Advertisement

” திஸ் இஸ் ஸோ அன் ஃபேர் சி.டி …. இந்தா இதையும் நீயே குடித்துவிடு” என்று மல்லுகட்டியவளிடம் “அப்பத்தா தான் வீட்டிற்கு சென்றவுடன் உனக்கு ஒரு டம்ளர் பால் கொடுக்கச் சொன்னது” என்றான் அத்ரிஷ் சமாளிப்பாய்.

” அப்படி பார்த்தால் மித்துவும் இன்றுதானே அவர்கள் புருஷன் வீட்டிற்கு முதன்முதலில் வந்திருப்பார்கள்… அவர்களுக்கு மட்டும் ஏன் காபி கொடுத்தாய்..” என்று எதிர் கேள்வியை கேட்டாள்.

” அவர்கள் திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு மேலாக கணவன் வீட்டிற்கு சென்றிருக்கவில்லை என்பது எனக்கு எப்படி தெரியும் டார்லிங்” என்றும் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றவன் பின்னால் “ஹே சாரி அத்ரி…. வேண்டுமென்றே உன் அழைப்புகளை நான் ஏற்காமல் இல்லை… எந்த ஒரு திடமான முடிவையும் எடுக்கக் கூடிய சூழலில் அன்று நான் இல்லை. என் வாழ்க்கையை பற்றிய குழப்பம் நட்பு வட்டாரத்தில் இருந்து என்னை தள்ளி வைத்தது… புரிந்துகொள்” என்றவாறு தன் தரப்பு நியாயங்களை தன் கல்லூரி நண்பனிடம் விளக்கிக்கூற சென்றாள் மிருதுளா.

அவள் தன் பார்வை வட்டத்திலிருந்து மறைந்த பிறகு தங்கள் திருமணம் குறித்த தகவலை அத்விக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து திரும்பினான் ராகுல்.

ஆனால் அத்விக்கோ ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாக பட்டது.

பிருந்தா அத்தையைவிட ஹர்ஷிக்கு அத்ரிஷே அதிகமுறை காபி தயாரித்துக் கொடுத்து இருப்பான். அவளை காபி பிரியை என்று சொல்வதைவிட காபி வெறியை என்று சொன்னால்தான் பொருந்தும்.

அத்தையும் சரி அம்மாவும் சரி அவளுடைய காபிக்கு என்றுமே தடைவிதித்தது இல்லை. ஒரு முறை ஏதோ ஒரு எக்ஸாம் சமயம் அத்தையும் அம்மாவும் வீட்டில் இல்லாத காரணத்தினால் காபி கொடுக்காவிட்டால் இவள் படிக்க மாட்டாள் என்பதை நன்கு உணர்ந்து அத்ரிஷ் கலந்து கொண்டு வந்தான்.

அன்றிலிருந்து ‘தி பெஸ்ட் காபி மேக்கர்’ என்ற பட்டத்தையும் அவனுக்கு அளித்ததோடு அவளது தினசரி காபியும் அத்ரிஷின் கையில் தான்.

அப்படியிருக்க இன்றைய நடப்பு சற்று வித்யாசமாக பட்டதோடு “இந்தா இதை வேண்டுமானால் எடுத்துக்கொள்” என்று அத்விக் தன் கையில் இருந்த காபியை ஹர்ஷியிடம் நீட்டிய போது ” வேண்டாம்… சி.டி க்கு தெரிந்தால் திட்டுவான்” என்ற அவளது மறுப்பு மனதை நெருடவும் செய்தது.

ஒரு சாதாரண காபி என்று ஒதுக்கிவிட மனம் வராமல் இதைப்பற்றி தன் தம்பியிடம் கேட்கவேண்டும் என்று அத்விக் எண்ணும்போது தன்னை உலுக்கிக் கொண்டிருந்தான் ராகுல்.

