Advertisement

“நான் இத்தனை நாட்களாக உங்களிடம் மிஸ் பண்ணிய நாட்கள் எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கப் போகிறேன். உடலில் தெம்புடனும் மனதில் நிம்மதியுடனும் இந்த போதா காலத்தை கடந்து வந்து விடுங்கள். உங்கள் கண்ணன் உங்களுடனே இருக்கிறேன். நாளை ஒரு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய போகிறார்கள் அதில் முழுதாக குணம் அடைந்து விடுவீர்கள். ஸ்ட்ரெஸ் செய்யாது பார்த்துக் கொள்ள வேண்டும் அப்பா” என்று அவர் கையை பிடித்த வண்ணம் கூறியவனிடம் அறைக்குள் நுழைந்தவள் மீது பார்வையை செலுத்திய ஜெகன் மறுப்பாக வேண்டாம் என்று தலையசைத்தார்.

அவர் உணர்த்திய எதிர்ப்பை தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு “என்னப்பா?” என்று அத்விக்கின் கேள்விக்கு “என் கண்ணனிடம் என்னை வெளிப்படுத்தி விட்டேன். இதுவே எனக்கு நிறைவானதாக இருக்கிறது . இதுதான் ஆண்டவன் எழுத்துப் போலும். நடப்பது நடக்கட்டும். இன்னொரு ஆபரேஷனுக்கு எல்லாம் என் உடலும் சரி மனதும் சரி ஏற்றுக்கொள்ளாது. இனி இருக்கும் நாட்களை என் கண்ணனுடன் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன்” என்றார் ஜெகன்.

“மனதை தேவையில்லாமல் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் அப்பா. எத்தனையோ லட்சம் பேர் இதுபோன்ற சூழ்நிலையை எளிதாக வென்று வர உங்களால் எப்படி முடியாமல் போகும்…. ஆரோக்கிய விஷயத்தில் எப்போதுமே கூடுதல் கவனத்துடன் செயல்படுவீர்கள். இப்போது நானும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் சமயத்தில் உடல் மனம் இரண்டிலும் கூடுதல் வலிமையுடன் இருக்க வேண்டாமா .. எல்லாவற்றையும் விட எனக்கு நீங்கள் வேண்டும் என்பது உங்களுக்கு புரியவில்லையாப்பா” வலிகளை சுமந்து கொண்டு வினவியவனை பார்த்து மீண்டும் “என்னால் முடியாது” என்றார் ஜெகன்.

தன் அப்பா தான் பேசுகிறார் என்பதை இன்னும் அத்விக்கால் நம்ப முடியவில்லை. உலக இயற்கை ரீதியாக சிறிது பயத்தினால் உடனே அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்காவிட்டாலும் எடுத்து சொன்னால் அப்பா கேட்டுக் கொள்வார் என்று நம்பினான். இப்போது அவர் நடந்து கொள்ளும் விதம் புதிராக புரியாமல் போக “என்னப்பா இது வீண் பிடிவாதம் எந்த ஒரு காரியத்தையும் நடைமுறையில் இறங்கி பார்க்காமல் அதை முடியாது என்று சொல்லக்கூடாது என்று கற்று தந்தவர் நீங்கள் தானே. அப்படி இருக்க நீங்க இதை மறுப்பது என்று ஆச்சரியமாக இருக்கிறது இனி உங்களிடம் எடுத்துச் சொல்லி பயனில்லை நான் மருத்துவரிடம் போய் பேசிக் கொள்கிறேன் ” என்றான் அத்விக் ஆதங்கமாய் .

“ஒருவேளை இந்த ஆபரேஷன் நடந்து நான் இறந்துவிட்டால்….. ” கூறவும் மருத்துவமனை என்பதையும் மீறி “அப்பா” என்று கத்தினான் அத்விக். அந்த சத்தத்தில் வெளியில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு உள்ளே வர அவர்களை அறையினுள் இருந்த ஹர்ஷிதா “பயப்பட ஒன்றுமில்லை” என்று சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினாள்.

