Advertisement

” என்ன சொன்னீர்கள் ?” தயக்கத்துடன் வெளிவந்தது அத்வியின் குரல்.
” எதை கேட்கிறாய்?” தெரிந்தும் தெரியாதபடி கேட்ட அதிர்ஷடம் “உனக்கு தெரியாதா?” காய்ந்தான் அத்விக்.
” என்ன சொல்லி இருப்போம் என்று நீ நினைக்கிறாய்?” மீண்டும் கேள்வியை திருப்பியவனிடம் “ஒழுங்காக சொல்லுடா” பொறுமை இழந்து கத்தினான் அத்விக்.
” என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்” என்று ஜெகன் தான் கேட்டார் .
“ஹர்ஷி என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் அப்பா” என்றதும் அத்ரிஷை தழுவிக் கொண்டார் ஜெகன். அடுத்து ஹர்ஷியிடம் திரும்பியவர் “உனக்கு சம்மதமாடா?” என்ற குரலில் ஏக்கம் வழிந்தோடியது.
” எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு பி.டி. நீ எங்கள் குடும்பத்தில் பிறந்தது எங்கள் தவத்தினால் என்றுதானே அடிக்கடி கூறுவீர்கள். அது சுத்த பொய். இந்த குடும்பத்தில் பிறக்க நான் தான் எத்தனையோ தவத்தினை மேற்கொண்டிருக்க வேண்டும். என்னை திருமணம் செய்து கொள்வதில் அத்ரிஷிற்கு துளிகூட விருப்பம் இல்லை . இருந்தாலும் என்னிடம் அதை அவன் வெளிக்காட்டவும் இல்லை. இப்போது நான் சம்மதிக்கவில்லை என்றால் எவ்வளவு சந்தோசமாக உணர்வானோ அதே அளவு சந்தோஷத்துடன் நான் ஓகே சொன்னாலும் என்னை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வான். இப்படிப்பட்ட நண்பன் யாருக்கு கிடைப்பான்! நான் விக்கியிடம் பேசியதை விட ஏன் என் வாழ்நாளிலேயே அத்ரிஷிடம்தான் தான் நான் அதிகம் பேசியிருக்கிறேன் . பகிர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட நாங்கள் வாழ்க்கையையும் பகிர்ந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எங்களிடம் மறுப்பு என்பதும் இல்லை” சற்று இடைவெளிவிட்டு “விருப்பு என்பதும் இல்லை மாமா” என்றாள்.
அவளை அணைத்துக் கொண்ட ஜெகன் “உனக்கு ராஜா மாதிரி நான் மாப்பிள்ளை பார்க்கிறேன்டா. என் டார்லிங்கை அவன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளும்படி” என்றார் ஆதங்கத்துடன்.
“ஐயோ பி.டி அந்த மாப்பிள்ளை என்னை அவர் கண்ணுக்குள் வைத்துக்கொண்டால் மற்றவர்களை எப்படி பார்ப்பார்” என்று கண்ணடித்து சிரித்திருந்தாள் ஹர்ஷிதா.
ரொம்ப முக்கியமான கேள்வி பாரு!! என்று மனதிற்குள் அவளை திட்டி தீர்த்த அத்விக்கிற்கு அத்ரிஷுடன் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப் படவில்லை என்னும் செய்தியே குளிர்வித்தது. அது ஏன் என்று அப்போதே சற்று யோசித்து இருக்கலாம். காலம் கடந்தபின் ஞானோதயம் என்பதற்கு ஏற்ப ஹர்ஷிதாவை கூடிய விரைவில் அடுத்தவனுக்கு தொலைத்துவிட்ட பின் தேடப் போகிறான் என்பதை அறியாதவன் மனநிறைவோடு தூங்கச் சென்றான் .
