Sunday, May 5, 2024

Oru Kaava(tha)lanin Kathai 19

4554

Advertisement

ராகுல் போன் செய்தவுடன் நாகரீகமாக எழுந்து வெளியேற சென்றவனை தடுத்த ஹர்ஷிதா “இந்தா அத்வி இந்த தாலியை என் கழுத்தில் கட்டி விட்டு போய் அந்த போனை அட்டென்ட் பண்ணு” என்று நிறுத்தினாள்.

இவ்வளவு பாசமாக நேசமாக ஆசையாக பரிவாக மிருதுவாக காதலாக திருமணம் செய்து கொள்ள யாரும் கேட்டிருக்க மாட்டர்!!!! அவ்வளவு கடுமை குடிகொண்டிருந்தது அவள் முகத்தில்!!!

ஆர்யன் ஒருவனைத் விடுத்து அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெறித்தது.

அத்ரிஷும் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை . ஹர்ஷிதா பிறந்ததிலிருந்து வீட்டினரின் கூற்றுப்படி அண்ணியாகவே ஏற்றுக் கொண்டிருந்த அத்ரிஷின் மனதிற்கு அத்விக் செய்து வைத்த குளறுபடியால் யாரும் நினைத்து பார்க்காத வண்ணம் அவசரமாக அவளுக்கு நிச்சயமாகி இருந்ததும் வருத்தமாக தான் இருந்தது.

இப்போது அவள் எடுத்திருக்கும் முடிவு அவசரத்திலா அல்லது நன்கு யோசித்தா என்பது தெரியாது. ஆனால் மனதிற்கு நிறைந்த ஒன்றாக இருந்தது. பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்த தமையனை “அத்வி” என்று அத்ரிஷ் உலுக்கியதும் சுய உணர்வு அடையப் பெற்று “ஆர் யூ சீரியஸ்?” என்றான் தன்னை தாலி கட்ட சொன்னவளிடம்.

“ஐ.சி.யூ விற்குள்ளே நின்றுகொண்டு சீரியஸானு கேட்கிறாய்” சண்டைக்கோழி திருப்ப “கல்யாணம் பண்ணிக்கொண்டு சண்டையை ஆரம்பிக்கிங்கடா” என்றான் அத்ரிஷ்… எங்கு அவள் மனம் மாறி விடுமோ என்ற அச்சத்தில்!

பெரியவர்கள் குறுக்கீடு இல்லாமல் போகவும் “உனக்கு இதில் விருப்பமா?” என்றான் அத்விக் இரண்டாவது கேள்வியாக .

“உன் விருப்பத்தை பற்றி கூட யாரும் இங்கு கேட்கவில்லை. நம் திருமணம் மாமாவின் மனதை லேசாக்குவதோடு தைரியத்தையும் கொடுக்கும். எல்லாவற்றையும்விட அதுவே இப்போதைய நம் முதல் தேவை. இனியாவது ஒரு டீச்சர் போல கேள்வி கேட்டுக் கொண்டே இருக்காமல் சொன்னதை செய்” என்றவளின் வார்த்தைகளே உணர்த்தின அவளின் அனலை.

“ஆனாலும் கல்யாணம் …. ” அத்விக் ஆரம்பிக்கும் போது ” எனக்காக யாரும் அவனை கட்டாயபடுத்தாதீர்கள் …. என் கண்ணனால் ஏற்கனவே காப்பாற்றப்பட்ட உயிரை மீண்டும் பிழைக்க வைப்பதற்காக அவனுக்கு பிடிக்காத ஒரு பந்தத்தில் திணிக்க வேண்டாம்” சிரமப்பட்டு கூறினார் ஜெகன்.

