Advertisement

அத்தியாயம் மூன்று:

சிபியின் வீடு முழுவதுமாக சோகத்தில் மூழ்கியது. ராஜலக்ஷ்மி மகளின் செய்கையால் மிகுந்த உடல் நலம் பாதிக்கப் பட்டார்.

அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் முன்பே ராதா அவரிடம் தன் காதலை சொல்லி, சிபியை மணமுடிக்க விருப்பமில்லை என்று தெளிவாக சொல்லியிருந்தாள்.

ஆனால் இத்தனை வருடமாக தங்களை ஆதரித்த அண்ணன் குடும்பம் மேல் உள்ள பாசத்தால் ராஜலக்ஷ்மி தான், அதற்கு ஒத்துகொள்ளாமல் சிபியைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

மீறி யாரிடமாவது சொன்னால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டி வைத்திருந்தார்.

தன்னை மீறி எதுவும் மகள் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கை தவிடு பொடியானது. இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை, பெரிய மகளிடம் கூட சொல்ல முடியவில்லை.

யாரிடமும் சொல்ல முடியவில்லை….. தன் கணவர் இறந்த பின்பு எப்படி ஆதரித்தார் தன் அண்ணன். எப்படி இப்படி செய்தாள் தன் பெண். நன்றி என்ற வார்த்தைக்கு இந்த உலகில் அர்த்தம் இல்லாமல் போய்விட்டதா, என்னதான் சிபியைப் பார்த்து பயம், தயக்கம் என்றாலும் ஏன் பிடிக்காவிட்டாலும் கூட…. இத்தனை வருடங்களாக மனதில் பதிய வைத்து பேச்சுக்கள் எப்படி மாறும்.

ராஜலக்ஷ்மிக்கு புரியவில்லை….. கணவன் மனைவியாக பல வருடங்கள் வாழ்ந்த மக்களே விவாகரத்து என்று நிமிடங்களில் பிரிந்து விட…. பேச்சுக்களை வைத்து தன் மகள் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பது சரியானதா என்று.     

அப்படி ஒன்றும் சொத்துக்காரர்கள் எல்லாம் இல்லை சிபியின் வீட்டினர். ராஜலக்ஷ்மியை திருமணம் செய்து கொடுத்த போது கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் ஜீவனம் தான் நடராஜனின் வீடு.

ராஜலக்ஷ்மி நிர்கதியாய் நின்ற போது சற்றும் யோசிக்காமல் வீட்டினுள் அழைத்துக் கொண்டார். நடராஜன்  கடுமையான உழைப்பாளி, இப்போது சற்று சொத்து பத்துக்கள் உள்ளன…. எல்லாம் அவரின் உழைப்பே.

அதையும் விட சிபி….. உழைப்பில் அப்பாவை விட பல மடங்கு அதிகம்…… அவன் பன்னிரெண்டு வயதில் இருந்து வயல்காட்டில் தந்தையோடு இருப்பான். மற்ற இரு மகன்கள் அப்படிக் கிடையாது.

மற்ற மக்கள் போல இல்லை….. அவனைப் போய் ராதா வேண்டாம் என்று சொல்லிவிட்டாளே என்பது இன்னும் மனதிற்கு அதிக வருத்தத்தை கொடுத்தது. 

“நீயேன் இப்படி இருக்க? போனாப் போறா!”, என்று தேவியும் சொல்ல, இன்னும் மனமுடைந்து போனார் ராஜலக்ஷ்மி…. அண்ணனுக்காவது தங்கைக்கு செய்ய வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் அண்ணி இவர் தன்னை எப்படி பார்த்துக் கொண்டார்……. ஒரு சிறு முக சுளிப்பு கூட இதுவரை காட்டியவர் கிடையாது.

இதையெல்லாம் விட இப்போது கோர்ட்டு கேசு என்று இவர்கள் சிக்கலிலும் மாட்டிக் கொண்டனரே. எவ்வளவு பொருள் நஷ்டம். ஆனால் இன்னும் ஒரு முகச் சுளிப்பு கூட அந்த வீட்டில் அவரைப் பார்த்து யாரும், உன் மகள் இப்படிச் செய்துவிட்டாள் என்பது போல காட்டவில்லை.    

ஐயோ எல்லாம் போயிற்றே என்று நினைக்க நினைக்க அழுகை ஆறாக பெருகியது.

