Advertisement

ஒரு நொடி தாமதித்தாலும் சிதறடிக்கப்பட்டிருப்பவளை சாமர்த்தியமாக இழுத்து மறுபக்கம் தள்ளினாள் ஹர்ஷிதா.
“பைத்தியமாடி உனக்கு… எதில் விளையாடுவது என்பது இல்லையா” என்று அவள் முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பி ஏந்தியதில் அதர்வனாவின் கண்ணீர் ஹர்ஷியின் கையில் பட்டு தெறித்தது.
“என்ன மாப்பிள்ளை பிடிக்கவில்லையா? அந்த ஸில்லி ரீஸனுக்காகவா இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்க துணிந்தாய். அதிலும் கொலை கேஸில் எங்கள் இருவரையும் உள்ளே தள்ள வேறு பிளான் போட்டிருக்கிறாய். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் களி தான் “என்று நிறுத்தாமல் வழக்கடித்துகொண்டிருந்தவளிடம் “ஸ்டாப் இட் டார்லிங். முதலில் அத்துவிடம் விஷயத்தை கேளு ” என அத்ரிஷின் குரல் ஒலித்தது.
“யாரை லவ் பண்ணுகிறாய்?”….ஹர்ஷிதா
” உனக்கு எப்படிடி தெரியும்?” ….. அதர்வனா
“ஆல் டீடெயில்ஸ் ஐ நோ. ஒரு பொண்ணு கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு தற்கொலை செய்து கொள்கிறாள் என்றால் எல்கேஜி பாப்பா கூட ஃபில் இன் தி பிளாங்ஸ் நிரப்பும். அது யாருடி எனக்கு தெரியாமல் உள்ளே வந்த நியூ என்ட்ரி”
“நியூ என்ட்ரி எல்லாம் இல்லை நீ இன்ட்ரோ கொடுத்த வெரி ஓல்ட் என்ட்ரி தான்”
“அத்ரிஷை கூட தான் அறிமுகப்படுத்தி வைத்தேன். சோ யூ ஆர் தி ஸ்பில்லர் சி.டி ” ஹர்ஷிதா விளையாட்டாய் அத்ரிஷிடம் கேட்க அவனோ “விக்கியை லவ் பண்றியா அத்து” நேரடியாக கேட்டான்.
அதர்வனாவின் முகம் வெட்கத்தை வாடகைக்கு தத்தெடுக்க அச்செவ்வானம் மேலும் கீழும் ஆடியது.
” ஓ மை அண்ணியாரே! இது எப்போ? விக்கியிடம் சொல்லி விட்டாயா?” சந்தோஷ கூச்சலிட்டாள் ஹர்ஷிதா.
” இல்லை” என்று தலையாட்டியவள் “பயமாக இருந்துச்சுடி. பிளஸ் எனக்கே உறுதியாக தெரியவில்லை. ஒரு ஸ்பார்க் . ஒருநாள் நான் பேசத் தயங்கும் போது நார்மலாக எப்பவும் போல் பேசிவிட்டு அவங்க செல்லவும் இது ஏதோ ஒருவித இன்ஃபாட்சுவேஷன் ஆக கூட இருக்கலாம் என்று என்னை சமாதானம் செய்தும் கொண்டேன். அப்போதுதான் வியான் வீட்டிலிருந்து பொண்ணு கேட்டு வந்தனர். அப்பா கேட்டவுடன் சம்மதித்து விட்டேன். ஆனால் இப்போது நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது. வியான் போன் பண்ணினால் சகஜமாக பேச முடியவில்லை. எப்போதும் புதிதாக உன் அண்ணனின் நினைவாகவே இருக்கிறது . நிச்சயம் முடிந்து விட்ட நிலையில் நான் என்ன பண்ணட்டும் நீயே சொல்லு… வியானோடு திருமணம் நடந்தால் எங்கே எங்கள் இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது”
“ஆர்யாவின் தங்கையாடி நீ? அன்று அந்த லவ் லெட்டரை ஆசையாக இருந்தும் அத்வியின் பர்மிஷன் இல்லாமல் திறந்து பார்க்க முடியாது என்று அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆயினும் எப்போதும் போல்தான் என்னிடம் சகஜமாக நடந்து கொள்கிறார். ஆனால் நீ காதலை வெளிப்படுத்தவும் மாட்டாமல் தற்கொலைக்கு வேறு துணிகிறாய். அதிலும் நோட் தி பாயிண்ட் யுவர் ஹானர். இரண்டு அப்பாவி ஜீவன்களை உள்ளே தள்ள ஏற்பாடு செய்துவிட்டு”
” இப்போது நான் என்ன பண்ண முடியும்?”
