Advertisement

தடுத்த ஹரிஹரனிடம் “ப்ளீஸ் மாமா என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அதை திருப்பி பெற முடியாது. ஆனால் சொல்லக்கூட கூடாது என்றால் எப்படி?? ” அவரை அமர்த்திவிட்டு மேற்கொண்டு பேசலானான் அத்விக்.

ஹர்ஷிதாவின் இதழ்களும் “விடு அத்வி” என்று உதிர்த்ததே தவிர “விடு அத்தான்ஐ” உபயோகபடுத்த வில்லை. அவள் அவ்வாறு கூறியிருந்தால் கண்டிப்பாக அவள் சொல்லிற்கு கட்டுப்பட்டு அங்கிருந்து சென்றிருப்பான் என்று அவளுக்கு தெரியும் தானே. ஆயினும் அவள் அவ்வாறு அழைக்க முடியாததற்கு அவள் வாழ்வில் தனக்கு என்று கொடுத்த இடத்திற்கு இப்போது மதிப்பில்லாமல் போனது போல் ஒரு பிரம்மை அத்விக்கினுள் தோற்றுவித்தது.

அவளை முறைத்து மேலும் பேசினான் “சொல்லுங்க அப்பா என்னை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டு விட்டது சனி என்று நிம்மதியாக இருந்தீர்களா …. பெற்ற கடனுக்கு மாதா மாதம் என் அக்கவுண்டிற்கு பணம் அனுப்பியவர் அதை நான் தொட்டுக் கூட பார்க்காததை கவனிக்க தவறி விட்டீர்கள் போல… ஒவ்வொரு முறையும் தந்தையின் பாசத்தை வேறு ஒருவரிடம் காணும் போது உங்களை தான் அப்பா ரொம்ப மிஸ் பண்ணினேன் . ரத்னா பொண்ணுக்கு ‘எங்க அப்பா என்னை தேடுவார்’ என்ற ஒரு நினைப்பே அவளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாமல் காத்தது . சாதாரண மனிதர்களை விடுங்கள் மும்பையில் ஒரு அயோக்கியன். அவன் செய்யாத அட்டூழியங்களே கிடையாது. ஆனாலும் தன் பையனை நல்ல வழியில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறான்.
“என் நினைவலைகளில் மங்கிய காலமான என் குழந்தைப் பருவத்தில் நீங்கள் என்னை அழைத்த கண்ணாவே என் இதயத்தில் ஒளி வீசிக்கொண்டு சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறது. எல்லா பசங்களுக்கும் டீன் ஏஜில் தான் அப்பாவின் துணை உற்ற தோழனாக தேவைப்படுகிறது நான் மட்டும் ஏன் அது கிட்டாது துர்பாக்கியசாலி ஆகிவிட்டேன் … நான் செய்த சிறு சிறு தவறுக்காக என்னை மொத்தமாக வெறுத்து விட்டீர்களா… ஒரு யுத்தத்தில் நொடிப்பொழுதில் உயிர் பிழைத்து தான் உங்கள் முன் நின்று கத்தி கொண்டிருக்கிறேன். இனியும் என்னை பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கப்பா நான் போய்விடுகிறேன்…. ஒரேடியாக!”

” அத்விக்க்க்க்” ஒருசேர ஒலித்த குரல்களில் ஜெகனின் குரல் மட்டும் இடம் பிடிக்கவில்லை. அப்படியே சரிந்து தள்ளாடி விழப் போன ஜெகனை தாங்களாக பிடித்து அமர வைத்தான் விக்னவ்.

” என்னங்க ஆச்சு?” என்றபடி ரூபா அவரிடம் விரையவும் “வா….” என்றபடி அத்விக்கிடம் கையசைத்தார் ஜெகன்.

ஆனால் அத்விக்கின் கால்கள் அவரிடம் செல்ல மறுத்தது. இந்தத் தருணத்திலும் எதையாவது பேசி தன் மனதை நோகடிப்பார் என்று கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாத வண்ணம் துடைத்தவனின் கையை பிடித்து இழுத்து சென்றாள் ஹர்ஷிதா.

பற்றிய அவளது கையைப் பிரித்து எடுத்தவன் “போய் உன் வேலையை பாரு. யாரிடமோ பேச காத்துக்கொண்டிருந்தாய் போல.. உன் பொன்னான நேரத்தை நான் விரையடித்து விட்டேனே. அச்சச்சோ….அதற்கு மன்னித்து விடுகிறாயா” என்றவனின் தோளில் இரண்டடி போட்டவள் “உன்னை வருகிறாயா என்று பர்மிசன் கேட்கவில்லை மரியாதையா வா” என்று இழுத்துக்கொண்டு தன் மாமா ஜெகன் முன் மண்டியிட்டு அமர வைத்தாள் ஹர்ஷிதா.