” என்ன சொல்கிறீர்கள் அப்பா ….”என்று அத்விக் கேட்டதும் “அன்று தீவிரவாத தாக்குதலின் போது நானும் அந்த ரயிலில் தான் இருந்தேன். எப்படி சாமர்த்தியமாய் அத்தனை உயிர்களை காப்பாற்றினாய்…. ஓடி வந்து உன்னை தழுவ என் கைகள் துடித்தன… ஆனால் அப்போது ராகுல் ‘என்னடா நம் மீது எவ்வளவு வெறி இருந்தால் நம் கம்பார்ட்மெண்டில் இரண்டு வெடிகுண்டை வைத்து இருப்பார்கள்’ என்று கேட்ட கேள்விக்கு “உன்னை பிடிக்காத அப்பா உனக்கு இருப்பின் இன்னும் எத்தனையோ வெடிகுண்டுகளை பார்க்க வேண்டியிருக்கும் இதெல்லாம் ஜுஜுபி மச்சி” சிரித்துக்கொண்டே நீ சொன்னதை பார்த்ததும் அங்கிருந்து ….. “

கண்கள் கலங்க பேச முடியாது திணறியவரிடம் “அப்பா ப்ளீஸ் ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க” அவரை அத்விக் நிறுத்த பார்க்க மறுப்பாக தலையசைத்ததோடு

“ஹர்ஷி பிறந்ததிலிருந்து என் மருமகளாக தான் பார்க்கிறேன் கண்ணா. உங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தால் என் சந்தோஷத்தின் அளவை எண்களால் நிர்ணயித்து விட முடியாது தான். ஆயினும் உன் விருப்பத்திற்கு மாறான இச்செயலில் உடன்பாடில்லை கண்ணா” என்றார் ஜெகன்.

இப்போது என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்வியை கண்களில் சுமந்து நின்ற ஹர்ஷிதாவின் மனதை சரியாக கணிக்க முடியவில்லை. நிச்சயம் இத்திருமணம் அவள் மனமுவந்து ஏற்றுக் கொண்டது அல்ல. இந்த சூழ்நிலையில் அவளை தன்னவளாக ஆக்கிக்கொள்ள அத்விக்கின் மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. தன் மனதை அவளுக்கு உணர்த்தி அவளது சம்மதத்தையும் பெற்றுக் கொண்ட பின்பு முறையாக மணம் புரிந்து கொள்வது தான் நல்லது என்றும் பட்டது.

எதுவும் சொல்லாமல் நின்ற அத்விக்கை பார்த்தபடியே “அப்பா தானே உங்களை ஹர்ஷிக்கு திருமணம் செய்ய நிச்சயம் முடித்து வைத்தார். நீங்கள் அவளை கட்டிக் கொள்வதுதான் முறையும் கூட. ஆகையால் அவள் கழுத்தில் நீங்களே தாலியை கட்டி விடுங்கள் ஆர்யன்” என்று அத்ரிஷ் முடிவு விழங்க இந்த இக்கட்டான சூழ்நிலை புரிந்த போதும் அவளை மறுக்கவும் தோன்றாமல் ஏற்கவும் முடியாமல் வாயைத் திறக்காது ஹர்ஷியை பார்த்தவாறு நின்றான் ஆர்யன்.

மரகதம் “கல்யாணம்னா விளையாட்டா ஆயிடுச்சா?” என்று அத்ரிஷை கடியவும் “நீ தானே அப்பத்தா அன்று சொன்னாய் ஹர்ஷிக்கு நான் மூத்தவன் என்றும் அவளை மணமுடிக்க அத்விக்கு இருக்கும் எல்லா உரிமையும் எனக்கும் இருக்கு என்று அதனால்….” கூறியவாறு அத்ரிஷ் ஹர்ஷிதாவை நெருங்குவதற்குள் அவளின் கையிலிருந்த தாலியை பிடுங்கி அவள் சம்மதத்தையும் வேண்டாது அவள் கழுத்தில் அணிவித்திருந்தான் அத்விக்.

சொந்த பந்தங்களின் படை சூழாமல்…. ஐயர் மந்திரங்கள் ஓதாமல்…. முறைப்படி சடங்குகள் செய்யாமல்…. கெட்டி மேளம் கொட்டாமல்…. அக்னியை சுற்றி வலம் வராமல்…. தலதலவென பட்டுடை உடுத்தாமல்…. அர்ச்சனை தூவ பெறாமல்…. மாலை மாற்றி கொள்ளாமல்…. புகைப்படங்கள் எடுக்காமல்…. நண்பர்கள் பட்டாளம் கேளிக்கை செய்யாமல்…. காதல் பார்வை பரிமாறப்படாமல் நிகழ்ந்தேறியது அத்விக் ஹர்ஷிதாவின் திருமணம். ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே அவர்கள் குடும்பத்தாரின் மனங்கள் நிறைந்ததோடு அதுவே தம்பதியனருக்கு கோடிக்கணக்கான ஆசிர்வாதத்தையும் வாரி இறைத்திருந்தது.