” விக்கியை திருமணம் செய்து கொள்”
” முடியுமா? எப்படி? என் வீட்டில் என்ன சொல்வார்கள் ? அப்பா இதற்கு எப்படி சம்மதம் தெரிவிப்பார்?”
” அது என் வேலை. நீ என் அண்ணனுக்கு வாழ்வு அளித்தால் மட்டும் போதும்”
” அடியே! எப்படி என்று சொல்லு ஹர்ஷி என் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது”
” ஆர்யாவிடம் நான் பேசுகிறேன். அப்படியே விக்கியிடம் டும்டும்டும் பிக்ஸ் பண்ணிடலாம்”
” நடக்குமா ?” மிகுந்த எதிர்பார்ப்புடன் வினவியவளை கட்டியணைத்து “இந்த ஹர்ஷிதாவை நம்பினோர் கைவிடப்படார். நாத்தனார் சீராக எனக்கு என்ன தருவீர்கள் அண்ணி”
” எங்க அண்ணன் அந்த லெட்டரை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறான். சுட்டு தரவா?” என்றவளை அடிக்க ஹர்ஷிதா எழுந்து துரத்தியதோடு வீடியோ முற்று பெற்றிருந்தது.
அதோடு சேர்த்து ஹரிதாவின் போனின் ஆயுள் காலமும் இனிதே நிறைவடைந்தது. அவ்வளவு கோபமாக அதை போட்டு உடைத்து இருந்தான் அத்விக்.
போன் இல்லாமல் வீட்டிற்கு சென்றால் பத்ரகாளி ஆடுவாள் என்று ஹர்ஷிதாவினது ஆட்டத்தின் தாக்கத்தை குறைக்கவே ஒரு புதிய போன் வாங்கி சென்றான் அத்விக்.
வீட்டில் ஹர்ஷிதாவை காணாது அவள் அம்மாவிடம் கேட்ட அத்விக் தன் பைக்கை ரத்னா அக்கா வீட்டிற்கு செலுத்தினான்.
அங்கே ரத்னாவிடம் “முதலில் அழுகையை நிறுத்துங்கள் அக்கா . கனி அந்த டியூஷனில் தான் இருப்பாள் . அத்ரிஷ் கூட்டி வந்து விடுவான்” என்று ஆறுதல் அளித்து கொண்டிருந்த ஹர்ஷிதாவிடம் நேரே சென்றவன் “எல்லாம் தெரிந்த மேதாவி என்ற நினைப்பா? கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆகிறது கனி காணாமல் போய்.. ஒரு கால் பண்ணி சொல்வதற்கு என்ன…” குரலை உயர்த்தாமல் கடிந்தான் அத்விக்.
பின் ரத்னாவிடம் “அவள் நண்பர்களிடம் விசாரித்தாயிற்றா.. ஏதேனும் சந்தேகம் படி அவளது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததா…” தன் விசாரணையை மேற்கொண்டான் அத்விக்.
” அப்படி என்றால்….” ரத்னா விழிக்கவும் “லவ் பண்ற மாதிரி….” என்று அத்விக் தன் விளக்கத்தை தொடங்கும் முன்னே “ஐயோ…. கனி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி” என்று அவசரமாய் மறுத்தார்.