“திருமணமாகியும் இந்த பீச் யோகா உன்னைவிட்டுப் போக வில்லையா…. எழுந்திருடா” என்று கத்திக் கொண்டிருந்தவனின் மீதிருந்த கோபம் குறையாமல் எழுந்து சென்ற அத்விக்கை தடுத்து தன் தரப்பு விளக்கத்தை தொகுக்கலானான் ராகுல்.

உறவினர் வீட்டு திருமணம் என்ற முறையில் வந்த அழைப்பினை ஏற்று புதுக்கோட்டைக்கு ராகுல் அவன் அம்மா ஜெயந்தியை அழைத்து சென்றிருந்தான்.

அங்கு யாரும் எதிர்பாரா விதமாய் மிருதுளாவிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஓடிவிட ஏகப்பட்ட ஏசுகளை பேசியவாறு மூர்ச்சை அடைந்தார் மிருதுளாவின் அம்மா வசந்தி .

அப்போது ஜெயந்தியிடம் விரைந்த மிருதுளாவின் பாட்டி “உன் மகனுக்கு என் பேத்தி முறைதானே…. எங்களை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி கொடு” என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்க செய்வதறியாது திணறிய ஜெயந்தி ராகுலை பார்த்தார்.

சொந்தம் தான் என்றாலும் இதற்கு முன் மிருதுளாவை பார்த்ததில்லை ராகுல்.

அந்த பெரிய மனுஷியை பின்தொடர்ந்த அவளது அப்பா ஜெயராமனும் “மேடை வரை வந்து நின்று விட்ட என் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் முன் தக்க முடிவினை எடுங்கள்” கைகளை கூப்பினார் . மேலும் “என் சொந்த தங்கையாக இருந்திருந்தால் உரிமையோடு கேட்டிருக்கக் கூடும் ” என்றவரது வருத்தம் ஜெயந்தியை உருக்கிவிட்டது .

இருந்தாலும் பெண்ணுடைய அம்மாவின் குணத்தை நன்கு அறிந்திருந்த ஜெயந்தி “அண்ணிகிட்ட கேட்காமல் எப்படி அண்ணா?” என்று இழுக்க “மகளின் வாழ்க்கை இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் பட்சத்தில் அவள் என்ன சொல்ல போகிறாள்” என்று சமாதானம் கூறியவரது கணிப்பு பொய்த்தது .

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலிகட்ட சொல்லுங்க” என்று பாட்டி துரிதப்படுத்த ஜெயந்தி ராகுலை மேடையில் சென்று அமருமாறு பணித்தார்.

மனதில் வெகுவான பாரம் ஒன்று வாடகை இன்றி குடிபெயர “பொண்ணுகிட்ட கேளுங்க அம்மா” என்றிருந்தான் ராகுல்.

அதற்கு ஜெயராமன் “இது பெரியவர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த திருமணம் மாப்பிள்ளை. இப்போது அந்த ரிஷிக்கு பதில் உங்களை நாங்கள் தேர்வு செய்திருக்கும் பட்சத்தில் அவள் என்ன சொல்ல போகிறாள்” என்றார்.

இருந்தாலும் இத்தனை நாட்கள் தனக்கு வரப் போகிறவன் என்ற முறையில் ஏற்பட்ட ஒரு கனவு திடீரென கலைய அதனை ஜீரணித்துக்கொள்ள கூட அவகாசம் கொடுக்காமல் அடுத்த சுமைக்கு எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்வாள் என்று மனம் அவளுக்காக வாதாட “உங்கள் பெண்ணிடம் நான் சற்று பேச வேண்டும்” என்றான் ராகுல்.

” தாராளமாக மாப்பிள்ளை” என்ற ஜெயராமன் மணமகளின் அறைக்கு அழைத்துச் சென்றவர் மிருதுளாவிற்கு ராகுலை அறிமுகப்படுத்தியதோடு திருமணம் குறித்தும் பேசினார்.