பின் அத்விக்கிடம் “கன்ட்ரோல் யுவர்செல்ப் அத்வி… இது ஹாஸ்பிடல். முடிந்தால் அமைதியாக பேசு. இல்லாவிடில் பேசாதே” என்று கண்டனம் தெரிவித்துவிட்டு ஜெகன் அருகில் வந்தவள் “என்ன பி.டி உங்களுக்கு பிரச்சனை” மிரட்டும் தொணியில் வெளிவந்தன ஹர்ஷிதாவின் வார்த்தைகள் .

“எனக்கு என்னடா பிரச்சனை…. என் கண்ணனை கையில் ஏந்திய தினத்தை விடவும் ஒரு கம்பீரமான ஆபிஸரின் கையில் சரிந்த இந்த தினத்தையே பெருமையாக கருதுகிறேன்” மகனைப் பார்த்தவாரே கூற “ஆனால் ஒரே ஒரு வருத்தம் தான்டா அன்று உனக்கு கொடுத்த வாக்கினையும் காப்பாற்ற முடியவில்லை. உன்னை ஒரு நல்ல துணையின் கையிலாவது ஒப்படைக்கலாம் என்று பார்த்தால் அதுவும் முடியாமல் போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. உன்னை மணக்கோலத்தில் கண்டுகளிக்க கூடிய பாக்கியம் எனக்குக் கிட்டவில்லையே” என்று கண்களை திறக்காதவாறு கூறி வருந்தினார் ஜெகன்.

” ஓ!! நான் இப்போது கல்யாணம் செய்து கொண்டால்…. என்னை மணக்கோலத்தில் நீங்கள் பார்த்துவிட்டால்…. இந்த ஆபரேஷனுக்கு சம்மதம் தெரிவிப்பீர்கள் அப்படிதானே!!” என்று அவளுக்கே கூறி கொண்டவள் ஜெகனின் பதிலை எதிர்பாராமல் வெளியே சென்று விட்டாள்.

” நல்ல நாள் பார்க்க வேண்டாமா… நில்லு ஹர்ஷிமா… விளையாட்டுத்தனமாய் ஏதேனும் செய்து விடுமுன் அவளை தடுத்து நிறுத்து கண்ணா ” என்று மகனிடம் மொழிந்தவர் மருந்தின் தாக்கத்தால் தூங்கிப் போனார் .

ஆர்யனின் அறைக்குள் அவள் செல்வது அத்விக்கிற்கு தெரிந்தது. அப்பா ஒருபுறம் இடியால் தாக்க இந்த அடங்காப்பிடாரி மறுபுறம் மின்னலாய் வெட்ட செய்வதறியாது நின்றான் அத்விக்.

ஹர்ஷிதாவிடம் இப்போது என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள மாட்டாள் . அவளிடத்தில் எதையும் எடுத்து கூறிவிடும் மனநிலையில் அத்விக்கும் இல்லை.

அதிமுக்கிய காரியம் ஒன்று அவன் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கி கொண்டிருக்க காதலை புறம் தள்ள சிறு அவகாசம் எடுத்து கொண்ட அத்விக் கண்களை இறுக்க மூடி திறந்தான். பின் ஆர்யனிடம் தன் தந்தையின் எண்ண ஓட்டங்களை எடுத்துரைக்க விரைந்தான் .

“இந்த அறுவை சிகிச்சையின் 50 சதவீத வெற்றியை ஜெகன்அங்கிளின் தன்னம்பிக்கையும் ஒத்துழைப்புமே தீர்மானிக்கிறது . அதனால் எப்படியாவது அவரது முழு சம்மதத்தோடு ஆப்பரேஷனை நடத்துவதே நல்லது’ என்று கைவிரித்தான் மருத்துவனாகிய ஆர்யன்.

