Advertisement

அத்தியாயம் எட்டு:

ஒரே மகள் வசதி வாய்ப்பும் உள்ளதால் வஜ்ரவேல் தன் மகளுக்குச் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்ய விரும்பினார்…

நிறைய செலவுகள் ஏற்கனவே திருமணம் கேஸ் ஜாமீன் என்று. நடராஜன் வீட்டினரால் மீண்டும் ஒரு செலவு உடனே செய்ய முடியாத சூழ்நிலை. ஆனால் எப்படி அதை பெண் வீட்டினரிடம் சொல்வது…

அது மட்டுமன்றி சிபியும் விமரிசையாக மீண்டும் ஒரு திருமண ஏற்பாடு வேண்டாம் என்று ஸ்திரமாக சொல்ல…

அதை காரணமாக நடராஜன் வஜ்ரவேலுவிடம் சொன்னார்.

ஆனால் வஜ்ரவேல் ஒத்துக் கொள்ளவில்லை… “உங்களுக்குத் தெரியாதது இல்லீங்க! ஏற்கனவே என் தம்பி பண்ண கலாட்டா தானுங்க இவ்வளவும்… அவன் சம்சாரத்தோட அண்ணன் பையன், நல்லவன் நம்ம பொண்ணைக் கட்டிக் குடுக்கலாம், வீட்டோட வெச்சிக்கலாம், அப்படி இப்படின்னு சொல்லி அவனுக்கு உதவி செய்ய வெச்சு… அது இல்லைன்னு ஆகிப்போச்சு”.

“இதுல என் வருத்தம் என்னன்னா, அந்தப் பயலுக்கு கட்டிக் குடுக்கறோம்னு இவனே சொந்த பந்தம் எல்லார்க் கிட்டயும் சொல்லிட்டான்… அதுவே எனக்கு பெரிய தலைகுனிவுங்க…”,

“நான் பொண்ணைப் பத்தின ஒரு வருத்தத்துல இருந்த போது ஆரம்பிச்ச பேச்சுங்க… எப்படி எப்படியோ ஆகிப் போச்சு..  அதனால கூட யாரும் பொண்ணுக் கேட்டு வராம இருந்திருக்கலாம்…”,

“இது ராஜவேல் செஞ்ச தப்புங்கறதுனால தான் அன்னைக்கு அந்த வீட்டுல அவ்வளவு கலாட்டா செஞ்சிருக்கான்… நீங்க கல்யாணம் பண்றேன்னு சொல்லவும் அடங்கிட்டான்”,  

“அதுக்காக நான் என்ட்ர பொண்ணைக் குடுத்துடுவனுங்களா”,

“இப்பவும் என் தம்பி சொன்னான்னோ, என் பொண்ணுக்குக் குறை இருக்குன்னோ உங்க கூட சம்பந்தம் பேசலை…”,

“அவன் எனக்குத் தகவல் சொன்ன நிமிஷம் உங்க குடும்பத்தைப் பத்தி மாப்பிள்ளைப் பையனைப் பத்தி எல்லாம் நல்லா விசாரிச்சிட்டேன்…”,

“யாரும் குறை சொல்லலை… என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகனும்ன்றது எனக்கு ரொம்ப கவலை தான்! ஆனா அதுக்காக யாருக்கு வேணா கட்டிக் குடுக்க முடியும்ங்களா… ரொம்ப செல்லம்ங்க எனக்கு என் பொண்ணு… என் சம்சாரம் என் பொண்ணு குழந்தையா இருக்கும் போதே இறந்திருச்சுங்க…”,

“நான் இன்னொருக் கல்யாணம் பண்ணிக்கவேயில்லை… நாளைக்கு வர்றவ என் பொண்ணை எப்படிப் பார்த்துக்குவாளோன்னு…?”, இதை அவர் சொல்லும்போது தான் நடராஜன் வஜ்ரவேலைக் கவனித்தார்…. எப்படியும் நாற்பதுகளில் தான் இருப்பார்.   

