Advertisement

” டேய் இது உன் வேலையா?” என்று விக்னவ் அத்விக்கிடம் சந்தேகமாய் கேட்டான்.
அத்வியிடம் பதில் இல்லாமல் போகவும் “அன்றைக்கு ‘கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்’ என்று உன்னை தான் கோகுல் அழைத்துக் கொண்டு சென்றான். அடுத்த நாள் தான் அவன் அடிபட்டு வந்தது. இப்போது யோசித்துப்பார்த்தால் நீதான் அவனை தள்ளிவிட்டு இருப்பாயோ என்று நம்பத் தோன்றுகிறது” விக்னவ் நடந்ததை கூறுமாறு கேட்டான்.
“நான் அவனை தள்ளிவிடவில்லை போதுமா.. வா போகலாம்” என்ற அத்விக்கிடம் “அப்போது அன்று அந்த கோகுல் உன்னிடம் என்ன சொன்னான்?” என்றாள் ஹர்ஷி.
அத்விக் அவளது கேள்வியை லட்சியம் செய்யாமல் திருப்பி கொள்ளவும் ” நீங்கள் கேளுங்கள் மித்து .. காதலி கேட்கும் பட்சத்தில் எவ்வாறு பதிலளிக்காமல் செல்வான் என்று நானும் பார்க்கிறேன்” என்று ஹர்ஷிதா சொன்னதும் அவசரமாய் அவள் புறம் திரும்பினான் அத்விக்.
” காதலியா யாருடா?” விக்னவின் கேள்விக்கு “அன்று என்னை தனியாக அழைத்துச் சென்ற கோகுல் ஒரு கடிதத்தை என் கையில் கொடுத்து ஹர்ஷியிடம் கொடுக்குமாறு சொன்னான். அவளை காதலிக்கிறானாம். அண்ணனை பக்கத்தில் வைத்துக்கொண்டு இந்த லெட்டரை கொடுக்க முடியாததால் தனியாக கூப்பிட்டு கொடுத்தானாம். அவனது தைரியத்தை பாராட்டி இரண்டு தட்டு தட்டினேன்” என்று விளக்கமளித்தான் அத்விக்.
“என்னது!! இரண்டு தட்டு தட்டினாயா.. இன்னும் ஒன்று சேர்த்து தட்டி இருந்தால் கொலை கேஸில் உள்ளே சென்று இருப்பாய். அது இருக்கட்டும் அவனை அடித்ததை கூட மன்னித்து விடுகிறேன் என்று வைத்து கொள்வோம். ஆனால் அந்த விபூதி பொட்டலத்தை கொடுக்க சொன்னதற்கு உன்னை ஏதாவது செய்தாக வேண்டும். இவன புடிங்க ராகுல் சார்… புடிச்சு ஜெயில்ல போடுங்க” என்றாள் ஹர்ஷிதா .
” ஹே அந்த லூஸிடம் நான் எதையும் கொடுக்க சொல்லவில்லை” என்று மறுத்த அத்விக்கிடம் “நீ எதையாவது சொல்லி இருப்பாய். இல்லாவிட்டால் இப்படி பார்க்கும் இடமெல்லாம் செய்வானா .. இதோடு 15 பொட்டலங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்” என்றாள் ஹர்ஷிதா ஆவேசமாய்.
………..
அன்று….
‘”அவள் அண்ணனிடம் கொடுத்து இருந்தாலாவது ஒன்றிரண்டு திட்டுகளுடன் தப்பித்து இருப்பாய். ஆனால் இப்படி …..” அத்விக் நிறுத்தவும்
“ஆனால் எப்படி ….” பயத்தில் வியர்த்தபடி கேட்டான் கோகுல்.
” புருஷன் கிட்டவந்து பொண்டாட்டி க்கு லவ் லெட்டர் கொடுக்க சொல்கிறாயே உன்னை என்ன பண்ணலாம் என்று நீயே சொல்”
” அத்விக் நீயும் ஹர்ஷியை விரும்புகிறாய் என்று தெரியாமல் உன்னிடம் லெட்டர் கொடுத்தது தப்புதான். ஆனால் நீயா நானா என்று முடிவை அவள் எடுக்கட்டும்” தன் புத்தம்புதிய முதல் காதல் கொடுத்த தைரியத்தில் பேசினான் கோகுல் .