வீடு இயல்பு நிலைக்கு திரும்பவேயில்லை…… மணிமேகலை தான் எல்லோரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சிபியிடம் பேச முடிந்த ஒரே ஜீவனும் அவளே…..

அவன் மனதினுள் ஆத்திரம், ஆத்திரம் மட்டுமே…. எதையும் அவன் மனம் யோசிக்கத் தயாராகவே இல்லை. ராதா அவனிடம் தள்ளியே நிற்பாள், அவளுக்கு அவனோடு பேசவே பயம், எதுவும் அவன் நினைவில்லில்லை.

நடராஜன் வேறு சிபியை தனியாக அழைத்து, “போனாப் போறா, விடு, இனி அவளைப் பத்தி நினைச்சு மனசைக் குழப்பிக்காத, அவளை விட நல்ல பொண்ணா உன் வாழ்க்கையில வருவா”, என்று பொறுமையாக அரை மணிநேரம் பேசினார்.

பதில் பேசாமல் அவர் பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தவன்…… எழுந்து போகும் போது, “ஆனா அவ வரமாட்டா தானேப்பா”, என்று சொல்லவும் அதிர்ந்தார் நடராஜன்.

“தம்பி! அவ இப்ப இன்னொருத்தனோட மனைவி!”,

“இருந்துட்டு போறா! நான் என்ன திரும்பவும் அவளை என் மனைவியாவா வர சொல்லப் போறேன்! அதொன்னும் கிடையாது! ஆனா சிபியை அவ்வளவு ஈசியா ஏமாத்திட்டு போய் அவ சந்தோஷமா இருப்பாளா…….”,

“அவங்களை நிம்மதியா இருக்க விடமாட்டேன்… நான் இங்க நிம்மதி இல்லாம சுத்திட்டு இருப்பேன், அவங்க சந்தோஷமா இருப்பாங்களா”,

“உங்களுக்கு தெரியாதுப்பா, ஊருக்குள்ள இருக்குறவங்க, என் கூட படிச்சவங்க, என்னைத் தெரிஞ்சவங்க, இப்படி எல்லோரும் என்னை எவ்வளவு கேவலமா பேசுறாங்க தெரியுமா……”,

“இத்தனை வருஷம் கூட இருந்து இவன்கிட்ட பார்க்காதது அந்த பையன்கிட்ட என்ன பார்த்தாளோனு எவ்வளவு பச்சையா பேசறாங்க தெரியுமா”, சொல்லும் போது குரல் கமறியது. 

“தம்பி”, என்று நடராஜன் அதிர்ந்து கூப்பிட…… “என்கிட்டே குறைன்னு பேசறாங்க, அதனால தான் ராதாவை வீட்ல வெச்சு வளர்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீங்க நினைச்சீங்கலாம். அந்த பொண்ணு கடைசி நிமிஷத்துல தப்பிச்சு போயிடுச்சாம்”,

“இன்னும் கூட எவ்வளவு கேவலமா பேசறாங்க தெரியுமா? அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாதுப்பா”,

“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இதுன்னு என் அறிவுக்கு நல்லா புரியுது, ஆனா மனசுக்கு? அவங்க ரெண்டு பேரையும் கொன்னு போடணும் போல ஆத்திரம் வருது…. அவங்களை கொன்னு என் வாழ்க்கையை நான் அழிச்சிக்க கூடாதுன்னு தான் பேசாம இருக்கேன்…..”, 

“ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லியிருந்தா, எனக்கு இவ்வளவு அசிங்கமில்லையே..”,

“இப்ப தைரியமா ஓடினவ, கல்யாணம் முடிவு பண்ணினப்போவே ஓடியிருக்க வேண்டியது தானே…. இவ படிச்சு முடிக்கிற வரைக்கும்… காத்திருந்து போயிருக்கா, எவ்வளவு சுயநலம்..?”,    

“அதுவுமில்லாம அந்தப் பயலோட அப்பன் உங்க மேல கைவெச்சியிருக்கான். அவனைச் சும்மா விடமாட்டேன்”, என்று சொல்லி நிற்காமல் போய்விட……

தான் இத்தனை நேரம் பேசியது எல்லாம் வீண் என்று புரிந்தது.