தன் அதிர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக அவள் உதிர்த்த “அப்பா..” என்ற சொல் கூட வெளிவராது காற்று மட்டுமே வந்தது. அதனை அவளை பெற்றவர் கண்டுகொள்ள தவறினாலும் போலீஸ்காரனின் விழிகளுக்கு அவளது ஒவ்வாமை தெளிவாக சிக்கியது.

பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கும்படி கூறிவிட்டு அவர் சென்றதும் “இந்த திருமணத்தில் எந்த கட்டாயமும் இல்லை. சொல்ல போனால் உன் மன காயத்தை ஆற்ற எடுக்கப்பட்ட இம்முடிவு உன் ரணங்களை மேலும் கிளறி விடும் என்று புரிகிறது . உனக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள். எப்போது உன் மனம் தெளிவடைகிறதோ அதுவரையிலும் காத்திருக்க நான் தயார். அது நம் திருமணத்திற்கு முன்பு ஆனாலும் சரி பின்பு ஆனாலும் சரி . நிச்சயக்கப்பட்ட ஒருவன் நம்பிக்கை எனும் விதையை சுக்குநூறாய் கிழித்திருக்க அதனை நான் விருட்சமாக்குவேன் என்று என்னை நீ நம்புவதற்கு பதில் உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் நல்லதொரு முடிவை எடு . நீ என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு ஒரு நல்ல தோழனாக உனக்கு துணை இருக்கிறேன்” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் ராகுல்.

சிலைபோல நின்றிருந்தவளின் மூளைக்கு அவனது சொற்கள் சென்றிருந்த போதும் மனதிற்கு எதுவும் ஒட்டவில்லை. நிச்சயம் முடித்தபிறகு ரிஷியுடன் பேச விளைந்த மனம் அவனது ஒதுக்கத்தை கண்டு பெரிதாக ஏமாந்து விடவில்லை. எப்போதாவது பேசினாலும் சிரித்த முகத்துடன் பேசி விட்டு விலகி செல்பவனை பிடித்துதான் இருந்தது.

இன்றைய தன்னிலை கண்டு எக்காரணம் கொண்டும் அழுது விடக்கூடாது என்று எண்ணியிருந்தவளின் விழிகள் ராகுலை பின்தொடர்ந்து இரு மணித்துளிகளை வெளியிட்டது. சரியான முடிவினை எடுக்கும் தருவாயில் நிற்கிறோம் என்பது புரிந்தும் அவளது வார்த்தைகள் பஞ்சமாகி நின்றது. அவளுக்கும் சேர்த்து அவள் அப்பா ஜெயராமன் “உனக்கு சம்மதம் தானே…. மாப்பிள்ளையிடம் கூறிவிடவா?” என்று தவிப்புடன் பத்து நிமிடம் கழித்து வந்து அப்பா கேட்டபோது கூட இதழ்களைப் பிரித்தாள் இல்லை.

மௌனம் சம்மதம் என்பதற்கு ஏற்ப அவளது திருமணம் குறித்த சுபமுகூர்த்த நேரத்தில் தங்குதடையின்றி நடைபெற்றது. எவ்விதமான உணர்வுகளையும் வெளிக்காட்டி விடாது அமர்ந்திருந்தவளை சகஜம் ஆக்கும் பொருட்டு ராகுல் பேச நினைத்தபோது மிருதுளாவின் அம்மா வசந்தி சுய நினைவிற்கு திரும்பியிருந்தார்.

மகளின் மன கோலத்தையும் அவளது சங்கு கழுத்தில் ஜொலித்த மஞ்சள் கயிற்றையும் அதற்கு சொந்தக்காரனாகிய ராகுலையும் காணவும் வெறி பிடித்தாற்போல் அவளிடத்தில் நெருங்கி தாலியை கழற்றி வீச ஆயத்தமானார் வசந்தி.

நொடியும் தாமதிக்காது அன்னையை பிடித்து தள்ளி விட்டு தன்னை தானே ஒரு அடி பின்னோக்கி செல்ல வைத்தது தமிழ் பண்பாட்டிற்கே உரிய பெண்ணியல்பு.

