Advertisement

ஹர்ஷிதா எழுந்து கொள்ள உதவுவதற்கு ஆர்யன் தன் கையை நீட்ட அவள் அதை பற்றுவதற்குள் “ஹர்ஷிஷிஷிஷி” என்று கத்தியிருந்தான் அத்விக்.

” ஹர்ஷி” என்று கத்தியபடி அவள் அருகில் அத்விக் நெருங்கவும் ஆர்யன் நீட்டிய கையை கீழே இறக்கினான்.

சோபாவில் படுத்திருந்தவளை தன் இரு கரங்களிலும் ஏந்திய அத்விக்கிடம் “எனக்கு ஒன்றுமில்லை அத்வி. கீழே இறக்கி விடு” திமிறிய ஹர்ஷிதாவை முறைத்தான்.

ஹர்ஷிதா குழந்தையாக நடை பயிலும் போது தொப்பென்று கீழே விழுந்து அழுத சமயத்தில் அவளின் அழுகைக்கான காரணத்தை அப்பத்தாவிடம் கேட்டபோது “நீ இருக்கிற தைரியத்தில் தான் பாப்பா நடக்கிறாள். அவள் இவ்வாறு விழுந்துவிட்டால் நீ தான் தூக்கிவிட வேண்டும் கண்ணா” என்றார். அந்த பதில் பசுமரத்தாணி போல் அத்விக்குள் பதிந்துவிட்டது.

எவ்வளவு சண்டையாக இருந்தாலும் சரி
ஹர்ஷிதா விழுந்துவிட்டால் உடனே அவளை தூக்கி விடுவது அத்விக்கின் இன்றியமையாத பணியாகிவிட்டிருந்தது.

” இந்த ஆறு வருடங்களில் நானே எழுந்து கொள்ள பழகி விட்டேன்” என்று கூறியவளை அருகில் இருந்த அறையின் மெத்தையில் உட்கார வைத்து “அது நீயாக தேடிக்கொண்டது. உன்னால் தான் நான் வெளியேறினேன். எல்லாவற்றிற்கும் காரணம் நீ மட்டும் தான் ” குற்றம் சாட்டினான் அத்விக்.

“ஹோ … அப்போது நான் தான் திரும்பி வரும்போது கையோடு உன் காதலியை கூட்டி வர சொன்னேனா… நீதான் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாய் அல்லவா… பிறகு நான் யார் கூட பேசினால் உனக்கு என்ன பேசாவிட்டால் என்ன??”

” நீ ஆர்யா கூட பேசக்கூடாது அவ்வளவுதான்… பேசினால் அத்து அண்ணன் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்… அவனை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது”

“இது எந்த ஊர் நியாயம்? நான் ஆர்யாவுடன் அப்படித்தான் பேசுவேன் உன்னால் முடிந்ததை செய்து கொள்” என்று எழுந்தவளை “உனக்கு சொன்னா புரியாது!! நீ பேசு ஆனால் பதில் சொல்ல அவன் எந்த செக்ஷன்காக எந்த ஜெயில இருப்பானு அவனுக்கே தெரியாது” பயமுறுத்தினான் அத்விக்…

ஆனால் சற்றும் அஞ்சாது “ஹோ கமிஷனர் சார் பேசுறாரோ … உங்களுக்கு சொல்றேன் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க…. இப்படி ஏதாவது கிறுக்குத்தனமாக யோசித்தீர்கள் என்றால் பெர்மனன்டாக உங்க யூனிஃபார்ம்க்கு டாட்டா காட்ட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றாள் திமிராக.

” ஏய் என்ன சொன்ன?” என்று அத்விக் அவளை நெருங்குகையில் அதிர்ஷ் “டார்லிங் உன்னை அப்பா கூப்பிடுறாங்க” என்றபடி உள்ளே வந்தான்.

நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட மேடையேறிய ஜெகனுக்கு ஆர்யனின் நண்பர் பட்டாளம் “அடுத்து உன் ரூட் கிளியரா மச்சி” என்று ஓட்டிக்கொண்டிருந்தது தென்படவும் மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அதை உடனே நிறைவேற்றும் விதமாய் கதிரவனிடம் “எங்கள் ஹர்ஷியை ஆர்யாவிற்கு திருமணம் செய்து கொடுக்க சம்பந்தமா?” என்றார் .