தன் வருத்தமெல்லாம் அப்பாவை தாக்கியவன் மீது சூறாவளி கோபமாய் விஸ்வரூபம் எடுக்க தன் கைபேசியை எடுத்த அத்விக் ராகுலிடம் அரைமணி நேர உரையாடினான்.

பின் சோகமே உருவாய் அங்கொரு நாற்காலியில் அப்பாவின் போனை பார்த்தபடி அமர்ந்திருந்த ரூபாவை கண்டதும் தன் பணியை சற்று புறம் தள்ளிவிட்டு அவரருகில் சென்றான்.

“அப்பாவிற்கு ஒன்றும் ஆகாது அம்மா” என்றபடி அத்விக் ரூபாவின் தோளில் சாய போனில் இருந்து பார்வையை விலக்கியவர் “என்னிடம் கூட மறைத்து வைக்க எப்படிடா அவருக்கு மனம் வந்தது …. எல்லா வலியையும் அவருக்குள்ளே புதைத்துக்கொண்டு சிரிப்பை மட்டுமே என்னிடத்தில் எதற்காக வழங்க வேண்டும்… இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் உங்கள் இருவரையும் நான் பார்த்துக் கொள்வேன் என்று எப்படி அவர் நம்பலாம் …. என்னைப் பற்றி முழுதாக அவருக்கு தெரிந்தும் இப்போது விளையாடி பார்க்கிறாரா” மகனிடம் அழுகையுடன் கேட்டார் ரூபா.

“இப்போது தான் அம்மா நாம் நம்பிக்கையாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அப்பாவை எளிதாக பயத்திலிருந்து வெளிக்கொணர முடியும். நாமே அழுதுகொண்டிருந்தால் எப்படிமா…. முதலில் இந்த டீயை குடியுங்கள்… அப்பாவிற்கு சீக்கிரம் சரியாகிவிடும் ” அம்மாவிற்கு தெம்பூட்டும் விதமாய் பேசிக் கொண்டிருந்த அத்விக்கின் கண்களில் ஜெகன் கைபேசியில் ஒளித்த சீருடை அணிந்திருந்த தன் புகைப்படம் சிக்கியது.

அதுவரை குற்ற உணர்வையும் அழுகையையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன் தன் உருவத்தை அப்பாவின் கைபேசியில் கண்டதும் மடை திறந்த வெள்ளமாய் கதறி துடித்து விட்டான். “நானே உங்களை சிதைத்து விட்டேனே அப்பா… உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு இடம் தாருங்கள் என்றதற்கு மொத்த இதயத்தையும் அள்ளிக் கொடுத்தீர்களே…. அதற்கு கைமாறாக உங்கள் இதயத்தை தொலைத்து விட்டு நிற்கிறேனே அப்பா . இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டி வரும் என்று தெரிந்திருந்தால் உங்களிடம் நான் பேசி இருக்கவே மாட்டேனே….கண்ணா என்று அழைக்க சொல்லி கேட்டிருக்கவே மாட்டேனே….. இப்படி உங்களை என்னால் பார்க்கவே முடியவில்லை அப்பா ….என்னை திட்டினாலும் கம்பீரமாக இருக்கும் அப்பா எனக்கு வேண்டுமே…..” யார் என்ன சொன்னாலும் அத்விக்கை கட்டு படுத்த முடியவில்லை.

ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த ஹர்ஷிதாவிடம் மரகதம் “நீ சொன்னால் தான் அத்வி அமைதி ஆவான். அவனிடம் சென்று அழுகையை நிறுத்த சொல்லு” என்று கூறியதற்கு ஹர்ஷிதா சற்று சத்தமாகவே “நான் எதற்காக நிறுத்த செல்லவேண்டும் … மாமாவின் நிலைக்கு காரணமே அவன்தான். ஊரை எல்லாம் காப்பாற்றுகிறவனுக்கு அவன் அப்பாவை பாதுகாற்று கொள்ள தெரியவில்லை” இரக்கம் துளியும் இல்லாமல் கல் நெஞ்சோடு கடிந்தாள் .