நடராஜன் மிகவும் கண்டிப்பானவர்…. வீட்டில் இருந்த ஐந்து பேரில் நால்வர் நடராஜனின் சொல் கேட்டாலும், சிபி கேட்பான் கேட்காமலும் போவான். 

தேவியிடம் சொல்லி அவனிடம் பக்குவமாக சொல்லச் சொல்ல…….

சிபி வீடு தங்குவதே இல்லை… சாப்பிடும் நேரம் மட்டுமே வீட்டுக்கு வந்தான். அவன் சாப்பிடும் நேரம் அவனின் அம்மா தேவி அவனிடம் பேச…..

தட்டை தள்ளி விட்டு எழுந்து சென்று விட்டான்…… “டேய் தம்பி, நான் ஒன்னும் சொல்லலை, சாப்பிட்டிட்டு போடா!”, என்று தேவி அவன் பின்னால் ஏறக்குறைய  ஓடினார்.

சிபி அவரை விடவும் வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு சென்றே விட்டான்.

அருண்மொழி, மாமல்லவர்மன் என்று யார் பேச்சும் காதில் வாங்கவில்லை. வனிதா அவனிடம் பேசவே பயந்தாள். தாத்தா, பாட்டி அத்தை என்று யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. இவர்கள் எல்லோரும் தானே உன் மனைவி, உன் மனைவி என்று சொல்லிச் சொல்லி மனசைக் கெடுத்தது என்பது போல தான் அவன் எண்ணம் இருந்தது. 

இப்போது போனவளைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை….. சிபியைப் பற்றி தான் எல்லோருடையை கவலையும் என்ன செய்வானோ ஏதோ செய்வானோ என்று.

நடராஜனுக்கு மனதே சரியில்லாமல், அவ்வப்போது அவன் வீட்டில் இல்லாத போதும், அவன் வயல்காடே கதி என்று இருந்த போதும், தேடிச் சென்று, “தம்பி, ஆத்திரத்தில் எதுவும் செய்யாதே!”,  என்று பலமுறை சொன்னார்.

அவர்கள் பயந்ததற்கு தகுந்தார் போல……. ஒரு வாரம் பார்த்துக் கொண்டே இருந்தவன்….. சரியாக அந்த கண்ணனின் தங்கைக்கு  அடுத்த நாள் காலை திருமணம் என்றால்…… முதல் நாள் மாலை அவள் ஸ்கூல் பதிவேட்டில் இருந்த அவளின் வயதுக்கான அத்தாட்சியை ஸ்கூல் பியுனை கரக்ட் செய்து வாங்கி……

அதை எடுத்துக் கொண்டு போய் தாசில்தாரிடம் நேரடியாக கொடுத்தான். குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வருவதால் அவர் உடனடியாக வீ ஏ ஓ மற்றும் போலீசாரை அழைத்துக் கொண்டு அதிகாலையில் அந்த இடத்தை அடைந்து விசாரித்தார்.

பெண்ணிற்கு வயது அதிகம் என்று அவர்கள் சப்பைக் கட்டு கட்ட….. இவர்கள் கையில் இருந்த அந்த பெண்ணின் வயதிற்கான சான்றைக் கொடுத்து எல்லோரையும் கைது செய்வதாக எச்சரித்தார்……

வேறு வழியின்றி ஒத்துக் கொண்டனர்.

பின்பு அனைவரிடமும் எழுதி வாங்கினர்…… இந்த திருமணம் நடக்காது… பெண்ணிற்கு உரிய வயது வரும்வரை திருமணம் செய்ய மாட்டோம் என்று.

சிபி அந்த இடத்திற்கு போகவேயில்லை. ஆனால் திருமணத்தை நிறுத்தி விட்டான்.

திருமணம் நின்ற செய்தி கேட்டதும் தான் சிபிக்கு மனதிற்கு சற்று நிம்மதியாகிற்று.

சிபி செய்ததை மாமல்ல வர்மன் வீட்டில் சொல்லிவிட்டான். நடராஜன் அவனைக் கூப்பிட்டு கோபப்பட்டார், “கல்யாணம் நின்னப்போ நம்ம எவ்வளவு வருத்தப்பட்டோம்….. நீ ஒருத்தருக்கு அந்த வருத்தத்தை கொடுத்திட்டியே! நீ செஞ்சது சரியில்லை…… தாயும் பிள்ளைனாலும் வாயும் வயிறும் வேற, அப்படி இருக்குறப்போ நீ அந்த பையனும் நம்ம பொண்ணும் செஞ்சதுக்காக, வேற ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து இருக்க”, என்று ஏகத்திற்கும் கோபப்பட்டார்.

