Advertisement

அத்விக் மும்பைக்கு செல்லும் முன்னே அவனுக்கு வேண்டிய ஆதாரங்களை ராகுல் திரட்டி வைத்திருந்தான். ஒரே நாளில் இந்தியாவின் அதிமுக்கிய தொழிலதிபரான தனபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்லவே. அவனின் ஆரம்பகாலத்தில் தள்ளுபடி செய்த வழக்குகளை மீண்டும் துருவி இருந்தான். தனபால் விட்டு வைத்திருந்த சிறு சிறு ஓட்டைகளையும் தனக்கு கிடைக்கும் பெரும் ஆதாரமாய் சேகரிக்க ஆரம்பித்தான். தன் உயிரைக் காட்டிலும் தனபாலுக்கு உண்மையான விசுவாசியாக உழைத்த அவனது அடியாள் சுப்புராஜை ஒரு வழக்கில் கைது செய்யும்படி கூறியிருந்தான். சுப்புராஜிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்றும் தனபால் அவனை வெளியே எடுக்க முடியாதபடி எஃப்ஐஆர் ஒன்றை போடும் படியும் கூறினான். பிறகு அவனே எதிர்பாரா தருணத்தில் சுப்புராஜை விடுவிக்கும் படி கூறியிருந்தான்.

ஜெகன் விஷயத்தில் தனபாலின் மேல் எந்தவித சந்தேகமுமில்லாமல் அத்விக் பார்த்துக்கொண்டதால் இப்போது அவனைப்பற்றி குடைவது ஏன் என்று எண்ணிய தனபால் குழம்பிய நிலையில் இருக்க அவனை வீழ்த்த தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் அத்விக்.

தனபாலுக்கு சுப்புராஜின் மீது இருந்த அளவுகடந்த நம்பிக்கையை இந்த நடவடிக்கை அசைத்து தான் பார்த்தது. அவன் கைதாகி வெளியே வந்த பிறகு சுப்புராஜிடம் அதை வெளிகாட்டாவிட்டாலும் அவனிடம் காட்டிய நெருக்கத்தை குறைத்துக்கொண்டான் தனபால்.

இருவர் உறவிலும் விரிசல் விட்டிருக்கும் இச்சமயத்தில் போலீஸ் அதிரடியாக சுப்புராஜின் வீட்டிற்கு சென்று அவனது குடும்பத்தை கருத்தில் கொண்டு அவனை விட்டு விடுவதாகவும் அப்ரூவராக மாறும் படியும் கேட்டுக் கொண்டது. அப்படி இல்லையெனில் அவன் அவ்வாறு மாறும் சமயம் கட்டாயம் வரும். அப்போது அவனது குடும்பத்திற்கான பாதுகாப்பிற்கு போலீஸ் உத்தரவாதம் இல்லை என்றும் எச்சரித்து விட்டு கிளம்பினார். சுப்புராஜின் மனம் இரு கொள்ளி பாம்பாய் சிக்கிக் கொண்டாலும் எந்த முடிவையும் எடுத்து இருக்கவில்லை.

ஜெகன் வீட்டிற்கு திரும்பி 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மகனை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அத்விக் சென்னைக்கு கிளம்பினான்.

தந்தையும் மகனுமாக இழந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தத்தம் உறவினை அந்த மூன்று மணி நேரத்திற்குள் பூர்த்தி செய்ய எண்ணுவதாய் பேசி தீர்த்தனர்.

அதற்கு மேலும் அத்விக்கிடம் பேச மனம் நினைத்தாலும் உடல் நிலையின் அசதி காரணமாக கண்ணயர்ந்தார் ஜெகன்.

அப்பா நன்கு உறங்கிய பின் அவரது அறையை விட்டு வெளியேறியவனின் கண்கள் தன் மனைவியை தேடியது. ஹர்ஷிதாவை அங்கு காணாது அத்தை வீட்டில் இருப்பாளோ என்று யூகித்து அங்கு விரைந்தான் அத்விக்.

