Advertisement

” என்ன செய்கிறாய் இறக்கி விடு அத்வி” என்று திமிரியவளிடம் “இப்போது கத்தினால் அப்படியே கீழே போட்டு விடுவேன்” என்று மிரட்டல் ஒன்றை அத்விக் விடுக்க உடனே
” விளையாட்டிற்கு கூட அப்படி சொல்லாதே அத்வி” என்று அதட்டிய ரூபா அவளை வீட்டில் விட்டு விட்டு வருமாறு தெரிவித்தார்.
இவர்கள் திருமணம் சொந்தபந்தம் அனைவருக்கும் பரிச்சயம் தான் என்றாலும் முறைப்படி சடங்குகளை செய்ய நினைத்த ரூபா அதுபற்றி பேச மரகதத்திடம் விரைந்தார் .
வழியில் “என்னை இறக்கி விடு அத்வி” ஓட்டை டேப் ரெக்கார்டராகி போனவளின் வேண்டுகோளை அப்புறப்படுத்தியவனிடம் “எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டாயா” என்று திருப்பிக் கொண்டாள்.
” உன்னை இதற்கு முன் நான் தூக்கியதே இல்லையா”
” அது வேறு இது வேறு” என்று பதில் பாய்ந்து வந்தது.
” அப்படி என்ன வேறுபாட்டை கண்டுபிடித்தாய்?”
” அது……” தடுமாறியவள் அவனது சிரிப்பைக் கண்டு “நான் கீழே விழும் சமயத்தில் தூக்குவதும் இப்போது சும்மா நிற்கும்போது தூங்குவதும் ஒன்றா??” என்றாள் அவசரமாக.
அவன் மீண்டும் சிரிக்கவும் “சிரிக்காதே!!! கடுப்பாகுது!!! நடுவுல கொஞ்சம் தூக்குவதை விட்டுட்டு தலைமறைவு வேறு ஆகிவிட்டாய்” என்று மெல்லிய குரலில் முனகினாள்.
” ஆஹ நான் தூக்கியது இப்போது பிரச்சனை இல்லை. கீழே விழாமல் தூக்கியது தான் பிரச்சனை. அப்படி தானே அரிசி மூட்டை….” என்றபடி அவளை கீழே போட போனவனின் சட்டையை இறுக்கிப் பிடித்தவள் கண்களை மூடியபடி “போட்டு விடாதே தடிமாடு” என்று கத்தினாள்.
” என்னது தடிமாடா….. உன்னை…..” என்று அவளைக் கீழே போட தன் கைகளை விடுவிக்க போனவனிடம் “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் தடிமாடு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்” என்று கெஞ்சினாள்.
” எனக்கு நீ சொன்ன எந்த ப்ளீஸும் வேண்டாம். முன்பெல்லாம் சும்மா கிக்கு ஏத்துற மாதிரி சொல்லுவியே அதுதான் வேண்டும்” என்றான்.
என்னை நீ கீழே போட்டாலும் பரவாயில்லை நான் அதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பது போல் தன் வாயை இறுக்க மூடியவளை கண்டதும் தொப்பென்று கீழே போட்டான் அத்விக்.
“ஐயோ அம்மா ” என்று கத்தியவளுக்கு அடி எதுவும் படாது போக தன்னை மெத்தையில் இறக்கி விட்டவனின் மேல் நன்றி உணர்வு பொங்கினாலும் அதை மறைத்து முறைத்தாள் .
“ஆங்கிரி பேர்ட் உனக்கு ஒரு பெட்”
என்னவென்பது போல் அவள் பார்க்க “நீயாகவே முன்வந்து இன்று நான் கேட்ட இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவாய்….. அதுவும் ஒரே சமயத்தில்…. அப்படி நடந்து விட்டால்….” அவன் நிறுத்தினான்.