மறுநாள் ஜோசியரிடம் சென்று பெரியவர்கள் விக்னவ் அதர்வனாவின் நிச்சயத்திற்கு நல்ல நாள் குறித்து வந்தனர். தெரிந்த பெண் என்பதால் பெண் பார்க்கும் படலத்தை தகர்த்து விட்டான் விக்னவ்.
” ஏன் மச்சி வேண்டாம் என்கிறாய்… இந்த சாக்கில் உன் ஆளை பார்க்கும் சான்சை மிஸ் பண்ணி விட்டாயே” என்று கேட்ட அத்விக்கிடம் ” அப்படி மிஸ் பண்ணியதால் தான்டா அடுத்த வாரத்தில் அவளை என் மிஸஸ் ஆக்க போவதற்கான நாள் நிச்சயிக்கப்பட போகிறது” என்றபடி உல்லாசமாய் சிரித்தான் விக்னவ்.
” இந்த அம்பிக்குள்ள இப்படி ஒரு ரெமோவாடா … அப்போ அந்த அந்நியனும் இருக்கானா? உன் பாசமலருக்கு ஏதாவது ஒன்று என்றால் பொங்கி எழுவானா? “
“அந்த அந்நியன் கேரக்டரை தான் முழு நேர வேலையாக நீ பார்த்து கொள்கிறாயே.. அவளுக்கு ஏதாவது என்றால் நீ தானே முன்னிற்பாய்… பெட்டர் மை அந்நியன் வில் ஸ்லீப் ஃபார் எவர் மச்சி “
நிச்சயத்திற்கு வேண்டிய ஆடை அணிகலன்களை வாங்கியபின் பெரியவர்கள் நால்வரும் வீட்டிற்கு புறப்பட சிறியவர்கள் நால்வரும் பிரபல மால் ஒன்றிற்கு சென்றனர். வழக்கம்போல் இரட்டையர் அணிகளாக அத்விக்கும் விக்னவும் ஒரு புறம் செல்ல ஹர்ஷியும் அத்ரிஷும் மறுபுறம் பிரிந்து சென்று உலாவினர்.
அத்ரிஷிடம் அவளுக்கு வேண்டிய சில பெயிண்ட் பிரஷ்களை பத்து நிமிடத்தில் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்ற ஹர்ஷிதாவை 30 நிமிடங்கள் கழித்தும் காணவில்லை.
அவளைத் தனியே அனுப்பி இருக்கக்கூடாதோ என்று நொந்து கொண்டபடி அவள் மொபைலிற்கு அழைத்தான் அத்ரிஷ்.
போனில் அவள் இருப்பிடத்தை அறிந்து கொண்ட அத்ரிஷிற்கு கோபம் பெருக்கெடுக்க நொடியும் தாமதிக்காமல் ஓடியவன் அடுத்த நிமிடம் ஹர்ஷிதா முன் பிரவேசித்தான்.
ஒரு ஃபல்லூடாவை வாங்கி அந்த கண்ணாடி டம்ளருக்கு முத்தம் கொடுத்து பருக போன ஹர்ஷிதாவின் கை வேண்டுமென்றே தட்டிவிட பட்டு அந்த கிளாஸ் சுக்குநூறாக கீழே தெறித்து சிதறியது.
“அறிவிருக்கா உனக்கு இதற்காக தான் தனியாக சென்றாயா? இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டு தொலைத்தாய்? எல்லாவற்றிற்கும் ஒரு லிமிட்ஸ் இருக்கு ” ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான் அத்ரிஷ்.
இரண்டாம் தளத்தில் உள்ள வான் ஹ்யூஸன் கடைக்குள் செல்ல முற்பட்ட அத்விக் எதேச்சையாக ராகுலும் மிருதுளாவும் படிக்கட்டின் அருகே நிற்பதை கண்டதும் “நீ உள்ளே போ விக்கி . நான் இதோ வருகிறேன்” என்று விக்னவை கடைக்கு போக சொல்லிவிட்டு ராகுலை நோக்கி சென்றான் .