போனும் கையுமாய் அமர்ந்திருந்த விக்னவ் அத்விக்கை கண்டதும் “வாடா மாப்பிள்ளை” என்றபடி அவனை வரவேற்று விட்டு ‘ஒரு பத்து நிமிடத்தில் அழைக்கிறேன் அத்துமா’ என்று கைபேசியை அணைத்தான் .

“டேய் இன்னும் இந்த போனில் தான் குடும்பம் நடத்தி கொண்டிருக்கிறாயா?” என்ற அத்விக்கின் கேள்வியில் சிரித்து “அங்கு மட்டும் என்னவாம் என் தங்கையையும் கைபேசியையும் பிரிக்க முடியாமல் செய்து விட்டாயேடா!! ” என்று பதிலுக்கு கேலி செய்தான் விக்னவ்.

கிழித்தாள்… இந்த இரண்டு வாரங்களாக தவறாமல் அவளுக்கு விடும் அழைப்பினை சலிக்காமல் கட் செய்து விடும் அரிசி மூட்டையை நினைத்ததும் கோபம் சுள்ளென்று ஏற “எங்கே மச்சி அவ?” என்றான் அத்விக்.

” என்ன மாப்பு கேட்கிறாய் …புருஷன் வருகிறான் என்று காலையிலிருந்து மாமியார் வீட்டிலேயே தஞ்சம் புகுந்தவளை இங்கு வந்து தேடுகிறாய்” என்று விக்னவ் கூறியதும் மறு வார்த்தை பேசாமல் வந்த வழியே திரும்பினான் அத்விக்.

டைனிங் டேபிளில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் எதையோ எடுத்து விட்டு திரும்பியவளை மற்றவர் கவனம் சிதறாதபடி அவள் வாயை பொத்திய வண்ணம் இரண்டாம் ஹாலில் இருந்த எஸ் வடிவ படிக்கட்டுகளின் மறைவிற்கு இழுத்துச் சென்று தன் முன் நிறுத்தி வைத்தான் அத்விக் .

கண்களை அகல விரித்து யாரோ என்ற திடுக்கிட்ட ஹர்ஷிதா அத்விக்கை கண்டதும் ச்சு இவன் தானா என்பதுபோல் இமைகளை ஒருமுறை தட்டிவிட்டு எளிதாக அவன் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் .

பின் தனக்கு எதிரில் நின்றவனை நிராகரிக்கும் பொருட்டு “விடு அத்வி… எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது” என்று அவனைக் கடக்க முயன்றாள்.

தன்னிடம் கண்ணாமூச்சி ஆடியவளின் மீது எழுந்த கோபம் அவளை கண்ட நொடியில் முற்றிலும் வற்றிப் போயிருக்க அதற்கு நேர்மாறாக இப்போது ஒரு பரவசம் தன்னுள் தொற்றிக் கொண்டதை எண்ணி வியந்தவன் இதுதான் காதல் படுத்தும் பாடோ!!… என்று நினைத்தபடியே உதடு கொள்ளா சிரிப்புடன் “என்ன வேலை என்று சொல்லு அரிசி மூட்டை முக்கியமா இல்லையா என்பதை நான் கூறுகிறேன்” என்று வினவலானான்.

அவன் பேச்சில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்க தவறியவள் “மாமாவுக்கு மாத்திரை கொடுக்கணும்” என்று தன் கையை அவன் முன் நீட்டினாள்.

அதனை பற்றிய அத்விக் இறுக்க மூடியிருந்த அவளது விரல்களை பிரிக்க முயன்றான். இதனை முற்றிலும் எதிர்பாராத ஹர்ஷிதா “என்ன பண்ற விடு கையை” என்று உருவ முயன்றாள்.

