமாக பற்றினான்.

அதை பார்வையிட்டவன் விழிகளில் ஆச்சிரிய ரேகைகள் படர்ந்தது . அவன் ஊமையாகி நிற்க “என்னடா?” என்று மற்றொருவன் அவனை உலுக்கிவிட்டு அந்த போனை கைபற்ற “இன்னாதிது….?” வாய்விட்டே அதிர்ந்தபடி ஹர்ஷிதாவிடம் கேட்டான்.

மற்ற இருவரும் என்னவென்று வினவ அந்த மொபைலை அவர்கள் பார்வையில் பதியும்படி காட்டினான் ஹர்ஷிதாவிடம் வினவியவன். அதில் ஒளித்த கேண்டி க்ரஷ் கேமை பார்வையிட்ட மற்ற இருவருமே வாயை பிளந்தனர்.

“ஏய் உன்னை பிக்னிக் கூட்டிட்டு போயிட்டு இருக்கோம் என்று நினைத்தாயா?” ஒருவன் எகிற நால்வரில் விவரமானவன் “இவ ஏதோ திருட்டுத்தனம் பண்ணியிருக்கா … எதுக்கும் கால் ஹிஸ்டரி மெசேஜ் எல்லாம் செக் பண்ணனும்டா ” என்று கூறி அந்த மொபைலை பிடுங்கி அலசியதில் எதுவும் கிட்டாமல் போக உண்மையிலேயே இதை விளையாடத்தான் இந்த மொபைலை எடுத்தாளா என்று குழம்பினான் .

அப்போது மீண்டும் தனபால் அழைக்கவும் அவர்கள் கவனம் ஹர்ஷிதாவிடமிருந்தும் அவள் விளையாட்டில் இருந்தும் திரும்பியது. அந்த வக்கீல் வீட்டுக்கு வர சொல்கிறார்டா என்று பேசிவிட்டு வண்டியை செலுத்தினர்.

அங்கு சென்றவர்கள் தனபாலின் கட்டளை படி அந்த வீட்டின் பின் பகுதியில் அமைந்திருந்த லானில் ஓரமாய் கட்டப்பட்டிருந்த குடோனில் ஹர்ஷிதாவை அடைத்து வைத்தனர் .

அரை மணி நேரத்தில் தனபால் தனது வக்கீல் விஸ்வநாதனுடன் உள்ளே நுழைய முன்பே தன்னை விடுவித்துக்கொண்ட ஹர்ஷிதா வசதியாக அமர்ந்து கொண்டதோடு “என்ன ரவுடிஸ் வச்சிருக்கீங்க…. ஒரு கயிற்றை கூட ஒழுங்காக கட்ட தெரியவில்லை!! ” என்று எள்ளலுடன் வினவினாள்.

தனபால் அவன் ஆட்களை முறைத்துவிட்டு “அவனுங்களுக்கு பொதுவா பெண்களிடம் சுமூகமாக நடந்து தான் பழக்கம். நீ வேண்டுமானால் பார்க்கிறாயா அவர்களின் அணுகுமுறையை” என்றார் கனல் கக்கும் பார்வையோடு .

தனபாலின் விளக்கத்தில் உடல் கூசியபோதும் அஞ்சாது “எனக்கு அதற்கு நேரமும் இல்லை விருப்பமும் இல்லை. நீ இவ்வளவு தூரம் சொல்வதானால் உன் மனைவியை வேண்டுமானால் கூப்பிடு அவர்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி கேட்டு விட்டு கிளம்புகிறேன்” என்றாள் முகம் திமிற.

எவ்வளவு திமிர்!!!!! அருகில் நின்ற வக்கீல் விஸ்வநாதனே ஹர்ஷிதாவின் தாக்குதலில் ஒரு நிமிடம் ஆடி போனார்.

” ஏய் என்னடி சொன்ன..” ஆவேசமாய் அவளது கூந்தலை பிடிக்க போன தனபாலின் கையை அலட்சியமாக தட்டி விட்டவள் “கடத்தல் குற்றத்துக்கு ஐ.பி.சி செக்ஸன் 364. இதில் போலீஸ்காரனின் மனைவி மேல் கை பட்டது என்றால் செக்ஸன் 354ம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதில் உனக்கு ஒரு சிக்கல் என்னவென்றால் இட்ஸ் எ நான் பைலபிள் ஆக்ட் … இதோ நிற்கிறாரே வக்கீல் விஸ்வநாதன் சார் அவரால் கூட உன்னை வெளியே எடுக்க முடியாது” என்றாள் உறுதியாக .

