Advertisement

தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை தேடுகிறாள் என்று நினைத்ததும் ஒரு வித சுகம் தன் உடலெங்கும் பரவ “கொஞ்சம் பிஸி அரிசி மூட்டை… இப்போது கூட உனக்கு அழைத்தால் உன் தூக்கம் கெட்டு விடுமோ என்றுதான் கூப்பிடவில்லை” என்று சமாதானம் கூறினான்.

கணவனின் கூற்றில் ஹர்ஷிதாவின் மனம் சமாதானம் அடைந்தாலும் கெத்தை விட்டு தர முடியாமல் “அதை ஒரு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்திருக்கலாம் தானே… கொஞ்சமாவது நினைப்பு இருக்கா பாரு” சலித்துக்கொண்டாள்.

தன் நினைவு யாவிலும் நீங்காது நிறைந்திருப்பவளிடம் “எனக்கு என்ன நினைப்பு இருக்கிறது என்று அங்கிருந்து பார்த்தால் எப்படி தெரியுமாம்?? பக்கத்தில் இருந்தாலாவது புரியவைக்க முயற்சி செய்திருப்பேன்” என்று வம்பு பேச ஆயத்தமானான்.

அவன் பேச்சு போகும் திசையை ஏற்கனவே கற்றுத்தந்த பாடம் மயிர்கூச்சத்தை உண்டு பண்ண “எனக்கு தூக்கம் வருகிறது அத்வி. பை … குட்நைட்” என்றவள் உடனே போனையும் அணைத்து விட்டாள்.

தனக்கு தானே சிரித்துக் கொண்ட அத்விக் ராகுல் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு அவனிடம் சென்றான்.

அங்கு போனையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்த ராகுலிடம் “தூங்கலையா மச்சி” என்றான் அத்விக்.

அக்கேள்விக்கு பதில் அளிக்காதிருந்தவனை அத்விக் நன்றாக உலுக்கவும் திடுக்கிட்டு எழுந்த ராகுல் “என்னடா இந்த நேரத்தில்…ஏதேனும் பிரச்சனையா…” என்றான் நண்பனிடம்.

” உனக்கு என்ன மச்சி பிரச்சனை? இவ்வளவு நேரம் ஆகியும் தூங்காமல் என்ன செய்கிறாய்” என்று வினவினான் அத்விக்.

ராகுலிடமிருந்து எந்த பதிலும் வராததால் “எதையாவது சொன்னால் தானேடா தெரியும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியும்” என்றான்.

அப்போதும் அமைதியே விடையாய் கிடைக்க “என்னமோ பண்ணு” முனுமுனுத்தவாறு கதவு வரை சென்ற அத்விக்கிடம் “இன்னும் மிருதுளா மும்பைக்கு திரும்பவில்லை” என்றான் ராகுல்.

அத்விக் யூகித்திருந்ததுதான் …. ஏற்கனவே ராகுலும் மிருதுளாவும் அறிமுகமாகி இருக்க வேண்டும்…. கூடவே ஏதேனும் ஊடலும் நடந்திருக்க வேண்டும்….

மற்றபடி எதிரில் ஒருவன் அமர்ந்து இருக்கிறான் என்பதையே மறந்து அன்று சீசனல் டேஸ்ட் ஹோட்டலில் தன்னிடம் மிருதுளா கதைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கூடவே ராகுலின் அன்றைய கதகளி!!! இன்று நினைத்தாலும் குபீரென்று சிரிக்க தோன்றும்…

ராகுலிற்கு வேண்டிய பெண் என்ற நிலையிலேயே மிருதுளாவிடம் ஹர்ஷியை வெறுப்பேற்ற அத்விக் உதவி கேட்டதும்… அப்போதும் இருவரும் வாயை திறக்கவில்லை… ஏன் அதன் பின்னும் ராகுல் அவளை பற்றி ஒரு வார்த்தை கூட கூறினானில்லை.

