Advertisement

பெரிய இடத்து சம்மந்தம் மீண்டுவந்த மகிழ்ச்சியில் தன் பெண்ணிற்கு எடுத்துக்கூறும் விதத்தில் சொல்லிப் பார்த்தார் வசந்தி. ரிஷி பற்றி கூறும் போது தன் மனம் ராகுலின் புறம் சாய்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட மிருதுளா சிறு காலம் அவகாசம் கேட்டு மும்பை பணிக்கு பயணித்தாள்.

அன்று தன்னை தேடி வந்த மிருதுளாவை கண்டு அதிர்ந்தாலும் அப்போது வேறு ஒரு முக்கியமான கேஸில் ஈடுபட்டிருந்தமையால் உடனே அவளிடம் சென்று ராகுல் பேசவில்லை. “எவ்வளவு நேரமானாலும் சரி காத்திருக்கிறேன்” என்று அமர்ந்திருந்தவளின் அருகில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து உபயம் ஆனான்.

” வேறு எங்காவது சென்று பேசலாமா ” என்று கேட்டதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பீச்சிற்கு அழைத்துச் சென்றவன் வேடிக்கை பார்க்கலானான் .

எப்படி ஆரம்பிப்பது என்று சற்று நேரம் திணறியவள் கணவனின் ஈடுபாடின்மையை கண்டு பேச தயங்கினாள். “எனக்கு நேரமாகிறது உனக்கு வேண்டியதை சொன்னாயானால் கிளம்பலாம்” ராகுல் துரிதப்படுத்தவும் “அது வந்து…. அன்று அம்மா பேசியதற்கு மன்னித்து விடுங்கள்” ஒருவாறு பேசத் தொடங்கினாள் மிருதுளா.

” சரி வேற என்ன…?”

“அன்று நீங்கள் சொன்னபடி ….” ஆரம்பித்தவளிடம் “நம் விவாகரத்து பற்றி கேட்க வந்தாயா?” என்றான் ராகுல் தூரத்தில் அமர்ந்திருந்த அத்விக்கை பார்த்தபடி.

போயும் போயும் இந்த பீச்சிற்கு அழைத்து வந்தோமே என்று மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டான் ராகுல். கூடவே “ஏன்டா உன் பீச் யோகாவிற்கு நேரம் காலமே இல்லையாடா” என்று அத்விக்கை மனதுள் வையவும் தவரவில்லை.

அத்விக் கண்ணில் மிருதுளா பட்டால் அனைத்தையும் கூறியாக வேண்டும் என்று அவசரமாக அவளை அப்புறப்படுத்த எண்ணியவன் “நாளையே அப்ளை செய்கிறேன். மூன்று மாதத்தில் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் அடிப்படையில் சீக்கிரமாக கிடைத்துவிடும்” என்றான் .

” எனக்கு எதுவும் கிடைக்க வேண்டாம்”

” பின்னே?”

” நீங்கள் கூப்பிட்டதும் வராதது தவறுதான். ஆனால் அன்றைய சூழ்நிலையில் யோசிக்கக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. அதிலும் அம்மாவின் வார்த்தைகள் வேறு… ஆனால் நீங்கள் சென்றபின் உங்கள் வார்த்தைகள் ஒன்றே என்னுள் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ரிஷி இப்போது மீண்டும் வந்து திருமணம் புரிய கேட்கிறான். அம்மாவிடம் ஏதோ கூறி சமாளித்து விட்டு வந்திருக்கிறேன்” தன்னை அழுத்திய அனைத்து பாரத்தையும் அவனுக்கு உணர்த்தி விடும் வேகத்தில் தெரிவித்தாள்.

