Advertisement

  “முகிலனின் அனுமதி வாங்கியே சில மணி நேரத்திலேயே யாழியையும் தீக்ஷியையும் தேடி வந்தவன்… அங்கிருந்த ரூமில் அழுதழுது கண்கள் செக்கச் செவலென சிவந்து, கன்னங்கள் ரெண்டும் உப்பி, அன்னம் தண்ணி உண்ணாததால் உதடுகள் காய்ந்து பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் இருந்தனர் யாழியும், தீக்ஷியும்”… 
           யாழி என்ற குரலுக்கு திரும்பாமல் உட்கார்ந்திருந்த யாழியை ஒரு பார்வை பார்த்தவன்… “நான் முகிலன் கிட்ட பேசிருக்கேன்…. கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் திரும்பி அனுப்பிருவான்” 
           “அப்போ மிருதுவோட நிலைமை”… என்று கவலையும்… மிருதுவுக்கு ஏதும் ஆகிவிடுமோ?? என பயத்திலும் உடல் முழுவதும் வியர்த்து வழிந்தவாறே ஆல்பர்ட்டை நோக்கி வந்த தீக்ஷி, “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை!!.. அப்போ மிருதுவோட நிலைமை??” அவளை என்னப் பண்ணப் போறீங்க?? என கவலையாக கேட்டவளை, 
             “அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.. முகிலனுக்கு மட்டும் தான் தெரியும்” என விட்டேற்றியாக பதில் சொல்லி விட்டு கிளம்பியவனின் முதுகை வெறித்துப் பார்த்த தீக்ஷியின் உள்ளம் உலைக்களமாக கொதிக்க, 
           அந்த வீட்டைச் சுற்றி நோட்டமிட ஆரம்பித்தவளின் கண்களில், ஒரு அறையின் முன்னால் இரு ஆஜானுபாகுவான உருவத்துடன் நின்று கொண்டிருந்த இருவரைக் கண்டவள்… அதுதான் மிருதுவை அடைத்து வைத்திருக்கும் இடம் என்பதை யூகித்தவள், 
             “வேக வேகமாக படியேறியவள் சட்டென கதவை திறந்து உள்ளே செல்ல, அவள் திடீரென வருவதை எதிர்பார்க்காததால் காவலுக்கு நின்ற ஆட்கள் திகைத்து நிற்க… உள்ளே நுழைந்தவளின் கண்களில் பட்டது… 
             “மிருதுவின் கை, கால்கள் எல்லாம் கட்டப்பட்டு, அடக்க முடியாத பைத்தியக்காரியை பிடித்துக் கட்டி வைப்பார்களே… அதுபோல கட்டி வைத்திருந்தனர்”.. 
           “மிருதுதுஉஉ என கத்தியவாறே மயக்கம் போட்டு விழுந்தவளை தன் கைகளில் தாங்கிக் கொண்டான் முகிலன்… அவளின் கன்னத்தில் மாறி, மாறி தட்டி தீக்ஷி, தீக்ஷி என்றவனின் வார்த்தைகள் அவள் செவிகளில் விழவேயில்லை”… 
              அவளை இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டு வந்தவனை பார்த்த யாழி, “டேய்யீ.. தீக்ஷியையும் என்னடா பண்ணிங்க!!.. தீக்ஷி தீக்ஷி என அழ ஆரம்பித்தவளை”, எரிச்சல் மிக்க பார்த்தவன்… 
               அங்கு நின்று கொண்டிருந்த ஒருவனிடம், ” இவளைக் கொண்டு போய் வெளியில விடு”… என்றவனின் சொல்லுக்கிணங்க யாழியை வேகமாக இழுத்துக் கொண்டு சென்றான்… 
             ஹாலில் இருந்த சோபாவில் அழுது அரற்றிக் கொண்டிருந்த யாழியையும் தாண்டி ஒருவன் தீக்ஷியின் ரூமிற்கு செல்ல வேகமாக அவளும் பின்னாடியே சென்றாள்… புதிதாக வந்தவன் தீக்ஷிக்கு சிகிக்சை செய்வதை பார்த்த பின்பு தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்….. 