அவனது வருகையை கண்டுகொண்ட ராகுல் ‘ஒரே நாளில் எத்தனை ஷாக் ஆண்டவா கொடுப்பாய் என்று கடவுளிடம் கேட்டதற்கு இது டீசர் தான் தம்பி மெயின் பிக்சர் இனிமேல் தான் பார்ப்பாய் என்ற கடவுளின் மொழிகளை அறியான்’… ஆகையால் சுதாரித்து கொண்டு மிருதுளாவை எதார்த்தமாக சந்தித்ததாக அத்விக்கிடம் சொல்லும்போது நால்வர் “ஃபுட் கோர்ட்டில் ஏதோ பிரச்சனை போல… கண்ணாடி எல்லாம் சிதறி கிடந்நது” என்றபடி அவர்களுக்குள் பேசி கொண்டு சென்றனர் .
உடனே அந்த இரண்டு காவல் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தனியாக நிற்பதற்கு அவர்கள் பின்னோடு செல்லலாம் என்று நினைத்து செயல்பட்டது மிருதுளாவிற்கு ஆப்பு வைத்தது.
உலக வரலாற்றில் முதன் முறையாக தன் தம்பி அத்ரிஷ் ஹர்ஷிதாவை திட்டி கொண்டிருப்பதை கண்ட அத்விக்கின் கண்கள் அது உண்மை என நம்ப அடம்பிடித்தது. தன் கைகளை கொண்டு கண்களை நன்கு கசக்கி விட்டு மீண்டும் பார்த்தான் . அதற்குள் ராகுல் ஹர்ஷிதாவை பார்த்து விட்டு “எனி பிராப்ளம் ஹர்ஷி” என்றான்.
ராகுலை அடையாளம் கண்டுகொண்ட அத்ரிஷ் சுற்றும் முற்றும் அலசியதில் மிருதுளா அவன் பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள்.
” எப்படி இருக்கிற மித்தூ ? லாஸ்ட் இயர் புதுக்கோட்டையில் கல்யாணத்தில் பார்த்தது. அதன்பிறகு ஆளே தலைமறைவாகிவிட்டாய். ராகுல் சாரை அறிமுகப்படுத்திவை” என்றான் அத்ரிஷ் பல நாட்களுக்கு பிறகு தன் தோழியை கண்ட சந்தோஷத்தில்.
“மிருதுளாவை உனக்கு எப்படி தெரியும் கூடவே அவளிடம் ஏன்டா ராகுலை அறிமுகப்படுத்துமாறு கேட்கிறாய்” பெரிதாக குழம்பிப்போய் கேட்டான் அத்விக்.
ராகுலிற்கும் முதலில் சற்று குழப்பம் தான். பின் அத்ரிஷையும் அவன் பேச்சினையும் யூகித்துக் கொண்டதும் எதிரில் இருந்த சுவற்றின் மீது சென்று முட்டி கொள்ளலாம் போல இருந்தது.
“மித்து என் காலேஜ் பிரண்ட்.. உனக்கு எப்படி அவளை தெரியும் ?” இப்போது அத்விக்கிடம் கேட்பது அத்ரிஷின் முறையானது.
நண்பர்கள் என்றதும் அத்விக்கிற்கு பெரிதாக ஒன்றும் நினைக்கத் தோன்றவில்லை. அப்போதும் ராகுலை பற்றி மிருதுளாவிடம் அத்ரிஷ் கேட்கிறான் என்றால் ராகுலிற்கும் மிருதுளாவிற்கும் அவள் கல்லூரி நாட்களின் போதே பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் . அதனால் தான் ராகுலை அத்ரிஷிற்கு தெரிந்திருக்கிறது என்று கணித்துக் கொண்ட அத்விக் “ராகுலை எப்படி தெரியும்?” விடாது கேட்டான்.