தடுமாறியவளை அருகில் நின்றவன் தாங்கிப் பிடிக்க “என் பொண்ணு மேல இருந்து கையை எடுடா” என்று கத்தினார் வசந்தி.

அவரது சொற்களில் வெகுண்ட ராகுலின் கையை இதற்கு மேலும் அம்மா ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்து தன்னிடம் இருந்து விடுவித்தாள் மிருதுளா. புத்தம் புதிய மனையாளின் செய்கையில் வெளிப்படையாக அதிர்ந்தான் ராகுல்.

“ஏய் வசந்தி… கொஞ்சம் நிதானமாக பேசு… அவர் நம் மாப்பிள்ளை முதலில் அவரிடம் மன்னிப்பு கேள்” என்ற தன் கணவர் கூற்றில் எரிச்சலடைந்தவர் “என்ன மாப்பிள்ளையா… இவனுக்கு அந்த தகுதி இருக்கா… என் பெண்ணிற்கு எப்பேர்பட்ட வரன் அமைந்தது… அது தப்பியதை விட இந்த தராதரம் இல்லாதவனுக்கு என் பொண்ணை கட்டி வைத்திருப்பது தான் என் நெஞ்சில் ஒரு மூட்டை எறியும் தாரை அள்ளி வீசியது போல் எரிகிறது … ஊரில் வேறு ஆளே கிடைக்கவில்லையா…. இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்” பேசிய மனைவியின் கன்னத்தை ஜெயராமின் கை பதம் பார்த்ததில் சுருண்டு போய் விழுந்தார்.

” விட்டால் பேசிக்கொண்டே போற… ஜாக்கிரதை ” ஒரு விரல் கொண்டு எச்சரித்தவரை லட்சியம் செய்யாமல் “அனைவர் முன்பும் என்னை அடிக்க வைத்து விட்டாய் அல்லவா… நீயும் உன் பையனும் எப்படி நன்றாக இருப்பீர்கள் என்று நானும் பார்க்கிறேன்… உன் கொடுமை தாங்காமல் தான் உன் கணவர் சீக்கிரம் போய் சேர்ந்தார்…. இப்போது என் மகளையும் உன்னிடம் அனுப்பினால் அவளையும் மேலே அனுப்பி விடுவாய்” என்று ஜெயந்தியிடம் பாய்ந்தார் வசந்தி.

“போதும்..” என்று கர்ஜித்த ராகுலின் சத்தத்தில் மண்டபமே அதிர்ந்தது. வசந்தியுமே அவன் கடுமையை கண்டு பயந்துதான் போனார் .

“வாங்க அம்மா போகலாம்” என்று ஜெயந்தியின் கையை பற்றியவன் மிருதுளாவிடம் திரும்பி “இனியும் இங்கு இருந்தேன் என்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… எத்தனையோ என்கவுண்டர்களைப் பார்த்திருக்கிறேன்… வா போகலாம்” என்று பொறுப்பான கணவனாக தன் மனைவிக்கும் அழைப்பு விடுத்தான் ராகுல்.

ஆனால் ஏற்கனவே குழம்பி போய் இருந்த மிருதுளா இப்போது நடப்பதைப் பார்த்து மேலும் செய்வதறியாது திகைத்தாள்.

” என்கவுண்டரில் போடுவானாம்ல என்கவுண்டர்ல…. என்னை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தாய் என்றால் நானே எண்ணையை ஊற்றி பற்ற வைத்துக் கொள்வேன்” என்று வசந்தி மிரட்ட தன்னுள் உடைந்தாள் மிருதுளா.

அவளது தோற்றம் ராகுலை பாதிக்க “அப்படியெல்லாம் செய்கிறவர்கள் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். நீ தைரியமாக வா” என்று அவளது கரத்தை பற்றினான்.