             “தீக்ஷியைப் பார்த்து சாதாரண அதிர்ச்சியால் வந்த மயக்கம் தான் என்று சொன்ன பின்னர் தான் நிம்மதியே அடைந்தான் முகிலன்”… 
             யாழியோ நேராக முகிலனிடம் வந்தவள், அவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவள், “ஏன் எல்லா ஆம்பிளைங்களும் உங்களுக்கும் கஷ்டமோ , நஷ்டமோ எது வந்தாலும் பொண்ணுங்களே காரணம்னு நினைக்கிறீங்க??”… “இப்படி ஒரு அப்பாவிப் பொண்ணை வதைக்க உனக்கு எப்புடி மனசு வந்திச்சி??”.. 
            அவளின் கேள்வியே அவனின் கோபத்தை தூண்டி விட, “ய்ய்யாருடி அப்பாவி?? அவளா… ஒரு பையன் காதலிச்சா.. புடிச்சிருக்கு… புடிக்கலைன்னு சொல்லணும்… அதை விட்டுட்டு அவனை தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு தூண்டி விட்ட அவ்வ நல்லவளா?? சொல்லுடி அவ நல்லவளா??” என கர்ஜித்தவனைக் கண்டு இரண்டடி பின்னால் வைத்தாள் யாழி…. 
              “நீங்க எவ்ளோ தான் கத்திப் பேசினாலும், உங்க மேலே சிம்பதியோ பாவமோ படத் தோணலை” என வெட்டும் பார்வையில் அவனுடன் வாதிட்டவளின் தைரியத்தை உள்ளுக்குள் மெச்சினாலும்… 
              “உன் அனுதாபப் பார்வை ஒன்னும் எனக்குத் தேவையில்லை” என சிங்கமாக கர்ஜித்தவனை அலட்சியமாக பார்த்தவள்… வாழ்க்கையை எதிர்த்து போராட துப்பில்லாம உங்க தம்பி தற்கொலை பண்ணிக்கிட்டா அதுக்கு எங்க மிருதுளாவா பொறுப்பு… என சொல்லி முடிப்பதற்குள் அவளின் செவிப்பறை “ங்கொய்ங்” என்றது.. 
             ஆத்திரத்தில் முகிலன் தான் அவளை அறைந்து தள்ளினான்… “என்னடி சொன்ன வாழ்க்கையை எதிர்த்துப் போராட தெரியாத கோழைன்னா சொல்ற”… 
               அவனின் அறையில் கன்னம் ரெண்டும் தீயாய் எறிய, கன்னத்தில் கை வைத்தவாறு “நாங்க உங்களுக்கு என்ன பாவம் பண்ணிணோம்.. ஏன் எங்களை இப்படி சித்ரவதை பண்றீங்க??? எங்க மிருதுளாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்… சின்ன வயசில அந்த பிரதாப் பரதேசி ****** பச்சைப் புள்ளைன்னு கூட பார்க்காம அவ உடம்பப் பிச்சிப் போட்டுட்டான்”… 
           “அப்புறம் உன் தம்பி கார்த்தியால தற்கொலை வரைக்கும் போனவளை புகழ் மாமா தான் மீட்டுக் கொண்டு வந்தாரு”…. இந்த ஒரு வருஷமா தான் நிம்மதியா இருந்தா… அது கூட உனக்குப் பொறுக்காமல் அவளை கடத்திட்டு வந்துட்ட?? என்று தன் போக்கில் புலம்ப ஆரம்பித்தவளை… 
              அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் முகிலன் காதில் வந்து விழுந்ததும்… பல வித சிந்தனைக்குட்பட்டவனை “உடம்பப் பிச்சிப் போட்டுட்டான்” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வந்து விழ, 
           அவளின் நிலை அறிவதற்காக  யாழியிடம் சென்றவன், “மிருதுளாவிற்கு சின்ன வயசிலே என்னாச்சி” எனக் கேட்டவனின் கேள்வியில் பதில் சொல்ல விரும்பாமல் தலையை வெடுக்கென திருப்பிக் கொண்டாள்… 
             இவளிடம் உண்மையை வரவைக்க இயலாது என்பதை அறிந்தவனாய் நேராக தன்னறைக்கு சென்றான்..