“உங்க வீட்டுலயும் கல்யாணம் நின்னதுனால பிரச்சனையாகி கேஸ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சது.. மத்தபடிப் பையனை விசாரிச்ச வரைக்கும் எனக்கு ரொம்பத் திருப்தி. அதுவும் பையனுக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். உங்களோட சின்ன வயசுல இருந்து வயல் வரப்புல இறங்கி வேலை செய்யறாராமே! பூமித்தாய நேசிக்கிறவர் என் பொண்ணை விடமாட்டாருன்னு என் மனசுல எண்ணம்”,

“அதான் பொண்ணைக் குடுக்கறேன். அதான் உண்மை.. அதனால இத்தனை சிக்கலுக்கு நடுவுல கல்யாணம் நடக்கிறதால… அதை நான் சிறப்பா செய்யணும்ங்க”, என்றார்.

“என் பொண்ணை விட எனக்கு எதுவுமே முக்கியமில்லீங்க. ரொம்பச் செல்லம் குடுத்துட்டேன், அதனால பிடிவாதம் கூட… வீட்டோட மாப்பிள்ளைன்னு கூட யோசிச்சேன்…… ஆனா அவ கூட்டுக்குள்ள இருந்து வெளி வரணும்… நாலு பேரோட பழகணும்.. அதான் அந்த யோசனையைக் கூட விட்டேன். என் பொண்ணு நல்லா இருக்கணும்ங்க….”,

“அந்த கண்ணன், அந்தப் பய கூட நான் பேசியிருக்கேன். நல்லவனா தெரிஞ்சான். அதான் சரின்னு மாப்பிள்ளையா நினைச்சேன்… எங்க தப்பா போச்சுன்னு தெரியலை…”,

“இப்போவும் என் தம்பி சொன்னவுடனே உங்க பையனை நான் நேர்ல பார்த்தேன். ஆனா நான் பார்த்தது அவருக்கு தெரியாது. என்னவோ மனசுக்கு சரியா வரும்னு தோணிச்சு. அதான் நீங்க வந்தப்போ என் பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லணும்னு நினைச்சேன்”.         

ஒரு பெண்ணைப் பெற்றவராக… அவரின் ஆதங்கம் புரிந்தது.. எப்படியோ கடனை உடனை வாங்கி அவர் நினைத்த மாதிரி திருமணத்தை நடத்திவிடலாம் என்று நடராஜன் மனதிற்குள் முடிவெடுத்த போது…

“கல்யாணம் வேணா கோவில்ல வெச்சிக்கலாம்.. ஆனா வரவேற்ப்பு சிறப்பா செஞ்சிடனும்ங்க”, என்று வஜ்ரவேல் இறங்கி வர..   

“சரி”, என்று ஒத்துக் கொண்டு வருவதைத் தவிர நடராஜனுக்கு வேறு வழியில்லை… ஆனால் ஒரு விஷயம் உணர்ந்தார். பெண்ணுக்கு குறை என்பதைத் தவிர அந்த சம்மந்தத்தில் வேறு குறை இல்லை.

ஒரே பெண், ஏராளம் என்று சொல்லும் அளவில் இல்லாவிட்டாலும் வசதியான குடும்பம்… அதனால் சொத்துக்கள் எல்லாம் பிறகு அவரின் பெண்ணிற்கும் சிபிக்கும் தான்… அதனால் மனதை தேற்றி மீண்டும் கடன் வாங்கி திருமண செலவு செய்ய முடிவு செய்தார்.

வீட்டில் சொன்னால் வீட்டினர் எல்லோரும் குதித்தனர்… இப்போது தான் நின்று போன திருமணத்திற்கு அவ்வளவு செலவு அதுமட்டுமல்லாமல் கேஸ் ஆகி அதற்கும் எக்கச்சக்க செலவு இப்போது மீண்டும் ஒரு செலவா எங்கே போவது பணத்திற்கு என்பது போல… அதன் கூட அந்தப் பெண்ணை திருமணம் செய்வதே அதிகம் என்பது போல சில வார்த்தைகள் வர…

“அவங்கப்பா அந்தப் பொண்ணுக்கு நிறைய செய்வார் போல, அவர் சிபியை பிடிச்சு தான் பொண்ணு குடுக்கறார். சும்மா அவர் தம்பி சொன்னதுக்காக இல்லை. ஒரே பொண்ணு, சீரும் சிறப்புமா செய்ய விருப்பப்படறார். அதனால நம்ம அனுசரிச்சு தான் போகணும், இப்போவே பொண்ணு பார்க்க எப்போ வரீங்கன்னு கேட்டார்”.

