Advertisement

விட்டுச் சென்ற போது எப்படி இருந்ததோ அதில் ஏதும் துளி மாற்றம் இல்லாமல் அப்படியே வரவேற்றது அவனது வீடு. மெயின் கேட்டிற்கும் வீட்டிற்குமே ஒரு ஏக்கர் அளவிற்கு இடைவெளி இருந்தது. அதில் பாஸ்கட் பால் கோர்ட் ஒரு ஓரமாக வளைக்குள் தடுத்திருக்க மறுபுறம் எப்போதும் அவர்கள் விளையாடும் கிரிக்கெட் வாசம் நிறைந்திருந்தது. வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி முற்றிலும் லான் அமைக்கப்பெற்று வீடுகளின் பின்பக்கம் ஒரு பெரும் தோட்டம் எழில்மிகு விதமாய் வண்ணமிகு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கவாட்டில் 30 அடி நீள்வட்ட வடிவிலான ஒரு சுவிம்மிங் பூல் அழகுற காட்சியளித்தது. அதன் அழகைக் கூட்டும் விதமாய் ஒரு புறம் ஆறு நீண்ட வெள்ளை நிற பீச் நாற்காலிகளும் மறுபக்கம் தென்னை மரங்களும் நடப் பட்டிருந்தது. வீட்டினுள் மெயின் ஹாலில் இருந்து மாடிப்படிகளில் ஒன்று உட்புறமாய் அமைந்திருக்க தோட்டத்தின் இடதுபுறமாக மற்றொரு மாடிப்படிகள் ஜிக் ஜாக் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இரு வீடுகளையும் இணைக்கும் விதமாக மூன்று வாயில்கள் இருந்தன. அதில் முன் வாசல் வழியையும் பின்பக்கம் தோட்டத்தின் வழியையும் வீட்டினர் உபயோகிக்க ஸ்டோரூம் வாயிலாக இருந்த எமர்ஜென்சி டோர் பயன்படுத்தப்படாமல் இருந்தது. வீட்டின் முன்புறம் மூன்று கார்கள் நிற்பது போன்ற ஒரு போர்டிகோ இருந்தது. அங்கு நின்ற அவனது டுகாட்டியை பார்வையிட்டவாறு சென்ற அத்விக்கை இடைமறித்து அவன்மீது தாவிக் கொண்டான் டைகர்.

டைகரிடம் தன் பிரிவின் ஏக்கங்களை சமன் செய்து விட்டு வந்தவன் கதவிற்கு பக்கத்தில் பனித்த கண்களோடு சமைந்து நின்ற ரூபாவை பார்த்ததும் “சாரி அம்மா” என ஓடிச் சென்று தனது அன்னையை கட்டிக்கொண்டான். இருவர் கண்களிலும் போட்டி போட்டுக்கொண்டு வழிந்தோடிய கண்ணீரை துடைக்க தோன்றாது “வந்துவிட்டாயா கண்ணா?” தழுதழுத்தார் ரூபா.

வாசலில் சத்தம் கேட்டு விரைந்த பிருந்தாவின் கண்கள் கண்ணீரை தத்தெடுக்க தனது அம்மாவை அணைத்தபடியே “அத்தை” என்று பிருந்தாவின் கைகளையும் பிடித்துக் கொண்டான் அத்விக்.

அழுகை படலம் ஒருவாறு நிறைவடைந்த பின் வீட்டிற்கு உள்ளே செல்ல எத்தனிக்கும் போது அங்கே வந்த மரகதம் அப்பத்தாவின் முதிர்ச்சி நன்கு வெளிப்பட “ரொம்ப ஓல்ட் ஆகிவிட்ட மாதிரி தெரிகிறது பிக் பிரின்சஸ். இந்த உடம்பை வைத்துக்கொண்டு இனி எப்படி என்னோடு மல்லுக்கட்ட போகிறாய்?” வம்பிழுத்தான் அத்விக் .

” வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் என்னிடம் அடிவாங்கி மறுபடியும் வீட்டைவிட்டு சென்று விடாதே” வாதாடினாலும் மரகதத்திற்கு அவரது அனுமதி இன்றி கண்கள் குளமானது.