தனபால் அவளது எதிர்நோக்கும் தன்மையை எண்ணி அதிர்ச்சியடைய விஸ்வநாதன் ஆச்சரியமடைந்தார்.

ஹர்ஷிதா சொன்ன இரண்டு சட்ட பிரிவுகளும் உண்மையே. மேலும் தனது பெயரை குறிப்பிட்டு பேசவும் ” நீ யாருமா?” என்றார் வக்கீல் விஸ்வநாதன்.

இந்த விருந்தினரின் உபசரிப்பை கண்டு எரிச்சலடைந்த தனபால் “என்னடா…?” என்று கத்தினார் .

“இந்த பொண்ணுகிட்ட வேறு விதமாய் தான் டீல் பண்ணனும். நான் பார்த்து கொள்கிறேன்” என்று நண்பனை அமர்த்திய விஸ்வநாதன் “சொல்லுமா என்னை உனக்கு முன்பே தெரியுமா…?” என்றார் .

” என்ன சார் இப்படி கேட்டு விட்டீர்கள்…. இந்தியாவின் அதிமுக்கிய டாப்மோஸ்ட் ஐந்து வழக்கறிஞர்களில் ஒருவரான உங்களை தெரியாமல் இருந்தால்தான் அதிசயம்” என்று அவர் தலையில் ஒரு கூடை ஐஸ் கட்டியை வைத்து விட்டு “சென்னையில் வேணுகோபால் சார்கிட்ட ஜூனியரா வொர்க் பண்றேன் சார்” என்றாள் ஹர்ஷிதா.

“வேணுகோபால் என் பால்ய நண்பன். 20 வருடங்களுக்கு முன் அவனிடம் பேசாமல் கழித்த நாட்களே கிடையாது . அதெல்லாம் ஒரு காலம். இப்போது எத்தனை வருடங்களுக்கு முன் அவனிடம் பேசினேன் என்பதை நினைவில் இல்லை” என்று குறைபட்டவரிடம் “அதற்கு ஏன் சார் இவ்ளோ ஃபீல் பண்ணிட்டு.. இப்போது பேசினால் போகுது.. உங்க போன் கொடுங்கள்” என்று வழக்கறிஞரின் கவனத்தை முழுக்க தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

“இந்த நேரத்தில் ஏன்மா…?”…… விஸ்வநாதன்.

“ஏதோ ஒரு கேஸில் அவர் பிஸியாக முழித்து தான் இருப்பார் சார்” என்றதுமில்லாமல் விஸ்வநாதனின் கையிலிருந்த மொபைலை பிடுங்கி வேணுகோபாலை உடனே தொடர்பு கொண்டு “சார் நான் ஹர்ஷி…உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று விட்டு போனை விஸ்வநாதனிடம் கொடுத்துவிட்டாள்.

நண்பர்கள் இருவரும் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருக்க தனபாலின் நிலைதான் ஹர்ஷிதாவிற்கு சிரிப்பு மூட்டியது.

இத்தனை நாட்கள் விஸ்வநாதனின் ஆலோசனைபடி இடத்தை மாற்றி கொண்டிருந்ததால் தான் அத்விக் தனபாலை பிடிக்க முடியாது திணறி கொண்டிருப்பதும்.
ஆனால் இப்போது ஹர்ஷிதாவிடம் அந்த வக்கீலின் அணுகுமுறையை கண்டு ஆவேசமடைந்தாலும் அமைதி காத்தான் தனபால்.

” உங்க நண்பர் அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதால் நாம் இருவரும் ஒரு சின்ன டீல் போட்டுக் கொள்ளலாமா” என்று சற்று தொலைவில் நின்ற தனபாலிடம் சென்று வெறி ஏற்றினாள் ஹர்ஷிதா.