சபையில் அனைவருக்கும் இது எதிர்பாராத அதிர்ச்சியே. முக்கியமாக ஆர்யனுக்கு. எல்லோர் முன்னிலையிலும் பேச சங்கடபட்டபடி ஜெகனையும் கண்ணசைவில் அர்யனையும் தனியே அழைத்து பேசினார் கதிரவன் .

அவர் அவ்வாறு கூப்பிட்டதும் அவரது விருப்பமின்மையை அறிந்துகொண்ட ஜெகன் “ஹர்ஷியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் யோசிக்கிறீர்களா கதிரவன்?” என்றார் .

“ஐயோ அங்கிள் அவள் தாய்மை அடையவே முடியாது என்று சொல்லவில்லை. பிரசவ சமயத்தில் ஏற்படும் சிக்கல்களை தான் அன்று உங்களுக்கு எடுத்துரைத்தேன்” என்றான் ஆர்யன் அவசரமாக.

” பிறகு” என்று ஜெகன் யோசனையுடன் வினவவும் கதிரவன் “எனக்கு ஹர்ஷியை மருமகள் ஆக்கிக் கொள்வதில் எந்த தடங்கலும் இல்லை. சொல்லப்போனால் இதில் கொள்ளை பிரியம். அதர்வனாவின் முதல் சம்பந்தம் நின்றவுடன் ஆர்யன் தான் விக்னவிற்கு அத்துவை பார்க்கலாம் என்று கூறினான் . அப்போதே இரட்டை சம்பந்தமாக ஹர்ஷியையும் பேசி விடலாம் என்றேன். ஆனால் ஆர்யன் தான்…..” இழுக்கவும் “ஏன் ஆர்யா உனக்கு ஹர்ஷியை பிடிக்காதா?” துரிதமாக வினவினார் ஜெகன்.

“ஹர்ஷியை பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா அங்கிள். அவள் சிறுவயதில் இடுப்பு எலும்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுக்கு தேவையான உணவுப் பொருட்களை உங்கள் குடும்பத்தினர் அனைவரும் மற்றவருக்கு தெரியாத வண்ணம் அவளிடம் செலுத்தி விட்டுச் செல்வீர்கள். அப்போதே அதில் என்னுடைய பங்கும் இருக்கும். அத்துவின் தோழி என்பதையும் தான்டி அவளிடத்தில் எனக்கு ஒரு பிடித்தம். ஆனால் உங்கள் வீட்டில் ஏற்கனவே அத்விக்கை ஹர்ஷிக்கு பேசி முடித்ததாக கேள்விப்பட்டதும் ஒதுங்கிக் கொண்டேன்” என்றான் முகத்தில் சிறு வலியுடன்.

” இதுதான் உங்கள் குழப்பமா… சிறுவயதில் பேசியதுதான் . இப்போது அவன் வேறு பெண்ணை விரும்புகிறானாம் . பெற்றவர்கள் ஆசையை பிள்ளைகளின் வாழ்வில் திணிக்க முடியாது அல்லவா” வருத்தத்துடன் மொழிந்தார் ஜெகன்.

மேலும் “அவள் உடல் நல குறையை பற்றி நாங்கள் யாரும் அவளிடத்தில் இதுவரை சொன்னதில்லை. இப்போது நீங்களும்….” என்று ஜெகன் தடுமாறுகையில் “எப்போதும் ஹர்ஷிக்கு இது பற்றி தெரிய விடமாட்டோம் அங்கிள். அவள் தான் என் குழந்தையை பெற்று தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடத்தில் இல்லை . வி வில் அடாப்ட். அதேசமயம் அவளுக்கு தாய்மை அடைவதில் விருப்பமிருந்தால் அவள் ஆசைக்கு மதிப்பளித்து தடுக்க போவதுமில்லை. எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் அவளையும் குழந்தையையும் காப்பாற்றி விடுவேன்” என்றான் எலும்பு வல்ல நிபுணர் அர்யன்.

” ரொம்ப நன்றி மாப்பிள்ளை” என்றவரிடம் “அதை நான் தான் அங்கிள் சொல்லணும்” என்று கூறி தன் நன்றியை ஜெகனிடம் தெரிவித்தான் ஆர்யன்.