“அக்கா பதட்டப்படாதீர்கள் கனியை நான் எதுவும் சொல்லவில்லை… ஏதாவது க்ளூ கிடைத்தால் கண்டுபிடிப்பது எளிது. என் சர்வீஸிலேயே 12 பள்ளி மாணவிகளை ஆசைகாட்டி கடத்தி வைத்திருந்தவர்களை பிடித்திருக்கிறோம். பேச்சு வழக்கில் எந்த பையன் பெயரையாவது அதிகம் பயன்படுத்தியிருக்கிறாளா?” என்ற கேள்விக்கு கண்ணீர் மல்க “இல்லை” என்று தலையசைத்த ரத்னா “அவள் பரீட்சையில் பெயில் ஆகி விட்டாள். கோபத்தில் நீ படித்தது போதும். என்கூட வீட்டு வேலைக்கு வந்துவிடு என்று சொன்னேன். அப்போது கிளம்பி சென்றவள்தான் யாராவது கடத்தி இருப்பார்களோ என்று மனது துடியாய்த் துடிக்கிறது தம்பி . எல்லாம் என்னை சொல்லும்… நானே அவளை தொலைத்து விட்டேனே” தலை தலையாக அடித்துக் கொண்டார்.
அவரை தடுத்த ஹர்ஷிதா “சார் இது ஒன்றும் உங்கள் போலீஸ் ஸ்டேஷன் இல்லை. அடுத்தவர்கள் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி காயப்படுத்தி விட்டீர்கள் என்று ரத்னாக்கா கம்ப்ளைன்ட் கொடுத்தால் உங்களை கைது பண்ணவும் தயங்கமாட்டார்கள்” என்று அத்விக்கிடம் எகிறினாள்.
“ஏய் உன் விளையாட்டுத் தனத்தை மூட்டை கட்டி வைத்து கொள். இன்றைய புள்ளிவிவரப்படி அரை மணி நேரத்திற்கு ஒரு பெண் கடத்தப்படுகிறாள் . உன்னிடம் பேசி நேரத்தை விரயடிப்பதில் ஒரு பயனும் இல்லை” என்று அவளை அப்புறப்படுத்திவிட்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புறப்பட்டான் அத்விக்.
“அத்வி நானும் வருகிறேன்” அவன் பின்னாடி ஏறிக் கொண்ட ஹர்ஷிதாவை தடுக்கவில்லை.
“சீரியஸ்னஸ் தெரியாமல் பேசவில்லை. ஏற்கனவே உடைந்து போய் இருக்கிறார் ரத்னா அக்கா. அவரிடம் போய் பயமுறுத்தும்படி பேசினாயா அதான் அப்படி சொன்னேன் . ஆனால் நீ பயப்படாதே அத்வி. உன்மேல் நான் எந்த கேஸும் கொடுக்கவிடாதபடி பார்த்துக் கொள்கிறேன்” என்றவளிடம் “வாயைமூடி விட்டு வா இல்லாவிட்டால் அப்படியே தள்ளி விட்டு போவேன்” என்று கடுகடுத்தான் அத்விக்.
அவன் ஸ்டேஷனை அடையவும் அவன் மொபைல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. கனியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாக அத்ரிஷ் போனில் தெரிவிக்கவும் மீண்டும் ரத்னா வீட்டிற்கு டுகாட்டியை திருப்பினான்.
கனியை கண்டதும் அவளை ஆவேசமாக தாக்க வந்த ரத்னாவை தடுத்து நிறுத்தியிருந்தான் அத்ரிஷ். அவளிடத்தில் எந்த கேள்விக்கும் பதில் இல்லை .
டியூஷன் தோழி ஒருத்தியின் வீட்டில் இருந்தவளை கண்டறிந்து வா என்றதும் மறுக்காமல் வந்து சேர்ந்தவளிடம் அத்விக் பேசினான்.
“அப்பா அம்மா ஏதாவது சொன்னால் இப்படி தான் வீட்டை விட்டு வெளியேறுவாயா?” என்ற அத்விக்கின் காதுகளில் குரலை தாழ்த்தி “மிஸ்டர் துரை சிங்கம் சார் .. இந்த டயலாக்கை அவனிடம் சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்” என்று அவன் முன் இருந்த கண்ணாடியை சுட்டிக்காட்டினாள் ஹர்ஷி .