“நான் தான் என்ன சொல்றதுன்னு தெரியாம வீட்ல கலந்து சொல்றேன்னு வந்துட்டேன். என்ன சொல்லட்டும்”, என்று பொதுவாக கேட்க…

“இருக்குற பிரச்னையில ஓஞ்சு கிடக்கிறோம்! இதுல அதெல்லாம் ஆகாது! டைரக்டா கல்யாணம்னு சொல்லிடுப்பா!”, என்றார் சுலோச்சனா.

சிபி என்ன சொல்கிறான் என்பது போல நடராஜன் பார்க்க…… “நீங்க என்ன சொன்னாலும் சரி, என் தனிப்பட்ட விருப்பு ஒன்னுமில்லை”, என்று விட்டான்.

தாங்கள் மட்டும் போய் பார்க்க முடியாது, உறவு ஜனத்தை அழைக்க வேண்டும்… பிரச்சனை என்று அத்தனை பேரும் கேசில் மாட்டியிருக்க திருமணத்தை அவர்களுக்கு சொல்லாமல், அவர்களை அழைக்காமல் செய்ய முடியாது.

யோசித்த நடராஜனும், ஈஸ்வரரும் ஒரேமுறையாக திருமண வைபவம் வரவேற்பு என்று முடிவெடுத்து வஜ்ரவேலை எப்படியோ சமாளித்து விட்டனர்.

இதோ அதோ என்று இருந்த திருமண நாள் வந்தே விட்டது. பத்மினி ஜெய்சங்கர் மற்றும் ராகினியின் சௌக்கியத்தை சிபி அவ்வப்போது எப்படி இருக்கிறது என்று பார்த்தான். அவர்களின் அம்மா இறந்த குறை தவிர அந்த சமையத்தில் அந்த பிள்ளைகளுக்கு எந்த குறையுமில்லை. தனமும் ராஜவேலும் அவர்களை நன்றாகப் பார்த்துக் கொண்டனர்.   

இதில் சிபிக்குத் தெரியாதது பார்த்துக் கொள்வது மட்டும் தான் அவர்கள்… அவர்களின் வருமானம் சில சமயம் நன்றாக இருக்கும் சில சமயம் இருக்காது.. ராஜவேல் அண்ணனிடம் சொல்லியிருக்க……. அவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று வஜ்ரவேல் சொல்லியிருந்தார்.

இதில் கண்ணன் வேறு பத்மினியை தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்திருந்தான். ஆனால் பத்மினி ராகினியையும் ஜெய்ஷங்கரையும் விட்டு வர ஒத்துக்கொள்ளவில்லை. “நாங்க சேர்ந்து தான் இருப்போம் அண்ணா. கொஞ்ச நாள் ஜெய்சங்கர் பெரியவன் ஆனா பிறகு எங்களை நாங்களே பார்த்துக்குவோம் யார் உதவியும் தேவையில்லை”, என்று தெளிவாக முடிவாக கூறி வர முடியாது என்றும் மறுத்து இருந்தாள்.        

இதெல்லாம் சிபிக்குத் தெரியாத போதும் திருமணம் செய்துக் கொள்வதில் தவறில்லை…. இந்தப் பிள்ளைகளின் சௌக்கியத்திற்காகக் செய்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தான். கூடவே இன்னொரு  எண்ணம் மனதினில் என்னவோ குறையுள்ளப் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பது போல. 

நடந்துவிட்ட நிகழ்வுகளை சரிபடுத்த அதில் சம்மந்தமில்லாத எத்தனையோ பேர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க….. இவனுக்கு மனதில் இந்த எண்ணம்.  

திருமணம் வரை சிபி மணமகளைப் பார்க்கவில்லை. காலையில் அவினாஷி, அவினாசிலிங்கம் கோவிலில் திருமணம். ஜெயஸ்ரீயின் வீடும் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம், அதே போல சிபியின் வீடும் மற்றொரு ஊராட்சி…

அங்கு நடந்த சில நிகழ்வுகள்… ஜெயஸ்ரீ கோபம் கொண்டு நான் திருமணம் செய்ய மாட்டேன் என்பது போல அடம் பிடித்து இருந்த இடத்தில் வராமல் அப்படியே இருந்தாள்.