தடுக்கப் போன வசந்தியை இழுத்த ஜெயராமன் “என் பொண்ணு வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டு விடாதே” என்று அதட்டி விட்டு “மன்னித்துக்கொள்ளுங்கள் மாப்பிள்ளை… நீங்கள் மித்துவை தாராளமாய் கூட்டிச் செல்லுங்கள். உங்கள் அருமை தெரியாமல் இவள் பேசிய பேச்சிற்கு உங்களிடமும் ஜெயந்தி இடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“போலீஸ் ஆகிவிட்டால் எல்லாம் கிடைத்து விடுமா…. இவங்க குடும்பத்தை பற்றி வெளியில் சொல்ல முடியுமா …. நான் இருக்கும் வரை உன்னை அவர்களுடன் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்னை மீறி நீ போவதாக இருந்தால் மண்ணில் என்னை புதைத்து வைத்துவிட்டு போ ” என்ற வசந்தியின் பேச்சினை அவ்வளவு எளிதாக மிருதுளாவால் மீற முடியவில்லை.

“நான் பார்த்துகொள்கிறேன் நீ போமா” என்று தந்தையின் பேச்சினை முற்றிலும் மனம் சமாதானம் அடையவில்லை. தாயின் நலன்கருதி கணவனுடன் வர தயாராக இல்லாதவளை வெறுத்து “விரைவில் விவாகரத்து பத்திரம் உன்னை தேடிவரும்” என்றதோடு தன் அன்னையை கூட்டிக்கொண்டு சென்னை திரும்பி இருந்தான் ராகுல் .

“அவசரப்படாதே தம்பி… புதிதாக நடந்தேறிய திருமணம்… அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்தது…நீ கூப்பிட்டவுடன் அவள் அம்மா எப்படியோ போனால் போகட்டும் என்று எப்படி வருவாள்…. முதலில் நீ கூப்பிட்டதே தப்பு” என்று எடுத்துக்கூறிய ஜெயந்தியின் அறிவுரைகள் காற்றில் பறந்தது.

‘என்னை அவமானப்படுத்தினால் உனக்கு ஒன்றும் இல்லையா’ என்று மிருதுளாவிடம் மானசீகமாக சண்டையிட்ட ராகுல் அவளை முற்றிலும் மறக்க நினைத்தான்.

ஜெயந்திக்காக விவாகரத்து பேச்சை மீண்டும் எடுக்காமல் இருந்தாலும் மேற்கொண்டு தங்கள் உறவு குறித்து அவன் சிந்தித்தானில்லை.

தன் அம்மாவின் போக்கில் சில நாட்கள் கழித்த மிருதுளாவிற்கோ ‘உனக்கு உற்ற நண்பனாக நான் வருகிறேன்’ என்று கூறி சென்ற ராகுலின் பிம்பம் அடிக்கடி நினைவில் ஆடியது. அப்பாவிடம் ராகுலை பற்றி விசாரித்ததில் மும்பையில் பணிபுரிகிறான் என்பது தெரியவர அங்கே தோழியின் உதவியால் பிரபல பத்திரிகை ஒன்றில் வேலை கிடைத்து இருப்பதாக வீட்டில் கூறினாள்.

அதேசமயம் அந்த ரிஷி தேடிச் சென்ற பெண் முற்றிலும் அவனை நிராகரித்துவிட மறுபடியும் மிருதுளாவை பெண் கேட்குமாறு தன் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தான்.

பெரிய இடத்து சம்மந்தம் மீண்டுவந்த மகிழ்ச்சியில் தன் பெண்ணிற்கு எடுத்துக்கூறும் விதத்தில் சொல்லிப் பார்த்தார் வசந்தி. ரிஷி பற்றி கூறும் போது தன் மனம் ராகுலின் புறம் சாய்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட மிருதுளா சிறு காலம் அவகாசம் கேட்டு மும்பை பணிக்கு பயணித்தாள்.

Advertisement