“டேய் நானெல்லாம் பேசுகிற ஆளே இல்லை. இருந்தாலும் சொல்கிறேன் நன்றாக கேட்டுக் கொள். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஹர்ஷி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவள் தான் என் பொண்டாட்டி . இது எங்கள் வீட்டில் எடுத்த முடிவு . அதனால் இந்த எண்ணத்தை எல்லாம் விட்டுவிடு”
” வீட்டில் எது சொன்னாலும் அதன்படிதான் நடக்குமா … ஹர்ஷியின் விருப்பத்தை கூட கேட்க மாட்டீர்களா… அவள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது என்னால் தான் முடியும் உன்னைவிட ஏன் இந்த உலகில் எவனையும் விட நான் அவளை நன்றாக என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்” சினிமா டயலாக் பேசிக் கொண்டிருந்தவனை “இனி பேச்சு வேலைக்காகாது அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்” என்று தன் ஸ்டைலில் அத்விக் விளக்கவுரை வழங்க ஆரம்பித்தான் .
அன்று கோகுல் கற்றுக்கொண்ட பாடங்கள் இரண்டு. முதலாவது யார் தடுத்தாலும் ஹர்ஷியை அத்விக் விட்டுக்கொடுக்க மாட்டான். இரண்டாவது இந்த காட்டுமிராண்டியிடம் மாட்டிக்கொண்ட ஹர்ஷியின் நிலை??? முதல் பாடத்தை விட இரண்டாம் பாடமே அதிக வலியை கொடுக்க முதல் காரியமாக மருத்துவமனைக்கு கூட செல்லாமல் கோவிலுக்கு ஓடினான் ஹர்ஷியின் எதிர்கால நலன் வேண்டி. இன்றுவரை வேண்டியும் வருகிறான். இனியும் தவறாது வேண்டுவான்.
………
இப்படிப்பட்ட ஒரு நலன் விரும்பியின் வேண்டுதலுக்காவது இறைவன் செவிசாய்த்து இருந்தால் ஹர்ஷிதாவை உயிர்குடிக்கும் சாத்தானிடம் இருந்து எளிதாக விடுவித்திருக்கலாம். ஆயினும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் … அவளது விதியை அவள் அனுபவித்தே தீர வேண்டும் என்னும் பட்சத்தில் சாதாரண மனிதனாகிய அத்விக்தான் என்ன செய்வான்??? அதுவும் எதிர்காலம் தன்னை எப்படி மாற்றும் என்பதையும் ஹர்ஷிதாவின் உயிரைக் காட்டிலும் தான் மற்ற உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதையும் அறிந்திராத அத்விக் கடந்த காலத்தைப் பற்றிய அன்றைய நிகழ்வுகளை நிகழ்காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தான்.
…………
அத்விக்கை உலுக்கி “சொல்லு அத்வி… கோகுலிடம் அன்று என்ன சொன்னாய்?” கேட்டபடி ஹர்ஷிதா நிற்க “ஹேய் நீ இன்னும் அதே கேள்வியில்தான் நிற்கிறாயா?” என்பதுபோல பார்வையிட்டவன் அவள் கையை தட்டிவிட்டு சென்றான் .
“உன்னை !!!” அத்விக்கை தாக்க போனவளை அவள் போன் தடுத்தது. அதை எடுத்துப் பார்த்தவள் விக்னவிடம் “என் தோஸ்து தான் உன் தோஸ்த்தை காப்பாற்றி இருக்கிறாள்” என்று மொழிந்து விட்டு “ஸ்பீக்கரில் போடுகிறேன் நீயும் கேளு உன் ஆளு பேசுவதை” என்று ஆன் செய்தாள்.
” சொல்லுங்க அண்ணி சொல்லுங்க….”
ஹர்ஷியின் சொல்லுக்கு எந்த பதிலும் வராததால் “அத்து லைன்ல இருக்கியா?” என்றாள்.
அப்போதும் மறுமுனை அமைதி காக்க ஹர்ஷிதா இம்முறை சற்று யோசித்துவிட்டு “ஆர்யா” என்றாள்.