“ஒரு கல்யாணத்தை நிறுத்தின பாவத்தை நமக்கு தேடிக் கொடுத்திட்ட, இந்த பாவத்தை நாம எங்க போய் கழிப்போம்”, என்று மிகவும் குற்ற உணர்வுக்கு ஆளானார். 

திருமணம் நின்று அவர்கள் பிரச்சனையில் மாட்டி கனவிலும் அவர் வாழ்க்கையில் நினைத்திராத ஜெயில் வாழ்க்கை… யாரிடமும் அவர் சொல்லவில்லை…. ஆனால் மனதளவில் நிறைய வருத்தத்தில் இருந்தார். இத்தனை வருடங்கள் பணம் காசு அதிகமில்லையென்றாலும் மானம் மரியாதையோடு  வாழ்ந்துவிட்டு இப்போது என்ன மாதிரியான அவமானம்.     

இப்போது இவன் திருமணத்தை நிறுத்திவிட்டான்… பழிக்கு பழி என்று போனால் ஊருக்குள் பாதி ஜனம் கூட இருக்கமாட்டார்களே….                                                                                                                                                                                                                               

சிபி அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. நடராஜன் மிகுந்த கண்டிப்பு மிகுந்தவர் பிள்ளைகளிடம்…. இல்லையென்றால் மூன்று ஆண்மக்கள், இரண்டு பெண் மக்கள் என்று வீட்டில் ஐந்து பிள்ளைகளை எப்படி சமாளித்து இருப்பார்.

இந்த மாமன் மகன், அத்தை மகள் என்ற பேச்சுக்கள் எப்போதும் இருந்தாலும், அதையும் மீறிய சிறிய செய்கை பார்வைகளில் வார்த்தைகளில் இருக்காது பிள்ளைகளிடம்… அதுவே இல்லையென்ற போது தொடுகை எல்லாம் எம்மாத்திரம். அதனால் தான் ராதாவால் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி இந்த முடிவை எடுக்க முடித்தது.

நடராஜனின் வருத்தம் ராதா திருமணம் செய்ததில் கூட அவ்வளவாக இல்லை….. தங்களிடம் சொல்லவில்லை….. இப்படி கடைசி நிமிடத்தில் வீட்டில் எல்லோரும் கூடியிருக்க அவமானத்தை தேடித் தந்துவிட்டாள் என்பதில் தான்.

இப்போது சிபியிடம் கடுமையாகத் தான் பேசியிருந்தார்… “அவ போயிட்டா திரும்ப நீ எதையும் இழுத்து வைக்காத…… நான் சொல்லிட்டே இருக்கேன்”, ஆனால் அதையும் மீறி சிபி நடத்திக் காட்டி விட்டான்.    

சிபிக்கு ஏதோ ஒரு வகையில் கண்ணனையும் ரதாவையும் பழிவாங்கிய திருப்தி தான்.            

வாசுவிடம், “எங்க வீட்ல இருந்து பொண்ணை இழுத்துகிட்டு ஓடினானே, அவன் முகத்தை எங்க கொண்டு போய் வெச்சிகிட்டான்”, என்று சற்று குரூர திருப்தியோடு கேட்டான்.

“அவன் கல்யாணத்துக்கு வந்த மாதிரியே தெரியலைடா”,

“என்ன வரலையா?”, என்றான் அதிர்ச்சியாக.  

“ம், வரலை, அவனுக்கு குடும்பத்தோட தொடர்பு இருக்குற மாதிரி தெரியலை”,

“நீ தானேடா அன்னைக்கு அந்த பய தங்கச்சி கிட்ட கேட்டேன், அவன் வெள்ளன போயிடுச்சுன்னு சொன்னான்னு சொன்னேன்!”,

“அந்த பொண்ணு அப்படி தாண்டா சொல்லுச்சு, ஆனா இவன் வரலையே, நான் கவனிச்ச வரைக்கும் அவன் பேச்சு அதிகமா அடிபடலை…  எங்கயோ தப்பு பண்றோம்னு தோணுதுடா..”, என்றான் நண்பனாக வாசு.