” உன் அம்மா விருப்பப்படி அந்த ரிஷியை மணந்து கொள்ள நினைத்தால் நான் தடையாக இருக்க மாட்டேன்… உனக்கு அவனை பிடிக்கவில்லை என்றாலும் சட்டப்படி மூவ் பண்ணலாம்…. இப்போது நான் என்ன செய்யணும்”

நான் சொல்லவருவது இவனுக்கு புரியவில்லையா அல்லது பிடிக்கவில்லையா…. “நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்” என்றாள் மிருதுளா. கூடவே

“கணவன் என்ற முறையில் சொல்ல வந்தேன் பாரு” என்று அவள் முனகியது அவன் காதுகளுக்கு எட்ட “ஓ கணவன் என்று இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறதா” என்றான் ராகுல் காட்டமாகவே.

அன்றைய நிகழ்விற்கு மன்னிப்பும் கேட்டாயிற்று இன்றைய மனநிலையையும் விளக்கிக் கூறியாயிற்று… வேறு என்னதான் வேண்டுமாம்…

” அது எப்போதும் என் நினைவில் இருக்கும் நீங்கள் தான் விவாகரத்து பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால் மறந்துவிட்டீர்கள் போல… உங்களுக்கு என்று நினைவுக்கு வருகிறதோ அன்று வந்து பேசுங்கள். அதுவரை எந்த விதத்திலும் உங்களை நான் தொந்தரவு செய்யமாட்டேன்” என்று திரும்பி நடந்தவளை தடுக்க தோன்றாது நின்றிருந்தான் ராகுல்.

அதன் பின் தலைமை அலுவலகத்தில் பிரஸ் பேட்டியின் போது தான் ராகுல் மிருதுளாவை சந்திக்க நேர்ந்தது. அவள் அத்விக்கோடு பேசும் போது அதுவும் தன்னை அப்புறப்படுத்திவிட்டு பேசும் போது ராகுலால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் மீதான உரிமையை நிலைநாட்ட விரும்பும் போதெல்லாம் அவளுடைய விலகல் அவனின் மனதை படம் பிடித்து காட்டியது.

மிருதுளாவிடம் அதனை வெளிக்காட்ட எண்ணி தான் சென்னையில் கபாலீஸ்வரர் கோவிலில் அடுத்த நாள் ராகுல் மாலுக்கு வர சொன்னதும்.

“தாங்ஸ் ஃபார் கமிங் பேபிமா” என்று மனைவியிடம் பேச்சை ஆரம்பிக்கும்போதே ஹர்ஷிதாவிடம் மாட்டிக்கொண்டான் ராகுல்.

அத்ரிஷிடம் சொல்லிவிட்டு பெயின்ட் பிரஷ்களை வாங்கி கொண்டிருந்தவளின் விழிகளுக்கு கடைக்கு வெளியே ராகுலும் மிருதுளாவும் நிற்பது தென்பட அவர்களிடம் விரைந்தாள் ஹர்ஷிதா.

அத்ரிஷின் மூலம் அவர்கள் திருமணம் பற்றி நன்கு அறிந்திருந்தவள் சி.டியின் போனில் திருமணத்தன்று எடுத்த புகைப்படங்களை பார்த்ததன் மூலம் ராகுலையும் கண்டுகொண்டாள் .

அன்று ஹர்ஷிதா ராகுலை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி “அத்விக்கு உங்கள் திருமணம் பற்றி தெரியாதா இல்லை அப்படி தெரிந்தும் மிருதுளாவிடம் காதலியாக நடிக்க கேட்டானா?” என்பதுதான்.

தங்கள் உறவு குறித்து எதுவும் அத்விக்கிற்கு தெரியாது என்று உரைத்த ராகுல் “ஆனால் பாவம் எப்படிப்பட்ட பொண்ணுகிட்ட நடிக்க வேண்டுமென்பதை எங்களிடம் சொல்ல மறந்துட்டான் போல இல்லை இல்லை அவனே மறந்துட்டான் போல” என்று ஹர்ஷிதாவிடம் கூறி சிரித்தான் ராகுல்.

” என்னது என்னைப்பற்றி கூட உங்களிடம் அத்வி சொன்னது இல்லையா ?” நம்பாமல் கேட்டவளிடம் “அவனுக்கு ஒரே ஒரு அம்மா இருக்கிறார்கள் என்பதை தவிர்த்து எனக்கு எதுவும் தெரியாது” என்றான் ராகுல்.