கீழ் தளத்தை நோக்கிய படிக்கட்டுகளில் காலை வைத்த அத்விக் சடாரென திரும்பி ஹர்ஷியை நோக்கி விரைந்தான் .
“ஹர்ஷி” என்றழைத்த எதிரொலியில்தான் எத்தனை நேசம், பரிவு, ஏக்கம், கூடவே கூடுமான காதலும். அதை உணராத ஹர்ஷிதா “வாட் எ சர்ப்ரைஸ் மேன்! சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டாள். பத்து நாட்களுக்கு முன் கிளம்பியிருந்தவனின் குரல் சென்னையில் கேட்டதால் குழப்பமுற்றே தான் வினவினாள்.
” தேங்க்ஸ்… உன்னால்தான். .” அதற்குமேல் ஆர்யன் பேசியது அங்கிருந்தவர்கள் செவிகளுக்கு எட்டவில்லை. அவள் கையில் இருந்த போனை பிடுங்கி அந்த போன்காலை அத்விக் கட் பண்ணவும் ஹர்ஷிதா பத்ரகாளி ஆனாள்.
மறுபடியும் ஆர்யன் டயல் செய்ய அதையும் சலிக்காமல் கட் செய்தான் அத்விக்.
“ஐ அம் கோயிங் டூ கில் யூ. என் போனை கொடு” என்று ஆத்திரத்துடன் கத்திய ஹர்ஷிதாவை “வீட்டிற்கு கூட்டிப் போடா இவளை” என்றான் தன் தம்பி அத்ரிஷிடம் . விக்னவிடமும் நீங்கள் வீட்டுக்குப் போங்கள். எனக்கு ஒரு சிறிய வேலை இருக்கிறது” என்றுவிட்டு ராகுலின் புறம் திரும்பியவன் “பைடா… நாளைக்கு டியூட்டி முடித்துவிட்டு போன் பண்ணு” என்றுவிட்டு புறப்பட்டான் அத்விக்.
” பாதியிலேயே எங்கேடா ஓடுகிறாய்?” என்ற ராகுலின் கேள்விக்கு “ஒரு வேலை இருக்கிறது… சொன்னேன் தானேடா?” என்றான்.
“சரி இருந்து விட்டுப் போகட்டும். அதற்கு ஹர்ஷி மொபைலை எதற்காகடா பறித்தாய்?”
” இது ஒரு நல்ல கேள்வி”…… ஹர்ஷி
” என் போன்ல பேலன்ஸ் இல்லை முக்கியமான ஒரு கால் பண்ணனும்” சீரியசாக சொன்னவனிடம் “நம்பிவிட்டோம்… என் ஃபோனை மட்டும் உடைத்தாய் என்றால் உன் மண்டை உடைக்கப்படுவது உறுதி” அத்விக்கைப்பற்றி நன்கு அறிந்திருந்தவள் மொழிந்தாள்.
அந்த போனை உடைக்கும் எண்ணமெல்லாம் சற்றும் இல்லை அத்விக்கு. அவள் ஆர்யனோடு பேசுவது பிடிக்கவில்லை. அதை தடுக்கவே இவ்வாறு நடந்துகொண்டான். இருப்பினும் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த போன் சுக்குநூறாக சிதறடிக்கப்பட்டது.
பொதுவான பை ஒன்றை செலுத்திவிட்டு தனது டுகாட்டியில் கிளம்பியவனின் சட்டைப்பையிலிருந்த மொபைல் ஒலித்தது. ‘மீண்டும் அழைக்கிறானா இவனை!’ ஆர்யனின் மேல் எழுந்த கோபத்துடன் வண்டியை ஒரு மரத்தடியில் நிறுத்திய அத்விக் போனை கையில் எடுத்து பார்த்ததும் புன்முறுவல் பூத்தான்.
அத்விக்கின் இதழ்களை மகிழ்வித்தது போனில் ஒளிர்ந்த டயலரின் புகைப்படமே. கிளி பச்சை வண்ண புடவை அணிந்திருந்த பச்சைக்கிளிக்கு தன் அம்மா ரூபா அவளது பட்டு கன்னத்தில் முத்தமிடுகையில் எடுத்த படம். ரிங் கட் ஆவதற்குள் எடுத்து பேசியவன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக ரூபாவிடம் சொல்லிவிட்டு அணைத்தான்.