இன்று அவளுக்காக வருந்துவதை பார்த்தால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என்று தோன்ற “போன் பண்ணி பாருடா ” என்றான் அத்விக்.

” ஸ்விட்ச் ஆஃப் ” நொந்து கொண்ட ராகுலிடம் “இதற்கு ஏன் இவ்வளவு ஃபீல் பண்ணுகிறாய்… போய் நேரில் ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவதற்கு என்ன…..” என்றான் அத்விக்.

“எப்படி அவள் முன் செல்வது… அவளாக வந்தபோது துரத்திவிட்டதற்கு பயனாக இப்போது நான் தேடும் போது தூரமாகப் போய் விட்டாள் போலும்…” விரக்தியாக பேசிய ராகுல் அத்விக்கை மேற்கொண்டு பேசவிடாமல் “போய் படு மச்சி. எனக்கு காலையில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. கமிஷனர் ரமணன் சார் வர சொல்லி இருக்கிறார்” நண்பனை பிடித்து வெளியே தள்ளாத குறையாக அனுப்பிவிட்டு படுத்தான் ராகுல்.

ஆனால் அவனிடம் நித்திரா தேவி முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டாள் போலும்!

அதிகாலையில் சற்று கண்ணயர்ந்ததால் அலாரத்தின் உதவிகொண்டு உறக்கம் கலையா கண்களுடன் வெளி வந்த ராகுலிடம் “இன்னும் அரை மணி நேரத்தில் உனக்கு சென்னைக்கு ஃப்ளைட். ரமணன் சாரிடம் நான் பேசிக் கொள்கிறேன்” என்றான் அத்விக்.

மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பிய ராகுல் அன்று மாலையே மும்பைக்கு திரும்பியதோடு அத்விக்கிடம் எதுவும் கூறினான் இல்லை.

அடுத்த நாள் ” இன்று நான் வீட்டிலேயே இருக்கிறேன்டா” என்று சொன்ன ராகுலிடம் தனபால் கேஸ் விஷயமாக நான்கு இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு வருமாறு கேட்டுக் கொண்டான் அத்விக்.
அதனை அலட்சியம் செய்ய முடியாது புறப்பட்ட ராகுல் சென்ற இடங்களில் தனபாலின் சுவடு ஏதும் கிடைக்காமல் ஸ்டேஷனுக்கு சென்றான்.

அத்விக்கிடம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர்கள் முன் வந்து நின்றாள் மிருதுளா .

“விட்டுவிட்டு வந்து விட்டீர்கள்… எல்லாம் அவ்வளவுதானா… உங்களை நம்பியதற்கு எனக்கு கிடைக்கவிருக்கும் பரிசு ரொம்ப பெரிது… ஆனால் அப்பரிசை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தான் எனக்கு இல்லை… அதேசமயம் கோழைத்தனமாக சாக….” மேற்கொண்டு மிருதுளாவை பேச விடாது அவள் இதழ்களை பொத்தி இருந்தான் ராகுல்.

அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி வெளியே செல்ல நினைத்த அத்விக்கை “வண்டியெடுடா… வீட்டிற்கு போய் பேசிக்கொள்ளலாம்” என்ற ராகுலின் சொற்கள் தடுத்தது.

வீட்டிற்குள் வந்ததும் “நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்… இதோ வருகிறேன்” நாகரிகம் கருதி வெளியேறிய அத்விக்கை மிருதுளாவின் விசும்பல் நிறுத்தியது.

” டேய் என்னடா….” என்றபடி அத்விக் ராகுலை பார்வையிட “இப்போது எதற்கு அழுகிறாய்…” மென்மையாக வினவியவனை அவளது பொங்கி பெருகிய விழிநீர் ரௌத்திரம் ஆக்கியது.

” ஏய் என்னவென்று சொன்னால் தானே தெரியும்…. உனக்கு ரிஷி தான் முக்கியம் என்றால் அதற்காக இங்கே வந்து என் உயிரை எடுத்து தொலைக்கிறாய்” என்று கத்தினான் ராகுல் .