சிபியை மட்டும் தனியாக, “நீ தப்பு செய்கிறாய்”, என்று பேசவில்லை, தன்னையும் அவனுக்குத் துணையாக இணைத்து தப்பு செய்யறோம் என்று பேசினான். 

“தப்பா இருந்தா இருந்துட்டு போகுது, எப்படி இருந்தா என்ன அவங்கப்பன் நம்ம மேல கையை வெச்சான் இல்லை அனுபவிக்கட்டும்….”,  என்றான் கோபமாக சிபி.

ஆனால் அவர்களுக்கு என்ன தெரியும், அந்த கண்ணனின் அப்பன் ஊருக்கு மட்டும் தெல்லவாரி இல்லை குடும்பத்துக்கும் சேர்த்து தெல்லவாரி என்று.

பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்பது போல தான் அவர்கள் செய்கை ஆகியிருந்தது. அது அவர்களுக்கு தெரியவில்லை. 

ஏற்கனவே மனைவியும் மக்களும் கண்ணனின் தந்தையால் நிறைய தொல்லைகளுக்கு ஆட்பட்டு தான் இருந்தனர். அந்த அரசியல்வாதி எப்படி இருந்தாலும் அவன் தம்பி நல்லவனாக தான் தெரிந்தான். வீடு தோப்பு என்று அவனுக்கு தனியாக சொத்து பத்துக்களும் இருந்தன.

கணவரின் வற்புறுத்தல் இருந்தாலும், அந்த மாப்பிள்ளையைப் பற்றி தனியாக நன்றாக கண்ணனின் சித்தி விசாரித்த பின் தான் பத்மினியை அந்த மாபிள்ளைக்கு கொடுக்க சம்மதம் தெரிவித்து இருந்தார்.

ஆம், கண்ணனைப் பொருத்தவரை அந்த பெண்மணி எப்போதும் சித்தி தான். ஆனால் பத்மினிக்கு அவர் அம்மா தான். கண்ணன் எப்போதும் அவருடன் ஒட்டியதில்லை, சித்தி என்ற அலட்சியம் காட்டுவான்…. அவனுக்கு அவனின் அம்மா இடத்தில் யாரையும் வைக்கப் பிடிக்காமல் எப்போதும் இல்லாததையும் பொல்லாததையும் அவனின் தந்தையிடம் சொல்லி அந்த பெண்மணிக்கு அடி வேறு வாங்கித் தருவான்.

எல்லாவற்றையும் பொறுத்து தான் போவார்…. ஆனால் பத்மினி அவருடன் நன்றாக ஒட்டிககொண்டாள்.   அவருடன் ஒட்டிக் கொண்டதாலேயே கண்ணன் தங்கையிடம் இருந்து தூர விலகிக் கொண்டான்.

என்ஜீனியரிங் படிக்க ஆரம்பித்த பிறகு குடும்பத்தை விட்டு சுத்தமாக ஒதுங்கிக் கொண்டான். பீஸ் கட்ட மட்டுமே தந்தையிடம் பேசுவான்.  அவன் படித்து முடித்த பிறகு  அதுவுமில்லை. கண்ணன் வேலையைத் தேடிக் கொண்டு அவன் தேவைகளை அவனே பார்த்துக் கொண்டான்.

இப்போது திருமணதிற்கு பெண்ணையும் தேடிக் கொண்டவன், இவர்கள் உறவே வேண்டாம் என்று அவர்கள் அனைவரிடமும் தந்தையிடமும் தெளிவாக சொல்லி சென்னைக்கு முழுமையாக போய்விட்டான்…

இது எதுவும் தெரியாத சிபி தந்தையையும் மகனையும் குறிவைக்க பதிலாக…… வீணாக அவனுக்குத் தெரியாமலேயே பெரிய தவறாக பத்மினியின் திருமணத்தை நிறுத்தினான்.

அந்த சூழலில் இருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்குமா என்று ஏங்கிக்கிடக்கும் கண்ணனின் சித்தி அவரின் இரண்டு மக்கள் பத்மினி எல்லோரையும் மீண்டும் அந்த சூழலில் மாட்டி விட்டான்.