அந்த போட்டோ தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை அறியாதவன் ‘ராட்சஸி இன் சாரி’ என்று கூறிவிட்டு தன்னையுமறியாமல் அவளது கேலரியை திறந்து பார்க்கலானான். அவளது புகைப்படங்களில் பொதிந்திருந்த குறும்புத்தனத்தை ரசித்தவன் மாறுவேடத்தில் நின்ற ஒரு புகைப்படத்தை பார்த்து ரோடு என்பதையும் மறந்து வாய்விட்டு சிரிக்கலானான்.
பின்பு ஏகப்பட்ட வீடியோக்களில் ஒன்றான ‘பர்த்டே சொதப்பல்ஸ்’ என்று பெயரிட்டிருந்ததை அழுத்தினான்.
” ஹாய் வணக்கம் வழக்கம்போல் நான் உங்கள் ஹர்ஷி அண்ட் திஸ் இஸ் அவர் சி.டி… ‘ஹாய் சொல்லு’ என்றதும் அத்ரிஷ் ஹாய் சொல்ல மேற்கொண்டு பேசலானாள் ஹர்ஷிதா. இன்று எங்கள் வீட்டு தடிமாட்டின் பிறந்தநாள். வீடே சோகமயமாக காட்சியளிக்கும். ரூபா அத்தை உம் என்று சுற்றுவார். பி.டி வீட்டிற்கு வராமல் சுற்றுவார். பிக் பிரின்சஸிடம் வாயை கொடுத்தால் “உன்னால் தான்டி அவன் போனான்…” அரைத்த மாவையே அரைக்கும். என்னை பெற்ற ஆத்தா எனக்கு ஒழுங்காக சாப்பாடு போடாது. அப்பாவிடம் எதை பேசினாலும் அதை கவனத்தில் கொள்ள மாட்டார். இதோ என் ஆருயிர் நண்பன்….. இவர்களும் அண்ணனை பிரிந்த சோகத்தில் என்னை எங்கும் வெளியே கூட்டி செல்ல மாட்டார். எல்லோரும் அவனை மிஸ் பண்ணுகிறார்களாம். இப்ப நமது டாஸ்க் என்னவென்றால் உம்மென்று இருப்பவர்களை கும்மென்று ஆக்குவதே. அவர்களை மகிழ்விக்க நான் எடுத்துக் கொண்ட ஆயுதம் பர்த்டே கேக். பர்த்டே என்றால் கேக் தானேபா வெட்டுவார்கள். ஆனால் இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த கேக்கை தயாரிக்கப் போகும் செஃப் ஹர்ஷிதா ஹரிஹரன். கைதட்டு சி. டி என்றவள் மீண்டும் ஸ்கிரீனை பார்த்து கை தட்டுவோருக்கு இந்த கேக் இலவசம் ஸோ நீங்களும் தட்டலாமே ” என்று நீண்ட வசனத்தை பேசினாள்.
பின் ” பொருள்கள் எல்லாம் ரெடியா” என்றவள் அந்த மொபைலை அதிர்ஷிடம் ஒப்படைத்துவிட்டு அவள் செய்முறையை பதிவாக்க சொன்னாள் . யூடியூபில் பார்த்து அதற்கேற்ப வியர்க்க விறுவிறுக்க சற்றும் மாறுபடாது கேக்கை தயாரித்து முடித்துவிட்டு தம்ஸ் அப் காட்டினாள் ஹர்ஷிதா.
வீட்டினர் அனைவரும் ஹாலில் குழுமி இருக்க செய்தவள் அவர்கள் கண்களிலும் ரிப்பன் கொண்டு கட்டி வைத்தாள். “பத்தே நிமிடங்களில் வந்து விடுகிறேன்” என்று விட்டு அடுப்படிக்குள் ஓடியவளுக்கு ஓவனில் அவள் செய்து வைத்திருந்தத கேக் காய்ந்த கருவாடாக கிடைத்தது.