மிருதுளாவின் அதிர்ந்த விழிகளை பார்த்து தான் கொட்டிய வார்த்தைகளின் பொதி விளங்க “சாரி பேபிமா நீ அழுதால் என்னால் உருப்படியாக எதையும் யோசிக்க கூட முடியவில்லை” அடுத்த நொடி யாசித்தவனின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாய் மிருதுளாவின் முகம் மிருதுவாக மாறியது .

மேலும் “அங்கு என்ன நடக்கிறது என்பது தெரிந்தும் நீங்கள் வரவில்லையே…” குறைபட்டவளிடம் “எனக்கு எதுவும் தெரியாது … ஆனால் உன்னை பார்க்க நேற்று வந்தபோது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது ” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் ராகுல்.

” நீங்கள் சென்னைக்கு வந்தீர்களா….. பிறகு ஏன் என்னைப் பார்க்கவில்லை…. என்னிடம் எதுவும் பேசாமல் நீங்களாக எப்படி கிளம்பினார்கள்”

” உன் அம்மாவைப் பார்த்து பேசினேன். இனியாவது என் மகளை நிம்மதியாக வாழ விடும்படி என்னை அங்கிருந்து அகற்ற பார்த்தார்கள் . ‘அதை முதலில் மிருதுளா வந்து சொல்லட்டும். அவள் சொன்னால் சென்று விடுகிறேன்’ என்றதற்கு இப்போதுதான் உன் மனம் தெளிவடைந்து இருப்பதாகவும் அந்த ரிஷியுடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினார். தற்போது நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் கைபேசியில் காட்டினார். போதாத குறைக்கு இப்போது நான் பேசினால் குழப்பமே மிஞ்சும் என்றும் உனக்கு அமையவிருக்கும் நல்ல வாழ்வினைக் கெடுத்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்”

” உடனே கர்ணன் அவர்கள் வாழ்க பல்லாண்டு என்று ஒரு பாட்டை பாடி விட்டு வந்து விட்டீர்களா ” சீற்றத்துடன் கேட்டாள் மிருதுளா.

“அது அவ்வளவு எளிதாக இல்லை மித்து… அந்த போட்டோவை பார்த்ததும் இப்போது நீ எடுத்திருக்கும் முடிவிற்கு தடங்கலை ஏற்படுத்தவும் மனம் வரவில்லை”

” அந்த போட்டோஸ்… முன்பு எங்கள் நிச்சயம் முடிந்ததும் எடுக்கப்பட்டவையாக இருக்கும். ‘ப்ரீ மேரேஜ் ஷூட்’…. எல்லாம் புகைப்படம் பிடிப்போரின் உபயம் …. என்னை நம்புகிறீர்கள் தானே”

” அப்போது உனக்கு இந்த திருமணத்தில் உண்மையாகவே விருப்பம் இல்லையா?” கண்களில் ஓராயிரம் உணர்ச்சிகளை தேக்கி வைத்துக்கொண்டு கேட்டவனிடம் குறும்பு மின்ன “திருமணத்தில் விருப்பம் இருந்ததால் தானே உங்களிடம் நியாயம் கேட்க வந்ததே” என்றாள் மிருதுளா.

அவள் சொன்னதை புரிந்து கொண்ட ராகுல் அத்விக் அருகில் நிற்கிறான் என்பதையும் மறந்து அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.

” டேய் என்னடா நடக்குது இங்க….” தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்றவனை கூச்சமாக பார்த்தபடி “அத்விக் சார்” என்று நெளிந்தாள் மிருதுளா.