அவள் முயற்சியை எளிதாக வென்று அந்த பஞ்சு பொதிக்குள் சட்டையாய் வீற்றிருந்த மிட்டாயை பார்த்ததும் சிரித்தவன் “இந்த சாக்லேட்டை எப்போது சட்டப்படி மாத்திரை என்று அறிவித்தார்கள் ” என்றான் தன் மனைவியிடம்.

அவனது சிரிப்பிலும் அவன் இழுத்த சட்டத்திலும் ஆத்திரமடைந்தவள் “அதை உன்னிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை” என்றாள் வெடுக்கென்று.

” ஹே ஆங்கிரி பேர்ட்…. ஆனா ஊனா சட்டம் பேசுகிறவள் இந்த சின்ன வினாவிற்கு கூட விடை அளிக்காமல் திணறுகிறாய்” என்று வம்பு பேச அவனை முறைத்ததோடு தன் வாய்க்குள் எதையோ முனகியபடி அவனை தள்ளி விட்டு சென்றாள் ஹர்ஷிதா.

“இப்போது என்னை எதற்காகடி அவாய்ட் பண்ணுகிறாய்?” காட்டமாக வெளிவந்தன அவன் வார்த்தைகள்.

அக்கேள்வியில் மீண்டும் அத்விக்கின் அருகில் சென்றவள் ” ‘டி’ போட்டு பேசுகிறாய்…. இரு இப்போதே போய் மாமாவிடம் சொல்கிறேன்” மிரட்டிவிட்டு திரும்பியவளின் கையை சுண்டி இழுத்து சுவரோடு ஒட்டி நிறுத்தினான்.

” நான் என்ன செய்தாலும் உன் மாமாவிடம் சொல்லி விடுவாயா… அப்படி என்றால் முதலில் இதை சொல்லு” என்றபடி மேலும் நெருங்கினான்.

அவன் கண்களிலிருந்த சிரிப்பையும் பேச்சில் பொதிந்திருந்த சல்லாபத்தையும் கண்டுகொண்டு துணுக்குற்றவள் அவசரமாக நன்கு யோசித்துவிட்டு பேச ஆரம்பிக்கும் முன் “என்னவாயிற்று இந்த கண்களுக்கு…. இப்போது இது பிரதிபலிக்கும் ஒரு புதிய உணர்வு…. அது என்னிடமாக இருந்தாலும் சரி ஒரு போதும் இனி அதை நான் இந்த கண்களில் பார்க்க கூடாது… ஆகையால் உன்னிடம் ஒன்றை தெளிவு படுத்துகிறேன்.. நம் வாழ்வில் நீயாக தரும் தருணம் வரும்வரை நானாக எதையும் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ள மாட்டேன்” விஷமமாக பேசியவன் பேச்சு புரிந்தும் புரியாமல் இருக்க” அவனது சிரிப்பு மென்மேலும் விரிவடைந்தது.

கணவனின் சிரிப்பே அவன் கூறியதை மனைவிக்கு விளக்க ” உன்னிடத்தில் எனக்கு என்ன பயம்?” என்று பாய்ந்திருத்தாள் அத்விக்கின் ராட்சஸி.

“இந்த வாய் எப்போதும் என்னிடத்தில் உண்மையாக இருந்ததில்லை மாறாக இந்த கண்களும் என்னிடம் பொய் உரைத்ததில்லை.
இப்போதும் உன் விழிகள் சிறு பயத்தினை எனக்கு கள்ளம் கபடம் இல்லாமல் எடுத்துரைக்கிறது”

” நீ பார்ப்பவர்கள் எல்லாம் உன்னை கண்டு பயம் கொள்வதால் ஊரில் உள்ள அனைவரின் பார்வையும் உனக்கு வித்தியாசமின்றி தென்படுகிறது என நினைக்கிறேன்…. எதற்கும் ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று பரிசோதித்து விட்டு வரலாமா? ஆர்யாவிடம் சிறந்த ஸ்பெஷலிஸ்ட் யாரென்று விசாரிக்கட்டுமா?”