முகம் கொள்ளா பூரிப்புடன் வந்த ஜெகனை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பார்த்துக்கொண்டு நின்றான் அத்விக். உடனே வீட்டினரிடம் கலந்து ஆலோசித்து விட்டு ஒரே மேடையில் இரு நிச்சயத்தாம்பூலங்கள் மாற்றப்பட்டன.

ஆர்யன் அவன் பெற்றோர் அருகில் நின்றுகொண்டிருந்தபடி சற்றுத் தள்ளி நின்ற ஹர்ஷியை பார்த்து கண் சிமிட்டினான். அதை பார்த்த அத்விக் அவன் கண்களை நோண்டும் அளவிற்கு வெறியானான் .

எந்த சஞ்சலமுமின்றி சிரித்துக் கொண்டிருந்த ஹர்ஷிதாவிடம் சொல்வது போல “அத்ரிஷ்!!!! அவளை முதலில் இந்த நிச்சயத்தை நிறுத்த சொல்லுடா…” அடிவயிற்றிலிருந்து சீறினான் அத்விக்.

அதை கண்டுகொள்ளாமல் கீழே வந்திருந்தோருக்கு ரசமலாய் கொடுக்கப்பட்டதை பார்த்து நாக்கை சப்பி கொண்டு “ஹா ரசமலாய்….. சி .டி எனக்கு ஒரு கப் வாங்கிவிட்டு வருகிறாயா” என்றாள் அத்ரிஷிடம் .

“என்னடி கொழுப்பா!! நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன கேட்டுகிட்டு இருக்க? அந்த ஆர்யனை நீ எப்படி கல்யாணம் பண்றனு நானும் பார்க்கிறேன்… அவனை என்ன உனக்கு அப்படி புடிச்சிருக்கு… மைசூர் பாக்க கொடுத்து உன்னை மயக்கிகீது வச்சுட்டானா?” கண்மண் தெரியாத கோபத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினான் அத்விக்.

” டேய் ஒழுங்கா பேசு” என்று சண்டைக்கு பாய்ந்த அத்ரிஷை தடுத்தவள் “உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும் அத்வி. கூடவே இருந்திருந்தால்தானே கொஞ்சமாவது புரிந்திருக்கும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி விட்டு விட்டு சென்ற உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது எனக்கு மைசூர்பாக் என்றாலே அலர்ஜி என்பதை. ஒருசமயம் அளவிற்கு அதிகமாக அதை சாப்பிட்டு விட்டதால் டிஸன்ட்ரி வந்து மிகவும் சிரமப்பட்டுவிட்டேன் . அதிலிருந்து மைசூர் பாக்கை கண்டாலே குமட்டுகிறது. அதை போய் கொடுத்தால் கண்டிப்பாக மயங்குவேன் தான் ஆனால் வேறு விதத்தில். வேண்டுமானால் பாதுஷாவை கொண்டு நீ சொன்ன அர்த்தத்தில் என்னை மயக்க ஆர்யா ட்ரை பண்ணலாம்” என்றவளை செய்வதறியாது திணறினான் அத்விக்.

” இப்போது இந்த நிச்சயத்தை நிறுத்தவில்லை என்றால் பார் யார் மயங்குவார்கள்” என்பதை அத்விக் கூறும் போதே ஹர்ஷியை மோதிரம் மாற்றிக் கொள்ள அழைத்தார்கள். அக்காட்சியைக் காண பொறுக்காதவன் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். நிச்சயத்தை தடுக்க கையாலாகாதவன் போல் தன்னை நினைத்து நொந்து கொண்டான் அத்விக்.

இப்போதும் அவளை ஆர்யன் எவ்வாறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று அத்விக் யோசித்தானே தவிர அவளுடனான தன் மணம் பற்றி சிந்தித்தானில்லை.

ஒரு மணி நேரத்திற்குப் பின் அந்த அறைக்குள் வந்து “என்னடா பண்ணுகிறாய்? வந்திருப்பவர்களை கவனிப்பதை விட்டு விட்டு…” என்று வெளியே கூட்டி வந்தார் ரூபா.