” ஹர்ஷி வாயை மூடு” என்று கூறியபடி அவள் வாயில் ஒன்று போட போன பிருந்தாவை தடுத்திருந்தான் அத்விக்.

ஆனால் அச்செயலில் மேலும் வெறுப்பானவள் “எங்க அம்மா என்னை அடிக்க எல்லா உரிமையும் இருக்கு. ஆனால் அதை தடுக்க இப்போது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்றாள் ஹர்ஷிதா.

வார்த்தைகளால் சாடியவளை ஏறெடுத்தும் பாராமல் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான் அத்விக்.

ஜெகன் மீண்டும் கண் விழிக்கையில் இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. அவருக்கு தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. நாளை காலையில் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறித்து இருந்தார்கள் மருத்துவர்கள்.

” இந்த அறுவை சிகிச்சையினால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகையால் பயப்படாமல் சம்மதம் தெரிவித்து விடுங்கள்” என்று ரூபா கூறும்போது “மாமா அப்போதே சம்மதித்து விட்டார் அத்தை” என்றாள் அங்கு வந்த ஹர்ஷிதா.

“சிறுவயதில் இருந்து எனக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை தவறவிட்டதில்லை பி.டி. இப்போது கடைசியாக நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கும் நிறைவேற போகிறது. அதுவும் உங்கள் கண்முன்னே” என்றாள் ஜெகனிடம் உறுதியாக.

விக்னவை அழைத்து ஒரு தாலி வாங்கி வரசொல்லியிருந்தாள் ஹர்ஷிதா. தன் அம்மாவையும் தமையனுடன் கிளம்ப சொன்னவள் காலம் முழுவதும் அணிந்து இருக்கப்போவது அதனால் நல்ல மாடலாக பார்த்து அரை மணி நேரத்திற்குள் வாங்கி வருமாறு உத்தரவு பிறப்பித்தாள். மறுத்த பிருந்தாவிடம் “உன் அண்ணன் உனக்கு வேண்டுமானால் இதை செய்” என்று அவரது வாயை அடைக்கவும் மறுக்க வழியில்லாமல் சென்றிருந்தார் பிருந்தா .

இப்போது அத்ரிஷிடம் ஆர்யாவிற்கு போன் செய்து இங்கு வர சொல்லுமாறு கூறியவள் தன் கைபேசியை எடுத்து “ஹலோ கதிரவன் அங்கிள்….. மாமா கண்விழித்து விட்டார். காலையில் உங்களிடம் சொன்னது போல்…..” பேசியவாறு அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

என்ன நடக்கிறது இங்கே…. ஹர்ஷிதா என்ன செய்ய போகிறாள்?? என்று ஹரிஹரன் உட்பட மற்றவர்கள் அனைவரும் குழம்பி நிற்க
ஹர்ஷியின் திட்டத்தை தடுக்க வழி தெரியாது திணறிய அத்விக் தன்னை முற்றிலும் நடப்பவையிலிருந்து அப்புறப்படுத்த தன் தீவிர பணியில் தன்னை தொலைத்தான்.

ஜெகன் கண்விழித்திருக்கும் சமயம் அவரை விட்டு அகலாது அருகிலேயே அமர்ந்திருந்த அத்விக்கின் கவனம் முழுக்க காலையில் துப்பாக்கி சூடு நடத்தியவன் பிடிப்பட்டதில் நிலைத்திருக்க மேலும் என்ன என்ன செய்யவேண்டும் என்ற உத்தரவுகளை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி கொண்டிருந்தான்.

அத்விக் உதவியுடன் அந்த குற்றவாளியை தாக்கியதில் அவன் உயிருக்கு பயந்து கொண்டு தன்னை ஏவிய எல்.கே. நகைகடை ஓனர் தனபாலை காட்டிக் கொடுத்தான்.