அவனது முறைப்பை பொருட்படுத்தாது “அத்விக் உனக்கு ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறான் . ஆனால் என் கையில் உன் கேஸை எடுத்தால் தூக்கு தண்டனை உறுதி என்கிறேன்.. இதில் உன் கருத்து என்ன ?” என்றாள் ஹர்ஷிதா தன் ஜெகன் மாமாவை காயப்படுத்தி விட்டதனால் ஏற்பட்ட ஆக்ரோஷத்தில் தீவிரத்துடன்.

” இதற்கு மேலும் உன்னை நான் பேச விட்டேன் என்றால் இத்தனை நாட்கள் நான் வளர்ந்தமைக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்று கூறிவிட்டு அவளை அடிக்க ஓங்கிய தனபாலின் கரம் திடீரென கதவை உடைத்து விட்டு வந்தவனால் எழும்பு முறிவுடன் தலைகீழாக தொங்கவட பெற்றிருந்தது.

அத்விக் எப்படி இங்கு வந்தான் என்று தனபால் மலைத்து நிற்கையிலே அவனை தள்ளிவிட்டு அவனுக்கு விழுந்த அடியை விட பன் மடங்கு வேகமான ஒன்றை ஹர்ஷிதாவின் கன்னத்தில் வழங்கியிருந்தான் அத்விக்.
அத்விக்கின் ஐ விரல்களின் தடமும் ஹர்ஷிதாவின் செம்மை பரவிய கன்னத்தில் பதிந்திருக்க அழையா விருந்தாளியாக பொங்கி பெருகிய விழிநீர் அக்கரத்தின் சுவடில் பட்டு தெறித்தது.

” எந்த தைரியத்தில்டி இந்த காரியத்தை செய்தாய்?” கணவனின் கேள்விக்கு “அதுதான் தூக்கிட்டு போக நீ இருக்கியே எப்பவும் எப்பெப்பவும்” என்றவளின் வார்த்தைகளில் ஆக்ரோஷம் நிரம்பி வழிந்தது.

சிறுவயதில் ஹர்ஷிதா கிணற்றில் குதித்த போது உதிர்த்த அதே வார்த்தைகள். அத்விக்கின் மனதில் இத்தனை நாள் அதற்கான முக்கியத்துவத்தை அறிந்திருந்தாலும் இன்றுதான் அவளது மனதில் அதற்கான மதிப்பும் விளங்கியது .

அவன் மேல் அவள் கொண்ட நம்பிக்கையை தெள்ள தெளிவாக உணர்த்தி விட்டு எரிமலையாய் வெடிக்க ஆயத்தமானாள் அவன் ராட்சஸி.

தன்னை இதுவரை யாரும் இப்படி அடித்ததில்லை. அம்மா அடிப்பார் தான் கடுமையாக இன்றி சின்ன சின்ன அடிகள் . அதுவும் அத்விக்கின் தலையீட்டின் பின் நின்றிருந்தது.

இப்படி செய்வான் என்று கனவிலும் நினைத்திராத ஹர்ஷிதா பொங்கியெழுமுன் அவளை இழுத்து அணைத்தான் அத்விக்.

அத்விக்கின் கோபத்தை விட பாசம் பன்மடங்கு அவளை அச்சுறுத்தியது. முரட்டுத்தனமான அணைப்பில் சிக்குண்டவளின் எலும்புகள் அனைத்தும் நொறுங்கி விடுவேன் என்று எச்சரிக்கை விடுக்க தன் பலம் அனைத்தையும் திரட்டி அவனைப் பிடித்துத் தள்ளினாள்.

பலனின்றி போக ‘என்னை விடு’ என்று அவள் கத்தியதும் சுயநினைவிற்கு திரும்பியவனின் பிடி சற்று தளரவும் தன்னை முழுதாக விடுவித்துக்கொண்ட ஹர்ஷிதா கணவனை பார்த்து முறைத்தாள்.

சுற்றம் மறந்து மனைவியின் கன்னத்தில் பதிந்திருந்த தன் விரல்களை கண்டவனின் மனம் வலிக்க மீண்டும் அவளை நெருங்கினான் அத்விக்.

தன்னை நோக்கி எழுந்த கையை தட்டி விட்டு “ஆக்ஷன் ஸீன்கு அப்புறம் ரொமான்ஸ் ஸீன்னா” என்று தன்னை அடித்தவனிடம் எகிறினாள்.