“டோன்ட் கிரை மை பிக் பிரின்சஸ் உன்னை விட்டு இனி எங்கும் ஓட மாட்டேன்”

“இனி நீ ஓட நினைத்தாலே அந்த காலை வெட்டி அடுப்பில் போட்டு விடுவேன் “

பாட்டி பேரனின் வாக்குவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த பிருந்தா “அம்மு இங்கு வந்து பார் .. யார் வந்திருக்காங்கன்னு … சீக்கிரம் வெளியே வா” என்று குரல் கொடுக்கவும் ஆடி அசைந்து வந்த ஹர்ஷிதா “வணக்கம் நியூ கமிஷனர் சார். என்ன இந்த பக்கம்? ஏதாவது கேஸ் விஷயமாக வந்து இருக்கிறீர்களா?” என்று தன்மையுடன் வினவினாள்.

” வந்தவுடன் ஆரம்பித்தாக வேண்டுமா” அவளை பிருந்தா அதட்ட “அவள் கேட்டதில் என்ன தப்பு” மரகதம் பேத்தியின் புறம் நின்றார்.

அப்போது ஒரு வெள்ளை நிற பிஎம்டபிள்யூவும் அதைத்தொடர்ந்து ஒரு கருப்பு நிற ரோல்ஸ்ராய்ஸும் வீட்டிற்குள் பிரவேசித்தன.

முதல் காரிலிருந்து இறங்கியவன் அத்விக்கை கண்டதும் ஓடி வந்து “அத்வி” என்றபடி அணைத்துக்கொண்டான். பதிலுக்கு “அத்ரி” என்று அத்விக்கும் தன் தம்பியை தழுவிக் கொண்டான்.

அடுத்த காரில் இருந்து இறங்கியவன் பின் இருக்கைக்கான கதவினை இரு பக்கமும் திறந்து விட்டு பிறகு அத்விக்கை நோக்கி விரைந்தான். ஆனால் அத்விக்கிடம் எதுவும் பேசாது “போடா” என்று சொல்லிவிட்டு வழியும் கண்ணீரை மறைக்க வீட்டிற்குள் செல்ல எத்தனித்தவனின் கையைப் பற்றி “சாரி விக்கி” என்றபடி விக்னவை தன்னோடு சேர்த்துக் கொண்டான் அத்விக்.

விக்னவின் முதுகில் ஆதரவாய் தடவியவாறு எதிரில் நின்ற ஹர்ஷிதாவை அத்விக் நோக்க அவளோ “திருந்தாத கேஸு அழுவதை பாரு” என்று விக்கியை திட்டியபடி தன் தலையில் அடித்துக் கொண்டு சென்றாள்.

இரண்டாவது காரிலிருந்து இறங்கியவர்களில் ஹரிஹரன் ” வெல்கம் பேக் மை யங்கஸ்ட் அச்சீவர்” என்ற பாராட்டுதலுடன் வரவேற்க ஜெகனோ “எப்போது வந்தாய்?” என்று மட்டும் கேட்டார்.

எதிர்பார்த்ததுதான் என்பதால் “இப்போதுதான் அப்பா ” அத்விக்கின் குரல் உடையாமல் வெளிவந்தது.

” சரி எல்லோரும் வாருங்கள் வீட்டிற்குள் சென்று பேசிக் கொள்ளலாம்” என்றபடி உள்ளே சென்றுவிட்டார் ஜெகன்.

வீட்டினரின் கவனிப்பில் திளைத்த அத்விக் அவர்கள் அடுக்கிய கேள்விகளுக்கு எல்லாம் “ஒன் பை ஒன் ப்ளீஸ்” என்ற உத்தரவை பிறப்பித்து விட்டு தக்க பதில்களை அளித்துக் கொண்டிருந்தான்.