“பேச்சை மாற்றாதே … நான் சொல்லும் கூற்றை ஒன்று ஒப்புக் கொள் இல்லை இல்லை என்று நிரூபி”

” இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்றாள் தன்னை வெளிப்படுத்தி விடும் தொனியில்.

“ஒரே ஒரு கிஸ் கொடு போதும். சின்ன புள்ளை மாதிரி கையில் கொடுத்தால் நாட் அக்ஸப்டட்… கரெக்டா இங்க கொடுக்கணும்” என்று தன் அதரங்களை சுட்டி காட்டியதுதான் தாமதம் “வாட்ட்ட்” என்று வாயைப் பிளந்தவளின் முகம் பயத்தில் வெளிறியது.

முதலில் அவனிடத்தில் அவனது கணவனாகிய பேச்சைக் கண்டு சற்று அதிர்ந்தாளே ஒழிய அவன் சொன்ன பயமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. அப்போதும் நீயாக வரும்வரை நான் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று எதையோ உளறி வேறு வைத்திருந்ததால் என்ன கேட்டு விடப் போகிறான் என்று களத்தில் குதித்தவளுக்கு அவனது வெளிப்படையான கேள்வி எதிர்பாராத தாக்கத்தை உண்டு பண்ண அவனை திட்டவும் நா எழாமல் போனது .

அதிர்ச்சியில் விரிவடைந்த கண்களுடன் சுவற்றை ஒட்டி கொண்டு நின்றவளை காற்றிற்கும் இடைவேளை இன்றி அணுகினான். அவளது வலக் கன்னத்திலிருந்த மச்சம் ‘வா’ என்று அழைக்க கணவனுக்குண்டான தாபத்தில் ஒரு விரல் கொண்டு அம்மச்சத்தை வருடலானான்.

அச்செய்கையில் அகல விரிந்திருந்த இமைகள் தாமாக குடைபோல கவிழ்ந்து கொள்ள அவளது இந்த மந்தகநிலை அவனை மேலும் ஆட்டிப்படைத்தது.

இருந்தும் அவளது செவ்விதழ்களில் மீது படர்ந்த தன் பார்வையை சற்று சிரமப்பட்டு விலக்கி தன்னுள் சிறைபட்ட அழகு சிலையை ரசிக்கலானான். பின்னே அவள் மீது தான் கொண்ட காதலையே நண்பனின் மூலம் உணர்ந்தவனுக்கு அவளது சம்பந்தமின்றி நடந்த இத்திருமணத்திலே பெரும் உறுத்தல்.

ஒருவேளை காதலை உணராமல் அவளை திருமணம் முடித்திருந்தால் இந்நேரம் முன்னேறி இருப்பானோ என்னவோ….

இப்போது அவனுள் தோன்றும் புதிய பரிமாணமும் அவனுக்கு பிடித்துதான் இருந்தது. பிறந்ததிலிருந்து எந்த விதமான சலனத்தோடும் பார்த்திராதவளை ஏன் திருமணம் முடிந்து இத்தனை நாட்களிலும் தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தி அவளுடைய காதலை பெற நினைத்தானே தவிர இந்த விரகங்களுக்கு இடமளிக்கவில்லை.

இப்போதும் அவள் அனுமதியின்றி முன்னேறுவது தவறு என்று தனக்குள் தடைவிதித்து தன்னுள் மயங்கி நின்றவளிடம் தன்னை முற்றிலும் தொலைத்தபடி காவலன் ஆகிப் போனான் அக்காதலன்.