ஹர்ஷியை முறைத்தவனிடத்தில் கனி சற்றுக் கோபமாக ” வீட்டை விட்டு எல்லாம் நான் ஓடவில்லை எங்க அப்பா டியூட்டி முடித்துவிட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார். என்னை காணவில்லை என்றால் தவித்துப் போய் விடுவார். நானும் அப்பா வருவதற்குள் திரும்பி விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் அத்ரி அண்ணா என்னை கூட்டி வந்து விட்டார்கள்” என்று கூறினாள்.
இந்தப் பேச்சை அவள் பேசவில்லை அவள் வயது பேசுகிறது என்று உணர்ந்த அத்விக் அவளிடம் அறிவுரை வழங்க போன சமயம் அவனை தடுத்து “கனி நீ வா” என்று தனியே அழைத்து அவளிடம் பேசிவிட்டு வந்தாள் ஹர்ஷிதா.
” சாரிம்மா இனி என்ன நடந்தாலும் வீட்டை விட்டு மட்டும் போக மாட்டேன்” என்று விட்டு உள்ளே சென்றாள். கனியின் சொற்களில் பாசம் தெரியவில்லை. இருந்தாலும் உறுதி தெரிந்தது.
“டைம் ஹீல்ஸ். சரியாயிடுவா அக்கா. ஆனால் அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை. நீங்கள் இதைப் பற்றி மேற்கொண்டு துருவாதீர்கள். முடிந்தால் உங்கள் கணவரிடம் கூட பகிர வேண்டாம். நீங்கள் அவள் அப்பாவிடம் வந்ததும் வராததுமாய் இதை சொல்லிக் கொடுப்பீர்கள் என்ற அவளது எண்ணத்தை உடையுங்கள். உங்களைப்பற்றிய அவள் கொண்டுள்ள அபிப்ராயத்தை மாற்ற அவளுக்கு உதவுங்கள்” என்று கூறிவிட்டு மற்ற இருவருடன் வீட்டிற்கு புறப்பட்டாள் ஹர்ஷிதா.
” ஏன்டா வீட்டில் இவ்வளவு பெரிய களேபரம் நடக்கிறது. நீ என்னடா செய்கிறாய்…” போனும் கையுமாக நின்ற விக்னவிடம் அத்விக் கேட்க “ஒரு நிமிடம்” என்று போனில் அனுமதி வாங்கிக்கொண்டு “என்னடா” என்றான் விக்கி.
அவனிடம் ஒரு பார்சலை நீட்டி “இதை உன் பாச மலரிடம் கொடுத்துவிடு” என்றான் அத்விக்.
” என்ன மச்சி இது”
“பார்த்தால் தெரியவில்லையா கிஃப்ட்”
” எதற்குடா?”
” உன் நிச்சயதார்த்தத்திற்கு”
” என் நிச்சயத்திற்கு எனக்கு தானேடா கொடுப்பார்கள்”
” அதனால்தான் உன்னிடம் கொடுத்து கொடுக்க சொல்கிறேன்”
” ஏன்டா குழப்புகிறாய்?”
” ஒரு குழப்பமும் இல்லை. இந்த போனை அவளை ஏற்றுக் கொள்ள வைப்பது உன் பொறுப்பு இல்லாவிட்டால் உன் நிச்சயத்தன்று ஏதாவது கலாட்டா செய்து…….” அத்விக் வாக்கியத்தை முடிக்க விடாமல் அவன் வாயை பொத்தியிருந்தான் விக்னவ்.
நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக எஸ்.டி.ஆர் மஹாலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வட இந்திய பாணியில் இளஞ்சிவப்பு வண்ண கற்கள் பதித்த தாவணியும் பச்சை நிற லெகங்காவும் அணிந்திருந்தாள் ஹர்ஷிதா. தலைமுடியை சிம்பிள் ஃப்ளாரல் பிரைட் முறையில் ஆங்காங்கே பூக்கள் தென்படும்படி முன்பக்கமாய் பின்னியிருந்தாள். இருகைகளிலும் பச்சையும் பிங்க் நிறமுமாய் வளையல்கள் அடுக்கியிருக்க சங்கு கழுத்தினை மெருகேற்றும் விதமாய் வைர அட்டிகை மின்னி கொண்டிருக்க முழுநிலவாய் வலம் வந்துகொண்டிருந்தாள் .
மும்பையிலிருந்து அன்று காலை சென்னை வந்து இறங்கிய அத்விக் நேரே மண்டபத்தை அடைந்ததும் அவன் விழிகளில் அழகு பதுமையாய் அவனது அரிசி மூட்டை தென்பட குனிந்து தன் இரவு உடையை நோட்டமிட்டான். அவளுக்கு அருகில் செல்ல எத்தனித்த கால்களுக்கு “பாத்திங் ஃபர்ஸ்ட் டாக்கிங் நெக்ஸ்ட்” என்ற உத்தரவை பிறப்பித்து விட்டு நகர்ந்தவனை தடுத்த ரகுநாதன் “வாழ்த்துக்கள்டா மகனே… எங்களை மிகவும் பெருமை படுத்தி விட்டாய்” என்று வாழ்த்தினார்.
ரகுநாதன் மரகதத்துடைய அக்காவின் மைந்தன். மகள் பிறந்ததும் தன் மனைவி இறந்துவிட ஒற்றை ஆளாய் பிரகதியே உலகம் என்று வாழ்பவர். சிறுவயதில் கோவில் திருவிழா சமயங்களிலும் சொந்தபந்த விஷயங்களிலும் பிரகதி இவர்களுடன் சேர்ந்து விளையாடியதுண்டு. இரு வயது இளையவளான பிரகதி அத்வியை அண்ணா என்றும் விக்னவை அத்தான் என்றும் தான் அழைப்பாள் ரகுநாதன் சொல்லிக் கொடுத்தபடி. அதனாலேயே சிறுவயதில் அவளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பான் அத்விக்.
“ரதி எங்க சித்தப்பா… வந்திருக்காளா?”…. அத்விக்
“லண்டன்ல வேலை பார்க்கிறாள்டா… கைனகாலஜிஸ்ட்”
” வாவ் சூப்பர் சித்தப்பா…. அவளிடம் பேசி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன..” வருத்தத்துடன் மொழிந்தவனிடம் “போன் பண்ணி தரவா” என்றார் ரகுநாதன். “குளித்துவிட்டு வந்து விடுகிறேன் சித்தப்பா” என்றபடி உள்ளே சென்றான்.
அம்மா தேர்ந்தெடுத்து வைத்திருந்த உடைகளில் ஹர்ஷிதாவிற்கு நிகரான இளஞ்சிவப்பு நிற உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தான் அத்விக்.
அவனது கண்கள் ஹர்ஷியை தேடி அலைபாய அவளோ தன் இரு கைகளிலும் எதையோ தாம்பூலத்தில் எடுத்துக்கொண்டு வரும்போது முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாவில் மோதி அதிலேயே தொப்பென்று விழுந்தாள்.
அருகில் நின்று கொண்டிருந்த ஆர்யன் “ஹர்ஷி ஆர் யூ ஓகே ? எங்காவது அடிபட்டிருக்கிறதா?” என்று பதற “நோ வொரீஸ் ஆர்யா . ஐ அம் பெர்பெக்ட்லி ஆல் ரைட்” என்றாள் ஹர்ஷிதா சிரித்தபடி.
அவள் எழுந்து கொள்ள உதவுவதற்கு ஆர்யன் தன் கையை நீட்ட ஹர்ஷிதா அதை பற்றுவதற்குள் “ஹர்ஷிஷிஷிஷி” என்று கத்தியிருந்தான் அத்விக்.

Advertisement