முக்கால்வாசி மண்டபம் காலியாக கிடக்க ஆங்காங்கே ஒன்றிரண்டு சொந்தபந்தங்கள் மட்டும் தென்பட்டனர். சற்று தொலைவிலே ஆர்யாவை மாடிக்கு அழைத்து வரும்படி அத்ரிஷிடம் ஹர்ஷிதா கூறிக் கொண்டிருப்பது அத்விக்கின் கண்களில் சிக்கியது .

உடனே ஆர்யனின் நண்பன் ஒருவனை அழைத்து கதிரவன் அங்கிள் ஆர்யாவை தேடி கொண்டிருப்பதாக பொய்யுரைத்து ஹர்ஷிதாவும் ஆர்யனும் மாடியேறுவதை தடுத்துவிட்டு அத்ரிஷை சென்று வழி மறித்தான் அத்விக்.

” எதற்குடா அந்த சொப்பன சுந்தரி ஆர்யனை கூப்பிடுகிறாள்?” என்று கேட்டவனை அத்ரிஷ் வித்தியாசமாக பார்த்ததில் அத்விக்கிற்கே அந்தக் கேள்வியின் அபத்தம் விளங்கியது. இருந்தாலும் தன்னை விட்டுக்கொடுக்காமல் “இப்போதுதான் எல்லோர் முன்னிலையிலும் பேசினர் பிறகும் என்ன…. அதுவும் நிச்சயம் முடிந்த கையுடன் மொட்டை மாடிக்குச் சென்று பேசினால் தான் ஆகுமா” தன் ஆற்றாமையை கேள்வியாய் வெளிக்கொணர்ந்தான் அத்விக்.

அதை ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்த அத்ரிஷ் “ஏதோ ஒரு லெட்டர் …. அதை ஆர்யன் தருவதாகச் சொன்னாராம். அதற்கு தான் கூப்பிடுவாள் என்று நினைக்கிறேன் . நான் வேண்டுமானால் அது என்ன லெட்டர் என்று கேட்டு சொல்லவா அண்ணா” வேண்டுமென்றே வெறுப்பேற்றினான்.

ஏதும் பேசாமல் திரும்பி நடந்தவனை ” ஹே நில்லுடா.. சும்மா தான் சொன்னேன்… எங்கே போகிறாய்” என்று தம்பி கூப்பிட்டது மட்டுமின்றி தன் சுற்றுவட்டாரம் முழுவதும் அத்விக் காதில் விழாமல் போனது.

நள்ளிரவு 1 மணி அளவில் மேடவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்க சுவற்றின் பைப்பை பிடித்து யாரும் அறியாமல் மாடி ஏறி குதித்த அத்விக் பால்கனியின் அருகிலிருந்த அறையின் கதவை தட்டினான்.

“என்னடா இந்த நேரத்தில்? அதுவும் இப்படி வந்திருக்கிறாய்…?” தன் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அவரை காண சென்னை வந்திருந்த ராகுல் திடீரென்று வருகை புரிந்திருக்கும் தன் நண்பனிடம் வினவினான்.

” அம்மா தான் மச்சி பார்க்க வர சொன்னேன்” உளறியவனை முகர்ந்து பார்த்த வண்ணம் “குடித்து இருக்கிறாயாடா????” எட்டாவது அதிசயத்தை பார்த்தவன் போல அதிர்ந்து கேட்டான் ராகுல்.

” சும்மா மூனே மூனு ஃபுல் தான் மச்சி அடிச்சேன்… நீ கண்டு பிடிச்சுட்ட பாரு… அரிசி மூட்டை சொல்வதுபோல் நீ உண்மையிலேயே ஒரு ஜீனியஸ்தான். ஐ அம் பிரவுட் ஆஃப் யூ மை போலீஸ் மேன்” என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சிய அத்விக்கை தட்டிவிட்டான் ராகுல்.

“எப்படிடா இந்த உலகமே அழிந்தாலும் குடிக்க மட்டும் மாட்டேன் என்பது போன்ற பில்டப் கொடுத்தவன் முதல் முறையாக குடிக்கும்போதே இப்படி மட்டையாகும் அளவிற்கு குடித்திருக்கிறாய்”

” முதல் முறையா?? நானெல்லாம் பாட்டிலை தொட்டால் அதை முடிக்காமல் வைத்ததில்லை தெரியுமா… எல்லாம் அவளால் தான். கண்களை நேரே பார்த்து ‘ப்ளீஸ் அத்தான்’ என்று சொன்னாள் பாரு…” இப்போதும் ஹர்ஷிதா அத்விக்கின் கண் முன்னே தோன்றி அவ்வாறு கூறுவது போல ஒரு பிரம்மை தோன்ற பாதி சரக்கு இறங்கியது போல் தலையை ஆட்டினான் அத்விக்.