அவன் இரண்டாவது கேட்டதையாவது சில சமயம் தன்னையுமறியாமல் சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது . ஆனால் முதல் கேட்டது…. ‘ஹூஹும்’ யோசித்தபடி “சான்ஸே இல்லை” என்றாள்.
“ஒருவேளை அப்படி ஒரு சான்ஸ் ஏற்படுமாயின்…”
அவன் விட்டதை அவள் தொடர்ந்தாள் “ஏற்படுமாயின்?”
” எனக்கு ஒரே ஒரு டிவின்ஸை பெற்றுத்தர வேண்டும்”
” வாட்ட்ட்ட்ட் “
“இப்படி வாத்து வாத்து என்று முழிக்காதே…. அப்புறம் நம்ம பெட் எனக்கு மறந்து போய்விடும். குட் நைட். ஸ்லீப் டைட்” அவள் மச்சத்தை மீண்டும் ஒரு முறை வருடியவன் சற்று சிரமப்பட்டே அதற்கு பிரியாவிடை கொடுத்து அறை கதவை சாத்திவிட்டு சென்றான் அத்விக்.
இவன் லூசா இல்லை என்னை அப்படி நினைத்து விட்டானா….. எப்படி எப்படி…. ப்ளீஸ் அத்தான் என்று கூறி கொண்டே அவனுக்கு முத்தமிட போகிறேனா…. ஓ மை காட்!!! …. இதற்கான டிமான்ட்…. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஆக இரட்டையர்களா…. அப்ப உனக்கு இந்த ஜென்மத்தில புள்ள பொறக்காதுடா அத்விக்கு ….. ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே என்றவளின் தூக்கத்தை திருடி சென்றிருந்தான் அவள் கள்வன்.
தன் வீட்டிற்கு திரும்பிய அத்விக் ஹால் சோபாவில் மரகதமும் ரூபாவும் பிருந்தாவும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு ” என்ன பிக் பிரின்சஸ் இன்னும் தூக்கம் வரலையா ?” என்றபடி அவர்களிடம் சென்றான்.
” எல்லாம் உன் கல்யாண விஷயம் தான் பேராண்டி… இரண்டு மாதங்களுக்குப் பின் தள்ளி போட்டிருக்கும் விக்னவின் திருமணத்தின் போது உங்களதையும் சேர்த்து வைத்து விடலாமா அல்லது முன்னமே சொந்த பந்தங்களை கூட்டி ஒரு கோவிலில் நடத்திவிடலாமா… பெரிதாக செய்ய நீ ஆசைப் பட்டாலும் சரி உன் விருப்பம்”
“தாத்தா உனக்கு எத்தனை முறை தாலி கட்டினார் பிக் பிரின்ஸஸ்?”
அவன் நோக்கம் புரிந்து “எங்கள் திருமணம் ஊரறிய உலகறிய….” ஆரம்பித்தவரிடம் “உன்னிடம் நான் பிக் கொஸ்டின் கேட்கவில்லை ஜஸ்ட் ஒன் மார்க் ஒன் வேர்ட் ஆன்சர் சொல்லு” என்றான் .
“ஒருமுறைதான்”
” ஆனால் நான் என் பொண்டாட்டிக்கு இரு முறை தாலி கட்டுவேன் . அது நீங்கள் இப்போது குறிப்பிடுவதுபோல் ஒரு மாதத்திலோ இரண்டு மாதத்திலோ இல்லை. என் அறுபது வயதில்” என்றான் அத்விக் தீர்மானமாக.
அவன் கூற்றில் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டபோதும் “இருந்தாலும் நாலு பேருக்கு தெரியாத வண்ணம் நமக்குள்ளே நடந்தேறிய இத்திருமணம் எனக்கு உறுத்தலாக இருக்கிறது” என்று தன் மனதில் பட்டதை வெளிபடுத்தினார் மரகதம்.