அத்ரிஷை பொருத்தவரை அத்விக்கிற்கு மிருதுளாவை தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. ராகுல் ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் அத்வியும் ராகுலும் நண்பர்களாக இருக்கவேண்டும். ராகுல் மூலமாக மித்துவை அத்விக்கு தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறான எண்ண அலைகளில் தான் அத்ரிஷ் அவன் அண்ணனிடம் கேள்வி எழுப்பியதும். அண்ணனும் தம்பியும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்ள பதிலை நான் சொல்கிறேன் என்று களத்தில் இறங்கினாள் நம் சீவகசிந்தாமணி.
” நீ உன் வேலையை பாரு” என்று ஹர்ஷிதாவை கத்திய அத்விக்கிடம் “அவளிடம் ஏன் கோபப்படுகிறாய்” என்று பாய்ந்தான் அத்ரிஷ்.
” கோபப்படாமல் என்ன செய்வார் சி.டி…. அவரது மித்து டார்லிங்கை ‘அண்ணி’ என்று அழைக்காமல் இப்படி மரியாதையின்றி மித்தூ என்றால் யாருக்குத்தான் கோபம் வராது நீயே சொல்லு”
” வாட்??????” வாயைப் பிளந்தபடி அதிர்ந்தான் அத்ரிஷ்.
ராகுல் ஹர்ஷிதாவை பேசவிடாமல் “ஹர்ஷி ப்ளீஸ் ஸ்டாப்” என்று தடுக்க பார்க்க அதை அலட்சியம் செய்தவள் இன்னும் தெளிவாக சொல்கிறேன் என்ற ரீதியில் ” நேற்று நான் வீட்டில் சொன்னேனே அத்வி ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று. அது வேறு யாருமில்லை நம்ம மித்து தான்” என்று கூறிவிட்டு அங்கு நிற்க முடியாமல் ஓடினாள் ஹர்ஷிதா.
‘ஏற்கனவே எரிந்த பிரச்சனையில் எண்ணெயை ஊற்றி விட்டு ஓட்டத்தை பாரு’ என்று பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அத்விக் ஹர்ஷியை திட்டி தீர்த்து கொண்டிருக்க “அடிப்பாவி” எல்லாம் தெரிந்தும் இப்படி வீட்டிலும் போட்டு வைத்திருக்கிறாளே இவளை எந்த வகையில் சேர்ப்பது என்று குழம்பினாள் மிருதுளா.
மிருதுளாவிடம் விளங்காத பார்வை ஒன்றை வீசிவிட்டு “டார்லிங் நில்லு” என்றபடி ஹர்ஷிதாவின் பின்னால் ஓடினான் அத்ரிஷ்.
வயிற்றைப் பிடித்துக்கொண்டு தன் கன்னங்கள் வழியாக கண்ணீர் பெருக்கெடுக்க சிரித்துக் கொண்டிருந்தவளிடம் “என்ன டார்லிங் இதெல்லாம்?” என்று வினவினான் அத்ரிஷ் .
‘இன்னும் கொஞ்ச நேரம் சிரித்துக் கொள்கிறேன் சி.டி ப்ளீஸ்” என்றவளிடம் அவளது மொத்த சிரிப்பும் கண்ணீரும் அடங்கும் வரை காத்திருந்துவிட்டு விஷயத்தை வாங்க பெற்ற அத்ரிஷ் தன் தோழி மிருதுளாவிற்காக வருந்தினான்.
இன்னும் என்னவெல்லாம் பற்றவைக்க போகிறாளோ அந்த காளியாத்தா என்று அத்விக் அர்ச்சித்து கொண்டிருந்த வேளையில் அவன் முன் ஹர்ஷிதாவும் அத்ரிஷும் எதிர் பட்டனர்.