” அப்பாடா விபரீதம் ஏதும் நடப்பதற்கு முன்னே உங்கள் கண்ணுக்கு நான் காட்சியளித்தேனே… அதுவே பெரிது” என்றதோடு “இங்க வா மச்சி… அதெப்படிடா…. இந்த பூனையும் பால் குடிக்குமா லுக்கு விடுகிறாய்” ராகுலை இழுத்து வைத்து அத்விக் வம்பு செய்ய ஆயத்தம் ஆகும் போது வீட்டு கதவு படபடவென்று தட்டப்பட்டது.
கதவு தட்டும் விதத்திலே பயந்து
” அம்மா அனுப்பிய ஆட்களாக இருக்குமோ… என்னை ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். என் தோழி ஒருத்தி எதேச்சையாக என்னை பார்க்க வர அவள் உதவியுடன் தப்பித்து வந்தேன். கண்டுபிடித்து விட்டார்கள் போலும்….” என்று மிருதுளா படபடத்தாள்.

பயம் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படியும் எதிரில் இருந்த அறைக்குள் போகும்படியும் மிருதுளாவிடம் சைகை காட்டிவிட்டு கதவை திறக்க போனான் அத்விக்.

கூடவே கதவு தட்டப்படும் வேகத்தைக் கொண்டு ஆட்கள் ஆயுதத்துடன் வந்திருப்பார்கள் என்று கணித்து தன் துப்பாக்கியை எடுக்க அடுத்த அறைக்குள் சென்றான் ராகுல்.

கதவின் தாழ்ப்பாளை திறக்கவும் அத்விக்கை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அவனது அரிசி மூட்டை. அவள் பின்னோடு வந்த அத்ரிஷ் “ஹாய் அண்ணா” என்றபடி நுழைய டைகர் தன் வாலை ஆட்டி கொண்டே அத்வியின் மீது பாய்ந்தான்.

அத்ரிஷின் குரலைக் கேட்கவும் ஹாலிற்கு விரைந்திருந்தாள் மிருதுளா .

அவளின் பதற்றமான முகத்தினையும் அழுது வீங்கிய கண்களையும் கண்டுகொண்ட ஹர்ஷிதா “மித்து ஏன் இப்படி இருக்கிறார்கள்….. அவர்களை என்ன செய்தாய்?” என்று அத்விக்கிடம் பாய அத்ரிஷ் அவன் பங்கிற்கு மிருதுளாவிடம் ஓடிச்சென்று “என்ன பிரச்சினை … சொல்லு மித்து” என்று அதட்டும் தொனியில் கேட்டுக் கொண்டிருந்தான்.

தன்னை நோக்கி இப்படி ஒரு கேள்வியை தன் மனைவியிடம் இருந்து எதிர்பார்த்திராதவன் அதிர்ந்தபடி அன்று தான் சொன்ன விளக்கத்தை கேட்டிருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருப்பாளா… அப்படியே தங்கள் உறவு பற்றி தெரியாவிட்டாலும் தன்னை பற்றி தெரியாதவளா இவள்…. என்ற வெறுப்பும் வருத்தமும் போட்டிபோட “என்னை சந்தேகப்படுகிறாயா?” என்று கத்தினான் அத்விக்.

“நான் என்ன கேட்கிறேன்… இவன் என்ன சம்பந்தம் இல்லாமல் உளறுகிறான்” என்று யோசித்த ஹர்ஷிதாவிற்கு அத்விக்கின் முகத்தில் தோன்றிய வலி அவன் கேள்வியை விளக்கிக்கூற “ஹேய் லூசு… அறிவிருக்கா” என்று கணவனிடம் போர் கொடி பிடித்தாள் ஹர்ஷிதா.

“அதைத்தான் நானும் கேட்கிறேன்… இந்த மண்டையில் எதுவுமே இல்லையா… அவன் யார் என்று உனக்கு தெரியுமா….” அங்கு வந்த ராகுலை பார்த்து கேட்ட அத்விக் ஹர்ஷிதாவிடம் மிருதுளாவிற்கும் ராகுலுக்கும் இருக்கும் உறவை பற்றி விளக்கி விட நினைத்தான்.

“எல்லாம் தெரிந்த மேதாவியே…. ஒரு புருஷனும் பொண்டாட்டியும் உன் பக்கத்திலே வைத்துக்கொண்டு ‘சந்தேகப் படுகிறாயா?’ என்று ஞானோதயமாக கேள்வி வேறு கேட்கிறாய் தடிமாடு” என்றாள் சூடாக.