            
            பலவித சிந்தனைக்குட்பட்டவன், தன்னை மறந்து கண்ணயர்ந்தான்..
அறையில் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு தென்றல் காற்று முகத்தில வீச, அவனின் சிகையை அழகான வளையல் அணிந்த கரம் கோதி விட, தன்னவளின் ஸ்பரிசத்தில் எழுந்தவன் அவளின் மடியில் தலை வைத்துப் படுத்தான்..
          கண்களை திறந்து பார்த்தவனுக்கு தன்னவளின் புன்னகை முகம் புதுவித தெம்பையும்… தெளிவாக யோசிக்கும் திறனையும் கொடுத்தது..
            “எனக்கு எதுவுமே புரியலை குயிலு.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்றேன்னு மனசுக்கு தோணுது.. ஆனால் நம்ம கார்த்தியோட நிலைமையை பார்க்கும் போது இவளை பைத்தியக்காரியாக்கணும்னு வெறியே வருது… நான் கார்த்தியோட அண்ணணா சென்றது கரெக்ட்டு… ஆனால் ஒரு மனுஷனா அந்தப் பொண்ணோட வாழ்க்கையில விளையாடுற உரிமையை எனக்கு யாரு கொடுத்தது”… 
            அவனைப் பார்த்து மென் புன்னகையை சிந்தியவள், “இப்போ என்னதான் பண்ண போறீங்க… அந்தப் பொண்ணை??”… தன்னவனின் மனம் அறியும் பொருட்டு கேள்வி கேட்பவளை,
            “எனக்குத் தெரியலை குயிலு.. யாழி சொன்ன வார்த்தை எனக்கு மறுபடி மறுபடி என் காதுல விழுந்துட்டே இருக்கு… எனக்கு என்னமோ அந்தப் பொண்ணுக்கு “சைல்ட் அபியூஸ்” ஆகிருக்குமோன்னு பயமா இருக்கு… 
              “அப்படி மட்டும் அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா.. இப்போ நான் அவளைக் கடத்திட்டு வந்ததுனால அவளோட மனசு எவ்ளோ பாதிக்கப்பட்டிருக்கும்”… ஓ மை காட் என்னோட மனசு படபடன்னு அடிச்சிக்குதுடி…. என்றவனின் இதயத்தில் தன் தலையை சாய்த்து அவனின் இதயத்துடிப்பைக் கேட்டாள்… 
             “தன்னவளின் இந்த செயலில் அவள் அமைதியடைந்தாலோ… இல்லையோ அவன் அமைதியடைந்தான்… அடுத்து என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டவாறே” அவளின் முகத்தைப் பற்றியவன் அவளின் இதழை சிறைப்பிடித்தான்… 
             அவனை தள்ளிவிட்டு வேகமாக ஓடியவளின் பின்னே குயிலு… குயிலு என கத்தியவாறே எழுந்தவனுக்கு… தான் கண்டது எல்லாம் கனவு எனத் தெரிய வந்தாலும்…  
             தன்னவள் தன்னருகில் இல்லாமல் போனாலும்… தான் தடுமாறிய நேரத்தில் தனக்கு வழிகாட்டியவளை மனதில் நினைத்துக் கொண்டே கண்களை மூடினான்… 
               காலையில் எழுந்த முகிலனுக்கு மனதில் ஒரு தெளிவு பிறந்ததால் புத்துணர்வாக எழுந்தான்… ஆல்பர்ட்டை அழைத்தவன், தான் செயல்படுத்த வேண்டிய அனைத்து திட்டங்களையும் ஒன்று விடாமல் கூறினான்… 
             அதைக் கேட்ட ஆல்பர்ட்டுக்கு நீண்ட நாள் கழித்து தன் நண்பன் திரும்பி வந்தததைப் போல் உணர்ந்தான்… அவனை அணைத்துக் கொண்டவாறே, “ரொம்ப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மாப்ள”… 
             “ஆமா என்ன திடீர்னு இந்த மனமாற்றம்??”… 
           என்றவனின் கேள்விக்கு புன்னகைத்தவாறே, “என்னோட குயிலு சொன்னா.. அதான் இந்த மனமாற்றம்??” என சிரித்தவாறே பதிலளித்தவனை
            “ஏது குயிலு இங்க வந்தாங்களா!!? எப்போடா??” 