அங்கிருந்த நால்வரையும் எளிதாக விரட்டி விட்ட டைகர் தனபாலின் மேலேறி நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு மூச்சு வாங்கியபடி அமர்ந்திருந்தான்.

“போலீஸும் வக்கீலும் நாயை விட்டு கடிக்க விட்டுவிட்டு கொஞ்சி கொண்டிருக்கிறீர்களேடா.. என்னை முதலில் ரிலீஸ் பண்ணிட்டு எதை வேண்டுமானாலும் செய்யுங்க” என்று தனபால் கெஞ்ச “நீ லாயரா ” என்றான் அத்விக் மனைவியிடம் கண்கள் மின்ன.

சொல்ல முடியாது என்ற தோரணையில் அவள் திருப்பிக் கொண்டு நிற்க அவளை தன் புறம் திருப்பியவன் “அவன் சொல்றது நிஜமா ?” என்றான் அத்விக்.

“தொடாத வலிக்குது” என்றவளிடம் ” சரி தொடல நீ சொல்லு” என்றான் கைகளை கட்டிகொண்டு.

” தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று எதிர்க் கேள்வி கேட்டவளை பார்த்து கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தான் அத்விக்.

பித்து பிடித்து விட்டதா என்று அத்விக்கின் மீது ஆராய்ச்சி பார்வையை ஹர்ஷிதா செலுத்தும் போது “அப்ப நிஜமாவே நீ ஒரு லாயரா” என்றும் மேலும் சிரித்தான் .

“அதில் உனக்கு என்ன அவ்வளவு சிரிப்பு?” என்று முறைத்தவளிடம் “உன் போனில் அன்று கேலரியை பார்த்து கொண்டு இருந்தேனா…… அப்போது லாயர் வேஷம் போட்டு…….” பேசிக் கொண்டு போனவனை அவளது முறைப்பு தடை செய்ய “சரி சரி வேஷம் இல்லை…. உன் யூனிபார்மில் ஒரு போட்டோவை பார்த்தேனா…. ஏதோ ஒரு டிராமாவிற்காக இந்த டிரஸ் போட்டிருக்கிறாய் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் நீ பேசும்போதெல்லாம் செக்ஸனை இழுப்பாயா… அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டாய் போல என்று நினைத்து கொண்டேன்” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு நகைத்துக் கொண்டிருந்தவனின் முதுகில் நான்கடிகளை வழங்கினாள் போலீஸ் காரனின் வக்கீல் மனைவி.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த காவல்துறையினரிடம் தனபாலை ஒப்படைத்துவிட்டு “எப்போது இருந்தாலும் உன்னை பிடித்திருப்போம். நீ ஒளிந்து இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதற்கு சற்று தாமதமாகியது. இன்று ஹர்ஷி அவளாக உன்னிடம் மாட்டிக்கொண்டதால் சிக்கி கொண்டாய். நீ செய்த குற்றங்களின் பலன் யாவும் உன்னை வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது தயாராக இரு” என்று கூறிவிட்டு அதற்குண்டான பணிகளை கவனிக்க சென்றான் அத்விக்.

அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தனபாலுக்கு தகுந்த சாட்சிகளின் அடிப்படையில் ஜாமீனுக்கு வழியின்றி 7 வருட கடுங்காவல் சிறை தண்டனை கிடைத்தது.

அத்விக் தன் தம்பியிடம் ஹர்ஷிதாவை கண்டுபிடித்ததும் தகவல் தெரிவித்து இருந்தான். தனக்கு வேலை இருப்பதால் வீட்டில் இறக்கி விட்டு செல்கிறேன் என்பதை மறுத்ததோடின்றி அடுத்த நாள் தீர்ப்பு வழங்கும் வரையில் அத்விக்குடனே சுற்றிக் கொண்டிருந்தாள் ஹர்ஷிதா.

அதிகாலையில் மும்பை வர வேண்டிய ரயில் இரு மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்ரிஷ் அவன் பெற்றோரிடம் தம்பதியினர் குறித்த கேள்விக்கு வீட்டில் இருப்பதாக தெரிவித்து விட்டு அங்கு சுற்றி இங்கு சுற்றி மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த பின்னும் அத்விக்கும் ஹர்ஷிதாவும் வீடு திரும்பி இருக்கவில்லை .

Advertisement