” அந்த சர்வோட்டம் விருது கொடுத்ததற்கு பதில் இவ்வுலகின் சிறந்த நண்பர்களுக்கான விருதை உங்கள் இருவருக்கும் வழங்கியிருக்கலாம்” என்று சீரியஸாக சொன்னவள் மிருதுளாவிடமும் சேர்த்து “மை பெஸ்ட் விஷேஸ் ஃபார் யுவர் வெடிங் … அன்றைய கலாட்டா பற்றியும் அத்ரிஷ் சொன்னான். அதெல்லாம் மிகச் சாதாரணம்… இன்னும் பெரிய பெரிய சண்டையை தினம் தினம் போட்டுக்கொண்டு பல்லாண்டு காலம் சேர்ந்து வாழ என் ஆசிகள்” என்றாள் ஹர்ஷிதா சிரித்த முகமாய்.

பின் “ஒரு பெரிய மனிஷி வாழ்த்தினால் காலில் எல்லாம் விழ மாட்டீர்களா ?” என்று கீழே விழும்படி சைகையும் செய்யவும் ராகுல் சிரித்துக் கொண்டே “யம்மாடி விழ வைத்துவிடுவாய் போல…” என்றான்.

அத்விக் ஹர்ஷி சீரிஸை பற்றி விளக்கி கூறியதிலிருந்தே மிருதுளாவிற்கு ஹர்ஷியை பிடித்து போனது.

இப்போது ஹர்ஷிதாவை கட்டி அணைத்த மிருதுளா “நல்லா இருப்போம்… நல்லா இருப்போம்… இந்த பெரிய மனுஷி வாழ்த்தோடு எல்லாரும் நல்லா இருப்போம்” என்று அவளை வழியனுப்பி வைத்தாள்.

சரி இனியாவது எந்த தடங்கலுமின்றி பேசலாம் என்று படிக்கட்டுகளின் பக்கம் மிருதுளாவை இழுத்துச் சென்றால் அப்போது தான் அத்விக் வந்து ராகுலை பார்த்து வைத்தான்.

அத்விக் விடைபெற்று சென்ற பிறகும் ராகுலிற்கு மிருதுளாவிடம் பேச முடியாதபடி ரிஷியை சந்திக்க நேர்ந்தது.

அவன் ஏதாவது அம்மாவிடம் சொல்லி விடுவதற்குள் வீட்டிற்குள் சென்று விட்டால் நிலைமையை மோசமாக்கும் முன் காப்பாற்றலாம் என்று எண்ணி வீட்டிற்கு விரைந்த மிருதுளாவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவசர அவசரமாக அவளுக்கும் ரிஷிக்கும் மீண்டும் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தார் வசந்தி. ஜெயராமன் மனைவியிடம் போராடித் தோற்றிருக்க வீட்டிற்குள் சிறைவாசம் மேற்கொண்ட மிருதுளா அவள் தோழி உதவியுடன் இங்கு வந்திருப்பது வரை கூறி முடித்திருந்தான் ராகுல்.

விடிந்தால் கல்யாணம் என்னும் பட்சத்தில் பெண்ணை காணாது இங்கே வரவும் கூடும் என்று நண்பன் கணிக்கவும் “அவர்கள் என்ன இங்கு வருவதற்கு…. நான் அங்கு செல்கிறேன் என் மனைவியுடன்” என்ற ராகுலை “சபாஷ் மச்சி” என்று வாழ்த்தியிருந்தான் அத்விக்.

இவர்கள் பிளாஷ்பேக் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் ஒரு அறையில் அத்ரிஷும் மிருதுளாவும் பேசிக் கொண்டிருந்தாலும் அத்ரிஷ் கொடுத்த பாலை டைகருக்கு வழங்கி விட்டு இது தான் தக்க சமயம் என்று அடுப்படிக்குள் நுழைந்து உருட்ட தொடங்கினாள் ஹர்ஷிதா.