“ஓ மை காட் !!!! அதிர்ந்து நின்ற ஹர்ஷிதாவிடம் ” ஏன் டார்லிங் வெண்ணிலா கேக் செய்ய போவதாகதானே கூறினாய்… அது எப்படி ப்ரௌனி கேக் ஆக மாறியது ?” சந்தேகமாய் கேட்டான் அத்ரிஷ்.
“சும்மா இரு சி.டி” புலம்பியவள் “எங்கே மிஸ்டேக் ஆச்சு… கரெக்டா தானே செஞ்சேன்” என்று அத்ரிஷ் வாங்கி வந்திருந்த பொருள்களின் பையை அலசலானாள். பச்சரிசி மாவு ஒரு கிலோ என்று போட்டிருந்ததை பார்த்துவிட்டு “இது என்ன பச்சரிசி மாவு? அது எதற்கு?” என்று கேட்கையில் “அதை வைத்து தான் டார்லிங் நீ கேக் செய்தாய் ஏன் கேட்கின்றாய்” என்றவனின்மேல் கொலைவெறி வந்தது.
“மைதா மாவு வாங்கி வரச் சொன்னால் பச்சரிசி மாவை வாங்கி வந்திருக்கிறாய்?”
“நீ கொடுத்த இன்கிரீடியன்ஸ் லிஸ்டில் எனி டைப் ஆஃப் ஃப்ளோர் என்று தானே இருந்தது. இது பச்சரிசிமாவு என்பதே நீ சொல்லித்தான் எனக்கு தெரிகிறது” என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள். மேலும் “நான் போய் மைதாமாவு வேண்டுமானால் வாங்கி வந்து விடவா” என்ற அத்ரிஷிடம் “ஒரு ஆணியும் புடுங்க வேணாம் ஸ்விக்கிக்கு கால் பண்ணு” என்றாள் ஹர்ஷிதா.
தலையின் மேல் கை வைத்திருந்தவள் “கடவுளே! இதுவும் ரெக்கார்ட் ஆகிவிட்டதா ” என்று கேட்டபடி கிட்சன் ஸ்லாபில் அத்ரிஷ் வைத்திருந்த போனை கையில் எடுத்துக்கொண்டு “இந்த ஸ்விக்கி மேட்டர் நமக்குள்ளே இருக்கட்டும். சி.டி இதை வெளியில் சொல்ல மாட்டான்… அதே போல் நீங்களும் இந்த சீக்ரெட்டை மெயின்டெயின் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படி தப்பித்தவறி இதை லீக் செய்தால் அவர்களுக்கு தக்க பரிசாக இதே கேக் வழங்கப்படும். பை ” என்றபடி வீடியோவை அணைத்து இருந்தாள் ஹர்ஷிதா.
‘நல்ல வேலை மும்பையில் இருந்ததால் பிழைத்துக் கொண்டோம்டா சாமி’ என்று அடக்கமாட்டாமல் சிரித்த அத்விக் அடுத்து கண்ட புரொபோசல் வீடியோவில் துணுக்குற்றான்.
அதில் ஒரு மலையுச்சியில் நின்று கொண்டிருந்த அதர்வனாவை காண்பித்து பின் ஸ்கிரீனை பார்த்து மென் குரலில் ‘பிடித்து தள்ளி விடலாமா?’ என்று சிரித்த ஹர்ஷிதாவிடம் “இங்கே இருந்து குதித்து விடலாம் போல இருக்கு” என்றிருந்தாள் அதர்வனா .
” நீ ஏன் அத்து சிரமப்படுகிறாய்… நான் வேண்டுமானால் ஹெல்ப் பண்ணவா” என்றுவிட்டு சி.டி நான் அத்துவை தள்ளிவிட போவதை ரெக்கார்ட் பண்ணு” போனை கைமாற்றியவள் விளையாட்டிற்கு அதர்வனாவின் தோளில் கை வைக்க அதனை தடுத்து அப்படியே குடிக்க எத்தனித்தாள் அதர்வனா . ஒரு நொடி தாமதித்தாலும் சிதறடிக்கப்பட்டிருப்பவளை சாமர்த்தியமாக இழுத்து மறுபக்கம் தள்ளினாள் ஹர்ஷிதா.

Advertisement