” இப்போது உன் பிரச்சனை என்ன…. காதும் காதுமாய் பரவிய செய்தியை லவுட் ஸ்பீக்கர் போட்டு உரக்க கத்தவில்லை என்பதா” என்றவன் அவர் முகமாறுதலை கண்டதும் “விக்கியின் திருமணத்தில் எங்கள் திருமணம் பற்றிய ஒரு அறிவிப்பை தெரிவித்து விடுவோம் . சரியா ” என்றான்.
அவனது கூற்று ஏற்றுக் கொள்ளும்படி அமையவும் நிறைவுடன் தலையாட்டினார் மரகதம்.
“சரி போய் தூங்கு பிக் பிரின்ஸஸ்” என்றுவிட்டு தன் அறைக்கு திரும்பினான்.
“அத்வி ஒரு நிமிஷம்” என்று ரூபா அவனிடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை கூற கூப்பிட்ட சமயம் “என்னை என் அறையில் விட்டுவிடுமா ” என்று அவரை உதவிக்கு அழைத்தார் மரகதம் .
சரி அத்விக்கிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பிருந்தாவிடம் சமிஞ்சை காட்டிய ரூபா தன் மாமியாரை கைபிடித்து அழைத்துச் சென்று அவர் உறக்கம் கொள்வதற்கு தேவையான உதவியை புரியலானார் .
அடுத்த நாள் அதிகாலை பிளைட்டில் மும்பைக்கு பயணித்திருந்தான் அத்விக்.
தனபால் இப்போது எந்த தவறுகளிலும் ஈடுபடாது இருப்பினும் அவன் முன்பு விளைவித்த வினைகள் யாவும் ஒன்று திரண்டு அவனை அழிக்க உள்ளதை அறியான்.
சுப்புராஜிற்கு கொடுத்த கால அவகாசம் நிறைவடையவும் தன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ராகுலிடம் பகிர்ந்துகொண்ட அத்விக் அத்திட்டத்தை அன்றே செய்ய விழைந்தான்.
சுப்புராஜின் வீட்டை அடைந்தவன் அவனிடம் மேற்கொண்டு எந்த வாக்குவாதத்திலும் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்க விரும்பாமல் ‘நைட்ரஸ் ஆக்ஸைட்’ வாயுவை தூவி விட்டான் . என்ன என்று தெரியாமலேயே அத்வியின் வலையில் சிக்கிய சுப்புராஜ் அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தான். அத்விக்கும் அவன் பங்கிற்கு அவனுடன் இணைந்து நகைத்தபடி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பினான்.
தன் வீட்டில் இருந்தபடி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான் தனபால். முதல் வேலையாக சுப்புராஜை சுட்டுக் கொல்லுமாறு தன் அடியாட்களிடம் ஆணையிட்டு கொண்டிருந்த போது அவனது வழக்கறிஞர் விஸ்வநாதன் அங்கு வருகை புரிந்தார். ஆரம்ப காலத்திலிருந்து கூடவே இருப்பதாலும் அவர் உதவியுடன் நிறைய தவறுகளை நிகழ்த்தி இருப்பதாலும் இருவருக்குள்ளும் ஒரு நட்பு இழையோடியது.
“அவசரப்படாதே தனபால்… திமிங்கிலத்தை பிடிக்க அந்த போலீஸ் ஆபீஸர் பிடித்த சிறிய தூண்டில் மீன் தான் இந்த சுப்புராஜ் என்பதை மறக்காதே… நீ இப்போது எதையாவது செய்ய மாட்டாயா என்று பருந்து போல் காத்துக் கொண்டிருப்பவனிடம் இரை போட்டு அனாவசியமாய் மாட்டிக் கொள்ளாதே” என்று ஆசுவாசப் படுத்தினார். மேலும் “சுப்புராஜ் விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது” என்றார் .