கமிஸனர் சாருக்கு இன்று என்னவாயிற்று….. பேய் பிசாசு ஏதாவது பிடித்துவிட்டதா….. பேச்சுதான் ஒரு மார்க்கமாக இருக்கிறது என்று பார்த்தால் செயலும் எல்லை மீறுகிறதே….. திருமணமானால் இவ்வுணர்வு ஏற்படுவது சகஜம்தானா….. அதுவும் இத்தகைய குறுகிய காலத்தில்…. இதற்கு பெயர்தான் மஞ்சள் கயிறு மேஜிக்கோ…… அப்படி பார்த்தாலும் அதை அணிந்து இருக்கும் எனக்கு எந்த வசியமும் ஏற்படாதிருக்க என்னுடையதும் சேர்த்து அவனையே பாதித்துவிட்டதோ….. இப்போது என்ன செய்யப்போகிறான் என்று வேறு தெரியவில்லையே…… அவனை பிடித்து தள்ள ஒரு நொடி போதும்… அதை செயல்படுத்த விடாமல் என்னை எது தடுக்கின்றது… புறக்கணிக்க வழி தெரியாத போதும் ஏற்றுக் கொள்ளவும் மனம் விளையவில்லை…… தன்னை பற்றிய சுய சிந்தனையை களைத்து தன்னருகில் நின்ற கணவன் தன்னை தீண்டாததை உறுதி செய்து கொண்டு ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். உதட்டில் உறைந்த சிரிப்புடன் துளைக்கும் பார்வையில் காந்தத்தை ஒட்டவைத்து தன்னை இழுக்க துடித்தவனை மெதுவாக விலக்கினாள்.

அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாது நகர முயன்றவளை “நான் கேட்டதைக் கொடுக்காமல் இங்கிருந்து உன்னால் ஒரு அடி கூட நகர முடியாது” என்றான் அத்விக் உறுதியான தொனியில் .

” நான் மாட்டேன்” என்று கூறிய மருண்ட மான் விழியாளின் கையைப் பற்றி அவளது தளிர் விரல்களை பிரித்தெடுத்து அவள் உள்ளங்கையில் ஒளிந்து கொண்டிருந்த கிஸஸ் சாக்லேட்டை எடுத்தவன் “நான் இந்தக் கிஸ்ஸை கேட்டேன் அரிசி மூட்டை. நீ எதை நினைத்தாய்??? ” மர்மப் புன்னகையுடன் வினவினான் அத்விக்.

தன்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் யாவும் கோபத்தை சுனாமியாய் பெருக்கெடுக்க ஒரு பெரு மூச்சை உள்ளிழுத்த ஹர்ஷிதா “தடிமாடு” என்று திட்டியபடி அவனை பிடித்து தள்ளி விட்டு ஓடினாள்.

பின்னால் அத்விக் துரத்துவது தெரிந்து வேகமாக ஓடியதால் எதிரே வந்த ரூபா மீது நன்கு மோதிக்கொண்டாள்.

” சாரி அத்தை” என்று தன் தலையை தடவிக் கொண்டவளிடம் “ஏன் இவ்வளவு வேகம் ஹர்ஷி.. பார்த்து வரக்கூடாதா??” என்று பதறினார் ரூபா.

கணவனை ஓரக்கண்ணால் பார்வையிட்டவாறு “அது வந்து அத்தை….” இழுக்கவும் நடந்ததை ஒருவாறு யூகித்து கொண்ட ரூபா “எதற்காகவும் இனி இப்படி ஓடாதேமா” என்று கூறிவிட்டு ஹர்ஷிதா அறியாவண்ணம் அத்விக்கிடம் தனியே வருமாறு அழைப்பு விடுத்தார்.

“இருங்கம்மா உங்கள் மருமகளை அத்தை வீட்டில் பத்திரமாக விட்டுவிட்டு வந்துவிடுகிறேன்” கண்சிமிட்டியவாறு ரகசிய குரலில் கூறிய அத்விக் மனைவி எதிர்பாராத தருணத்தில் அவளை தூக்கினான்.

” என்ன செய்கிறாய் இறக்கி விடு அத்வி” என்று திமிரியவளிடம் “இப்போது கத்தினால் அப்படியே கீழே போட்டு விடுவேன்” என்று மிரட்ட வேறு செய்தான்.

Advertisement