அத்விக்கின் இரு கன்னங்களையும் தன் கைகளில் ஏந்தியவர் “நீ பிறக்க நான் மேற்கொண்ட தவங்களில் இந்தக் கோவிலில் அக்னி பிழம்பில் ஏறியதும் ஒன்று” என்ற தந்தையின் குரலின் தாக்கத்தால் அவரை நேராக சந்தித்தான் அத்விக் .

“திருமணமாகி ஐந்து வருடங்களில் நான் பார்க்காத பிரார்த்தனைகளும் வைத்தியர்களும் இல்லை. என் உதிரத்தில் இருந்து என்னை மேன்மைப்படுத்த குளிர்விக்க வந்தவன் நீ. என் பையன் தான் இந்த உலகத்திலேயே பெஸ்ட் பையனாக இருக்க வேண்டும் என்கிற பேராசை மிக்க கொடூரக்காரன் நான். அப்படிப்பட்ட எனக்கு உன் சிறுசிறு பிழைகளைப் பொறுத்து போக தெரியவில்லை. உன்னிடம் பயன்படுத்திய ஒவ்வொரு கடும் சொற்களுக்குப் பின்னால் அளவுகடந்த வேதனை அப்பியிருந்ததை வெளிப்படுத்த தவறிவிட்டேன்.”

” உன் பத்தாவது தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் நான் தூங்கவே இல்லை. உன்னை பாஸ் பண்ணிவிட்ட அந்த முகம் தெரியாத ஹிஸ்டரி சாருக்கு 108 தேங்காய் உடைத்தேன் .”

” நீ குடித்தாய் என்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த வயதில் எல்லா பசங்களும் இதைத்தாண்டி தான் வருவர் என்பதை மூளை அறிவுறுத்தினாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது . ஒரு மாட்டை போட்டு அடிப்பது போல் உன்னை பெல்ட்டால் அடித்து நொறுக்கி விட்டேன் . உன் முதுகில் ஏற்படுத்திய காயத்திற்கு பரிகாரமாக இதோ என் முதுகிலும் சூடு வைத்துக் கொண்டேன். உன் அம்மாவிற்கு கூட இது தெரியாது.”

” அப்போதும் என்னை அடித்து விட்டாய் அல்லவா… பாரு அடுத்த நாள் குடித்து விட்டு ஏதாவது ரோட்டில் விழுந்து கிடப்பேன் வந்து என்னை பொறுக்கி கொள் என்று நீ சொல்லி விடவும் வீடு வந்து சேரும் வரையில் ஒரு 15 டாஸ்மாக் ஆவது ஏறி இறங்கி இருப்பேன். உன்னை குடிக்காமல் அன்று பார்த்த பிறகுதான் என் உயிரே வந்தது .”

” உன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு நம் அலுவலகத்திற்கு கூப்பிட்டேன் . ஒரு வருடம் அவகாசம் கேட்ட உன்னை வற்புறுத்த தோன்றவில்லை. ஆனால் அன்று ஹர்ஷியை மணமுடித்துக் கொடுக்கும்படி நீ கேட்கவும் உங்கள் இருவருக்குள் ஏதோ ஒரு விரிசல் என்று புலப்பட்டது .என் பையனை நான் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் மற்றவர்கள் எவரும் அது உனக்கு வரப்போகிறவளாக இருந்தாலும் எதுவும் சொல்லி விடக் கூடாது அப்படி சொல்வதற்கு நீ இடமளிக்கக் கூடாது என்பதற்காகத்தான் என் மனதை கல்லாக்கிக் கொண்டு உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினேன்.”

” உடனே ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் நீ இருக்கும் இடத்தையும் வேலைக்காக நீ சிரமப் படுவதையும் கண்டு துடித்து தான் போனேன். இருமுறை வேலை கிடைக்காமல் ரோட்டில் உட்கார்ந்திருந்தபோது உன்னை கையோடு கூட்டி வந்துவிடலாம் என்ற எண்ணத்தை அரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டு நீ உன் வெற்றிப் படிகளில் ஏறும் நாட்கள் தூரத்தில் இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பி விட்டேன்.”