            “ப்ச்ச் நேர்ல இல்லைடா.. கனவுல”.. 
             “கனவுல சொன்னதுக்கே இவ்ளோ மதிப்புன்னா… நேர்ல அவுங்க உன் பக்கத்துல இருந்தா எங்களையெல்லாம் யாருன்னு கேட்ப போல??” என்று கேலி பேசியவனைக் கண்டு புன்னகைத்தவாறே கீழே இறங்கி மிருதுளா வின் ரூமிற்கு சென்றான்… 
             இரண்டு நாள்களாக கை காலெல்லாம் கட்டப்பட்டு கிடந்தவளை பார்க்கவே மனம் கனத்துக் கிடந்தது… மெதுவாக சென்று அவளின் கை கால் கட்டெல்லாம் அவிழ்த்து விட்டவன்…. 
             மிருதுளா… மிருதுளா என்றவளின் கன்னத்தை தட்டி, அவளுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தான்… தண்ணீரை பாதி மேலே கொட்டியும் பாதி தண்ணீர் தான் வாய்க்குள்ளே சென்றது.. 
              ஆல்பர்ட் தீக்ஷியையும், யாழியையும் ரூமிற்குள் கூட்டி வந்தான்… அங்கிருந்த சோபாவில் உட்கார சொல்ல யாழி ஏதோ பேச வருவதற்குள்… முகிலன் பார்த்த அனல் கக்கும் பார்வையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்… 
              மிருதுளா மெல்ல எழும்பி உட்கார பார்த்தவளுக்கு உடல் ஒத்துழைக்காமல் தொப்பென கட்டிலில் விழுந்தாள்.. அவளின் தோளைப் பிடித்து கட்டிலில் சாய்வாக உட்கார வைத்தவன் முதுகுப்புறம் தலகாணியை வைத்தான்… 
            அவனின் செய்கையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் தொடுகையும், ரோஹித்தின் அணைப்பில் எவ்வளவு பாதுகாப்பை உணர்ந்தாளோ!! அதே பாதுகாப்பை முகிலனின் தொடுகையில் உணர்ந்தாள்… 
             அவளின் கட்டிலின் அருகே சேர் ஒன்றை போட்டு அமர்ந்த முகிலன்,  மிருதுளா எனக் கூப்பிடவும்… அவனிடம் பேசப் பிடிக்காததால் முகத்தை திருப்பிக் கொண்டாள்… 
             “உங்க மூணு பேர்கிட்டையும் நான் முக்கியமான விஷயம் பேசுறதுக்குத் தான் வந்துருக்கேன்… என் கேள்விக்கான பதிலை நீங்க சொன்னீங்கன்னா கண்டிப்பா உங்க எல்லாரையும் கொண்டு போய் உங்க வீட்டிலேயே விட்ருவேன்”…. 
              அவனின் பதிலில் புரியாமல் பார்த்தவர்களை… மீறி அவர்கள் இருந்த அறையில் ஒரு அதிரடியாக ஒரு பெண் நுழைந்தாள்…. அனைவரும் அவளை திரும்பி பார்க்க, முகிலனை லேசாக அணைத்து விடுவித்தவள் “ஹாய் முகி.. என்ன ரொம்ப நாள் கழிச்சி என்னை வர சொல்லிருக்க”… பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரி போல இருந்தாலும்…. தெளிவான தமிழில் பேசினாள்… 
          “உன்னால சின்ன ஹெல்ப் டீனா.. அதான் ப்ளீஸ் சிட்” என்றவனின் அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தாள்… மிருதுளாவிடம் திரும்பியவன்… “பிரதாப் யாரு??”… 
              பிரதாப் என்ற பேரை கேட்டதுமே ஏழு வயதில் நடந்த அக்கிரமங்கள் இப்பொழுது நடப்பது போல் தோன்ற ஆரம்பித்தது… அவள் உடல் தூக்கிப் போட ஆரம்பிக்க, 
            “டீனா பாஸ்ட் என்று முகிலனின் குரலிலுக்கிணங்க சூட்கேஸில் இருந்த ஊசியை எடுத்து மிருதுளாவின் கையில் ஏற்ற சிறிது நேரத்திலேயே ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்றாள்”.. 