மீண்டும் திருமணம் எல்லோர் முன்பும் நிற்பதா என்ற பதட்டம் தோற்ற  சிபியைப் போய் அவனாக ஜெயஸ்ரீயிடம் பேச வைத்தது… “நான் உனக்கு வாழ்க்கைக் குடுக்கலை….. நீ எனக்கு குடு வா”, என்று சொல்ல வைத்தது… அந்த அழகு முகத்தையும் அப்போதுதான் சிபி பார்த்தான். அதையும் அவன் எதிர்பார்க்கவில்லை.

இதைக் கேட்டு, “நீ என்ன கதை சொல்கிறாய்!”, என்பது போல நம்பாமல் பார்த்த ஜெயஸ்ரீயை, “எழுந்திரு, எழுந்திரு, சீக்கிரம்!”, என்று அதட்டல் போட வைத்தது. வஜ்ரவேல், “என்ன இது இப்படி என் மகளை இப்படி அதட்டுகிறார்”, என்று பரிதவித்து பார்த்த போதும்….

ஜெயஸ்ரீ முகத்தை சுருக்கி விருப்பமின்மையை காட்டிய போதும், சிபியின் சொல்லுக்கு அடிபணிந்து மெதுவாக எழுவதைப் பார்த்து அதில் தலையிடாமல் ஓரம் நின்றார்.      

எல்லாம் நன்றாக நடக்க வேண்டுமே… மகளுக்கு பிடிக்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே அப்போது வஜ்ரவேலின் மனதில். சிபியை அவனுக்கு தெரியாமல் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அதை ஜெயஸ்ரீயிடம் காட்டியிருந்தார். அவளிடம் கிட்டதட்ட அரை நாள் பேசிப் பேசி அவளைக் கரைத்து சம்மதம் கூட வாங்கியிருந்தார்.

இப்போது குழந்தை மணிமேகலையால் தான் பிரச்சனை. முன்பே கோவிலுக்கு பெண் வீட்டினர் வந்து விட்டனர். அதன் பிறகு தான் மாப்பிள்ளை வீட்டினர் வந்தனர்.

அதனால் மணப் பெண்ணான ஜெயஸ்ரீ முன்பே கோவிலுக்குள் ஒரு சேரில் அமர வைக்கப்பட்டு இருந்தாள். மாப்பிள்ளை வீட்டினர் வந்தவுடனே பாட்டி சுலோச்சனாவும், அம்மா தேவியும், மருமகள் வனிதாவும் குழந்தை மனிமேகலையோடு மணப்பெண்ணான ஜெயஸ்ரீயின் அருகில் மற்ற சில உறவுகளோடு வந்தனர்.

ஜெயஸ்ரீயின் அருகில் வந்த குழந்தை, “நீங்க தான் புது சித்தியா?”, என்று மழலையில் சொல்லியது… “ஆம்”, என்பது போல தலையசைத்த ஜெயஸ்ரீயிடம், “உங்களுக்கு நடக்க, பேச வராதாமே”, என்று அழகாக தெளிவாக சொல்லவும் அங்கே அப்படி ஒரு அமைதி…

இவ்வளவு நேரமாக இருந்த ஒரு சூழல் அப்படியே மாறியது. ஜெயஸ்ரீயின் முகமும் மாறியது. மிகவும் சந்தோஷமாக உற்சாகமாக மணப்பெண்ணின் கலையோடு இருந்தால் என்று சொல்ல முடியாவிட்டாலும்.. ஒரு மென் புன்னகையோடு தான் இருந்தாள்.

பேசிப் பேசிப் வஜ்ரவேல் அவளை ஒரு மாதிரி திருமணத்திற்கு தயார் செய்திருந்தார். இப்போது முகம் மாறிவிட்டது.

திரும்ப குழந்தை ஆசையாக ஏதோ பேச வர முகத்தை திருப்பினாள் ஜெயஸ்ரீ.

“குழந்தை தானே தெரியாம பேசிசிடுச்சு”, என்று யாரும் சமாதான வார்த்தைக் கூட சொல்லவில்லை. எல்லோரும் அப்படி அப்படியே நின்றனர். இப்படி ஒரு பெண் சிபியின் மனைவியா என்ற மாதிரி எண்ணத்தில் இருந்ததால் ஒப்புக்கு கூட சொல்லவில்லை.