“ஹர்ஷியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாத இவனா இன்னொரு பெண்ணை விரும்பி இருப்பான். மனதை சஞ்சல படுத்திக் கொள்ளாதீர்கள் அப்பா” என்று ஜெகன் காதில் மென்மையாக அத்ரிஷ் கூறியது அவருக்கு ஆயிரம் யானை கொண்ட பலத்தை அளித்தது என்னவோ விந்தையே.

‘அப்பாடா ஒரு வழியாக தாலியை கட்டி விட்டாயா’ என்று நினைத்தவள் ஜெகனின் அருகில் சென்று “இப்போது நான் உங்களின் சட்டபூர்வமான மருமகள் பி.டி ” என்று தன் தாலியை எடுத்து காட்டியவள் “என் திருமண பரிசாக நாளையை அறுவை சிகிச்சையை நல்லபடியாக முழுமனதுடன் வென்று வரவேண்டும் ” என்றாள் ஹர்ஷிதா.

” நிச்சயமாக டார்லிங்” என்று ஜெகன் கூறியது அங்கிருந்தோர் மனதை லேசாக்கியது.

அடுத்த நாள் காலையில் ஜெகனை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்து செல்லப்பட்டதும் ரூபாவின் கலக்கத்தை அவரது அழுகை வெளிப்படுத்தியது.

” நீங்கள் ஏன் அத்தை அழுகிறீர்கள்…. நியாயப்படி பார்த்தால் இன்னேரம் நீங்கள் ஒரு ஆங்கிரி பேர்ட் ஆக மாறி இருக்க வேண்டாமா…. உங்களை விட அந்த தடிமாட்டின் மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார் …. பேசாமல் மாமா மீது ஒரு வழக்கு தொடருவோம்…. நிச்சயம் தீர்ப்பு நம் பக்கம் தான் வரும்” என்றவளின் தலையில் ஒரு போடு போட்டார் பிருந்தா.

” இனியாவது என் மருமகனை அத்தான் என்று கூப்பிட்டு பழகு” என்றார்.

” இன்னொருவரின் மனைவி மீது கைவைத்து உங்களை ஐபிசி செக்சன்…… ஐயோ மறந்துவிட்டதே சரி பரவாயில்லை….. ஏதோ ஒரு செக்சன்லே உள்ள தள்ளி கம்பி எண்ண வைத்துவிடுவேன்… பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று ஹர்ஷிதா தன் அன்னையை மிரட்டவும் “செய்தாலும் செய்வாள் அண்ணி… எதற்கும் என் மருமகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்” தன்னிலை மறந்து சிரித்தார் ரூபா .

அதில் அருகில் நின்ற அத்விக்கின் இறுக்கமும் சற்று தளர்ந்திருக்க அவனுள் துளிர் விட்டிருந்த சிறு குழப்பமே மேலோங்கியிருந்தது. படபடப்பாய் பொரிந்து தள்ளுபவள் தாலி கட்டிய நொடியிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை பேசினாள் இல்லை.

அவளது கையிலிருந்த தாலியை நான் வாங்கும் சமயத்தில் ஒரு பார்வை… அப்பார்வையில் ஒளிந்திருந்த செய்தியை அறிந்து கொள்ளவும் முடியவில்லை. இத்திருமணத்தை அவள் மனமுவந்து கேட்கவில்லை என்ற போதும் தன்னை ஏற்றுக் கொள்வதில் எந்தவித எதிர்ப்பும் அவளிடம் இருக்காது என்ற அவனது நினைப்பை பொய்யாக்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி.