தங்களது தொழில் வட்டாரத்தில் எதிரிகள் இருக்கிறார்கள் தான். ஆனால் கொலை பண்ணும் அளவிற்கு யாராக இருக்கும் என்று குழம்பியிருந்த அத்விக் தனபாலின் பெயரை கண்டவுடன் ஒரு உத்வேகத்துடன் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து அவசரமாக எழுந்தான்.

பின் சூழ்நிலை கருதி மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தபடி காய்களை நகர்த்த ஆரம்பித்தான் அத்விக்.

இப்போதைக்கு தனபாலை எதுவும் செய்யக்கூடாது என்றும் அவனின் மேல் நம் பார்வை விழுந்த சுவடு கூட அவனுக்கு அறவே தெரியாமல் நடந்து கொள்ளும் படியும் கூறினான்.

“எவிடன்ஸ் கிடைத்தும் வாய்ப்பை நழுவ விடணுமா?” என்று ராகுல் அனுப்பிய குறுஞ்செய்திக்கு

“அதை எல்லாம் சுலபமாக தகர்த்தெறிந்து விட்டு வெளியே வந்துவிடுவான். பழசையெல்லாம் கிளறவேண்டும். ஆரம்பத்தில் இருந்து அவன் செய்த ஒட்டுமொத்த தப்பிக்கும் சேர்த்து அனுபவிக்கப் போகிறான். அவன் கூடவே அல்லக்கை என்று ஒருவன் சுற்றிக் கொண்டிருப்பான் . கேட்ச் ஹிம் பர்ஸ்ட்” என்றான் அத்விக் .

“கேட்ச் மீன்ஸ் அவனை ட்ராக் செய்வதா ஏதாவது கேஸில் உள்ளே போடுவதா அல்லது மொத்தமாக தூக்கி விடலாமா” என்ற ராகுலின் மெஸேஜிற்கு மும்மரமாக பதிலளிக்க போன அத்விக்கின் கவனத்தை “எனக்கு இதில் முழுசம்மதம் அங்கிள்” என்றபடி அங்கு வந்த ஆர்யன் திசை திருப்பினான்.

ஜோடியாக ஹர்ஷிதாவும் ஆர்யனும் வருவதை பார்க்க முடியாமல் மறுபுறம் திரும்பி அமர்ந்துகொண்டான் அத்விக்.

“மச்சி ஆர் யூ ஆன்லைன்” என்று ராகுல் மீண்டும் அனுப்ப அக்கேள்விக்கும் விடை அளிக்க முடியாது தடையாய் விக்னவின் வருகை அமைந்தது.

மேலும் ஹர்ஷிதா “என் திருமணம் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நடக்க நானும் விரும்பவில்லை மாமா. ஆனால் மேலே ஒருவன் எழுதியபடி தான் நம் வாழ்க்கை சூழலும் என்று நீங்கள் சொன்னபடி தான் அனைத்தும் நடக்கிறது” என்று பேசிக் கொண்டிருக்கையில் இதற்கு மேலும் தன்னால் அங்கு இருக்க முடியாது என்று உணர்ந்த அத்விக்கிற்கு அடுத்து நடக்க போகும் வைபவத்தை காண சக்தி இல்லாது விசாலமான அந்த அறையிலும் மூச்சு முட்டியது.

உடனே ராகுலிற்கு “கால் மீ” என்ற குறுஞ்செய்தியை அனுப்பினான் அத்விக்.

ராகுல் போன் செய்தவுடன் நாகரீகமாக எழுந்து வெளியேற சென்றவனை தடுத்த ஹர்ஷிதா “இந்தா அத்வி இந்த தாலியை என் கழுத்தில் கட்டி விட்டு போய் அந்த போனை அட்டென்ட் பண்ணு” என்று நிறுத்தினாள்

Advertisement