ஒரு கோபம் மனதில் எழ, ஜெயஸ்ரீ அவர்கள் யாரையும் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தாள்.

“சித்தி, ஏன் என்கிட்டே பேசமாடேங்கறாங்க?”, என்று வனிதாவை மணிமேகலை திரும்ப திரும்ப கேள்வி கேட்க….

“கொஞ்ச நேரம் வாயை மூடு மேகி”, என்று வனிதா அதட்டல் போடவும்…..

முகத்தைச் சுருக்கிய மணிமேகலை…… அம்மாவை விட்டு, பாட்டியிடம், “இதுதானே புது சித்தி, சித்தப்பா வாழ்க்கைக் குடுக்கறது”, என்றும் கூட சொல்ல…..

ஜெயஸ்ரீக்கு ஸ்பஷ்டமாய் புரிந்தது…. “இது இவ்வளவு நேரம் இவர்கள் பேசியது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தை திரும்ப சொல்கிறது”, என்று. இந்த வார்த்தைகள் குழந்தையின் வாயில் இருந்து தானாக வர வாய்ப்பேயில்லை.

“எவனும் எனக்கு வாழ்க்கைக் குடுக்கத் தேவையில்லை”, என்ற எண்ணம் அப்போது தோன்ற….. அதன் பின் அமர்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.

எல்லோரும் மாற்றி மாற்றி வந்து, “வாம்மா முதல்ல பிள்ளையாரை  கும்பிட்டிட்டு மத்த சடங்கெல்லாம் ஆரம்பிக்கலாம்”, என்று கூப்பிட இருந்த இடத்தை விட்டு அசையவில்லை… யார் பேச்சையும் காதில் வாங்கவில்லை.

வஜ்ரவேலிடம் சொல்ல, அவர் வேகமாக வந்து, “என்ன கண்ணு நேரமாகுது வாடாம்மா”, என்றார். அவரைப் பார்த்தவள், “வரமாட்டேன்”, என்பது போல தலையாட்டினாள்.

“என்ன?”, என்று பதறிவிட்டார். அவள் பேச முயற்சி செய்யாமல் தலையாட்டும் போதே ஜெயஸ்ரீ சற்று பதட்டமாக இருக்கிறாள் என்று புரிந்தது.

“என்ன? என்ன ஆச்சு?”, என்று பக்கத்தில் இருந்த உறவுப் பெண்மணியிடம் கேட்டார்.

குழந்தை ஏதோ பேசிடுச்சு.. ஜெயஸ்ரீக்கு கோபம் வந்திடுச்சு என்று மணிமேகலை பேசினதை சொல்ல……

இந்த வாழ்க்கை குடுக்கிறேன் என்பது மாதிரியான வார்த்தைகளை எப்போதும் ஜெயஸ்ரீ விரும்பவே மாட்டாள். “விடு கண்ணு”, என்று தந்தை சமாதானம் சொனார்.        

ஒற்றைப் பெண்ணாய் வளர்ந்த பிடிவாதம் எப்போதும் ஜெயஸ்ரீயினிடத்தில் உண்டு…… இப்போது இன்னும் அதிகம்….. நித்தம் அவருக்கு அவளோடு போராட்டம் தான்.

அத்தனை உறவுகளை சுற்றி வைத்துக் கொண்டு வஜ்ரவேலிற்கு எப்படி ஜெயஸ்ரீயை சமாதானம் செய்வது என்று கூட தெரியவில்லை.

அதற்குள் பெண் வரமாட்டேன் என்கிறாள் என்பது போல ஆங்காங்கே செய்தி பரப்ப….. அந்த இடம் பதட்டம் ஆனது.

என்ன எல்லோர் முன்னிலையிலும் மீண்டும் திருமணம் நிற்பதா என்று சிபி டென்ஷனாகிவிட்டான்.

“என்னை வெச்சு எல்லோரும் விளையாடுறாங்களா?”, என்று கோபமாக மணப்பெண் இருந்த இடத்திற்கு விரைந்தான்.

“கோபமா எதுவும் பேசிடாத சிபி”, என்று வர்மனும் சிபியோடு சென்றான்.