” மாதாமாதம் கம்பெனியில் வரும் லாபத்தை விட நான் உன் அக்கௌண்டில் போடுகிற பணத்தை நீ எடுக்காமல் சுயமாக நிற்கும் பட்சத்தில் எழும் சந்தோஷத்திற்கு அளவில்லை . “

“உன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் உன்னை வந்து பார்த்து விடுவேன். நீ முதன்முதலில் ஐ.பி.எஸ் ஆபிஸர் ஆகியவுடன் சீருடையில் வந்த போது மறைந்திருந்து போட்டோ பிடித்தேன். உன் ஒவ்வொரு சாதனைகளையும் கண்டு களித்தேன். உன்னை பற்றிய தொகுப்பு ஒரு பத்திரிகையில் வந்தது . அதை கிழித்து பிரேம் செய்து கம்பீரமாக வீட்டு ஹாலில் மாற்ற வழி தெரியாது அதை ஒரு வால் க்ளாக்காக மாற்றி அமைத்து என் ரூமில் மாட்டி வைத்திருக்கிறேன் . “

“உனக்கு சர்வோட்டம் விருது கிடைக்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டதும் செய்வதறியாது சந்தோஷத்தில் அடுத்த பிளைட் பிடித்து வந்து உன்னை கண்டு பூரிப்புடன் ஒரு ஓரமாக நின்று உனக்கு திருஷ்டி கழித்தேன் .”

” இவை அனைத்தையும் என் கண்ணா சாதித்து விட்டான் என்று என் மனதிற்குள் உருப்போட்டபடியே செய்து முடித்தேன். எல்லாவற்றையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள கொள்ளை ஆசைதான் ஆனால் நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று உறுத்தியது.”

“போடா என்று போக சொல்லிவிட்டு சாதாரணமாக வந்தாலே சீராட்ட துடித்த கைகள் நீ இமாலய சாதனைகளை குவித்து விட்டு வந்தபிறகு செய்வதறியாது திகைத்து நின்றது. இப்போது என் கண்ணன் எனக்கானவன் மட்டுமல்ல இந்த நாட்டுக்காக பாடுபடும் பெரும் பதவியில் இருக்கிறவன் என்னும் எண்ணம் உன்னிடமிருந்து என்னை தள்ளி போக சொன்னது. உன்னைக் கண்ணா என்று அழைக்கும் வாய்ப்பிற்காக நொடிக்கு நொடி நான் காத்துக்கொண்டிருக்கிறேன். உன்னை ஒருதரம் அவ்வாறு அழைத்துக் கொள்ளட்டுமா” என்று அனுமதி வேண்டியவரிடம் “நான் என்றுமே எப்போதுமே உங்களின் கண்ணன் தான்பா. எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் சரி சந்தோஷம் கொடுக்கும் செய்தியாக இருந்தாலும் சரி நீங்கள் கண்ணா என்று அழைப்பது போன்று என்னுள் பிரம்மை தோன்றியதெல்லாம் இன்று நிஜமாகி விட்டது என்னை அப்படியே கூப்பிடுங்கள் அப்பா” என்றான் அத்விக் உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டபடி.

நா தழுதழுக்க கண்ணீர் கன்னங்களை நனைக்க ‘கண்ணா’ என்று ஜெகன் அழைத்த நொடி அதிதூரத்தில் இருந்து பாய்ந்து வந்த தோட்டா குறி தப்பாது அவரது இதயத்தை கிழித்தது.

” அப்பாாா…..” அத்விக்கின் நீண்ட ஓசையை கேட்கும் முன்னே அவன் மீதே மயங்கி சரிந்தார் ஜெகன். ஒட்டுமொத்த குடும்பமும் கண்முன்னே நிகழ்ந்துவிட்ட எதிர்பாரா தாக்குதலில் ஸ்தம்பித்து நிற்க அருகில் விரைந்த ஆர்யன் அவர் நாடியை பரிசோதித்துவிட்டு மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்லுமாறு பணித்தான்.

மூன்று மணி நேர இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியே வந்த இதய நிபுணர் பின்னால் வந்த ஆர்யனிடம் தனக்கு அடுத்து ஒரு முக்கியமான சர்ஜரி இருப்பதால் ஜெகனின் நிலையை அவரது குடும்பத்தாருக்கு எடுத்துக்கூறுமாறு சொல்லிவிட்டு அடுத்த 24 மணி நேரத்திற்குள் அழைப்பு விடுக்கும் படி கேட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.

” மாமாவிற்கு ஒன்றுமில்லையே” முதல் கேள்வி ஹர்ஷியிடமிருந்து பாய்ந்து. அவளது கண்களிலிருந்து வழிந்தோடிய பெரிய மணித்துளிகளை கண்ட ஆர்யன் “ஒன்றுமில்லை ஹர்ஷி” அவனையும் அறியாமல் சொல்லிவிட்டிருந்தான்.

” நாங்கள் போய் பார்க்கலாமா… இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறாரா ……எப்போது கண் விழிப்பார்…” அவள் அடுக்கிய வினாக்களுக்கு உடனே பதிலளிக்காதவனை நெருங்கி “அப்பாவிற்கு என்ன ஆயிற்று ஆர்யா?” என்றான் அத்விக்.