“இன்னும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் அரிசி மூட்டை?” என்று அத்விக் மனைவியை கேட்டுக்கொண்டு வரும்போது அங்கு அவளை காணவில்லை.

அவளது மொபைல் மட்டும் அடுப்படியிலேயே இருக்க வீடு முழுக்க ஹர்ஷிதாவை தேடலானான் அத்விக்.

மற்றவர்களும் விஷயம் அறிந்து பரபரப்புடன் அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர் .

ஹர்ஷிதா வெளியே சென்றிருந்தால் இந்த ஹாலை தாண்டிதான் சென்றிருக்க முடியும். கவனம் முழுக்க ராகுலிடம் நிலைத்திருந்தாலும் எப்போதும் கவனத்துடன் அலைபாயும் கண்களுக்கு அவள் தன்னை கடந்திருந்தால் தப்பியிருக்க வழியில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வாசல் கதவு வழியாக அவள் வெளியேறி இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணியபடி மீண்டும் அடுப்படிக்குள் அவசரமாக ஓடினான் அத்விக்.

அவன் கணிப்புபடி ஹர்ஷிதா கடத்தப்பட்டிருக்கிறாள்… பரணியில் மேலே வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் வாயிலாக….

இப்போதைய தனபாலின் ஒரே குறிக்கோளை நன்கு அறிந்திருந்தவன் ஹர்ஷிதாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பக்காவாக செய்திருந்தான்.

இப்போது அவள் அத்விக்கிற்கு தெரியாமல் மும்பை வந்திருப்பதாக நினைத்தது கூட ஏற்கனவே அவன் ஆட்கள் மூலமாக தெரிந்த விசயம் தான்.

அப்படியிருக்க இப்போது தன் அருகில் இருந்தவளை தொலைத்துக் கொண்டு நிற்கிறேனே என்று தன்னுள் பொங்கிய
ஆற்றாமையை புறம் தள்ளினான் அத்விக்.

“தனபால் வேலையாகத்தான் இருக்கும்… நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் கிளம்புங்கள்” என்றான் ராகுலிடம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவனை விட்டு செல்ல மனமில்லாது “ஹர்ஷியை கண்டுபிடித்தவுடன் புறப்படுகிறேன் ” என்று நின்றான் ராகுல்.

“என் பொண்டாட்டி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய் உன் பொண்டாட்டி விஷயத்தை கவனி” என்றவனின் சொற்களிலிருந்த அழுத்தம் ராகுலை மேற்கொண்டு பேச விடாது தடுத்தது.

உள்ளுக்குள் கலங்கினாலும் “நீங்க போங்க… நாங்க பார்த்துக்கொள்கிறோம்” என்று அத்ரிஷ் ராகுலையும் மிருதுளாவையும் வழி அனுப்பிவிட்டு “ஏதாவது க்ளூ இருக்கிறதா அண்ணா” என்று தமையனிடம் வினவும் போதே அவன் கண்கள் கலங்கின.

“முதலில் அழுகையை நிப்பாட்டு” என்று அத்விக் அதட்டியதும் “நாளைக்கு காலை அப்பா இங்கே வரும்போது ஹர்ஷி இல்லை என்றால் தாங்க மாட்டாரே” என்று ஒரு குண்டை தூக்கி போட்டான் அத்ரிஷ்.

“என்னது அப்பா வருகிறாரா ?” என்றவனிடம் “ஆமாம் நானும் ஹர்ஷியும் நேற்றே புறப்பட்டோம் அப்போது அப்பாவும் “என் மகனை அவன் சாதித்த இடத்தில் பெருமையுடன் ஒரு அப்பாவாக சுற்றிவர ஆசையாக இருக்கிறது” என்று அடம்பிடித்தார். டாக்டரிடம் கேட்டுவிட்டு ரயிலில் வந்து கொண்டிருக்கிறார். அனேகமாக விடியற்காலையில் இங்கு வந்து விடுவார். டைகரும் உன்னை பார்க்க அடம்பிடித்து வாசலை மறைத்துக் கொண்டு நின்றதால் ‘இந்திரா ஸ்பெஷல் ஏர்லைன்ஸில்’ வந்தோம்” என்று விளக்கம் அளித்தான் அனுஜன்.