அவர்கள் இருவரின் ஊடலில் காதலர்கள் என்று கணித்திருந்தவனுக்கு இது அதிர்ச்சியே… இருப்பினும் ராகுலை பார்த்து முறைத்தபடி “அவர்கள் யாராக இருந்தால் எனக்கென்ன … என்னை பார்த்து ஏன் அப்படி கேட்டாய்” என்றான் அத்விக் விடாமல்.

தான் அவனிடம் அப்படி என்ன கேட்டுவிட்டோம் என்று யோசித்தவள் “தெரிந்த பெண் அதுவும் அத்ரிஷின் தோழி அழுது கொண்டிருக்கிறாள் அருகில் இருப்பவர்களிடம் ஏன் என்ன காரணத்தை கேட்க மாட்டார்களா?”… மிருதுளா அழுததில் ‘நீ என்ன செய்தாய்?’ என்று பதற்றமாக அத்விக்கிடம் வினவியதையே ஹர்ஷிதா மறந்து இருந்தாள்.

“நன்றாக கேட்டாய் காரணத்தை” என்று ஹர்ஷியிடம் கடிந்து கொண்ட அத்விக் ‘துரோகி’ என்பதுபோல் ராகுலை பார்த்தான்.

குழப்ப ரேகைகளை முகத்தில் சுமந்து கொண்ட ராகுல் “எங்கள் திருமணம் பற்றி உனக்கு எதுவும் தெரியாதா மச்சி?” என்று கேட்கவும் வெட்டவா குத்தவா ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தான் அத்விக்.

ஹர்ஷிதாவின் மூலம் தங்கள் உறவை அறிந்து கொண்டதன் பயனாக தான் நேற்று தன் கையில் சென்னைக்கான பயணச் சீட்டினை அத்விக் திணிக்கிறான் என்று ராகுல் எண்ணியிருக்க இப்போது அந்த நினைப்பு பொய்யாகியதோடு நண்பனின் முறைப்பு வேறு தன்னை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற “என்னடா ….?” என்றான் ராகுல் சமாதானப்படுத்த தெரியாதவனாய்.

” நண்பனாடா நீ!” என்று அத்விக் கேட்டு முடிக்கவும் “இதே கேள்வியைத்தான் நானும் அன்று மாலியில் கேட்டேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா ராகுல் சார்” என்று ராகுலிடம் கேட்டுவிட்டு “ஒரு நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா….” என்ற ஹர்ஷிதாவின் கண்கள் அத்ரிஷை தேடியது.

காப்பி கோப்பைகள் அடங்கிய ட்ரேயுடன் கிச்சனிலிருந்து வெளியே வந்த அத்ரிஷ் மிருதுளாவிடம் ஒன்றை கொடுத்து விட்டு ஹர்ஷியிடம் திரும்பினான்.

” வாவ்…..காபி!!!!! நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் நண்பனின் இலக்கணத்தை” என்று தன் எதிரில் நின்ற காவல் அதிகாரிகளிடம் கூறி விட்டு காபியை எடுக்கப்போனவளின் கையை தட்டிவிட்டான் அவளது ஆருயிர் நண்பனான சி.டி.

” நோ டார்லிங்” கண்டனத்துடன் கூறியபடி பால் கோப்பையை ஹர்ஷிதாவின் கையில் திணித்த அத்ரிஷ் மற்றவர்களுக்கு காப்பியை வழங்கினான்.

” திஸ் இஸ் ஸோ அன் ஃபேர் சி.டி …. இந்தா இதையும் நீயே குடித்துவிடு” என்று மல்லுகட்டியவளிடம் “அப்பத்தா தான் வீட்டிற்கு சென்றவுடன் உனக்கு ஒரு டம்ளர் பால் கொடுக்கச் சொன்னது” என்றான் அத்ரிஷ் சமாளிப்பாய்.

Advertisement