          யாழி கத்த ஆரம்பிப்பதற்குள் தீக்ஷி அவளின வாயைப் பொத்தியிருந்தாள்.. தீக்ஷியின் மனது முகிலனை நம்ப ஆரம்பித்தது.. 
           டீனா மெதுவாக மிருதுவின் அருகில் சென்று வலது கையை தடவியவாறே, “மிருதுளா… மிருதுளா” என்ற குரலில் ஆழ்நிலை உறக்கத்தில் இருந்த மிருதுளா “ம்ம்ம்ம்” என்றாள்… 
            “ரோஹித் யாரு” என்றவளின் கேள்விக்கு முகமெல்லாம் புன்னகையில் மிளிர, 
              “என்னோட அண்ணா.. எனக்கு அப்பா அம்மா எல்லாமே அவர்தான்”… 
             அவளிடம் பேச்சுக் கொடுத்தவாறே, “நீங்க காஞ்சிபுரத்துல தான முதல்ல இருந்தீங்க… அப்புறம் எப்போ திருவள்ளூர் வந்தீங்க” என்ற முகிலனின் கேள்விக்கு, 
              ஆழ்நிலை மயக்கத்திலேயே, “நாங்க சின்ன வயசில அங்க இருந்தோம்… எங்க அப்பா பாரிவேந்தன் அம்மா பூர்ணிமா.. என்னோட அம்மா ரொம்ப அழகா தேவதை  மாதிரி இருப்பாங்க..  நானும் அண்ணாவும் எங்கம்மா ஜாடையில் தான் இருப்போம்.. எங்க அப்பா சின்னதா டெய்லர் கடை வச்சிருந்தாங்க”… 
             “அப்பா ரொம்ப ரொம்ப நல்லவங்க.. என்னையும் அண்ணாவையும் அப்பா தான் வளர்ப்பாங்க.. அம்மா எப்பவும் மடிப்பு கலையாத  சேலையும், ஃபூல் நேரமும் முகத்துல மேக்கப்போட தான் சுத்துவாங்க… அப்போ அண்ணாவுக்கு பதினாலு வயசு…. எனக்கு  நாலு வயசு”… 
              “ஒரு நாள் நான் தூங்கிட்டு இருக்கும் போது திடீர்னு சவுண்டு கேட்டு எந்திரிச்சிப் பார்த்தேன்… அப்பாவ அம்மா ரொம்ப திட்டிட்டு இருந்தாங்க”… 
              “அண்ணா அவுங்க ரெண்டு பேருக்கும் நடுவில சண்டையை விலக்கிட்டு இருந்தாங்க… அப்பவும் அம்மா அப்பாவ ரொம்ப கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் பேசுனாங்க”.. 
             “என்னைத் திருப்திபடுத்த முடியாத நீயெல்லாம் ஆம்பிளையாடான்னு கேட்டு எங்க அப்பா மூஞ்சியிலேயே காறி துப்பிட்டு…. கையிலே ஒரு பேக்கை எடுத்துட்டு கிளம்புனாங்க”… 
              “நான் வீட்டு வாசல்ல எட்டிப் பார்த்தப்போ அங்க ஒரு கார்ல ஒருத்தன் எங்க எல்லார் முன்னாடியும் எங்கம்மாவை கட்டிப்பிடிச்சு கூட்டிட்டுப் போனாங்க”.. 
      .      “அப்போ எனக்கு அந்த வார்த்தையோட அர்த்தம் தெரியாது.. புரிஞ்சப்போ உலகத்தில நான் அதிகமா வெறுக்கிற ஆளுன்னா அது அந்த ராட்சஷியைத் தான்” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது”..
           

Advertisement