அங்கு சென்றவனின் கண்களுக்கு மணப்பெண் முதலில் படவில்லை, அழுதுகொண்டிருந்த மணிமேகலை தான் பட, “என்ன டா மேகி பாப்பா எதுக்கு அழறா”, என்று கேட்டதும், அவன் மேல் ஓடி வந்து ஏறிய மேகலை,

“அம்மா திட்டினாங்க, நான்….”, என்று ஆரம்பித்து நடந்ததை ஒரு வாறு ஆங்காங்கே பிட்டு பிட்டு சொல்ல…. ஒரு வாறு விஷயம் சிபிக்கு புலப்பட்டது.

ஆனால் குழந்தை சொன்னதற்காக, இப்படி யாராவது செய்வார்களா  என்ற கோபமும் தொற்றியது…. “எங்க இருக்கா உன் சித்தி?”, என்று மேகலையைக் கேட்க….. பெண்கள் நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு நடுவில் சேர் போட்டு அமர்ந்திருந்த ஜெயஸ்ரீ தென்பட்டாள்.. முகம் சரியாக தெரியவில்லை…. வேறு புறம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வா!”, என்று அவன் அருகில் செல்ல முயலும் போதே, அங்கே வந்த நடராஜன் ஜெயஸ்ரீயிடம் பேச…. அவள் முகத்தைக் கூட அவரின் புறம் திருப்பவில்லை.

“என்ன இது மரியாதையில்லாதத்தனம்”, என்று தான் சிபிக்கு தோன்றியது. அவன் அருகே சென்று.. “இங்க பாரு!”, என்று ஒரு அதட்டல் போட அப்போதும் திரும்பி பார்க்கவில்லை.

“என்ன பிடிவாதம் இந்தப் பெண்ணிற்கு, என்ன குழந்தை தப்பாக சொல்லிவிட்டாள், உள்ளதைத் தானே சொன்னாள். உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டாமா”, என்று கோபமாக வந்தது சிபிக்கு.  அவனுக்கு முதலில் பக்குவம் இருக்கிறதா இல்லையா என்று அவன் ஆராயவேயில்லை.

அவள் பார்த்துக் கொண்டிருந்த புறம் சென்று நின்றான். அப்போது தான் அந்த முகத்தையே பார்த்தான். குழந்தைத்தனமான அழகு முகம். அந்தக் கண்களில் ஒரு பிடிவாதம், எனக்கு வேண்டாம் என்பது போல, நான் பார்க்க மாட்டேன் என்பது போல…

சிபி அவனாக, “நான் உனக்கு வாழ்க்கை குடுக்கலை, நீ எனக்கு குடு, வா!”, என்றான். நிச்சயமாக இப்படிப் பேச வேண்டும் என்று அவன் நினைக்கவேயில்லை.. தானாக அந்த வார்த்தைகள் வந்தது.

அதைக் கேட்டதும் ஜெயஸ்ரீ தலை தூக்கி அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வை சொன்னது ஜெயஸ்ரீக்கு தன் முகம் பரிச்சயம் என்று. தன்னைப் போல அவள் முதல் முறை தன்னைப் பார்க்கவில்லை என்று. அனேகமாக தன்னுடைய புகைப் படத்தை பார்த்திருக்க வேண்டும் என்று அனுமானித்தான்.

திரும்பவும், “எங்க பாப்பா தெரியாம சொல்லிட்டா, நான் உனக்கு வாழ்க்கை குடுக்கலை நீ எனக்கு குடு வா”, என்றான்.

“என்ன கதை சொல்கிறாய்?”, என்பது போல ஜெயஸ்ரீ பார்க்க….

“எழுந்துரு, எழுந்துரு, சீக்கிரம்”, என்று அதட்டல் போட்டான் சிபி. அவனுக்கு அப்படி தான் பேச வரும். இந்த மிரட்டல் பேச்சுக்கள் தான் ராதாவை அவனிடம் இருந்து தள்ளி நிறுத்தியது.  

“இப்படி அதட்டாதீங்க!”, என்று சொல்ல வந்த வஜ்ரவேல், ஜெயஸ்ரீயின் முகம் விருப்பமின்மையைக் காட்டிய போதும், மெதுவாக அவள் எழ முயல….. வஜ்ரவேல் அமைதியாகிவிட்டார்.