ஜெகனிற்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடித்து ரூமிற்கு மாற்றியபின் அவரது உடல் நிலை சீராக முன்னேறத் தொடங்கியது.

அன்று அவரை பார்த்து விட்டு வீடு திரும்ப அத்ரிஷின் வருகைக்காக பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த ஹர்ஷிதாவின் அருகில் சென்று தன் டுகாட்டியை நிறுத்திய அத்விக் உன்னிடம் சற்று பேச வேண்டும் ஏறு” என்றான் .

அதற்குள் “போகலாமா டார்லிங்” என்றபடி அத்ரிஷ் வரவும் அத்விக்கை சுற்றி அத்ரிஷின் பின்னால் ஏறி அமர்ந்தவள் “யெஸ் சி.டி போகலாம்” என்றாள்.

சுருக்கென்று ஏறிய கோபத்தை தன்னுள் புதைத்து “உன் டார்லிங் கூட ரெண்டு நிமிஷம் பேசிவிட்டு பத்திரமாக அவர்களை வீட்டில் விட்டு விடுகிறேன்” என்றான் அத்விக் தன் தம்பியிடம் .

“போங்க அண்ணி…. அண்ணா ஏதாவது மிரட்டினால் உடனே கூப்பிடுங்கள் அண்ணி… ஓடோடி வந்து விடுகிறேன் அண்ணி” நொடிக்கொரு தரம் அவன் அழைத்த அண்ணியில் எரிச்சலடைந்தவள் வண்டியை விட்டு இறங்கி அத்ரிஷை திட்ட தொடங்கும்முன் “பாய் அண்ணி… ஹாவ் எ ரொமான்டிக் ரைட்” என்று கிளம்பி விட்டிருந்தான் அத்ரிஷ்.

அத்விக்குடன் செல்ல விருப்பம் இல்லாததால் ஒரு ஆட்டோவை பிடிக்க இரண்டு எட்டு எடுத்து வைக்கவும் ஒரு கார் அவளருகில் வரவும் சரியாக இருந்தது.

அதிலிருந்து இறங்கிய ரூபா “வீட்டிற்காமா?” என்றதோடு அவள் ஆட்டோவை கூப்பிடுவதையும் பார்த்துவிட்டு அவர் வந்த காரில் வீட்டிற்கு செல்லுமாறு பணித்தார் .

அப்போது அங்கு வந்த அத்விக் தான் ஹர்ஷியை வீட்டிற்கு கூட்டி போவதாக சொல்லிவிட்டு இங்கு ஒரு கார் தேவைப்படும் என்றும் டிரைவரையும் மருத்துவமனையிலேயே இருக்கும் படி கூறினான். ரூபாவின் முன் தன் எதிர்ப்பை காட்ட மனமின்றி தன் கணவனுடன் புறப்பட்டாள் ஹர்ஷிதா.