“அதற்காக அந்த நன்றி கெட்டவனை அப்படியே விட்டுவிடுவதா… அவன் அப்ரூவராக மாறினால் என் அழிவு உறுதி. சுப்புராஜை தூக்கினால் தான் எனக்கு நிம்மதி”
” அவனை நீ தூக்கினாலும் தூக்கா விட்டாலும் உன் சாப்ட்டரை எப்படி கிளோஸ் பண்ணுவது என்பதை ஸ்கெட்ச் போட்டு முடித்து வைத்திருப்பான் அத்விக் .
மாறாக அவனுக்கு வேண்டியவர்களை தூக்கினால் அத்விக் தடுமாறுவான். அப்போது அவனை நம் வழிக்கு கொண்டு வரலாம்” என்று ஆலோசனை வழங்கினார் விஸ்வநாதன்.
அத்விக் திருமண செய்தி தனபாலை எட்டி இருக்கவே அவன் மனைவியின் மீது தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான் தனபால் .
ஜெகனுக்கு ஏற்பட்ட தாக்குதலில் இருந்தே தன் வீட்டில் பாதுகாப்பை தகுந்த முறையில் ஏற்பாடு செய்து வைத்திருந்தால் அவர்கள் குடும்பத்தினரை அணுகுவது அவ்வளவு எளிதான காரியமாக இருந்துவிடவில்லை. என்னேரமும் ஒரு எச்சரிக்கை தன்மை அவர்களிடம் தென்பட்டது . மேலும் ஹர்ஷிதா வெளியே செல்லும் சமயங்களில் அவள் அறியாமலேயே அவளை இருவர் பின்தொடர்ந்து தன் பாதுகாப்பு வளையத்திற்குள் வழி நடத்தினர் .
இதனைக் கேள்வியுற்ற தனபால் சுடும் எண்ணையில் விழுந்த அப்பளமாய் பொறிந்து கொண்டிருந்தான். ஒரு மாத காலமாகியும் ஒரு பெண்பிள்ளையை தூக்குவதில் தாமதமாக்கி நழுவ விட்டுக்கொண்டிருந்த தன் ஆட்களிடம் கடும் கோபத்தில் இருந்தான் . தக்க தருணம் வேண்டி கழுகு பார்வையோடு ஹர்ஷிதா வை தூக்கிவிடும் நோக்கத்தை நிறைவேற்ற எதிர்பார்த்து காத்திருந்தனர் அடியாட்கள்.
எதிர்பார்த்தபடி சுப்புராஜ் அவனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படியான கோரிக்கையுடன் சரண்டர் ஆனான். அவனது கைது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
இப்போது தனபாலின் கவனம் ஹர்ஷிதா மீது திரும்பி இருந்ததால் அவனும் பெரிதாக சுப்புராஜின் மறைவில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
அன்றிரவு ஆதாரங்கள் எல்லாம் பக்காவாக திரட்டி தனபாலை கைது செய்ய அவன் இடங்களிலெல்லாம் சென்று தேடலானான் அத்விக்.
அவனது நகைக்கடைகள் சொந்த பந்த வீடுகள் என எங்கு தேடியும் தனபாலை கண்டுபிடிக்க முடியவில்லை. போன் ஸ்விட்ச் ஆஃப் என்ற நிலையில் அவனது மகன் மட்டும் வெளிநாட்டிற்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது.
தனபால் எப்படியும் மும்பையை தாண்டி இருக்க மாட்டான் என்பதை உள்மனம் அறிவுறுத்த விரைவில் அவனை பிடித்து விடலாம் என்று எண்ணியபடி அத்விக் வீட்டை அடைந்தபோது மணி நள்ளிரவு இரண்டு.
அத்விக் தூங்கும் முன் தன் மனைவிக்கு கைபேசியில் அழைப்பு விடுப்பது வழக்கம். இன்றுவரை இந்த அழைப்பினை அவள் புறக்கணிப்பதும் வாடிக்கைதான்.