எழுந்தவள், பக்கத்தில் இருந்த தடியை எடுக்க முற்பட… “என்னைப் பிடிச்சிக்கோ”, என்பது போல உறவுப் பெண்மணி ஒருவர் கை கொடுக்க, “வேண்டாம்!”, என்பது போல தலையசைத்தவள், பிடிவாதமாக கைத்தடிக்கு கை நீட்ட, வேறு வழியில்லாமல் அதைக் கொடுத்தனர்.

மெதுவாக அதைப் பிடித்துக் கொண்டு நடந்தாள். கொஞ்சம் சாய்ந்து இருந்தது நடை…. சிபி அதை பார்த்துக் கொண்டு நிற்க…

“கோயில்ன்றதுனால பூட்ஸ் போடலைங்க, அது போட்டா நடை நேரா வருமுங்க”, என்று, சிபி ஜெயஸ்ரீயின் நடையைப் பார்ப்பதைப் பார்த்து, வஜ்ரவேல் சிபியிடம் மெதுவாக தான் சொன்னார்.

ஆனால் ஜெயஸ்ரீயின் கண்கள் வஜ்ரவேலை முறைக்க, அவர் வாயை மூடிக் கொண்டார். முறைப்பு என்பதை விட இன்னும் ஏதாவது சொன்னால் அழுதுவிடுவாள் என்பது போலவும் கண்கள் இருக்க வஜ்ரவேல் வாயை மூடிக் கொண்டார்.

ஆனால் அவர் முகத்தில் வருத்தம் தெரிய, ஜெயஸ்ரீ அதைப் பார்த்தவள் அதன் பிறகு பிடிவாதம் காட்டவில்லை, யார் என்ன சொன்னாலும் அதை செய்தாள்.  குனிந்த தலை நிமிரவுமில்லை.  

சிபி மெளனமாக நடப்பதை க்ரகித்தான்.

திருமணம் இனிதே இறைவன் சன்னதியில் நடை பெற்றது. தலை குனிந்தே தாலியையும் வாங்கிக் கொண்டாள். நிமிர்ந்து யார் முகத்தையும் பார்க்கவில்லை. வஜ்ரவேலிற்கு பார்வை முழுவதும் மகளின் மேல் தான்.  எல்லோரும் ஜெயஸ்ரீயை தான் கவனித்தனர். அதனால் அவள் யாரையும் பார்க்க முயலவில்லை. யாருடைய பார்வையையும் சந்திக்கவுமில்லை. 

சிபி எப்போதும் மிக வேகமான நடையைக் கொண்டவன்….. இப்போது ஜெயஸ்ரீ வருகிறாளா என்று பார்த்து பார்த்து மெதுவாக நடந்தான்.

தாலி கட்டி முடித்ததும் தான் சிறிது திருமணத்திற்கு வந்தவர்களிடம் கூட உற்சாகம் வந்தது. எல்லோரும் சற்று கலகலப்பாகப் பேச ஆரம்பித்தனர்.

ஆனாலும் ஒரு தயக்கம், மாப்பிள்ளை வீட்டினருக்கு பெண்ணிடம் பேச.. எல்லா செலவுகளையும் வஜ்ரவேல் தான் செய்தார். “மொத்தமாக நான் செலவு செய்துக்கொள்கிறேன், பிறகு பிரித்துக் கொள்ளலாம்”, என்று நடராஜனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார்.

அதனால் செலவுகள் குறித்த பயம் அப்போதைக்கு மாப்பிள்ளை வீட்டினருக்கு இல்லை என்பது தான் உண்மை.

அதன் பிறகு ஒரு சிறப்பான காலை விருந்து… பின்பு மாலையில் வரவேற்பும் மிகவும் சிறப்பாக…… அவர் செய்த செலவுகளைப் பார்த்த நடராஜனுக்கு கவலையாக இருந்தது, ஐயோ எவ்வளவு பணம் தங்கள் பங்காக சொல்லப் போகிறாரோ என்பது போல.

காலையில் கோவிலில் முகத்தை தூக்கி வைத்தது தான் ஜெயஸ்ரீ….. பின்பு முகத்தில் எதையும் காட்டவில்லை, கோபத்தையும் காட்டவில்லை.. சந்தோஷத்தையும் காட்டவில்லை.