இரவு உணவிற்குப்பின் தோட்டத்தில் அனைவரும் குழுமி சிறிது நேரம் பொதுப்படையாக பேசிக்கொண்டிருந்தனர். ஹரிஹரன் “கதிரவன் நேற்று கூட அழைத்திருந்தார். அத்விதான் வந்தாயிற்றே. மேற்கொண்டு பேசலாமா?” என்று ஜெகனிடம் கேட்டார் .

“விக்கிக்கு பிடித்து இருந்தால் உடனே ஆக வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியது தான். என்ன விக்கி சம்மதம் தானே” என்று ஜெகன் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்து வைத்தான் விக்னவ்.

ரூபாவின் மடியில் படுத்திருந்த அத்விக் தன்னருகில் அமர்ந்திருந்த விக்னவின் கையை பற்றி எழுந்து அமர்ந்து “என்னடா மேட்டர்?” என்று கேட்க “அதர்வனாவிற்கு என்னை மணமுடிக்க கேட்கிறார்கள்டா. நீ வந்த உடன் இது பற்றி பேசிக் கொள்ளலாம் என்று விட்டேன் . அதைதான் இப்போது கேட்கிறார்கள்” புன்னகையுடனே கூறினான் விக்னவ்.

“வாவ் கங்கிராட்ஸ் மச்சி. உனக்கு இதில் இன்ட்ரஸ்டா ?”

“அதர்வனாவைதான் சிறுவயதிலிருந்தே பார்க்கிறோமே . நோ சொல்ல பெரிதாக காரணங்கள் தெரியவில்லை மச்சி”

” அப்படியே கவுந்துவிட்டு சமாளிப்பு வேறாடா. பிழைத்துக் கொள்வாய்” என்று சிரித்தான் அத்விக்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஹரிஹரன் ஜெகனிடம் “விக்கிக்கும் அத்விக்கும் ஒரே வயதுதானே . அவர்களது திருமணத்தைப் பற்றியும் பேசி விடலாமா” என்றார் .

ஜெகனும் “சிறுவயதிலேயே பேசியது தானே ஒரே மேடையில் இரு திருமணத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். கதிரவனிடமும் கேட்டு விடுவோம்” என்றார்.

முதலில் அத்விக்கிடம் கேட்கலாம் என்ற ஹரிஹரன் ‘அத்வி விக்கி திருமணத்தோடு உங்களுடையதையும் சேர்த்து வைத்து விடலாமா அல்லது தனியே நடத்திக் கொள்வோமா” என்று கேட்டது உண்மையிலேயே அத்விக்கு விளங்கவில்லை.

” உங்களது என்றால் யார் யாருக்கு மாமா?”

” இதென்னடா கேள்வி ஹர்ஷிக்கும் உனக்கும் தான். பெரிய ஆள் ஆகிவிட்டாய் என்றால் எல்லாவற்றிற்கும் உன்னிடம் விளக்கிக் கூறி உன் சம்மதத்தை பெற வேண்டுமா?” ஜெகன் அதட்ட அவரின் மேலெழுந்த சீற்றத்தை அடக்கியபடி எழுந்து நின்றான்.

” அவன் என்ன கேட்டுவிட்டான்… எதுக்கு இப்படி கோபப்படுகிறாய்.. விடு” என்று ஜெகனை அமர்த்தியவர் “நீ சொல்லு அத்வி ஹர்ஷியை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?” என்றார் ஹரிஹரன்.

தந்தையின் சொற்கள் ஏற்படுத்திய வலியும் ‘உன்னை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று அவள் முன்பு உரைத்த மொழிகளும் சேர்ந்து கொள்ள “இல்லை மாமா” என்று அத்விக் மறுத்தது எல்லோருக்கும் அதிர்ச்சியே. ஒருத்தியைத் தவிர.

” ராசு சும்மா சொல்லாதயா நீ அவளை உன் பொண்டாட்டி என்றுதானே அழைப்பாய் இப்போது என்ன? ” உடைந்தபடி கேட்டார் மரகதம்.

“அது எப்படி பிக் பிரின்சஸ் அத்விக் சாரு ஓகே சொல்லுவாரு… அவருதான் இன்னொரு பெண்ணை விரும்புகிறாரே” போட்டு உடைத்தாள் அவன் ராட்சஸி.