ஹர்ஷிதாதான் தனபாலின் டார்கெட் என்ற செய்தி சுப்புராஜின் நண்பன் ஒருவன் மூலம் தெரிய வரவும் கொதித்துப் போனான் அத்விக். அவளை எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவிக்க அழைத்த போதும் கூட போனை அட்டென்ட் பண்ண வில்லை அவன் ராட்சஸி.
பிறகு அவளுக்கு தற்காலிகமாக காவலுக்கிருந்தவர்களிடம் பலமுறை கவனத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொண்டான்.
இந்த இரவு நேரத்தில் அவளை எழுப்ப மனம் இல்லாதவன் அவளை அழைக்கும் எண்ணத்தை கைவிட்டு படுத்த போது அவனது கைபேசி ‘அரிசி மூட்டை காலிங்’ என்றபடி திரையில் ஒளித்த வண்ணம் அவனை எழுப்பியது .
அவளின் முதல் அழைப்பு.. மனம் சந்தோஷமாவதற்கு பதில் சஞ்சலமும் பதற்றமும் கொண்டது. இந்த நேரத்தில் அழைக்கிறாள் என்றால் ஏதேனும் ஆபத்தில் மாட்டிக் கொண்டாளா…
இரு தினங்களாக தனக்கிருந்த வேலைப்பளுவில் அவளுக்கு நியமித்திருந்த காவலாளிகளுக்கும் அழைப்பு விடுக்க மறந்திருந்த தன் முட்டாள்தனத்தை நினைத்து மானசீகமாக தன் தலையில் கொட்டி கொண்டவன் அழைப்பை ஏற்றவுடனே “எங்கே இருக்கிறாய்…. வெளியில் எங்காவது சென்றிருந்தாயா…. வீட்டிற்கு பத்திரமாய் திரும்பி விட்டாய் தானே …. உனக்கு வெளி வேலை இருந்தால் அத்ரிஷை கூட்டி செல்லுமாறு சொல்லியிருந்தேனே…. அவன் வரவில்லையா…. ஏதாவது பேசு ஹர்ஷி…. ஹலோ ஹலோ….” அவள் பேசுவதற்கு இடமளிக்காமல் கிட்ட தட்ட கத்தினான் அத்விக்.
எதிர்முனை சில நொடிகள் மௌனம் காக்கவும் மீண்டும் பதறியபடி “ஹர்ஷி” என்று ஆரம்பிக்கும் போது “உன் நடிப்பை முதலில் நிறுத்து அத்வி” என்ற குரலை கேட்டு தான் மன நிம்மதி அடைந்தான்.
பின் அவளின் சொற்களின் அர்த்தம் விளங்க சற்றுக் காட்டத்துடன் “என்னது நடிப்பா….?” என்று மனைவியிடம் பாய்ந்திருந்தான்.
” ஆமாம் நடிப்புதான் …. அவ்வளவு அக்கறை இருக்கிறது எனில் இரண்டு நாட்கள் உன்னால் போன் செய்யாமல் எவ்வாறு இருக்க முடியும்??” என்றவளின் கேள்வியில் முகமெங்கும் புன்னகை பரவ “ஆமாமாம் போன் பண்ண உடன் ‘சொல்லுங்க அத்தான்’ என்று நீ அதை எடுத்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பாய்” என்ற அத்விக்கின் குரலில் ஏக்கமே வழிந்தோடியது.
” நான் எடுப்பதும் எடுக்காததும் இப்போது பிரச்சினை இல்லை… நான் எடுக்காவிட்டால் நீ கூப்பிடுவதை நிறுத்தி விடுவாயா..”
தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை தேடுகிறாள் என்று நினைத்ததும் ஒரு வித சுகம் தன் உடலெங்கும் பரவ “கொஞ்சம் பிஸி அரிசி மூட்டை… இப்போது கூட உனக்கு அழைத்தால் உன் தூக்கம் கெட்டு விடுமோ என்றுதான் கூப்பிடவில்லை” என்று சமாதானம் கூறினான்.

Advertisement