” நல்லவேளையாக தோட்டா இதயத்தின் நடுவில் துளைக்காமல் மேலோட்டமாக அதாவது இடது சோணை அறையை (left auricle) கிழித்து விட்டு நின்று கொண்டிருந்தமையால் அதனை எளிதாக அகற்றி விட்டனர் . ஆயினும் அதன் தாக்கம் இதயத்தில் இரு இடங்களில் ரத்த உறைவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட ரத்த உறைவு (ஹார்ட் க்ளாட்) அதி வேகமாக பரவக்கூடியது .இன்னும் 48 மணி நேரத்திற்குள் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

அவர் வயதை கருதியும் இன்று ஏற்கனவே ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எக்ஸ்ட்ரா கார்ப்பரல் சர்க்குலேஷன் மெத்தட் (extra corporal circulation method) உதவியுடன் மேற்கொள்வர்.

அதாவது இதயத்தில் உறைந்திருக்கும் ரத்தத்தை நீக்கிய பின்னர் அதனை ரத்த ஓட்டத்திற்கு செலுத்தும் முன் ஒரு டிவைஸ் மிஷின் கொண்டு ரத்தத்தை சுத்தப்படுத்துவர். குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் இந்த அறுவை சிகிச்சை 80% வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஆனால் அதற்கு ஜெகன் அங்கிளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமான ஒன்று. அதற்காகத்தான் டாக்டர் 24 மணி நேரம் அவகாசம் கொடுத்திருக்கிறார் . இன்னும் இரு மணி நேரத்தில் சுய நினைவிற்கு திரும்பிவிடுவார் அங்கிள். அதிகபட்சம் ஒரு மணி நேரமே விழித்திருப்பார் . அதன்பிறகு அவருக்கு கண்டிப்பாக தேவைப்படும் ஓய்வு தன்மைக்கு மருந்து வீரியத்தால் தூங்கிவிடுவார் .

அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. எனவே முடிந்த மட்டிலும் இப்போது கண் விழிக்கும் நேரத்தில் அறுவை சிகிச்சைக்கான சம்மதத்தை பெற்று விடுவது மிகவும் அவசியமான ஒன்று” என்றான் ஆர்யன்.

ஆர்யன் சொல்ல வந்த கூற்றை முழுதாக கூட ரூபா கேட்டிருக்கவில்லை . ‘இன்னொரு அறுவை சிகிச்சை’ என்பதை கேட்டவுடனே மயக்க நிலைக்கு சென்று விட்டார். ” என் மகனிற்கு ஒன்றும் ஆகாது. அவன் பிழைத்துக் கொள்வான் ” என்று ஜெபம் செய்த படியே ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தார் மரகதம்.

ஆர்யன் கூறியது போல் அடுத்த இரு மணி நேரத்தில் கண்களை திறந்தார் ஜெகன். இரண்டு நபர்கள் மட்டும் அவரை காண அனுமதி கொடுக்கப்படவும் குடும்பத்தினர் அனைவரும் அவ்வாறு சென்று பார்த்து விட்டு வந்தனர். கடைசியாக உள்ளே சென்ற அத்விக்கை கண்டதும் அவரது விழிநீர் மீண்டும் ஒருமுறை பெருக்கெடுத்து அவனுக்கான அவரது பாசத்தை வெளிப்படுத்தியது .

“இப்போது எதற்கு இது?” என்று அவர் கண்களைத் துடைத்து விட்ட அத்விக் அவரின் இந்தநிலையை காண பொறுக்காமல் தன்னுள் எழுந்த வேதனையை மறைக்க ஒருமுறை கண்களை மூடித் திறந்தான்.

” சாரி அப்பா….. நான் இத்தனை நாட்களாக உங்களிடம் மிஸ் பண்ணிய நாட்கள் எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கப் போகிறேன். உடலில் தெம்புடனும் மனதில் நிம்மதியுடனும் இந்த போதா காலத்தை கடந்து வந்து விடுங்கள். உங்கள் கண்ணன் உங்களுடனே இருக்கிறேன். நாளை ஒரு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய போகிறார்கள் அதில் முழுதாக குணம் அடைந்து விடுவீர்கள். ஸ்ட்ரெஸ் செய்யாது பார்த்துக் கொள்ள வேண்டும் அப்பா” என்று அவர் கையை பிடித்த வண்ணம் கூறியவனிடம் அறைக்குள் நுழைந்தவள் மீது பார்வையை செலுத்திய ஜெகன் மறுப்பாக “இந்த ஆப்பரேஷன் வேண்டாம்” என்று தலையசைத்தார்.

Advertisement