அத்விக் மறுத்த அதிர்ச்சியை விட ஹர்ஷிதா அதற்கு கூறிய காரணம் பன்மடங்காக வலித்தது வீட்டினருக்கு.

“என் நெஞ்சில் யாரோ ஈட்டியால் குத்துவது போல் இருக்கிறது அத்வி. அண்ணன் வீட்டிற்கு வாழ போற பொண்ணுனு தானே ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தேன்” இரு மணித்துளிகள் பிருந்தாவின் கன்னத்தை தட்டிக் கொடுத்தது.

” நீ ஏன்டி அழுகிறாய் என் பேத்தியை வேண்டாம் என்று சொன்னவன் தான் அழுகணும். உன் அண்ணன் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ளாமல் போவதற்கு அவன் என்ன ஒத்த பிள்ளையா பெத்து வைத்திருக்கிறான். இளையவனும் என் பேத்திக்கு மூப்பு தானே.. அத்ரிஷை ஹர்ஷிக்கு கட்டி வைப்போம்” என்று மரகதம் கூறும்போதே “நோ…….” என்று கத்தியது அத்ரிஷ் இல்லை சாட்சாத் அத்விக்தான். தம்பியின் வாய் நோ என்று சொல்லும் முன்னே அண்ணனுடையது முந்திக் கொண்டது.

” நீ ஏன்டா நோ சொல்கிறாய் அமைதியா இரு” அத்விக்கை ரூபா அதட்டினார் .

“நீங்கள் சொல்லுங்கள்” என்று ஹரிஹரன் அத்ரிஷிடமும் ஹர்ஷிதாவிடமும் கேட்டார். ஹர்ஷிதாவிற்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என்று அத்ரிஷ் அறிவான். எங்கு அத்விக் மேலுள்ள கடுப்பில் சம்மதம் தெரிவித்து விடுவாளோ என்ற பயத்தில் ‘நோ சொல்லு டார்லிங்’ என்று அவளுக்கு சைகை காட்டினான் அத்ரிஷ்.

அதில் பொங்கிய சிரிப்பை அடக்கி “மாப்பிள்ளையிடம் எனக்கு கொஞ்சம் தனியாக பேசவேண்டும் அப்பா” என்றாள் ஹர்ஷிதா.

” யாருமா மாப்பிள்ளை” எதற்கும் தெளிவுபடுத்திக்கொள்ள கேட்ட ஹரிஹரனிடம் “அத்ரிக்கும் எனக்கும் தானே கல்யாணம் பேசுகிறீர்கள். அப்போது அத்ரிஷ் தான் மாப்பிள்ளை” என்று கூறிவிட்டு “வா சி.டி ” என்று அவனை அழைத்துக்கொண்டு “இந்த படத்தில் எல்லாம் பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் மொட்டை மாடியில் தானே பேசிக்கொள்வார்கள்” என்று வினவினாள் ஹர்ஷிதா.

“இல்லை பூமிக்கு அடியில் போய் பேசுவார்கள்” பின்னோடு வந்த அத்விக் சிடுசிடுத்தான்.

“உனக்கு என்ன இங்கு வேலை… ஓ! மாப்பிள்ளையின் அண்ணன் என்ற முறையில் சி.டி க்கு துணைக்கு வந்தாயா?” வெறுப்பேற்றியவளின் கன்னத்தை பதம் பார்க்கத் துடித்த கையை கட்டுப்படுத்தினான் அத்விக்.

“அங்கேயே நோ சொல்ல வேண்டியது தானே இங்கே வந்து என்ன பேசப் போகிறீர்கள்? …. அவள் கூப்பிட்டால் நீயும் வந்து விடுவாயா?” தன் தம்பியையும் அத்விக் அதட்ட மறக்கவில்லை.