அத்விக்கிடம் சிரியாமல் தன் வாழ்த்துகளை தெரிவித்தவன் மறக்காமல் “கங்கிராட்ஸ் அண்ணி” என்று மிருதுளாவிடமும் கூறினான் அத்ரிஷ் .
“அத்ரி அது வந்து….” மிருதுளா அசௌகரியத்துடன் இழுக்க “பேசாத …. சாரி பேசாதீர்கள் அண்ணி.. அப்புறம் நான் ஏதாவது பேசி விடப் போகிறேன்” என்றான் அத்ரிஷ்.
அத்ரிஷின் கோபம் நியாயமானது என்பதாலும் இந்த நிலையில் எதையும் விளக்கிக் கூற முடியாது என்பதாலும் அமைதி காத்தாள் மிருதுளா.
பிடிச்சு வச்ச பிள்ளையார் போல நிற்கிறதை பாரு ‘அண்ணி’ என்கிறான் மறுப்பேதும் சொல்கிறாளா? இவள் ஒரு வார்த்தை சொன்னாள் என்றால் நான் பேசமாட்டேனா? வார்த்தை கிடைக்கிறது வார்த்தை… ஒரு பார்வையாவது பார்க்கிறாளா… எல்லாம் என்னை சொல்லணும் .. அன்று புதுக்கோட்டையில் இவளது சம்மதத்திற்கு மதிப்பளிக்காமல் தூக்கி வந்திருக்கவேண்டும்.. மனதிற்குள் பொறுமியவனையும் விட்டுவைக்காமல் “ராகுல் சார் யு ஆர் ரியலி ஆசம் ” என்றான் அத்ரிஷ்.
அத்ரிஷின் குரலில் தென்பட்டது வருத்தமா கோபமா என்று பகுத்தறிய முடியவில்லை. எதுவாக இருந்தாலும் நல்லதுக்கு இல்லை என்று மட்டும் ராகுலுக்கு புரிந்தது.
” உனக்கு எப்படிடா ராகுலை தெரியும்?” மீண்டும் ஆரம்பித்தான் அத்விக்.
” நான் தான் சொன்னேன்ல ராகுல் சாரை இந்த உலகம் முழுக்க திரும்பி பார்க்கபோகிறது என்று. அதற்கு இதுவே ஒரு டெமோ” என்றாள் ஹர்ஷிதா .
“ஆத்தா மாரியாத்தா எனக்கு எந்த புகழும் வேண்டாம் ” ராகுல் நொந்து கொள்ளவும் பொங்கி சிரித்தாள் .
” சிரிக்காதே இருக்கிற கடுப்புல உன்னை கொல்லலாம் போல வருது” அத்ரிஷிடம் தேவையில்லாமல் மிருதுளா பற்றி பற்ற வைத்ததால் அதட்டிய அத்விக்கை ” ஏன்டா அவள் என்ன செய்தாள்?” என்று கேட்டபடி அங்கு வந்த விக்னவின் கையில் ஐந்து ஆறு துணிப்பைகள்.
“விக்கி அண்ணா அதை நான் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தவளின் வாயை பொத்தி ‘நீ இதுவரைக்கும் சொன்னதே போதும்” என்று ஹர்ஷிதாவை இழுத்து மறுபுறம் தள்ளினான் அத்விக்.
அப்படி அவன் தள்ளிய வேகத்தில் தடுமாறியவள் தன்னை நிலைப்படுத்தி நிற்கும்போது யாரோ மீது மோதிக் கொண்டாள். “சாரி” என்று ஹர்ஷிதா நிமிர்கையில் எதிரில் இருந்தவன் “ஹர்ஷி ஆர் யூ ஆல்ரைட்” என்று உறுதிப்படுத்திக் கொண்டு அத்விக் அருகில் இருக்கிறானா? என்றும் தேடினான்.