திருமணம் நின்ற ஆத்திரத்தில் கண்ணனின் தந்தை குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள அத்தனை பேரையும் போட்டு அடி அடி என்று அடிக்க…

வலிதாங்காமல் அந்த பிள்ளைகள் மூவரும் துடித்தனர். இது அனுதினமும் நடக்கும் கொடுமை…… இந்த திருமணத்தால் பல நன்மைகள் விளைய வாய்ப்புக்கள் இருந்தது. பார்த்திருந்த மாப்பிள்ளை வசதியானவன் மட்டுமல்ல ஓரளவு கண்ணனின் தந்தையை ஆட்டுவிக்க தெரிந்திருந்தான்.

இந்த திருமணம் நிச்சயம் ஆனா பிறகு அவன் பணம் கொடுத்திருந்தானோ இல்லை மிரட்டி வைதிருந்தானோ ஏதோ ஒன்று, இந்த அடி உதையில் இருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்து இருந்தது.

ஆனால் இனி அதற்கு வாய்ப்பு இல்லை. திருமணம் நின்றது மட்டுமல்ல… அந்த மாப்பிள்ளைக்கு உடனேயே அந்த மண்டபதிலேயே அவசரமாக ஒரு மணமகளை பார்த்து திருமணம் நடந்து முடிந்திருந்தது.

இந்த சம்மந்ததற்காக கண்ணனின் தந்தையை கூட வைத்திருந்த அரசியல் வாதி….. “கல்யாணமே இல்லைன்னு ஆகிப்போச்சு, இனி நீ எதுக்கு எங்க கூட இருக்க…. இனிமே இந்த பக்கம் தலையைக் காட்டின கொன்னே போடுவேன்…”,

“எவ்வளவு பஞ்சாயத்து பண்ணியிருப்பேன். இதுவரைக்கும் கோர்ட் படி ஏறினது இல்லை……. உன்னால கோர்ர்டு கேசுன்னு ஆகி மேலிடத்துக்கு வேற நான் பதில் சொல்லிட்டு இருக்கேன். இனி நீ கண்ணுல பட்ட..”, என்று கண்ணனின் தந்தையை ஏகத்துக்கு மிரட்டி அனுப்பியிருக்க….

அந்த கோபத்தை எல்லாம் வீட்டினர் மேல் காட்டி, எல்லோரையும் அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் அந்த மனிதன்.

அடி பொறுக்க முடியாமல் குழந்தைகள், “அம்மா, வலி தாங்க முடியலைம்மா, செத்துடலாம்மா”, என்று கதறினர். அந்த மனிதனுக்கும் போலீசிற்கும் பயந்து உறவுகள் வீட்டிற்கு கூட வராமல் மண்டபத்தில் இருந்து அப்படியே போயிருந்தனர். 

பத்மினி அப்பாவிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடினாள், யாரையாவது உதவிக்கு அழைத்து வரலாம் என்று.

ஆனால் அடிப்பட்டு இருந்த அவளால் வேகமாக ஓடக் கூட முடியவில்லை.

ஒரு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வாசுவின் வீடு இருக்க, அங்கே தான் சென்றாள். இவள் சென்ற நேரத்திற்கு சற்று முன் தான் சிபி அங்கே வந்திருந்தான். வாசுவும் அவனும் அமர்ந்து அப்போதுதான் அந்த திருமணம் நின்ற விவரங்களை பேசிக்கொண்டு இருந்தனர்.

மாலை ஆறு மணி இருக்கும், வேகமாக வாசுவின் முன் ஓடி வந்து நின்றாள்.

மூச்சு வாங்கியதில் பேசக் கூட முடியவில்லை,

அவள் வந்து நின்ற தோற்றம் ஏதோ அனர்த்தம் என்று காட்ட, “என்ன? என்ன பொண்ணு?”, என்றான் வாசு.

“அண்ணா, அண்ணா… அங்க அப்பா எங்க எல்லோரையும் போட்டு ரொம்ப அடிக்கறாங்க, வாங்கண்ணா”, என்று அந்த பிஞ்சு கூப்பிட,

“எதுக்கு அடிக்கிறான்?”, என்றான் வாசு.

“கல்யாணம் நின்னு போச்சு, அதனால அம்மாவை எங்களை அடிக்கறாங்க வாங்கண்ணா”, என்றாள் அழுகையோடு…

வாசு இவர்கள் வீட்டிற்கு போவதா என்று நின்றான். சிபிக்கு அவள் தான் கண்ணனின் தங்கை என்று கூட தெரியவில்லை…. கல்யாணம் நின்று போனது என்று சொல்லவும் அந்த பெண்ணோ இவள் என்று நினைக்க ஆரம்பித்தான்.