” நான் ‘நோ’ தான் சொல்லுவேன் என்பதில் உனக்கு என்ன அவ்வளவு உறுதி?? பேசி பார்த்தால்தானே தெரியும்.. நோவா யெஸா என்பது…எதற்கும் சின்னஞ்சிறுசுகள் பேசுவதை யாரும் கேட்டு விடாமல் பார்த்து கொள்ள சற்று இங்கேயே காவலுக்கு நில்லுங்கள் கமிஷனர் சார்” என்றபடி அத்ரிஷின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு மாடி ஏறி விட்டாள் ஹர்ஷிதா.

கீழே நின்ற 15 நிமிடங்களும் அத்விக்கிற்கு ஏதோ முள்ளின் மேல் நிற்பது போன்ற உணர்வு. பொறுக்கமாட்டாமல் ‘என்னதான் பேசுகிறார்கள் அப்படி’ என்று முதல் மாடியை அவன் எட்டியதும் அவர்கள் இருவரும் எதிர்பட்டனர்.

” இந்த முடிவை பற்றிய உன் அபிப்பிராயம் என்ன சி.டி” என்ற ஹர்ஷிதாவின் கேள்விக்கு

“எனக்கு பரம திருப்தி டார்லிங்… மே பி அடுத்தவர்களுக்கும் நல்லதாக படலாம்.. எல்லாவற்றையும் ஒருவர் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கு” என்றான் அத்ரிஷ். அத்விக் என்ற ஒருவன் அங்கு நிற்பதை இருவருமே கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அவர்கள் பாட்டிற்கு மெய்மறந்து உரையாடியபடி சென்றனர்.

” அப்படிப் பார்த்தாலும் இது பாசிடிவ் எண்ட் தானே ” சந்தேகத்துடன் கேட்டவளிடம் “ஒரு விஷயம் எல்லோருக்கும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று எப்படி நம்புவது ?” என்றான் அத்ரிஷ் எதிர்மறையாக.

” அப்போ உனக்கு பிடிக்கவில்லையா சி.டி ” என்று அவள் உருக்கமாக கேட்கவும் “டார்லிங் வாட் இஸ் திஸ் … உனக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே. நமக்கு ஓகே ஆகிவிட்டதால் அனைவருக்கும் ஓகே தான் என்று கணித்து விட முடியாது என்று சொன்னேன்” என்றான் அவசரமாக.

இருவரும் தன் பார்வை வட்டத்திலிருந்து மறைந்த பிறகும் அப்படியே முதல் தளத்திலேயே நின்றான் அத்வித்.
நோ சொல்வார்கள் என்று பார்த்தால் இத்தனை ஓகே சொல்லிவிட்டு செல்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று குழம்பினான்.

அவ்வாறு குழம்பி நிற்காது அவர்களின் பின் சென்றிருந்தால் அல்லவா அத்விக்கிற்கு தெரிந்திருக்கும் அவர்கள் கூறிய அத்தனை ஓகேக்களும் இந்த பதினைந்து நிமிடங்களாக அவர்கள் கண்டுகளித்த ஒரு குறும்படத்திற்கானது என்பது.

மொட்டைமாடிக்கு ஏறியவுடன் “ஐயோ மொபைலிலை கீழே வைத்து விட்டேனே” என்று தன் தலையில் கைவைத்த
ஹர்ஷிதா ” நீ உன் போனை கொண்டு வந்துள்ளாய் தானே சி.டி” என்று அத்ரிஷிடம் கேட்டு அதனை வாங்கினாள். “நமக்கு 15 நிமிடங்கள் டைம் இருக்கிறது” என்றவள் அதற்குள் முடியும்படியாக ஒரு குறும்படத்தை தேர்ந்தெடுத்து பொழுதை போக்கினாள். பின் அது நிறைவு பெற்றதும் அப்படத்தின் முடிவை பற்றி கலந்துரையாடியபடி இறங்கினர் ஹர்ஷிதாவும் அத்ரிஷும்.

அரைமணி நேரம் கழித்து அத்விக்கிடம் வந்த அத்ரிஷ் ” இங்கு என்ன செய்கிறாய் அத்வி உன்னை காணாமல் அம்மா தேடுகிறார்கள்” என்றான்.

” என்ன சொன்னீர்கள் ?” தயக்கத்துடன் வெளிவந்தது அத்வியின் குரல்.

Advertisement