இப்பயணத்தில் தன் மனதில் இருப்பதை தெள்ளத்தெளிவாக அவளிடம் கூறிவிட முனைந்தவன் “இந்த திருமணத்தை அப்பாவிற்காக மட்டும் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியும் . ஆனால் நான் உன்னை மனமார நேசிக்கிறேன் ஹர்ஷி… எப்போதிலிருந்து எல்லாம் தெரியாது. ஆனால் நீ இல்லை என்றால் என்னால் எதுவும் முடியாது…. சின்ன வயதில் இருந்தே நீ என்னுடையவள் என்பது பசுமரத்தாணியாய் என்னுள் பதிந்துவிட்டது. அன்று நமக்குள் ஒத்துவராது என்று உன்னை விட்டுவிட்டு நான் சென்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்…. ஆனால் உண்மையில் உன்னை விட்டுக் கொடுக்க முடியாததால் தான் நான் சென்றேன்… எப்போதும் உன் நினைவலைகளில் தான் வாழ்ந்தேன்…. என்னை நான் புரிந்துகொள்ளவே இத்தனை காலம் தேவைப்பட்டது… உன்னை எதிலும் நான் கட்டாயப் படுத்துவதற்காக இதை சொல்லவில்லை… எப்போது நான் மிருதுளாவை காதலி என்று அறிமுகப்படுத்தும்போது அதை ஏற்றுக் கொண்டாயோ அப்போது உன் மனம் என்னிடத்தில் சாயவில்லை என்பது புரிகிறது…. உனக்கு இதை சொல்லியே ஆகவேண்டும்… மிருதுளா எனக்கு ஒரு நல்ல தோழி… அவளைக் காதலிப்பதாக பொய் சொன்னேன்…. என்னை நீ மிஸ் பண்ணுவாய் என்று நடத்திய நாடகத்தினால் உன்னை தான் நான் மிஸ் பண்ணும் படியாக நேர்ந்தது… உன்னைப் பிரிந்து இத்தனை காலம் இருந்த சமயத்தை விட ஆர்யாவுடன் உனக்கு நிச்சயக்கப்பட்டவுடன் தான் அதுவும் உன்னை கூடவே வைத்துக்கொண்டே அதிகம் மிஸ் பண்ணினேன்….. நாளை மும்பைக்கு செல்ல இருக்கிறேன். உன்னையும் கூட கூட்டிச்செல்ல கொள்ளை ஆசைதான்… ஆனால் மறுத்து விடுவாயோ என்று கேட்கவே தயக்கமாக இருக்கிறது… ஆனால் நிச்சயமாக எனக்கு தோன்றுகிறது கூடிய விரைவில் என்னை புரிந்து கொண்டு நம் பந்தத்தை ஏற்றுக் கொள்வாய் என்று…. இப்போது எனக்காக ஒன்று மட்டும் செய் அரிசி மூட்டை… ஃபோன் பண்ணினால் அட்டென்ட் பண்ணு சரியா?” என்று எங்கும் நிறுத்தாமல் பேசியபடி வந்த அத்விக் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் .

அவன் பேச்சிற்கு “ம்ம்ம்” கூட போடாது வந்தவள் இப்போது திட்டவாவது செய்வாள் என எதிர்பார்த்தால் அவள்பாட்டிற்கு பதில் ஏதும் சொல்லாது வீட்டினுள் செல்ல ஒரே ஓட்டத்தில் சென்று தடுத்தான் அத்விக்.

ஹர்ஷிதாவின் பிடிக்காத தன்மையை கண்டு வெகுவாக ஏற்பட்ட அதிர்ச்சி கோபத்தை கொடுக்க “பைத்தியக்காரன் மாதிரி உளறிட்டு இருக்கேன் ஒன்றுமே சொல்லாமல் போனால் எப்படி” என்று காட்டமாக கேட்டான் .

தன் காதுகளில் இருந்து வயர்லெஸ் ஹெட் செட்டை கழற்றியவள் ஏதேனும் வேண்டுமா என்றபடி நோக்கினாள். அவளை கண்டு திடுக்கிட்டவன் “நான் பேசியது எதையும் நீ கேட்கவில்லையா?” என்றதற்கு இடமிருந்து வலமாக தன் தலையை ஆட்டி தன் பதிலை தெரிவித்தாள் அவன் மனைவி.

மேலும் “எக்ஸ்க்யூஸ்மீ ” என்றவாறு அவனை கடக்க முயன்றபோது “ஏய் நில்லு… மிருதுளா பற்றி….” விளக்கம் கொடுக்க போனான் அத்விக்.

“உனக்கு மிருதுளாவிடன் பேச வேண்டுமென்றால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” அவசரமாக மொழிந்தவள் அதே வேகத்தோடு அவன் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் உள்ளே விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.

தூங்குற பிள்ளையை எழுப்பலாம் தூங்குவது போல் நடிக்கும் பிள்ளையை!!! நான் என்ன பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டேனென்று வீம்போடு திரிகிறவளை எவ்வாறு தடுக்க முடியும்…. இப்போது அவள் பின்னோடு சென்று அவளிடம் வலுக்கட்டாயமாக தன் கூற்றை எடுத்துரைத்தாலும் அவளை தன் வழிக்கு கொண்டுவர முடியாது… அதை விட தலையாய கடமை நிறைய இருப்பதால் தன் பணியை நோக்கி புறப்பட்டான் அத்விக்.

Advertisement

error: Content is protected !!