அப்பா வருவதற்குள் தன் மனைவியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் அத்விக்கிற்கு நன்கு புரிந்தது.

” நீ இங்கே இரு… அதிகாலையில் அப்பாவை ரயில் நிலையத்திற்கு சென்று கூட்டி வந்து விடு” என்று தம்பியிடம் உத்தரவிட்டு “கம் டைகர் லெட்ஸ் கோ” என்று புயலின் வேகத்தை காட்டிலும் ஆக்ரோஷமாய் வெளியேறினான் அத்விக்.

தனபால் நகை பட்டறைக்கு சென்றவன் அங்கு முதலில் தென்பட்டவனின் கன்னத்தை பிளந்துவிட்டு “ஹர்ஷியை எங்கடா வச்சிருக்கீங்க?” என்று உறுமினான்.

அறை வாங்கியவனிடம் உரிய பதில் இல்லாது போகவும் அத்விக்கினுள் குடிகொண்டிருந்த திமிர் மாறி ஒருவித பதற்றமும் பயமும் அவனை சூழ்ந்து கொண்டது. அதனை வெளிகாட்டாது தன்னவளை தேடும் வேட்டையில் கவனத்தை திருப்பினான்.

“டைகர் ஸர்ச்” என்று தனக்கு வந்த கட்டளையின்படி அந்த பட்டரை முழுக்க ஹர்ஷியை தேடி அவளை காணாது அத்விக்கிடம் வந்து தலையை தொங்க போட்டுக்கொண்டு நின்றான் டைகர்.

தன் அடுத்த இலக்காக தனபாலின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றவனுக்கு அவள் தென்படாது போக அங்கும் அவளை குறித்த எந்தவித தகவலும் கிட்டாது திரும்பினான்.

விடாமுயற்சியாக அடுத்த இரு மணிநேரம் தேடுதலிலும் தோல்வியே பரிசாக கிடைக்க அத்விக்கின் விழிகளில் நின்ற கண்ணீர் விழவா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்கும் பொழுது அவன் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

அதைப்படித்தவனின் கண்கள் முன்பிருந்ததைவிட பன்மடங்கு ஆக்ரோஷமாய் மாறி இருந்தது.

ஆனால் முன்புபோல தனபாலின்மேல் அல்லாது தன் மனைவியின் மேல் இம்முறை அத்விக்கின் ஒட்டுமொத்த ரௌத்திரமும் திரும்பியிருந்தது .

ஹர்ஷிதா அடுப்படியில் நின்று கொண்டு என்ன சாப்பிட இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஜன்னலின் வழியாக 4 பேர் தன்னை நோட்டமிட்டு கொண்டிருப்பது தெரிந்தது . மேலும் தெளிவு படுத்திக்கொள்ள அவர்களை உற்று கவனித்ததில் “இன்றும் அவளை பிடிக்காது போனால் தனபால் நமக்கு சாவு மணி அடிப்பது உறுதி” என்றவர்களது பேச்சு தெள்ளத் தெளிவாக அவளுக்கு கேட்டது .

அத்விக்கிற்கு தெரிந்தால் தன்னை அவர்களுடன் செல்ல அனுமதிக்க மாட்டான் என்று எண்ணியவள் காத்திருப்போருக்கு தீனியாக பரணியின் மேலிருந்த அகலமான கண்ணாடி தடுப்புகளை எடுத்து கவனமாக ஓசையின்றி கழற்றி வைத்து வெளியே எகிரி குதித்தாள்.

அவள் எதற்காக குதிக்கிறாள் என்றெல்லாம் யோசிக்க நேரம் இன்றி ஆள் கிடைத்தால் போதும் என்று தனபாலின் ஆட்கள் ஹர்ஷிதாவை ஒரு ஆம்னி வேனில் உள்ளே தள்ளி விட்டு கிளம்பிச் சென்றனர்.

Advertisement