“ஹர்ஷியாடா?”

” அதே அரிசிதான்”

” உன்னை அத்தான் என்று தான் கூப்பிடுவாளா?”

” கிழித்தாள். அவளுக்கு ஏதாவது தேவைப்பட்டால் ஒழிய இல்லை இல்லை அவளுக்கு என்னிடத்தில் என்ன தேவை இருக்கிறது … அவளுடைய பெரிய டார்லிங்…. அதான் என் அப்பா அவருக்கு வேண்டும் பட்சத்தில் கேட்பாள் . ஒருமுறை என் பிறந்தநாளிற்கு பிங்க் கலர் ஷர்வானி எடுத்து வந்து என்னை அணியச் சொன்னார் மை டாடி . அது கேர்ள்ஸ் கலர் தானேடா எனக்கு பிடிக்காது என்று தெரிந்து எடுத்து வந்ததும் இல்லாமல் அதை அணிந்து கொண்டுதான் கேக் வெட்ட வேண்டும் என்ற அதிகாரம் வேறு. உங்க ட்ரெஸும் வேண்டாம் கேக்கும் வேண்டாம் என்று சென்று விட்டேன். இதனால் மை டாடி அப்படியே சோகமயம் ஆகிவிட்டாராம் . அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் அல்லி ராணி சும்மா விடுவாளா? நேரே என்னிடத்தில் வந்தவள் கத்துவாள் இரண்டு போடுவாள் என்ற எதிர் பார்த்தபடி நின்றால் எதுவும் பேசாமல் என் கண்களை பார்த்து ‘ப்ளீஸ் அத்தான்’ என்றுவிட்டு என் கையில் அந்த பிங்க் நிற ஷெர்வானியை திணித்து விட்டு சென்று விட்டாள். நானும் சாவி கொடுத்த பொம்மை போல அன்று அதை போட்டு கொண்டு வந்து அன்றைய பிறந்தநாளை கொண்டாடினேன்”

இதழ்களில் பூத்த சின்ன சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த ராகுல் “இன்றைக்கும் பிங்க் ஷெர்வானி தான் அணிந்திருக்கிறாய். அப்படி என்றால் இன்றைக்கும் ‘ப்ளீஸ் அத்தான்’ என்றாளாடா” என்று ராகுல் கேட்கவும் கோபமுற்ற அத்விக்
“இன்றைக்கு நான் என்ன கலர் டிரஸ் போட்டிருக்கிறேன் என்று அவளுக்கு எப்படிடா தெரியும்? அவளுடைய கண்களை தான் மொத்தமாக அந்த ஆர்யனிடத்தில் விற்றுவிட்டாளே” என்றான்.

‘ ஆர்யன் என்றால். …. அன்று மாலில் போனில் பேசியவனா?அவனுக்கும் ஹர்ஷிக்கும் என்னடா சம்பந்தம்?”

” என்ன சம்பந்தம்? அதைத்தான்டா நானும் கேட்கிறேன்… எந்த சம்பந்தமும் இல்லாமல் அவளை எப்படிடா அவனுக்கு நிச்சயம் செய்து வைத்தார்கள்”

” வாட்? விக்னவிற்கு தானேடா நிச்சயம் என்று சொன்னாய். உன்னிடம் எதுவும் கேட்கவில்லையா ஐ மீன் ஹர்ஷியை திருமணம் செய்துகொள்ளும்படி… வீட்டில் முறை மாப்பிள்ளை நீ இருக்கும் பட்சத்தில் உன்னை கேட்காமல் இப்படி உன் காதலை எப்படி பொசுக்கினார்கள்?” ராகுலிற்கும் கோபம் தான் போலும் குரலை உயர்த்தி கத்தினான்.

” காதலா!!!!” அடித்த முழு சரக்கும் இறங்கிவிட்டது அத்விக்கிற்கு .

Advertisement