இங்குதான் இருக்கிறேன் என்பதுபோல புதியவனின் தேடலுக்கு விடையாக அத்விக் காட்சியளிக்கவும் “நீ நல்லா இருக்கணும் ஹர்ஷி. இந்தா இதை எடுத்துக் கொள்” என்று தன் பாக்கெட்டிலிருந்து ஒரு விபூதி பொட்டலத்தை நீட்டினான் அப்புதியவன்.
“காலையில் திருவல்லிக்கேணி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தேன். எப்போதும்போல் உனக்காகவும் வேண்டிக்கொண்டேன். இன்று அந்த தண்டாயுதபாணியே உன்னை என் கண்ணில் காட்டிவிட்டார். தை மாதம் கண்டிப்பாக காவடி எடுத்து விடுகிறேன். அவர் உன்னை காப்பாற்றட்டும்” என்று கூறி விட்டுபுறப்பட்டான் .
“கோகுல் நில்லுடா” என்றபடி விக்னவ் அவன் அருகில் செல்ல “ஆள விடுங்கடா சாமி ” என்று ஒரு பெரிய கும்பிட போட்டுவிட்டு கிளம்பவிட்டான் அந்த கோகுல்.
மற்றவர்கள் அனைவரும் சென்றவனை விசித்திரமாகப் பார்க்க “கீழ்ப்பாக்கத்தில் இருக்கவேண்டிய கேஸ் எல்லாம் மாலில் சுற்றுகிறதே” என்று புலம்பியிருந்தாள் ஹர்ஷிதா.
” யார் டார்லிங் அவன்… என்னென்னமோ உளறிவிட்டு போறான்? எனக்கு தெரியாமல் உங்கள் மூவருக்கும் தெரிந்தவன் போல் இருக்கிறான்” என்ற அத்ரிஷின் கேள்விக்கு “நம்ம ஸ்கூல் தான். விக்கி கிளாஸ் . ஒரு நாள் அப்பா வாங்கி கொடுத்த பார்க்கர் பேனாவை விக்கி தொலைத்து விட்டான் என்று பயங்கரமாக சண்டை போட்டேனே ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டு விட்டு “அந்தப் பேனாவை ரத்னா அக்கா வீடு பெருக்கும்போது எடுத்துக் கொடுத்தார்கள். ரொம்ப திட்டி விட்டோமே என்று விக்கியிடம் சாரி கேட்க அவன் க்ளாஸுக்கு சென்றேன். அன்று தான் கோகுலை பார்த்தேன் . ஆனால் அன்றிலிருந்து தினமும் என்னைப் பார்க்க என் வகுப்பிற்கு வந்து விடுவான்.
ஒரு நாள் என்னிடம் வந்து ‘நாளைக்கு உனக்கு சர்ப்ரைஸ் ஹர்ஷி’ என்று சொல்லிவிட்டு செல்லவும் அவனது நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு ஒரு லவ் லெட்டர் கொடுக்க போகிறான் பாரு என்று அதர்வனாவிடம் கூட பெட் கட்டினேன். கடைசியில் இதேபோல் தான் அன்றும் ஒரு திருநீர் பொட்டலத்தை என் கையில் திணித்தான். ‘நீ நல்லா இருக்கணும் ஹர்ஷி என் உயிர் உள்ளவரை தினமும் உனக்காக நான் மனமார வேண்டிக் கொள்வேன்’ என்று சொன்னான் பாரு எனக்கு அப்படியே அவன் மூஞ்சியில் ஒரு குத்து விடும் போலிருந்தது.
ஆனால் இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் ஒரு பெரிய கட்டும் கை கால்களில் சிராய்ப்புகளுமாக வந்த கோகுலை அடிக்க மனம் வராமல் விட்டு விட்டேன்” என்று தன் குட்டி கதைக்கு முற்றுபுள்ளி வைத்தாள் ஹர்ஷிதா.
” டேய் இது உன் வேலையா?” என்று விக்னவ் அத்விக்கிடம் சந்தேகமாய் கேட்டான்.

Advertisement