யார் எது சொன்னாலும் சரி என்பது போல சிறு தலையசைப்பு… நெருங்கிய சொந்தங்களிடம் புன்னகைக்க வில்லை தான். ஆனால் திருமண வரவேற்பிற்கு வந்தவர்களிடம் இன்முகத்தையே காட்டினாள்.  

காலையில் கோவில் என்பதால் ஷூ அணியவில்லை மாலையில் வரவேற்பிற்கு அணிந்திருந்தாள். அதனால் அவளின் தந்தை சொன்னது போல இப்போது ஸ்டிக் வைத்து நடக்கும் போது நடை நேராக தான் இருந்தது.

சிபியின் புறம் திரும்பவேயில்லை.

ஆனால் காலையில் இருந்து ஜெயஸ்ரீயைத் தான் சிபி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். வரவேற்பிற்கு பின்புறம் எழுதியிருந்த பேரின் பின் இருந்த  D C T   என்பதைப் பார்த்து தான், டிப்ளமோ இன் கம்ப்யுட்டர் டெக்னாலஜி என்பதைக் கொண்டு அவள் படித்திருக்கிறாள் என்பது புரிந்தது.

உண்மையாக காலையில் ஜெயஸ்ரீயைப் பார்க்கும் வரை ஏதோ தன்னால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய அவளுக்கு வாழ்க்கைக் கொடுக்கிறோம் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தான்.

குறைகள் உள்ள பெண் என்பதால் சிபி மனதிற்குள் சித்தரித்து வைத்திருந்த பெண்ணே வேறு…. உண்மையாக ஜெயஸ்ரீ இருந்தது போல ஒரு தோற்றத்துடன் எதிர்பார்க்கவில்லை.

தனத்தைக் கொண்டு, ராஜவேலைக் கொண்டு சற்று நாகரிகம் தெரியாத ஆட்களை எதிர்பார்த்திருக்க….. அந்த மாதிரி இவர்கள் இல்லை.. மிகவும் கௌரவமாகத் தான் தெரிந்தனர். தனமும் ராஜவேலும் கூட எந்த சத்தமும் இன்றி திருமணத்தில் ஓடி ஓடி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடி சிபியை யோசனைக்குத் தள்ளிக் கொண்டு இருந்தாலும்…. ஜெயஸ்ரீயின் ஆராய்ச்சியே அதிகம் அதில். நடப்பதில் உள்ள குறை தெரிந்தது.

மெட்டிப் போடும்போது காலில் என்ன குறை என்பது போல பார்க்கலாம் என்று சிபி நினைத்திருந்தான். ஆனால் அந்த மாதிரி ஒரு சடங்கே இல்லை.  இதோடு பேச வரும் என்று தானே சொன்னார்கள். இன்னும் ஒரு வார்த்தைக் கூட ஏன் பேசவில்லை என்பது மாதிரி தான் ஜெயஸ்ரீயை பார்த்துக் கொண்டிருந்தான் சிபி.  

உண்மையாக காலையில் ஜெயஸ்ரீயைப் பார்த்ததில் இருந்து சிபி அவளைப் பற்றியே தான் யோசித்துக் கொண்டிருந்தான். கூட வளர்ந்த ராதாவைப் பற்றி, காலையில் இருந்து ஜெயஸ்ரீயைப் பற்றி நினைத்ததைப் போல என்றுமே நினைத்தது இல்லை என்பது தான் உண்மை.    

திருமணம் செய்ய ராதாவை மனதில் வரித்திருந்தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனால் அது மட்டுமே உண்மை… மற்றபடி இப்படி அவளை என்றுமே கவனித்தது கூட கிடையாது. இரண்டு வார்த்தை நல்ல விதமாக பேசியது கூட கிடையாது. எப்போதும் அதட்டல் உருட்டல் மிரட்டல் வார்த்தைகள் தான்.

ஆனால் அது சிபியின் தவறு என்று சொல்ல முடியாது. அவன் குணமே அப்படித் தான். அவன் எல்லோரிடமும் அப்படித்தான். அதை புரிந்து கொள்ளும் சக்தி ராதாவிடமில்லை.  அதனால் தான் ராதாவின் மனது சிபியின் புறம் ஈர்க்கப்படவேயில்லை. 

                      

Advertisement