அடிப்பட்டு முகமே ஆங்காங்கே வீங்கி இருந்தது…. சிபி பத்மினியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். “யார் இந்த பெண், யார் இவளை இப்படி அடித்தது? என்ன?”, என்று….

பத்மினி பதட்டமாக, “அண்ணா… வாங்கண்ணா….”, என்று அழுகையோடு கூப்பிட….

“வாடா, போய் பார்க்கலாம்”, என்று சிபி சொல்ல…….

“இவ தான் அந்த கண்ணனோட தங்கச்சி, இவ கல்யாணத்தைத் தான் நாம காலையில நிறுத்தினோம்”, என்று சொல்ல……..

“சிபி இவளா?”, என்பது போல அதிர்ந்து பார்க்கும் போதே, பத்மினியின் தம்பி காற்றை விட வேகமாக ஓடி வந்து……

“அக்கா… அம்மா சீமண்ணை ஊத்தி அப்பாவை பத்த வெச்சு, அதுவும் பத்திகிச்சு”, என்று சொல்ல…

“ஐயோ”, என்ற கதறலோடு  அந்த சிறுபெண் மீண்டும் அலறி அடித்து திரும்பி வீட்டை நோக்கி ஓடியது. சிபி அசையாமல் நின்று விட்டான். கால்கள் வேரோடி கீழே விழும் நிலைமையில் இருந்தான்.

வாசு வேகமாக வீட்டின் உள் இருந்த அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்ல, அவர்கள் வீட்டின் முன் நின்றிருந்த டீ வீ எஸ் பிஃப்டியை எடுத்துக் கொண்டு, பக்கம் இருந்த இன்னும் இரண்டு மூன்று பேருக்கு தகவல் சொல்லி விரைந்தனர்… 

சிபி வண்டியில் வந்திருக்க, “வாடா போகலாம்!”, என்று வாசு சொல்ல….

“நான் வரலை!”, என்றான்.

 “வாடா……”,

“இல்லை, எனக்கு பயமாயிருக்கு, அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா?”,

“இனி ஒன்னும் பண்ண முடியாது, வா!”, என்று வாசு வண்டியை எடுக்க… அவர்கள் பத்மினியின் வீட்டை அடைந்த போது, பத்மினி இன்னும் வந்திருக்கவில்லை…

அவளும் அவள் தம்பியும் ஓடி வந்துக் கொண்டிருந்தனர்….

திகு, திகு என தீ எரிந்து கொண்டிருந்தது…

பத்மினியின் தங்கை கீழே மயக்கமாக கிடந்தாள்… தீ எரிந்து கொண்டிருந்தது வீட்டினுள் இல்லை, வீட்டை விட்டு தள்ளி வெளியே வரப்பு ஆரம்பிக்கும் முன்பாக…. காய்ந்த ஓலை மட்டை வேறு இருந்திருக்கும் போல, அது சேர்ந்து எறியவும் யாராலும் அருகே நெருங்க முடியவில்லை…

அதற்குள் புகை மண்டலம் பார்த்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் கூட அஆரம்பித்தனர்…..

பக்கத்தில் இருந்த பம்பு செட்டில் தண்ணிர் போட்டு பைப் மூலமாக விட்டனர்.

மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் பார்ப்பதே பெரும் வேலையாக இருந்தது எல்லோருக்கும்.

ஆனால் சிபிக்கு நன்கு புரிந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது. அந்த மனித உயிர்களின் இயக்கங்கள் நின்றிருக்கும். வெறும் கரிக்கட்டை தான் மிஞ்சும் என்று……

பத்மினியும் அவள் தம்பியும் ஓடி வந்தவர்கள் தீயின் அருகில் போக முற்பட…. ஆளுக்கொருவராக அவர்களை பிடித்து நிறுத்தினர்.

அவர்கள் பெற்றோர்கள் எரிவதை  அழுகையோடும், கதறலோடும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

தீர்க்க முடியாத பாவத்தை அவனையறியாமல் செய்த சிபி நிற்க முடியாமல் அங்கிருந்த தென்னை மரத்தின் மீது சாய்ந்து, அந்த தீயைப் போல அவன் உள்ளமும் எரிய பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 

Advertisement